அரைப்பவுன் தாலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 2,112 
 

அந்த திருமண மண்டபமே அலங்கார விளக்குகளால் ஜொலித்து கொண்டு இருந்தது. விடியற்காலை இரண்டரை மணி இருக்கும் போது ஆதிராவை அவள் தாய் சுகந்தி எழுப்பி குளிக்க போகச் சொன்னாள். ஆதிராவும் குளித்து தயாராகி வரவும், அழகுக்கலை நிபுணர்கள் அவளை அழகுபடுத்த ஆரம்பித்தனர். ஆதிராவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வைதேகி அம்மா.

மிகப்பெரிய தொழிலதிபர் ராஜரத்தினம்-சுகந்தி தம்பதியினரின் ஒரே செல்வ மகள் தான் ஆதிரா. இன்று ஆதிராவின் திருமணத்திற்கு தான் மண்டபமே கோலகலமாக தயாராகி இருந்தது. மாப்பிள்ளை ராஜரத்தினத்தின் தங்கை மகன் ஆதித்யன்தான். ஆதிரா பிறந்ததுமே ஆதித்யனுக்கு தான் என்று பெயர் கூட ஒரே மாதிரி வைத்தார்கள். கூட்டுக்குடும்பமாக இருந்ததால் திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்றாலுமே மண்டபமே மக்கள் கூட்டத்தில் நிறைந்து வழிந்தது. முகூர்த்தத்திற்கு தேவையான பொருட்களை அய்யர் தயார் செய்து கொண்டு இருந்தார். ஆதிரா மற்றும் ஆதித்யனின் பெற்றோர்கள் மணமேடைக்கு மேலே நின்று கொண்டு இருந்தார்கள். அய்யர் மாங்கல்யத்தையும், மெட்டியையும் எடுத்துட்டு வாங்க என்றார். சரி என்று ஆதித்யன் அம்மா அஞ்சலி அறைக்குள் சென்று தாலியை எடுக்க பீரோவை திறந்து பார்த்தார். பீரோவில் தாலியை வைத்த டப்பா வெறும் டப்பாவாக இருந்தது. அதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, ரகசியமாக சுகந்தியை அழைத்து விஷயத்தை கூறினார். அறை முழுவதும் தேடி பார்த்து விட்டார்கள், எங்கும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எந்த கடையும் திறந்து இருக்காதே இப்ப என்ன செய்ய என்று முழித்தார்கள். அதற்குள் மணமேடையில் ஆதித்யன் அமர்ந்து விட்டான். இவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த சமயம் அங்கு வந்த வைதேகி இருவரின் முகத்தை வைத்தே அங்கு எதோ சரியில்லை என்பதை உணர்ந்த வைதேகி என்னவென்று கேட்க நடந்ததை கூறினார்கள். அதற்குள் ராஜரத்தினம் மனைவியை மணமேடைக்கு அழைக்க, வைதேகி அம்மா நீங்க ரெண்டு பேரும் மெட்டியை எடுத்துட்டு மேடைக்கு போங்க, யாரிடமும் எதுவும் சொல்லாதீங்க, நான் எப்படியாவது தாலியை கண்டுபிடிச்சு கொண்டு வரேன் என்று கூறினாள். அவர்களும் வேறு வழியின்றி மேடைக்கு சென்றனர். மீண்டும் அய்யர் தாலியை எடுத்து கொடுங்க, கும்பம் மேல வைக்கணும் என்றார். இந்தாங்க என்று ஒரு குரல் கேட்டது, சுகந்தியும் அஞ்சலியும் திரும்பி பார்க்க வைதேகி தாலி டப்பாவுடன் நின்று கொண்டு இருந்தார். அதை பார்த்தபின்பு தான் அஞ்சலிக்கும்,சுகந்திக்கும் நிம்மதி வந்தது. அடுத்தடுத்து பூஜைகள் நடைபெற நல்ல நேரத்தில் ஆதிராவின் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி தன்சரிபாதி ஆக்கி கொண்டான் ஆதித்யன். இதைப் பார்த்த அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்து இருந்தது. ஆதிராவின் கழுத்தில் தங்க வைர நகைகள் மின்னிக் கொண்டு இருந்தாலும், அதில் இந்த பொன்தாலியும் மின்ன அதைப்பார்த்து வைதேகியின் கண்களின் ஓரம் சிறிது கண்ணீர் எட்டிப்பார்த்தது. தாலி விஷயத்தை வீட்டு ஆண்களிடம் கூறிவிட்டனர். அவர்களும் நல்லவேளை கிடைத்துவிட்டது என்று பெரு மூச்சு விட்டனர்.

மண்டபத்தை காலி செய்துவிட்டு மணமக்களை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஆதிராவை விளக்கேற்ற சொன்னார்கள். ஆதிரா விளக்கேற்றவும், எல்லோரும் கண்களை மூடி சாமி கும்பிட்டு விட்டு பார்க்க பூஜையறையில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அவர்கள் குலதெய்வத்தின் கழுத்தில் தாலி இருந்தது. அதைப்பார்த்த அஞ்சலி சுகந்தியிடம் கூறினாள். பின்பு அதை எடுத்து பார்க்கும் போது அது ஆதிராவுக்கு வாங்கிய தாலி என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். அப்புறம்தான் அஞ்சலிக்கு ஞாபகம் வந்தது, நேற்று இரவு தாலியை வைத்து பூஜை செய்தபின் எடுத்து டப்பாவில் வைக்க மறந்து விட்டது என்று.

எல்லோரும் ஒருசேர வைதேகியை அழைத்து, ஆதிராவின் கழுத்தில் இருக்கும் தாலி பற்றி கேட்டனர். அதற்கு வைதேகி அம்மா என்னை மன்னிச்சுருங்க, அந்த தாலி என்னுடையதுதான். முகூர்த்த நேரத்திற்குள் தாலி கிடைக்கவில்லை,அதனால்தான் நான் என் தாலியை எடுத்து உங்களிடம் பொய்சொல்லி கொடுத்து விட்டேன் என்றாள். என்ன சொல்ற உன்கிட்ட எப்படி இந்த தாலி வந்தது என்று சுகந்தி கேட்டாள்.

வைதேகி இவர்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்து இருபது வருடங்கள் ஆனாலும், அவள் கதையை பற்றி எதுவும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவளை பற்றி எதுவும் கேட்டால் வீட்டை விட்டு போய்விடுவேன் என்று கூறியதால், அவளை பற்றி இத்தனை வருடங்களாக எதுவும் கேட்கவில்லை. இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறார்கள். வைதேகி அவள் கதையை கூற ஆரம்பித்தாள்.

வைதேகியும்,ராஜனும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவளும்,அவள் காதலன் ராஜனும் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து தாலியும்,மாலையும் வாங்கி கொண்டு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் சுனாமி ஏற்பட்டு கடற்கரையையே திருப்பி போட்டது. அதில் தூக்கி எறியும் போது புதுத்தாலியை கெட்டியாக பிடித்து கொண்டாள் வைதேகி. சுனாமிக்கு பின்பு சுந்தரத்தை எங்கு தேடியும் காணவில்லை. என்றாவது ஒருநாள் சுந்தரம் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் தாலியை முந்தானையில் முடித்து வைத்து கொண்டாள் வைதேகி.

பின் ஒருவராக ராஜரத்தினத்தின் குடும்பத்தில் தன்னை ஒரு அநாதை என்று கூறி வேலைக்கு சேர்ந்துவிட்டாள். தற்போது வைதேகியை வீட்டில் ஒருத்தியாகவே நினைக்க ஆரம்பித்து விட்டனர். இருபது வருடங்கள் ஆகியும் சுந்தரம் வரவில்லை. மண்டபத்தில் தாலியை காணவில்லை என்றதும், தன் தாலியை எடுத்து அந்த டப்பாவில் வைத்து கொடுத்து விட்டாள். இதுதான் நடந்தது என்று கூறி மன்னிப்பு கேட்டாள்.

அதற்கு ராஜரத்தினம் இதில் மன்னிப்பு கேட்பதற்கு எதுவும் இல்லை வைதேகியம்மா. என் பொண்ணு கிட்டத்தட்ட முன்னூறு பவுன் நகை இன்று போட்டு இருந்தாலும், உங்களின் அரைப்பவுன் தாலிதான் ஆதிராவின் கழுத்தில் நிறைத்து விட்டது, நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று கூறி கைகூப்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *