அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது.
தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி நடப்பதை அவளால் இங்கிருந்தே உணர முடிந்தது. எதிர்த்தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்தக் கோளை வந்து ஆக்கிரமித்த போது. அப்போது பூமிகாவின் அப்பா அம்மா கூட பிறந்திருக்கவில்லை. அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை என்பது மட்டுமே இருவரி சட்டம். ஆயுதம், வன்முறை, அடிதடி எதற்குமே இடமிருக்கக்கூடாது; ஜீவகாருண்யமே எல்லாம் என்று இந்தக் கோளில் புவியிலிருந்து கோடானுகோடி மைல்களுக்கு அப்பால் வந்து குடியமர்ந்தவர்கள் செய்த முடிவு. இரு சூரியன்கள் என்பதால் தொடர்ந்து பிரகாசித்த இந்தக் கோளுக்கே அவர்கள் ஜோதி எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.
ஆயிரம் வருடங்கள் முன் புவியில் வாழ்ந்து ஜீவகாருண்ய கொள்கையை போதித்த இரண்டாம் புத்தரான அடிகளார் புனிதத்தவம் பெற உதவிய அருட்பிரகாசம் இந்த ஜோதி கோள் என பிற்காலத்தில் முழுக்க தனிப்பெருங்கருணைக்காக மனித வாழிடத்தை அமைத்தார்கள். புவியிலிருந்து புனிதப் பயணம் மேற்கொண்டு ஜோதிக்கு வருவதும் இந்த துபிவியர்களின் ஆக்கிரமிப்பால் நின்றுபோய் இரண்டு வருடங்கள் ஆகின்றன. துபிவியர்கள், துபிகோள் வாசிகள். உயிரற்றவர் போலவே இருக்கும் உயிரிகள். கைகளை விட நீண்ட நகங்கள் கொண்ட மூன்று கண் உள்ள கோரப் பிறவி கள். தலைக்கு பதில் முட்டை ஓடு. அதில் மூன்று திக்கிலுமாக பெருத்த விழிகள்.
அந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஏழெட்டு அடி உயரம். மனிதர்களை விட நாலைந்து மடங்கு பலம். அதனால் அவர்களால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியவில்லை. எதிர்ப்பவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். எத்தனையோ பேர் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். இது ஓர் ஆக்கிரமிப்புப் போர். ஜோதிக்கோளில் வாழ வேண்டியது யார்? புவியின் மனிதர்களா துபிவியக்கோள் உயிரிகளா? தனிப் பெருங்கருணை என்று கோளில் எந்த பிரபஞ்ச உயிரி வந்தாலும் விடாமல் மின் வெப்பமூட்டிகள் மூலம் சமைத்து உணவு தரும் பழக்கத்தை குடியமர்ந்த ஜீவகாருண்யர்கள் ஏற்படுத்தி விட்டதால் ஜோதிக்கோள் பற்றிய செய்தி எல்லா இடத்திலும் பரவிவிட்டது.
ஆனால், துபிவிய வான் கப்பல் வந்திறங்கியபோதும் உணவு நாடி அவர்கள் வந்ததாகக் கருதி அப்பாவிகளாக மனிதர்கள் வீழ்ந்தார்கள். அப்பாவும், அம்மாவும் இறந்து விடுவார்கள் என்று பூமிகாவோ ஆதவனோ எண்ணியதே இல்லை. அப்பா, புவி போக்குவரத்தில் புனித யாத்திரை அலுவலக உதவியாளர். அம்மா, மடப்பள்ளி போதகர். வெள்ளை உடுப்பில் கச்சிதமாய் வார்க்கப்பட்ட ஆசிரியை. அம்மா, பூமிகாவின் தாய் மட்டுமல்ல ஆசிரியையும் கூட. அருட்பிரகாசரின் நூல்களையும் ஜீவகாருண்யத்தின் அடிப்படைகளையும் குழந்தைகளான அவர்களுக்குப் போதித்தார்கள். திருவருட்பா ஒரு சட்ட நூல்போல பயன்பெற்றது. மெல்ல துபிவியர்களுக்கு எதிராக ஜோதிக்கோள்வாசிகள் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
பலவிதமாக அவர்கள் போராடிப் பார்த்து விட்டார்கள். மனிதர்களே குறைந்து போகும் அளவுக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூன்று துபிவிய பறக்கும் தட்டுகள் களமிறங்கி ஆயிரம் துபிவிய வீரர்கள் கொடூரத் தோற்றத்தோடு வந்திறங்கினார்கள். இன்று அதைவிட கூடுதலாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எங்கும் நிலவியது. மனிதர்கள் கொத்து கொத்தாக அங்கங்கே பதுங்கு குழிகளில் இருக்கிறார்கள். இரவு பகல் என்று எதுவுமில்லை. ஜோதிக்கோளில் எப்போதும் பகல்தான். பல மைல்கள் கடந்து காணவல்ல ஆற்றலோடு துபிவியர்களின் விழிகள் பரிணாமம் அடைந்திருந்தால் யாருமே தப்ப முடியாது.
ஆனால், அப்பா போன பிறகு அம்மா பூமிகாவையும் ஆதவனையும் அவர்கள் உருவாக்கிய பதுங்குமிடத்தில் உட்கார வைத்துப் பேசியவற்றை அவள் எப்படி மறப்பாள்? ‘‘நாம் எதிர்த்துப் போராட வேண்டும். உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பது அடிப்படை போதனை. அதற்காக எதிரிக்கு அஞ்சி கோழைத்தனமாக ஓடுவது ஜீவகாருண்யமல்ல. நாம் எதிர்த்துப் போராட வேண்டும்…’’பிறகு நீண்டநேரம் அவர் அழுதார். ‘‘உங்கள் அப்பா அதற்கு வழிகாட்டிச் சென்றார்… அவரது போராட்ட உத்திகள் அபாரமானவை…’’ உண்மைதான். தியான வெளிக்கு துபிவிய வீரர்கள் பலரை வரவழைத்து, தான் உருவாக்கிவைத்திருந்த பெரிய குழிகளில் விழவைத்த சூரர் அவர்.
அவைகளில் அப்படி விழுந்தவைகளுக்கு குழியிலிருந்து வெளிவரத் தெரியவில்லை. விரைவில் அவரது உத்தி தோற்க துபிவிய வீரர்களிடம் அவர் சிக்கினார். ஆதவனைப் போலவே அவரையும் அன்று இழுத்துச் சென்றார்கள். அப்படி அழைத்துப் போகிறவர்களை தங்களது பறக்கும் தட்டில் உள்ளே வைத்துக் கொன்று விடுகிறார்கள். “அதைவிட மேலான போராட்ட உத்தியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்…” என்றார் அம்மா அவர் புவி வரலாறு படித்தவர். பலரோடு சேர்ந்து புவிக்கு செய்தி அனுப்ப பலவாறு முயற்சி செய்தார். மூன்று பயணக்கலன்களில் அவர்கள் வந்து இறங்கியிருந்தார்கள். புவியாண்டு ஆறு ஓடிவிட்டது. அவர்கள் பிடியில் ஜோதிக்கோள் ஏறத்தாழ முழமையாக சிக்கிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பேர்தான். ஆயிரம் பேர் இருக்கலாம். எஞ்சி இருப்பது சொற்பம்தான். தன்னிகரில்லாத திரு அருட்பா கனவு இப்படி முடிந்துவிடவேண்டுமா? ஆதவனையாவது காப்பாற்றத் துடித்தாள் பூமிகா. இப்போது அவர்கள் அதிகம் தென்படாத தென்திசை பாராயண மதில்களின் ஓரமாக நடந்தாள் அவள். எட்டு திசைக்கும் அருட்பெருஞ்ஜோதி என பாராயணம் செய்தால் எதிரொலி வழங்கும் அதிசயப் பிரதேசம். அங்கே புவியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. கூடவே அம்மாவின் பங்களிப்பு. இனி இதுதான் அம்மா. ‘அம்மா உங்களது திருக்கரங்களால் உருவான இடத்தில் எனக்கு ஏதேனும் பதில் கிடைக்குமா…’ பூமிகாவின் மனம் விம்மியது.
அம்மாவின் வரலாற்று ஆவணக் காட்சியகம். புவி மனிதர்களின் தோற்றம், வளர்ச்சி குறித்த குறிப்பு காட்சிச்சாலை. யாருமே இல்லை. எல்லாமே வெறிச்சோடிப்போயின. பூமிகா குட்டிக் குழந்தையாக ஆறு ஏழு புவியாண்டுகள் முன் பார்த்திருக்கிறாள். திருப்பள்ளிச் சிறார்கள், பெரியவர்கள், பல கோள்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் என எப்போதும் இங்கே கூட்டம் இருக்கும். அம்மாவும் அவரது மாணவர்களும் அந்த அழகான இடத்தில் அறிவு சேவை செய்வார்கள். வந்தவர் யாவருக்கும் விளக்கங்கள். அம்மா இடுப்பில் பூமிகா இருப்பாள். தூளியை அம்மா இடுப்பில் கட்டியிருந்த காலம். படிக்கட்டுகள். அவற்றில் ஏறினால் பாராயண மதில்களின் மேல்மட்டத்திற்கு போகலாம். மெல்ல ஏறினாள்.
மதிலுக்கு மறுபுறம் அந்த உயர்ந்த பீடத்திலிருந்து பார்த்து சட்டென்று மறைந்து கொண்டாள் பூமிகா. அங்கே துபிவிய பறக்கும் தட்டுகள் மூன்றையுமே பார்க்க முடிந்தது. கூழ் போன்ற ஏதோ ஒரு திரவம் பறக்கும் கலன்களின் மேலிருந்து கீழ்நோக்கி ஊற்றுபோல ஓடிக்கொண்டே இருப்பதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது. கிர் என்று சப்தம். அவற்றில் ஒன்றில் ஆதவன் இப்போது அடைக்கப்பட்டிருக்கிறான். பூமிகா எத்தனை மணிநேரம் எத்தனை நாட்கள் அங்கே இருந்தாளோ, யாருக்குமே அவள் தென்படவில்லை. அவள் அங்குலம் அங்குலமாக விடைதேடி அந்த இடத்தைத் துழாவினாள். மடப்பள்ளியின் வித்தியாசமான மாணவி அவள். எதையும் ஒரு முறை செய்து பார்க்க கூசாதவள்.
அம்மாவோடு பல தடவை இதற்காக சண்டை கூட வந்தது உண்டு. மூங்கிலிலிருந்து புல்லாங்குழல் செய்ய முதலில் கற்றாள். பிறகு வாடிய பயிர்களுக்கு மறுபிறப்பு தர தன்னால், முடியும் என்று கூறி தழைகள், செத்தைகளை, உதிர்ந்த இலைகளை செடி போல உருவம் தந்து காட்சிக்கு வைத்தவள் அவள். எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. பலவாறு அங்கே சுற்றித்திரிந்த பூமிகா இந்தச் சூழலிலிருந்து ஜோதிக்கோளைக் காப்பாற்ற புவி மனிதர்களின் வரலாறு ஏதாவது விடை தருமா என்ற ஒற்றைத் தேடலில் ஈடுபட்டாள். பிறகு ஒரு நாள்… பூமிகா தனது தவத்திலிருந்து வெளியே வந்தாள்.
‘அருட்பெருஞ் ஜோதி… அருட்பெருஞ்ஜோதி…’ அவளது சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதானது. மூன்று பறக்கும் கலன்களுக்கும் சற்று அருகே வரை சென்றாள். மெல்ல மெல்ல உதிர்ந்த தழைகள்… செத்தைகள்… காய்ந்த மரத்துண்டுகள்… என குவித்துக்கொண்டே இருந்தாள். ஒன்றை அவர்கள் கவனிக்கவில்லை அல்லது ஒரு குட்டிச் சிறுமி என்ன ஆபத்தை பெரிதாகக் கொண்டுவரப் போகிறாள் என நினைத்திருக்கலாம். ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’… கலன்கள் மூன்றும் நின்ற வெளியைச் சுற்றிலும் வட்டம் போல அங்கங்கே குப்பை, இலை மேடு அமைத்து விளையாடுவது போல இருந்தது.
துபிவியர் சிலர் அந்த குழந்தை விளையாட்டை வேடிக்கை கூட பார்த்தார்கள். ஆனால், ‘அருட்பெருஞ் ஜோதி… அருட்பெருஞ் ஜோதி…’ என தொடர்ந்து அவள் பாராயணம் செய்வது மட்டும் நிற்கவே இல்லை. உணவு அருந்தினாளா? தண்ணீர் குடித்தாளா? எப்படி அவளால் இப்படி இருக்க முடிந்தது… இனி வரலாறுகள் அது பற்றி எழுதட்டும்…சட்டென்று ஒருநாள் அவள் ‘அருட்பெருஞ் ஜோதி… அருட்பெருஞ்ஜோதி…’ என வெறியோடு மிகச் சத்தமாக, ஏறத்தாழ முழக்கமிட்டபடியே வாடிய இலைக் குவியல் ஒன்றின் முன் அமர்ந்தாள். புவி மனிதர் வளர்ச்சி குறித்த காட்சிச் சாலையிலிருந்து, பூமியிலிருந்து கொண்டுவரப்பட்ட கூழாங்கற்களைக் கையில் வைத்திருந்தாள் பூமிகா.
‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி…’ அவள் கூழாங்கற்களை வேகமாகத் தேய்த்து உரசி தமது புவி முன்னோர்கள் கண்டடைந்த உண்மையான ஜோதியை வரவழைத்தாள். தீப்பொறிகள் செத்தைகளை எரிக்க… புகை கிளம்பி எரிய… ஜோதி வெளிப்பட்டது, அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!… எப்போது சுற்றிலும் ஒவ்வொரு இடத்திலும் குவிந்த சுள்ளிகளைப் பற்றவைத்தாளோ… ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி’ என்று சத்தமாகக் கூவியபடியே மனிதர்கள் தங்களது பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்து குவிந்தார்கள். துபிவிய பிறவிகள் தீயைப் பார்த்ததே கிடையாது.
அங்கும் இங்கும் ஓடியவற்றில் ஒன்று தைரியமாக ஜோதியைத் தொட்டதும் நீண்ட நகம் தீப்பற்றிட உடலில் சூடுபட்டு எங்கே பார்த்தாலும் ஓடி பொத்தென விழுந்து கருகியது… மற்றவை ஓடிய ஓட்டம்… ‘அருட்பெருஞ்ஜோதி… அருட்பெருஞ்ஜோதி…’ உயிரோடு இருந்த ஆதவனையும் இன்னும் சிலரையும் அவசரமாகத் தூக்கி வீசிவிட்டு அந்த மூன்று கலன்களும் அலறியபடியே விண்ணில் மறைந்தன. ஆதவன் ஓடிவந்து பூமிகாவைக் கட்டிக்கொண்டான். உண்மையான ஜோதி அங்கே வானளாவ எரிந்து மனிதனின் வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
– Apr 2018