தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,014 
 
 

கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின் இயல்பு… அப்படித்தான் செய்வர் என, சுபாஷினி புரிந்து வைத்திருந்தாள்.
ஆனால், “”அம்மா… எவ்வளவு நேரமாச்சு… சீக்கிரம் டிபன் வைக்க மாட்டியா… நான் காலேஜ் கிளம்ப வேண்டாமா?” என்று வெறுப்புடன் மகன் கத்துவது, அவளுக்கு புதுசு. கொஞ்ச நாளாத் தான் இப்படி… “”ரெடியாயிடுச்சு… வா சாப்பிட…”
“”என்ன இது… இன்னிக்கும் உப்புமாதானா?”
“”சித்தார்த்… பத்து நாளைக்கப்புறம் இன்றுதான் உப்புமா செய்யறேன். ஏதோ, தினமும் செய்யற மாதிரி சலிச்சுக்கறே… உனக்குத்தான் உப்புமா பிடிக்குமே!”
“”எப்பவும் டேஸ்ட், ஒரே மாதிரியாதான் இருக்குமா… இப்ப எனக்குப் பிடிக்கலை.”
அம்மாஇந்த உரையாடல், சாதாரண தன்மையுடன் நடக்கவில்லை. இருவரும் முக சுளிப்புடனும், சலிப்புடன் பொறுமை யின்றியும் கத்திக் கொண்டனர்.
“”வீட்டில, அப்பான்னு ஒருத்தர் இருந்திருந்தா, உனக்கு பயமிருந்திருக்கும். அதான் பத்து வருஷத்துக்கு முந்தியே துரத்திட்டியே, உன் ராஜ்ஜியம் தானே… நீ செய்வதை நான் சாப்பிட்டுத் தானே ஆகணும்…”
அதிர்ந்து, அவனை திடுக்கிடலுடன் பார்த்தாள் சுபாஷினி. வாயடைத்துப் போயிற்று, தன் மகனா இப்படிப் பேசுகிறான்.
“”எனக்கு சாப்பாடே வேண்டாம்… உண்மையைச் சொன்னா முறைக்கறே…” கையைக் கழுவிக் கொண்டு, புது பைக்கில் பறந்து விட்டான். அது, அவள் வாங்கிக் கொடுத்த பைக் தான்.
“என்னாச்சு இவனுக்கு… இவ்வளவு சுடு சொற்களை ஏதோ, மலர் தூவுவது போல் தூவிவிட்டுப் போக, இவனால் எப்படி முடிகிறது?’
அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தும், டைனிங் டேபிள் மேல் தலை கவிழ்த்து கதறி அழுதாள் சுபாஷினி.
தனி மனுஷியாக, அவனை பத்து வருஷம் ஆளாக்கி விட்டதற்கு இதுதான் பரிசா?
அவன் விலகிக் கொண்டே போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு எட்டு வயது பிஞ்சு சித்தார்த்தும், பத்து வருஷம் முந்தி, முட்டி மோதிய கணவன் வெங்கட்டின் ஞாபகமும் வந்தது.
முதல் சில வருடங்கள், திருமண வாழ்க்கை இனிக்கத்தான் செய்தது. வெங்கட் கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
“உன் இதழுக்கு புன்னகிக்க மட்டும் தான் தெரியுமா சுபாஷினி… நான் கொடுத்து வைத்தவன்…’ என்று, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்து தான், இல்லறத்தை நடத்தினான் வெங்கட்.
நல்ல பாம்பு போல், சுமதி என்ற பெண் அவன் இதயத்தில் நுழைந்து விஷமாகி விட்டாள். அவனும் அனுமதித்தான். பிறகு, கட்டியவள் முகம் பார்க்கக் கூட கசந்தது. கண்களை சந்திக்காமல் சுவர் பார்த்துப் பேசினான்.
“என்னங்க… என்னாச்சு… இப்பவெல்லாம் குழந்தையை கூட கொஞ்சுவதில்லை…’ ஆதங்கமாகக் கேட்டாள். அவன் வெற்றுப் புன்னகையை பதிலாகத் தந்தான்.
சேர்ந்துதான் படுத்தனர். ஆனால், அவன் முதுகு காட்டியே படுத்துக் கொண்டான். தான் காலாவதி ஆகிவிட்டது புரியாமல் கலங்கினாள் சுபாஷினி.
பரபரப்புடன் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்.
“சற்று சதை போட்டிருப்பதால் பிடிக்கலையா… முடியின் அடர்த்தி குறைந்து விட்டது; அதுதான் காரணமா… அக்கறையாக அலங்கரித்துக் கொள்வதில்லை; அதுவாக இருக்குமோ… ஆனாலும், நன்றாகக் தானே இருக்கிறேன்…’
அவன் மனசு நன்றாக இல்லை என்பது தான் பிரச்னை என்று புரியாமல் போயிற்று.
“என்னங்க… சதை போட்டது பிடிக்கலையா… எக்சர்சைஸ் செஞ்சு எடையை குறைச்சிடறேன். முடி கொட்டிடுச்சா… இப்ப ஹெர்பல் ஆயில் பயன்படுத்தினால் சரியாயிடும். வேறு என்ன குறை… மாத்திக்கறேன். சொல்லுங்க வெங்கட்…’ அவள் நெகிழ்ந்த கண்ணீர் கெஞ்சல், அவனை எரிச்சல்படுத்திற்று.
“சுபா… வீணா பிரச்னை பண்ணாதே. இந்த வயதில், உன்னுடன் என்ன ரொமான்ஸ் வேண்டியிருக்கு… எதுக்கு புதுப்பெண் மாதிரி அலையற… மகனுக்கு எட்டு வயசாச்சு…’
அவமானத்தால் முகம் சிவந்து போனாள் சுபாஷினி.
எதற்கு தவிக்கிறாள்?
அன்பான அவன் ஒரு பார்வைக்காக… இது கூடவா புரியாது, தன்னுடன் பத்து வருஷம் வாழ்ந்த அவனுக்கு. சூடான அயர்ன் பாக்ஸை நெஞ்சில் வைத்து தேய்த்து விட்டது போல் இருந்தது. அந்த ரணம் மனசை பொசுக்கிற்று. தாங்க முடியாமல், முதல் முறையாக குரல் உயர்த்தினாள்…
“ஏன் இப்படி தப்புத் தப்பாய் புரிஞ்சுக்கறீங்க… உங்களுக்கு புத்தி கெட்டுப்போச்சா?’
அவ்வளவுதான்… சுனாமி போல் ஒரு ஆட்டம் ஆடி, அவளை கண்டபடி திட்டிவிட்டு, வெளியேறி விட்டான். நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு!
எப்படி வெளியேறுவது என்று தவித்தவனுக்கு, கிடைத்த ஒரு காரணம், “எதிர்த்துப் பேசுகிறாள்… எவனுடனோ தொடர்பு…’
சுபாஷினி தன்னை நொந்து கொண்டாள். “சும்மா இருந்திருக்கலாம்… வாயை விட்டதால் இப்படியாகி விட்டதே…’
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விப்பட்டு புரிந்து கொண்டாள், அவன் விலகினதன் காரணம், இன்னொரு பெண் என்று. அந்த மயக்கத்தில், பெற்ற குழந்தை மேல் உள்ள பாசம் கூட அற்றுப் போய், விட்டது.
தகுதியற்றவனை மனதில் வைத்து, இனி, எதற்கு கண்ணீர் சிந்தணும்?
சித்தார்த் அவள் உலகமானான். இருவருக்குள் அவ்வளவு பாசம், நெருக்கம். சந்தோஷமாக இருந்தனர்.
எப்படி புகுந்தது இந்த பேதம்? வயது காரணமா; வேறு ஏதாவதா? ஏன் இப்படி தீ கங்காக வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறான்?
அலுவலகம் விட்டு, வீட்டிற்கு வரும் போது, மனசு பாரமாக இருந்தது. சந்தோஷமேயில்லாம சமையலை ஆரம்பித்தாள். கை தானாக மகனுக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தது. பத்து மணிக்கு வாசலில் பைக் சப்தம் கேட்க, வாசலுக்கு ஓடி வந்தாள் சுபாஷினி.
“”என்னடா… இவ்வளவு லேட்?”
“”ஆரம்பிச்சிட்டியா… நான் என்ன சின்னக் குழந்தையா… நீ போட்ட கண்டிஷன்ஸ்… ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்திடணும். சிகரெட்டா நோ; ப்ரெண்ட்ஸ் நோ; சினிமா நோ; உன்னை மட்டுமே சுத்திக்கிட்டு… ச்சே சிங்கிள் பேரன்ட்டோட மகனா இருக்கிறது, எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்…”
கத்தினான். புத்தகங்களையெல்லாம் விசிறி அடித்தான்… “டிவி’ வால்யூம் கூட்டி அலற விட்டான்.
“”சாப்பிடுப்பா… கோவிச்சுக்காதே. பத்தாயிடுச்சே வரலையேன்னு பதறிட்டேன்பா,” அவன் தலை கோதி சொன்னாள் சுபாஷினி.
“”எனக்கு சாப்பாடு வேண்டாம். பிடிக்கலை. இந்த சிறை வாழ்க்கை பிடிக்கலை,” தட்டில் இருந்த அன்னம், அவனால் தட்டிவிடப்பட்டு, தரையெங்கும் சிந்தி சிதறியது. என்ன ஒரு ஆங்காரம்.
“”என்னடா கண்ணா இது… ப்ளீஸ்டா கோபிக்காதே. இனிமே எதுவும் கேட்க மாட்டேன். சாப்பிடுப்பா, எனக்கிருக்கறது நீ மட்டும்தானே கண்ணு… நீயும் இப்படிப் பேசினா, அம்மா எங்கேடா போவேன்?”
“”அம்மா… கையெடுத்துக் கும்பிடறேன். என் விஷயத்லே தலையிடாதே; என்னை விட்டுடு… லேடீஸ் க்ளப் போ. சோஷியல் சர்வீஸ் பண்ணு… நகைக்கடை, துணிக்கடை போ…. என் சுதந்திரத்தில் கை வைக்காதே, நான் எட்டு வயது சித்தார்த் இல்லை… ச்சே சதா கண்காணிச்சுக்கிட்டு.”
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய், சுபாஷினியால் தாங்க முடியவில்லை. “மகனே விரட்டுகிறானே… அவனை விட்டுவிட்டு எங்கே போவது?’
சித்தார்த் இரண்டு நாட்கள் வீட்டுக்கே வரவில்லை. வேண்டா வெறுப்பாக மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்தான். பெரிய நவ்தால் பூட்டு தொங்கிற்று.
“இரவு பத்து மணிக்கு அம்மா எங்கு போய் விட்டாள்… நகைக் கடையா; புடவை கடையா; லேடீஸ் கிளப்பா?’
“”ஹாஸ்பிடலுக்கு…. செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டே, என்ன புள்ளடா நீ?” அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து, மருத்துவமனை பெயர் சொல்லி, சாவி தந்தாள் பக்கத்து வீட்டு மாமி. மனசு தடதடக்க மருத்துவமனை சென்றான் சித்தார்த்.
அவனை ஆழமாகப் பார்த்தாள் டாக்டர் ஷாலினி. அதில், ஏளனம் இருந்தது; பரிதாபமும் எட்டிப் பார்த்தது.
“”ஏண்டா… ஏண்டா… உன்னை மாதிரி பசங்களுக்கு அறிவுங்கறதே கிடையாதா… காலேஜ் வந்திட்டா, நீ பெரிய மனுஷனாயிடுவியா… கல்வி அறிவைத்தான் வளர்க்கும்… நீ, திமிரை வளர்த்துக்கிட்டே. இதோ பார்…”
ஒரு காலி சீசாவை அவன் பக்கம் டேபிளில் உருட்டி விட்டாள். தூக்க மாத்திரைகள் இருந்த சீசா.
“”போராடி மீட்டிருக்கோம்…. அம்மா சொன்ன முதல் வார்த்தை என்ன தெரியுமா… “அவன் நிம்மதியா இருக்கட்டும். என்னை ஏன் காப்பாத்தினீங்க… சுதந்திரத்தை இழந்திட்டானாம்…’ இப்ப தாயையே இழக்க இருந்தியே… போ… போ… உன் அப்பாவை தேடிக் கண்டுபிடித்து, கூட இருந்து பார். அந்த பொம்பள உனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்து, எப்படி, “ட்ரீட்’பண்றா பாரு… அப்ப புரியும் உன் தாயோட அருமை. ச்சே… சாரி சித்தார்த் ஐ அம் ரியலி அஷேம்ட் ஆப் யூ…”
இருவரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு மெல்ல டாக்டர் ஷாலினி சொன்னாள்…
“”சித்தார்த்… நான் கூட கணவரை பிரிந்தவள் தான். ஆனால், என் கணவர், இன்றும் தன் மகனை பார்த்துப் போகிறார். அவன் டாக்டருக்குப் படிக்கிறான். என்னிடம் பணம் இல்லையா என்ன… ஆனால், அவர் படிக்க வைக்கிறார். மகனை கண்டிக்கிறார். பாசம் காட்டுகிறார்… என்கிட்ட பிடிப்பு இல்லை என்ற வலி… அவர், என் மகனிடம் காட்டும் பாசம் கண்டு மறந்து போகிறேன். அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு.”
பிரமித்து விழித்தான் சித்தார்த். இப்படியொரு அப்பாவா… ஆனால், இவன் அப்பா?
“”உன் அப்பா எங்கிருக்கிறார்… என்ன செய்கிறார் தெரியுமா… ஒரு நாளாவது போன் செய்து, உன்னை பற்றி விசாரித்தாரா… பொண்டாட்டிய தலைமுழுகிற ஆண்களைக் கூட மன்னிக்கலாம். ஆனால், பெற்ற பிள்ளையை தலைமுழுகுகிற தகப்பனை மன்னிக்கவே முடியாது. புரிந்து கொள்…”
“”தப்பு பண்ணிட்டேன் டாக்டர்…” கண்ணீர் வழியக் கூறினான்.
“”சரி… காம் டவுன். சிங்கிள் பேரன்ட்டான அம்மாவின் வலியை, நீ புரிஞ்சுக்கணும். அப்பப்ப அம்மாவுக்கு நேரம் ஒதுக்கணும்… தூக்கி எரிஞ்சிட்டுப் போன உங்கப்பா, இந்த பத்து வருஷம், உன் தேவை என்னன்னு கேட்டு நடந்திருக்காறா?
“”இல்லாத அப்பாக்கிட்ட பாசத்தைக் காட்டி, இருக்கிற அம்மாவை இழக்கப் பார்த்தியே… புரிஞ்சுக்க சித்தார்த். கடினமான வார்த்தைகளை புரிந்து கொள்ள, டிக்ஷ்னரி இருக்கு. கடினமான வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க, அம்மாதான் டிக்ஷ்னரி. அவளை இழந்துடாதே! இன்னிக்கு
மதர்ஸ் டே. போ… உன் அம்மாவை பார்த்து, அன்பா இரண்டு வார்த்தை பேசு. அதான் அவங்களுக்கு ஆக்சிஜன்.”
எழுந்து கொண்டாள் டாக்டர் ஷாலினி. அவன் முதுகை தட்டிக் கொடுத்தாள். அவன் கண்ணீர் நின்றது.
எட்டு வயது சித்தார்த்தின் பாசத்தை நெஞ்சில் சுமந்து, பூங்கொத்துடன் செல்லும் பதினெட்டு வயது சித்தார்த்தை, கனிவுடன் பார்த்தாள் டாக்டர் ஷாலினி.

– சங்கரி அப்பன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *