கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,310 
 
 

விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல் எரிச்சலாக வந்தது. “”காலத்த என்னத்தல பேசிட்டிருக்க…” எனக் கேட்டுக் கொண்டே படுக்கையிலிருந்து எழ முயற்சித்தார்.

ஆனால் படுக்கை எழுப்பிய கடமுடா சத்தத்தை அடுத்து மெதுவானார். வாழ்நாள் முழுவதும் மரவேலை செய்த பின்னும் தனது தேவைக்கு ஒரு நல்ல கட்டில் செய்து கொள்ள முடியவில்லை. வேலைக்கு போன வீட்டில் வேண்டாமென்று ஒதுக்கிய பழைய மரத்துண்டுகளை ஒடிந்து போன பழைய கட்டிலின் கால்களில் பொருத்தி கட்டிலாக்கி பயன்படுத்தி வந்தார். அதிலிருந்து வேகமாக எழ முயற்சித்தால் நிலை தடுமாறி விழுந்துவிடும் வாய்ப்பு அதிகம். எனவே, வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்தார். மார்புச் சளியால் வந்த இருமலை அடக்க முடியாமல் லொக், லொக் என இருமிக்கொண்டே மெதுவாக எழுந்து நின்றார்.

அம்மிஇடுப்பு வேட்டியைச் சரிப்படுத்திக் கொண்டு வீட்டின் பின்பகுதியில் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றார். பின்பக்க வாசலில் நின்றுகொண்டு எச்சில் துப்பினார். அது பின்பக்க முற்றத்தில் கழுவுவதற்காக போடப்பட்டிருந்த பாத்திரங்களின் பக்கத்தில் போய் விழுந்தது. “”இவருக்கு துப்ப வேற இடங் கெடக்கல” என்ற மருமகளின் குரலுக்கு பதிலேதும் சொல்லாமல் “”காலங்காத்தால என்ன சத்தம்ல…” என மகனைப் பார்த்துக் கேட்டார்.

“”கொத்தனார் வர்றதா சொல்லியிருக்கார். அதுதான் அம்மியை எங்க தூக்கிப் போடுறதுன்னு பேசிக்கிட்டிருந்தோம்” என்ற மகனின் பேச்சு சண்முக ஆசாரிக்கு எரிச்சலை மூட்டியது.

“”கொத்தனார் வந்தா… அம்மியை ஏம்பில தூக்கி வெளிய போடணும்…” எனக்கேட்டுக் கொண்டு மீண்டும் காறி துப்பினார். பதிலேதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த மகனைப் பார்த்தார். வீட்டில ஏதாவது செய்ய வேண்டுமென்றால் தன்னிடம் தான் முதலில் ஆலோசிப்பான். இதுவரை அப்படித்தான் நடந்திருக்கு. இப்ப என்ன ஆயிற்று.

நம்மிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் கொத்தனாரை வரச் சொல்லி இருக்கான் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “”என்ன வேல செய்யப்போற…” என்ற கேள்வியோடு மகனைப் பார்த்தார்.

“”இந்த பக்கம் ஒயத்திக் கட்டி ஸ்டவ் வைக்க ஒரு சிலாப் போடணும்…” என்ற மகனின் பேச்சுக்கு “”லே… அப்படிப் போட்டா வடக்கு முகமா இல்லல இருக்கும். கிழக்கு முகமா வர்ற மாதிரி இந்தப் பக்கச்சுவரோடு சேர்த்துக் கட்டி சிலாப் போடுல” என்று கிழவர் முடிக்கும் முன்பு, “”அந்த பக்கம் பிரிட்ஜ் வைக்கணும்” என்ற மருமகளின் பேச்சுக்கு மறுபடி பேசாமல் பார்த்தவாறே நின்றார்.

பின்னர் சுற்றிலும் பார்த்துக் கொண்டு, “”பிரிசை அந்த ரூமில வைக்கலாமில்ல….” எனப் பக்கத்து அறையைச் சுட்டிக் காட்டினார்.

“”ஒவ்வொரு தடவயும் எதாவாது எடுக்க அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டிருப்பாங்களா…. பிரிட்ஜ இங்கத்தான் வைக்கணும். மீனாட்சி அக்கா வீட்டிலக் கூட அடுக்களயிலதான் பிரிட்ஜ வச்சிருக்காங்க…” என்ற மருமகளின் பேச்சுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் நின்றிருந்தார்.

“”இல்லாத பிரிசிக்கு இப்ப எதுக்கு எடம் பாக்கிய… அத வாங்கச்சில பாத்துக்கிலாமில்ல…” எனக் கூறி முடிக்கும் முன்பு “”மாமா, நீங்க இந்தப் பக்கம் வாங்க… நான் எப்படியெல்லாமோ பேசி உங்க மவனை பிரிட்ஜ் வாங்க சம்மதிக்க வச்சிருக்கேன்… இப்ப நீங்க அத கெடுத்துடுவீங்க போலிருக்கு…”

மருமகளின் பேச்சைக் கேட்டு அமைதியான சண்முகம் ஆசாரி மேல் கூரையைப் பார்த்தார். பாஸ்கரன் ஏமான் வீட்டை இடிச்சு காங்கிரீட் வீடு கட்டியபோது பழைய விலைக்கு வாங்கி வந்த உத்திரமும் கழிக்கோல்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஓடு போடுவதற்காக போடப்பட்ட பட்டியல்கள் பல இடங்களில் இற்றுப் போயி செதலு பிடிச்சு இருக்கு. ஓட்டை இறக்கி இற்றுபோன பட்டியல்கள மாத்திப்போடுற எண்ணமில்ல. பிரிசு வாங்கப் போறாளாம்… பிரிசு… என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வாரியில் தொங்கவிடப்பட்டிருந்த டப்பாவிலிருந்து கொஞ்சம் உமிக்கரியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வீட்டின் முன்பக்கம் நோக்கி நடந்தார்.

“”தாத்தா, நீங்க பேஸ்ட் வைச்சு பல்லு தேய்க்காம ஏன் தாத்தா உமிக்கரி வைச்சு தேய்க்கிறீங்க?” எனக் கேட்ட பேத்திக்கு, “”தாத்தா பல்லு பழைய பல்லு இல்லியா… உமிக்கரி வைச்சு தேச்சாத்தான் வெளுக்கும். நீ போய் நல்ல சுத்தமா பல் தேய்ச்சிட்டு வா” என்று பதில் கூறி அனுப்பி வைத்தார்.

பல் தேய்த்து முடித்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தோளில் கிடந்தத் துண்டால் முகத்தைத் துடைத்தார். வீட்டு தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த வெற்றிலைத் தட்டின் பக்கமாக கை நீண்டது.

“”காலங்காத்தால முத்தத்தில துப்பத் தொடங்கியாச்சா….” என மருமகள் வாயிலிருந்து கேட்க வேண்டாமென நினைத்தவர் காப்பியைக் குடித்து விட்டு வெற்றிலை போடலாம் எனத் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டு கையைத் திருப்பிக் கொண்டார்.

“”தாத்தா காப்பி இந்தாங்க…” என்று காப்பியைக் கையில் பிடித்தவாறு மெதுவாக நடந்து வந்த பேத்தியிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டார். சூடாக இருந்த காப்பியில் இரண்டு மடக்கு குடித்த பின்னர் வெற்றிலைத் தட்டின் அருகே காப்பியை வைத்துவிட்டு நாற்காலியில் நீண்டு சாய்ந்தார். கண்ணை மூடினார். மூடிய கண்ணில் பழைய நினைவுகள் வந்து திரையோடின.

அப்போது திருமணமான புதிது. சண்முக ஆசாரியின் மனைவி பகவதி ஊரார் கண்பட்டுவிடும் போல அழகு. அந்த அழகுக்கு அழகு சேர்த்தாற்போல கழுத்து நிறைய மாலைகள், காதில் பாம்படம், மூக்கில் கல் வைத்த மூக்குத்தி, கையில் தங்க வளையல்கள் என நிறைந்து நின்றார். திருமணமான ஒரு வாரத்தில் மண்டைக்காட்டு கோயிலுக்கு இருவருமாக சேர்ந்து போனபோது சண்முக ஆசாரி மனைவியின் அழகையும் நகைகளையும் ஊரே பேசியது.

முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையோடு பகவதி வீடு திரும்பியபோது சண்முகத்துக்கு எல்லையில்லா ஆனந்தம். சண்முகத்தின் பாட்டி திண்ணையிலிருந்து வெற்றிலையைக் குதப்பியபடி, “”அஞ்சாறு தலமொறைக்கு பொறவு தலச்சன் பிள்ள ஆம்பிள்ளையா பொறந்திருக்கு. நீ கொடுத்து வைச்சவம்பில” என்று பேசியபோது கை, கால் புரியாத பரவசத்தில் மூழ்கிப் போனார். பாயாசம் வைத்து சுற்றத்தார் அனைவருக்கும் விளம்பினார்.

ஆனால், எல்லாம் அடுத்த இரண்டு வருடங்களில் மாறிவிட்டது. குழந்தைக்கு 2 வயது இருக்கும்போது பகவதிக்கு அடிக்கடி காய்ச்சல் வரத் தொடங்கியது. அடிக்கடி சோர்ந்து படுத்துக் கொண்டாள். ஆஸ்பத்திரியில் மருந்து வாங்குவதும் காய்ச்சல் குறைந்தவுடன் சகஜ நிலைக்கு வர முயல்வதுமாக நாட்கள் நகர்ந்தன. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை கெட்டு, வீட்டு வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. “”ஏங்க எனக்கு பழங்கஞ்சி, போஞ்சி என ஏதாவது குளிரா குடிச்சிட்டே இருக்கணும் போல இருக்கு. எனக்கு என்ன சோக்கேடு… டாக்டரு ஏதாது சொன்னாரா…?” எனக் கேட்கும் மனைவிக்கு தன்னிடம் பதிலேதும் இல்லையென்றாலும்

“”ஒண்ணுமில்ல சாதா காச்சலுதான்னு டாக்டர் சொன்னாரு….” எனக் கூறி மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வைப்பார். தன்னந்தனியாகவே விளையாடி களைத்து குழந்தையும் மறுபக்கத்தில் தூங்கிப் போகும்.

காய்ச்சல் வந்து அடிக்கடி தொந்தரவு செய்தாலும் பகவதியின் உடல் வாடவில்லை. எனவே, சண்முக ஆசாரிக்கு பெரிய நோய் இருப்பது போன்ற எண்ணம் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் டாக்டர் கூறியது போல கோட்டாறு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஒரு முறை மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் காட்டினார்.

ஆஸ்பத்திரியில் பகவதியைச் சோதித்த டாக்டர் எல்லா விவரங்களையும் கேட்டறிந்த பின்பு இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து பார்க்கச் சொன்னார். குழந்தை இருக்க முடியாது எனக் கூறியபோது “”அடுத்தமுறை காய்ச்சல் வரும்போது இங்கக் கூட்டிட்டு வந்திடனும்… வேற டாக்டர்ட்ட காட்டக் கூடாது” எனக் கூறி அனுப்பினார்.

ஒரு மாதம் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு அலைந்து முடிவில் பகவதிக்கு இரத்த புற்று நோய் என்று கூறியபோது சண்முகம் ஆசாரி ஆடிப் போனார். திருவட்டார் கோபால நாயர் வீட்டு வேலை செய்தபோது கோபால நாயரின் அம்மா புற்று நோயில் கிடந்து அவதிப்பட்டு இறந்தது கோபால ஆசாரியின் நினைவுக்கு வந்தது. கடைசி ஒரு வாரம் அந்தம்மா பட்ட வேதனைகளை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வந்துவிடும். அப்போது, வீட்டு வேலையை நிறுத்திவிட்டு கோபால நாயரோடு சண்முக ஆசாரியும் ஆஸ்பத்திரியிலே காவல் கிடந்தார்.

தனது மனைவிக்கும் அப்படியொரு நிலையா? என நினைத்து சோர்ந்தபோதும் தளராமல் திருவனந்தபுரம் கேன்சர் சென்டருக்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கு சிகிச்சை செய்தபின்பும் நோய் முற்றிய நிலையில் இருந்ததால் எட்டே மாதத்தில் இறந்து போனார்.

சண்முக ஆசாரியின் 32 வயதில் மனைவி இறந்துவிட்டதால் உற்றார் உறவினர் வேறு ஒரு திருமணத்திற்கு வற்புறுத்தி பெண் பார்க்கும் படலம் நடந்தது. ஒரு புரோக்கர் மூலமாக நட்டாலத்தில் ஒரு பெண் பார்த்தார்கள். இவரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இரண்டாம் தாரமாக விருப்பமில்லாத அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வந்தது. அதோடு அந்த முயற்சியை முற்றிலும் கைவிட்டார்.

பின்னர் அம்மா, மகன், வேலை என நாட்கள் நகர்ந்தன. “”லேய்… எங்காலங் கழிச்சி யாருல உன்னப் பாத்துப்பா…” என தாயார் அரற்றும்போது “”எம்மவன் இருக்கானில்ல…

வேற யாரு வேணும்… நீ சும்மா கிட….” எனக் கூறி வாயை அடைத்து வந்தார்.

வேலையில் இருந்த திறமை அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. “சண்முக ஆசாரி ஸ்தானம் பார்த்தா கெணத்தில தண்ணீ வத்தாது’… “சண்முக ஆசாரி தறி தட்டினா வீடு எப்ப கொற தீந்துன்னு கேக்கனும்…’ “சண்முக ஆசாரி டிசைன் போட்டுக் கொடுத்தா கதவுல பூவும் காயும் உயிரோட இருக்கும்…’ என அவரது வேலையைக் குறித்து பேசும் அளவுக்குப் பெயர் வாங்கினார்.

“”என்ன ஆசாரியாரே காலங்காத்தால உறக்கமா?”

எனக் கேட்டுக் கொண்டே படியேறி வந்த சார்லஸ் மேஸ்திரியைக் கண்டவுடன் நாற்காலியில் எழுந்து அமர்ந்தார். “”அப்பா எப்டில இருக்காரு…” என்ற கேள்விக்கு “”நல்லாத்தான் இருக்காரு… காலத்த மீனு வாங்கக் கிளம்பியாச்சு…” எனப் பதில் கூறினார் சார்லஸ்.

“”அவனுக்கு இன்னும் மீனு கொதி தீரல இல்ல…” எனக்கூறி சிரித்தார் ஆசாரி.

“”ஆமா ஆசாரியாரே… வேற யாரு வாங்கினாலும் அவருக்கு திருப்தி இருக்காது… இப்பவே போய் கடையெல்லாம் சுத்திட்டு பத்து, பத்தரைக்கு மீன வாங்கிட்டு வீட்டுக்கு வருவாரு… பின்ன, மீனு கொழம்பும் அம்மதான் வைக்கணும்…” என்றார் சார்லஸ்.

“”அவன பாத்தும் மாசக் கணக்காச்சு… போ போ நீ போய் வேலயப்பாரு..” எனக்கூறிக் கொண்டு மகனை அழைத்தார்.

“”ஒரு அம்பது ரூவா தா… கட வரைக்கு போய்ட்டு வாரன்..” எனக் கேட்டார். நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டு மகன் கொடுத்த ரூபாயை சட்டை கை சுருட்டில் வைத்தார். நாற்காலியில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டினார். படியில் கிடந்த அழுக்கடைந்த செருப்பை காலில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

சார்லசின் தந்தை வறுவேலும் சண்முக ஆசாரியும் நண்பர்கள். வறுவேல் கட்டிட வேலைகளில் கை தேர்ந்தவர். அவரிடம் இன்ஜினியரின் பிளானைக் கொடுத்துவிட்டால் போதும் மீதமுள்ளதை அவர் பார்த்துக் கொள்வார். வறுவேல் கொத்தனாரும் சண்முகம் ஆசாரியும் ஜோடி சேர்ந்து வேலை செய்த நாட்களை தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருவரும் கருதி இருந்தனர்.

சாலையில் வந்து நின்றபோது “”ரவிபுதூர்கட, சாமியார்மடம், மொளவுமூடு, அழயமண்டபம், தக்கல…” எனக் கூவியபடி வந்து நின்ற வேனில் ஏறி சாமியார்மடத்தில் இறங்கினார் சண்முக ஆசாரி. வறுவேல் வழக்கமாக டீ சாப்பிடும் கடை அருகே சென்று விசாரித்தார்.

“”கொஞ்சம் பொறுக்கணும் ஆசாரியாரே… கண்டிராக்கு வார நேரந்தான்… டீ போடட்டா…” எனக் கேட்டக் கடைக்காரரிடம் “”அவனும் வரட்டும்…” எனப் பதிலளித்துவிட்டு கடை திண்ணையில் அமர்ந்தார்.

சற்று நேரத்தில் அங்கு வறுவேல் வந்து சேர்ந்தார்.

“”என்ன ஆசாரிய கடையில காணுது…” எனக் கேட்டுக் கொண்டே வந்தார்.

கடைக்காரர் “”டீ போடட்டா…?” எனக் கேட்டார்.

அவரிடம் வேண்டாம் எனத் தலையை அசைத்துவிட்டு, “”ஆசாரியாரே வாரும் காப்பி குடிக்க போவோம்” எனக் கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்து கொண்டு ஆப்பமும் முட்டை கறியும் ஆர்டர் செய்துவிட்டு, “”என்ன விசேசம் ஆசாரியாரே…. மொவத்தில ஒரு கள இல்ல…?” எனப் பேச்சைத் தொடங்கினார் வறுவேல்.

“”என்னத்த வறுவேலு… ஒரு காலத்தில இங்க கல்ல வையின்னு நான் சொன்னா அங்கத்தான் அந்தக் கல்லு இருக்கும்… சண்முக ஆசாரி வரச்சக் கோட்ட எந்தக் கொம்பனும் தாண்டியத்தில்ல… ஆன இப்ப நம்ம புள்ளயே நம்ம பேச்சக் கேக்கமாட்டேங்குது…” என அங்கலாய்த்தார் சண்முக ஆசாரி.

சண்முக ஆசாரியின் பேச்சிலிருந்து வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டார் வறுவேல்.

“”என்ன வீட்டு வேலயா… எம் பயன் அங்கத்தானே வந்தான்… அப்ப இன்னக்கி ஆசாரியாரு வீட்டுக்கு பேவாண்டாம்… அங்க நடக்கியத பாத்துட்டு சும்மா இருக்க முடியாது…”

என நேரடியாக விசயத்துக்கு வந்த வறுவேலை ஆச்சரியத்தோடு பார்த்தார் சண்முக ஆசாரி. வறுவேல் தொடர்ந்தார்.

“”ஆசாரியாரே, என் வீட்டிலயும் ஆறு மாசத்துக்க முன்ன அடுக்கள வேல நடந்து… அம்மி, ஆட்டுரலு எல்லாத்தையும் தூக்கி வெளிய போட்டாச்சு… காலம் மாறுதில்ல… இப்ப

இருக்க வசதியெல்லாம் அப்ப இருந்திருந்தா நாம அப்பவே அம்மியை தூக்கி வெளிய போட்டிருப்பம்… அதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது… இன்னும் அஞ்சோ, பத்தோ வருசம்… அதுக மனங்கோணமா நடந்துட்டு போயி சேந்திடனும்…” எனப் பேசிய வறுவேலைக் கூர்ந்து கவனித்தவாறே இருந்தார் சண்முக ஆசாரி.

சப்ளையர் இரண்டு பிளேட்டுகளில் ஆப்பமும் முட்டை கறியை தனியாக சிறிய கிண்ணங்களிலும் வைத்துவிட்டுச் சென்றார்.

“”இல்ல வறுவேலு… கிழக்கப்பாத்து அடுப்பப் போடுண்னு சொன்னா… பிரிசு வைக்க இடமில்லன்னு சொல்லிட்டு வடக்கப்பாத்து வைக்கேன்னு சொல்லியான்…” என்றார் சண்முக ஆசாரி.

“”ஆமா… எம்மவன் பாரின்லருந்து வந்ததும்தான் அடுப்பங்கடைய இடிச்சு வேல செய்தான். கேஸ் அடுப்புதானே வைக்கியம், சிம்னி வேண்டாம்னு சிம்னியை இடிச்சு போட்டுட்டான்.. மேக்க பாத்து அடுப்ப வைச்சான். கிழக்கப் பாத்த வீட்டில மேக்க பாத்து அடுப்ப வைச்சதான் வெளிச்சுவரோட சேர்ந்து நிக்கும். வெண்டிலேசன் வைக்க முடியுன்னான். பாரின்ல இப்டித்தான் கட்டுறான். என்ன எல்லாம் இடிஞ்சா போவுதுன்னு சொல்லுறான்… நானும் யோசிச்சு பாத்தேன்… அதுவும் சரின்னு பட்டுது… ஒன்னும் சொல்லல…” என்று கூறியவாறே முட்டைக் குழம்பை ஆப்பத்தில் ஊற்றி ஒரு துண்டு ஆப்பத்தை பிய்த்து வாயில் போட்டார் வறுவேல்.

“”ஆமாயில்ல… என்னத்த பாத்து பாத்து செய்து… என்ன நல்லாயிருக்கோம்… அப்டித்தான் இருக்கோம்… ஏமாத்துக்காரனுவதான் நல்லாயிருக்கானுவோ… சுனாமி வந்து வாரிட்டு போச்சு… கிழக்க பாத்து அடுப்பு போட்ட வீடுவோள விட்டா வச்சிது…” எனக் கூறிக் கொண்டு ஒரு தெளிவோடு முட்டையைப் பிய்த்து வாயில் போட்டார் சண்முகம் ஆசாரி.

– ஏப்ரல் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *