அம்மா நீ ஏன் அழகாயில்லை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 6,540 
 
 

“சுனோ ஜி, அவளக் கொஞ்சம் எழுப்பறேளா? எத்தன நாழி இன்னும் தூங்கணமாம் அவளுக்கு? பதினஞ்சு வயசாறது. இன்னும் இப்படிப் பொறுப்பில்லாம இருந்தா எப்படியாம்? போர்ட் எக்ஸாம் வருஷம். ரிவிஷன் நடக்கறது. ஒடம்புல ஒரு பயம் ஒரு உணர்த்தி இருக்காப் பாருங்கோ! ஏய்! சுமி, எழுந்திருடி. இல்லேனா மூஞ்சில தண்ணியக் கொட்டுவேன்”

பொரிந்து தள்ளிய மனைவியைப் பார்த்தான் காசி என்கிற காசிராமன்.

காசி எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். நடப்பது நடக்கும் என்ற எண்ணம் கொண்டவன். அசமஞ்சம்’ என்று அவனைக் கேலி செய்பவர்களும் உண்டு. இது அவன் காதிலும் விழுந்திருக்கிறது. ஆனால் அவன் அதற்கும் அசைய மாட்டான். அவன் பிறவி குணம்.

அவன் மனைவி உமா அவனுக்கு நேர் எதிரானவள். எப்பொழுதும் படபடப்பாகவே இருப்பாள். எதிலும் ஒரு அவசரம். அந்த அவசரத்துக்கு மற்றவர்கள் ஒத்து வராதபோது அவளுக்கு மூக்கின் மேல் கோவம் வரும். ஆனால் காசிக்கு அவள் மேல் கோவம் இல்லை. பாவம் அவள். வீட்டு வேலையும் செய்து கொண்டு, வேலைக்கும் போய்வந்து கொண்டு என்று அவள் சுமக்கும் பாரம் அதிகம். போதாததற்கு சுமி இந்த வருஷம் பத்தாவது வந்ததில் இருந்து அவளுக்கு ஒரு கடமை அதிகமாகிப் போனது. காலையில் அவளை கோச்சிங் கிளாஸ் கொண்டு விட்டுக் கூட்டி வருவது. ஒரு நாள் கூட அந்த கோச்சிங் கிளாசில் லீவு விடவில்லை. இதோ இந்த ரிவிஷன் ஆரம்பித்த பிறகு தான் கிளாஸ் நின்றது.

காசிக்கு ஷிப்ட் ட்யூட்டி.. ‘உங்க சோம்பேறித்தனத்துக்கு ஏத்த வேலை’ என்று உமா கிண்டலடித்தாலும் அதன் சோர்வு காசிக்குத் தான் தெரியும். காலையில் கண் விழிப்பது மிகவும் கடினமாக இருந்தாலும், தான் இல்லாவிட்டால் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் வரும் என்று தன் அவதியைப் பொருட்படுத்தாது எழுந்து விடுவான்.

இன்றும் அப்படித்தான் எழுந்தான். சுமியை எழுப்பிவிடத் தான் நினைத்தான். ஆனால் இன்று சம்ஸ்க்ருதம் பேப்பர். சுமி எப்பொழுதும் தொண்ணூறுக்கு மேல் தான் வாங்குவாள். மேலும் நேற்று இரவு ரொம்ப நேரம் வரை படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளை எழுப்ப அவனுக்கு மனது வரவில்லை. சரி கொஞ்ச நேரம் கூடத் தூங்கட்டும் என்று நினைத்தான். அதற்குள் உமா கத்த ஆரம்பித்து விட்டாள்.

“கொஞ்சம் பொறுமையா இரு உமா. நான் எழுப்பறேன்”.

“எல்லாம் நீங்க குடுக்கறச் செல்லம்தான். கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்கேள். பொண் கொழந்தை. நாளைக்கு போற எடத்துல “என்ன வளத்துருக்கா அம்மாக்காரி’ன்னு என்னத் தானே சொல்லிக்காட்டப் போறா”

“இன்னும் பத்தாவதே முடிக்கல. அதுக்குள்ள புக்காத்தப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டயா” என்று காசி கிண்டலடிக்க நினைத்தான். ஆனால் அடக்கிக் கொண்டு விட்டான். உமா காளியாகி விடுவாள்.

அதனால் மெளனமாக சுமியின் ரூம் நோக்கிச் சென்றான்.

கதவைத் தட்டினான். கதவு சாத்தப்படவில்லை. திறந்து கொண்டது.

“குட் மார்னிங் பா” என்றாள் சுமி பெட்டில் உட்கார்ந்தபடி. காசி சிரித்துக் கொண்டான்.

“குட் மார்னிங் டா செல்லம். எழுந்தாச்சுன்னா வெளில வர வேண்டியது தானே. ஏன் அம்மாவ டென்ஷன் பண்ற?”

ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி வெளியே சென்றாள் சுமி. சென்றவள் நேராக சமையல் ரூம் சென்று அங்கு வேலையாயிருந்த உமாவைக் கட்டிக் கொண்டாள். முதலில் திகைத்து, பிறகு சந்தோஷித்த உமா, “ கழுத கழுத. குளிக்காம கொள்ளாம விழுப்போட என்னடி மேல வந்து விழலாட்டம்? போய் நாழி முன்னால குளிச்சிட்டு, சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு புக்க எடுத்து படி. போடி” என்று அவளைத் தள்ளினாள்.

சுமி முகம் சுருங்கியது.

“ஒன்னப் போயி கட்டிக்க வந்தேன் பாத்தியா.. என்னச் சொல்லணும்” என்றபடி குளியல் அறை நோக்கிச் சென்றாள்.

மணி எட்டானது. சுமி ஸ்கூலுக்கு ரெடியாகி விட்டாள். டிபன் சாப்பிட்டாகி விட்டது. உமாதான் அவளை ஸ்கூலில் தினமும் டிராப் செய்வாள். அவளை டிராப் செய்துவிட்டு ஸ்டேஷன் சென்று வண்டியை விட்டுவிட்டு ட்ரெயினில் ஆபீஸ் போவாள்.

“அம்மா ரெடியாம்மா? நேரமாறது” என்றாள் சுமி.

“இன்னும் எட்டே ஆகல. ஊருக்கு முன்னால போயி ஸ்கூல பெருக்கவாப் போற? அதுக்குள்ள படிச்சுட்டயா? அஞ்சு நிமிஷம் கூட தரிச்சு ஒக்காரல போல இருக்கே. இப்படிப் படிச்சா எப்படி மார்க் வாங்கறது? மார்க் வரச்சே கண்ணுல ஜலம் விட்டு ஆகாத்தியம் பண்றது. ஒரு தடவையாவது முதல் ரேங் வாங்கிருக்கியா? அந்த அனிதாவப் பாரு. எப்பவும் பர்ஸ்ட் ரேங். அவ அப்பாம்மா கொடுத்து வச்சவா. எங்களுக்கு எங்க அந்தப் பொசிப்பு இருக்கு? என்று பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டாள்.

சுமி முகம் மீண்டும் சுருங்கியதைக் கண்ட காசி வாயைத் திறந்தான்.

“உமா, எந்த நேரத்துல எதப் பேசறதுன்னு இல்லையா? கொழந்தை ஸ்கூல் கெளம்பற நேரத்துல இது என்ன பேச்சு? பர்ஸ்ட் ரேங் வாங்கலேனா என்ன? செகண்ட் தர்ட் ரேங் வாங்கறா இல்லையா? அது போறாதா? எல்லாருமே பர்ஸ்ட் ரேங் வாங்க முடியுமா? கொஞ்சம் நிதானிச்சுப் பேசு உமா” என்றான்.

உமா அடங்கிப் போனாள். “எப்பவும் என்னத் தான் அடக்கத் தெரியும். பொண்ண ஒரு வார்த்த சொல்ல மாட்டார். எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லியபடி ஆபீஸ் கிளம்ப ரெடியானாள்.

ஒரு பத்து நிமிடத்தில் இருவரும் கிளம்பிப் போனார்கள். காசி விட்டத் தூக்கத்தைத் தூங்கப் போனான்.

மாலையில் ஸ்கூலில் இருந்து வந்த சுமி, எப்பொழுதும் போல் டிவி பார்க்க உட்காராமல் டிபன் சாப்பிட்டுவிட்டு புத்தகப் பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

அம்மா சொன்னதற்க்கான கோவம் போல இருக்கு என்று காசி நினைத்துக் கொண்டான். சரி எது எப்படியோ வீட்டில் சண்டை இல்லை என்றால் எல்லாம் சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

இரவு வீடு திரும்பிய உமாவுக்கும் சுமியின் செயல் ஆச்சரியமாகத் தான் இருந்தது. சந்தோஷமும் கூட. ஒன்றும் சொல்லவில்லை.

இரவு ஒரு முறை பாத்ரூம் போக எழுந்து வந்தபோது சுமி ரூமி விளக்கெரிந்து கொண்டிருந்தது. மணி ஒன்று. சிரித்துக் கொண்டான்.

முதல் நாளின் ஆச்சரியங்கள் மறு நாள் காலையிலும் தொடர்ந்தன. காலை ஆறுமணிக்கு எழுந்த உமா ஆச்சரியத்தின் எல்லைக்கேச் சென்றாள். அதற்குள் எழுந்து விட்டிருந்த சுமி தன் அறையில் படித்துக் கொண்டிருந்தாள்.

இப்படியே சில நாட்கள் ஆச்ச்சர்யகரமாகக் கடந்தன. அப்புறம் சுமியின் ரிவிஷனும் முடிந்து நார்மல் ஸ்கூலும் ஆரம்பித்தது. அன்று ரிவிஷன் பேப்பர்ஸ் திருத்தி கொடுப்பார்கள்.

காசிக்குச் சற்று பயமாகத்தான் இருந்தது. அந்த அனிதா மிகவும் நன்றாகப் படிப்பவள். தன் பெண்ணால் அவளைத் தாண்ட முடியுமா என்று சந்தேகம் தான். அவனுக்கு அது பற்றி கவலை இல்லை. ஆனால் உமாவை நினைத்தால் சற்று கவலையாக இருந்தது. அதுவும் பாவம் சுமி இந்த ரிவிஷனுக்கு மிகவும் உழைத்திருக்கிறாள். பலன் கிடைக்க வேண்டுமே குழந்தைக்கு என்று வேண்டிக் கொண்டான்.

சாயந்திரம் வந்த சுமியின் முகம் மிகவும் வாடியிருந்தது. டிபன் கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று தூங்கிப் போனாள். எழுப்ப மனமில்லாமல் காசி விட்டுவிட்டான். ஏழுமணிக்கு உமா வந்தாள்.

வந்தவளிடம் காசி மெதுவாக நடந்ததைச் சொன்னான். எங்கே அவள் கோவப் படுவாளோ என்று நினைத்தவனுக்கு ஆச்சரியம். “ பர்ஸ்ட் ரேங் முக்கியமில்லைங்க. பொறுப்பு வரணும்னு தான் சொன்னேன். நானே போய் எழுப்பறேன்” என்றபடி சுமி ரூமுக்குச் சென்றாள். காசியும் பின்னே சென்றான்.

“சுமி, சுமி, எழுந்திரும்மா. வெளக்கு வச்ச நேரம் இப்படிப் படுப்பாளா? எழுந்து ஏதாவது சாப்பிடு” என்று அன்போடு எழுப்பினாள்.

தூக்கம் கலைந்து எழுந்த சுமி, உமாவைப் பார்த்தாள். திடீரென்று அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த உமா “ அம்மா அன்னிக்கு சொன்னத மனசுல வச்சுக்காதடா கண்ணா. பர்ஸ்ட் ரேங் வரலைனா பரவாயில்ல” என்றாள்.

அழுத கண்களுடன் “ இல்லைம்மா நான் தான் இந்தத் தடவ பர்ஸ்ட் ரேங்!” என்றாள் சுமி.

காசிக்கும் உமாவுக்கும் இன்ப அதிர்ச்சி. “அப்புறம் எதுக்குடா அழற?”

“அந்த அனிதா இல்ல அனிதா, அவ இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டப்பறம் என்கிட்டே ஒண்ணு சொன்னாம்மா”

“என்ன சொன்னா? கங்க்ராட்ஸ் சொன்னாளா இல்லைக் கோபப்பட்டாளா?”

“கோபம் தான் பட்டாம்மா. ‘இந்த வாட்டி பர்ஸ்ட் ரேங் வாங்கிட்டதால பெரிய இவன்னு நெனைக்கதேடி. நான் தான் என்னைக்கும் பர்ஸ்ட். இந்த எக்சாம்ல வேணும்னா நீ என்னத் தாண்டியிருக்கலாம். ஆனால் லைப்ங்கற எக்சாம்ல நான் தான் என்னைக்கும் பர்ஸ்ட். உங்கப்பா என்ன வேலைடி பண்றார்? என்ன சம்பளம்? ஒரு நாப்பதாயிரம் இருக்குமா? எங்கப்பா பிசினஸ். மாசம் கொறஞ்சது மூணு லட்சம் சம்பாதிப்பார். எங்க வீட்டுல ரெண்டு கார். உங்க வீட்டுல இருக்கா? அத விடு. எங்க அம்மாவப் பாத்திருக்கியா? எவ்வளோ அழகு? இப்படி கேட்டாம்மா. அப்பா நீங்க ஏன்பா பிசினஸ் பண்ணல? நாம ஏன்பா பணக்காரங்களா இல்ல? அம்மா நீ ஏன்மா அவங்கம்மா மாதிரி அழகாயில்ல?.” மேலே பேசமுடியாமல் சுமி தேம்ப ஆரம்பித்தாள்.

உமா உறைந்திருந்தாள். காசியும் தான்.

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *