கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 4,823 
 
 

‘தாயினும் சிறந்ததோர் கோவிலும்மில்லை ! ‘ என்று யார் சொன்னது..? தவறு. ‘ தந்தையிலும் சிறந்ததோர் கோவிலுமில்லை ! ‘ – என்றிருக்க வேண்டும்.

ஆமாம் ! எனக்கு அப்படித்தான் சொல்லத்தோன்றுகின்றது.

அம்மாவை நினைக்க நினைக்க…. அப்படியொரு ஆத்திரம் வருகின்றது.

அப்பாவை அவள் அந்த பாடு படுத்துகிறாள். வாலிப காலத்தில் முரண்டு, மூர்க்கமாயிருந்தாலும் வயதான காலத்திலாவது வாயடக்கம், கையடக்கமாக இருந்து கொண்டவனை அணைக்க வேண்டும்.

அப்படி இல்லாத அம்மா அம்மாவா..?! சும்மா….!!

அம்மா வேதவல்லிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அப்பா என்றால் ஆகாது. ஏட்டிக்குப் போட்டி, எடுத்தெறிந்து பேசுவாள்.

முத்தாய்ப்பாய் ……

” பத்துப்பிள்ளைகளைப் பொரித்துக் கொட்டி என் இடுப்பை ஒடிச்ச பாவி ! ” என்று எதற்கெடுத்தாலும் திட்டுவாள்.

பிள்ளைகள் பெற்ற கஷ்டம் உடலால், உள்ளத்தால் பாதிக்கப்பட்டுத்தான் அப்படித் திட்டினாள், நடக்கிறாளென்றால் வயதான காலத்திலும் தொடர்கிறாள். அவர் வருமானத்தையெல்லாம் சுருட்டுகிறாள்.

அப்பா பெற்ற பிள்ளைகள் எவரையும் நட்டாற்றில் விடவில்லை. மாறாக எல்லாருக்கும் நல்லது, கெட்டது செய்து கரை சேர்த்திருக்கிறார். அண்ணனுக்குக் காலாகாலத்தில் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் அனுப்பியிருக்கிறார்.

‘ ஐந்து பெண் பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி ! ‘ – என்பதை பொய்ப்பித்து நல்ல இடங்களில் திருமணம் செய்வித்து நல்வழி படுத்தியிருக்கிறார். என்னைப் படிக்க வைத்து, அரசாங்க வேலைக்கு அனுப்பியதோடு விடாமல் ஒரு நல்ல மனைவி மருமகளைத் தேர்வு செய்து குடும்பமாக்கி ஒதுக்கி இருக்கிறார்.

தம்பி… தங்கக் கம்பி. !

குடும்பத்திற்கு ஒன்று தத்தாரியாக பிறக்குமென்பதை மெய்ப்பிக்க வந்த ஆள். ‘ குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போகும் ! ‘ என்பதை பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை. ஆள் வாட்டசாட்டமாக… ஒதியம் போத்துபோல் வளர்ந்திருக்கின்றானே ஒழிய முழு சோம்பேறி. இருக்கும் காணியில் ஒரு வேலையும் தொடாமல் படுத்துக்கொண்டு சாப்பிடுகிறான். இது போதாதென்று உழைக்கும் அப்பாவிடம் அதிகாரம் வேறு.

அவனுக்குக் கால் கட்டு போட்ட கடமை அவன் பெண்டு பிள்ளைகளுக்கும் இவர் உழைத்துப் போடுகிறார்.

உழைப்பென்றால் சாதாரண உழைப்பில்லை. ஐந்து வேளி மிராசு. பெற்ற மக்களை எல்லாம் கரையேற்றியது போக மீதியை வைத்துக் கொண்டு… எழுபது வயதிலும் உட்கார்ந்திருக்க முடியாமல் மண்வெட்டி எடுத்து வயலில் வேலை செய்கிறார்.

மலை போல ஒரு பிள்ளை கொஞ்சம்கூட மனதில் ஈவு இரக்கமில்லாமல் படுத்துக்கொண்டு சாப்பிடுகிறானென்றால்…என்ன கொடுமை !!

அப்பா என்றைக்கும் சோம்பிப் படுத்தாதே கிடையாது. மிராசு என்பதை மறந்து எப்போதும் துறு துறு . ஒரு வினாடிகூட சும்மா இருந்தாரென்று காலத்துக்கும் கிடையாது. குடும்ப வருமானத்திற்கு வழி வேண்டி கோடை காலத்தில் கூட நூறு நாள் வேலைக்குச் செல்வார்.

வீட்டிலிருக்கும் மகன் அந்த வேலைக்குக்கூட செல்வது கிடையாது. இவனுக்கு மிராசு கௌரவம் !

இரவு ஏன் வீட்டில் சும்மா படுத்திருக்க வேண்டும்..? என்பதை மனதில் கொண்டு….

இந்த வருடம் கட்டிடம் கட்டும் இடமொன்றிற்கு இரவு காவல் வேலைக்குச் சென்று மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பு என்றால் அவர் உழைப்பு எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் குடும்பத்தைப் பார் என்றால் ஒரு நல்ல மனைவி என்ன செய்திருக்க வேண்டும்.? வருமானத்திற்குத் தக்க செலவு செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி மிச்சம் பிடித்தருக்க வேண்டும்.

அம்மா அது செய்யாமல் அப்படியே அமுக்கி…தன் கைக்கு மோதிரம், காதுக்குத் தோடு, கழுத்துக்குச் சங்கிலி என்று செலவு செய்து விட்டாள். அப்பாவின் ஒரு வருட வருமானத்தை அடியோடு அழித்து விட்டாள். அப்பா தினம் கொடுக்கும் சில்லறை காசுகளில் குடும்பத்தை ஒப்பேற்றிவிட்டாள்.

இது தெரிந்து அப்பா வருத்தப்பட வில்லை.

” வாலிப காலத்தில் என்கிட்டே அடியும் உதையும் வாங்கி ரொம்ப கஷ்டப்பட்டவள் ! ஆசைப்பட்டதைச் செய்துகிட்டாள். போகட்டும் போ..” பெருந்தன்மையாக சொல்லி விட்டார்.

தண்டத்திற்குப் படுத்திருக்கும் தம்பிக்குப் பொறாமை.

” கிழவன் பொண்டாட்டிக்குப் பொன்னால இழைக்கிறான் ! ” பேச்சு.

அம்மா அப்பாவை இதோடு விட்டாளா..? அப்பா தினம் கொண்டு வரவில்லை என்றால்.. சாடிக் குத்து, சலிப்புக் குத்து.

” கிழவனுக்குக் என்னாச்சு..? ” – பேச்சு.

” கல்லாட்டம்தான் இருக்கானே..! ” என நக்கல்.

அவளுக்கு இப்போது பணத்திலும் நகையிலும் குறியாக இருக்கின்றாள். ஐந்து பெண்களை பெற்றதால் எல்லாவற்றையும் கழற்றி மாட்டி விட்ட ஆதங்கம் இப்போது பூட்டிக்கொள்ள ஆசைப் படுகிறாள்.

அப்பாவின் வயதான காலத்திலா…இந்த ஆசை, ஆதங்கம்..?!

அப்பா நான்கு நாட்கள் வேலைக்குச் செல்லாததால்… இன்றைக்குபி பேச்சு அதிகம்.

வலியோடு வந்து வீட்டு வாசலில் உட்கார்ந்து சொன்னாரென்றால் எனக்கு எப்படி இருக்கும்..?

ஆத்திரத்துடன் அப்பா வீடு நோக்கி நடந்தேன்.

அம்மா மட்டுமிருந்தாள். தம்பி குடும்பமில்லை.

” எங்கே..? ” – கேட்டேன்.

” எல்லோரும் ஒரு திருமணத்துக்குப் போயிருக்காங்க ..”

வீட்டில் ஆள் யாருமில்லை என்றதும்… அம்மா மேல் இருந்த ஆத்திரம் இன்னும் அதிகமாகியது.

” உனக்கு அறிவே இல்லியா..? ” படீரென்று காய்ந்தேன்.

அம்மா திடுக்கிட்டு என்னை திகைப்பாய்ப் பார்த்தாள்.

” எதுக்கு அவராய் வறுத்தெடுக்கிறே..? . அவர் உழைப்பை பணமும், நகையுமாய்ச் சேர்க்கிறே…??!…”

” சொல்றேன். அப்பா ஒருத்தர் வருமானத்தில்தான்…. உன் தம்பி சோம்பேறிப் பய குடும்பத்திலிருந்து இங்கே எல்லாரும் குந்தி தின்றோம். இப்படி எல்லா வருமானத்தையும் சாப்பிட்டு அழிச்சிட்டா அவர் உடம்புக்கு ஒன்னுன்னா செலவு செய்ய பணம்…? பெத்தவங்களைக் காப்பாத்தணும்ன்னு பார்த்துப் பார்த்து செய்யிற உனக்கும் எவ்வளவுதான் நெருக்கடி கொடுக்கிறது…? உன் தம்பி குடும்பம் இருக்கிற வரை உழைக்கணும் என்கிறது அவர் தலையெழுத்து. அவன் உழைக்கட்டும்,தனிக்குடித்தனம் போகட்டும் . தங்கமாத் தாங்கறேன்.” என்றாள்.

எனக்குள் படாரென்று எதுவோ உடைந்து நெக்குருகியது.

அம்மா என்றால் சும்மாவா…?!! மனசு கேள்வி கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *