அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தாள். முகம் உணர்ச்சிகளைத் தொலைத்த பாறையைப் போல இறுகிக் கிடந்தது. சமையலறையை ஒட்டி ஒதுக்குப் புறமாய் இருந்த அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவள் படுத்திருந்த பாய் ஓரத்தின் சிவப்புத் துணி தேய்ந்து, நைந்து போயிருந்தது. அவளுடைய மெலிந்த உடலின் மேல் சுருங்கிய தோல் ஒரு போர்வையைப் போல சுற்றிக் கிடந்தது. இரண்டு வாரங்களாய் தண்ணீரைக் காணாத தலைமுடி பஞ்சு பஞ்சாய் திரிந்திருந்தது. பாதங்கள் இரண்டும் தேய்ந்து அடிப்பகுதி தட்டையாய், வெடிப்புகளுடன் காட்சியளித்தது. உதடுகள் உலர்ந்து போயிருந்தன. அவ்வப்போது ராசாத்தி பஞ்சை தண்ணீரில் நனைத்து அவற்றை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் தலை மாட்டில் அவளுக்காக வைத்த நொய்யரிசி கஞ்சி, கிண்ணத்துடன் காய்ந்துக் கொண்டிருந்தது. அறையினுள்ளே புழுக்கமாய் இருந்தது. ஓரமாய் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளிலிருந்து ஒருவித கம்மிய வாடை அடித்தத. அறையின் மின்விசிறி ‘கடக் கடக்’கென்ற சத்தத்துடன் ஒருவித தாளலயத்தில் மேல்தளத்தின் வெக்கையை கூடமெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அம்மாவின் புடவை இதர வேட்டி சட்டைகளுடன் சேர்ந்து அனல் காற்றில் ஆடியது.
மனிதர்களின் குணநலன்களை அவர்கள் அணியும் உடைகள் ஏற்றுக்கொள்கின்றன என்றே ராசாத்திக்கு தோன்றும். அண்ணன் சந்துவின் துணிகளில் ஒருவித இறுக்கம் தெரியும். அவனுடைய சட்டைகள் தனக்குள்ளேயே சுருண்டுகொள்ளப் பார்ப்பதான பாவனையில் இருக்கும். தம்பி பாசுவின் துணிகள் விரைப்பாக ஒரு அலட்சியத் தன்மையுடன் காட்சியளிக்கும்.
அம்மாவின் துணிகள் பார்ப்பதற்கே மெத்தென்று இருக்கும். புடவையைச் சுற்றிக் கொண்டு படுத்தால் அணைத்துக் கொடுப்பது போல… அதில் மஞ்சளின் வாடையுடன், தாழம்பூ குங்குமத்தின் வாடையும், அம்மாவின் வாசனையும் சேர்ந்திருக்கும். குளிர் காலங்களின் போர்வையைவிட அம்மாவின் புடவையை சுற்றிக் கொள்ளவதையே இவள் விரும்பியிருக்கிறாள்.
தூரத்தில் ஐஸ்வண்டிக்காரன் ‘அயீஸ்ஸ் . . . பாலேயிஸ் . . .கப்பேயிஸ் . . .’ என்று தன் குரலால் வெயிலின் சூட்டை தணிக்க முயன்றபடி சென்றுக் கொண்டிருந்தான்.
வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லியாகிவிட்டது. நேற்றே பெரிய அத்தையும், உறையூர் சின்னம்மாவும் வந்துவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து தம்பி கிளம்பி விட்டான். தெருவில் இருக்கும் ஒவ்வொருவராக பார்த்துவிட்டு செல்கிறார்கள். ஆட்கள் அதிகமாய் இருந்தும், வீடு மௌனத்தின் இழைகளில் இறுக்கமாய் பின்னப்பட்டிருந்தது.
அப்பா அறையின் மூலையில் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நாற்பத்தியாறு வருடமாய் தன்னுடன் வாழ்ந்தவள் தன்னை விட்டுப் பிரியப் போகும் அந்த கணத்தின் தாக்கம் அவர் கண்களில் நிதர்சனமாய் தெரிந்தது.
மாடு ஒன்று ‘ம்மாஆஆ…’ என்று கத்தியபடி வீட்டைக் கடந்து போனது. ஜன்னலுக்கு வெளியே இருந்த வேப்பமரம், வெயிலுக்கு கட்டுப்பட்டு மந்திரித்து விடப்பட்டது போல அசைவின்றி கிடந்தது. மரக்கிளையில் உட்கார்ந்திருந்த காகம் அடித்தொண்டையில் ‘கர்ர்ர்’ என்று ஆயாசத்துடன் கரைந்தது.
ராசாத்தி கடந்த இரண்டு வாரங்களாக இங்கே தான் இருக்கிறாள். பிள்ளைகளை அத்தைக்காரியிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள். அம்மா கிணற்றடியில் வழுக்கி விழுந்துவிட்டாள் என்று தொலைப்பேசியில் சொல்லப் பட்ட போது விஷயம் சாதாரணமாய் தான் இருந்தது. பொதுவாய் வியாதிகள் அத்தனையும் அம்மாவிடம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. காய்ச்சலைக் கூட மருந்தில்லாமலேயே கடந்து வந்திருக்கிறாள். எல்லா நோய்களையும், வயிற்றை காயப்போட்டும், இழுத்துப் போர்த்தி சற்று நேரம் படுத்திருந்துமே துரத்தியிருக்கிறாள். தலைவலியோ வயிற்றுவலியோ அவளுக்கு தொந்தரவு கொடுத்ததாய் இன்று வரை ராசாத்தி அறிந்திருக்கவில்லை. மாதாந்திரத் தொந்தரவுகள் கூட அவளுக்கு இருந்ததாய் தெரியவில்லை. அம்மா என்பவள் அனைத்தையும் கடந்தவள் என்ற மனத்தோற்றமே அவளுக்கு அன்று வரை ஏற்படிருந்தது.
அவள் இரண்டு நாட்களாய் எழுந்திருக்காமல் படுத்திருப்பதை அறிந்த போது தான் துணுக்கென்றது.
‘பிள்ளைகளுக்கு இல்லாத வருத்தம் இவளுக்கு எங்கேயிருந்துடி வந்துது!’ என்ற அத்தைக்காரியின் அங்கலாயிப்பை பொருட்படுத்தாமல் கிளம்பினாள். இங்கு வந்த போது தான் நிலைமை அவ்வளவாய் சுகம் இல்லை என்று புரிந்தது.
சாதாரணமாய் அம்மா படுத்திருந்து அவள் பார்த்தது கிடையாது. காலையில் வீட்டு சமையலை முடித்து, களையெடுப்பவர்களுக்கு தனியே சமைத்து எடுத்துக் கொண்டு, வாசலில் காலை நீட்டியபடி பாக்கு இடித்துக் கொண்டிருக்கும் அப்பத்தாவிடம் தம்பியை ஒப்படைத்துவிட்டு, இடுப்பில் அன்னகூடையை இருத்திக் கொண்டு அம்மா கொல்லிக்கும், கழனிக்கும் காலில் செருப்பில்லாமல் அப்படித் தான் ஓடுவாள். கோழிக் கூவுவதற்கு முன் எழுந்திருப்பவள் எப்போது படுக்கிறாள் என்பது ராசாத்திக்கு புதிராகவே இருந்திருக்கிறது.
அக்கம்பக்கத்தாருடன் ஆற அமர இரண்டு வார்த்தை பேசக் கூட அப்பத்தா விட்டதில்லை.
‘போய் வேல வெட்டியப் பாருங்கடி!’ என்று வந்தவர்களையும் திருப்பி அனுப்பிவிடும்.
‘பொம்மனாட்டிங்க கூட்டம் போட்டா வெளங்கினாப் போல தான்!’ என்று முனகிக் கொள்ளும் . அப்பத்தாவின் காலம் முடியும் மட்டும் அம்மா நன்றாகவே பார்த்துக் கொண்டாள். கடைசியில் கைகால் இழுத்துக் கொண்டு கிடந்த போது கூட முகம் சுளிக்காமல் கழிவுகளை சுத்தம் செய்தாள்.
‘இப்படி ஒரு கெடப்பு யாருக்கும் வரக்கூடாதுடி! உடம்பு நல்லாயிருக்கும் போதே போயி சேர்ந்துடனும்’ என்று சொல்லியிருக்கிறாள் ராசாத்தியிடம்.
அம்மா அவ்வளவு பிரமாதமாய் சமைப்பவள் இல்லை. அப்பாவிற்கு உப்பு, காரம், புளிப்பு இதெல்லாம் மிதமாகவே இருக்க வேண்டும். கல்யாணாமான புதிதில் அம்மா ஞாபகமில்லாமல் இரண்டு முறை உப்பைப் போட்டுவிட்டாள். அதை வீணாக்க விடாமல் அவளையே சாப்பிட வைத்திருக்கிறார் அப்பா. அன்றைய சம்பவத்தின் பாதிப்பு இன்றைய சமையலிலும் தெரியும். அசைவமும் கூட உப்பு உறைப்பு கூடிவிடப் போகும் பயத்தில் சமைத்ததாகவே இருக்கும். வீட்டிலுள்ள அனைவருக்கும் இந்த சுவை பழகிவிட்டாலும் பாசுவிற்கு மட்டும் இது பிடிப்பதில்லை.
‘உசிரே இல்லாம இதென்ன குழம்பு’ என்று கோபப்படுவான்.
‘உம்பொண்டாட்டி வந்ததும் ருசியா செய்யச் சொல்லுடா!’ என்பாள் அப்பத்தா. இப்போது வெண்ணை தடவிய ரொட்டியும் குளிர்ந்த பாலையும் குடித்துவிட்டு மனைவியுடன் கணினியைத் துரத்திக் கொண்டிருக்கிறான்.
அம்மாவுக்கு ராசாத்தியை படிக்க வைத்து வாத்தியாரிச்சியாக்க வேண்டும் என்று ஆசை . படிக்காது இருப்பதன் கஷ்டத்தை முழுமையாய் புரிந்துக் கொண்டிருந்தாள் அவள். தன்னால் இயன்றவரை பல விஷயங்களை கிரகித்துக் கொள்ள முயன்றிருக்கிறாள்.
‘ப்ளாஸ்டிக் தாள் தரையில பொதஞ்சுட்டா மழத் தண்ணிய உள்ள விடாதாம்!’
அவற்றை சேகரித்து பொந்துகளை அடைத்தும், ஒழுகும் இடங்களில் செருகியும், மறுபயனீடு செய்தாள். உலகரீதியாய் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சனைக்கு சுலபமான தீர்வை கண்டுபிடித்திருந்தாள். பிள்ளைகளிடமிருந்து தன் பெயரை எழுத கற்றுக் கொண்டாள்.
சிறு வயதில் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு மாங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ராசாத்தியை விளக்கமாறால் அடித்து பள்ளிக்கு துரத்தியிருக்கிறாள். அன்று இரவு அவளை அணைத்தபடி அழுதாள்.
‘எம்பொழப்பு தான் நாய் பொழப்பு ஆகிப்போச்சு. நீயாவது பெரிய படிச்சு நல்லாயிருக்கணும்டி! படிக்கலைன்னா ஒங்கப்பா ஒன்ன சமஞ்சதுமே கட்டிக் கொடுத்துடும்.’ என்றாள்.
‘பொம்பள புள்ளைக்கு படிப்பெதுக்கு. அவள போட்டு ஏண்டி தொல்ல பண்றவ’ன்னு அப்பாத்தா தான் வைதுக் கொண்டிருக்கும். ராசாத்திக்கு அப்போது அதெல்லாம் புரியவில்லை. புளியங்காயும், பாண்டியாட்டமும், சினிமா கொட்டாயுமே பெரிதாய் இருந்தன. ரஜினியைப் போல, கமலைப் போல ஒரு ராஜகுமாரன் குதிரையில் வந்து தன்னை தூக்கிக் கொண்டு போய் சந்தோஷமாய் வைத்துக் கொள்வான் என்று நம்பினாள்.
சொந்த மாமன் மகனுக்கு கட்டிக் கொடுக்க முடிவு செய்த போது இரண்டு நாட்களுக்கு சோறு தண்ணி எடுத்துக் கொள்ளாமல் அழுதாள், அம்மா. அதை இப்போதும் அத்தைக்காரி குத்திக் காட்டிய படி இருக்கிறாள். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கும் போதும், கொசுக்கடியில் மாடுகளை கழுவி விடும் போதும், அத்தைக்காரியிடம் ஏச்சு வாங்கும் போதும் கஷ்டப் பட்டு படித்து வாத்தியாராகியிருக்கலாம் என்று தோன்றும் ராசாத்திக்கு.
வெளியே ஒற்றை ஓலமும் ‘தப தப’வென்ற காலடிச் சத்தமும் பெரிதாய் கேட்டன. அண்ணி ப்ரேமாவின் குரல். அண்ணன் வந்திருக்க வேண்டும். புடவை பறக்க வேகமாய் உள்ளே வந்தவள் அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்துக் கொண்டு
“என்னவுட்டுட்டு போயிடாதத்த… ம்ஹீ.. . . .ஹீம்…”
“உன்னய எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி ராணி மாதிரி வச்சிக்கணும்னு ஆசப்பட்டேனே! ம்ம்ம்…”
“அத்த… நீயில்லாம உம்புள்ளையும் நானும் தவிச்சுப் போயிடுவோமே! பேரப் புள்ளங்க ஏங்கிப் போயிடுமே அத்த…”
அம்மாவின் கால்களில் தலையை முட்டிக் கொண்டாள். அம்புஜம் பெரியம்மா தான் அவளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டாள். அந்த அழுகையில் ஊர் வாயின் மீதிருந்த பயம் தெரிந்தது. எல்லாரும் அமைதியாக இருந்த போது, இவள் மட்டும் இப்படி அழுதது அசம்பவமாய் இருந்தது.
அம்மா நன்றாய் இருந்த போது, அண்ணிக்கும் அவளுக்கும் ஒத்துப் போனது இல்லை. அம்மா சொல்வது சரியாய் இருந்தால் கூட வலிய வேறொன்று செய்யும் குணம் தான் அண்ணிக்கு. தன் வீட்டிலிருந்து நாத்திக்கு எதுவும் போய் சேரக் கூடாது என்பதில் குறியாய் இருந்தாள். தனிக் குடித்தனம் போக வற்புறுத்தி அண்ணனை இழுத்துக் கொண்டு போனதில் அம்மவின் பிரச்சனைகள் சற்று குறைந்திருந்தன.
இருப்பதையெல்லாம் பிள்ளைக்கு செய்துவிட்டு பெண்ணிற்கு செய்ய முடியாமல் போய்விட்ட வருத்தம் அம்மாவிற்கு கடைசிவரை இருந்தது. வறுமையிலிருந்த போதே கட்டிக் கொடுத்ததில் பெண்ணிற்கு சீரென்று பெரிதாய் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. இன்றும், அம்மாவின் முகத்திற்கு நேராகவும், அப்பாவிடம் மறைமுகமாகவும், ராசாத்தியிடம் செயல்களின் மூலமாகவும் அத்தைக்காரி சொல்லிக் காட்டியபடி தான் இருக்கிறாள். அம்மா எதையும் வெளிக் காட்டிக் கொண்டதில்லை. ‘புள்ள புள்ளன்னு அவனுகளுக்கே செஞ்சிட்டாரேடி இந்த மனுஷன்’ என்றிருக்கிறாள் ஒருமுறை. வியர்த்து போயிருந்த அம்மாவின் முகத்தைத் தன் முந்தானையால் துடைத்துவிட்டாள் ராசாத்தி.
அதிக நேரம் மின்விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்த போதும், உடலில் வியர்வை பிசுபிசுப்பு இருக்கத் தான் செய்தது. தாகம் தொண்டையை வரட்டியது. எழுந்து போகும் சில நிமிடங்களில் அம்மாவிற்கு ஏதேனும் ஆகிவிடக் கூடும் என்று பயமாய் இருந்த்து ராசாத்திக்கு. கால்களைக் கட்டியபடி அம்மாவின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
வெயில் வெளியே மேற்கு பக்கமாய் சரிந்துக் கொண்டிருந்தது. தெருவில் மாடுகள் சாணம் போட்டபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தன. பறவைகள் கூட்டம் கூட்டமாய் வீட்டிற்கு மேலிருந்த ஆகாயத்தைக் கடந்துக் கொண்டிருந்தன. காகங்களின் கரைச்சல் காதை அடைத்தது. தூரத்தில் ரயில் கடக்கும் சத்தம் மெலிதாய் கேட்டது.
தெருவில் பூக்காரன் குரல்கொடுத்துக் கொண்டு சென்ற அந்த நேரம் அம்மாவைச் சுற்றியிருந்தவர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. அம்மாவிடம் லேசான அசைவு தெரிந்தது . ராசாத்தி படக்கென்று எழுந்து அம்மாவின் முகத்தருகே சென்றாள். லேசாக திறந்த அம்மாவின் கண் ராசாத்தியை அடையாளம் கண்டு கொண்டது போல அவள் மேல் சற்று நேரம் பதிந்தது. சட்டென்று உடலில் ஒரு அதிர்வு தெரிய, பார்வை விட்டத்திற்கு தாவியது. அதை வெறித்தபடியே அடங்கிப் போனாள் அம்மா. ஓவென்ற ஓலம் அறையை நிறைத்தது.
– 2 நவம்பர் 2011