அம்மா என்றொரு பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 10,856 
 
 

அன்றைக்கெல்லாம் அவனுக்கு மனமே சரியில்லை. அதற்குக் காரணம் லண்டன் வெயில் மட்டுமல்ல, வெப்பம் தொண்ணுறு டிகிரிக்கு மேற்போய் உடலிலுள்ள நீரெல்லாம் வியர்வையாகக் கசிகிறது.

அவன் மனம் ஏதோ நிம்மதியில்லாமலிருந்தது. உடம்பு துடித்தது. உள்ளத்தில் ஏதோ பாறாங்கல்லைத் தூக்கிவைத்த பாரம். அழவேண்டும் போல் ஒரு உணர்வு.

அவன் தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து எத்தனையோ தரம் அழுதியிருக்கிறான். அவனையழப் பழக்கியது அவனின் அம்மாதான்.

~~உப்பு வைத்த பாத்திரம் மாதிரி கசிந்துதொலையாமல் மனதில் உள்ளதைச் சொல்லியழேன்” என்று இவன் சின்னப்பையனாக இருந்தபோது சத்தம் போட்டிருக்கிறாள். இவன் விக்கி விம்மிக்கொண்டு மனதில் உள்ளதைச் சொல்லியழுவான்.

இன்றைக்கும் ஏதோ ஒரு துயர் மனதையழுத்திக்கொண்டது. ஊரிலிருந்து கடிதம் அடிக்கடி வராது. டெலிபோனுக்குள் இறப்புக்கள், பிறப்புக்கள் செய்திகள் பரிமாறப்படுகின்றன.

பெரிய மாமிக்கு இவன் போன கிழமை டெலிபோன் கோல் எடுத்தான். மாமி கொழும்பில் இருக்கிறாள். இவனின் குடும்பம் மட்டக்களப்பிலிருக்கிறது.

ஊரைச்சுற்றி அடிக்கடி ராணுவச் சுற்றிவளைப்பு நடப்பதாலும், அடிக்கடி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதாலும் இவன் வீட்டாரும் எத்தனையோ ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் போல விலங்கிடாக் கைதிகளாக வீட்டோடு கிடக்க வேண்டியிருக்கிறது. இவன் அம்மாவைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தான்.

பெரியமாமி இவனுடன் பேசும்போது இவனின் தாயின் சுகவீனம் பற்றிச் சொன்னான். அம்மாவுக்கு அடிக்கடி மாரடைப்பு வரும். அவன் வாழும் சூழ்நிலைப்படி, எப்போது என்ன நடக்குமோ என்று தெரியாத பயங்கரச் சூழ்நிலையில் வாழ்பவர்கள் அவர்கள். சாதாரணம் என்ன என்று தெரியாமல், அசாதாரணங்களே வாழ்க்கையின் நியதிகளாக அமைந்த இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் மாரடைப்புக்களும் மரணங்களும் சர்வசாதாரணங்கள்.

பூகங்கமும், பெருமழையும் ஊரையழித்தால் அது இயற்கையின் கொடுமை எனலாம். இப்போது ராணுவமும், அராஜகமும் ஆட்சி செய்து மனித வாழ்க்கையை அழிக்கிறது.

அவன் மனக்குழப்பத்தோடு கட்டிலுக்குப் போனபோது பாலசந்தரின் வீணையை ~ரேப்|பில் தட்டிவிட்டு கட்டிலில் சாய்ந்தான். மதுரமான அந்த வீணையொலி மனதின் சலனத்தைக் கொஞ்சம் குறைத்தது. இசையில் எந்தத்துயரத்தையும் மறக்கலாம் என்பதை தாலாட்டின் மூலம் சொல்லித்தந்தவள் அம்மா.

டெலிபோன் மணியடித்த போது, வீணையொலி ஓங்கிச் சத்தம் போடுகிறதோ என்று ஒரு கணம் யோசித்தான். சுரம் தவறிய வீணையொலிபோல் டெலிபோன் அடித்துக்கொண்டிருந்தது.

அரைகுறை நித்திரையில் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டு ரிசீவரை எடுத்தான்.

பெரியமாமி கொழும்பிலிருந்து பேசினாள். ~~தம்பி ரமேஷ்….|| மாமி விசும்பத் தொடங்கினாள். இவனுக்கு வயிற்றில் நெருப்புப் பற்றியது.

யாரை இராணுவம் கொலை செய்திருக்கும்? குடும்பத்தில் எந்தப் பையனை இயக்கம் கடத்திக்கொண்டு போயிருக்கும்?

இவன் சிந்தனை தறிகெட்டுப்போய்க்கொண்டிருந்தது.

~~தம்பி…..அம்மா…..அம்மா…||

மாமி அழுதாள்.

இவனின் இருதயத்தில் ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தன.

அம்மாவின் புன்னகை ஞாபகம் வந்தது. அவள் இவனைப் பாடசாலைக்குக் கூட்டிக்கொண்டுபோன முதல்நாள் ஞாபகம் வந்தது. இவன் அம்மாவின் முந்தானையில் மறைந்துகொண்டு தமிழ்ப் பண்டிதர் பரமலிங்கத்தைப் பயத்துடன் பார்த்ததை எத்தனை மாணவர்கள் ரசித்துச் சிரித்தனர்.

அந்த ஞாபகத்தைத் தொடர்ந்து, இவன் இளமைக்கனவுடன் மாரடித்த காலத்தில்~~அவள் நல்ல அழகான பெட்டையா|| என்று அம்மா இவன் காதலியைப் பற்றி குறும்பாகக் கேட்டதும், திடீரென்று காதில் கேட்டது.

அம்மா எத்தனை சந்தோசத்துடன் ~அவளைப்| பற்றி விசாரித்தாள். அவளும் இவனைத் துறந்துவிடடாள். அம்மாவும் இவனைப் பிரிந்துவிட்டாளே.

இவன் குழந்தை போலத் தேம்பியழுதான். லண்டன் நகரத்து இரவு லைட்டுக்கள் இவன் சோகத்துக்காகவோ என்னவோ ஒரு தரம் சட்டென்று ஒளியிழந்து மீண்டது. நேற்றுப் பின்னேரம் லண்டனில் மிகவும் அதிசமாகப் பவர் கட் ஏற்பட்டது. இப்போது இந்த லைட்டுக்கள் ஒளியிழந்து மீண்டது அந்தப் பவர் கட்டின் மிச்சசொச்சமாக இருக்கலாம்.

யாருக்குப் போன் பண்ணியழலாம்? லண்டனில் எத்தனையோ சினேகிதர்கள். சேர்ந்திருந்து பீர் அடிக்கும் சினேகிதர்கள்.யூனிவர்சிட்டி ஸ்ராப் ரூமில் தத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சக ஆசிரியர்கள். லண்டன் திரைகளில் தமிழ்ப் படம் (அத்தி பூத்தாப் போல் எப்போதாவது ஒரு நாள்) அல்லது தமிழ்க் கலை நிகழ்ச்சிகள் என்று பார்க்கப்போகும் போது சேர்ந்து கலந்துரையாடும் ~இன்டர்லெக்ஷ_வல்கள்|, பழைய சினேகிதர்கள் (பரந்து கிடக்கிறார்கள் லண்டன் முழக்க).

இவனைப் புரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு சில இளம் மாணவர்கள், இவனின் வாழ்க்கையைப் பிகிர்ந்துகொண்டவளின் (முன்னொரு காலத்தில்) பழக்கத்தால் உண்டான பெண்ணிய எழுத்தாளர்கள், இவனோடு சேர்ந்து மனந்துறந்து வாழ்க்கையை விமர்சனம் செய்யும் சில நல்ல சினேகிதர்கள், இப்படியென்று எத்தனையோ பேர் லண்டனில் இருக்கின்றார்கள்.

அவர்களையெல்லாம்விட உறவினர் என்ற கும்பலில் ஊரிப்பட்டோர் இவனுக்கு. அம்மா இறந்த விடயத்தை இவன் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அழாமல் இவனால் அம்மாவின் மரணத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியுமா? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வரப்போவதில்லை என்று இவனைத் தேற்ற இவரின் மாமனார் பெரியதம்பி வந்து சேருவார்.

லண்டன் தெருக்கள் அமைதியில் ஆழ்ந்து கிடந்தன. இரவு நான்கு மணி, அல்லது அதிகாலை நான்கு அணி என்றபடியால் அதிக சந்தடியில்லை. எப்போதாவது ஒரு கார் இவனது தெருவால் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் அழுதான். அவன் பார்வை ஜன்னல் வழியால் பாய்ந்தோட மனத்திரை பழைய நினைவுகளைப் படம்பிடித்தது. அழுகை சுகமாக இருந்தது. மனத்தை அழுத்திய பாரம் நீராகக் கசிந்தது.

அம்மா இறந்துவிட்டாளா? உண்iமாகவே என்னைப் பிரிந்துவிட்டாளா! அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

மஞ்சள் நிறவெயிலான அவள் மதிவதனம் மரணத்தின் பிடியில் நீலம்பாரித்து கோரமாய்ப்போயிருக்குமா? அம்மா சிரித்தால் மெட்டி குலுங்குவது போலிருக்கும். அப்பா இந்தியாவிலிருந்து வாங்கிக்கொண்டுவந்த காற்சங்கிலி அவளின் மெண்டையில் கிணுகிணுக்க அவளின் புன்சிரிப்பின் சாயல் சேர்ந்து இசை சொல்லும் ஓவியமாகுமே. அந்தச் சிற்பம் செத்துவிட்டதா? ஒரு மனிதனின் முதற் தொடர்பு, முதல் அன்பு இன்று முற்றுப்பெற்றுவிட்டதா?

அம்மா இறந்த விடயத்தை சொந்தக்காரர்களுக்குச் சொல்ல முதல் அம்மாவுக்காகத் தன்னால் முடிந்த வரைக்கும் அழவேண்டும் போலிருந்தது. இவன் பிறக்கும் போது அவள் வேதனையிற் துடித்திருப்பாளே, இப்போது இவன் துடிக்கிறான். இவனுக்காக அம்மா எத்தனையோ தரம் அழுதிருக்கிறாள். அவன் அறியாத வயதிலிருந்தே அழத் தொடங்கியிருப்பாள்.

அவனின் யோசனை டெலிபோன் மணியடித்ததில் தடைப்பட்டது. இந்த அதிகாலையில் சொந்தக்காரராகத்தானிருக்கும். பெரியதம்பி மாமாதான் போனில் பேசினார். கொழும்பிலிருக்கும் மாமி அவருக்கும் போன் பண்ணி அவருக்கு விடயத்தைச் சொல்லியிருக்கிறாள் போலும். அவர் சொன்ன ஹலோவில் கலக்கம் தெரிவிந்தது.

~~………சொறி தம்பி|| பெரிய தம்பி மாமா தன் அழுகையை மறைத்துக்கொண்டு பேசினார். பெரியதம்பி மாமா அம்மாவின்; ஒன்றைவிட்ட தமையன். சொந்தத் தங்கச்சி மாதிரி அம்மாவைப் பார்த்துகொண்டவர். தங்கச்சியின் பையன் ரமேஷ் தன் மகள் சுலோச்சனாவைத் திருமணம் செய்யவில்லை என்ற கோபத்தில் நீண்ட காலம் உறவு வைத்துக்கொள்ளவில்லை.

ரமேஷின் திருமணம் விவாகரத்தில் முடிந்தபோது, ~~நல்ல காலம் என் மகளின் எதிர்காலம் ரமேஷிடம் போகாமலிருந்ததே” என்று சந்தோஷப்பட்டுக்கொண்டவர்.

~~மாரடைப்பால் செத்தது ஒரு விதத்தில் நல்லது. எங்கடை ஊரில் வருத்தம் வந்தால் மருந்தில்லாமல் கஷ்டப்பட்டுச் சாவதைவிட, ஒரேயடியாகத் தொலையுறது நல்லதுதானே|| மாமா பாதி தத்துவமாகவும், பாதி வாழ்க்கையின் வெறுப்பாகவும் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். ரமேஷ் ஒன்றும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

~~எப்ப சவம் எடுப்பினமோ தெரியவில்லை. ஊரிலை பெரிய ரவுண்டப் நடந்துகொண்டிருக்காம்.

மாமா இவனைக்கேட்டார்.

அம்மா இறந்துவிட்டாள். அவள் உடம்பு நாற்றமெடுக்க முதல் வீட்டிலுள்ள சொந்தக்காரர் அவளை எரித்துவிடலாம். அல்லது புதைத்துவிடலாம்.

~~எங்கள் ஊரில் இப்போதெல்லாம் சாவு சடங்கென்றில்லையே சுடலைக்குக் கொண்டு போக இராணுவம் விடாவிட்டால் வீட்டுத் தோட்டத்தில்தான் புதைக்க வேண்டும்.||

மாமா சொல்லிக்கொண்டேயிருந்தார்.

அவன் போனை வைத்தான். அவனால் அழாமல் எதையும் கேட்க முடியவில்லை. ஊரிலிருந்தால் இந்தப் பொறுப்பெல்லாவற்றையும் அவன் செய்திருப்பான்.

இன்று அவன் ஆயிரககணக்கான மைல்களுக்கப்பால் தாயின் மரணத்தின் துயரைப் பகிர்ந்து அழுச் சகோரங்கள் கூட அருகில் இல்லாமல் தவிக்கிறான். அந்த விடியற்காலை இருள்விலகி வெளிச்சம் வரத் தொடங்கிவிட்டது. லண்டனில் சம்மர் காலமென்றால் நான்கு மணிக்கே விடியத் தொடங்கிவிடும். தெருவில் சந்தடி கூடிக்கொண்டுவந்தது. முகம் கழுவவும் மறந்த நிலையில் அறையைப் பூட்டி தெருவில் இறங்கினான்.

நல்ல காலம் இன்றைக்கு சனிக்கிழமையாததால் யுனிவர்சிட்டிக்குப் போகத் தேவையில்லை. பின்னேரம் அவனது நண்பன் வருவதாகச் சொல்லியிருந்தான்.

அவனை வரவேண்டாம் எனச் சொல்ல வேண்டும். இருவரும் எலிஸ்பெத் ஹாலுக்கு தென்னாபிரிக்கக் கலை நிகழ்ச்சி பார்க்கப் போகத் திட்டம் போட்டிருந்தார்கள்.

ரமேஷ் கால் போன போக்கில் நடந்தான். தேம்ஸ் நதி கண்களில் பட்டது.

அம்மா இவனை இவர்களின் ஊரைச்சுற்றியோடும் தில்லையாற்றில் நீச்சல் அடித்து விளையாட அனுமதிக்க மறுத்தாள். தண்ணீரால் இவனுக்கு ஏதோ கண்டமாம். ஊர்க்குழந்தைகள் தில்லையாற்றில் வெள்ளம் பெருகி ஓடும் போது தாங்களும் சேர்ந்து புதுநீரில் குதூகலிப்பார்கள். இவன் அம்மாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கரையில் நின்று விளையாடுவான்.

அந்த இளமை ஞாபகமோ என்னவோ இவன் லண்டனுக்கு வந்ததும், தேம்ஸ் நதியில் தன்னைப் பறிகொடுத்துவிட்டான். தில்லையாற்றுப் புனலுக்கும் தேம்ஸ் நதியின் எண்ணெய் வழிந்த சோர்வுக்கும் எத்தனையோ வித்தியாசம் என்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேம்ஸ் நதியில் கால் நனைக்கத் தயங்குவதில்லை.

இந்த அதிகாலையில் கால்போன போக்கில் நடந்து வாட்டலூர்ப் பாலத்தையடைந்தான். ஊர் இன்னும் சரியாக விழித்துக்கொள்ளவில்லைவாட்டலூர் பாலத்தின் கரைகளில் வீடற்ற ஏழைகள் கம்பளிகளால் மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள். இவர்களின் உலகம் வாட்டலூர்ப் பாலத்தடியே. அவர்களில் யாரையாவது எழுப்பி,’ எனது அம்மா இறந்துவிட்டாள’; எனச் சொல்ல வேண்டும் போலிருந்தது.

ஆங்கிலேயக் கலாச்சாரத்தில் அழுவது மிகக்குறைவு. கண்ணீரைக் காட்டுவது கௌரவமில்லை. அப்படிக் கல்நெஞ்சம் இருந்தபடியினாற்;தானோ உலகமெல்லாம் போய் எத்தனையோ பாதகங்களைச் செய்துவிட்டு பேரரசை நிறுவினார்கள் போலும்.

அழவேண்டும் அந்நியர்கள் யாரையாவது நிறுத்திவைத்து அம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லியழவேண்டும் போலிருந்தது.

தேம்ஸ் நதியில் சில படகுகள் சோம்பேறியாய்ப் போய்க் கொண்டிருந்தன. இவனூரில் தில்லையாற்றில் இந்த நேரத்தில் இரவு மீனுக்குப் போன படகுகள் திரும்பிவந்துகொண்டிருக்கும். அம்மா உயிருடன் இருந்திருந்தால் பக்கத்துவீட்டுப் பையன்களிடம் காசைக்கொடுத்து ~~நல்ல கயல் மீனாக ஒன்று வாங்கிக்கொண்டு வா|| என்பாளா?

ஒரேயடியாக ஊருக்குப் போய் அவள் பிணத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது.

காலை ஆறு மணிக்கே லண்டன் பரபரத்தது.

அறைக்குத் திரும்பிவந்தபோது இரண்டொரு சொந்தக்காரர்கள் காத்திருந்தார்கள்.

ஒரு மாமி ஓவென்று அழுதுவிட்டாள். இந்த மாமிக்கு அம்மாவை ஒருநாளும் பிடிக்காது என்று சின்னம்மா சொல்லியிருக்கிறாள். அம்மா இறந்த துக்கத்தில் அழுகிறாளா?

அம்மாவின் நீண்ட தலைமயிரும், அழகான விழிகளும் அப்பாவைக் கவர்ந்த போது இந்த மாமியின் கனவுகளும் உடைந்ததாம். இந்த மாமிதான் அப்பாவின் முறைப்பெண்ணாம். அப்பாவைக் கட்ட ுந்தவளாம். இப்போது தங்கள் காணிகளைக்காட்டி வாங்கிக் கட்டிக்கொண்ட அப்பாவி மாமா ஒருத்தரையும் அகதியாக இழுத்துக்கொண்டு லண்டன் வந்துவிட்டாள். இந்த மாமிக்கு அம்மாவைவிட ஒன்றிரண்டு வயதுதான் குறைவாக இருக்கலாம். நரைத்த தலைக்கு ~டை| அடித்துக் கறுப்பாக்கியிருந்தாள்.

தங்களின் தலை கறுப்பாகவும், முகம் சுருங்கியும், பல் கறுத்தும் எங்கள் சனங்களைக் காணும் போது, ரமேஷ் குழம்பிப்போவான். ஏன் இந்தக் கோலம் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. இயற்கையை வெல்லப் போராட்டமா?

அம்மாவை அவன் பிரிந்து கல்லூரிக்குப் போன போது அவனுக்குப் பன்னிரெண்டு வயது. அம்மாவுக்கு முப்பது வயது. எத்தனையழகு அவள். அப்பா மயங்கியதில் என்ன பிழை?

இவனைக் கட்டிப்பிடித்து அழ அழவென்று அழுதாள். அந்த ஞாபகம் நிலைத்துவிட்டது. அந்தப் பிரிவு கிட்டத்தட்ட நிலையான பிரிவு. அதன்பின் அவன் ஊருக்குப் போனதெல்லாம் அவசரமான விடயங்களுக்காகத்தான் அவன் ஞாபகத்தில் நிழலாடுகிறது.

பதினாறவது வயதில் ரமேஷின் சினேகிதர்களில் சிலர் இவனுடன் ஊர் பார்க்க வந்தார்கள். புனல் பொங்கும் தில்லையாறு. கதிர்காணும் வயல்வெளிகள். பச்சை நிற வயல் வெளியில் புல்லெடுக்கும் பாவையர்கள், சோலை போன்ற தென்னைகள், காலையில் துயில் எழுப்பும் கிராமத்தாரின் இனிய புல்லாங்குழலிசை என்பன கண்டு திகைத்துவிட்டார்கள்.

அம்மாவைக் கண்டதுமே அவனின் நண்பர்களில் ஒருத்தன் வாயைப் பிளந்துவிட்டான். பச்சை வெல்வெட் துணியில் தைத்த சட்டையும், மஞ்சள் மைசூர் சேலையும் கட்டிய தேராக அம்மா கோவிலால் வந்துகொண்டிருந்தாள். முப்பத்துநான்கு வயதிலும் மினுமினுப்பும், அழகும் வந்த நண்பனைச் சொக்கப்பண்ணியதோ இல்லையோ ~~டேய் ரமேஷ் உன்னம்மா அஞ்சலிதேவி மாதிரி இருக்காடா|| என்றான்.

இருபது வருடங்களுக்கு முன் அந்த நண்பனைச் சந்தித்த போது, நண்பன் சைக்கியாடரிஸ்டாவும் ரமேஷ் சரித்திர விரிவுரையாளராகவும் மாறியிருந்தார்கள்.

~~அம்மா எப்படி|| என்றான் நண்பன்.

லண்டனில் எதையும் மனம்விட்டுப்பேசலாம். அந்தத் தருணத்தில் ரமேஷ் தன் மனைவியை விவாகரத்துச் செய்த கொடிய அனுபவத்தில் மனம் அதிர்ந்து ஒரு நாளைக்கு ஒரு போத்தல் விஸ்கியைக் காலி செய்து திரிந்தான். ரமேஷின் மனைவி ரேவதி இன்னொருத்தனைத் தன்னுடையவனாக்கியதை இவனாற் தாங்க முடியவில்லை. இவன் சரித்திரம் சொல்லிக்கொடுக்கும் விரிவுரையாளன். சரித்திர பாடத்தில் நெப்போலியனும், நெல்சனும் தங்கள் மனைவிகளுடன் எப்படி உறவு வைத்துக்கொண்டார்கள் என்று மாணவர்கள் கிண்டல் செய்த போhது, இவனுக்கு எரிச்சல் வந்தது.

இத்தனை படித்த இந்த விரிவுரையாளரின் மனைவி ஏன் எஞ்ஜினியரிங் படிக்க வந்த எலியட் என்ற இளம் ஆசிரியனுடன் அணைந்தாள் என்று இவனுக்கு விளங்கவில்லை.

ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ரேவதி வீட்டைவிட்டுப் போய்விட்டாள்.

எலியட்டுடன்தான் இணைந்து போனாள் என்ற ~ரகசியம்| ரமேசுக்குத் தெரிய இரண்டு நாட்கள் எடுத்தன.

~ஐயாம் சொரி| என்றான் எலியட் காஸில் என்ற ஆங்கிலேயன் . இவன் பெண்சாதி அவனுடன் போய்விட யார் யாருக்கு சொறி சொல்வதாம்?

~~நான்தான் உன் வாழ்க்கையைக் குழப்பினேன் என்று தினைக்காதே. உனது வாழ்க்கை எப்போதோ குழம்பிவிட்டது. நான் ஒருத்தன் சரியான நேரத்துக்கு வந்தேன் போலக் கிடக்குது|| எலியட் என்பவன் தயங்கித் தயங்கிச் சொன்னான். எலியட் என்பவனில் ரமேசுக்குக் கோபம் வரவில்லை. இவனுக்குத் தன்னில் வந்த ஆத்திரம்தான் தாங்க முடியாததாக இருந்தது. கல்லூரி நாட்களில் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட ரேவதி இன்று ~மெக்கானிக்கல்| எஞ்ஜினியரிங் விரிவுரை செய்யும் எலியட்டிடம் ஏன் துணை தேடினாள் என்பதை இவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

காற்றுக்குக் காதும் வாயுமுண்டோ? அம்மாவுக்கு எப்படி விடயம் எட்டியது என்று தெரியாது. கொழும்புக்கு ஓடிவந்துநின்று போன்கோல் எடுத்தாள்.

~~நான் என்னையா பிழை செய்தன்?” அம்மா குலுங்கிக்குலுங்கி அழுதாள். நல்லதொரு மகனை, கெட்டிக்கார மகனை ஊர் உலகம் மெச்சும் மகனைப் பெற்றெடுத்த பெருமையில் திளைத்திருந்தவளுக்கு தன் மூத்த மகளின் வாழ்க்கை இப்படி முறிந்து போனதைத் தன் பிழையெனத் தாங்கிக்கொண்டாள். அம்மா ஆயிரம் மைல்களுக்கப்பால் விசும்பிய மென்குரல் இவன் இதயத்தைக் குத்திப் பிளந்தது.

~ரேவதிக்கு என்ன குற்றம் செய்தாய்?| அம்மா தன் மகனை மறந்துவிட்டு இன்னொரு பெண்ணுக்காக நீதி தேடினாள். அப்பா இவனுடன் பேசவே மறந்துவிட்டார். ‘தான் கட்டிய பெண்ணைச் சரியாக வைத்திருந்தால் அவள் பிறத்தியானைத் தேடுவாளா?’ அப்பா அதிர்ந்தாராம்.

ரேவதிக்கு என்ன செய்தேன்?

ரமேஷ் விடை தேடியலைந்துப்போய் விஸ்கியில் தன்னை மறந்துவிட்ட காலங்களில் அம்மாவின் கண்ணீர்க்கடிதம் அவனையுலுக்கும்.

கல்யாணமாகி அடுத்த மாதமே கர்ப்பமாகிவிட்ட அம்மா பதினெட்டு வயதில் பெற்றெடுத்த மூத்த முத்து ரமேஷ். அம்மாவின் செல்ல மகன்.

தனக்கு ஒரு அண்ணா, தம்பி இல்லை என்ற குறையை ஆண்டவன் தீர்த்த நன்றியுடன் இவனைத் தன்னால் முடிந்தவரை ஒரு நல்லவனாக வளர்த்தாள் அம்மா.

அம்மாவின் ஒன்றைவிட்ட தமையன் ஒரு காலத்தில் பெரிய மிருதங்க வித்துவானாக இருந்தவர். இந்தியாவுக்கு இளமையில்போன அம்மாவின் ஒன்றைவிட்ட தமையன் ஊருக்கு வரும்போது ஒரு கையில் மிருதங்கமும், மற்றக்கையில் தஞ்சாவூர் பெண் ஒருத்தியுடனும் வந்துசேர்ந்தார். ரமேசுக்கு அப்போது பதின்நான்கு வயது. மாமியில் சொக்கிவிட்டான். இப்படியும ஒரு கவர்ச்சியா?

இந்திய மாமி மிக மிக அழகானவள். இரண்டு மூக்குத்திகள் பளபளக்க கண்கள் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும். அவள் வீணை படித்தவள். குரலே வீணை மாதிரித்தான். ரமேஷ் தன் சின்ன வயதில் அந்த மாமியில் பெரிய பற்று. அவளைப்போல ஒரு பெரிய பெண்ணை, வீணையுடன் அல்லது ஏதோ ஒரு சங்கீதத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட பெண்ணை இவன் ஆத்மா தேடிக்கொண்டிருந்தது. அந்த ஆத்மீகத் தேடலுக்கும் அவனுக்கு ரேவதி கிடைத்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

இலங்கையின் தலைநகர் கொழும்பு.யூனிவர்சிட்டியில் அந்த ரேவதி என்ற ~’பெரிய இடத்துப் பெண்| இவனை எப்படி தன்னிடமிழுத்துக்கொண்டாள் என்று இவனுக்குச் சரியாக ஞாபகம் இல்லை. காதல் வந்தது. பருவத்தின் எதிர்பார்பாலா அல்லது பழக்கத்தின் வளர்ச்சியாலா? அவளுடன் பழகியது, படம் பார்க்கப்போனது, மாணவர் கூட்டத்துடன் கூட்டமாக இயற்கையின் அழகிய இடங்களுக்கெல்லாம் அவள் அணைப்பில் அலைந்தது எல்லாம் கனவாகத்தான் போய்விட்டது.

யூனிவர்சிட்டி விடுமுறை ஒன்றில் ஊர் போயிருந்தபோது அம்மா இவனையுற்றுப் பார்த்தாள்.

~அவள் அழகியா?| அம்மா குறும்பாகக் கேட்டாள்.

இவன் திகைத்துவிட்டான்.

என்னென்று இவள் கண்டுபிடித்தாள்?

தாயறியாப் பிள்ளையும் தானறியா மனமுண்டோ? இவன் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

~~உன்ரை கண்ணில இத்தனை சந்தோசத்தை ஒரு பெண் தானே தரமுடியும்|| அம்h இவனுக்குப் பொரியலைப்போட்டபடி கடைக்கண்ணால் விசாரித்தாள். கையில் எடுத்த சாப்பாட்டை வாயில் போடாமல் அம்மாவைப் பார்த்தான் ரமேஷ்.

ரேவதியைப் பற்றி என்ன கேட்கப்போகிறாள்?

இவள் என்ன வித்தியாசமான அம்மாவாக இருக்கிறாள்? இருதயத்தில் பூட்டி வைத்திருந்த இவன் ரகசியத்தைப் பார்த்துவிட்டாள். அந்தப் பெண்ணின் சாதி என்ன? சமயம் என்ன? எத்தனை சீதனம் தருவார்கள் என்றெல்லாம் கேட்காமல் அவள் ~அழகியா?| என்று மட்டும்தானே கேட்கிறாள்?

தங்கைகள் இவனைச் சீண்டிவிட்டு வேடிக்கை செய்தார்கள். அடுத்த மாதம் இவள் யூனிவர்சிட்டிக்குத் திரும்பியபோது அம்மாவும் தங்கைகளும் நிறையப் பலகாரங்கள் செய்துகொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார்கள். மகனைத் தங்களிடமிருந்து பிரித்;து கொள்ளப்போகும் மகராசியைப் பார்க்கும் தவிப்பு அம்மாவுக்கு.

அண்ணாவைத் தன்னுடன் பிணைத்துக்கொண்ட காந்தத்தைப் பார்க்கும் தவிப்பு தங்கைகளுக்கு.

அவர்கள் கொழும்பு வந்ததை இவன் சொன்னபோது ரேவதிக்குப் பிடிக்கவில்லை.

‘நான் என்ன ஆடா மாடா இவர்களெல்லாம் பார்த்து சரி பிழை சொல்ல’ என்று கேட்டுவிட்டாள். அவர்களைப் பார்க்க மறுத்துவிட்டாள்

பட்டணத்துப் பெண்ணின் அகம்பாவம்அம்மாவைத் திடுக்கிடப்பண்ணவில்லை. கொழும்பிலுள்ள பணக்காரக் குடும்பத்தில் ஒரே பிள்ளையாக வளர்ந்தவள் ரேவதி. தனக்குப் பிடித்தமான வகையில் வாழ்ந்து பழகியவள். ரேவதியின் சுற்றாடலும் பழகிய மனிதர்களும் வித்தியாசமானவர்கள். ரேவதி கிராமத்து மண்ணின் மகிமையைத் தெரியாதவள். அம்மா தனது வாழ்க்கையில் முதற் தடவையாகக்; கொழும்புக்கு வந்ததே அவளைப் பார்க்கத்தான் என்று நன்றாகத் தெரிந்துகொண்டும் ரேவதி அவளைப் பார்க்க மறுத்துவிட்டாள்.

இவனின் படிப்பு முடிய ரேவதியின் தகப்பன் கொழும்பில் இவனுக்கு பெரிய வேலை ஒன்று வாங்கிக் கொடுத்தாhர். எதையும் வாங்கத் தயங்காத வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவள் ரேவதி. ரமேஷ் குடும்ம் சீதனம் என்ற வார்த்தையையே நினைத்துப் பார்க்காதவர்கள்.

இலங்கையில் தமிழர் இனவாதப் பிரச்சினை தொடங்கியவுடன் மத்திய தர வர்க்கம் நாட்டைவிட்டு ஓடியபோது ரேவதியும் இவனையிழுத்துக்கொண்டு லண்டன் வந்துவிட்டாள்.

அவன் பிறந்த கோளாவில் என்ற அழகிய சிறு கிராமம்,அதைக் கொஞ்சியியணைக்கும் தில்லையாறு. அதன் கரை தழுவிக் கிடக்கும் மணல் வெளிகள், பயிராகும் பாய்சல் நிலங்கள் முகில் கொஞ்சும் மலை முகடுகள், காலையில் துயிலெழுப்பும் புல்லாங்குழலிசை இவன் கனவில் அடிக்கடி வரும்.

தேம்ஸ் நதி, ஒருத்தரை ஒருத்தர் முந்த ஓடும் பொருளாதாரப் போட்டி, ஆத்மீகத்தை, மனிதத்தை மறைக்கும் மாயா ஜாலப்பொழுது போக்குகள் எல்லாம் அவன் அன்றாட வாழ்க்கையின் லண்டன் அம்சங்கள்.

அம்மாவின் காற்சங்கிலியின் கிண் கிண் என்ற ஒலி இவனை சில வேளை கனவிலும் உலுப்பும். தஞ்சாவூர் மாமியின் மூக்குத்தியில் டாலடிக்கும் வெள்ளைக் கற்கள் லண்டன் தெருக்களில் தொலைந்துபோன உணர்ச்சி வரும்.

ரேவதிக்கு இவன் ~மற்றத் தமிழர்| போலில்லை என்ற ஆதங்கம் வளரத் தொடங்கியது. ஒரு உழைப்புடன் இன்னொரு உழைப்பையும் செய்து காசு சேர்ப்பது லண்டன்வாழ் ஆசிய மக்களிடையே பரந்துகிடக்கும் பழக்கம்.

இவன் தன்னுழைப்பில் நிம்மதி கண்டான். கல்லூரி விரிவுரையாளனாக அவன் உழைத்தது அவனுக்கும் ரேவதிக்கும் தாராளமான வருமானம். உழைக்கும் நேரம் போக மிகுதி நேரங்களில் இசை என்றும் நாடகம் என்றும் அலைந்தனர். ஆரம்ப நாட்களில் ரேவதியும் ரசித்தாள். சிட்டிபாபுவும், ரவிசங்கரும் தங்கள் இசையால் ரமேஷின் வீட்டை நிறைத்தபோது, ரேவதி பொப் மியூசிக் கேட்கப்போய்விட்டாள்.

கல்யாணங்கள் சிறைக்கூடமா?

~~எலியட்டுடன் பொப் பெஸ்ரிவலுக்கு போகட்டா|| என்று கேட்டபோது, அது ஒரு பெரிய திருப்பத்தைத் தரப்போகிறது என்று ரமேஷ் யோசித்திருக்க வேண்டுமா? ரமேஷ் மற்றவர்களையும் தன்னைப்போன்று அப்பாவியாகத்தான் நினைத்துக்கொண்டானோ? அதே காலகட்டத்தில் மூக்குத்தியும் குங்குமப்பொட்டும் வைத்துக்கொண்டு திருமதி லக்ஷ்மி நாராயணன் பக்கத்துப் பிளாட்டுக்குக் குடிவந்த போது ஊரிலிருந்து அம்மாவும் மாமியும் ஒரு உருவத்தில் தன்னைப் பார்க்கவந்த பிரமை இவனுக்கு.

இந்தியாவிலிருந்து வந்திருந்த மிஸ்டர் நாராயணன் ஒரு தத்துவ ஆசிரியர். இவனது யூனிவர்சிட்டியின் சக விரிவுரையாளர். தன் மனைவியை இவனுக்கு அறிமுகம் செய்து வைத்த போது, அவள் ரமேசுக்கு வணக்கம் செய்த கணம் இவன் நினைவில் செதுக்கப்பட்டுவிட்டது.

இவனின் இளமைக்காலத்தில் அன்பு தந்த தாய், ஆதரவு தந்த மாமி, கிண்டலும் வேடிக்கையுமாகப் பழகிய தங்கைகள் எல்லாரும் ஒரு உருவில் பக்கத்து வீட்டு லட்சுமியாய் உருவானார்களா? அப்படியென்றால் ரேவதியில் யாரைக் கண்டான்?

நாராயணனுக்கு மேற்கத்தைய வாழ்க்கை பிடிக்கவில்லை. ~~ஆன்மீகத்தைத் தொலைப்பதற்கு இடம் தேவையென்றால் இங்கிலாந்துக்கு வரலாம்|| என முணுமுணுப்பார் நாராயணன். லக்ஷ்மியும் நாராயணனும் லண்டனுக்கு வரும்போது மனதில் எத்தனை கற்பனைகளுடன் வந்திருப்பார்கள்?

லண்டன் வாழ்க்கைப் பிரச்சினையால் நாராயணன் மனநோயாளர் ஆஸ்பத்திரிக்குப் போன அதே காலகட்டத்தில்; ரேவதி ரமேசைப் பிரிந்தாள்.

தன் கணவர் ரமேஷ் அடுத்த வீட்டுப் பைத்தியக்காரனின் மனைவியுடன் குலவுவதான குற்றச்சாட்டினை ரேவதி தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அம்மாக்களுக்குத்தான் குழந்தைகளைப் பற்றிய விடயங்கள் முதலிற்கிடைத்திருக்குமோ? ஏதோ ஒரு வதந்தியை இன்னச்சுவை ததும்ப பரப்பிவிட்டிருந்தார்கள். அம்மா அழுது வடித்து கடிதம் எழுதியிருந்தாள்.

~~உனது அப்பா இன்னொரு பெண்ணின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்திருப்பாரா?||

அம்மா கண்ணீராற் கடிதம் எழுதியிருந்தாள். லஷ்மியைப் பற்றி என்னவெல்லாம் எழுதியிருப்பார்களோ? ரேவதியின் பிரிவு இவனை வாட்டியதைவிட அம்மாவைத்தான் கூட வருத்தியிருக்க வேண்டும். தாங்கமுடியாத அந்த சோகத்தைத் தவிர்க்கக் கடவுளிடம் ஓடினாள். தன் மகனின் வாழ்வில் மீண்டும் சந்தோசம் வரவேண்டும் என்பதற்காக அம்மா எத்தனையோh விரதங்கள் இருப்பதாகத் தங்கைகள் எழுதியிருந்தார்கள். உலகத்துப் பிரச்சினைகளுக்கெல்லாம் விரதம் ஒரு வழிகாட்டுமென்றால் எவ்வளவு மாயையது?

அம்மா தான் ஒருத்தனின் மனைவி என்பதை மறந்துவிட்டு ரமேசின் அம்மாவாகத்தான் வாழ்ந்தாள்.

அம்மாவின் வாழ்க்கை விரதம், வேண்டுதல்கள், பூசை என்றெல்லாம் ஆன பின் அப்பா இன்னொருத்தியின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தாரா? அல்லது அந்த ஆசை எப்போதோ அவரின் அடிமனதில் அரித்துக்கொண்டிருந்ததா? பக்கத்துப் பெண் ஒரு விதவை, அந்தப் பரிதாபம் அப்பாவுக்குமிருந்தது. அதன் விளைவு இதா? அப்பா அவளுடையவராகிவிட்டார். ரமேஷ் துடித்துப்போனான். தன் தனிமைக்கு வழிகாண முடியாதவனுக்கு அம்மாவின் துயரத்தை எப்படித் தாங்க முடியும்? யாரிடம் போவான் ஆறுதலுக்கு?

அதே கால கட்டத்தில்,ரமேஷின் அடுத்த பிளாட் தம்பதிகள்,லட்சுமிpயும் நாராயணனும் இடம்மாறிப்போன காரணத்தைக்கூட அவன் விசாரிக்கவில்லை.

நாராயணன் வேலையிழந்துவிட்டார். மனநோயாளியாகிவிட்டார். லட்சுமி அவரைத் தாங்கிக்கொண்டாள். எங்கேயோ வெகு தூரத்தில் ஒரு வேலை எடுத்துக்கொண்டு லண்டனை விட்டுப் போய்விட்டாள்.

~பைத்தியக்காரனின் மனைவி| உலகத்தை எதிர்த்துப்போராட வேண்டிய நிலை.

அம்மா இறந்ததை அவள் அறிவாளா?

அவள், லஷ்மி அருகில் இருக்க வேண்டும் போலிருந்தது.

ரமேஷ் அம்மாவின் இறப்புக்குத் துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் மறந்துபோன சில விடயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டான். அடிமனதில் போட்டுவைத்திருந்த சில ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்தன. சனிக்கிழமை எப்படிக்கழிந்தது என்று தெரியாது. ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அம்மாவின் இறுதிக்கடன்கள் முடிந்திருக்குமா?

சனிக்கிழமை பின்னேரம் இவனின் பழைய நண்பன் ஒருத்தன் துக்கம் விசாரிக்க வந்திருந்தான். இந்த நண்பன்தான் அம்மாவை அந்தக் காலத்து சினிமா நட்சத்திரம் அஞ்சலிதேவியுடன் வைத்து அழகு பார்த்தவன். அவன் பெயர் ரகுராம். இன்று லண்டனில் சைக்கோலிஸ்ட்டாக இருக்கிறான். சிறு வயதில் அம்மாவை இழந்தவன். அவன் ரமேஷ் படும் துன்பத்தின் அனுபவத்தை நேரில் அறியாதவன். ரமேஷின் வாழ்க்கையில் பரிதாபம் கொண்டவன்.

லண்டனில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாவிட்டாலும், தெரிந்தவர்கள் கல்யாண வீட்டிலும், அல்லது இறந்தவர் வீட்டிலும் எப்போதாவது ஒரு தரம் சந்தித்துக்கொள்வார்கள்.

லஷ்மி நாராயணன் தம்பதிகள் ரமேஷ் குடும்பத்தின் நண்பர்களாக இருந்த காலத்தில் இந்த சைக்கோலிஸ்ட் தன் மனைவியுடன் வந்திருந்தான்.

லஷ்மியை கடைக்கண்ணால் பார்த்தான் சைக்கோலிஸ்ட். ~~என்னடா நீ இராவணனாக இருக்கிறாய். அவள் இன்னொருத்தன் மனைவி|| ரமேஷ் நண்பனின் காதில் கிசுகிசுத்தான்.

~~பக்கத்து வீட்டுத் தோட்டத்து மலரைப் பிடுங்கக்கூடாது. ஆனால், ரசிக்கலாம்தானே” நண்பன் சிரித்தான். இந்த நண்பர்கள் இருவரும் மட்டக்களப்புக் கல்லூரி ஒன்றில் படித்த காலத்தில் இரவு நேரங்களில்,மட்டுநகரின் மீன்பாடும் வாவியின் கரையிலிருந்து எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதயத்தில் குடிவைத்திருக்கும் கனவுக்கன்னிகளைப் பற்றிக் கதை பேசிக்கொண்டிருந்தவர்கள். மனம் விட்டு தங்கள் ஆசை அபிலாசைகளை கொட்டியிருக்கின்றார்கள்.

~~இன்று அம்மாவைப் பற்றி கட்டாயம் ரகுராம் பேசுவான். உன் அம்மா மிகவும் அழகி|| என்றான் நண்பன். நண்பனின் குரலில் ஒலித்த உணர்வு இவனைத் தர்மசங்கடப்படுத்தியது.

~~மடையா நீ என்ற அம்மாவைப்பற்றிக் கதைக்கிறாய்|| ரமேஷ் எரிச்சலுடன் சொன்னான்.

~~நீ மட்டும் உனது தஞ்சாவூர் மாமியைப்பற்றி வாய்க்கு ஒரு தடவை புழுகிக்கொண்டாயே|| நண்பன் கிண்டல் செய்தான்.

இதே மாதிரித்தான் ரேவதியும் இவனைச்சாடினாள்.தன்னைத் தவிர வேறுயாரையும்பற்றிப் பேசக்கூடாது என்பது அவளின் எதிர்பார்ப்புகளில் ஒன்று. இவன் அம்மாவைப் பற்றி அடிக்கடி பேசுவான்.

~~ஏன் என்னில் பிழை பிடிக்கிறியள்? பிள்ளையார் தேடின மாதிரி அம்மா மாதிரி ஒரு பெண்சாதி தேடியிருக்கலாமே?||

ரமேஷ் நண்பர்களிடம் தஞ்சாவூர் மாமியின் இனிய குரலை, சிரிக்கும் கண்களை ரசித்துச் சொன்ன மாதிரி ரேவதியிடம் சொல்ல முடியவில்லை.

தஞ்சாவூர் மாமியின் ஞாபகம் வந்தபோது அம்மாவைப்பற்றிப் பேசுவான். அந்தப் பேச்சுக்களையோ ரேவதியால் தாங்க முடியவில்லை.

~~தொட்டிலுக்குத்தான் அம்மா, கட்டிலயும் வைச்சு அம்மாவைப் பற்றிக் கதைச்சா நான் என்ன செய்வேன்|| ரேவதி வெடிப்பாள்.

எலியட் தன் அம்மாவைப்பற்றி ரேவதியுடன் பேசுவாளா? ரமேஷ் எலியட்டுடன் ரேவதியை ஒன்றாய்க் கற்பனை செய்து பார்க்கும் போதெல்லாம் அம்மாவின் முகம் கற்பனையில் வரும். இவன் கண்ணீரைத் துடைப்பது போலிருக்கும். அழாதே மகனே என்று சொல்வது போலிருக்கும். மகன் பட்ட துன்பத்தை தானும் அனுபவிக்க அப்பாவையே துறந்துவிட்டு கோவில் என்று தஞ்சம் கிடந்தவளாமே.

என்ன முட்டாள்த் தனம்? ஏன் இந்த அம்மாக்கள் தங்களுக்காக வாழ மறுக்கிறார்கள்?

எலியட்டிடம் ரேவதியைப் பறிகொடுத்த துன்பத்தை நான் எப்படி அனுபவிக்கிறேன் என்பதை இப்போது அப்பாவை அடுத்த வீட்டு விதவையிடம் பறிகொடுத்துவிட்டு அனுபவிக்கிறாளா?

நண்பன் விஸ்கிப் போத்தலைத் திறந்தான். நான் இப்போதெல்லாம் குடிப்பதில்லை என்றான் ரமேஷ்.

நண்பன் வியப்புடன் பார்த்தான்.

~~எப்போதிருந்து குடிக்காமலிருக்கிறாய்?” உண்மையான காரணத்தைச் சொல்லலாமா?

ரமேஷ் மறுமொழி சொல்லாமல் பார்வையை எங்கேயோ செலுத்தினான். இருவரும் லண்டன் நகர் மத்தியில் ஒரு பாரில் உட்கார்ந்திருந்தார்கள். சமர்க் காலமாதலால் உலகமே பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் கலகலத்துக்கொண்டிருந்தார்கள். இவன் மனதில் லக்ஷி வந்தாள்.

~~எப்போதிலிருந்து குடிக்காமலிருக்கிறாய்?|| நண்பன் தன் சைக்கோலஜிஸ்ட் பார்வையுடன் இவனை உற்றுப் பார்த்தான்.

இவன் மறுமொழி சொல்லவில்லை.

‘லஷ்மி சொன்னாளா?’

ரகுராமின் குரலில் மிகத் தெளிவு. ரமேஷ் திடுக்கிட்டான். நண்பனின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லை.

~~பாவம் ரேவதி|| நண்பன் தொடர்ந்தான்.

~~என்ன சொல்கிறாய்?||

~~லஷ்மி அடுத்த பிளாட்டுக்கு வந்த பின்னர்தானே உங்கள் பிரச்சினை வந்தது?”

ரமேஷ் வாயடைத்துப்போனான். என்ன இவன் குறுக்குக் கேள்வி எல்லாம் கேட்கிறான். ரமேஷ் தோடம்பழ ரசத்தை மளமளவெனக் குடித்தான். மனதுக்கு அது இதமாக இருந்தது.

~~ரேவதியில் உனக்கிருந்தது காதலா, காமமா?|| நண்பனின் கேள்வி எந்தளவுக்குக் குரூரமானது.

~~காமம் உடம்பாசையைத் தணிக்கும். உள்ளத்தின் தேடலைத் தணிக்காது” நண்பன் ரகுராம் தொடர்ந்தான்.

~~கல்யாணங்களில் எங்களுக்குத் தேவையான எல்லாமே கிடைப்பதில்லை என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?||

~~…………|| ரமேஷ் இன்னும் மௌனமாக இருந்தான்.

~~ஆண்களோ பெண்களோ தாங்கள் எல்லோருமே எங்களிடம் துணையாக வருபவர்களிடம் எங்களுக்குத் தேவையான அன்பு, காதல், ஆத்மீகத் தேவை ஆகிய எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம். பெரும்பாலானவர்கள் சாதாரண மனிதர்கள். இயலுமானவரையில் எங்களின் துணைகளின் தேவைகளைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறோம். சிலர் வெற்றி பெறுகிறோம். சிலர் தோல்வி பெறுகிறோம். சிலர் ஏனோதானோ என்று வாழ்ந்து தொலைக்கிறோம்.||

ரகுராம் ஒரு மனதத்துவ நிபுணன். அந்தத் தெளிவுடன் பேசினான்.

~~ரேவதியின் அம்மாவிலுள்ள அன்பையும், மாமியில் வைத்திருந்த ஆசையையும் எதிர்பார்க்கிறாய். இரண்டும் கிடைக்காததால் உன் உறவில் பழுது வந்தது போலும்.”

இவ்வளவையும் விட மேலதிகமாக ரகுராம் வேறு ஒன்றும் சொல்லத் தேவையே!

~~இளமையில் என்னைக் கவர்ந்த மனிதர்கள். எங்களின் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தக் காரணமாகவிருந்த ஆதர்ஸ புருஷர்களை அல்லது பெண்களை நாங்கள் மனதில் வைத்துக்கொண்டாடுவோம். அதேபோன்ற மனிதர்களைத்தான் காணவும் பழகவும் ஆசைப்படுகிறோம். இந்த ஏக்கங்கள் கைகூடாவிட்டால், கடவுள் எங்களைத் துன்புறுத்துவதாகக் கற்பனை செய்கின்றோம். கடவுள் என்ன முட்டாள் சின்னப்பிள்ளையா விளையாட்டுக்கு வருவதற்கு….||

ரகுராம் போன பின்னர் அம்மாவை விட இவன் மனதில் தஞ்சாவூர் மாமி அடிக்கடி ஞாபகம் வந்தாள். மாமி இந்தியாவில் வந்தபோது இவனுக்கு வயது பதின்னான்கு. பெண்களை வித்தியாசமாகப் பார்க்கும் வயது. அந்தப் பார்வைக்கு இரையானவள் தஞ்சாவூர் மாமி.

இதை நினைத்தபோது ரமேஷின் மனதில் தீ வைத்தது போலிருந்தது. எங்கேயோ கை தவறி வைத்த பொக்கிஷத்தை காலம் கடந்து கண்ட போது உண்டான மகிழ்ச்சி போல ஒரு சந்தோஷம் அதேநேரத்தில் அந்தப் பொக்கிஷத்தையடைய இவன்பட்ட பாடுகள் நேர்மையற்றவை என்ற குற்ற உணர்வும் பற்றிக்கொண்டது.

அம்மாவைப் பிரிந்து இவன் வாடுவதைப் பகிர்ந்துகொள்ள இவனுடைய சொந்தக்காரப் பையன் ஒருத்தன் இவனுடைய பிளாட்டில் தங்கியிருந்தான். காலையில் வந்தான் அவன். அதிகம் பேசிக்கொள்ளமாட்டான். பெரியதம்பி மாமா செய்த ஏற்பாடு அது. ரகுராம் ரமேஷை விட்டுப் பிரிந்த பின் ரமேஷ் தன் வீ;ட்டுக்குப் போகாமல் காரை எடுத்துக்கொண்டு லண்டனைச் சுற்றினான்.

மனம் எங்கோ அலைய்ந்தது.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை. இன்று அம்மாவை எரித்திருப்பார்களா? அல்லது ஊரில் நடக்கும் அவசரகாலச் சட்டத்தின் காரணமாக வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்திருப்பார்களா? அம்மாவின் மரணத்தின் நிகழ்வுகளைச் சுற்றிச் சுற்றியே இவன் மனம் அலைந்தது.

ரமேஷ் துயரமுமில்லாமல், துயரைப் போக்க முடியாமல் தவித்தான்.

துக்கம் விசாரிக்க வந்தவர்கள் போய் முடிய இரவு பதினொரு மணிக்கு மேலாகி விட்டது. ஊருக்குப் போன் பண்ணி அம்மாவின் இறுதிச் சடங்கு பற்றிக் கேட்க வேண்டும் என்றிருந்தது.

அந்த நேரம் ரெலிபோன் மணியடித்தது.

லஷ்மி!

இவளுக்கு என்னென்று தெரியும் நான் என் தாயை இழந்தது?

~~ரமேஷ் உனது நிலைக்கு ரொம்பவும் வருந்துகிறேன்|| சம்பிரதாயமாகச் சொன்னாள் லஷ்மி.

அம்மா இறந்த செய்தி கேட்ட நேரத்திலிருந்து அம்மாவைப் பற்றியழுகிறான். அம்மாவைப் பற்றி மற்றவர்கள் ஞாபகமூட்டும் போதெல்லாம் தனக்குத் தெரியாத அம்மாவை இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தன்னைத்தானே பல தடவைகள் கேட்டுக்கொண்டான்.

இப்போது லஷ்மி போன் பண்ணியபோது எதையோ நினைத்தெல்லாம் அழுதுவிட்டான்.

~~நான் அங்கு வந்து ஆறுதல் தரமுடியாது. இவர் பாவம்|| லஷ்மி மனநோயாளியான தனது கணவரைச் சொல்லி அங்கலாய்ந்தாள்.

~~நான் வரட்டுமா?||

இவன் இப்படிக் கேட்டதை இவனாலேயே நம்பமுடியாதிருந்தது.

அவள் கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை. பின்னர் கேட்டாள் ~~இந்த நேரத்திலா?||

~~என்ன நேரம் பார்க்கிறாய் லக்ஷ்மி…?|| ரமேஷ் துடித்தான்.

அவள் தனது விலாசத்தைக் கொடுத்தாள். லண்டனைவிட எவ்வளவோ தூரத்திலிருக்கிறாள். ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ட்ரைவ் பண்ண வேண்டும்.

லண்டனின் வெளிச்சங்கள் மிகவும் அவசரமாகப் பறந்து மறைந்தன. கார் ஒரு கிராமப்புறமான இடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

இவன் மனதில் எத்தனையோ குழப்பங்கள். கடைசியாக இவனைச் சந்தித்த போது இவன் குடிக்கக்கூடாது என புத்திமதி சொன்னாள் லக்ஷ்மி. அது ஒரு அபூர்வமான சந்திப்பு. இருவர் கனத்திலும் ஆழ்ந்து கிடந்த சந்தேகங்களை மனம்விட்டுப் பேசிய சந்திப்பு.

~~தஞ்சாவூர் மாமியாய் என்னைப் பார்க்காதீர்கள்|| என்று லக்ஷ்மி இவன் கண்களைப் பார்த்துச் சொன்ன சந்திப்பு.

கார் ஓடிக்கொண்டிருந்தது. லக்ஷ்மி ஒரு நாளும் மனதத்துவம் படிக்கவில்லை. ரகுராம் மாதிரி ப்ராயமடையும் லகானையும் உதாரணம் காட்டி இவன் மனக்குழப்பத்துக்கு விளக்கம் சொல்லப் போவதில்லை.

~~உன் இழமைக் கனவுகளில் உன் மாமி கதாநாயகியானாள். அந்தக் கனவுகளிலிருந்து தப்பிக்கொள்ளத்தானே ரேவதியைச் சரண்புகுந்தாய்||

இவனிடம் யாரும் நேரடியாகக் கேட்காத கேள்வியது. தனது கணவன் ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருந்த போது ரமேஷை தற்செயலாக லண்டன் கடையொன்றில் சந்தித்தாள் லக்ஷ்மி. பக்கத்து வீட்டிலிருந்து லக்ஷ்மி குடும்பம் காலியானதன் காரணம் முழுக்கத் தெரியாது.

அன்று இருவரும் நிறைய கதைத்துக்கொண்டார்கள். மனம்விட்டுக் கதைத்துக்கொண்டார்கள். இரண்டு இரவும் பகலும் லக்ஷ்மி இவன் வீட்டில் தனியாகத் தங்கியிருந்து இவனிடம் பேசினாள்.

இருவர் வாழ்க்கையின் சந்தோசஙகள், திருப்பங்கள், சோதனைகள் பற்றிப் பேசினார்கள்.

~~நாங்கள் இருவரும் பலவீனமான மனிதர்களில்லை. எனது கணவரால் நான் படும் கஷ்டத்துக்கு உனது மனைவியையிழந்து நீ படும் கஷ்டத்துக்கும் பரிகாரம் நாங்கள் இருவரும் ஒருத்தரில் ஒருத்தர் இழந்துவிடுவதில்லை||

எத்தனையழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள் லக்ஷ்மி. தன்னை முழுக்க முழுக்கப் புரிந்துகொண்ட ஒரேயொரு ஜீவன் லக்ஷ்மி என்ற உணர்வு இவனை மெய்சிலிர்க்கப்பண்ணியது. ரேவதி இவனின் இந்தப் பகுதியை ஒரு நாளும் கண்டிருக்க முடியாது.

~~உனக்கு உன் அம்மாவில் மிகவும் விருப்பமென்றாய். நா உன் அம்மாவை ஞாபகப்படுத்துவதாகச் சொல்கிறாய் அது உண்மையா?||

லக்ஷ்மி இவனைக் குற்றவாளியாய்ப் பார்த்துக் கேள்வி கேட்டாள்.

அவளுக்கு முன்னாள் இவனால் பொய் சொல்ல முடியவில்லை. ~~ஒரு பெண்ணைத் தாயாய், தெய்வமாய், தாரமாய், தெய்வமாய் அல்லது தேவடியாhளாய் ஒரு மனிதன் கற்பனை செய்து பார்க்கிறான். இதில் எந்த ரகத்தில் நான் உன் மனதில் இருக்கிறேன்.||

இவன் கணகளையூடுருவிக் கொண்டு கேட்டாள்.

~~என்னை உனது சினேகிதியாக நினைக்கும் பெரிய மனது இல்லையா?” எத்தனை கிண்டல் அந்தக் குரலில்.

~~உனது அம்மா என்றொரு பெண் உனது பலவீனத்தைக் கண்டவள். உனக்காக தன்னையழித்து உன் வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறாள். அந்தத் தாயை மதித்து உன் குடிப்பழக்கத்தை விடேன். தாயாக வருந்தாதே. பெண்ணாக வாழவிடேன்||

லக்ஷ்மி உலகத்துத் தாய்களுக்காக இவனிடம் வாதாடினாள். குடும்பத்துக்காக உழைத்து, வருந்தி ஓடாகிப் போகும் தாய்களுக்காக இவனிடம் வழக்குரைத்தாள்.

~~ஆண்கள் ஏன் தாங்கள் சந்திக்கும் பெண்களெல்லாம் தங்கள் எதிர்பார்ப்புக்களுக்கு ஈடுகொடுக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்?||

இவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. ~~உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. அல்லது உனது பார்வையில் எனக்கு நம்பிக்கையில்லை|| என்றெல்லாம் சொல்லாமல் தன்னை ஒரு மூன்றாம் பெண்ணாக வைத்து இவனிடம் கேள்வி கேட்டாள் லக்ஷ்மி.

~~மாமிக்கு நல்ல அழகான குரல் என்றாய். மிகவும் அழகான கண்கள் என்றும் சொன்னாய். அவளுக்கு ஒரு நல்ல மனம் என்று சொல்ல மறந்துவிட்டாயே”

லக்ஷ்மியின் வீடு வந்துவிட்டது. ஊர் உறங்கிய நேரத்தில் காத்திருந்து இவனை வரவேற்றாள். அவள் கணவர் நித்திரைக் குளிசை எடுத்துக்கொண்டு நீண்ட நித்திரையிலிருப்பார்.

லக்ஷ்மியின் உருவம் நிலவு வெளிச்சத்தில் ஒரு தேவதையை ஞாபகமூட்டுகிறது. இவன் கார் நின்றதும், அவள் ஓடிவந்து கேற்றைத் திறந்தாள்.

~~நான் உன் சினேகிதியாய் மட்டும்தான் இருக்க முடியும். அதற்கப்பால் நீ என்னைப் பற்றி நினைப்பதானால் தயவு செய்து என்னிடம் வராதே.|| கடைசியாய்ச் சந்தித்த போது இப்படிச் சொன்னாள்.

இன்று அவன் அம்மா இறந்துவிட்டாள்.

தாய்களைச் சந்திக்க முடியாது.

லக்ஷ்மி அவனின் சினேகிதி.

சந்தோசப்படுகிறான்.

Print Friendly, PDF & Email
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *