அம்முவும் கேதார்நாத் தரிசனமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 7,398 
 
 

மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம்.

மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி பூர்விகம். இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் கூட்டுறவுவங்கி உத்யோகத்திலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே மாரடைப்பில் இறந்துபோனார். மூன்று மகன்கள். முதல்வன் மாசிலாமணிக்கு 40 வயதாகிறது. சற்று மந்தபுத்தி உடையவன். பள்ளிப்படிப்பை முடிக்காமல், யாரோடும் பழகாமல், அம்மாவைச் சுற்றியே, அவள் பாதுகாப்பிலேயே இந்த வயதிலும் இருப்பவன். எந்த வைத்தியமும் அவனைக் குணப்படுத்தவில்லை. தன் தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும் அளவில் தான் அவன் மூளைவளர்ச்சி இருந்தது. அதையும் அவன் அம்மா சொல்லச்சொல்லச் செய்வான். அடுத்தவன் வேலுமணி. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கட்டடவேலை, எலக்ட்ரிகல் வேலை என்று வெளியூரெல்லாம் சென்று பல வேலைகளை செய்துவந்தான். ஆனால், எந்தவேலைக்குச் சென்றாலும், ஒரேமாதத்தில் நிறுத்திவிட்டு, வந்தசம்பளத்தில் ஊர்சுற்றித் திரிந்துவிட்டுக், கைக்காசு கரைந்ததும் வீட்டுக்குத் திரும்பிவந்து பலநாட்கள் முடங்கிவிடுவான். எதிலும் நிலைகொள்ளாமல் மனம்போனபடி திரிவான்.

கடைசிபையன், ராஜாமணி. கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வேலைதேடிக் கொண்டிருந்தான். அவன் அப்பா வேலை செய்த கூட்டுறவு வங்கியிலேயே அவனை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். அவனுடைய சம்பாத்தியத்திலும், ஊரிலிருந்த வயற்காட்டைக் குத்தகைக்கு விட்டதில் வரும் பணத்தையும் வைத்துதான் அவர்கள் குடும்பம் நடந்துகொண்டிருந்தது.

மகன்கள் மூவரும் மங்களம்மாளிடம் அன்போடு நடந்துகொண்டனர். கணவர் உயிரோடு இருந்த காலத்திலேயே, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து பார்க்கவேண்டும் என்று மங்களம்மாள் எத்தனித்தார். பெரியவனுக்கு புத்திசுவாதீனம் இல்லாததாலும், அடுத்தவன் நாடோடிபோல் ஒழுங்கான வேலைஇன்றி சுற்றித்திரிந்ததாலும், அவர்களுக்குப் பெண்கொடுக்க யாரும் முன்வரவில்லை. ‘யார் செய்த செய்வினையோ, அல்லது நாங்கள் செய்த பாவமோ’என்று மங்களம்மாள் மிகவும் மனவேதனைப் பட்டார். சின்னவனுக்காவது கல்யாணம் நடத்திப்பார்க்கலாம் என்று யோசித்தபோது, கணவர் இறந்து போனார். சபிக்கப்பட்ட குடும்பம் என்று உறவினர்களும் அவர்களைத் தள்ளிவைத்தனர்.

தன் சம்பாத்தியத்தில் அக்கறையோடு பார்த்துக்கொண்டாலும், சின்னவன் குடும்பசூழ்நிலையால் எப்போதும் சிடுசிடுவென்றிருப்பான். அவனைக் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தியும், பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவனுக்கு வரும் மனைவி இந்தவீட்டின் நிலைமைகளை அனுசரித்து நடந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. மேலும், கல்யாணமாகாத அண்ணன்கள் இருவர்முன், தான் மட்டும் மனைவியுடன் குடும்பம் நடத்துவது சரிப்பட்டு வராது என்று திடமாக நம்பினான். கல்யாணம் செய்துகொண்டு, இவர்களை விட்டுவிட்டுத், தனிக்குடித்தனம் செல்லவும் அவனுக்கு விருப்பமில்லை. பொருளாதாரமும் இடம்தராது.

நிம்மதி இழந்த குடும்பம். ஆதரவு சொல்லவும் யாருமற்ற குடும்பம். எந்த அரவமும், ஆரவாரமும் இன்றி நாட்கள் கழிந்தன. மங்களம்மாளுக்கு தெய்வவழிபாடு ஒன்றே ஆறுதல் அளித்தது. தன் குறைகளை எல்லாம்கடவுளிடம் முறையிடுவார். ஊரைச்சுற்றியிருந்த அத்தனைக் கோவில்களுக்கும் சென்று வேண்டிவருவார். கூடவே தன்மகன்களையும் அழைத்துச்செல்வார். ராஜாமணிக்கு விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், தமிழ்நாட்டிலுள்ள பல சிவஸ்தலங்களையும், அறுபடைவீடுகளையும், திவ்யதேசங்களையும், சென்று தரிசனம் செய்வது மட்டுமே அவர்களின் மனஉளைச்சலுக்கு மருந்தாக அமைந்தது.

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் முக்தித்தலங்களுக்குச் சென்றுவரவேண்டும் என்று மங்களம்மாளுக்கு விருப்பம். கேதார்நாத் மலைக்கோவிலில் தரிசனம்செய்துவிட்டு, பத்ரிநாத்தில் பத்ரிநாராயணனை வேண்டிக்கொண்டு, அங்கு ப்ரம்ம கபாலத்தில் இறந்த கணவருக்குப் பிள்ளைகள் கையால் பிண்டப்பிரதானம் இடவேண்டும் என்று பிரார்த்தனை செய்திருந்தார். அங்கு சென்றுவந்தவர்கள் யாரோ மங்களம்மாளுக்கு விவரத்தை சொல்லி இருந்தனர். ரயிலிலும், பஸ்ஸிலும் பத்துநாட்கள் போல பிரயாணம். நான்கு பேருக்கு லட்சரூபாயாகும். அவ்வளவுதூரம் சென்றுவர உடல்நிலை இடம்தருமா? மகன்கள் உடன்வர ஒப்புக்கொள்வார்களா? பெரியவன் ஒழுங்காக வருவானா? லட்சரூபா பணத்திற்கு எங்கேபோவது? என்றெல்லாம் எண்ணி மலைத்தார். மூன்று வருடங்களாக நிலக்குத்தகைப் பணத்தில் சீட்டுக்கட்டி சேமித்த பணத்தை வங்கியில் போட்டு வந்தது, எண்பதாயிரம் வரை சேர்ந்திருந்தது. ராஜாமணியிடம், வங்கியில் பத்துநாட்களுக்கு லீவு எடுக்கச்சொல்லி, பணத்தை அவனிடம் கொடுத்து கேதார்நாத் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார். இந்த பணத்தை இப்போ செலவு பண்ணனுமா என்று கேட்ட மகனிடம், ‘இது ஒன்னுதாண்டா என்ஆசை. உடம்பும் கைகாலும் நல்லா இருக்கும்போதே, பத்ரிநாத்துக்கும், கேதார்நாத்துக்கும் போயிட்டு வந்திடணும். அப்புறம் உடம்பு ஓஞ்சிபோனதும், வசதி இருந்தாலும் போகமுடியாது. அங்கே போய்ட்டு வந்தா, நமக்கு நல்லது நடக்கும்னு என் மனசுக்குப்படுது . தயவுசெஞ்சி, வேணாம்னு சொல்லாத ராஜா’என்று கெஞ்சிய தாயின் வார்த்தையைத் தட்டமுடியவில்லை அவனால். சதர்ன் ட்ராவல்ஸில் எட்டுநாட்கள் ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பேக்கேஜ் டூருக்கு ஏற்பாடு செய்தான்.

நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை வந்து, ஜீடி எஸ்பிரஸில் பிரயாணம் செய்து புதுடில்லி வந்தடைந்தனர். ஒருநாள் முழுதும் காரில் டில்லி நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு சதர்ன் ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்த வோல்வோ பஸ்ஸில் ஏறினர். பிரயாணத்தின்போது மூத்தவனை அம்மாவின் கைப்பிடியிலும், அடுத்தவன் ராஜாமணியின் கண்பார்வையிலும் வைத்துக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டனர். இரவெல்லாம் பஸ்ஸில் பயணம் செய்து அதிகாலையில் ஹரித்வார் வந்துசேர்ந்தனர். ஏற்பாடு செய்திருந்த ஓட்டல் அறையில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, குளித்துமுடித்து, காலைச்சிற்றுண்டி சாப்பிடும்போதுதான், அந்த பஸ்ஸில் பயணித்த மற்றவர்களுடன் அறிமுகம் செய்துகொண்டார் மங்களம்மாள்.

நான்கு தமிழ்க்குடும்பங்களும், இரண்டு தெலுங்கு, இரண்டு கன்னடம், ஒரேஒரு பஞ்சாபி குடும்பத்தினரும் அந்த பஸ்ஸில் யாத்திரைக்கு வந்திருந்தனர். வந்தவர்களில் பெரும்பாலும் வயதானவர்களே அதிகம். சிறுவர்சிறுமியர் இல்லை. ஒரு தமிழ்க்குடும்பத்தில் மட்டும் கணவன்மனைவியுடன் ஒரு சின்னப்பெண் வந்திருந்தாள். அந்தப்பெண் சற்று வித்தியாசமாக இருந்தாள். உடல் பருவப்பெண்ணுக்கான வளர்ச்சி அடைந்திருந்தது, ஆனால் முகமும், பேசிப்பழகிய விதமும் சின்னக்குழந்தை போலிருந்தது.

கூட்டமாக எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்தத் தமிழ்க்குடும்பம் மட்டும் சற்றுதள்ளி, தனியாக ஒருடேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மங்களம்மாள் எல்லோரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கடைசியாக அந்தப்பெண் அருகில் உட்கார்ந்து அவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.

அந்த சின்னப்பெண்ணின் அம்மா “என் பேரு கற்பகம். இவ என் பொண்ணு அம்பிகா. அம்முன்னு கூப்பிடுவோம். பதினான்கு வயதாகிறது. பிறந்ததிலிருந்தே ‘டௌன் சின்ட்ரோம்’. குழந்தை மாதிரி நடந்துப்பா. ஸ்பெஷல் ஸ்கூல்லே படிக்கிறா. அவளுக்காகவே நானும் அதேஸ்கூல்லே டீச்சரா வேலைசெய்றேன். அம்முவோட அப்பா ஒரு ஆடிட்டர் ஆஃபீஸ்லே வேலை பார்க்கிறார். அம்முவுக்காக வேண்டிட்டுதான் இந்த யாத்திரைக்கு வந்திருக்கோம்”என்றுசொன்னாள்.

மங்களம்மாள் அம்முவைக் கவனித்தார். மற்றவர் பேசுவது புரிந்துகொண்டு, மெதுவாக பதில் சொன்னாள். குரல் தடித்திருந்தது. நடப்பது , பேசுவது , உண்பது எல்லாமே மெதுவாகவும், தாமதித்தும் இருந்தது. முகத்தில் ஒரு புன்சிரிப்பு எப்போதும் நிலை கொண்டிருந்தது. நேராக மற்றவர் கண்களைப் பார்த்து பேசவில்லை. மங்களம்மாள் தன் குடும்பத்தைப் பற்றி கற்பகத்திடம் சொல்லி “எல்லாரும் அவங்க அவங்க குறைக்கு ஒரு வழி கிடைக்காதான்னு வேண்டிக்கிட்டுத்தான் வராங்க. எல்லாத்தையும் அந்த ஆண்டவன் பார்த்துப்பான் தாயி ” என்றார்.

ஹரித்வாரிலிருந்த கோவில்களை பார்த்துவிட்டு, கங்கையில் மூழ்கிக் குளித்துவிட்டு, மாலையில் கங்கா ஆரத்தி பார்த்தார்கள். மறுநாள் காலையில், அங்கிருந்து ரிஷிகேஷ் கிளம்புவதற்கு, பயணிகள் எல்லோரும் தங்கள் பெட்டிகளை பஸ்ஸின் கீழ்தளத்தில் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தன் அம்மாவுடன் நின்றிருந்த அம்மு, திடீரென்று பஸ்ஸைச் சுற்றிவந்து சாலையைக் கடக்கமுயன்றாள். பெட்டிகளை பஸ்ஸில் ஏற்ற கணவனுக்கு உதவிக்கொண்டிருந்த கற்பகம், இதைக் கவனிக்கவில்லை. சாலையில் சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டே வேகமாக ஒரு ஜீப் வந்தது. அதைக் கவனிக்காமல் அம்மு மெதுவாக நடந்து சாலைக்குக் குறுக்கே நடந்துகொண்டிருந்தாள்.

மாசிலாமணியின் கையைப்பிடித்தபடி, மங்களம்மாள் தங்கள் பெட்டிகளை பஸ்ஸில் ராஜாமணி எடுத்து வைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையை உதறிவிட்டு ஓடிய மாசிலாமணி, சாலையின் நடுவிலிருந்து அம்முவின் கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான். மயிரிழையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஜீப்பின் டிரைவர் ‘ஹே லடுக்கி, அந்தி ஹை க்யா?’ என்று அம்முவைத் திட்டிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். இழுத்தவேகத்தில் கீழேவிழுந்த அம்முவை அருகிலிருந்தவர்கள் எழுப்பி நிற்கவைத்தனர். அடி எதுவும் படவில்லை. கையில் லேசான சிராய்ப்புதான். அம்மு சிரித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள், சத்தம் கேட்டு பயணிகள் திரும்பிப்பார்த்தனர். நடந்த விவரமறிந்த, கற்பகம் படபடத்தபடி ஓடிவந்து, ‘ஏண்டி, ரோட்டை எதுக்குடி க்ராஸ் பண்ணே, கடன்காரி’என்று அம்முவின் தோளில் அடித்தாள். அப்போதும் அம்மு சிரித்தபடி நின்றாள். “இவர் தான் அந்த பெண்ணைக் காப்பாத்தினார்” என்று அங்கிருந்தவர்கள் மாசிலாமணியைப் பாராட்டினார்கள். அம்முவின் அப்பா மாசிலாமணியிடம் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்’என்றார். கற்பகம் அம்முவிடம், ‘இனிமே இப்படி தனியே போகாதே, இது நம்ம ஊரில்லே. மாமாவுக்கு தேங்க்ஸ் சொல்லு, அம்மு”என்றாள். ‘தேங்க்ஸ் மாமா’ என்று மெல்லிய குரலில் சொன்னாள் அம்மு. மாசிலாமணி அவள் தலையை வருடிவிட்டு, எதுவும் பேசாமல் தன் அம்மாவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டான்.

ரிஷிகேஷ் போகும் வழியில் தன் குடும்ப விவரங்களை கற்பகத்திடம் சொன்னார் மங்களம்மாள். தங்கள் குறைகளை பெருமூச்சுடன் பகிர்ந்து கொண்டனர். ‘எல்லாத்துக்கும் விடிவுகாலம் வரும் மாமி, கவலைப்படாதீங்கோ’ என்றாள் கற்பகம்.

ரிஷிகேஷில் இருந்த கோவில்களுக்குச் செல்லும் போதும், லக்ஷ்மன் ஜூலா பாலத்தைக் கடக்கும்போதும், இவ்விரு குடும்பங்களும் சேர்ந்தே சென்றனர். அம்மு மெதுவாக நடந்து வரும்போது, அவள் வேகத்துக்குத் தக்கபடி மெதுவாகவே மாசிலாமணியும் வந்தான். அவள் எங்காவது உட்கார்ந்தால், இவனும் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். மங்களம்மாள் அவனை ‘மாசி, மாசி’ என்றழைப்பதைப் பார்த்து, அம்முவும் மெல்லமெல்ல, ‘மாசிமாமா, மாசிமாமா’என்றழைத்து அவனிடம் பேச ஆரம்பித்தாள். அவள் சிரித்தபடி குழந்தை மாதிரி பேசுவதைக் கவனமாகக் கேட்டு தலையசைப்பதும், கைதட்டி சிரிப்பதுமாக இருந்தான் மாசிலாமணி. அவள் கேட்கும்போது, தன் அம்மாவிடமிருந்த கைப்பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டையும், குடிநீரையும் அம்முவுக்குக் கொடுத்தான். அம்முவின் அப்பாவும், ராஜாமணியும் வழிநெடுக தங்கள் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டே வந்தார்கள். இரவு இரு குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.

மறுநாள் காலையில் பஸ் ருத்ரப்ரயாக் நோக்கிப் புறப்பட்டது. பயணம் முழுவதும் அம்மு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மாசிலாமணியுடன் பேசிக்கொண்டே வந்தாள். புரிந்தோ புரியாமலோ அவன் சிரித்தபடி தலையசைத்துக் கொண்டே வந்தான். அவ்வப்போது வளைந்து நெளிந்து பெருகி, தொடர்ந்து வந்து கொண்டிருந்த கங்கை நதியையும், மலைகளையும் , அதனூடே தெரியும் பாதைகளையும் அவளுக்குக் காட்டினான்.

ருத்ரப்ரயாகில் அலக்நந்தா நதியும், மந்தாகினி நதியும் இணையும் காட்சியைக்கண்டு பரவசமாயினர். வழியில் இருந்த கரடுமுரடான இறங்குபாதையில் அடம்பிடித்து இறங்கிச்சென்று, ஒரு பாட்டிலில் நதிநீரைப் பிடித்துக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தான் மாசிலாமணி. மீண்டும் இறங்கிச் சென்று பாட்டிலில் நீரைப்பிடித்து கொண்டுவந்து அம்முவிடம் கொடுத்தான். மாலை ராம்பூரை அடைந்து, இரவு விடுதியில் தங்கினர். மறுநாள் கேதார்நாத்திற்குப் பயணம்.

மங்களம்மாளும் மாசிலாமணியும் குப்தகாசியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்திற்குச் சென்றுவர ஏற்கனவே டிக்கட் எடுத்திருந்தார்கள். மற்ற இருமகன்களும் கௌரிகுண்டிலிருந்து, குதிரைசவாரியாக கேதார்நாத் சென்றுவர எண்ணி இருந்தனர். அம்மு குடும்பத்தினரும் அவர்களுடன் குதிரைசவாரி மூலம் சென்றுவர முடிவுசெய்தனர்.

அதற்கேற்ப, விடிகாலையிலேயே மங்களம்மாள், மாசிலாமணி தவிர்த்து, மற்றவர்கள் கௌரிகுண்டிற்குப் புறப்பட்டனர். தானும் அவர்களுடன் வருவதாக மாசிலாமணி முரண்டு பிடித்தான். ‘எடுத்த ஹெலிகாப்டர் டிக்கெட்டை மாற்றமுடியாது, நீ தான் அம்மாவுக்குத் துணையாக போய்வரணும்’என்று ராஜாமணி உறுதியாகச் சொன்னதும்அடங்கினான்

மதியம் இரண்டுமணி அளவில், மங்களம்மாளும் மாசிலாமணியும் குப்தகாசியிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். இருபது நிமிடங்களில் கேதார்நாத் மலைக்கு வந்து சேர்ந்தனர். ஹெலிகாப்டரைவிட்டு வெளியே இறங்கியதும், குளிர்காற்று குப்பென்று முகத்தில் அறைந்தது. மூச்சை அடைத்தது. சிறிதுதூரம் வந்து, பையிலிருந்த சால்வையை எடுத்து முகத்தைச் சுற்றிக்கொண்டு, மங்களம்மாள் எதிரே நிமிர்ந்து பார்த்தார். கேதார்நாத் கோவில் கோபுரம் தெரிந்தது. அதன் பின்புறம் உயர்ந்து ஓங்கி நின்ற இமயமலை. அதன் சிகரத்தில் வெண்பனி. எதிர்திசையிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்கள் சிகரத்தின் வெண்பனியின்மீது பட்டுத்தெறித்த வெளிச்சம். மங்களம்மாளுக்கு கண்கள் கூசியது. குளிருடன் ஒரு சிலிர்ப்பு அவர் உடலில் இறங்கியது. கண்களைமூடி, ‘ஈஸ்வரா! எங்களுக்கு நல்ல வழி காட்டுப்பா!’ என்று மனதில் வேண்டிக்கொண்டு, மாசிலாமணியின் கைப்பற்றியபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். அந்தக்கணத்தில், அவர் கையை விட்டுவிட்டு, வெறி வந்தது போல் ‘அம்மு அம்மு’ என்று கத்தியபடி ஓட ஆரம்பித்தான் மாசிலாமணி. ‘மாசி நில்லுடா, எங்கேடா ஓடறே?’ என்று கேட்டபடி அவன் பின்னால் மூச்சிரைக்க வேகமாகப் போனார் மங்களம்மாள்.

மாசி எதிரே இருந்த ஆர்மி மருத்துவ காம்பை நோக்கி ஓடினான். அங்கே அம்முவை மடியில் வைத்துக்கொண்டு கற்பகம் அழுதுகொண்டிருந்தாள். அம்முவின் அப்பா அவள் பக்கத்திலிருந்தார். ஆர்மி டாக்டரும் ஒரு நர்ஸும் அம்முவுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்திக் கொண்டிருந்தார்கள். மாசிலாமணியையும், மங்களம்மாளையும் பார்த்ததும், பெருங்குரலிட்டு அழஆரம்பித்தாள் கற்பகம். ‘ஐயோ, என்ன ஆச்சு, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க? கோவிலுக்கு போகலையா? அம்முவுக்கு என்னஆச்சு?” என்று கேட்டார் மங்களம்மாள்.

‘குதிரையில் ஆறு மணிநேரம் ஆடிஆடி வந்தது, அம்முவுக்கு ஒத்துக்கலே, மாமி. வயிறு வலிக்குதுன்னு சொன்னா, ரெண்டு வாட்டி வாந்தி எடுத்தா. காலெல்லாம் உரசினதுலே அவளுக்கு ரத்தப்போக்கு வந்துடுத்து. அவளுக்கு அது வர நாள் இல்லே, ஆனால் வந்துட்டுதுன்னு தோன்றது. மயக்கமா விழுந்துட்டா மாமி’ என்று மங்களம்மாள் மட்டும் பார்க்கும்படி அம்முவின் சல்வாரைக் காண்பித்தாள் கற்பகம். ‘இப்படி இருக்கும்போது நான் கோவிலுக்கு எங்கே போறது? அவங்கப்பா தான் ஓடிப்போய் ஆர்மி டாக்டரைக் கூட்டிவந்தார். இங்கே அவளை ஸ்ட்ரெட்ச்சர்லே வச்சி தூக்கிட்டு வந்தோம். அம்மு இன்னும் கண்ணைத்தெறக்கலே, எனக்கு பயமா இருக்கு மாமி’என்று அழுதாள். ‘என் பிள்ளைங்க உங்ககூட தானே வந்தாங்க, அவங்க எங்கே?’ என்று கேட்டார் மங்களம்மாள். ‘நாங்க மெதுவா நிறுத்தி நிறுத்தி வந்தோம். நீங்க முன்னாடி போங்க, நாங்க, மெதுவா வரோம்னு நான்தான் அவங்களை முன்னாடி அனுப்பிவெச்சேன். அவங்க இந்நேரம் கோவிலுக்குப் போயிருப்பாங்க ’ என்றார் அம்முவின் அப்பா.

அம்முவுக்கு நாடித்துப்பிடிப்பு, இதயத்துடிப்பு பரிசோதித்த டாக்டர், ‘நான் இங்கே முதலுதவி சிகிச்சை மட்டும்தான் செய்யமுடியும். நீங்க சீக்கிரம் கீழே கூட்டிட்டுபோய் ஹாஸ்ப்பிடல்லே ட்ரீட்மெண்ட் குடுங்க. இங்கே ஆக்ஸிஜன் கம்மியா இருக்கு. ரொம்ப நேரம் இங்கே வச்சிருக்கக்கூடாது’ என்றார். அம்முவின் அப்பா ஹெலிகாப்டர் ஆபிசுக்கு ஓடினார். திரும்பி வந்து, ‘ஹெலிகாப்டர்லே போக டிக்கெட் இல்லே, இப்போ உடனே வாங்க முடியாது. நிறைய பேர் க்யூவில் இருக்காங்களாம். ஆர்மி டாக்டர் சொன்னா, எமர்ஜென்சிக்காக பேஷன்டையும் உதவிக்குக் கூட ஒருத்தரையும் ஹெலிகாப்டர்லே அலவ் பண்ணுவாங்களாம்’ என்றார். அம்மு லேசாக அசைந்தாள். அவள் தலை ஒருபுறமாக சாய்ந்து, மாஸ்க் வழியே வாயிலிருந்து நுரை தள்ளியது. நர்ஸ் துடைத்து விட்டாள் . மாசிலாமணி அம்முவின் கைகளைப் பிடித்துக் கொண்டான். கற்பகம், ‘அம்மு, அம்மு, என்னைப்பாருடி ’ என்று அழுதாள் .

அம்முவின் அப்பா ஆர்மி டாக்டரை வேண்டிக்கேட்டு ஹெலிகாப்டரில் அம்முவை உடனே அழைத்துச்செல்ல கடிதம் வாங்கினார் . கடிதத்தை ஹெலிகாப்டர் ஆபிஸிற்குச் சென்று காட்டினார் . அவர்கள் அடுத்துவரும் ஹெலிகாப்டரில் செல்ல தயாராகும்படி சொன்னார்கள் . விஷயத்தை கற்பகத்திடம் சொல்லி, அம்முவை எழுப்பி உட்காரவைக்கச் சொன்னார்

.அம்முவை உட்காரவைப்பதற்குப் பெரும்பாடாகி விட்டது. கற்பகத்தால் முடியவில்லை . மங்களம்மாவும் கைகொடுத்தார். ‘இவளை, நான் மட்டும் தனியா எப்படிக் கூட்டிட்டுப் போவேன்? ஹெலிகாப்டர்லே போகும்போது தலைசுத்தும், எதுன்னா ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன். இவளால் உட்காரகூட முடியலே. சாஞ்சி சாஞ்சி விழறாளே, எனக்கு பயமா இருக்கே” என்று அழுதாள். அம்முவின் அப்பா எரிச்சலடைந்து ‘எதுக்கு இப்போ ஒப்பாரி வக்கிறே?’ என்றுகத்தினார் .

மாசிலாமணி, ‘அம்மா நீயும் வா, நாம் கூட போகலாம்” என்றான். மங்களம்மாள். ‘கோவிலுக்குப் போகணுமேடா, அதுக்குத்தானே இவ்ளோ தூரம் வந்தோம்’ என்று சொல்ல வந்ததை மனதில் அடக்கிக் கொண்டார். இவ்வளவு நடந்தபின், இனி குளிக்காமல் கோவிலுக்குப் போகமுடியாது. இந்தக் குளிரில் எங்கே போய் குளிப்பது. இந்த இக்கட்டான நேரத்தில், ஒரு சின்னப்பெண்ணிற்கு உதவுவதை விட சாமிதரிசனம் ஒன்னும் முக்கியமில்லை’ என்ற முடிவுக்கு வந்தார் .

அம்முவின் அப்பாவிடம், ‘நீங்க எப்படியாவது சீக்கிரம் கீழே வந்துடுங்க. நாங்க அம்முவைக் கூட்டிக்கிட்டுப் போறோம். மாசி என்கூட வரட்டும். அவனைத் தனியாவிட்டுட்டுப் போகமுடியாது. கீழே போய் விசாரிச்சு அங்கே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போறோம்‘ என்றார். அம்முவின் அப்பா ஒன்றும் செய்வதறியாது தலையாட்டினார். அடுத்த ஹெலிகாப்டர் வந்தது. அதிலிருந்த பயணிகள் இறங்கியதும், மாசிலாமணி அம்முவை அலேக்காகத் தூக்கிக்கொண்டு அதில் ஏறினான். கற்பகமும் மங்களம்மாளும் அவனைப் பின்தொடர்ந்து ஏறினர் .

ஹெலிகாப்டர் குப்தகாஷியில் இறங்கியதும், மேலிருந்து தகவல் தெரிவித்திருந்ததால், தயாராக இருந்த ஆம்புலன்சில் அம்முவை ஏற்றிக்கொண்டு அரசுமருத்துவமனைக்குச் சென்றனர். அம்முவின் உடல்நிலைப்பற்றியும், மற்றவிவரங்களையும் கேட்டறிந்தபின், அங்கிருந்த டாக்டர் உரியசிகிச்சையை மேற்கொண்டார் . ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. கற்பகமும் மங்களம்மாளும் கட்டில் பக்கத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர். மாசிலாமணி அம்முவின் கட்டிலில் அவள்காலருகில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கற்பகம் மங்களம்மாளின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இவ்ளோ தூரம் வந்தும், உங்களால சாமிதரிசனம் பண்ணமுடியாம போய்டுச்சே. எங்களுக்குதான் குடுப்பினை இல்லை. எங்களால் உங்களுக்கும் தடங்கலாயிடுச்சே’ என்று அரற்றினாள். ‘அதெல்லாம் பரவாயில்லே, தாயி. ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வெச்சிருப்பான். கோவிலுக்குப் போய் பார்த்தாதானா சாமிதரிசனம்? அந்த கேதர்நாத் மலையே சாமிதானே. அந்தமலையை தரிசனம் பண்ணவெச்சானே. அதுவே போதும். அம்முவுக்கு உதவறதுக்கு மாசியை என்னோட அனுப்பிவெச்சான்னு நெனச்சிக்கிறேன். அவன் மனசு வெச்சா இன்னொரு சந்தர்ப்பம் வராமலாபோகும்?. பார்க்கலாம். பொண்ணு பொழச்சி எழுந்தா போதும்’ என்று கேதார்நாத் மலை இருந்த திக்கை நோக்கி வணங்கினார் மங்களம்மாள் .

சிறிதுநேரத்தில் அம்மு கண்விழித்துப் பார்த்தாள். ‘அம்மா, மாசிமாமா ’ என்றபடி அவர்களுடைய கைகளை பற்றிக்கொண்டாள். கற்பகம் அவளை அணைத்துக் கண்ணீர்விட்டாள். ‘அப்பா எங்கம்மா?’ என்றாள் அம்மு. ‘அப்பா குதிரையில் வந்திண்டிருக்கார் செல்லம். இப்போ வந்துடுவார். நாம ஹெலிகாப்டரிலே சீக்கிரமா வந்துட்டோம். இந்த மாமியும், மாசிமாமாவும் தான் நம்மளை ஹெலிகாப்ட்டர்லே கூட்டிண்டு வந்தா. நீ ரெஸ்ட்எடு கண்ணு’ என்றாள் கற்பகம். ‘நாம்ப ஹெலிகாப்டரிலே பறந்து வந்தோமா?’ என்று சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்தாள் அம்மு.

இரவு அம்முவின் அப்பாவும் , மங்கம்மாளின் இருமகன்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து விவரங்களைக் கேட்டறிந்தனர். அம்முவின் அப்பா , மங்களம்மாளுக்கும் மாசிலாமணிக்கும் நன்றிதெரிவித்தார். அவர்கள் சாமிதரிசனம் செய்யவில்லையே என்று வருத்தப்பட்டார். மறுநாள் மீண்டும் ஹெலிகாப்டரில் கேதார்நாத் சென்று தரிசனம் செய்ய டிக்கட் எடுக்கட்டுமா என்று கேட்டார். ‘வேண்டாம், உடனே ஹெலிகாப்டர் டிக்கட் கிடைக்காது. மேலும் நாளை காலையில், பத்ரிநாத் செல்ல பஸ் புறப்பட்டுவிடும் . நமக்காக பயணத்திட்டத்தை மாற்றமாட்டார்கள் .’ என்றான் ராஜாமணி .

மறுநாள் காலை பத்ரிநாத்துக்குப் பயணமானார்கள். அம்மு உடல் சற்று தேறிஇருந்தது. வழிமுழுவதும், அம்முவுக்கு சிரமம் ஏற்படும்போதெல்லாம், அவள் அம்மாவுடன், மங்களம்மாளும் இறங்கிப்போய் உதவிசெய்தார். இரவு பத்ரிநாத் வந்தடைந்தனர்.

விடியற்காலையில் ஆவிபறந்தும், சூடுதெரியாத வெந்நீரில் தலைக்குக் குளித்துவிட்டு தன்மகன்களுடன் பத்ரிநாராயணன் கோவிலுக்குப் புறப்பட்டார் மங்களம்மாள். அம்முவின் குடும்பம் கோவிலுக்கு வரவில்லை. கோவிலுக்கு அருகில் தப்தகுண்ட சுனையில் வந்த வெந்நீரைத் தலைக்குத் தெளித்துக்கொண்டு, கோவிலுக்குச் சென்று சாமிதரிசனம் செய்தார். கோவிலின் அருகில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அலக்நந்தா நதிக்கரையோரம் ப்ரம்மகபாலத்தில், இறந்த கணவருக்கு மகன்களின் கைகளால் பிண்டப்பிரதானம் செய்வித்தார். தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளுக்கு ‘எல்லாம் உன் கருணை ’ என்றுகூறி கையெடுத்துக் கும்பிட்டார்.

அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். மறுநாள் அம்மு நன்றாகத் தேறியிருந்தாள். டில்லி நோக்கி பஸ் புறப்பட்டது. பயணத்தின்போது எடுத்தப் புகைப்படங்களை இரண்டு குடும்பத்தனரும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தனர். வழியிலிருந்த கோவில்களையும், மடங்களையும் பார்த்துக்கொண்டு நள்ளிரவில் டில்லி வந்துசேர்ந்தனர். சென்னையில் அம்முவை வழக்கமாகப் பார்க்கும் டாக்டரிடம் உடனே அழைத்துச்சென்று காட்டவேண்டும் என்பதால் மறுநாள் அம்முவின் குடும்பத்தினர் , ஏற்கனவே செய்திருந்த ரயில்டிக்கட்டை கான்சல் செய்துவிட்டு, காலையிலேயே விமானத்தில் சென்னைக்குப் போக முடிவுசெய்தனர். மங்களம்மாள் குடும்பத்தினர் சென்னைக்கு ரயிலில் செல்ல ஏற்பாடாகிஇருந்தது. அம்முவின் பெற்றோர் மங்களம்மாளிடம், ‘தெய்வம் போல் வந்து துணை இருந்தீங்க, எங்களால் தான் கேதார்நாத் சாமிதரிசனம் பண்ணமுடியாம போயிடுத்து. சென்னைக்கு வந்து எங்கவீட்டில் சாப்பிட்டுட்டுதான் போகணும் மாமி’ என்று வேண்டினர். அம்முவும், ‘மாசிமாமா, எங்கவீட்டுக்கு வாங்கோ’ என்றாள். ராஜாமணியின் முகத்தைப் பார்த்தார் மங்களம்மாள். மாசிலாமணி, ’அம்மு வீட்டிற்குப் போலாம்மா’ என்றான். ‘சரி, போய்ப் பார்த்துட்டு, ராத்திரி ரயில்லே நெல்லைக்குப் போகலாம்’ என்றான் ராஜாமணி. அம்மு வீட்டு விலாசம் வாங்கிக் கொண்டான். அம்மு குடும்பத்தினர் இவர்களிடம் விடைபெற்று விமானநிலையத்திற்குச் சென்றனர் .

சென்னை சென்றடைந்ததும், ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துக் குளித்துவிட்டு, அம்முவின் வீட்டிற்குக் கிளம்பினர். அப்போது வேலுமணி, தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு ரெண்டுமூன்று நாட்கள் கழித்து ஊருக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, மங்களம்மாளிடம் கொஞ்சம் பணம் வாங்கிகொண்டு கிளம்பினான். ஆட்டோவைப் பிடித்து மங்களம்மாள், மாசிலாமணி, ராஜாமணி ஆகியோர், மைலாப்பூரிலிருந்த அம்முவின் வீட்டிற்கு வந்தார்கள் .

அம்முவின் பெற்றோர் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அம்முவை அதற்கு முந்தியநாள், டாக்டரிடம் அழைத்துப்போய் காண்பித்ததாகவும், அவர் பயப்படும்படி ஒன்றுமில்லை, வெறும் உடற்சோர்வுதான், ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று சொன்னதாக, கற்பகம் தெரிவித்தாள். அம்மு மங்களம்மாளுக்கும், மாசிலாமணிக்கும் தன் பொம்மைகள், புத்தகங்கள், அவள் வரைந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் காட்டி மகிழ்ந்தாள். மதியசாப்பாடு முடித்ததும், ‘சரிம்மா, கிளம்பலாம், லாட்ஜுக்கு போய் பெட்டி எடுத்துக்கொண்டு எழும்பூர் போய் ரயிலேறணும்’ என்றான் ராஜாமணி. ‘மாமி, நீங்க ஊருக்கு உடனே போய் என்ன பண்ணப்போறீங்க? ரெண்டு நாள் எங்களோட தங்கிட்டுதான் போங்களேன்’ என்றாள் கற்பகம். ‘இல்ல தாயி, என் பையன்களை விட்டுட்டு நான் இருந்ததில்லை. ராஜாமணி வேலைக்குப் போகணும். நாங்க கெளம்பறோம்’ என்றார் மங்களம்மாள். ‘சார், நீங்க வேணா ஊருக்குப் போங்க, அம்மாவும் மாசிலாமணியும் எங்களோடு ரெண்டுநாளாவது தங்கி ரெஸ்ட் எடுத்திட்டு வரட்டும். நான் அவங்களை பத்திரமா ஊருக்கு அனுப்பிவெக்கிறேன். அவங்க செஞ்ச உதவிக்கு இதையாவது செஞ்சாதான் எங்களுக்கு திருப்தியா இருக்கும்’ என்றார் அம்முவின் அப்பா. ‘ஆமாம் மாமி, எங்க மாமியார் கூட ஊருக்கு போயிருக்காங்க. அவங்க ரூம் காலியாதான் இருக்கு . நீங்களும், மாசிஅண்ணாவும் அங்கே தங்கிக்கலாம். எந்த சங்கோஜமும் வேண்டாம். சரின்னு சொல்லுங்கோ மாமி’ என்றாள் கற்பகம். ராஜாமணி மங்களம்மாளைப் பார்த்தான். பயணக்களைப்பும், ஓய்வெடுக்க ஆவலும் அவர் முகத்தில் தெரிந்தது. மாசியைப் பார்த்தான். அவன் அம்மு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ, ‘சரி, ரெண்டுநாள் இருந்துட்டு வாங்க. மாசிபத்திரம், நான் கிளம்பறேன். நீங்க ஊருக்கு வரும்போது எனக்கு போன் பண்ணிட்டு கெளம்பிவாங்க’ என்று சொல்லிவிட்டு லாட்ஜுக்குப் போனான். ரூமை காலிசெய்துவிட்டு, அவர்களுடைய பெட்டிகளைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, செலவுக்குப் பணமும் மங்களம்மாளிடம் தந்துவிட்டு ஊருக்குச் சென்றான் ராஜாமணி .

மாலையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மங்களம்மாளும் , கற்பகமும் போனார்கள். அம்முவுக்குத் துணையாக அவள் அப்பாவும் மாசிலாமணியும் வீட்டிலேயே இருந்தார்கள். சாமிதரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து வெகுநேரம் தங்கள் குறைகளை மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எல்லாம் ஆண்டவன் பாத்துப்பான் தாயி, எல்லாருக்கும் ஒரு கணக்கு வெச்சிருப்பான். எல்லாம் சரியாகும் கவலைப்படாதே.’ என்றார் மங்களம்மாள் . ‘ஆமாம் மாமி, எல்லாம் அவன் பார்த்துக் கொடுக்கறதுதான். ஸ்பெஷல் குழந்தைகளை நல்லா கவனமா பாத்துக்கறவா கிட்டேதான், கடவுள் அனுப்புவார்னு என் மாமியார் அடிக்கடி சொல்லுவா. அதுங்களுக்கு பண்ற சேவைதான் ஆண்டவனுக்கு பண்ற சேவைன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்’ என்றாள் கற்பகம் .

மறுநாள் அம்முவின் அப்பா ஆபீசுக்கு கிளம்பியதும் ,அம்மு மாசிமாமாவுக்குக் அவள் ஸ்கூலைக் காட்டவேண்டும் என்று அடம்பிடித்தாள். மங்களம்மாளையும், மாசிலாமணியையும் அம்முவுடன் அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினார்கள். அவர்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அந்த ஸ்பெஷல் ஸ்கூல் இருந்தது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் ஸ்கூல் .

பள்ளிக்கூடம் விஸ்தாரமாக இருந்தது. மூடியிருந்த மெயின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததும், இடதுபுறம் ஒரு தோட்டம் இருந்தது. அதன் மத்தியில் ஒரு சின்ன மலைவடிவ சிற்பமும், அதன் உச்சியில் சிவபெருமான் தலைவடிவமும் அமைந்திருந்தது. அதைப் பார்த்ததும், மங்களம்மாள் அப்படியே நின்றுவிட்டார். உடம்பில் ஒருவித உணர்வு நிறைந்தது. கேதார்நாத்தில் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கியதும் தனக்கு ஏற்பட்ட அந்த தெய்வீக அனுபவத்தை மீண்டும் உணர்ந்தார். கண்களில் நீர்கசிந்தது. ‘ஈஸ்வரா’ என்று கைகூப்பி வணங்கினார்.

பள்ளியில் 50, 60 பிள்ளைகள், ஆண்பெண் இருபாலரும் இருந்தனர். ஐந்திலிருந்து பதினைந்து வயதுள்ள பிள்ளைகள், சில உதவி ஆட்களுடனும், ஆசிரியைகளுடனும், வகுப்பிலும், வராந்தாவிலும், தோட்டத்திலும் விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர். ஒவ்வொருவரும், குழந்தைகளைப் போல், சில வாய் ஒழுகிக்கொண்டும், சில கைகளை வளைத்துக்கொண்டும், சில தலையை ஆட்டிக்கொண்டும், தரையைப் பார்த்து சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எதிலும் ஒரு நிதானம் இருந்தது. தயங்கித்தயங்கி அவர்கள் பேசுவதையும் நடந்துகொள்வதையும் பார்க்க மங்களம்மாளுக்கு உள்ளம் கலங்கியது.

அம்முவையும், அவள் அம்மாவையும் பார்த்த சில பிள்ளைகள் ’அம்முக்கா’ என்று அவளைச் சூழ்ந்துகொண்டனர். அம்மு சிரித்தபடி அவர்களைத் தொட்டு மகிழ்ந்தாள். மாசிலாமணியும் தரையில் அமர்ந்து அவர்களைப் பார்த்து சிரித்தான். அம்மு அவனைக்காட்டி, ‘மாசிமாமா’ என்று அந்தப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தினாள். ‘ஹை, மாசிமாமா, மாசிமாமா’ என்று பிள்ளைகள் கைதட்டி முகம் மலர சிரித்தனர். . அவன் கைகளைப்பற்றி குழந்தைகள் உள்ளே அழைத்துச் சென்றனர். அவனும் கூடவே சென்றான். இத்தனைநாளும், தன் கையை விடாமல் வரும் மாசி, இப்போது பயமில்லாமல், அம்முவுடனும், இந்த பிள்ளைகளுடனும், தான் கூட வருகிறோமா என்று திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றதைப் பார்த்தார் மங்களம்மாள். மாசி ஒருவனுக்கு மட்டும் செய்யும் சேவைபோல் இந்த குழந்தைகளுக்கும் உதவியாக இருந்தாலென்ன என்று அவருக்குத் தோன்றியது. மனதில் திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. பக்கத்திலிருந்த கற்பகத்தின் கைகளை பிடித்துக் கொண்டு, ‘தாயி, இந்த பள்ளிக்கூடத்திலேயே எனக்கு எதுனா வேலை வாங்கித்தா தாயி. நான் இங்கேயே தங்கி, இந்த புள்ளைங்களுக்கு சேவை செஞ்சி என் குறைகாலத்தை தள்ளிடறேன். உனக்குப் புண்ணியமாபோகும் தாயி” என்றார் . ‘என்ன மாமி, சொல்றீங்க! நிஜமாவா?’ என்றாள் கற்பகம். ‘ஆமாம் தாயி, என் மனசுக்கு இதுதான் சரின்னு படுது. நீ கொஞ்சம் கேட்டுப்பாரு தாயி’ என்றார் மங்களம்மாள். ‘சரி, எங்க மேனேஜ்மென்ட் நிர்வாகி அம்மா, ஜேபி மேடம் ஆபீஸ்லேதான் இருப்பாங்க. அவங்க அப்பா ஆரம்பிச்ச தொண்டுநிறுவனத்தோட ஸ்கூல்தான் இது. அவங்கள கேட்டுப்பாக்கிறேன். நீங்க இங்கே வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு ஆபீசுக்குள் சென்றாள் கற்பகம் .

மாலையில் வீடுதிரும்பிய அம்முவின் அப்பாவிடம் மகிழ்ச்சிபொங்க பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களைச் சொன்னாள் கற்பகம். ‘நம்ம மாமிக்கு அம்மு ஸ்கூல்லியே வேலைகிடைச்சுடுத்துங்க. புதுசா கட்டியிருக்கிற பாய்ஸ் ஹாஸ்டெல்லே சின்னபசங்களைப் பார்த்துக்கறதுக்கு, அவங்க ஆட்கள் தேடிட்ருக்காங்களாம். வாலன்டியர் சர்வீஸ் செய்றவங்களோடு, சம்பளத்துக்கும் ரெண்டு மூணுபேர் தேவைப்படுதாம். நம்ம மாமியை வேலைக்கு உடனே வந்துசேரச் சொல்லிட்டாங்க ஜேபிமேடம். ஹாஸ்டலிலேயே இவங்களும் தங்கிக்கலாம்னு சொன்னாங்க. மாசி அண்ணனை மட்டும் டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தபிறகு, செக்யூரிட்டி வேலைக்கோ இல்ல தோட்டவேலைக்கோ கன்சிடர் பண்றதா சொன்னாங்க’. ‘என்னடி சொல்றே, நம்பவேமுடியலே. நீயேவா அவங்களுக்கு வேலை அவருக்குத் வேணும்னு கேட்டே?’ என்றார் அம்முவின் அப்பா. ‘இல்லீங்க, ஸ்கூலுக்கு உள்ளே போனதும் தோட்டத்துக்கிட்டே சாமி கும்பிட்டுட்டு மாமி ஒருநிமிஷம் சிலையா நின்னாங்க. அப்புறம் அங்கிருந்த பசங்களை எல்லாம் பார்த்துட்டு கண் கலங்கினாங்க. என் கையைப்பிடிச்சிட்டு , ‘நான் இங்கேயே தங்கிடறேன், எனக்கு ஒரு வேலை வாங்கித்தான்னு கேட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியலே. எதுக்கும் ஜேபி மேடத்தைக் கேட்கலாம்னு தோணித்து. நாம ஊருக்குப் போனது, அங்க அம்முவுக்காக மாமியும், மாசிஅண்ணாவும், சாமிதரிசனம் கூட பண்ணாம, அம்முவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போய் கூடவே இருந்து பார்த்துக்கிட்டது எல்லாம் அவங்ககிட்டே சொன்னேன். ஜேபி மேடம் மாமியையும், மாசிஅண்ணாவையும் பார்த்து பேசினாங்க. அவங்களுக்கு மாமியை ரொம்ப பிடிச்சிப்போச்சி. நாளைக்கே ஹாஸ்டலுக்கு வந்து தங்கிக்கச் சொன்னாங்க. என்னால நம்பவே முடியலைங்க’ என்றாள் கற்பகம் .

‘நல்ல விஷயம்தான். எங்களுக்கும் நல்ல துணையா இருப்பீங்க. அம்முவுக்கு சந்தோசம் தானே” என்று அம்முவைப் பார்த்தார் .மாசியுடன் விளையாடிக் கொண்டிருந்த அம்மு, ஆமாம் என்று தலையாட்டினாள். ‘ஆமாம் மாமி, உங்க மகன் ராஜாமணி இதுக்கு ஒத்துப்பாரா?’ என்றார் அம்முவின் அப்பா .

‘அவன் முதல்லே முரண்டு பிடிப்பான். நான் அழுத்தி சொன்னா கேப்பான் . அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும்னா இதுதான் வழி. இரண்டொருமாசத்தில், தனியா சமைச்சி சாப்பிடப்புடிக்காம, கல்யாணத்துக்கு ஒத்துப்பான். ஒறவு முறையில், ஒரு பொண்ணு இருக்கு. டீச்சர் வேலைக்குப் படிச்சிருக்கா. அடக்கமான பொண்ணு. ராஜாமணிக்கு சரியாய் இருக்கும். கொஞ்சம் நொடிச்ச குடும்பம். நாங்க மெட்றாஸ்லே இருக்கப்போறோம், ராஜாமணி ஊர்லே தனியாத்தான் இருக்கப்போறான்னு தெரியவந்தா, கல்யாணம் பண்ணிக்குடுக்க முன்வருவாங்க. அவனுக்கு ஒரு வழி பொறக்கும். நடூலவன் வேலுமணி ஒரு தேசாந்திரி. ஒரு இடத்தில் தங்கமாட்டான். எங்க சுத்தினாலும் ஒருஎட்டு வந்து என்னைப் பார்த்துட்டு போவான். அவனுக்கும் ஆண்டவன் ஏதாவது ஒரு வழியைக்காட்டுவான். ராஜாமணிக்கு போனைப்போட்டு, நடந்த விஷயத்தை சொல்லி, நாங்க இப்போ ஊருக்கு வரலைன்னு தெரியப்படுத்திடலாம். எல்லாம் நம்ம அம்முவும் அந்த கேதார்நாத் ஈஸ்வரனும் காட்டியவழி” என்று சொல்லிவிட்டு, சுவரில் முதுகை சாய்த்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் மங்களம்மாள். அவர் மனதில் இன்னும் இரண்டு வருடங்களில் அம்மு குடும்பத்தினருடன் மீண்டும் கேதார்நாத் சென்று சாமிதர்சனம் செய்ய வேண்டுதல் உருவாகிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *