கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 16,381 
 
 

தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு. டிரைவர் வழக்கமான “வீட்டுக்குதானேம்மா” என்ற கேள்வியோடு காரைக் கிளம்பினார். ‘வீடு’! ஆயா மகன் ஆனந்தோடு காத்துக் கொண்டிருப்பாள், என்ற நினைவோடு சீட்டில் தலையை சாய்த்துக் கொண்டாள் தாரா. குழந்தைகள் மருத்துவத்தில் எம்.எஸ். முடித்து பல புகழ்பெற்ற டாக்டர் களோடு வேலை செய்து அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் இதோ இந்த க்ளினிக் தொடங்கி ஐந்து வருடமாகிறது. கணவன் ராகவ், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் மானேஜர் வேலை பார்ப்பவன். எதோ வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதால், இன்று ஆனந்த் தன்னை சீக்கிரமாக வீட்டுக்கு வர சொன்னது ஞாபகம் வந்தது.

“ஹை! அம்மா வந்தாச்சு!” மாம்பலத்தில் தன் வீட்டின் முன் கார் நிற்கும்போதே உள்ளிருந்து குரல் கேட்டது. “ரொம்ப நேரமா ரோட்டையே பாத்துட்டு இருக்காம்மா எனக்கே பாவமா யிருந்தது” ஆயா சொல்லிக் கொண்டுக் கிளம்பினாள்.

ஏழு வயதாகும் ஆனந்த் ஸ்கூல் போய் வந்த களைப்பில் சாப்பிட்டுவிட்டு உறங்க, தாரா தன் வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ராகவ் பெங்களூர் சென்றால் தங்கும் ஹோட்டலின் நம்பர் நினைவுக்கு வர, தேடி டையல் செய்து காத்திருக்கும் போது “அந்தப் பெயர் எங்களுடைய ரெஜிஸ்டரில் இல்லை” என்று அழகான ஆங்கிலத்தில் பதில் வந்தது. நாளை ராகவோட ஆபிஸ்கு ·போன் பண்ணி சரியான ஸோட்டல் நம்பர் வாங்கணும், மனதில் நினைக்கும் போதே தூக்கம் கண்களை அழுத்த உறங்கினாள் தாரா.

மறுநாள் ஆனந்தை ஸ்கூலில் விட்டுவிட்டு க்ளினிக்கில் நுழையும்போதே, “டாக்டர்! போன்” என்று செகரெடரியின் குரல் கேட்டு திரும்பினாள். “டாக்டர் விக்ரம் லைன்ல இருக்கார். ஏதோ அவசரமா பேசணுமாம்” என்பதைக் கேட்டு “ஓகே கொடு” தன் ரூமில் நுழைந்தாள் தாரா. விக்ரம் மெடிக்கல் காலேஜில் கூட படித்தவன். ஏதாவது கஷ்டமான கேஸாக இருந்தால் டிஸ்கஸ் செய்வான்.

“சொல்லு விக்ரம். என்ன விஷயம்” கேட்டுக் கொண்டே சேரில் அமர்ந்தாள் தாரா.

“தாரா! இங்க ரெண்டு குழந்தைகள் பால விஹார்லேருந்து வந்திருக்காங்க. உன்கிட்ட அனுப்பறேன். என்னன்னு பாத்து சொல்லு.” விக்ரம் போனை வைப்பதற்கு முன்னமே செகரெடரி இரண்டு பேர் ரிசப்ஷனில் இருப்பதாக சொல்லிவிட்டு போக, உடனே அனுப்பச் சொல்லி தயாரானாள் தாரா.

அந்த பெண்ணிற்கு ஆனந்த் வயதுதான இருக்கும். “டாக்டரய்யா உங்ககிட்ட கொடுக் கச் சொன்னார்”. விக்ரம் ஆபிஸ் பியூன் இரண்டு மெடிக்கல் பைலைக் கொடுத்துவிட்டு நகர, தீவிரமாக படிக்கத் தொடங்கினாள்.

“எங்களுக்கு என்ன டாக்டர் வியாதி? நீங்களாவது சொல்வீங்களா? விக்ரம் டாக்டர் ரொம்ப மோசம். எங்கக்கிட்ட சொல்லவே மாட்டேன்னுட்டார்” பேசிய பெண்ணைப் பார்த்தாள் தாரா. “எனக்குத் தெரிஞ்சா நான் உனக்கு கட்டாயம் சொல்றேன்” சிரித்துக் கொண்டே பக்கத்தை தள்ள, ப்ளட் டெஸ்ட் முடிவுகள் கண்ணில் பட்டது. ‘ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்’, அதிர்ந்தாள் தாரா.

‘இந்த சின்னக் குழந்தைகளுக்கு எய்ட்ஸா? கடவுளே! விக்ரம் கன்பர்ம் பண்ணத்தான் இங்க அனுப்பியிருக்கான் போலிருக்கு. ‘தாரா உடனடி யாக ப்ளட் டெஸ்ட் செய்ய உத்தர விட்டாள். நெகடிவ் ரிசல்ட் வரணுமே’ மனம் வேண்டத் தொடங்கியது. ‘பெற்றோர் செஞ்சத் தப்புக்கு குழந்தைகள் தண்டனை அனுபவிக்கணுமா? வேண்டாமே!’ அலை பாய்ந்தன நினைவுகள்.

“இந்த குழந்தைகளை நம்ம க்ளினிக் ரூம்ல அட்மிட் பண்ணுங்க. பக்கத்தில ஒரு நர்ஸைப் போட்டு பாத்துக்கணும். எனக்கும் ரிப்போர்ட்ஸ் காட்டுங்க”, ராகவின் ஆபிஸ்க்கு போன் செய்ய வேண்டும் என்பது நினைவு வந்தது. “ராகவ் பெர்சனல் லீவ்ல போயிருக்கார் மேம்” ரிசப்ஷனிஸ்ட் சொன்னது கசப்பாய் வந்து விழுந்தது காதில். ‘பெங்களூரில் என்னிடம் சொல்லாமல் என்ன வேலை’ கேள்வி எழுந்தது மே மனது கனக்கத் துவங்கியது.

கடந்த ஒன்பது வருட தாம்பத்தியத்தில் பொய்களுக்கு இடம் இருந்ததில்லை. தாராவுக்கு தெரிந்தவரை மனைவியிடம் அமர்ந்து ஆழ பேசும் கணவனாய் ராகவ் இல்லையே தவிர, உண்மை பேசும் மனிதனாய் இருந்திருக்கிறான்.

பிரச்சினகைள் சூழும்போது எப்போதும் செய்வதுபோல் ஒரு நிமிடம், ‘எனக்கு மன நிம்மதி தவிர வேற எதுவும் வேண்டேன்! கடவுளே! சிறிதே இருட்டுவது போல தோன்று கிறது. சற்றே வெளிச்சம் காட்டுங்கள்’ என்ற பிரார்த்தனைக்குப் பிறகு காத்திருந்த நோயாளி களை கவனிக்கத் தொடங்கினாள்.

லாப் டெக்னீஷியன் கொண்டு வந்த ‘ப்ளட்’ ரிசல்டும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் எய்ட்ஸ் என்பதை உறுதி செய்ய, விக்ரமை தொலைபேசியில் அழைக்க முடிவு பண்ணி னாள். “கேஸ் காம்ளிகேட் தாரா. பால விஹார்லேருந்து அனுப்பிச்சிருக்காங்கன்னா அப்பா அம்மாவும் இல்ல இந்தக் குழந்தை களைப் பாத்துக்கறதுக்குன்னு நினைக்கறேன். பாலவிஹார் நிர்வாகிகள் இந்த வியாதிக்கு செலவு பண்ற நிலைமைல இருக்காங்களானு விசாரிக்கலாம்” என்று விக்ரம் சொல்ல, செகரடெரியை அழைத்து ஸ்பான்சர்ஸ் யாராவது கிடைப்பார்களா என்று ஆராயச் சொன்னாள்.

இரவு வீட்டில் நுழையும்போதே ஆயா, “ஐயா ஊரிலேருந்து வந்துட்டாரும்மா. மாடில இருக்கார். ஆனந்த் ரூம்ல சாப்பிட்டு தூங்கிட் டான்” என்று விடைபெற்றுக் கொண்டாள். படி ஏறும்போதே கேட்கவா, வேண்டாமா என்று தாராவின் மனதில் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

ராகவை பார்த்தவுடன் எல்லாம் மறந்து போய் “எப்ப வந்தீங்க ராகவ்” என்ற கேள்வி மட்டுமே வெளியே வந்தது. “வந்து ஒரு மணி நேரம் ஆச்சு, தாரா. நீ எப்படி இருக்க?” என்று கேட்டவனின் முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதாய் பட்டது தாராவுக்கு.

“என்ன ஆச்சு ராகவ்”

“நான் உன்கிட்ட நிறைய பேசணும் தாரா. என்னால பொய் சொல்ல முடியல இதுக்குமேல. நான் இந்த தடவை பெங்களூர் போனது ஆபீஸ் வேலையா இல்ல. தனிப்பட்ட வேலையாதான் போனேன். எனக்கு உன்னைத் தவிர ஒரு மனைவியும் அப்பானு கூப்பிட ஒரு பொண்ணும் இருக்காங்க, தாரா”

“என்ன சொல்றீங்க ராகவ்”

“என்னை மன்னிச்சுடு தாரா. என்கூட படிச்ச ஒரு பெண்ணை இரண்டு வருஷம் முன்னால, குடும்பத்தை எல்லாம் இழந்த அனாதையா பெங்களூர்ல சந்திச்சேன். நல்ல எண்ணத்தில அவளுக்கு வேலை வாங்கி தரலாம்னு தொடங்கி… இப்போ… அவளுக்கு இப்போ ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு தாரா. அவங்கள பாக்கதான் நான் போனதே!”

இதெல்லாம் நமக்குதான் நடக்கிறதா என்ற பிரமை வந்தமர்ந்தது தாராவின் மனதில். ‘வாய்நல்லார் மறையோதி இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லா வந்து வாழ்த்தி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ நடத்திய கல்யாணமா இப்படி ஊசலாடிக் கொண்டிருக் கிறது? தன் பெற்றோர் ஜாதகம் பார்த்து பந்தலிட்டு தலைவாழையிலையில் சாப்பாடு போட்டது இதற்கா?
“என்னை எப்படி வேணா தண்டிச்சுடு தாரா. நான் இப்ப ரெண்டு பேருக்கும் தகுதியில்லா தவனா ஆயிட்டேன்!”

“எங்களுக்கு என்ன வியாதி டாக்டர்” மழலையாய் கேட்ட அந்தப் பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது. ‘இத்தனை நாள் இல்லாமல் அவர்களை ஏன் என்னிடம் இப்போது அனுப் பினாய், இறைவா மனம் இறைந்தது. ‘நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே’ என்று பிதற்றி கொண்டிருந்த ராகவை பார்த்தால் கோபத்திற்கு பதில் அனுதாபம்தான் வந்தது அவளுக்கு.

“நான் முடிவு பண்ணிட்டேன் ராகவ்”

“சொல்லு தாரா”

“நீங்க அவங்களுக்கு துணையா இருங்க ராகவ். நானும் ஆனந்தும் இங்க இருக்கோம். எப்ப தேவையோ அப்ப சந்திச்சுக்கலாம்”

“என்ன சொல்ற தாரா”

“ஆமாம் ராகவ். தலைவன் இல்லாத குடும்பத்தைவிட அப்பா யார்னு சமுதாயத்துக்கு காட்ட முடியாத அந்த பெண் குழந்தையோட நிலைமை ரொம்ப மோசம். நான் நல்லா யோசித்து தான் முடிவு பண்ணினேன். எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல!”

“நீ என்ன பண்ணுவ தாரா தனியா”

“என் கிளினிக்ல ரெண்டு ‘ஹெச்ஐவி’ பாஸிட்டிவ் அனாதைக் குழந்தைங்க இருக் காங்க. அவங்களுக்கும் அவங்கள மாதிரி இருக்கும் மத்த குழந்தைகளுக்கும் எப்படி உதவுறதுனு நானும் யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க இப்ப பதில் சொல்லிட்டீங்க”

“ஒரு வகைல நான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ராகவ். எல்லாரையும் போல நீங்க நல்ல கணவனா அன்பான அப்பாவா இருந்தி ருந்தா, நானும் வீடு வேலைன்னு ஒரு வட்டத்துல அடங்கியிருப்பேன். என் குழந்தை படிப்பு கல்யாணம்னு யோசிச்சிருப்பேன். இப்பவும் நான் ஒண்ணும் மதர் தெரஸாவா போகப் போறதில்லை. ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு என் வாழ்க்கைக்கும் அர்த்தம் சேக்கப்போறேன்!”

“நான் உனக்கு எந்த வகையிலயும் உதவ தயார், தாரா!”

“என் கிளினிக்ல ஒரு விங்கை இதுக்காக ஒதுக்கப்போறேன். எல்லா கம்பெனிலயும் உதவின்னு கையேந்தலாம்னு நினைக்கறேன்!”

இது நடந்து ஆறு மாதத்திற்குப் பிறகு, தாராவின் பயணத்தில் உதவிட சில டாக்டர்கள் முன் வந்தனர். தனியார் கம்பெனிகளும் தங்களால் ஆன பணஉதவி அளித்தனர். “டாக்டர் கல்கத்தா மிஷன் ஆ·ப் சாரிட்டீஸ் லேருந்து போன். நம்மள பத்தி கேள்விப் பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன். இங்க ரெண்டு குழந்தைகளுக்கு இடம் கிடைக்கு மான்னு கேக்கறாங்க” செகரெடரி போனி லிருந்து கத்த, “சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க. நம்ம கவனிச்சுக்கலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்த தாராவிற்கு மனதில் நிம்மதி தலை தூக்கியது.

– ஜூலை 2002

Print Friendly, PDF & Email

1 thought on “அர்த்தம்

  1. நல்ல கதை. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். கணவனைச் சுற்றியே வாழ்க்கை இருக்கக்கூடாது. ஒழுக்கங்கெட்ட புருஷனை ஒதுக்கித் தள்ளுவதுதான் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *