அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மாட்டாளோ என்று சந்தேகம் வந்தது.
தூறலில் நனைந்து கொண்டே பாட்டி வந்து சேர்ந்தாள்.
“தட்டில் சாப்பிடுவேளா? இலை வேண்டுமா?” என்று கேட்டாள் கற்பகம்.
“எல்லாம் தட்டில் சாப்பிடுவேன். இலைகிலை வேண்டாம்” என்றாள் பாட்டி.
பருப்புக்கு நெய் ஊற்றியபோது நிமிர்ந்து பார்த்து லேசாகச் சிரித்தாள். அழுது விடுவாள் போலிருந்தது.
“நெய் குத்திண்டு சாப்பிட்டு எத்தனையோ வருஷம் ஆச்சுடி” என்றாள்.
‘என் பிரெண்ஸுக்கு எதிரில் என்னை ‘கப்பூ’ னு கூப்பிடாதே பாட்டி. அப்புறம் நான் உனக்கு முதுகு சொரிந்து விடமாட்டேன்!’ என்று தன் சொந்தப் பாட்டியிடம் சண்டை போட்டதை இப்போது நினைத்துக் கொண்டாள் கற்பகம். மனம் நெகிழ்ந்து போனது.
பாட்டி வயிறாறச் சாப்பிட்டாள். கற்பகம் கேட்டுக் கேட்டுப் போட்டாள்.
“நீங்கள் எச்சில் தொடைக்க வேண்டாம், நான் செய்யறேன்,” என்றாள்.
பாட்டியை இந்த உபசரிப்புகள் நெகிழ்த்தியிருக்க வேண்டும். ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வந்து கற்பகம் உட்கார்ந்ததும் சொன்னாள்.
“நா இங்கே வந்து இருந்துடறேண்டியம்மா. உங்காத்துலேயே வேலை எல்லாம் செய்துண்டு இருக்கேன், என்னால முடியலைடி பொண்ணே!” என்றாள், திடீரென்று.
கற்பகம் இதை எதிர்பார்க்கவில்லை.
நாலைந்து நாட்களுக்கு முன் கணவன் ராமன் ஆபீசுக்குச் சென்ற பின் வாசல் கேட்டைச் சாத்திக் கொண்டு திரும்பும் போது தான் தூரத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பாட்டியைப் பார்த்தாள் கற்பகம். மனதிற்குள் ஏதோ சிலலென்று ஓடினாற் போலிருந்தது அவளுக்கு. அருகில் போய்ப் பார்க்க வேண்டும் போல் ஆவல். அடக்கிக் கொண்டாள். மடிசார் தான் கட்டிக் கொண்டிருந்தாற்போலிருந்தது. பின் புறமாகப் பார்த்ததில் சரியாகாத் தெரியவில்லை. கூர்ந்து பார்த்ததில் பாட்டிசெருப்பு போட்டுக் கொள்ளவில்லை என்பதும் புடவை பழசாக இருப்பதும் தெரிந்தது. எங்கே இந்த நேரத்துக்குப் போகிறாள்? புரியவில்லை.
நிச்சயம் தமிழக்காராளாகத்தான் இருக்க வேண்டும். கற்பகத்திற்குச் சந்தோஷமாக இருந்தது. தமிழ்க்காரர்களைப் பார்க்க மாட்டோமா என்று அடிக்கடி ஏங்கும் மனம் அந்த மடிசார்ப் பாட்டியைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டது. அந்த உடையில் யாரைப் பார்த்தாலும் மனம் நெகிழந்து போகிறது.
ஹைதராபாத் வந்தது முதலே கற்பகத்திற்கு ‘ஹோம்ஸிக்’ ஆரம்பித்து விட்டது. ‘ஒச்சாடு , போயாடு, மாட்லாடு’ என்று சுற்றிலும் ஒரே ‘சுந்தரத் தெலுங்கு’. நல்ல தமிழுக்காக மனம் ஏங்கியது. இப்போது இந்தப் பாட்டியைப் பார்த்தது கற்பகத்திற்கு இறந்து போன தன் பாட்டியைப் பார்த்து விட்டாற்போல் மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் கொஞ்சம் முன்பாகவே சென்று வாசலில் நின்று கொண்டாள். ஆனால் அன்றும் பாட்டி இவள் வீட்டைத் தாண்டிச் சென்று விட்டாள். இவளுக்கு வருத்தமாக இருந்தது.
அன்று மாலையே எதேச்சையாக மீண்டும் பாட்டியைப் பார்க்க நேர்ந்த போது மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. காரணம், அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்கூல் யூனிபாரத்தில் ஆறு வயதுப் பெண் குழந்தை ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பாடா! பாட்டி ஒன்றும் தனியாகக் கஷ்டப் படவில்லை. பேத்தி இருக்கிறாள் என்றால், பிள்ளை, மருமகள் எல்லோரும் இங்கு தான் இருப்பார்கள். வசதியாகத் தான் இருப்பாள் என்று மனம் சந்தோஷப்பட்டது. உடனே போய் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொண்டாள். தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது அந்தப் பாட்டியைக் கூப்பிட்டுப் பேச ஏனோ தயக்கமாக இருந்ததது.
அன்று ராமன் ஆபிசிலிருந்து வந்ததும் கேட்டாள், “இந்தப் பக்கம் நம் ஊர் பாட்டி மாதிரியே ஒரு மாமி போறா. இந்த காலனியில் யாராவது தமிழக்காரா இருக்காளா தெரியுமா?”
“அப்படியா? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியலையே!” என்றான் ராமன்.
மறுநாள் மாலை நான்கு மணியிருக்கும். மழை தூறிக் கொண்டிருந்தது. பெரிய மழைக்கான அறிகுறியும், அதைக் கலைக்கும் காற்றின் வேகமுமாக ஆகாயம் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
வெகு நாட்களாக மழைக்காக வாடின தோட்டத்து மரம், செடிகளுக்கு தூறலும் குளிந்த காற்றும் கொண்டாட்டமாக இருந்தது. காற்றில் ஆடி, வளைந்து, ஒளிந்து, தூறலில் சிலிர்த்து மழை நீரை வாங்கி கொண்டிருந்தன. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த கற்பகத்துக்குச் சிரிப்பாக வந்தது.
தான் சின்னப் பெண்ணாக இருந்த போது தன்னை முதுகு சொறிந்து விடச் சொல்லும் தன் பாட்டியின் நினைவு வந்தது அவளுக்கு. பிஞ்சு விரல்கள் முதுகில் குறுகுறுக்கும் போது பாட்டி கூட இப்படித்தான் நெளிந்து வளைந்து நகர்ந்து கொள்வாள் என்று நினைத்துக் கொண்டாள்.
கற்பகத்துக்குக் தன் பாட்டி மேல் பிரியம் அதிகம். மார்கழி மாதம் ஆற்றில் குளிப்பதற்குக் குளிரில் அழைத்துப் போவாள் பாட்டி. திரும்பி வரும் போது ஈரப் பாவாடையோடு வர வேண்டாம் என்று, தன் ஆச்சாரத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு காய்ந்த பாவாடை எடுத்து வர அனுமதிப்பாள்.
தினமும் ஸ்கூலிலிருந்து வந்ததும் ரேழியிலேயே மடிப் பாவாடையோடு எதிர்ப்படுவாள் பாட்டி. அம்மாவுக்கு அடுப்பங்கரையிலேயே நேரம் சரியாக இருக்கும். ரேழிக்கதவை சாத்திக் கொண்டு, ஸ்கூல் விழுப்பு ஆடைகளை அவிழ்த்து விட்டு பாட்டி கதவிடுக்கிலிருந்து கையை மட்டும் நீட்டிக் கொடுக்கும் பாவாடையை வாங்கி இறுக்கிக் கட்டிக்கொண்டு உள்ளே வந்து தான் சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அவிழ்த்த ஆடைகள் கழற்றிய செருப்பு போல் மூலையிலே கிடைக்கும். மறுநாள் குளிக்கப் போகும் போது தான் அதைத் தொடலாம்.
அதையெல்லாம் நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. வாசலில் மழை வலுக்க ஆரம்பித்தது. கேட்டருகில் இருக்கும் செம்பருத்திச் செடியின் கீழ் இன்னும் ஈரமாகவில்லை. திடீரென்று அங்கே வந்து யாரோ நிற்பது போலிருக்கவே, கதவைப் திறந்து எட்டிப் பார்த்தாள், கற்பகம்.
என்ன அதிசயம்! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போலிருந்தது அவளுக்கு. அந்த மடிசார் மாமியும், பேத்தியும் மழைக்கு ஒதுங்கி இருந்தார்கள்.
“அடடே! உள்ளே வாங்கோ!” டக்கென்று தமிழிலில் பேசி விட்டாலும் சந்தேகம் வந்தது. “தமிழ் தெரியுமில்லையா?” என்று கேட்டாள்.
“நீங்களும் தமிழா தானா? நல்லதாப் போச்சு” என்று கூறிவிட்டு, ஈரத்தோடு ஹாலில் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள் பாட்டி.
துவட்டிக் கொள்ள ஒரு துண்டை பாட்டியிடம் கொடுத்து விட்டு, அந்தப் பெண்ணின் ஈர ஷூவை அவிழ்த்து வைத்து, அவளுக்கும் துடைத்து விட்டாள் கற்பகம்.
“உட்காருங்கோ!” என்றாள்.
அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
பாட்டி ஈரப் புடவையோடு உட்காருவதற்குச் சங்கடப்பட்டாள்.
“பரவாயில்லை. நாற்காலியில் உட்காருங்கள்,” என்றதும் உட்கார்ந்தாள்.
கற்பகம் ஸ்டவ்வை ஆன் செய்து பாலை வைத்தாள். சூடாக இரண்டு காபி கலந்து எடுத்து வந்தாள்.
பாட்டியிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு, அந்தப் பெண்ணுக்கு ஆற்றிக் கொடுத்தாள்.
“உங்க பிள்ளை எதில் வேலை பார்க்கிறார்? இந்தப் பக்கம் தினம் போறேளே! எந்த ஸ்கூல்?” என்று கேட்டாள்.
பாட்டி ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“பிள்ளையா? என் பிள்ளை எங்கே எங்கே இருக்கான்? அவன் போய்த்தான் வருஷம் இருபதாச்சே!”
கற்பகத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“பின்னே இவை யாரு?” சின்னப் பெண்ணைக் காட்டிக் கேட்டாள்.
“இவ நான் வேலை பார்க்கற வீட்டுப் பேத்தி” என்றாள்.
“அப்படின்னா உங்க மனுஷா இங்க யாரும் இல்லையா?”
“இல்லை. எம்புள்ள செத்துப் போய் இருபது வருஷம் ஆச்சு. அதே கவலைல எங்காத்து மாமாவும் போய்ச் சேர்ந்துட்டா. கோவில்ல குருக்களா இருந்தா. நான் அங்கேயே வீடுகள்ல சமைச்சு போட்டுண்டு இருந்தேன். அதுல ஒரு ஆத்து மாமி, இப்படி ஹைதராபாத்துல வேண்டியவா இருக்கா, போய் சமைச்சுப் போடறயான்னு கேட்டா. நானும் தெரியாத்தனமா ஒப்புத்துண்டுட்டேன். அங்க இருந்தா கொஞ்சம் கடனையும் அடிச்சுட்டு ரயில் சார்ஜ் பண்ணி அழைச்சுண்டு வந்துட்டா. இப்ப இவா வீட்ல தான் வேலை செய்துண்டு இருக்கேன்,” என்றாள்.
கற்பகத்துக்குப் பாவமாக இருந்தது. “இவாளும் தமிழ்க் காராதானா?” என்று கேட்டாள்.
“இல்லம்மா. இவளோட பாட்டிக்குத் தமிழ் தெரியமே தவிர, இவா தெலுங்குக்கு காரா தான். ரொம்ப பொல்லாதவாளா இருக்காமமா. ரொம்ப கஷ்டப்படறேன். யார்ட்ட சொல்றதுன்னு தெரியாம அல்லாடறேண்டிம்மா. தெய்வம் மாதிரி நீ கெடச்சே,” என்று கற்பகத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கற்பகத்துக்கு அழுகை வரும் போலிருந்தது.
“என்? என்ன ஆச்சு?”
“என்னன்னு சொல்ல? வேலைதான். சமையலுக்குன்னு சொல்லி அழைச்சுண்டு வந்தா. எங்க வந்த விட்டு என்னடான்னா வீடு பெருக்கறது, துணி தோய்க்கறது, வீடு தொடைக்கறது, ஒண்ணுனு இல்லை.சகலமும் நான் தான் செய்ய வேண்டியிருக்கு. என்னால முடியலை. என்னை ரெயிலேத்தி வுட்ருங்கோன்னா, கொண்டாடி பணத்தைங்கறா. நா எங்க போவேன்?”
பாட்டி இரண்டு கைகளையும் ஆட்டிப் பேசினாள்.
வயது அறுபதுக்கு மேல் இருக்கும் போலிருந்தது. தோலெல்லாம் சுருங்கி, ஒல்லியாக இருந்தாள்.
வெளியில் மழை விட்டிருந்தது.
“நா இன்னொரு நாள் வரேண்டியம்மா. தெனம் ஸ்கூல்ல இந்தப் பெண்ணைக் கொண்டு விடணும், அழைச்சுண்டு வரணும். இதுவும் என் டூட்டி தான். ஒரு நாள் வழி தெரியாம மாட்டிண்டுட்டேன். அப்புறம் எப்படியோ போய்ச் சேர்ந்தேன். இதைச் சின்னப் பொண்ணும் லேசு பட்டது இல்ல. வீட்ல போய் தெலுங்குல ஏதாவது கோழி சொல்லும். நாழியாறது. இன்னொரு நாள் சாவகாசமா வந்து எல்லாம் சொல்றேன். உன் பேர் என்னடிம்மா?”
சொன்னாள்.
பாட்டிக்குப் புதையலைக் கண்டாற்போல் மகிழ்ச்சி. தன் சுமைகளை இறக்கி வைக்க ஆள் கிடைத்ததில். வீட்டை நன்றாக அடையாளம் பார்த்துக் கொண்டு போனாள்.
பாட்டியைப் பார்த்ததில் உண்டான சந்தோஷம் அவள் சொன்ன விஷயங்களால் வருத்தமாக மாறியிருந்தது. பாட்டி வேலை செய்யும் வீட்டுக்காரனின் பெயரைக் கேட்டுக் கொள்ள வில்லையே என்று நினைத்துக் கொண்டாள்.
கணவன் வந்ததும் எல்லாவற்றையும் சொன்னாள்.
“முதல்லே ஊரைப் பார்க்கப்போகச் சொல்லு அந்தப் பாட்டியை. அங்கே யாராவது தூரத்துச் சொந்தம் இருப்பா. இங்கே வந்து மாட்டிக் கொண்டாளே!” என்றான் ராமன்.
மறு நாள் மாலை குழந்தையை அழைத்துப் போகும் முன்பாகவே வந்தாள் பாட்டி.
தன் கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள். கேட்பதற்குச் சங்கடமாக இருந்தது.
“மெட்ராஸ்ட்லேர்ந்து இங்கு அனுப்பினாளே, அவா வீட்டுக்கு ஒரு லெட்டர் போடறது தானே, இப்படிக் கஷ்டமா இருக்குன்னு”, என்று கேட்டாள் கற்பகம்.
“நான் என்னத்தைக் கண்டேன்? அட்ரஸ் அவா கிட்ட இருக்கு. எப்படிக் கேட்கறது? இல்லாத போனா, உன்னை விட்டாவது எழுதச் சொல்லலாம்” என்றாள் பாட்டி.
“சரி. நாளைக்கு எங்காத்ல சாப்ட வாங்கோ பாட்டி” என்றாள் கற்பகம்.
“ஊர்லேர்ந்து வந்து நாலு மாசமாச்சுடியம்மா. நான் கொண்டு வந்த தேங்காயெண்ணை, சீயக்காய்ப் பொடி எல்லாம் ஆயிடுத்துடி. மேற்கொண்டு வாங்கிக்க கையில் பணமில்லை. அவா சோப்பைத் தொடவுட மாட்டேங்கறா. எல்லோரும் சாப்டுட்டுக் கடைசீல தான் சாப்பிட வேண்டியிருக்கு. மூணு பொண்ணு அந்தம்மாவுக்கு. பிள்ளை இல்லை. மூத்த பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டோட இருக்கா. ரெண்டு பேரும் வேலைக்குப் போறா. அவளோட குழந்தை தான் இது. ஸ்கூலுக்குப் போறது. அடுத்த பொண்ணு வேலை பார்க்கறா. கடைசீ பொண்ணு காலேஜ் போறா. எல்லாம் மாடாட்டம் இருக்குடியம்மா. ஒண்ணும் ஒரு துரும்பைத் தூக்கி அந்தண்டை போடாதுகுகள்,” பாட்டி சொல்லி விட்டு நிறுத்தினாள்.
“நாளைக்கு அவாகிட்டே சொல்லிவிட்டுச் சாப்பிட வரேன். இப்ப கிளம்பறேன்” என்று கிளம்பிப் போனாள்.
இப்போது என்னடா வென்றால் இங்கேயே வந்து இருக்கிறேன் என்கிறாளே?
“இதென்ன இப்படிச் சொல்றேள்? நாங்க இருக்கறது மூணு பேர். ஆம்படையான், பெண்டாட்டி, ஒரு குழந்தை மட்டுமே. பையனுக்கு மூணு வயசாறது. இத்துக் போய் ஆள் என்னத்துக்கு?” என்றாள் கற்பகம் தன்னையறியாமல். உடனே சுதாரித்துக்கொண்டு, “நன்னாயிருக்கே! இந்த வயசுல உங்களை வேலை ஏவிண்டு என்னால இருக்க முடியமா சொல்லுங்கோ. உங்களை பார்த்தா எங்க பாட்டியைப் பார்த்தாப்லயே இருக்கு..” என்றாள்.
“அப்படின்னா ஒண்ணு செய். நா இங்க வந்து இருந்துடறேன். நீ எனக்கு நாலு வீடு பார்த்துச் சொல்லு. அந்தச் சம்பளத்தை வாங்கி இவா மூஞ்சீல எறிஞ்சுட்டு நான் ஊரைப் பார்க்கப் போயிடுறேன்,” என்றாள்.
கற்பகத்துக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
இந்தப் பாட்டியை அழைத்து வீட்டில் வைத்துக் கொண்டு, தெரிந்தவர்கள் வீட்டில் வேலைக்கு அனுப்பினால் எல்லோரும் என்ன நினைத்துக் கொள்வார்கள்? யாரோ சொந்தக்காரியை அழைத்து வந்து, கூலிக்கு அனுப்பிப் பணத்தை வாங்கி கொள்கிறாள் என்று நினைக்க மாட்டார்களா?
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம், பாட்டி, முதல்ல உங்க வீட்டுக்காரி ஒப்புத்துக்க வேண்டாமா?”
“போன மாசம் இப்படித்தான். ஒரு மூட்டைத் துணி, தோய்க்க முடியாமத் தோய்ச்சுப் போட்டேன். உடம்பு தள்ளலை. படுத்துட்டேன். மத்தியானம் மழை தூறியிருக்கு போலிருக்கு. நான் துணியை எடுக்கலையா? நனைஞ்சுடுத்து. சாயந்தரம் அந்தப் பெண்கள் ரெண்டுமா சேர்ந்து என் பெட்டியை எடுத்து வெளியில் எரிஞ்சுடுத்துகள். போ வீட்டை விட்டு, எங்கேயாவது போய் சம்பாதிச்சுண்டு வந்து எங்க பணத்தைக் குடுத்த்துட்டு தொலை ன்னு ஒரே சத்தம். நான் எங்கே போவேன்? இப்பயாவது நீ இருக்கே. அப்ப நான் என்ன பண்ணுவேன்? பேசாம வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன். ராத்திரி மாப்ள வந்த போது கதவைத் திறந்தா. நானும் உள்ளே போய்ட்டேன்”.
பாட்டியின் கதை தினத்துக்கு தினம் சோகமாக மாறிக் கொண்டிருந்தது.
பாட்டி மாற்றி மாற்றி இரண்டு புடவைகள் தான் உடுத்தினாள்.
பிரௌன் கலரிங் ஒன்று. பச்சைக் கலரில் ஒன்று. சட்டை வெள்ளைக் கலரில்.
“சரி …அந்த மாப்பிள்ளை பேரென்ன?”
“என்னவோ சுப்பாராவ்னு சொலிக்கறா” என்றாள்.
கணவனிடம் சொன்னாள்.
“அவனா? ரொம்ப பொல்லாதவனாச்சே! வொர்க்கர்ஸ் யூனியன்ல இருக்கான். அந்தப் பாட்டி சகவாசமெல்லாம் வேண்டாம், பொல்லாப்பு”, என்ற போது கற்பகம் ரொம்பவும் சோர்ந்து போனாள்.
பாட்டியை எப்படித்தான் கரை தேற்றுவது?
மறுநாள் பாட்டி வந்ததும் கேட்டாள்.
“நீங்க அவாளுக்கு எவ்வளவு கடன் பட்டுருக்கேள்?”
“வர்றதுக்கு ரயில் சார்ஜ் பண்ணினா, வரும்போது ஒரு புடவை எடுத்துக் கொடுத்தா. அங்கே ஊரில் ஒரு இருநூறு ரூபா வரைக்கும் கடன் இருந்தது. அதை அடச்சா. எல்லாம் சேர்த்தா ஒரு முன்னூறு, முன்னூத்தம்பது இருக்கும்” என்றாள்.
“அந்தப் பணத்தைக் குடுத்துட்டா நீங்க ஊருக்குப் போய்டலாமோல்யோ?”
“பேஷாப் போய்டலாம். போகறத்துக்கு டிக்கெட் வாங்கணும். அங்கே போனதும் கொஞ்சம் செலவுக்கு கைல வேணும். நான் என்ன செய்வேன் சொல்லு!” என்றாள் பாட்டி.
வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒல்லியாக, மடிசார் புடவையோடு நிற்கும் நம் ஊர் பாட்டுக்கு நாம் இது கூட செய்யாவிட்டால் எப்படி என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
கணவனிடம் சொல்ல வேண்டும். எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
“என்னை ரயிலேத்தி விடறேன்னு சொல்லு. நான் பத்து வீட்ல போய் கையேந்தி அவாளோட கடனை அடைச்சுட்டு வந்துடறேன்” பாட்டி ஆவேசமாகப் பேசினாள். உலகம் தெரியவில்லை. பத்து வீட்டில் போய் கையேந்தினால், நூற்றுக் கணக்கில் பணம் வந்து விடுமா?
“அதெல்லாம் வேண்டாம். நீங்க வீட்டுக்குப் போங்கோ. அப்புறம் பார்க்கலாம்”.
சமாதானம் செய்து, கையில் சோப்பு, எண்ணெய் வாங்கப் பணம் கொடுத்து அனுப்பினாள் கற்பகம்.
இப்படித்தான் பாட்டியின் கதையே வீட்டில் சோகமாகப் பேசப் பட்டது.
அன்று ராமன் வீட்டில் இல்லை. ஆபீஸ் விஷமாக பாம்பே போய் நான்கு நாட்களாகி இருந்தன.குழந்தைக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனதில் “ஜான்டீஸாக இருக்கும் போலிருக்கிறது. யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்” என்றார். கற்பகத்திக்குக் கவலையாகப் போய் விட்டது. லாபரெட்டரிக்குச் சென்று யூரின் பிடித்துக் கொடுத்து விட்டு வந்து குழந்தையில் அருகில் கவலையோடு படுத்திருந்தாள்.
வாசல் கதவு பலமாகத் தட்டப் பட்டது.
பயந்து போய்த் திறந்த போது, யாரோ இருவர், பெண்ணும் ஆணும் நின்றிருந்தனர்.
“எங்க வீட்ல வேலை செய்யுமே கிழவி, இங்கே வந்தாளா?” என்று தெலுங்கில் கேட்டாள் வந்தவள்.
“யாரு?” கற்பகத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“அது தாம்மா அந்த அரவம் பேசற கிழவி. உங்களோட தான் ரொம்ப தோஸ்த்தாமே. எம் பொண்ணு சொன்னா. இங்க தான் வந்து சும்மா உட்கார்ந்திருக்குமாமே, வந்தா உடனே போவோம்னு இல்லாம, இன்னுமா கதை பேசிக்கிட்டிருக்கா?”
மூச்சு விடாமல் பேசினான் அந்த ஆள்.
இவன் தான் சுப்பாராவ் போலும் என்று நினைத்துக் கொண்டாள் கற்பகம்.
“இன்னைக்கு இங்கு வரலைங்க. ரெண்டு, மூணு நாளாகவே நான் பார்க்கலையே, ஏன்? என்ன ஆச்சு?”
“மத்தியானம் குழந்தைக்கு டிபன் எடுத்துகிட்டுப் போனா டிஃபனைக் குடுத்துட்டு வீட்டுக்கு வராம இன்னும் எங்கேயோ சுத்திக்கிட்டிருக்கா கிழவி,” என்றாள் அந்தப் பெண்.
“அப்படியா? இங்கே வரலையே! ஒரு வேளை வழி தெரியாமல் எங்கேயாவது திண்டாடறாளோ என்னவோ. உடம்பு, கிடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் கற்பகம்.
“உடம்புக்கு என்ன கேடு? எங்கே போச்சோ, என்னவோ” என்று முணுமுணுத்தாள் கொண்டே கிளம்பினாள், வந்தவள்.
சுப்பாராவும் கிளம்பியவன், திரும்ப வந்து இவளிடம் எச்சரித்தான்.
“இதோ பாரும்மா! வீணா பாட்டி மனசைக் கெடுக்காதே! அந்தக் கிழவியை நாங்க வேலைக்கு அழைச்சு வெச்சுக்கிட்டிருக்கோம். நீ இதுல தலையிடாதே, ஆமாம்”.
கற்பகம் இந்த மிரட்டலால் மிகவும் பயந்தாள். கணவன் வேறு ஊரில் இல்லை. குழந்தைக்கு உடம்பு சரி இல்லை. இது என்ன புதுக் கவலை?
பாட்டி எங்காவது தலை சுற்றி விழுந்து கிடந்தால் என்ன செய்வது? இருட்டி விட்டதே! எப்படிக் கண்டு பிடிப்பது? இருக்கும் கவலை போதாதென்று இது வேறு சேர்ந்து கொண்டது.
இந்த சுப்பாராவோடு விரோதம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கணவன் சொன்னது நினைவுக்கு வந்து பயமாக இருந்தது. பாட்டி சகவாசத்தை கட் பண்ணிக்கொள் என்று ராமன் சுலபமாகச் சொல்லி விட்டான்.
ஐந்நூறு ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவும் வீ ட்டு நிலைமை இடம் கொடுக்க வில்லை.கற்பகத்துக்குக் குழப்பமாக இருந்தது.
மறுநாள் மதியம் வந்த பாட்டியைப் பார்த்தபோது இவள் வருத்தம் அதிகமானது. உடம்பெல்லாம் காயம். அந்த வீட்டுக் காரன் செருப்பால் அடித்து விட்டானாம்.
“நேற்று காலைலேர்ந்து சாப்பாடே இல்லைடிம்மா . காலை செய்த இட்லியை எல்லோரும் தின்னுட்டாங்க.மீறலை. மத்தியானம் சமைச்சு வெச்சுட்டு ஒரு வாய் சாப்பிடலாம்னு உட்கார்ந்தேன். ஊருக்கு முன்னாலே வேலைக்காரிக்கு என்ன சாப்பாடு? போய் குழந்தைக்கு டிபன் குடுத்துட்டு வான்னு விரட்டினா. எனக்கு ‘ச்சீ’ ன்னு போயிடுத்து. நேரே வீட்டுக் போகலை. பேசாம கோயில் வாசல்ல போய் படுத்துட்டேன். இவா தேடிண்டு வந்து, வீட்டுக்கு அழைச்சுண்டு போய் நன்னா அடிச்சுட்டா. ‘என் போனே? என்னாச்சு? உடம்பு சரியில்லையா?’ ன்னு ஆறுதலா ஒரு வார்த்தை கேக்கலைடி பொண்ணே!” பாட்டி அழுதாள்.
“நீங்க மத்தியானம் இங்கே வர வேண்டியது தானே பாட்டி?”
“என்னமோடியம்மா. நீயுந்தான் வரும் போதெல்லாம் சாப்பிடக் கொடுக்கறே. காசும் கொடுக்கறே. அவா இப்படி மிருகமா இருக்காளேன்னு வெறுத்துப்போய் என்னமோ …அங்கே போய் படுத்துட்டேன்.” என்றாள்.
உடம்பு சோர்ந்து போயிருந்தாள். கண்களில் சோர்வு. விரக்தி.
“நான் இங்கேயே வந்துடறேண்டியம்மா. ஏதோ உன்னாலானதைப் போடு. நான் தீர்மானிச்சுட்டேன்” என்றாள், திடீரென்று.
கற்பகத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது.
இது என்ன விபரீதம்?
இந்தப் பாட்டியை வீட்டோடு வைத்துக்கொள்வதாவது? ஊரிலுள்ள தன் மாமியாருக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்? ராமனும் ஒத்துக்க கொள்ள மாட்டானே!
“அதெல்லாம் வேண்டாம் பாட்டி. அவா அழைச்சுண்டு வந்தா நீங்க அங்கே இருக்கறதுதான் நியாயம். நீங்க போங்கோ, எல்லாம் சரியாய்ப் போய்டும்”.
ஒரு வழியாகப் பாட்டியை அனுப்பி வைததாள்
பாட்டி நம்பிக்கையில்லாமல் ஏதோ தானே தனக்குள் பேசிக் கொண்டு நடந்து போனாள்.
நிச்சயம் பாட்டி இங்கே திரும்பி வந்து விடுவாள் என்று உள் மனம் சொன்னது.
வந்தால் உள்ளே விடாதே என்று அறிவு எச்சரித்தது. என்ன தான் தமிழக்கார பாட்டியாக இருந்தாலும், அவளை அவாய்ட் செய்து விடு என்றது அறிவு. ஐயோ பாவம், பாட்டிக்கு உதவ வேண்டும் என்றது மனசாட்சி.
அறிவுக்கும் மனசாட்சிக்கும் போட்டி.
வாசல் கேட்டைப் பூட்டு போட்டுப் பூட்டினாள். உள்ளே வந்த அடுத்த நொடியில் பாட்டி கூப்பிடுவது கேட்டது. கற்பகம் கதவைத் திறக்கவில்லை. கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்து விட்டுப் பாட்டி திரும்பிச் சென்றாள்.
அடுத்த இரண்டு நாட்கள் குழந்தையைக் கவனிப்பதில் கழிந்து விட்டது. மருந்து கொடுத்ததில் குணம் தெரிந்து மோர் சாதம் சாப்பிட ஆரம்பித்தான்.
மூன்றாம் நாள் காலை பத்து மணி இருக்கும்.பாட்டி வந்தாள் நல்ல புடவை கட்டியிருந்தாள். காதில் வெள்ளைக் கல் தோடு போட்டிருந்தாள்.
பாட்டியைப் பார்க்க வியப்பாக இருந்தது.
“இன்னிக்கு ஊருக்குப் போறேம்மா. உன்கிட்டே சொல்லிண்டு போலாம்னு தான் வந்தேன்” என்றாள்.
கற்பகத்துக்குக் குற்றமுள்ள நெஞ்சு பாட்டியைக் கேட்கத் தயக்கமாக இருந்தது.
“அன்னிக்கு ராத்திரி வந்து கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தேன். யாரும் திறக்கலை. ஒரு வேளை வீடு மாறி வந்துட்டோமோன்னு சந்தேகம். ரொம்ப குளிராக் கூட இருந்தது. வேறே வழியிலலாமல் கோவில்ல போய்ப் படுத்துட்டேன். மறு நாளைக்கும் வீட்டுக்குப் போகலை. அப்பறம் அங்க பக்கத்துல இருக்கறவா நாலஞ்சு பேர் வந்து விஜாரிச்சா. தட்டுத் தடுமாறித் தெலுங்குலச் சொன்னேன். அதில் ஒருத்தர் தன் வீட்டுக்கு அழைச்சுண்டு போய் காப்பி குடுத்து, சாப்பாடு போட்டா. நாலைஞ்சு பேராச் சேர்ந்துண்டு போய் சுப்பாராவைப் பார்த்துப் பேசி சமரசம் பண்ணி, நான் ஊருக்குப் போகறத்துக்கு ஏற்பாடு பண்ணினா. வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல இலலாமலா போயிடுவான்? இப்போ பழைய கடனெல்லாம் கேட்கலை. பேசாம போய் டிக்கெட் வாங்கிண்டு வந்துட்டான்.
“இத்தனை நாள் நான் உங்க வீட்ல தான் இருக்கேன்னு நினைச்சுண்டு இருந்தானாம். எத்தனை நாளைக்குத் தான் வெச்சுண்டு சோறு போடுவா? நாலு நாளாச்சுன்னா தானா விரட்டி விட்டுடுவா நினைச்சுண்டு இருந்தானாம். ‘என்னமோ.. போ… எனக்கும் உன் மனசு புரியறது, குழந்தே! நீயும் தான் என்ன பண்ணுவே! குழந்தைக்கு உடம்பு தேவலையா? உங்காத்துக்காரர் எப்ப வாராராம்?” பாட்டி விஜாரித்தாள்.
“இன்னைக்கு வந்துருவார்னு நினைக்கிறேன்”.
கற்பகத்துக்கு வெட்கமாக இருந்தது. எல்லாம் தெரிந்தும் தான் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டதே என்று . எப்படியோ, பாட்டி நல்ல விதமாக ஊர் போய்ச் சேருவதில் திருப்தி தான்.
கைவசம் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை பாட்டியிடம் கொடுத்து அனுப்பி விட்டு, கணவன் வரவுக்காகக் காத்திருந்தாள், கற்பகம்.
– கணையாழி ஏப்ரல், 1990, தமிழ்ப் புத்தாண்டு மலரில் பிரசுரமானது.
– தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்றது.