கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 1,760 
 
 

அதிகாலைக்குப் பின் வெளிச்சம் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டிருக்கும். சூரியன் கொஞ்சம் எழுந்து முகம் காட்டும் வேளையில் தெருவே வெள்ளைக் கோலங்களால் நிறைந்து கிடந்தது. அதனுடன் கிளிகளும் குயில்களும் விழித்த மகிழ்ச்சியில் பாடியது. எல்லோரும் கேட்டிருப்பார்களா.

சிங்காரம் தூக்கம் கலைந்து போய் தான் எழுவார். எழுந்தவுடன் கொஞ்சம் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அவருக்கு வரும் எண்ணங்களில் மூழ்கி விடுவார்.. அலாரம் அடித்தவுடன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு விடுவார்.

எழுந்தவுடன் விரைவாக நடைபயிற்சிக்கு கிளம்பி விடுவார். இது எப்போதும் நடப்பது தான்.. அன்றும் சத்தமில்லாமல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தார். அவர் மனைவி மீனாட்சி சிறிது நேரம் கழித்து தான் எழுவார். அவளை ஒரு நாளும் எதற்காகவும் தொந்தரவு செய்ய மாட்டார். வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். எதிர்வீட்டு சுந்தரி அப்பொழுது தான் கோலம் போட்டு முடித்து வீட்டுக்குள் செல்ல நினைத்தவள் சிங்காரத்தை பார்த்தவுடன் நின்று விட்டாள்.

மாமா வாக்கிங் கிளம்பியாச்சா

ஆமாம்மா மாமிய பாத்துக்கோ

நேரம் ஆயிடுச்சு வரேன்

சரி மாமா

போயிட்டு வாங்க

ஊரில் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். சிறிது காலம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எல்லோரும் கேலி பேசுவதால் ஸ்கூட்டரில் செல்கிறார். இவருக்காக ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. ஒரு சிலரைத் தவிர எல்லோரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் .

நடைபயிற்சி தொடங்கி விட்டது மரங்களின் நிழலில். யாருடனும் பேசாமல் பாட்டு கேட்காமல் நடைபயிற்சி செய்வார். பல எண்ணங்கள் வந்து நடையுடன் சேர்ந்து அயற்சி கொடுக்கும். அனைவரும் சிரித்துக் கொண்டு

ஒருவித குதூகலத்துடன் தான் நடை செல்வார்கள். இங்கு தான் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பது காலையிலும் மாலையிலும் நடைபயிற்சிக்கு வந்து விடுவார்கள். நடைபயிற்சியின்போது அன்றாட நிகழ்வுகள் செய்திகள் பற்றி ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு விவாதிப்பார்கள். சிங்காரம் கூர்மையாக தன் தரப்பு வாதங்களை கூறுவார். அவரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறும். அதுவும் எப்போதாவது தான் கூறுவார்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு செய்தி கிடைத்து விடும் அதை வைத்துக் கொண்டு ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். நாட்களையும் நேரங்களையும் வண்டு மண்ணை உருட்டிக் கொண்டே இருப்பது போல.

சிங்காரம் கணித பேராசிரியராக வேலை பார்த்தவர். ஆரம்ப காலங்களில் இரவு பகலாக சிறப்பு வகுப்புகள் எடுத்தார். நல்ல வருமானம் அவர் நேரங்களை பறித்துக் கொண்டது. அதை வைத்து தான் ஊரின் மத்தியில் இடம் வாங்கி உடனே பெரிய வீடும் கட்டி விட்டார். அதற்காக மீனாட்சியின் நகைகளையும் விற்று விற்றார். நாள் செல்ல செல்ல வருமானம் பெருகியது ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட முயன்றார் முடியவில்லை. பல பொறுப்புக்கள் முன்னே வந்து தடுத்தது. கல்லூரியில் புதிய பொறுப்புக்கள் வர தொடங்கியவுடன் சிறப்பு வகுப்புக்கள் தானாகவே குறைந்து விட்டது. கை நிறைய சம்பளம் அரசு கொடுத்தது. அதில் சமாதானம் செய்து கொண்டார். நடை பயிற்சி முடிந்தவுடன் ஆளுக்கொரு இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு மீண்டும் ஊர்க் கதைகள் பேச தொடங்கி விடுவார்கள். சிங்காரம் எல்லாவற்றையும் கேட்டு சிரித்துக் கொள்வார். ஆரம்பத்தில் இது போன்ற பேச்சுக்களை கேட்டு ரசிப்பார். சமீப காலங்களில் ஏனோ இந்த பேச்சுக்கள் எல்லாம் எரிச்சலைத் தந்தது. இப்போது ஒரு பழக்கம் வந்து விட்டது. சிறுவர் சிறுமியர்கள் விளையாடும் விளையாட்டை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விட்டார். அவரது இளமை காலங்களில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விரும்பி விளையாடும் விளையாட்டு. ஒவ்வொரு விளையாட்டும் பார்க்கும் பொழுது ஒருவித பரவசம் அவர் முகத்தில் தெரியும்.

பயிற்சியாளர்கள் பயிற்சி கொடுக்கும் போது உன்னிப்பாக கவனித்துக் கொண்டு திருத்தங்களை செய்து கொண்டே இருப்பார்கள். அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். என்ன சொன்னாலும் ஆடும் ஆட்டம் கொடுக்கும் களிப்பு பார்ப்பதில் வராது. என்ன செய்வது முதுமையில் பார்க்க மட்டுமே முடியும்.

இது வெட்டிப் பேச்சுகளிலிருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டார். சிங்காரத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் அப்போதே ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து விட்டு இந்தியா வந்து இங்கும் ஒரு தேர்வு எழுதி டாக்டர் பட்டம் வாங்கினார். சிங்காரத்தின் உந்துதலில் முதுகலை படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதி முதல் ரேங்க் பெற்று படித்து முதுகலை பட்டம் பெற்றார். இருதய அறுவை சிகிச்சை நிபுணராக அமெரிக்காவில் ப்ராங்க்ளின்லில் பணியாற்றுகிறார்.

ஒரு முறை மீனாட்சியுடன் சிங்காரம் அமெரிக்கா சென்று விட்டு வந்தார். அங்கு எல்லாம் அனைவரும் தேநீர் அருந்துவது போல் புத்தகம் படிக்கிறார்கள். அதுவும் போட்டி போட்டுக் கொண்டு படிக்கிறார்கள். மீனாட்சி சொல்வது போல் லைஃப் லாங் லேனிங் அங்கு தான் பார்க்கலாம். இதனை எப்போதும் தன் நண்பர்களிடம் சொல்லுவார்.

அவருடைய மகள் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் ஆக கனடாவில் இருக்கிறார். அவள் ஐஐடி யில் படித்தவள். சிங்காரத்தின் மீது மிகவும் பாசமாக இருப்பாள். எப்போது பேசினாலும் ஒன்று நீங்கள் இங்கு வந்து விடுங்கள் இல்லையென்றால் நான் அங்கு வந்து விடுகிறேன் என்பாள். அவர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாதானம் செய்வார்.

சிங்காரத்திற்கும் மீனாட்சிக்கும் இந்த வீடு இந்த ஊர் இந்த மக்கள் விட்டு விட்டு செல்ல மனமில்லை. இங்கு இருக்கும் அமைதி அவர்களுக்கு எங்கும் கிடைப்பதில்லை.

நடைபயிற்சிக்கு ராகவன் வரவில்லை. ராகவன் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்கள். ராகவன் வங்கி மேலாளராக இருக்கிறார். அவர் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து சென்றது பற்றி அறிவழகன் பேசத் தொடங்கினார். அறிவழகன் ராகவனின் நெருங்கிய உறவினரும் கூட. ராகவன் மகள் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உள்ளார். மாப்பிள்ளை ஏதோ கார் கம்பெனியில் பொறியாளராக இருக்கிறார். அவர் மகளின் சம்பளத்தை விட மாப்பிள்ளைக்கு சம்பளம் குறைவு. இருந்தாலும் அவர் மகளின் சம்பளத்தில் மாமியாராக வரப்போறவர் குறியாக இருந்தார். மகள் வீட்டார் எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டார்கள். ஒருவாராக எல்லாம் உறுதியாகி விட்டது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. இறுதியில் பெண் மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என்றாள். அதற்கென்ன பேசலாம் என்றார்கள். இருவரும் பேசினார்கள் பல விஷயங்களை பற்றி. பெண் தான் பேசினாள். அவன் கூச்சத்துடன் பதில் கூறினான். அவள் அடுத்த ஆண்டு அதாவது

திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு உறுதியாகி விட்டது. இது அவளின் பல கனவுகளில் ஒன்று. உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையென்று நினைக்கிறேன் என்றாள். அவன் திரு திரு வென முழிக்க தொடங்கி விட்டான்.

அறிவழகன் இந்த சம்பவத்தை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அனைவரும் சிரித்து விட்டார்கள்.

இதனைக் கேட்டு கொண்டு இருந்த சிங்காரம் ஆத்திரம் அடைந்தார். என்ன செய்வது எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

தன் மகளின் திருமணம் ஞாபகம் வந்து விட்டது. அப்போதே மகள் கூறினாள். உங்களை தனியாக விட்டு விட்டு என்னால் வெளிநாடு செல்ல முடியாது. நீங்களும் வருவதாக இருந்தால் நான் செல்கிறேன். மீனாட்சியும் வேண்டாம் என்றாள். யாராவது ஒருவர் இங்கு இருந்தால் நல்லது. நமக்கு துணையாக இருக்கும்.

சிங்காரம் நல்ல சம்மதம் மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை என்ற பெருமிதம். உடனே ஒத்துக் கொண்டார். மகளையும் சம்மதிக்க வைத்தார். மகள் இவர் சொல்வதை தான் கேட்பாள்.

இப்போது எண்ணி வருந்துவது வீண். இக்கட்டில் மாட்டிக் கொண்டவர்க்கு கோபம் வருவது ஒன்றும் புதிது இல்லை.

வருடத்திற்கு ஒரு முறை சென்று பார்க்கலாம் என்று தன்னை தானே தேற்றி கொண்டார்.

நடைப்பயிற்சி கூட்டம் சிங்காரத்துடன் சேர்ந்து இன்றைய கூட்டத்தை முடித்துக் கொண்டு வழக்கம் போல் லக்ஷ்மீ காபே நோக்கி சென்றது.

எல்லாம் வழக்கம் போல் செல்லும் வாழ்க்கை. நேற்று இன்று நாளை என்பதே கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *