கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 1,591 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்வதியும், மங்களமும் அன்று ஊரிலிருந்து வரப் போகிறார்கள் என்கிற தகவல் தெரிந்ததும் அலமேலு குன்றிப் போனாள். ஊரிலிருந்து வந்ததுமே அவர்கள் அவளைத் தேடி வருவார்கள். வந்து. “ஏண்டி அலமு. அன்று அப்படி யொரு பேச்சுப் பேசி, அமர்க்களமாகச் சவால் விட்டாயல்லவா? இப்போ என்ன ஆயிற்று? நாங்கள் சொன்னது போலவே மண்ணைக் கவ்வி விட்டாயல்லவா? உம்… எடு பணத்தை!” என்று இரண்டு பேருமாக, ஆளுக் கொரு பக்கம் இழுத்துப் பேசி, எக்காளமிடப் போகிறார்கள். 

அவர்கள் பேச்சு நியாயம் தான். பந்தயம் கட்டிவிட்டு, தோற்றுப் போனால், பணத்தை உடனே கொடுத்துவிட வேண்டுமல்லவா? 

அலமேலு பீரோவைத் திறந்து, பர்ஸை எடுத்தாள். அவள் கைகள், ஒற்றை ரூபாய்த் தாள்களை எண்ணின. 


ஒரு மாதத்திற்கு முன்னால் ஒரு நாள். மாதர் சங்கத்தில் அங்கத்தினர்களெல்லோரும் ஹாலில் உட் கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

“காத்யாயினி எங்கே காணோம்?” என்று ஒருத்தி கேட்டாள்.

“அவளைக் கூப்பிட அவள் வீட்டிற்குப் போயிருந்தேன். ஆனால் அங்கே அவளுக்கும் அவள் மருமகளுக்கும் நடந்து கொண்டிருந்த மல்யுத்தத்தைப் பார்த்ததும், பேசாமல் போன சுவடு தெரியாமல் திரும்பி விட்டேன்!” என்றாள் மற்றவள். 

பேச்சு, மாமியார் மருமகள் விவகாரத்திற்குத் திரும்பி, வாதமும், பிரதிவாதமுமாக வளர்ந்து சம்பாஷணையில் சூடு பறந்தது. 

“இந்தக் காலத்துப் பெண்கள் படித்து விடுகிறார்களே தவிர, பண்பு எங்கே தெரிகிறது? ‘தாட் பூட்’டென்று கொஞ்சமும் வளையாமல் பந்தயக் குதிரை மாதிரி நடந்து கொள்ளும் அவர்களை வைத்துக் கொண்டு எந்த மாமியாராலுமே குப்பை கொட்ட முடியாது!” காட்டமாகப் பார்வதி சொன்னாள். 

ஆனால் அலமேலுவுக்கு அவள் சொன்னது சரியென்று தோன்ற வில்லை. 

“அப்படிச் சொல்லாதே பார்வதி. பிறந்த வீட்டையும் பழகின மனிதர்களையும் விட்டுவிட்டு, நம்மையே நம்பி வருகிற அந்த இளம் வயதுப் பெண்களை, அனுபவப்பட்ட நாம்.. கொஞ்சம் அரவணைத்துக் கொண்டு போகத்தான் வேண்டும். அவர்களிடமிருக்கும் குற்றம் குறைகளைப் பெரிதாகப் பாராட்டாமல், நம் வயிற்றில் பிறந்த குழந்தைகள் செய்தது போல நினைத்துப் பாராமுகமாகப் போய்விட்டால், பிரசினைக்கு ஏது இடம்? அந்தப் பெண்ணும்தான் அப்புறம் நம்மை வேற்றாளாக எப்படி நினைப்பாள்? தன் சொந்தத் தாயாக நம்மையெண்ணி, ‘அம்மா, அம்மா’, என்று நம்மைச் சுற்றி வர மாட்டாளா?” என்றாள். 

அவ்வளவுதான். அந்தக் கணமே அங்கிருந்தவர்கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்தனர். பார்வதியையும், அவள் ஆருயிர்த் தோழி மங்களத்தையும் ஆதரித்தவர்கள் ஒரு பக்கம். அலமேலு சொல்வது சரியானதுதான் என்று ஒப்புக் கொண்டவர்கள் இன்னொரு பக்கம். 

“அலமு, பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல், வார்த்தைகளை ரொம்ப விட்டு விட்டாய். உன் மூத்த பிள்ளைக்குக் கல்யாணமாகப் போகிறது. இன்றைக்குப் பதினைந்தாம் நாள். மாமியாராகி விடுவாய். சாதாரணமாக என்றால் உன்னை நாங்கள் அதிகம் கவனிக்க மாட்டோம். ஆனால் இப்போதோ, உங்கள் உறவுமுறையை அணு அணுவாக ஆராய்வதுதான் எங்கள் முக்கியமான வேலை. நீ பேசினதில் ஒரு மாற்றுக் குறைவாக இருந்தாலும், நீ தோற்றுப் போனவளாகி விடுவாய். என்ன சொல்கிறாய்?” என்று முகம் சிவக்க, கோபத் துடன் கேட்டாள் பார்வதி. 

அலமேலு, மெல்லச் சிரித்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் தட்டினால்தான் சப்தம் வரும் என்பது அவளுக்குத் தெரியாதா?

“நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை பார்வதி, நீ என்ன சொன்னாலும் நான் அதற்கு ஒப்புக் கொள்கிறேன்,” என்றாள். 

“பந்தயம் இருபத்தைந்து ரூபாய். நீ ஜெயித்தால் பார்வதி உனக்குக் கொடுத்து விடுவாள். அவள் ஜெயித்தால் நீ அவளுக்குக் கொடுத்து விட வேண்டும். என்ன…?” என்றாள் மங்களம். 

“ஆகா. நான் தயார். என் மருமகள் வரும் வேளை, எனக்குப் பண வரவு ஏற்படப் போகிறது போலும்!” என்று அலமேலு சொன்னதும், பார்வதிக்குக் கோபம் அதிகமாயிற்று. 

ஆத்திரத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தவளின் கையைப் பற்றி அமுக்கி, அடக்கினாள் மங்களம். 

அதன் பின், இரண்டு மூன்று நாட்களில் பார்வதியும், மங்களமும் அவசர காரியமாக வெளியூர் கிளம்பிப் போய் விட்டனர். 

போவதற்கு முன்னால், மறக்காமல் பார்வதி அலமேலுவைச் சந்தித்து, “நான் வர ஒரு மாதமாகும். நான் இங்கே இல்லாவிட்டாலும் கூட, உன்னைக் கண்காணிக்க ஆட்களை வைத்துவிட்டுத்தான் போகிறேன்!” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனாள். 

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சேகரின் திருமணம் ஜாம் ஜா மென்று நடந்தது. வலது காலை முன்னால் வைத்து, அலமேலுவின் மருமகளாக, சுதா அந்த வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள். 

அவள் வீட்டிற்கு வந்த மறுநாள், எதற்காகவோ. “சுதா, இங்கே வாம்மா,” என்று அலமேலு அவளைக் கூப்பிட்டாள். 

“இதோ வந்து விட்டேன் அத்தை,” என்ற சுதாவின் வார்த்தைகள் அலமேலுவின் இதயத்தில் ஏமாற்றத்தின் முதல் அடியாக விழுந்தன. 

சுதா, தாயற்ற பெண். அலமேலு, அவளைத் தன் மருமகளாக்கிக் கொள்ள விரும்பியதற்கு அதுவே ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையில்லை. 

பெண் பார்க்கப் போன அன்றே, சுதாவைத் தன்னருகே இருத்திக் கொண்ட அலமேலு, “இதோ பாரும்மா சுதா, இத்தனை வருடங்கள்தான் நீ அம்மா இல்லாதவள். இனி, அப்படியில்லை. நான்தான் உனக்கு அம்மா. நீ அப்படித்தான் நினைத்துக் கொள்ளவேண்டும். பழக வேண்டும். கூப்பிட வேண்டும். புரிந்ததா?” என்று வாத்ஸல்யத்துடன் சொல்லியிருந்தாள். 

அந்த அவளது முதல் வேண்டுகோளுக்கு ஆரம்பத்திலேயே இப்படியொரு மறுதளிப்பா? ஏமாற்றம் அடைந்தாள் அலமேலு. கல்யாணத்திற்கு வந்தவர்களில் பாதிப் பேர் வீட்டிலிருந்ததனால், மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டாள். 

அப்புறம்… ஐந்தாறு நாட்கள் கழிந்தன. வந்தவர்கள் எல்லோரும் போயாகி விட்டது. 

வீட்டிற்கு வந்த புதுப் பெண்ணிடம், அவள் தன்னை ‘அம்மா’ என்று அழைப்பதுதான் தனக்கு விருப்பமானது என்பதை நாசூக்காகவும், ஜாடை மாடையாகவும் அலமேலு உணர்த்தியும் கூட,  சுதா தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. மறந்தும் கூட, அம்மா என்று கூப்பிடாமல், அழுத்தம் திருத்தமாக ‘அத்தை’ என்றே அழைத்தாள். 

இடிந்து போனாள் அலமேலு. கொந்தளிக்கும் கடலலைகளைப்போல் அவள் உள்ளம் குமுறிற்று. பார்வதியும், மங்களமும் பேசினது எத்தனை அனுபவ பூர்வமான வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டாள். கட்டியிருந்த மனக்கோட்டைகள் சரிந்து விட்ட அதிர்ச்சி அவளை ஆட்டிப்படைத்தது. 


நீர் நிறைந்து கண்களும் நடுங்கும் கரங்களுமாக நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தாள் அலமேலு. 

“அம்மா அம்மா. என்னம்மா இது?” சேகரின் குரல். 

கீழே விழுந்த குழந்தை அன்னையைப் பார்த்ததும் அழுவது போல, ஆரயிர் மகனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டதும், அலமேலுவின் துக்கம் கட்டுக்கடங்காமல் பெருகி வெளிப்பட்டது. 

“நான் தோற்றுப் போயிட்டேண்டா சேகர்!” 

விஷயத்தை க் கேட்டு அறிந்து கொண்ட மறுகணமே ருத்ரமூர்த்தியானான். “அம்மா, இத்தனை நாட்கள் இதை என்னிடம் சொல்லாமல் மறைத்தது பெரிய தவறு. நீ தோற்றுப் போவதாவது? விடுவேனா நான்?” என்று உறுமியவன், ‘தாட், தாட்’டென்று படிகளைக் கடந்து மாடியேறி, “சுதா, இங்கே வா!” என்று இடிக்குரலில் கூப்பிட்டான். 

ஓடி வந்தாள் சுதா.

அவளிடம் அலமேலுவைச் சுட்டிக் காட்டி, “அதோ நிற்கிறார்களே, அது யார்?” என்று கேட்டான் சேகர் 

புதிரான அந்தக் கேள்வியின் பொருள் புரியாத சுதா, விழித்தபடி, “ஏன் கேட்கிறீர்கள்? அத்தை தான் நிற்கிறார்,” என்றாள். 

அவ்வளவுதான். 

அவள் கன்னத்தில் ‘பளாரெ’ன்று ஓர் அறை விழுந்தது. 

“என்ன சொன்னாய்? அத்தையா? அவள் என்ன, உன் அப்பாவுடன் கூடப் பிறந்தவள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அவள் என்னைப் பெற்றெடுத்த தாயாராக்கும். என் அம்மா, உனக்கு அத்தையா? உன்னைத் தன் மகளாகவே பாவிக்கும் என் தாயாரை அம்மா என்று கூப்பிட உனக்குப் பிடிக்கவில்லையா?” 

“ஆமாம். பிடிக்கத்தான் இல்லை,” என்று அமைதியாய்ப் பதில் சொன்னாள் சுதா. 

சேகர், பேசச் சக்தியின்றி, ஸ்தம்பித்து நின்றுவிட்டான். கீழே நின்றுகொண்டு கேட்டுக் கொண்டிருந்த அலமேலுவோ அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டாள். 

சுதாவே தொடர்ந்து பேசினாள்: “நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதையும் விளக்கி விடுகிறேன். என் அம்மா போன பிறகு நான் சித்தியிடம் வளர்ந்தேன். அவள் அசல் ராட்சஸி. ஆனால் வெளியுலகத்திற்கு நல்லவளாக வேஷம் போட வேண்டும் என்பதற்காக. என்னை வற்புறுத்தி, அம்மா என்று கூப்பிடச் சொல்வாள். அந்த வார்த்தையின் போர்வையில்தான் தன் கொடுமைகளை மறைத்துக் கொண்டாள். ஆகவே சிறு வயதிலிருந்தே, அம்மா என்றால் அரக்கத்தனம் என்கிற அர்த்தம்தான் என் மனத்தில் வேரூன்றி விட்டது. உங்கள் தாயார் சாதாரணமானவர்களைப் போல இருந்திருந்தால் கூட, நான் நீங்கள் சொன்னபடி, அவரை அழைத்து விடுவேன். ஆனால் என் மாமியாரோ, தெய்வத்தின் மறுபதிப்பாக இருக்கிறாள். அப்படிப்பட்ட அன்புருவத்தை அந்த வார்த்தையைக் கொண்டு கூப்பிட என் நாக்குக் கூசுகிறது. மனம் மருகுகிறது. ஆனால்..ஆனால்… நீங்கள் ரொம்பவும் வற்புறுத்தினால், எப்படியாவது ‘அம்மா’வென்று கூப்பிடவே முயற்சிக்கிறேன்..” தழதழத்தது குரல். 

அலமேலுவிற்கு உடம் புல்லரித்தது. தன் வயதை மீறி வேகத்துடன் மாடியேறியவள், சுதாவை மார்புடன் இறுகத் தழுவிக்கொண்டு “கண்ணே சுதா, நீ என்னை அத்தை என்றே கூப்பிடம்மா. கல்கண்டு என்கிற பெயரில் எனக்கு எட்டிக்காய் தேவையில்லை” என்றாள். 

அப்போது, கீழே பார்வதியும் மங்களமும், அட்டகாசமாக சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். 

“ஏய், அலமு, ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகள் உன் மருமகள் உன்னை அம்மா என்று கூப்பிட போகிறாளாக்கும் என்று ஜம்பம் அடித்துக் கொண்டாயே, என்ன ஆயிற்று?” என்றார்கள். 

மௌனமாகக் கீழே இறங்கி வந்த அலமேலு, ரூபாய்த் தாள்களை எடுத்துப் பார்வதியின் கையில் புன்னகையுடன் கொடுத்தபடி, “பந்தயம் கட்டித் தோற்றுப் போய் விட்டேனில்லையா? இந்தா,” என்று சொன்ன போது, அவள் முகத்தில் தோல்வியின் தொய்வு சிறிதுமின்றி, வெற்றியின் பெருமிதம் கூத்தாடுவதை கண்டு, அவ்விருவரும் குழம்பிப்போய் நின்றனர்.

– 27 மார்ச் 1975

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *