(2023ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிப்ரவரி 18
இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக சுழல்கிறதா அல்லது நான் பைத்தியமாக சுற்றுகிறேனா? என்னிடம் பல பதில்கள் இருக்கின்றன. ஆனால் அந்த பதில்களுக்கான கேள்விகள் இவை அல்ல. பல கேள்விகளுக்கு பதில்களே கிடையாது. இல்லாதவற்றை விட்டுத் தள்ளலாம். அதுதான் இல்லையே பின்னே ஏன் விட்டுத்தள்ள வேண்டும்? எப்படி விட்டுத் தள்ளுவது? எதுவும் இல்லையென்றால் அது எங்கிருந்து வந்தது? எப்படி உலவுகிறது? கேள்வி மேல் கேள்வி எழுகிறது. கேள்விகளால்தான் இந்த உலகம் இயங்குகிறது.
என்னிடத்தில் உள்ள பதில்களுக்கான கேள்வியை தேடவேண்டிய அவசியம் உங்களுக்கு எழாது என்றே கருதுகிறேன். எனெனில் அதனை தனித்தனியே பிரித்து சொல்லப் போவதில்லை. கோர்வையாக்கித் தருகிறேன். இருந்தாலும் அதன் மூலாதாரத்தைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆவல் ஏற்படலாம். என் கதையை ஆழ்ந்து நேசிப்பவர்களுக்கு என்னைப்போலவே மனம் அலைக்கழிதலுக்கான ஆரம்ப நிலை தென்படத் தொடங்கலாம். அப்படி ஏதேனும் தோன்றினால் இதை வாசிப்பதை நிறுத்திவிடுவது நலம். நானும் கயிறு திரித்துக்கொண்டு சும்மா இல்லை. உங்களுக்காகவே கதை ஓட்டத்தோடு இணையாக மூலாதாரத்தைத் தேடிக்கொண்டுதான் இருப்பேன். முடிப்பதற்குள் தெரிய வந்தால் குட்டை போட்டு உடைத்து விடுகிறேன். சொல்லாமல் கதை முடிந்துவிட்டால் என் வாழ்க்கையும் முடிந்துவிட்டது என முடித்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் விழும் எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்க முடிவதில்லை. இழைகளாக மெல்ல சுலபமாக நகரும் காலம் பல நேரங்களில் முடிச்சுகளால் தடை படுகிறது. தடம் புரல்கிறது. வெட்டி எறிந்துவிடலாமா எனத் தோன்றுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கான எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. மனதைத் தவிர. மரணத்தை நேசிக்கின்ற அளவுக்கு என்னால் தற்கொலையை நேசிக்க முடியவில்லை. ஏன்? மரணத்தை எந்த அளவு நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு தற்கொலையை வெறுக்கிறேன் என்றுகூட சொல்லலாம். கதையை முடிக்காமல் போய்விட்டால் நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள் என்று என்னால் அறுதியிடு சொல்லமுடியும். அது இயற்கையான அல்லது வேறு அகால மரணமாகத்தான் இருக்கும்.
என் இளமையின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. நிகழ்ச்சிகளில் தான் பசுமையில்லை. பாலை நிலத்தில் பசுமரத்தில் அரைந்த ஆணியைப்போல. எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கிடையாது. ஆணி அடிக்கின்ற வேகத்தில் கோபத்தில் தாட்கள் கிழிந்து போகலாம். எல்லா சம்பவங்களையும் முன்பின் மாறாமல் என்னால் இப்போதுகூட சொல்ல முடியும் . உதாரணத்திற்கு ஒன்று;
நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் நடைபெறும் மந்த்லி டெஸ்ட் எழுத பேப்பர் வாங்க காசு என்னிடம் இருக்காது. என்னைப் போலவே என் பெஞ்சில் அமர்ந்திருக்கும் இன்னொருவனும் காசு கொண்டு வரமாட்டான். அவன் ஒரு காலை விந்தி விந்தி நடப்பான். அப்போது அதை பலவாறு அழைப்பார்கள். இப்போது பிஸிகலி சேலஞ்சுடு பீப்புள் என்கிறோம். மூன்றாவது மாணவன்தான் எங்களுக்கு பைனான்சியர், தர்மம் செய்பவர் என்றும் சொல்லலாம். அவனது தந்தை அவர்கள் ஊரில் தேநீர் கடை வைத்துள்ளார். கண்டிப்பானவன். கஞ்சன் என்றும் சொல்லலாம். கணக்கு வழக்கில் கறார் பேர்வழி. நிதித்துறை அமைச்சர் இல்லையா!. அப்போது 1970 களில் ஒரு பேப்பர் மூன்று பைசா. பைனான்சியர் 10 காசு கொடுத்து கடையில் போய் மூன்று பேருக்கும் மூன்று பேப்பர் வாங்கி வரச்சொல்லுவார். நான்தானே போகவேண்டும்.
மூன்று பேப்பர் வாங்கியதுபோக மீதம் ஒரு காசுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார் கடைகாரர். அதை கொண்டுவந்து கொடுத்தால் பைனான்சியருக்கு கோபம் வந்துவிடும்.
“உன்னை எவன் மிட்டாய் வாங்கி வரச் சொன்னது. மீதி ஒரு காசை வாங்கி வரவேண்டியதுதானே” என்பான்.
“அவன் தர மாட்டேங்குறான். காசுக்கு பதிலா மிட்டாய் கொடுத்துட்டான்டா”
“அவன் யாரு மிட்டாய் கொடுக்குறத்துக்கு. அது நம்ம காசு. நம்ம சௌரியத்துக்குதான் அவன் கொடுக்கணும்” என பொருளாதாரம் பேசுவான்.
நம்ம காசு என்ற அவனது வார்த்தைகளில் நட்பின் அடர்வு எவ்வளவு இருந்தது என்று பின் நாட்களில்தான் நான் உணர்ந்து கொண்டேன்.
‘நீ போய் நாளைக்கு வாங்கிப் பாருன்னு’ தர்மப் பிரபுவிடம் சொல்ல முடியுமா என்ன!
வீட்டில் பேப்பர் வாங்க காசு கேட்டாக்காவிடினும் அங்கே இங்கே கிடக்கும் ஒரு காசை மட்டும் தெரியாமல் திருடி வைத்துக் கொள்வேன். பேப்பர் வாங்கும்போது மிட்டாய் கொடுத்தால் அதை வழியில் தின்றுவிட்டு பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒரு பைசாவை எடுத்து பைனான்சியரிடம் வரவு வைக்க கொடுத்து விடுவேன்.
ஒரு நாள் பேப்பர் வாங்கியது போக மீதி ஒரு பைசாவை திருப்பிக் கொடுத்தபோது மிட்டாய் தின்ற வாசம் என் வாயிலிருந்து வந்ததை கண்டு பிடித்து விட்டான். விபரத்தை நான் தயக்கத்துடன் சொல்ல, இனி கடைகாரரிடம் காசு கேட்க வேண்டாம் மிட்டாய் கொடுத்தால் வாங்கிவா என கட்டளையிட்டான். என்ன இருந்தாலும் நண்பன் இல்லையா? என் ஏழ்மையின் மீது இரக்கப் பட்டிருக்கலாம். மனிதாபிமான செயல்பாடாகக்கூட இருக்கலாம். அந்த ஒரு காசு சல்லி மிட்டாயை தின்னாமல் நண்பனிடம் கொண்டுவந்து கொடுப்பேன். அதை அவன் சுவைக்காமல் எங்கள் இருவருக்கும் ஒடித்து பாதி பாதி தருவான்.
கல்லைத் தின்றாலும் செரிக்கின்ற வயதில் குடிக்க கஞ்சிகூட கிடைக்காது. வகைவகையாய் எதை வேண்டுமானாலும் உண்ணும் வசதி வரும்போது சமயம் பார்த்துக் கொண்டிருந்த சர்க்கரை நோய் வந்து கசப்பைத் தரும். பலருக்கு வாழ்க்கை இப்படித்தான் அமைகிறது.
காலுக்கு செருப்பின்றி மைல் கணக்காய் நடந்த காலங்கள் உண்டு. தற்போது என்னால் எத்தனை ஷூ வேண்டுமானாலும் வாங்கலாம். நடக்கத்தான் இடமில்லை.
வறுமையில் வாடிய குடுப்பத்தில் இருந்து, லோயர் மிடில் கிளாசுக்கு தவழ்ந்து வந்து பின்னர் அப்பர் மிடில் கிளாஸில் தலை நிமிர்ந்து ரிச் ஃபேமிலியாக முன்னேறியபோது சிறைப்பட்டுப் போனேன்.
30-ம் நாள்
நாட்குறிப்பே எழுதாத நான் தற்போது எழுதத் தொடங்கி விட்டேன். ஒரு க்ளாஸ்மேட் காலேஜ் நோட்டுதான் எனக்கு டைரி. அதில் பெயர், உயரம், ரத்த வகை, அலர்ஜி விபரம், குடும்ப டாக்டர் தொலைபேசி எண் இன்னும் என்னன்னமோ கொண்ட சுயவிபரங்கள் எல்லாம் கிடையாது. இதெல்லாம் எந்த விலங்குக்காவது இருக்கிறதா? இல்லையே. அவற்றிற்கு அதிகம் நோய்கள் வருவதும் இல்லை. பிறந்த நாள் கொண்டாடுவதும் இல்லை. அவை பிறக்கவில்லையா என்ன! ஐந்தறிவு கொண்ட அவற்றிற்கே இல்லாத போது ஆறறிவு கொண்டதாய் பீற்றிக் கொள்ளும் நமக்கு எதற்கு வாழ்த்துகள், பாராட்டுகள், வாழ்க வளமுடன் எல்லாம்.
எனக்கு சில விஷயங்களை நினைத்தால் சிரிப்பும் வெறுப்பும் வேதனையும் முட்டாள் தனமும் நிறைந்ததாக தெரியும். அந்த மதிப்பீடுகள் என் மனநிலை அப்போது எப்படி இருக்கிறது என்பதை பொறுத்ததாக இருக்கும். ஆனால் சிரிப்புகூட கேலி நிறைந்ததாக இருக்கும். வயிறு வலிகண்டு விலாவை மேலே தூக்குவதாகவோ இருமலை வரவழைப்பதாகவோ இருக்காது. ஒரு நக்கலோ நையாண்டியோ கொண்டதாக விஷமத்தனமானதாக இருக்கும்.
நீங்கள் உங்களது பையனுடன் டிஸ்கவரி சேனலில் மானை புலி துரத்தும் காட்சியை பார்த்துக் கொண்டு இருக்குறீர்கள். அழகான மான் எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற இரக்க மனதுடன். முடிவின் ரகசியத்தை காட்டும் முன்னர் ஒரு விளம்பரம் வந்து விடுகிறது.
உங்கள் பையன் கேட்கிறான் “அந்த மான் தப்பிச்சிடுமா அப்பா?”
“தெரியலையே. அதுக்குள்ளயே விளம்பரத்த போட்டுட்டானே” என்பீர்கள்.
“அழகான அந்த மானை பாத்தா பாவமா இருக்குள்ள”
“ஆமாம். ஆனா புலிக்கும் சாப்பாடு வேண்டாமா. அதான் மான அடிச்சி சாப்புடுது”
“மான் மட்டும் எந்த விலங்கையும் அடிச்சி தின்னுறதில்லையே. புலியும் அதுபோல புல்லையும் செடி கொடியையும் சாப்புட்டா என்ன? ஏன் உயிரக் கொல்லணும்?”
அதற்குள் விளம்பரம் முடிந்து மான் இரையாக்கப்பட்டு தோல் சிதறி கிடக்கின்றன.
பிரிதொரு மான் உண்டு கொழுத்து படுத்து கிடக்கிறது. அவ்வழியே கவனிக்காது வந்த மானை அது விரட்டவில்லை.
உங்கள் மகனின் புதிய கெள்விக்கு “விலங்குகள் பசியாறிவிட்டால் அடுத்து பசி எடுக்கும் வரை எந்த விலங்கையும் கொல்லாது” என்பதாகத்தானே இருக்கும்.
மேலும் விளக்குவீர்கள் “தேவையில்லாமல் உயிரைக் கொல்வது அதற்கு அதர்மம்” என்று.
“மனுஷன் மட்டும் ஏம்பா அவன் சாப்டாட்டாலும் ஆட்ட மாட்ட வெட்டி அடுத்தவங்களுக்கு விற்பனை செய்யுறான்? ஐஸ் வச்சி அடைச்சி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுறான்.”
“தான் வெட்டி சாப்பிட்டா அது பசிக்கு. அடுத்தவனுக்கு வித்தாலோ அயல்நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுனாலோ அது பிஸ்னஸ்”
“பாவம் இல்லையாப்பா”
“ஒரு உயிரக் கொண்ணா அதை யாராவது சாப்புட்டுடணும் அது பாவம் இல்லை. தேவையில்லாம கொண்ணாதான் பாவம்னு சொல்றாங்க”
“அதான் கொண்ணா பாவம் தின்னா போச்சுங்குறதா?”
“யேஸ். கரைக்ட்”
“இந்த தத்துவம் எங்க இருக்கு?”
“நிறைய புத்தத்துல இருக்குதே நீ பாத்ததில்லையா?”
“பாத்திருக்கேன். உயிருள்ள மரத்த வெட்டி கூழாக்கி காகிதம் தயாரிச்சி அதுல யார் என்ன எழுதுனாலும் தத்துவம் ஆயிடுமாப்பா?”
அதற்கு மேல் அவன் கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியாது என கருதியதும் உங்களுக்கு வேறு வேலை இருக்கும். அவசரமாக யாருடனாவது பேச வேண்டும். அல்லது பாத் ரூம் போக வேண்டும். எனவே;
“நீ இன்னும் நிறைய தெரிஞ்சதும் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து தத்துவமா எழுது” என முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள்.
இரவு அவனுக்கு தூக்கம் வராது. மானை புலி துரத்தும். இன்னும் பெரியவனாகும்போது ஒரு சிறுமியின் பிணம் எரிந்த நிலையில் கிடப்பதை தொலைகாட்சியில் பார்த்து குமுறுவான்.
ஆடு மாடுகளை வதை செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதித்த பணத்தில் முப்பது ஏக்கர் நிலம் வாங்கி பத்தாயிரம் சதுர அடி பரப்பில் பங்களா கட்டி சொகுசாக வாழ்ந்து ஒருநாள் செத்துப் போவதை முக்கியஸ்தர் என நாடே துக்கம் கொண்டாடும் போது இவன் வெவ்வேறு வகையில் சிந்திப்பான்.
என் எதிர்பார்ப்பும் ஆவலும் என்னவென்றால் அவனும் என்னைப் போலவே ஏதோ ஒரு வகையில் சிறைப்படக் கூடாது என்பதுதான். அவனுக்கு பிரபஞ்சம் ஒரு அறையாகத் தெரிய வேண்டும் என்பதே.
தனது தவறுகளை எல்லாம் நியாயப்படுத்த மனிதனிடம் வார்த்தைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. மொழி என்பது இதற்குத்தானா!
ஆரம்பத்தில் மனிதன் விலங்குகளை மட்டுமே வேட்டையாடி பசி தீர்த்தான். வரையறுக்கப்படாத பூமியில் தானியங்கள் தானாக வளர்ந்து விலங்குகள் தின்றது போக சிந்திய தானியங்கள் மீண்டும் மீண்டும் முளைத்து வளர்ந்தன. வேட்டைக்காரன் விவசாயியாக மாறியதும் விலங்குகள் நிம்மதியாக பெருமூச்சு விடத் தொடங்கின. சாதம் மட்டும் சாப்பிட்டவன் இட்லியை தோசையை கண்டுபிடித்தான். இன்று அரிசியில் ஆயிரக்கணக்கான உணவு வகைகள். போதாதென்று தொலைக்காட்சியில் அடுப்பங்கரை என்றும் அம்மிக் குழவி என்றும் புதிது புதிதாய் சொல்லித் தருகிறான்.
கோதுமையில் உப்புமா, சப்பாத்தி, பூரிதான் உங்களுக்குத் தெரியும். உ.பி., ம.பி., டெல்லி போய் தங்கிப் பாருங்கள் ஆயிரம் வகையில் வாயில் நுழையாத உணவின் பெயர்கள் உள்ளன . எனக்கே முப்பது வகையான ரெசிபிக்கள் தெரியும் . அதில் சூர்மா, பலூடா, டோக்னா, காக்ரா, ஸ்டப்டு பராத்தா சுவைக்க அருமை.
இவ்வளவு கண்டு பிடித்தும் விலங்கை ஏன் கொன்று உண்ண வேண்டும் விலங்கை விலங்கு தின்று போகட்டும். அவை ஆறறிவுக்கும் குறைவானவை. விலங்கை தின்பது விலங்கென்றால் கோபம் வரலாம். வேட்டைக்காரனின் சொச்ச மிச்ச தொன்மம் என்று ஈயம் பூசியது போலவும் பூசாதது போலவும் நிறுத்திக்கொள்கிறேன்.
31-ம் நாள்
நான் சிறையில் அடைபட்டு நேற்றோடு ஒரு மாதம் ஆகிறது. ஒரு மாதம் என்றால் முப்பது நாட்கள். பிப்ரவரி,மார்ச், ஏப்ரல் என்றெல்லாம் நாட்கள் எண்ணிக்கை மாறும் மாதங்களின் கணக்கு எனக்கு இனி இல்லை. காலண்டரோ, கடிகாரமோ கைபேசியோ என்னிடம் இல்லை. சரியாகச் சொல்லப்போனால் 15′ x15.5′ அளவு கொண்ட ஓர் அறையில் அடைபட்டுக் கிடக்கிறேன். அடைக்கப்பட்டு கிடக்கிறேன். இந்த உள் உலகமே எனக்கு பிரபஞ்சம். மின்சாரம் இல்லையென்றால் சுற்றாத ஒரு மின்விசிறி. மின்சாரம் இருந்தாலும் ஸ்விட்சை போட்டால்தான் ஒளிரும் ஒரு குழல் விளக்கு. இருட்டில் அழுது வடிந்து மெல்லிய வெளிச்சம் கசியும் ஒரு சென்நிற இரவு விளக்கு.
அறையின் தென்புற சுவரில் பெரிய ஷெல்ப் உள்ளது. அதில் ஏராளமான புத்தகங்களை நேர்த்தியாக அழகுற அடுக்கி வைத்துள்ளேன். அவற்றில் கால்வாசி புத்தகங்களை இன்னும் நான் வாசிக்கவில்லை. இப்போது அதனை வாசிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதற்கான மனநிலை என்னிடத்தில் இல்லை. புத்தகங்களை வாங்கும் வேகத்தில் அவற்றை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் சில நேரங்களில் இல்லாமல் போவது எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
இங்கே சிறைபட்ட பிறகு ஜெயகாந்தனின் “நான் ஜன்னல் அருகே உட்கார்ந்திருக்கிறேன்” என்ற பத்து பக்க சிறுகதையை பதினேழு முறை வாசித்து விட்டேன். ஜன்னலருகே அமர்ந்திருக்கும் அவளும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்களாக எனக்கு படுகிறது.
இப்போது அந்த கதையினை அடிமாறாமல் என்னால் ஒப்பிக்க இயலும். இதற்கு முன்புகூட அதை பலமுறை வாசித்து இருக்கிறேன் என்றால் விரக்தியான சூழல், தனிமையை விரும்புதல் வெளி உலகத்தை சிறைச்சாலையாக பாவித்து உள் உலகத்திலிருந்து பார்வையில் பட்டதை சுவாசித்து என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் எண்ணம் என் மனதில் அப்போதே இருந்திருக்கிறதென உங்களுக்கு புலப்பட்டால் அதுசரி.
என்னைப் போலவே வேறுவேறு வகையில் வேறுவேறு அளவில் சிறைப்பட்டுள்ளவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதில் நீங்கள்கூட ஒருவராக இருக்கலாம். இப்போது உங்களை சுற்றியுள்ள சிறிய சிலந்தி வலை பிசுபிசுவென உடலில் உரசி அறுவருப்பு ஏற்படுத்துவது தெரிய வரலாம். அல்லது அதை சுகமான சுமையாக மகிழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் எந்நேரத்திலும் அதன் விருப்பு வெறுப்பாக மாறலாம் என்ற உத்தரவாதம் அளிக்க என்னால் முடியும்.
அறையின் கீழ் புறத்தில் இரண்டு கதவுகள் கொண்ட ஒரு ஜன்னல் இருக்கிறது. எனக்கு இடப்புறத்தில் உள்ள ஜன்னல் கதவு வெளியில் ஆணியால் அரையப்பட்டு திறக்க இயலாத வகையில் உள்ளது. வலப்புற கதவு வழியாக திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பார்த்தால் எதிரே உள்ள ஒரு வேர் கவுசின் உயர்ந்த முக்கோண வடிவ சுவர்தான் கண்ணுக்குத் தெரியும். ஜன்னலின் தென்கோடியில் கன்னத்தை உரசும்படி வைத்து சாய்வாகப் பார்த்தால் அந்த முக்கோண வடிவ சுவருக்கு வெளியே இன்னொரு முக்கோண வடிவ துண்டு வானம் கண்ணில் படும். அதில் விடிகாலை நேரத்தில் சப்தரிஷி மண்டல வாலின் கடைசி நட்சத்திரத்தை கண்ணுறலாம்.
மேற்கு புறமாக குளியல் அறைக்கு செல்லும் கதவு. 15′ X 7′ அளவுள்ள கழிவறையுடன் கூடிய குளியலறை.
வடகிழக்கு மூலையில் கதவு வெளியே ஒரு உள் வரவேற்பு அறை. அதில் கதவு ஓரமாக ஒரு ஸ்டுலைத் தவிர வேறேதும் இல்லை. அதன் மேல் உணவு, தண்ணீர், இத்தியாதி வைக்கப்படும் நேரம் கதவில் டோக் டோக் என் ஒரிரு சத்தம் கேட்கும் . பின்னர் கதவை திறந்து அந்த வஸ்துகளை எடுத்துக்கொண்டு முடிந்த அளவில் விருப்பிய அளவில் வேறுக்கும் நேரம் வரை சாப்பிடுவேன். அல்லது உண்ணாமலே குளியல் அறையில் கொட்டி தண்ணீரை வேகமாக விட்டு அவுட் லெட் குழாய் வழியே அப்புறப்படுத்தி அறையை மற்றும் குளியல் அறையை சுத்தமாக வைத்திருப்பேன். அது எதுவரையோ. ஒரு கட்டில் ஒரு மெத்தை எனக்கான குறைந்த அளவு துணிமணிகள் மேற்புற சுவரில் பொறுத்தப்பட்டுள்ள கம்பியில் தொங்குகின்றன. நான் என்றுமே தலையணை பயன்படுத்த மாட்டேன். தூங்கும்போது உடலின் பிற பாகத்தைவிட தலையை உயரமாக வைத்துக்கொண்டால் தலைக்கு சரிவர ரத்தம் போகாமல் மூளை வளர்ச்சி இருக்காதென்று எனக்கு ஒன்றும், தெரியாத காலத்தில், எல்லாம் தெரிந்ததைப்போல காட்டிக்கொள்ளும் ஒருவர் போதித்ததை ஏற்று தலையணையின்றி தூங்க ஆரம்பித்து அதுவே பழக்கமாகப் போய்விட்டது. இப்போதுகூட எனக்கு ஒன்றும் தெரியாது என்றே கருதுகிறேன். மிலியன் மில்லியன் கோடி விஷயங்களில் பதினெட்டு விஷயங்கள் மட்டும் தெரிந்தால் ஒன்றும் தெரியாதது என்றுதானே அர்த்தம்.
உள்ளே ஈ, எறும்பு, காக்காகூட வரமுடியாத என் அறையைப் பற்றிய விபரம் உங்களுக்கு கொஞ்சமேனும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
42-ம் நாள்
ஸ்ரீமான் தங்கையாப் பிள்ளை காலமானார். சிவலோக பதவி அடைந்தார். இயற்கை எய்தினார். மறைந்தார். செத்துப்போனார் என பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்கள்.
குருநில மன்னர், கூட்டுக் குடும்ப தலைவர் என்னுடைய தந்தை நேற்று அதிகாலையில் இறந்த செய்தி ஒரு துண்டுச் சீட்டில் எழுதி நேற்று காலை உணவாக ரஸ்க் பாக்கெட் ஒன்று மற்றும் பால் இல்லாத கருப்பு காப்பியுடம் ஸ்டூலில் இருந்தது. நான் துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு உணவு பொருட்களை அப்படியே வைத்துவிட்டேன்.
இவருடைய இரண்டாவது மகன் என்ன ஆனான் என்ற கேள்விக்கு அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை அப்படியே அல்லது ‘மூக்கு வைத்து முழி வைத்து கை கால்களை முளைக்க வைத்து’ கதைத்திருப்பார்கள். வெறும் வாய்களுக்கு நான் அவலாகக் கிடைத்திருப்பேன். மென்று விழுங்கட்டும் அல்லது தொண்டையில் சிக்கி வெளியே துப்பட்டும் எனக்கென்ன வந்தது. நாலும் பேசுவதுதானே மனித இனம்.
இன்று காலை தாமதமாய் பத்து மணி வாக்கில் அப்பா அடக்கம் செய்யப்பட்ட செய்தியோடு காப்பி மட்டும் வந்தது. தாமதமாக உணவு வரலாம் நேற்றைய என் வாழ்க்கை இரவு ஒரு குளியலோடு முடித்தது. கிட்டத்தட்ட என் அப்பாவின் பௌதிக வாழ்க்கை என் நீராடலில் கழுவி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது என்று சொல்லலாம் மிச்ச சொச்சங்கள் அவ்வப்போது வந்த அரைகுறை தூக்கத்துக்கு வெளியே மெல்ல மெல்ல விழித்த இரவோடு மறையத் தொடங்கியது.
ஸ்ரீமானைப் பற்றி சுறுக்கமாகவேணும் சொல்லியாக வேண்டும் அவர் தனக்கு பூர்வீகமாக கிடைத்த வெறும் நான்கு ஏக்கர் நிலத்தைக்கூட சரிவர பராமரிக்காமல் காடு மேடாய் கரம்பையாய் வைத்துக்கொண்டு நான்கு பிள்ளைகளைப் பெற்றவர். எனது அண்ணன் தலையெடுத்துதான் அதிர்ஷ்டம் கொட்டத் தொடங்கியது. படித்ததுக்கொண்டிருந்தபோதே அவரது கடின உழைப்பினை கவனித்த நாங்கள் சும்மா சுகமாய் இருக்க விரும்பாமல் உழைக்கத் தொடங்கினோம். செல்வம் பெருகப் பெருக அதை கட்டி காப்பதிலும் தன்னால் இன்ற அளவு உதவி செய்யும் மன நிலை உருவாகியது அப்பாவுக்கு. என் திருமணத்திற்கு பின்புதான் இரும்பை உருக்கி பல்வேறு இயந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்கூடம் தொடங்கினோம். அதற்கு தங்கையா இன்டஸ்ட்ரிஸ் என்ற பெயர் வைத்தோம். அது இப்போது தொழிற்சாலையாக பெரிதாகிவிட்டது. அப்போதிருந்துதான் அவர் பெரிய ஜமீன் போல நடந்து கொள்ளத் தொடங்கினார். அவர்தான் அனைத்து சொத்துக்கும் அதிபதி போன்று செயல்படுவார். யார் அவர்? எங்கள் அப்பா. அதிகாரம் அவர் கையிலே இருக்கட்டும் என்று நாங்கள் இருந்தோம். வள்ளுவன் சொன்னதைப் போல இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என இருக்கட்டுமே என்று.
ஸ்ரீமான் தங்கையாவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். தூரத்து உறவுக்கார வறிய நிலையில் இருந்தவருக்கு மகளை திருமணம் செய்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக் கொண்டார். அவர்தான் தங்கையா இன்டஸ்ரிஸின் சப் காண்ராக்ட் மேனேஜர். என் மனைவி உற்பத்திப் பிரிவு மேனேஜர். இரு மகன்களும் முதன்மை நிர்வாகிகள் . இந்த நால்வரும் கம்பெனியின் பங்குதாரர்கள்.
அவரவர்களுக்கென்று அவர்களின் பணிக்கான ஊதியம் அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிந்தேன். மற்ற இரு மறுமகள்களும் தனியார் கல்லூரிகளில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்கள்.
அவரவர்களின் ஊதியத்தை அவர்கள் செலவு செய்து கொள்ளலாம். கஞ்சனாக இருக்கக் கூடாது. ஆனால் சிக்கனமாக இருக்க வேண்டும் என அடிக்கடி அட்வைஸ் செய்யும் அதிகார மையம்.
எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் வழங்குவார். கோவிலுக்குப் போகணும், சினிமாவுக்குப் போகணும், சுற்றுலா போகிறோம் மற்றும் எந்த கோரிக்கையென்றாலும், ‘ம். போய்ட்டு வாங்க. பத்திரம்’ என்பார்.
கோரிக்கை சம்பிரதாயமானதாக இருந்தாலும் அனுமதி ஆத்மார்த்தமானதாக இருக்கும்.
பேரப்பிள்ளைகளில் பாதிப்பேர் அவரைக் சுற்றி ஈக்கள் போல மேய்ப்பார்கள் சிலர் கிட்டேகூட வர மாட்டார்கள். அது மரியாதையின் அடிப்படையிலானதாவும் தாத்தாவைப் பார்த்தால் ஏற்படும் உள்ளுக்குள்ளான பயமாகவும் இருக்கும். தொண்ணூறு வயதானாலும் உடல் வலு கொண்ட நல்ல நடமாட்ட ஜீவன்.
எங்கள் பாட்டன் சொத்தான நாலு ஏக்கரோடு பின்னர் வாங்கிய ஆறு ஏக்கரையும் சேர்த்து சாகுபடி நிலங்கள் அனைத்தையும் குத்தகைக்கு விட்டு வைத்துள்ளார். ஏதோ காரணத்தால் மகசூல் சரியில்லாமல் போனால் அதற்குத் தக்கவாறு குத்தகையை குறைத்துக் கொள்வார். அவர்களின் நிலையறிந்து ‘இந்த வருடம் குத்தகையே தரவேண்டாம் போங்க’ என்று சொல்வதும் உண்டு. அவர் ஒரு நியாயஸ்தர் என்று சொல்லலாம்.
விவசாய வருமானம் அனைத்தையும் அவரே வைத்துள்ளார். அந்த வருவாயில் பத்து ஆண்டுக்கு முன் கட்டியதுதான் இப்போது உள்ள கூட்டுக் குடும்ப வீடு.
தரை தளத்தோடு சேர்த்த பத்து படுக்கை அறைகளைக் கொண்ட மூன்று தளங்களைக் கொண்ட வீடு. கூட்டி பராமரிப்பதற்கென்று ஒரு பணியாளர் சமையலுக்கு இருவர் தோட்டவேலை இன்ன பிற வேலைகளுக்கு இருவர் என மொத்தம் ஐந்து பேர் வீட்டில் வேலை செய்கிறார்கள். அவர்களை நிர்வாகிப்பது மகள் கார்த்திகாவின் வேலை. ஹோம் மேனேஜர் என்ற புதுப் பதவியை ஏற்படுத்தி அவள் பேரில் மாத ஊதியமாக வங்கியில் சேமிப்பு வைத்துள்ளார்.
சுதந்திரம் என்பது ஒரு கட்டுப்பாட்டிக்குள் உள்ள உல்லாசம் என்று வரைவிலக்கணம் தருவார். அந்த காலத்தில் பியூஸி வரை படித்தவர். அவருக்கு இணையாக வேகமாகவும் இலக்கணச் சுத்தமாகவும் என்னால் ஆங்கிலம் பேச முடியாது என்பதுதான் உண்மை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எற்பட்ட அம்மாவின் மரணம்தான் எங்களின் பேரிழப்பு.
எதற்கும் பயப்படாத ஸ்ரீமான் ஆடிப்போய் விட்டார். சடலத்தை வீட்டிலிருந்து எடுத்துச் செல்கையில் கதறி சப்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.
எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தின் முதல் இழப்பும் தாங்க முடியாத இழப்பும் அதுதான். அப்பா அழுது பார்த்ததும் அப்போதுதான்.
நாற்பத்தி மூன்றாம் நாள்
சமூக பழக்க வழக்கங்கள் மெல்ல மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவி விடுகின்றன. மனங்கள் ஒன்று போல் இல்லை. அதனை இயக்குவது அகம் மட்டுமல்ல. புறக்காரணிகளும் ஏறி உட்கார்ந்து மூளையை நோக்கி சவாரி செய்கிறது. அதனை தள்ளி விடுவதும் அதனோடு பயணிப்பதும் அவரவர்களின் விருப்பு மற்றும் வெறுப்போடு நிற்பதில்லை. அடிக்க அடிக்க அம்மியும் நகர்ந்து போகிறது. கல்லும் கரைந்து போகிறது. இங்கே ஆயிரம் பூக்கள் பூக்கின்றன. வெவ்வோறு மணம். வெவ்வோறு வடிவம். ஒரே இடத்தில் நில்லாது உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு அமைப்பு சிதைந்துபோய் வேறொரு அமைப்பு உருவாகிறது. அதுவும் ஒரு கால அளவில் தன்னை அழித்துக் கொள்கிறது. அல்லது ஏதோ காரணங்களால் அழிந்து போகிறது. மறு சுழற்சியாக மிக பழைய நிலைக்குகூட வந்து விடுகிறது.
மேலை நாட்டுக் கலாச்சாரம் நம் பண்பாடு பழக்க வழக்கங்களின் மேல் கோலோச்சத் தொடங்குகிறது. நம் பெண்கள் ஆண்களைக் கண்டால் அது சரியாக இருந்தால் கூட சேலையின் மாராப்பை சரி செய்து கொள்வார்கள். வீட்டில் கணவன் மட்டும் இருக்குப் போது கூட அப்படித்தான் அனிச்ச செயலாக கை சரி செய்ய போகும். அது பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கம் சார்ந்த செயலாகி விட்டது. ஆனால் இன்று அப்படியல்ல. வெஸ்டர்ன் கல்ச்சர் வாடை வீசத் தொடங்கிவிட்டன. கேட்டால் ஆடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம் என்கிறார்கள். பெற்றோர்களுக்குக் பயந்து வீட்டில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூட தங்கிப் படிக்கின்ற விடுதிகளில் அரைகுறை ஆடை அணிவது புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு சிலர் ஆட்பட்டுப் போகிறார்கள். ஏன் மாணவிகள் சிலர் போதைக்கு அடிமையாகும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் கசிந்து வருவதை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் மேலை நாட்டு பெண்கள் பலர் இந்திய கலாச்சாரத்தை நேசிக்கத் தொடங்குகிறார்கள். தமிழ் பெண்களைப் போல சேலை உடுத்த விரும்புகிறார்கள். இதற்காகவே சுற்றுலா வந்து நம் கலாச்சாரத்தை கண்டு வியக்கிறார்கள் போகும்போது ஜவுளிக்கடைக்குச் சென்று விதவிதமான புடவைகளை வாங்கி சுமந்து கொண்டு செல்கிறார்கள். உலகமயமாதல் உலகம் சுருங்குதல் போன்ற புற வெளிப்பாடுகள் பண்பாடுகளை மெல்ல மெல்ல ஒன்றுடன் ஒன்றை கலக்க வைக்கிறது. அது ஒரு பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. உடை மாற்றம் அருவறுப்பை எற்படுத்தாதவரை மாற்றத்தை துய்க்கும் மன ஈடுபாட்டை புறக்கணிப்பது தர்மமாகாது.
அதேபோல் குடும்ப வாழ்க்கை வேறு மாதிரியாக உடைந்து போய்விட்டது. கூட்டுக் குடும்ப படிமங்களை பழைய கதைகளில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய காலத்தில் வசித்து வருகிறோம். தொழில் வளர்ச்சி, மாணவர்களின் உயர் கல்வி மீதுள்ள மாற்றம் போக்குவரத்து வசதிகள் இளைஞர்களை வெளியூர்களும் அன்னிய தேசங்களும் ஈர்த்துக் கொள்கிறது. கிராமத்தை மறந்து விடுகிறார்கள் திருமணம் முடிந்த கையோடு இருவரும் பணிபுரியும் இடத்திற்கு பறந்து விடுகிறார்கள். மாமியார் மறுமகள் சண்டையின்றியே தனிக்குடித்தனம் சென்று விடுகிறார்கள். நகரத்தில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் தங்களோடு வந்து தங்கட்டும் என்று விரும்பினாலோ அல்லது வேண்டா வெறுப்பாக அனுமதித்தாலோ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு நகர வாழ்க்கை நரகம் போல் தெரிகிறது. ஒட்டுக் குடித்தனம், போதிய சுகாதாரமான காற்று இன்மை, பேசிப் பழக மனிதர்கள் இல்லாது போதல் வீட்டினுள்ளையே அடுத்த அறையில் கழிப்பறை உள்ளதாலே முகம் சுழிக்க வைத்தல் போன்ற மறுபட்ட சூழல்கள் பெற்றோர்களை மீள கிராமத்துக்கே பிடித்து தள்ளி விடுகிறது.
இது கூட்டுக் குடும்ப சிதைவு என்று சொல்ல முடியாதுதானே. தவிர்க்க முடியாத நவீன வாழ்க்கை முறை. இந்த நியூக்ளியர் ஃபேமிலி முறை ஒன்றும் சமூகம் விமர்சிப்பது போல சுயநலம் கொண்டதில்லை. அது மாறிவரும் வாழ்க்கைச் சூழலின் அவதரிப்பு. இதில் உண்மையில் தனிப்பட்ட ஆளுமைத் திறம் அதிகரிக்கிறது. தன் பெண்டு தன் பிள்ளையென்ற உறவின் அழத்தில் பொறுப்பு ஏற்படுகிறது.
இது ஏன் ஸ்ரீமான் தங்கையாப் பிள்ளைக்கும் அவரது ஜேஷ்ட புத்திரன், கனிஷ்ட புத்திரன், புத்திரி அவர்களைச் சார்ந்தோருக்கும் ஏன் மனைவிக்கும் புரியவில்லையென்றும் பிடிக்கவில்லை என்றும் எனக்கு தெரியவில்லை.
“அண்ணன் தம்பியெல்லாம் பேசாம இருக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன அவசரம்?” என்றாள் மனைவி.
“என்னையும் ஊமையா இருக்கச் சொல்லுறியா? என்னால முடியாது. அவங்கே பயந்தாங்கொள்ளிங்க. ஸ்ரீமான் மிரட்டலுக்கு கட்டுப்பட்ட பெட்டி பாம்புக.”
“அது என்ன ஸ்ரீமான். அப்பான்னு சொல்லுங்க”
“சரி அப்பா. போதுமா?”
“எப்பன்னாலும் நீங்க நெனக்கிற மாதிரி தனித்தனியேதான் போப்போறோம். அதுகான டயம் இதுல்லன்னு நெனக்கிறேன்.”
“அவரு இருக்கும்போதே சால்வு பண்ணிட்டா பிரச்சனை இல்லேங்குறத நீ கூட புரிஞ்சிகிட மாட்டேங்குறே”
“மாமா டாம்பீகத்தோட ஜமீன் போல போய் சேர்ந்திடணும்னு பாக்குறாரு. ‘ஒரு நாள் நம்ம கூட்டுக் குடும்பதிலுல ஏதாவது சங்கடம், பிரச்சனை இருக்காம்மா? யாரோட சுதந்திரத்தையும் நான் பறிச்சிட்டேனா’ன்னு கேட்டாரு. நான் என்ன சொல்லுறது?”
“நீ ஒண்ணும் சொல்லிருக்க மாட்டா. நீதான் அவருக்கு செல்ல மருமகளாச்சே.”
“ஆமாம். அதுல என்ன சந்தேகம். என்ன கேக்காம எதும் முடிவெடுக்க மாட்டாரு. இப்ப என்ன கொறைஞ்சி போச்சி. எல்லோரும் நிம்மதியா சுதந்திரமாதான வாழ்றாங்க. யாரோட விருப்பத்துக்கு எதிரா அவர் தடை போடுறாரா? இல்லையே!”
“இவங்க விருப்பங்குறது அவரோட விருப்பத்த சார்ந்து இருக்குறதால் பிரச்சனை இல்ல. சுய புத்தி சுய சிந்தனையோடு நடந்துகிட்டு விருப்பத்த தெரிவிச்சா ஆபத்தாயிடும்”
“அதுக்குன்னு ஒண்ணா கதை விடாதிங்க. என்னமோ நீங்கதான் அறிவுக் கொழுந்துன்னு. குடும்பம்னா நாலையும் அனுசரிச்சிதான் போகணும். தெரிஞ்சிகிடுங்க”
“உங்கிட்ட அதுக்குமேல பேசி பிரயோஜனம் இல்ல. நீ கேப்பான்னு நெனச்சது என்னோட முட்டாள் தனம். நீ கேக்க மாட்டே நானே கேக்குறேன்”
“ரோம்ப அவசரப்படாதிங்க. அதுக்குன்னு ஒரு நேரம் காலம் வரும். அவருக்கே தெரியாதா என்ன?”
“டேண்ட் வேஸ்ட் மை டயம். நாளைக்கு நான் இந்த பிரச்சனையை எழுப்பதான் போறேன்” என்றேன்.
“பேசணும்னு போயி வேற எதையாவது பேசிட்டு பொய்டுவிங்க. தெரியாதா எனக்கு? பாப்பமே நாளைக்கு”
“பாப்போம் பாப்போம்”
நாற்பத்தி மூன்றாம் நாள்.
என் தந்தையை நான் ஸ்ரீமான் என்று சொன்னேன் என்றால் அந்த வார்த்தைக்கு அவர் பொறுத்தமானவர்தான்.
ஆறடி உயரம். சிவந்த மேனி. தொண்ணூறு வயதை நெருங்கினாலும் சுருக்கம் விழாத தோல். வெள்ளை வெளிர் நிற தலைமுடி. முறுக்கிவிட்ட வெள்ளை மீசை.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரே ஷேவிங்க் செய்துகொள்வார். எப்போதும் சலவை செய்த வெண்ணிற கதர் வேஷ்டி, கதர் அரைக்கைச் சட்டைதான் உடுத்துவார். ஒரு சின்ன வெள்ளை நிற டவலை மடித்து கையில் மூக்குக் கண்ணாடி கூடோடு வைத்திருப்பார். ஊன்றுகொல் இன்றி உலா வரும் திடகாத்திரம். இறைவனின் வரம் என்று சொல்லலாம். அவர் அறையை விட்டு வெளியில் டைனிங் ஹால் அல்லது வரவேற்பு அறைக்கு வந்தால் கூட மேல் சட்டையின்றி வர மாட்டார்.
“ஏதோ பேசணும்ன்னிங்களாமே என்னப்பா?” என்றார்.
“ஒண்ணும் இல்ல” என்றேன்.
எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம். சேமித்து வைத்திருந்த வார்த்தைகள் திடீரென செலவழிந்து போனது.
“நல்லது. ஒண்ணுமில்லாததுதான் நல்ல செய்தி” என்றார். ஒன்றும் இல்லை என்று சொல்லவா வந்தேன் என்று அவருக்கு நன்றாக புரிகிறது. அந்த வார்த்தைகள் ஒரு கேலியின் வெளிப்பாடு என்பதோடு ஒரு இலக்கிய ஆளுமை அல்லது பேச்சின் லாவகம் என புரியட்டும் என்ற தொனி என தெரிந்து கொண்டேன்.
நான் மேலேதும் பேசாத தயக்கத்தின் வெளிப்பாட்டை அவர் மீதுள்ள பயம் அல்லது மரியாதை என்பதை உணர்ந்தவர் “உட்காருங்க. உட்கார்ந்து பேசலாம். இங்க என்ன தயக்கம்” என்றார்.
” வேண்டாம்” என்று உட்கார மறுத்தேன்.
“உக்காருங்கப்பா” என்று கட்டாயப் படுத்தினார்.
சரியென நான் பெரியவனான பிறகு முதன் முதலாக உட்கார்ந்தேன். அவர் முன்னாள் அவரது மறுமகனைத் தவிர வேறு யாரும் உட்காருவதில்லை என்பது ஒரு வழக்கமாகிப்போனது. அவை எல்லாம்தான் தனக்குத்தானே ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள அவருக்கு கை கொடுத்து எனச் சொல்லலாம்.
வேலைக்காரியை கூப்பிட்டு மூன்று காப்பி கொண்டு வரும்படியும் சாரதாவை வரச்சொல்லும்படியும் பணித்தார்.
நானும் மனைவி வரட்டும் என்று இருந்தேன். இருவரும் எதுவும் பேசவில்லை. சப்த நாடியும் அடங்கிய சூழல் குடிகொண்டது.
காப்பியோடு வேலைக்காரி வந்தாள். கூடவே அசட்டுச் சிரிப்போடு என் மனைவி வந்தாள். வேலைக்காரி காப்பியை டீபாயில் வைத்துவிட்டு அகன்ற பின்னும் சில வினாடிகளை மௌனமாகக் கழித்தது காலம்.
சாரதாதான் ஆரம்பித்தாள் “என்ன மாமா கூப்டிங்களாமே?”
“மொதல்ல காப்பி சாப்புடுவோமே. அப்பறம் பேசிக்கிடலாம்” என்றார் அப்பா.
“ஏன். சாப்டுகிட்டே பேசுவோமே”
“அப்போ உக்கார்ரது”
“நான் என்னக்கி உக்காந்தேன். இது என்ன புது பழக்கமா இருக்கு”
“அப்படியே இருக்க முடியுமா. காலத்தோட காலமா மாறிக்க வேண்டியதுதானே. மரியாதைன்னுறது மனசுல இருந்தாபோதும்மா” என்றார்.
இவ்வளவு நாளாக இதை சொல்லவில்லையே. இப்போதுதான் எஜமான திமிர் உடைகிறதோ அல்லது மனித மதிப்பை புரிந்து கொள்ளும் ஞானம் வந்ததோ என்ற யோசித்துக் கொண்டேன்.
சாரதா நின்று கொண்டே காப்பியை அருந்தியவாறு “அப்ப நாங்க உங்களுக்கு கொடுக்குற மரியாதைய கொறைச்சிகிட்டு வாறோம்ன்னு பீல் பண்ணுறிங்க மாமா?”
“சேச்செ ச்சே. இப்படி உங்கள எல்லாம் நிக்கவச்சி பேசுனது தப்புன்னு பீல் பண்ணுறேன்”
“நாங்க என்ன வயசானவங்களா என்ன! எவ்வளவு நாழி நின்னுகிட்டு பேசப்போறோம். ஒரு ஐஞ்சி பத்து நிமிஷம். அதுல என்ன கால வலிக்கப் போவுது”
“கால வலிக்கிறத்துக்கு சொல்லலம்மா. உங்க எல்லோருக்கும்தான் வயசாச்சி. ஏன் உட்கார வைச்சி பேசிருக்கக் கூடாதுன்னு காலம் கடந்து யோசிக்க வைக்கிது எனக்கு”
“அதெல்லாம் ஒண்ணும் யோசிக்க வச்சி பீல் பண்ணி மனச சங்கடப்படுத்திக்கிடாதிங்க. சரியா! விஷயத்துக்கு வருவோம்”
“நீங்க காப்பி குடிக்கலையா” என்றார் என்னைப் பார்த்து.
“ம்” என்று அருந்தத் தொடங்கினேன்.
“ஒண்ணுமில்லம்மா. உங்க வீட்டுக்காரர் ஏதோ பேசணுன்னார். ஆனா பேச மாட்டேங்குறார். அதான் கூப்பிட்டேன்”
“அது என்ன என் வீட்டுக்காரர். ஒங்க புள்ளன்னு சொல்லுங்களேன்”
“சரி என்னோட புள்ளயாண்டான்”
“அது ஒண்ணுமில்ல. இத இப்ப எடுக்க வேண்டாமுன்னேன். அவருதான் கேக்கப் போறேன்னார்”
“அப்ப உங்களுக்குத் தெரியுமா? ஏன் எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
“நேத்தக்கி நைட்தான் சொன்னார். என்ன அவசரம்ன்னு இருந்துட்டேன்”
“ம் . சொல்லுங்க”
“ஒண்ணுமில்ல மாமா நீங்க இருக்கும்போதே யார் யாருக்கு என்னன்ன சோர்ஸ்ன்னு கைய காமிச்சிட்டிங்கன்னா பின்னாடி எந்த பிரச்சனையும் வராதுன்னாங்க உங்க நடுப்புள்ள”
“அப்படியா!” என்று ஒரு ஏங்கு ஏங்கியவர் “அப்ப நான் சீக்கிரம் செத்து பொய்டுவேன்னு முடிவு பண்ணிட்டிங்களா?”
“ஐய்யய்யோ. அப்படி இல்ல மாமா”
“அதும் சரிதான். தெண்ணூறு ஆவப்போவுது. இப்பையோ எப்பையோ?”
“யார் யாருக்கு எப்ப வரும்னு யாருக்குத் தெரியும். எனக்கு கூட இன்னக்கே வரலாம்” துணிந்து பேசிவிட்டேன்.
“ஐய்யய்யோ. ஐயோ வாயில அடிச்சிக்கிடுங்க. எம் முன்னாடி அப்படி சொல்லக்கூடாது” என கோபம் கொண்டார்.
நிசப்தமானது. நீண்ட நேரம்.
“அய்யா இந்த சொத்துல ஒரு காசுகூட நான் சம்பாதிச்சதில்ல. உங்க பாட்டன் விட்டுட்டுப்போனது வெறும் நாலு ஏக்கர் நெலம் மட்டும்தான். அதை காலி பண்ணாம பாத்துகிட்டதுதான் என்னோட ரோல். மற்றதெல்லாம் நீங்களெல்லாம் சேந்து சம்பாதிச்சதுதானே”
“நீங்க மேனேஜ் பண்ணலன்னா இவ்வளவு சேத்துருக்க முடியுமா மாமா” என்றாள் சாரதா.
‘ஒரு காலத்துக்கு அப்புறம்தான் நான் மொதலாளி மாதிரி போலி வேஷம் போட்டேன். அதுக்கு முன்னாடி அவங்களாத்தானே சொத்த சேத்தாங்க. எனக்கு கொடுத்த இந்த அந்தஸ்துக்கும் இவ்வளவு நாளா கூட்டுக் குடும்பமா இருந்ததுக்கும் நான்தான் எல்லாருக்கும் நன்றி சொல்லணும். இப்ப கூட எம் புள்ளயாண்டான் நேரடியா கேக்க யோசிக்கிறது பயந்தா இல்ல என்னோட போலி கௌரவம் உடைச்சிடக் கூடாதுன்னான்னு எனக்குத் தெரியல. இது வருத்தமா? மகிழ்ச்சியா? இல்ல இல்ல இரண்டுமான கலவையாகப் படுறது எனக்கு”
“எங்களுக்கு முன்னாடி நீங்க எப்படி வாழ்ந்திங்களோ. ஆனா நாங்க தலையெடுத்ததும் உங்கள ஒரு உயர்ந்த அந்தஸ்துல வைக்கணும்ன்னுதான் எங்களோட ஆசை. தெரிஞ்சிகிடுங்க”
“நன்றிய்யா. நன்றி”
“சரி. இத இத்தோட விடுங்க நான் கேட்டது தப்புதான்” என்று சரண்டர் ஆனேன்.
“இல்லையா. கம்பெனியில நாலு பேருக்கும் சம பங்கு இருக்கு. அது பிரச்சனை வராது. இந்த வீட்டுல மூணு பேரும் இருந்துகிட்டு. தங்கச்சிக்கு மட்டும் தனியா ஒரு வீடுகட்டி கொடுத்துடுங்க. இருபது ஏக்கர் நிலத்த நாலு சம பங்கா பிரிச்சிடுவோம். இதுலையும் ஒண்ணும் பிரச்சனை இல்லையே. நாளைக்கே எழுதிடுவோம். வக்கில் வெங்கட்ராமன நாளைக்கி சாயங்காலம் வரச் சொல்றேன்.” என்றார்.
முகத்தில் ஒரு இறுக்கம் தென்பட்டது. சதை இறுகிப்போனது. அவர் என்னை நிமிர்ந்து பார்த்ததும் நான் பார்க்காதது போல சற்று குனிந்து கொண்டேன்.
“வேண்டாம்பா. நீங்க இருக்குற வரைக்கும் ஒண்ணாவே இருக்கட்டும். அதுக்கு பிறகு பாத்துக்கிடுறோம்” என்றேன்.
“வேண்டாம்பா. பிரச்சனைன்னு வந்துட்டா தீர்வு பண்ணிட்டாத்தான் சரிப்படும்”
“உங்க புள்ளையே சொல்லிட்டுச்சி. பேசாம போய் அமைதியா தூங்குங்க மாமா” என்றாள் சாரதா.
மகளை கூப்பிட்டு “அண்ண, அண்ணி, உங்க வீட்டுக்காரர் எல்லாம் வீட்ல இருக்காங்களா?” என விசாரித்தார்.
“பெரியண்ணன் இன்னும் வரல. பெரியண்ணி கிச்சன்ல இருக்காங்க. சின்ன அண்ணனும் அண்ணியும் மேல மாடியில இருக்காங்க. உங்க மறுமகனும் இன்னும் வரல” என்று விளக்கினாள் தங்கை.
“அப்ப சரி நாளைக்கு இந்நேரத்துக்கு எல்லாரையும் வரச்சொல்லு. அவங்க கிட்டையும் கேட்டுகிடுவோம்”
“என்னப்பா?”
“அத நாளக்கி தெரிஞ்சிக்கிடலாம். நீயும் வந்துடு” என கூறி மகளை அனுப்பி வைத்தார்.
“சரி. சாப்புட்டுட்டு போய் தூங்குங்க. எழும்பி வாங்க” என்று அப்பாவை சாரதா அழைத்தாள்.
“எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம் கொஞ்சம் டயம் ஆகட்டும் நீங்க போய் வேலை ஏதும் இருந்தா பாருங்க” என்று அன்றைய பேச்சு வார்த்தையை முடித்து வைத்தார்.
மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்ததும் நேராக மருத்துவமனைக்குப் போனேன்.
குடும்பமே பார்வையாளர் பகுதியில் கூடி இருந்தது. என்னை யாரும் ஏறேடுத்து பார்க்கவில்லை. பார்த்தும் பார்க்காதது போல் இருந்தனர். தங்கை மட்டும் தனியே அழைத்துப் போய் நடந்ததைச் சொன்னாள்.
மதிய வாக்கில் மயக்கம் போட்டு அப்பா கீழே விழ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சிவியர் ஹார்ட் அட்டாக் என ஐசியூவில் இருப்பதாகவும் தெரிவித்து அழைத்துப் போனாள். பேச அனுமதி இல்லையென செவிலியர்கள் கட்டளையிட்டார்கள். சற்று நேரம் உள்ளே அவர் பக்கத்தில் நின்றேன். அசைவின்றி கிடந்தார். கண்கள் இமைக்கவில்லை. அவரின் பார்வை என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என நினைக்கிறதா எதுவும் பேச விரும்ப வில்லை என சபிக்கிறதா என என்னால் உறுதிபடுத்த முடியவில்லை.
யாரும் என்னோடு பேசவில்லை. நான் நேரே வீட்டுக்கு வந்து படுக்கையில் சோர்ந்து விழுந்தேன்.
மறுநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்போது சாரதா வந்து “ஸ்ரீமான் தங்கையா பிள்ளை இஸ் எ விருட்சுவல் பிரிசனர் இன் எ ஆஸ்பிட்டல் ரூம்” என்றாள். அவை கிண்டலான வார்த்தைகள் அடங்கிய கோபத்தின் வெளிப்பாடு.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு காம்பௌண்டுக்குள் பழுப்பு நிற குட்டிப் பூனையை கொண்டு வந்து விட்டுவிட்டு மற்ற இரு குட்டிகளுடன் தாய் பூனை எங்கோ சென்று விட்டது
அந்த குட்டி பூனை பார்க்க பாவமாய் இருக்கும். அகப்படும் சின்ன சின்ன பூச்சிகளை பிடித்து சாப்பிடும். அணில்களுக்கு நாங்கள் வைக்கும் உணவை தின்னும். கொஞ்சம் வளர்ந்தும் அணிலை பிடிக்க ஆரம்பித்தது. விரட்டி அடித்தால் சுவரில் ஏறி வெளியே ஓடிவிடும். பின்னர் சற்று நேரத்தில் திடீரென சுவரேறி குதித்து உள்ளே வந்துவிடும்.
பூனையின் அராஜகம் தாங்காமல் போனது. அதன் வேட்டைக்கு விருந்தானது போக மற்ற அணில்கள் இங்கிருந்து எங்கோ ஓடிவிட்டன.
அணில்கள் உணவை முன்னங்கால்களில் தூக்கி வைத்துக் கொண்டு கொரித்து உண்ணும் அழகையும் அங்கும் இங்கும் மாறிமாறி மரத்தில் ஏறி இறங்கி ஓடிக்கொண்டே இருப்பதால் எத்தனை அணில்கள் இங்கே இருந்தன என எண்ண இயலாது தோற்றுப்போன மகிழ்வும் இந்த பூனையினால் சிதைந்து போனது.
பூனையும் படைக்கப்பட்ட ஒரு ஜீவன்தானே. அணிலைப் போல, ஆட்டைப் போல, மாட்டைப் போல, மானைப் போல ஏன் சிங்கம், புலி, கரடி, ஓநாயைப் போல எதையாவது தின்றுதானே ஆகவேண்டும். பாலோ எலியோ கிடைக்காதபோது அணிலையும் பிடித்து தின்ன வைக்கிறது தன் பசி. ஒரு தட்டில் தினமும் பால் ஊற்றி வைக்க சரியான நேரத்திற்கு வந்து நச்சி நக்கி குடிப்பதும் பால் தீர்ந்ததும் உதடுகளிலும் மீசையிலும் ஒட்டி இருக்கும் பாலை நாவால் தடவி சுவைப்பதும்கூட பார்க்க ரம்யமாகத்தான் இருக்கும்.
அந்த பூனை இப்போது தினமும் என் அறையின் ஜன்னல் கட்டையில் ஏறி அமர்ந்து கொள்கிறது. ஒரு பேப்பர் கப்பில் என்னுடைய காப்பியை அல்லது பாலை பகிர்ந்து வெளியே வைப்பேன் அருந்திவிட்டு ஒரு பார்வையை என் மீது வீசி விட்டு சிங்க நடை போட்டு நகர்ந்து விடுகிறது.
43-ம் நாள்
அந்த பூனைதான். புலி வேஷத்தோடு சிங்க நடை போட்டு ஜன்னல் கட்டையில் நடந்து வந்து கொசு வலையை தலையால் முட்டி தள்ளி திறந்து கொண்டு ஜன்னல் கம்பிக்குள் புகுந்து அறைக்குள் வந்து விட்டது. வேஷமில்லை புலியேதான். சிறிய மானின் கழுத்தை கடித்து வாயில் ரத்தம் ஒழுக இழுத்து அறையின் ஓரமாக நடக்கிறது.
நான் ‘ச்சு சூ’ என விரட்டி அடிக்க முயல்கிறேன். முடியவில்லை வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. கை கால்களை அசைக்க முடியவில்லை. மானின் கால்களின் கடைசி அசைவும் நின்று போக பற்களால் தோலை கிழித்து இறைச்சியை சுவைத்து உண்கிறது. பசி அடங்கவில்லை எனில் அடுத்தது நானாகத்தான் இருக்கும். ஒரு பலத்த உளறலோடு கண் விழித்தேன். உடல் வியர்த்துக் கொட்டியது. எழுந்து நடக்க முடியாத பயம். உறைந்துபோய் படுக்கையை விட்டு எழாமல் இறுகிப்போனேன்.
சிறு வயதாய் இருக்கும்போது இது போன்ற உடலை இறுக்கி அம்மும் கனவுகள் கண்டிருக்கிறேன். அதை பாட்டியிடம் சொன்னால் ‘அம்மல் பிசாசு சில நேரம் கனவில் வந்து நம்மை பயமுறுத்தும்டா” என்பார். இத்தனை வருமாக ஏங்கோ ஓடி ஒளிந்த பிசாசு இப்போது எப்படி வந்தது. பேயாவது பிசாசாவது. ச்சீயென சொல்லிக் கொண்டு துணிந்து எழுந்து ஜன்னல் பக்கம் வந்து கம்பியை பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்தேன். சப்தரஷி மண்டல நட்சத்திர கூட்டத்தின் வால் பகுதி நடுவில் காணும் நட்சத்திரத்தின் ஓரமாக ஒரு புதிய நட்சத்திரம் இன்று கண் சிமிட்டுகிறது. நேற்று வரை அது என் கண்ணில் படவில்லை.
கண் சிமிட்டலில் பல வார்த்தைகள் உதிர்கின்றன. என்னைப்போல இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் அப்பா வறுமையில்தான் வாழ்ந்துள்ளார். அறுபது வயதுக்கு மேல்தான் சகல சௌகரியங்களுடனும் வாழ வழி கிடைத்திருக்கிறது. அது எல்லோரும் சேர்ந்து கட்டிய அழகான ஒரு தேன் கூடு. அவசரப்பட்டு கல்லை எறிந்து விட்டதாக உணர்ந்தேன்.
அதன் ஓயாத கண் சிமிட்டல்கள் என் இமைகளை மூட விடாது செய்தன.
**44-ம் நாள்
தூங்குவதற்குள் அது தெரிகிறதா என பார்த்தேன். இன்றும் அது கண் சிமிட்டிய வண்ணம் வானம் முழுவதையும் அலங்கரிப்பது போல உணர்ந்தேன்.
பல நட்சத்திரங்கள் பூமியிலிருந்து லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் இருக்கின்றனவாம். அவற்றில் சில நட்சத்திரங்களின் ஒளி இன்னும் பூமி வந்தடைவே இல்லையாம்.
அப்படியென்றால் இந்த நட்சத்திரத்தின் ஒளி நேற்றுதான் பூமியை வந்தடைந்திருக்க வேண்டும். பல லட்சம் கோடி ஒளி ஆண்டு தூரத்திற்கு அப்பால் அது இருக்க வேண்டும். அப்பா அவ்வளவு தூரம் எங்களை விட்டு விலகி ஒளி தருகிறாரா!
ஏதோ குற்ற உணர்வு என் சாதாரணத்தை துளைத்தெடுக்கிறது. கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிகிறது. அது நடு ஜாமமாக இருக்கலாம். மீண்டும் ஒரு முறை அந்த விண்மீனை பார்த்துவிட்டு படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை.
இவ்வாறான வேளைகளில் நூறிலிருந்து இறங்கு வரிசையில் வேகமாக எண்ணுவேன். நடுவில் திடீரென மேலே போய் மீண்டும் டிசீன்டிங் ஆடரில் எண்ணுவேன். இப்படியாக எண்ணினால் மனதை அலங்கோலமாக்கிய பாரம் களைந்து போய் தானா தூக்கம் வந்து உறங்கி விடுவேன். 100,99, 98…….85 மீண்டும் 90, 89, 88……45 மறுபடி 60, 59,58. என வேகமாக மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
இன்றும் அந்த பூனை ஜன்னல் கட்டையில் நடக்கிறது. இன்று புலி வேஷமில்லை. பூனையாகவே. ஆனால் வண்ணம் மாறிப்போய் சாம்பல் நிறத்தில்.
கொசு வலையை தள்ளிக்கொண்டு ஜன்னல் கம்பிகள் வழியே நுழைந்து என்னோடு படுத்துக்கொண்டது. உதடு மற்றும் மீசையில் படிந்த எலியின் ரத்த கரையுடன். ஒரு மரண வாசத்துடன்.
தூங்க முயற்சித்து தோற்றுப்போன அந்த பூனை என் மேல் ஏறி அதன் கூறிய நகங்களால் பிறாண்டி எடுக்கிறது. என்னால் அதை விரட்ட முடியவில்லை. வார்த்தைகள் வாயில் இருந்து வெளியே வராதவாறு உதடுகளை ஏதோ ஒரு சக்தி இறுக்கி மூடுகிறது. கை கால்கள் அசைவற்று போனது. வலியின் ஆழத்தை மட்டுமே உணர முடிகிறது. உடல் முழுதும் ரத்த கோடுகள்.
பலத்த பிதற்றலுடன் விழித்த பின் விடிய வேகு நேரமானது.
விடிந்தும் அவசர அவசரமாக நடந்ததை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்.
பாகம்-2
காலையில் வைத்த உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்று மதிய உணவினை வைத்து வந்த சமையல்கார அம்மா சொன்னார். இரவு போனபோதும் உணவை எடுக்கவில்லையென தகவல் அறிந்ததும் என்ன மண்ணாங்கட்டி நிபந்தனை என கதவை தட்டி அழைத்தும் திறக்காததை தொடர்ந்து வெளிப்புறம் போய் ஜன்னல் கதவை தள்ளிக்கொண்டு பார்த்தபோது பாஸ்கர் அசைவற்று கிடந்தார். பதறிப்போய் கதவை உடைத்து திறந்து அலறி அடித்துக் கொண்டு பாஸ்கரின் சடலத்தை வெளியே கொண்டு வந்தோம்.
முடி வளர்ந்து காடு போல் மண்டிக் கிடக்க அடர் வெண்ணிற தாடிக்குள் சிரித்த முகம் காட்டிக் கொண்டு எங்களை அழவைத்து விட்டார்.
பதினாறும் நாள் காரியத்தின்போது ஸ்ரீமான் தங்கையா பிள்ளையின் படத்துக்குப் பக்கத்தில் தெய்வமாகிவிட்டார்.
ஒரு மாதத்திற்கு பின் குடும்பம் அதனுடைய சொத்துகள் எல்லாம் வேறு வகையில் முறைப்படுத்தப் படுத்தினோம்.
தங்கைய்யா இன்டஸ்ரிஸ் ஸ்ரீமான் தங்கையா இன்டஸ்ரிஸ் என பெயர் மாற்றப்பட்டது. நான்கு பேருக்கும் இருந்த அதன் பங்குகளை நான்கு குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கும் சமமாக பிரிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பெண்கள் மூன்று ஆண் வாரிசுகள். சேமிப்பில் இருக்கும் அதனுடைய லாபத் தொகையில் புதிய தொழிற்கூடம் ஒன்றை தொடங்கலாம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கு “ஸ்ரீமான் பாஸ்கர் மோட்டார்ஸ்” என பெயர் வைக்க முடிவெடுத்தோம்.
இனி இந்த குடும்பத்தின் எஜமானி ஸ்ரீமதி சாரதா ஆகும். அவர் இனி வேலைக்கெல்லாம் போக மாட்டார். குடும்பம், தொழிலகங்கள், நில புலன்கள் எல்லாவற்றிற்குமான மேற்பார்வையாளர் ஆவார்.
அதற்கு அவர் ஒத்துக் கொள்ளாததால் கெஞ்சி, கூத்தாடி, கட்டாயப்படுத்தி, வாரிசுகள் அழுது புலம்பி எல்லோருமாக சம்மதிக்க வைத்தோம். தங்கையாப்பிள்ளை இருந்த ராசியான அறை இனி எஜமானி சாரதா என்ற சாரதா தேவிக்கானது என முடிவெடுத்தோம்.
இரண்டு ஸ்ரீமான்களின் படத்தைத் தவிர ஹாலில் உள்ள மற்ற எல்லா போட்டோக்களையும் அகற்றிவிட்டோம். இருவரும் எங்கள் பரம்பரையின் அப்பாக்கள் என்ற தொன்மங்கள்.
நௌ வீ ஆர் விருட்சுவல் பிரிசனர்ஸ் இன் எ ஹேப்பி ஜாயிண்ட் ஃபேமிலி.
– பிரதிலிபி இணைய தளத்தில் மே 2021 ஆம் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிகர்நிலை உண்மை (Virtual Reality) என்ற தலைப்பின் கீழ் தொடராக எழுதப்பட்டு ஐந்தாம் பரிசு பெற்ற கதை.
– அறைக்குள் அகப்பட்ட வானம், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் (aishushanmugam09@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.