அர்ப்பணிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 632 
 
 

நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு தான் இருக்கோம். அப்படி இருந்தும் இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கல முத்துராமன்.  நீங்களும் மனச தளரவிடாம நம்பிக்கையோட இருங்க…” என்று டாக்டர் கூறி சென்றார்.  

என்னதான் டாக்டர் கூறியது நம்பிக்கையூட்டுவதாக இருந்தாலும் முத்துராமனுக்கோ அது மனம் தளரும் செய்தியாகத்தான் இருந்தது. மருத்துவமனை அறையை விட்டு வெளியேறிய முத்துராமன் அங்குள்ள இருக்கையில் அமர்கிறான். 

“நம்பளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாலே…ஆனா, இப்போ அவளுக்குன்னு நம்மளால எதுவும் பண்ண முடியலையே…” என்று அவன் கண்கள் குளமாகி பல சிந்தனைகளை நோக்கி மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தன. 


“அம்மா நீ அங்க உன் வீட்ல நல்லா வாழ்ந்துருக்க… இங்க என்கிட்ட அந்த அளவுக்கு வசதி இல்லனாலும் கண்டிப்பா உன்ன நல்லா பாத்துக்குவ மா…” என மனைவியின் கைகளை இறுக்கப்பற்றி நெற்றியில் முத்தங்களைத் தெளிக்கிறான் முத்துராமன்.  

இருவரும் தங்களது வாழ்க்கையைச் சிறப்பாகத் தொடங்குவதற்காகத் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டுச் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், பல நாட்கள் கழிந்தும் நல்ல விஷயம் ஏதும் எட்டவில்லை. இருவரும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே அடைந்தனர். திலகவதி தான் கருவுறும் நாட்களை எண்ணி ஏங்கினாள். முத்துராமன் தன் மனைவியின் நிலையை எண்ணி வருந்தியதால் அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைக்குத் திலகவதியை அழைத்துச் சென்றான். டாக்டர் அவளை முழு பரிசோதித்துப் பார்த்தவுடன்,  

“வெரி சாரி திலகவதி, உங்களால ப்ரெக்னன்ட் ஆக முடியாது… உங்க உடம்புல ஹார்மோன் குறைபாடு இருக்கு…இதோட விளைவு உங்களால இதுக்கு அப்புறம் ப்ரெக்னன்ட் ஆக முடியாது…” என்று அவர் கூறிய செய்தி இருவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.  

ஆனால், இச்சோகத்தை முழுமையாக மறப்பதற்காக முத்துராமன் எப்பொழுதுமே அவனின் மனைவியை ஒரு குறை அறியாமல் தன் சொந்த மகளாக அரவணைப்புக் காட்டி வந்தான். இப்படியே ஏழு வருடங்கள் கழிந்தன. முத்துராமனால் தன் மனைவி பிள்ளையில்லா சோகத்தில் நடைபிணமாகத் திரிவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவளை குழந்தை ஆசிரமத்திற்குச்  அழைத்து சென்று பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்கின்றான்.  

“அம்மா திலகு… இவதான் இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாம்… இவ நம்ம பாப்பா… இவளை நல்லா வளர்த்துப் பெரிய ஆளா ஆக்கணும்…” என பிள்ளையை அவள் கையில் கொடுக்கிறான்.  

திலகவதியும் ஆனந்தமாய் அக்குழந்தையை இறுக்கப்பற்றி அணைக்கிறாள். இருவரும் அக்குழந்தைக்குக் கவிதா என பெயரையும் சூட்டி அவளைச் சிறப்பாக வளர்த்துப் பெரியவளாக்கினர். கவிதாவும் திலகவதியைத் தன்னுடைய சொந்த தாயாகக் கருதி வளர்ந்து பருவ வயதை எட்டினாள். பின்னர், தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் செல்ல தயாரானாள்.  

கவிதா முத்துராமனையும் திலகவதியையும் விட்டு நகரத்திற்குச் சென்று பணிபுரியும் கட்டாயம் ஏற்பட்டது. இருந்த போதும் மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் வீட்டிற்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி தன் பெற்றோருடன் நேரங்களைச் செலவழிப்பாள். ஒரு நாள், முத்துராமன் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது தரையில் திலகவதி விழுந்து கிடப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு போய், ஓடிச் சென்று தன் மனைவியை மடியில் வைத்து,  

“மா… அம்மா திலகு என்னம்மா ஆச்சு  உனக்கு?… எழுந்திரு மா… திலகு… திலகு…” என்று தேம்பி அழுகிறான்.  

என்ன செய்வதென்று அறியாது முத்துராமன் திலகவதியை அழைத்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு  விரைந்தான். 

“முத்துராமன்… இப்போ நான் சொல்ல போறது உங்களுக்கு ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஆனா, அதை சொல்லித்தான் ஆகணும்… உங்க மனைவிக்கு இருதயம் பழுதடைந்து போய் இருக்கு… நம்ப எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரு ஹார்ட் டிரான்ஸ்பிளான் பண்ணனும்…”  

இதைக் கேட்ட முத்துராமன்  கண்ணீர் மல்க “என்ன சொல்றீங்க டாக்டர்… எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை… என் திலகு எனக்கு வேணும்… எப்படியாவது அவள காப்பாத்துங்க டாக்டர்…” 

“நாங்களும் உடனே ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்க்கு டோனர் தேட ஆரம்பிக்கிறோம். ஆனால், இப்போதைக்கு நீங்க உங்க மனைவிய டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு போகலாம்…”  

தன் மனைவியின் மீதுள்ள அளவில்லா பிரியத்தால் இச்செய்தியை அவளிடம் இருந்து மூடி மறைத்தான் முத்துராமன். தன் மனைவிக்கு இது தெரியவந்தால் அவளது உடல் நலம் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடும் என்று அச்சம் கொண்டான். இச்செய்தியைத் தன் மகள் கவிதாவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.   ஒரு நாள், திலகவதியையும் முத்துராமனையும் காண வீட்டிற்கு வந்த கவிதா, திலகவதி தன் மார்பில் கை வைத்த வண்ணம் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.  

“அம்மா என்னம்மா?… என்ன பண்ணுது உனக்கு?…” என்று கவிதா கேட்க, அவள் மீது மயங்கி விழுந்தாள் திலகவதி.  

திலகவதியை அழைத்துக் கொண்டு பதற்றமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினாள். மருத்துவமனையில் இருந்து தன் அப்பா முத்துராமனுக்குச் இச்செய்தியை கூறினாள் கவிதா. தகவல் கூறிய பத்தே நிமிடத்தில் முத்துராமன் மருத்துவமனையை வந்தடைந்தான். அங்குள்ள தாதி ஒருவர் வெளியே வந்து,  

“டாக்டர் உங்கள உடனே உள்ளுக்கு வர சொன்னாரு…”  

அவனுடைய மனக்கதறல் வெளியே கேட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் அவள் கூறியதற்கு மறுவார்த்தை ஏதும் கூறாமல் உள்ளே நுழைகிறான் முத்துராமன். உள்ளே சென்ற முத்துராமன் திலகவதியின் முகம் சிவந்து, கன்னங்கள் இரண்டும் கண்ணீரால் ஊறி போயிருந்ததைக் காண்கிறான். டாக்டர் திலகவதியிடம் அவள் உடல்நலம் தொடர்பான செய்தியைக் கூறிவிட்டதையும் அறிகிறான்.   

“இவ்வளவு நாளா இத யாருகிட்டயும் சொல்லாம மூடி மறைச்சிட்டீங்க லே…” என்ற திலகவதியின் கண்கள் கண்ணீரால் பேசுவதற்கு என்ன மறுமொழி விடுப்பது என்று தெரியாமல் பேச்சு மூச்சு இன்றி திகைத்து நின்றான் முத்துராமன்.  

“டாக்டர்… இப்ப என்ன ஆச்சு டாக்டர்?… டோனர் ஏதும் கிடைச்சாங்களா?… என் திலகவதியை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்” என்று முத்துராமன் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.  

“நாங்க ஏற்கனவே சொன்னது போல தான் முத்துராமன்… ஆனா, இப்போ உடனடியா நம்ப ஹார்ட் ட்ரான்ஸ்பிளான் பண்ணிதான் ஆகணும். ஆனால், இப்போதைக்கு  எதுவும் கிடைக்கல…” 

“என்ன டாக்டர் நீங்களே இப்படி கை விரிச்சா எப்படி?… ஏதாவது பண்ணுங்க டாக்டர்…”  

அவர் கூறியது அவனுக்குத் தன்னம்பிக்கையோடு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனை அறையில் வெளியே இருக்கும் இருக்கையில் சற்று நேரம் அமர்கிறான். 


“அப்பா… அப்பா…” என்று முத்துராமனை அழைத்த கவிதாவின் குரல் அவனை திடுக்கிட  செய்தது. 

 “என்னப்பா ரொம்ப நேரமா என்னமோ யோசிச்சுக்கிட்டே இருக்க… அம்மாக்கு என்ன ஆச்சு?… ஏன் திடீர்னு நெஞ்ச புடிச்சுகிட்டு மயங்கி விழுந்துட்டாங்க?…” 

 “அது ஒன்னும் இல்லம்மா… உனக்கு தெரியாதா உங்க அம்மா சும்மா இருக்கிற நேரம் எல்லாம் வீட்டில எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வா… அவளுக்கு  வயசாயிட்டு வேற இருக்கு… அதான் ரொம்ப வேலை செஞ்சு நெஞ்சு வலி வந்துருச்சு …”  

“அம்மா எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டாங்க… நான் எத்தனை வாட்டி வேலை ரொம்ப செய்யாதே என்று சொல்லி இருக்கேன்… இப்ப பாரு தேவையா இதெல்லாம்?… சரி பா… நான் அம்மாவைப் பார்த்துப் பேசிட்டுக் கிளம்புறேன்… எனக்கு நாளைக்கு வேலை வேற இருக்கு… நீங்க ஏதாவது ஒன்னுனா எனக்கு கால் பண்ணுங்க…” என்று கண்ணைக் கசித்துக் கொண்டு கவிதா மருத்துவமனை அறைக்குள் நுழைகிறாள். 

திலகவதியுடன் சில நேரங்களைக் கழித்துவிட்டு கவிதா அங்கிருந்து புறப்படுகிறாள். நான்கு நாட்கள் கழிந்தன.  திலகவதிக்கு இருதய சிகிச்சை செய்யாததால் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. முத்துராமன் மருத்துவமனையில் இருந்தே திலகவதியைப் பார்த்துவிட்டு வேலைக்கும் சென்று கொண்டிருந்தான். அன்று திலகவதியின் அறைக்கு வந்த டாக்டர்,  

“திலகவதி உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… வேறு மருத்துவமனையில் இருந்து ஒரு ஹார்ட் டோனர் கிடைச்சிருக்காங்க… நம்ம உடனே சிகிச்சையை ஆரம்பிக்கலாம்… இப்ப உங்கள ரெடி பண்ணிட்டு நம்ப அறுவை சிகிச்சை அறைக்குப் போகலாம்… உங்க கணவருக்கு நாங்க கால் பண்ணோம், ஆனா அவரு எடுக்கல… பரவால்ல நம்ப உடனே சிகிச்சையை ஆரம்பிக்கலாம்” என்று டாக்டர் கூறியது அவளை மனம் குளிர செய்தது.  

திலகவதியும் உடனே சிகிச்சைக்குத் தயாராகி விட்டு தேவையான பத்திரங்களில் கையொப்பமிட்டாள். சிகிச்சையும் எந்த ஒரு தடையும் இன்றி நடந்து முடிந்தது. பல மணி நேரங்கள் கழித்து, திலகவதி கண் விழிக்கிறாள்.  கண் விழித்த திலகவதி தன்னருகில் யாரும் இல்லை என்பதனை காண்கிறாள். உடனே, வெளியே இருக்கும் டாக்டரை அழைத்து, 

“எங்க டாக்டர் என் கணவரும் என் பிள்ளையும்?… நான் அவங்கள பாக்கணும்…”  

“அவங்க இன்னும் வரல திலகவதி…” 

“அப்புறம் டாக்டர் எனக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான் பண்ண டோனர் யாருன்னு கேட்கலாமா?… எனக்கு அவங்க யாருன்னு தெரிஞ்சிக்கணும்… அவங்க குடும்பத்துக்கு நான் நன்றி கடன் பட்டு இருக்கேன்…” 

“மருத்துவமனையின் விதிமுறையின்படி நாங்க டோனர் யாருன்னு சொல்ல கூடாது… ஆனா, ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான் வந்த மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு ஹார்ட் ஓட சேர்ந்து ஒரு லெட்டரையும் உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணி இருந்தாங்க… இந்தாங்க அந்த லெட்டர்…” என்று டாக்டர் திலகவதியிடம் கூறி அந்த லெட்டரை நீட்டுவது புரியாத புதிராக இருந்தது. 

லெட்டரை கையில் வாங்கி கொண்ட திலகவதி அதை திறந்து படிப்பதற்கு ஒரே யோசனையாக இருந்தாள். இருந்த போதிலும், அந்த டோனர் யார் என்று தெரிந்து கொள்வதற்கு லெட்டரை திறந்து படிக்கவும் தொடங்கினாள். 

“நான் யாருன்னு உனக்கு தெரிய கூடாது என்று தான் நினைச்சேன்… ஆனா, எப்படி இருந்தாலும் உனக்கு தெரிய தானே போது… நீ எனக்காக இத்தனை வருஷம் செஞ்சது என் உயிருக்கும் மேலானது… அதனால நான் செய்ற இந்த விஷயம் அதற்கு ஈடாகுமானு எனக்கு தெரியல… எனக்கு தெரியும் நான் இல்லாத வாழ்க்கை உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்னு… ஆனா, எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததே நீதான்…அந்த வாழ்க்கையை நான் உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன் அம்மா…இத்தனை வருஷமா எந்த கஷ்டமும் குறையும் இல்லாம நான் ஆசைப்பட்டதெல்லாம் நீயும் அப்பாவும் எனக்கு நிறையா செஞ்சு இருக்கீங்க.. அதனாலதான் நான் கஷ்டப்படுவேன்னு எனக்கு இந்த விஷயமும் தெரியாம நீங்க ரெண்டு பேரும் பார்த்துகிட்டீங்க…ஆனா அன்னிக்கு நீங்களும் அப்பாவும் டாக்டர் கிட்ட பேசிகிட்டு இருந்த எல்லாத்தையும் நான் வெளியே இருந்து கேட்டுட்டேன்…அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ இல்லாத இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்து அர்த்தமே இல்லை னு… இந்த லெட்டரை நீ படிக்கிறப்போ நான் உயிரோட இருக்க மாட்டேன்…நான் இல்லன்னு கவலைப்படாதம்மா…நான் என்னைக்குமே எப்பொழுதுமே இனி உனக்குள்ள தான் இருப்பேன் அம்மா…” என்று அந்த லெட்டரை படித்த வண்ணமே அவளுடைய ஈரக்குலை நடுங்கியது.  

“ஐயோ!… கவிதா….” என்று கதறினாள் திலகவதி. 

தன் மீதுள்ள பிரியத்தால் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட மகளின் இம்முடிவு அவளை நிலைகுலைய வைத்தது. திலகவதியின் கண்ணீர் அவ்வறையை ஈரமாக்கின. திடீரென்று, மருத்துவமனை அறையின் கதவு மெல்ல திறந்தது. லெட்டரை பிடித்தவாரே கதவை நோக்கி பார்க்கிறாள் திலகவதி. கதவின் அருகில் தன் கணவன் முத்துராமன் அழுது, முகம் வீங்கி போன நிலையில் திலகவதியை உற்று நோக்குகிறான். 

“என்னங்க… கவிதா…” என்று திலகவதி பேச தொடங்க, துக்கம் அவளுடைய தொண்டையை அடைத்தது.  

“கவிதா நம்பள விட்டுட்டு போயிட்டா திலகு…” என்று ஓடிச்சென்று திலகவதியை அணைத்துக் கதறி கண்ணீர் கடலில் மூழ்கினான் முத்துராமன்.  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *