அருமையான துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 1,086 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்த்துப் பார்த்து அலுத்துவிட்ட வெள்ளைச் சுவர்கள். அவற்றின்மீது தொங்கும் பழகிப்போன படங்கள். சுவர்களின் மூலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படை. அறையில் உள்ள பொருள்கள். எல்லாமே சலிப்பு ஏற் படுத்தின, படுத்த படுக்கையாய்க் கிடந்த புன்னைவனத்துக்கு.

சீக்காளியாகி விட்ட அவரைப் பார்ப்பதற்கென்று எப்போதாவது வந்த சொந்தக்காரர்கள்கூட அவருக்கு அலுப்பும் சலிப்புமே உண்டாக்குகிறார்கள். பெரியவர், பெயர் பெற்றவர். ‘ரொம்ப பெரிய மனிதர்’ என்ற நினைப்போடு வந்துபோன அவர்கள் ஒருவித பயமும் பக்தியும் கொண்டவர் களாக, அல்லது மதிப்பும் மரியாதையும் காட்டுகிறவர் களாக, நடந்துகொண்டார்கள். நோயாளியிடம் வழக்க மாகக் கேட்கப்படும் கேள்விகளைக் கேட்டுக்கேட்டு, அவரவ ருக்குத் தோன்றும் யோசனைகளை அவர்கள் வறண்ட குரலில் சொல்வதை சகிப்புத் தன்மையோடு ஏற்று ஏற்று, புன்னை வனம் அலுத்துப்போயிருந்தார். அடிக்கடி எரிச்சலுற்றார். அதனால் சிடுசிடுத்தார்.

‘சீக்கு யாருக்கும் வாறது தான். அதுக்காக இப்படியா நாய்க்குணம் பெறணும்?’ என்று அவரைப் பார்க்க வந்து போனவர்கள் பேசிக் கொள்ளலானார்கள். வருவதைப் படிப் படியாகக் குறைத்துக் கொண்டார்கள்.

புன்னைவனம் விரும்பிய தனிமை அவருக்குக் கிடைத்தது. நாளாக ஆக அதுவே அழுத்தும் சுமைபோல் கனத்துக் கவிந் திருப்பதாக அவருக்குத் தோன்றியது. முன்பு ஏன் இவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வருகிறார்கள்; அமைதியைக் கெடுக் கிறார்கள் என்று சிடுசிடுத்த அவர் மனம் இப்போது ‘எல்லோரும் நம்மை இப்படி அம்போன்னு விட்டுவிட்டார்களே! யாருமே பார்க்க வருவதில்லையே?’ என்று சிணுங்கியது.

பெரிய வீட்டில், ஒதுங்கியிருந்த தனி அறையில்தான் புன்னைவனம் தன் நேரங்களைக் கழிப்பது வழக்கம். படிப்பது, எழுதுவது, சிந்தனை செய்வது- இதற்கே அவருக்கு நேரம் போதுமான அளவு இருந்ததில்லை. தனது அமைதியை எவரும் கெடுப்பதை அவர் விரும்பியது கிடையாது. யாரிடமும் ஒட்டிப் பழகும் இயல்பு அவருடையது அல்ல. ‘என்னைப் பார்த்து பேச வருகிறவர்கள் என்னை கௌரவிக் கிறார்கள். அவரவர் அலுவலை கவனித்துக்கொண்டு விலகி யிருப்பவர்களே எனக்குச் சந்தோஷம் தருகிறார்கள்’ என்று வெளிப்படையாகப் பேசும் பண்பினர் அவர்.

ஆயினும், அவரை கௌரவித்துப் பார்க்க வருகிறவர் களிடம் அவர்களது சந்தோஷத்துக்காக இனிமையாக உரையாடிப் பொழுதுபோக்க அவர் மறுத்துவிடுவதுமில்லை. வந்தவர்கள் போன பின்னர், ‘இவர்கள் வராமலே இருந் திருந்தால், என் பொழுது இன்னும் பயனுள்ளதாகக் கழிந் திருக்கும்’ என்று அவரது உள்ளத்தில் எழும் எண்ணத்தை அவர் செல்லப் பிராணியைத் தடவிக் கொடுத்துச் சீராட்டுவதுபோல் வளர்த்து வந்தாரே தவிர. இது வேண்டாத நினைப்பு என்று மண்டையிலடித்து அமுக்கிவிட ஆசைப்பட்டதில்லை.

கடுமையான நோய் கண்டதும் அவர் தனது அறைக் குள்ளேயே முடங்கிவிட நேர்ந்தது. எதுவும் செய்ய முடியாமல், எழுதப் படிக்க இயலாமல், விரும்பியபோது காட்சி இனிமைகளை நாடி எங்கும் போகச் சக்தி இல்லாமல், மாசக் கணக்கில் புன்னைவனம் கட்டிலே கதி என்று விழுந்து விட்ட பிறகு, சூழ்நிலையும் பிறவும் சதா அலுப்பு ஏற்படுத்து வனவாக அமைந்துவிட்ட பின்னர், அவர் உள்ளம் ஏங்க லாயிற்று. கோடை கால புழுக்கத்தில் தவிக்கும் உடல் புளகிதம் உண்டாக்கக்கூடிய மென்காற்றுக்காக ஏங்குவது போல, இதம்தரக்கூடிய இனிமையை அவாவியது அவர் மனம்.

பெரியவர் புன்னைவனத்தின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அவர் உள்ளத்துக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் செயல்புரியக்கூடியவர்கள் எவரும் இல்லை. வீட்டில் இருந்த வர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தார்கள். அவருக்குத் தேவையான பணிவிடைகள் குறையின்றி, வேளை பிசகாது நிறைவேற்றப்பட்டன. வாய் திறந்து அவர் வெளியிடும் விருப்பங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப் பெற்றன. எனினும், குறிப்பறிந்து அவரது பெரும் குறையை நீக்கிவைக்கக்கூடிய திறமை மற்றவர்களுக்கு இல்லாமல் போயிற்று.

சில சமயங்களில், இளையவர்களில் யாரையாவது அழைத்து அவர் பேச்சுக்கொடுப்பார். அவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் மாணவர்கள் மாதிரி, வேண்டா வெறுப்பாகவோ – கடமையே என்றோ முணமுணப் பார்கள். புத்தகம் எதையாவது எடுத்து உரக்கப் படிக்கு மாறு கோருவார். அவர்கள் கிழடுக்கு சும்மா கிடக்க முடியலே. சாகப்போற சமயத்திலும் புத்தக ஆசைதானா? நம்ம பிராணனை வாங்குது’ என்று புகைந்து குமைந்தவாறு, சுரத்தில்லாமல் படிப்பார்கள்.

இளையவர்களின் மனப்போக்கைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருந்த புன்னைவனம் அப்புறம் அவர்களை ஏவுவதை விட்டுவிட்டார். அவர்களும் அவர் இருந்த அறையின் பக்கம் தங்கள் நிழல்கூடப் படாதவாறு சிரத்தை யோடு கவனித்துக் கொண்டார்கள்!

எனவே, சுவர்களையும் படங்களையும் பழகிய காட்சி களையும் பார்த்து அலுப்புடன் கண்களை மூடிக்கொண்டு கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது அவருக்கு.

அப்போதும் புன்னைவனம் சூழ்நிலை வெறுமையில் சலிப் புற்ற கண்களை மூடிக்கொண்டு கிடந்து பின் ஏதோ ஒரு குறு குறுப்பில் விழித்து, பார்வையை வாசலின் பக்கம் ஓட விட்டார். அங்கே ஒரு புதுமை பூத்திருந்தது.

அவர் கண்கள் அப்பக்கம் பார்ப்பதைக் கண்ட ஒரு சிறு முகம் பின்வாங்கியது. பிறகு மெதுமெதுவாக எட்டிப் பார்த்தது, கருவண்டுக் கண்கள் உணர்வோடு மின்னின. பிஞ்சு உதடுகளில் சிறு சிரிப்பு வெடித்தது.

அந்த இடத்தில் சிறு சூரியன் உதயமாகி ஒளிர்வதுபோல் அவருக்குத் தோன்றியது. இது யார் குழந்தை? இங்கே பிள்ளைகள் யாரும் வருவதில்லையே? அவர் மனம் அரித்துக் கொண்டது.

‘நான் வரலாமா?’ என்று மழலைக் குரலில் கேட்டு, பதிலுக்குக் காத்திராமலே உள்ளே வந்தாள், ஒரு சிறுமி. ஐந்து வயதிருக்கும். களையான முகம். அலைபாயும் கண்கள். சிரிப்பு சதா குமிழிடும் ஊற்றுப் போன்ற சிறு வாய்.

அறை நடுவில் வந்து, கைகளைப் பின்னால் கட்டியபடி நின்று, சுற்றிலும் நோக்கினாள். அங்குமிங்கும் வண்ணப் பூச்சிகள்போல் பாய்ந்து திரிந்த விழிகள் புன்னைவனத்தின் மீது தேங்கி நின்றன.

‘நீ யாரு?’ என்று கேட்டார் அவர்.

‘உஷா’ என்று பெயரைச் சொன்னாலே எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்றொரு நம்பிக்கையோடு பேசுபவள்போல் திடமாக அறிவித்தாள் அந்தச் சிறுமி.

‘உஷான்னா…? சந்திரசேகரன் மகளா? இந்தத் தெருவிலே மூன்றாவது வீட்டிலே..’

அவர் பேச்சு அநாவசியமானதாகத் தோன்றியது அவளுக்கு. சிறு எரிச்சல் தொனிக்கக் கூறினாள்: ‘நான்தான் உஷா, என் பேரு உஷா…உஷான்னு சொன்னப்புறமும் சும்மா புழுபுழுங்கிறியே!’

அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையும் தைரியமும் அவருக்கு வியப்பளித்தன. ஏதோ பலிபீடத்தின் முன் வந்து அச்சத்தோடு தலைவணங்கி நிற்பவர்கள் போலவும், வரம் தரும் தெய்வத்தின் திருமுன்னிலையில் பக்தியும் பணிவும் காட்டுவது போலவும், வந்து மதிப்பும் மரியாதையும் செலுத்தக்கூடிய பெரியவர்களையே கண்டு, சகித்து சலிப் புற்றுப் போயிருந்த பெரியவருக்கு இச்சிறு குழந்தையின் துணிச்சலான சுபாவம் புதுமையாக இருந்தது.

வெகு நாட்களுக்குப் பிறகு அவர் முகத்தில் புன்னகை ரேகையிட்டது. ‘அப்படியா! ரொம்ப சந்தோஷம். இங்கே எங்கே வந்தே?’ என்றார்.

‘இந்த வீட்டிலே ரொம்பப் பெரிய ஆளு ஒருத்தரு இருக்காரு; அங்கே போய்க் குரங்குத்தனம் எதுவும் பண்ணி வைக்காதேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. ஆமா, ரொம்பப் பெரிய ஆளுதான்னு அப்பாவும் சொன்னா. இன்னொரு மாமாவும் சொன்னாங்க. இந்தத் தெருவிலேயே பெரிய வீடு இது. இதிலே இருக்கிற பெரிய ஆளு எப்படி இருக்கும்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆசை. அதுதான் வந்தேன். உனக்குத் தெரியுமா? அந்தப் பெரிய ஆளு எங்கே இருக்கு?’

தயங்காமல் பேசினாள் உஷா. துடிப்பான குழந்தைதான் என எண்ணிய புன்னைவனம் சிரித்தார். ‘என்னைப் பார்த் தால் உனக்கு எப்படித் தோணுது? நான்தான் அந்தப் பெரிய ஆளுன்னு’

அதற்குள் அவள் கத்தினாள்: ‘பொய்யி பொய் சொல்லுறே!’

அப்போது அவள் கண்கள் குறுகி ஒளி வீசியதும், முகம் சிரிப்பால் அழகு பெற்றதும் வசீகரமாக இருந்தன.

‘நான் ஏன் பொய் சொல்லப்போறேன்! என்று இயல்பான குரலில் அவர் பேசினார். அவருக்குக் கோபம் வர வில்லை. ஒரு விளையாட்டை ரசித்து, அதில் தானும் கலந்து கொள்ளும் ஈடுபாடுதான் உண்டாயிற்று.

‘சும்மா சொல்லுறே, பெரிய ஆளு உன்னை மாதிரியா இருக்கும்! நீ தாத்தா கணக்கா இருக்கியே’ என்றாள் உஷா. பெரிய ஆளு எப்படி இருக்கும் பின்னே? என்று புன்னை வனம் கேட்டார்.

‘பெரூசா… ரொம்ப பெரூசா…ஆனை மாதிரி, பனை மரம் மாதிரி… புள்ளெகளை எல்லாம் மிரட்டும்படியா இந்தாத் தண்டி மூஞ்சி. இம்மாம் பெரிய மீசை. முண்டக் கண்ணு. ஏய் எங்கே வந்தே. சீ ஓடிப்போ, அடிப்பேன் உதைப்பேன்னு பேசிக்கிட்டு, அப்படியெல்லாம் இருக்கும். உன்னைப்போலெயா இருக்கும்? ஏஹே, பெரிய ஆளுன்னு எல்லோரும் பேசிப் பயப்படுற ஆளை நீ பார்த்ததேயில்லை போலிருக்கு!’ என்று, உரிய நடிப்புகள், நொடிப்புகள், கண் உருட்டல்கள், கைச் சைகைகளோடு சொல்லி முடித்தாள் அவள்.

மிகவும் ரசிக்க வேண்டிய காட்சியாகத்தான் இருந்தது அது.

‘எனக்குத் தெரியாதம்மா. அப்படியாப்பட்ட ஆளை நான் பார்த்ததேயில்லை என்று அவர் தெரிவித்தார்.

‘அப்போ உனக்கு இந்த வீடு இல்லையா? நீ இந்த வீட்டுக் குள்ளே எல்லாம் போயிப் பார்த்தது கிடையாதா?’ என்று ஆச்சரியத்தோடு விசாரித்தாள் சிறுமி.

‘ஹூங்! நான் எங்கே போறேன், வாறேன்! இந்த அறையிலேயே, இந்தக் கட்டிலிலேயேதான் இருக்கேன்’.

‘அய்யய்யோ! உனக்கு எப்படிப் பொழுது போகுது? விளையாடதுக்கு யாராவது வருவாங்களா?’ என்று அனு தாபத்தோடு, அக்கறையோடு கேட்டாள் உஷா.

அவளது முக மாறுதல்களும் குரல் ஏற்ற இறக்கங்க கங்களும் அவருக்கு இனிய விருந்தாக அமைந்தன. இது சுவாரஸ்ய மான குழந்தைதான் என்று அவர் மனம் வியந்தது.

‘ஹூம்ப்! யாரு வாறா? இந்தக் கிழவனோடு பேசிப் பொழுதுபோக்க யாருக்குப் பிடிக்கும்!’ இயல்பான அலுப்பு வெளிப்பட்டது அவர் பேச்சில்.

‘நான் வாரேன் தாத்தா. நான் தொந்தரவு பண்ண மாட்டேன். அந்தச் சன்னல்கிட்டே உக்காந்து விளையாடிக் கிட்டிருப்பேன். நீயா பேசணும்னு நெனைச்சாப் பேசு. இல்லையோ, கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கு. உனக்குத் தூக்கம் வரலேன்னா, நான் கதை சொல்லுவேன். எனக்கு நெறைய கதை தெரியும்..’

‘அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!’ என்று உற்சாகமாகச் சொன்னார் புன்னைவனம். அவர் உள்ளத்தில் அவர் அதுவரை அனுபவித்திராத ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டது.

இவ்வாறுதான் பிறந்தது அந்த விநோத நட்பு.

உஷா தனது பொழுதுகளை பெரும்பாலும் அங்கேயே கழிப்பதில் உற்சாகம் கண்டாள். அவள் ஒற்றைக் குழந்தை. அண்டை அயலில் அவளோடு சேர்ந்து விளையாடுவதற்கும், அவளைச் சேர்த்துக்கொண்டு ஓடி ஆடிக் களிப்பதற்கும் சம வயதுப் பிள்ளைகள் இல்லை. பெரிய பிள்ளைகள் ‘இது சின்னப் புள்ளை. இதுக்கு விளையாடத் தெரியாது. நம்ம ஆட்டத்துக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும் என்று அவளை கூட்டிக் கொள்வதில்லை. வீட்டில் இருந்துகொண்டு அதையும் இதையும் எடுத்து, சாமான்களைக் கீழே தள்ளி ஓசைப் படுத்தியும் நாசப்படுத்தியும், அம்மாவிடம் ஓயாது தொண் தொணத்தும் எரிச்சலூட்டுவது அம்மாவுக்குப் பிடிக்காது. புள்ளையானா வெளியே போய் விளையாடும் கண்டிருக்கேன். இது வீட்டுக்குள்ளேயே கிடந்து தொல்லை கொடுக்குதே!’ என்று அம்மா சீறுவாள். சிலசமயம் அடியும் கொடுப்பாள்.

இப்படியிருக்கிறதே என்று தனியாகத் தெருவில் திரிந் தால், வீடுவீடாக எட்டிப் பார்த்தால் அப்பவும் ஏகப்பட்ட குறைகூறல்கள், கண்டிப்புகள், போதனைகள். இதனால் எல்லாம் அலுப்புற்றிருந்த உஷாவுக்கு அமைதியான அந்த அறையும், கண்டிக்காமல்- குறைகூறாமல் – அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு சும்மா படுத்திருக்கும் ‘தாத்தா’வும் மனசுக்குப் பிடித்துவிட்டது வியப்பில்லை.

அவள் விளையாட்டுச் சாமான்கள் என்று கொண்டு வருபவை புன்னைவனத்துக்கு வேடிக்கையாகத் தோன்றும். உடைந்த கண்ணாடி, கோலிக்குண்டு, சோடாபாட்டில் மூடி பழைய தீப்பெட்டி என்று உபயோகமற்ற கழிவுகளை வைத்து தனி உலகம் படைத்து அதிலேயே மகிழ்வுடன் ஆழ்ந்துவிடுவதை அவர் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

‘உனக்கு விளையாடறதுக்குப் பொம்மைகள் ஏதாவது வேண்டுமா?’ என்று அவர் கேட்டார்.

‘எனக்கு ஏன் பொம்மை? என் கிட்டேத்தான் நிறைய விளையாட்டுச் சாமான் இருக்கே!’ என்று சொன்னவள், வீட்டுக்குப் போய், துருப்பிடித்த மூடியில்லாத தகர டப்பாக் களையும், டப்பாக்கள் இல்லாத மூடிகளையும், அவை போன்ற அநேக சாமான்களையும் ஒரு பையில் போட்டு எடுத்து வந் தாள். கீழே கொட்டினாள்.

‘ஏ புள்ளே, இதை எல்லாம் இங்கே கொட்டி ஏன் இப்படி இடத்தை அசிங்கமாக்குதே?’ என்றார் அவர்.

அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு பேசினாள்: “நான்” உஷா. புள்ளெ இல்லே. என்னை உஷான்னு கூப்பிடணும். உஷான்னு கூப்பிட்டால்தான் ஊம்னு கேட்பேன். அப்புறம், நீதானே என் விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பார்க்கணுமின்னே. பையை விட்டுக் கீழே கொட்டாமல் எப்படிப் பார்க்க முடியுமாம்?

உடனேயே குனிந்து அவசரமாக அனைத்தையும் அள்ளி பைக்குள் அடைத்தாள். ‘நான் வீட்டுக்குப் போறேன் என்று சொல்லிப் போய்விட்டாள்.

சரி, இந்தக் குழந்தை இனிமேல் இங்கே வராது என்று எண்ணிய புன்னைவனம் ஏமாந்தார். உஷா சிறிது நேரத்தி லேயே அங்கு வந்து சேர்ந்தாள். எட்டிப் பார்த்தாள்.’நீ தூங்குதியோன்னு பார்த்தேன். தூங்கலியா?’ என்று கேட்டுச் சிரித்தாள்.

அந்தக் குழந்தையின் சிரித்த முகம் அவருக்குப் பிடித்திருந்தது. அதுவே ஒளிபொருந்திய ஒரு மலர்போல் விளங்கியது. அது அவர் உள்ளத்தில் பல மலர்களைப் பூக்க வைக்கும் இளம் சூரியன் போலுமிருந்தது. அம் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சந்தோஷம்தான்.

உஷா புத்திசாலிக் குழந்தை. அழகான அச்சிறுமியை அவள் அம்மா காலையிலேயே குளிப்பாட்டி, எளிமையான எனினும் வனப்பும் வசீகரமும் நிறைந்த, ஆடை அணிவித்து, தலைவாரி முடித்து, சுத்தமாக விளங்கும்படி செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஆகவே அதைப் பார்ப்பது கண்ணுக்குக் குளுமையாகத்தானிருந்தது.

புன்னைவனம் அக்குழந்தையின் மகிழ்ச்சியை அதிகப் படுத்தலாமே என்று நினைத்தார். அவருக்கும் பொழுது போனது போலவும் இருக்குமே! எனவே, தாமரைப்பூ, கிளி, தென்னைமரம் என்று படங்கள் வரைந்து, வர்ணம் தீட்டி, உஷாவிடம் கொடுத்தார்.

வியப்பினால் அவள் கண்கள் விரிந்தன. ஆனந்தத்தால் முகம் ஒளிர்ந்தது. ‘ஐயா, பூ! பச்சைக்கிளி! ரொம்ப ஜோராயிருக்குதே. நீயா போட்டே?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டாள்.

‘ஊம்’ என்று சொன்ன பெரியவர், அந்தக் குழந்தைக் காக, அவள் கண்முன்னாலேயே, மேலும் சில சித்திரங்கள் தீட்டினார். சந்தோஷம் சந்தோஷத்தை வளர்த்தது. இரண்டு பேருக்குமே சந்தோஷம்தான்.

உஷா பேராசைப்படும் குழந்தை அல்ல. பெருந்தீனி விரும்புவதுமில்லை. வரும்போதே வீட்டில் உணவு உண்டு வரும். ‘சாப்பிட்டாச்சா? என்று விசாரித்தால், ஊம். சாப்பிட்டாச்சு என்று திருப்தியோடு சொல்லும். என்ன சாப்பிட்டேன் என்று தெரிவிக்கும்.

இட்டிலி சாப்பிடுறியா?’ ‘உப்புமா தின்னேன்!’பாதித் தோசை?’ என்று சமயத்துக்குத் தக்கபடி அவர் கேட்பார். உஷா தலையை அசைத்து, வேண்டாம். நான்தான் வீட்டிலே சாப்பிட்டாச்சே!” என்று உறுதியாக மறுத்து விடுவாள். இந்தக் குணம் புன்னைவனத்துக்கு மிகுதியும் பிடித் திருந்தது.

ஒருநாள் – உஷா அங்கு வர ஆரம்பித்த மூன்றாவது நாள் – ‘உனக்கு என்ன வேணுமோ கேளு’ என்று அவர் அவளை ஊக்குவித்தார்.

‘நான் தாரேன்’

அக் குழந்தையின் பதில் அவர் எதிர்பாராதது.

‘எனக்கு வேறே ஒண்ணும் வேண்டாம். இந்த வீட்டை பூராவும் பார்க்கணும். உள்ளே போயி, இந்தப் பெரிய வீடு பூராவையும் சுத்திப் பார்க்கணும்’.

மனித மனசின் ஆசைகள் விசித்திரமானவை; எந்த மனசில் எப்படிப்பட்ட ஆசை மறைந்து கிடக்கும் என்று கணிப்பது இயலாத காரியம் என்று எண்ணினார் அவர். வீட்டினுள்ளிருந்தவர்களில் ஒரு ஆளை அழைத்து, அக் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும்படி பணித்தார்.

வீடு முழுவதையும், ஒவ்வொரு அறையாக – அடைத்துக் கிடந்த அறைகளையும் திறந்து திறந்து-நன்கு பார்த்து விட்டுத் திரும்பிய உஷா, ‘பின்னே ஏன் எல்லாரும் அப்படிச் சொல்றாங்க?’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். ‘என்ன விஷயம்? என்றார் பெரியவர்.

‘இங்கே இல்லியே. எந்த அறையிலும் இல்லியே!’ என்று ஏமாற்றம் தொனிக்கப் பேசினாள் அவள்.

‘என்னது?’

‘பெரிய ஆளுதான். அதை எங்கேயுமே காணோம். புன்னைவனம் ரசித்துச் சிரித்தார். ‘அதுக்காகத்தான் வீடு பூராவையும் பார்க்கணுமின்னியா? சரிதான் போ!” என்றார். ‘நீ நினைக்கிறபடி ஆளு யாருமே கிடையாது!’

‘பின்னே எல்லாரும் சொல்றாங்களே!’

‘ஏனோ சொல்றாங்க! எனக்கென்ன தெரியும்?” என்றார் அவர்.

அச் சிறு பெண் அவரோடு ரொம்பவும் சகஜமாகப் பேசிப் பழகியது. அவரும் உஷாவோடு சுமுக உறவு கொண்டாடினார். இது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யமாகவே இருந்தது. அவர் குணத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாக நம்பியவர்கள் அவரது இந்தப் போக்கைக் கண்டு அதிசயித்தார்கள்.

உஷா மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அந்த ஒரு தடவைக்குப் பிறகு வீட்டுக்குள் போய்ப்பார்க்கவேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. அவளுக்கு, இஷ்டப்பட்ட போது, பிறர் தொந்தரவோ, கண்டிப்போ, பரிகசிப்போ இ இல்லாமல், தனியாக இருந்து மனம்போல் தானாகவே பேசி- தானே தோழிகளை உண்டாக்கியும் அவர்களை நீக்கியும், சட்டாம்பிள்ளைதனம் பண்ணியும் விளையாடுவதற்கு ஏற்ற இடம் கிடைத்திருந்தது. அவளை நச்சரிக்காமல், பிச்சுப் பிடுங்காமல், அதிகாரம் பண்ணாமல், வேலை ஏவாமல், சிவனேன்னு ஒதுங்கியிருக்கும் தாத்தா ரொம்ப நல்லவர். அவரிடமும் இஷ்டம்போல் பேச முடிந்தது. கதைகள் சொல்ல முடிந்தது. அவரை விட்டு போட்டு வீட்டுக்கு ஓடிப் போகவும் முடியும். அப்புறம் வேறென்ன வேண்டும்!

பெரியவருக்கு அந்தச் சிறு பெண் பொழுதுபோக்குத் துணை; அச் சிறுமிக்கு அவர் நல்ல விளையாட்டுத் துணை. இரண்டு பேருக்கும் இந்த ஏற்பாடு மனசுக்கு இதமாக யிருந்தது.

புன்னைவனத்துக்கு அவரது தனிமைப் புழுக்கம் அவ் இளம் தென்றலின் வருகையால் நீங்கியது. அவளது குழந்தைத்தனமான விளையாட்டுக்களும், பெரிய மனுஷி தோரணையில் அவள் பேசுகிற பேச்சுக்களும் அவர் உள்ளத் துக்கு உவகையூட்டின. புத்துணர்வு சேர்த்தன. அவர் புதுமையான இனிமைகளை, ஆனந்தங்களை உணரலானார்.

பொழுது போவது தெரியாமலே நாட்கள் நகர்ந்தன. நாட்கள் ஓடுவது தெரியாமலே வாரங்கள் பறந்தன.

ஒருநாள் உஷா துள்ளாட்டம் போட்டபடி வந்தாள். கையை மூடிவைத்துக்கொண்டே அவரருகில் போய், ‘ஆ ஆக்காட்டு. உனக்கு ஒண்ணு தருவேன்” என்றாள்.

‘என்னது? கையிலே என்ன வச்சிருக்கே?’ என்று அவர் கேட்டும் பயனில்லை. வாயை ஆவெனத் திறந்தார். அவள் கையிலிருந்ததை அவர் வாய்க்குள் போட்டுவிட்டுக் கலீரிட்டுச் சிரித்தாள். குதித்தாள்.

அவர் வாயில் இனிப்பு. மனசில் கிளுகிளுப்பு. ‘இந்த மிட்டாய்க்குத்தானா இந்தக் குதியாட்டம்!’ என்றார்.

‘இது ஏன் தெரியுமா? இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள். ஆமா!’ என்று உஷா உற்சாகத்தோடு சொன்னாள். ‘பார்த்தையா, புதுச்சட்டை, தலையிலே புது ரிப்பன். இன்று நான் புது உஷா’ என்று குதூகலித்தாள்.

‘அடடே, எனக்குத் தெரியாமல் போச்சே! நேத்தே சொல்லியிருக்கப்படாது?’

உஷா அவர் பேச்சைப் பெரிதுபடுத்தவில்லை. ‘உனக்கு இன்னொரு மிட்டாய் வேணுமா? இதோ வச்சிருக்கேன்’ என்று பெருமையாக எடுத்துக்காட்டினாள்.

‘வேண்டாம் வேண்டாம். நீயே தின்னு. உனக்கு இன்னும் மிட்டாய் வேணுமின்னா காசு தாறேன். வாங்கிக்கோ’.

அவள் மறுத்துவிட்டாள். வழக்கம் போல் பேசினாள். விளையாடினாள். போனாள்.

அன்று மாலை உஷாவின் தந்தையிடம் ஒரு ஆள் வந்து, ‘உங்களை பெரிய வீட்டு ஐயா இட்டு வரச் சொன்னாங்க’ என்று தெரிவிக்கவும், அவர் திகைப்படைந்தார். ‘ஏன்? என்ன விஷயம்?’ எனக் கேட்டார்.

‘எனக்குத் தெரியாது. என்னமோ உங்க குழந்தை விஷயமாகத்தானிருக்கும்’ என்று அவன் சொல்ல, அவர் திகிலுற்றார். ‘ஏ சரசு, உஷா அங்கே போயி ஏதாவது விஷமம் பண்ணிட்டு வந்துதா?’ என்று மனைவியிடம் விசாரித்தார்.

அவளோ ‘எனக்கென்ன தெரியும்!’ என்று நீட்டினாள். அவ்வேளையில் அங்கே நுழைந்த உஷாவை இழுத்து, ‘ஏட்டி, அந்தப் பெரிய மனிதர் வீட்டுக்குப் போகாதே. அங்கே போய் சேட்டை பண்ணாதேன்னு சொன்னேனா இல்லையா? நீ அங்கே போயி என்னட்டி பண்ணுனே?’ என்று வெடுவெடுத்தார்.

‘அதுல்லாம் ஒண்ணுமிராது ஐயா. முதலாளி ஏனோ உங்களை கையோடு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க’ என்று கூறி, வேலையாள் முன்னே நடந்தான்.

சிறு மனப்பதைப்புடன் அவர் பின்னால் போனார். உஷாவும் குதித்துக்கொண்டு உடன் நடந்தாள். ‘தாத்தாவை பார்க்கப் போறியா? அந்தத் தாத்தாவை உனக்கு முன்னாடியே தெரியுமா?’ என்று தன் இயல்புப்படி சளசளத்துச் சென்றாள்.

‘என்னவோ ஏதோ… ஏன் இப்படி வழக்கமில்லாத முறையிலே கூப்பிட்டு அனுப்பியிருக்கார்’ என்று சந்தேகங் களை வளர்த்தபடி நடந்த தந்தைக்கு எரிச்சலாக இருந்தது அவள் போக்கு. ‘பேசாம வாயை மூடிக்கிட்டு வரமாட்டே? என்று அதட்டல் போட்டார் மகளைப் பார்த்து.

அவர் பயந்தபடி ஒன்றுமில்லை. புன்னைவனம் அன்புடன் அவரை வரவேற்றார். ஒரு நாற்காலியில் உட்காரும்படி உபசரித்தார். அவர் தான் பணிவுடன் வணங்கி, மரியாதை காட்டி ஒதுங்கி நின்றார். ‘சும்மா உட்காரப்பா’ என்று கிசுகிசுத்தாள் உஷா.

‘இன்னிக்கு உஷாவுக்குப் பிறந்த நாளா? காலையிலே உஷா சொல்லப் போய்த்தான் தெரியும்’ என்று புன்னைவனம் ஆரம்பித்தார்.

‘ஆமாங்க. அஞ்சு போயி ஆறு வருது. இனிமேல்தான் ஸ்கூலிலே சேர்க்கணும். ஆறாவது வயசு வந்தாத்தான் சேர்த்துக்கிட முடியும்னு கார்ப்பரேஷன் ஸ்கூலிலே சொல்லிட்டாங்க’ என்று தேவை இல்லாத விவரங்களைக் கூறினார் தந்தை.

‘உஷா கெட்டிக்காரி. புத்திசாலி. பள்ளிக்கூடத்துக்குப் போகாமலே அவள் எவ்வளவோ விஷயங்கள் கற்று வச்சிருக்கா…’

‘நான் உனக்கு எத்தனையோ கதைகள்லாம் சொன்னேன்லா!’ என்று பெருமையோடு இழுத்தாள் உஷா. ‘நீ கூட..’

‘ஏட்டி, மரியாதையாப் பேசணும். அவங்களை நீ என்கக்கூடாது. நீங்கன்னு சொல்லணும். அவங்க எவ்வளவு பெரிய மனுஷரு …’

‘தாத்தா ஒண்ணும் பெரிய மனுசரு இல்லே. நம்மை மாதிரி.’

அப்பாவுக்கு ஆத்திரம், குழப்பம். நாக்கைத் துருத்திக் கொண்டு பிள்ளையை அடிக்கப் போனார்.

புன்னைவனம் தான் அவசரமாகத் தடுத்தார். ‘ஐயா சந்திரசேகரன், உஷா சின்னப்புள்ளெதானே. அதுக்கு இந்த வித்தியாசங்கள் எல்லாம் என்ன தெரியும்! குழந்தை இயல்பின்படி பேசிப் பழகுது. அதனாலேதான் எனக்கு அதை முதல் முறையே பிடித்துவிட்டது. இப்ப ஒரு ஒன்றரை மாசமா நான் சந்தோஷமா இருக்கிறேன்னா அதற்கு உஷா தான் காரணம். உஷா எனக்குத் துணையாக இங்கே வந்து, தினசரி பொழுது போக்கத் தொடங்கியதிலிருந்து நானே புது மனுஷன் ஆயிட்டேன். அதுக்காக என் நன்றியைத் தெரிவிக்கிற முறையிலும், அவள் பிறந்த நாள் வாழ்த்துக் களோடு ஒரு அன்பளிப்பாகவும், இதை கொடுக்கணுமின்னு தான் உங்களை அழைத்துவரச் சொன்னேன். உஷாவிடமே கொடுக்கலாம்னுதான் நினைத்தேன். அவள் வாங்கிக்கொள்ள மாட்டேன்பா. அப்படியே வாங்கிக்கொண்டாலும், நீங்களும் அவள் அம்மாவும் அவளை கண்டித்துக் கட்டுப்பாடு பண்ணு வீங்க என்று எண்ணி, உங்களிடமே விஷயத்தைச் சொல்லி இதைக் கொடுக்க விரும்பினேன், இந்தாங்க’ என்று பரிசுப் பொருளைக் கொடுத்தார்.

அழகான, அருமையான், பட்டுக்கவுன். உஷாவின் தந்தை பிரமித்து நின்றார். என்ன சொல்வது, எப்படி நன்றி அறிவிப்பது என்றே அவருக்குப் புரியவில்லை.

‘இதென்ன இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க. தாத்தா என்னென்னவோ சொல்லுது. அப்பா எப்படியோ முழிக்குது. எனக்கு எதுவும் புரியலேம்மா!’ என்று நினைத்துக் கொண்டே உஷா இருவரையும் பார்த்துச் சிரித்தாள்.

– ‘எழுத்தாளன்’ மலர், 1973

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *