அம்மாவும் புளியம்பழமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 1,914 
 

புளியங்குடி…. கண்டக்டர் குரலுக்கும் விசிலுக்கும் கட்டுப்பட்டு சடன் பிரேக்கிட்டது பேருந்து. இறங்கியது நான் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே பார்த்த நிலையிலேயே ஊர். ஒற்றை டீக்கடை. அதே காலுடைந்த பெஞ்ச். செங்கல் முட்டுக்கட்டை. கூடுதலாக ஒரு டெலிபோன் பூத்துடன் கூடிய ஜெராக்ஸ்கடை.

கூப்பிடுதொலைவில் நான் பிறந்த வளர்ந்த கீழவீதி. நாலே வீதிகள். ஊருக்கு வெளியே ஆறு. ஆற்றங்கரை படித்துறை அருகே அரசும் வேம்பும் அதன் அடியில் பிள்ளையார் சின்னஞ்சிறு சிவன் கோவில் எதிரே நடுநிலப்பள்ளி காளியம்மன் கோவில், என சினிமாவில் வரும் கிராமமாக என் ஊர். வழி எங்கும் புளியமரங்கள் வயது ஏறிய மரங்கள் இருமருங்கு மரங்களும் பின்னிப் பிணைந்து எது எந்த மரத்தின் கிளைகள் என்று அனுமானிக்க இயலாது குடை பிடிக்கும் மரங்கள் முதியவரின் துருத்திய எலும்புகள் என புடைத்து நிற்கும் முண்டு முடிச்சுகள். முதியவனை சுருங்கிய தோல் போன்று செதில் செதிலாக உதிரத் துடிக்கும் பட்டைகள். எதிரேபாதை நீள என் நினைவுகளும் பின் நோக்கி நீண்டது.

அப்பா சிறு விவசாயி. கூலி வேலைக்கும் போவார். அம்மா ஆடுமாடு தோட்டம் என உழைக்கும் கடும் உழைப்பாளி. இருவரும் ஆதர்ச தம்பதிகள். ஒரேமகன் நான் சரளமாக ஓடிய வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்!

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்த சமயம் ஹார்ட் அட்டாக்கிறுல் அப்பா நிம்மதியாய்ப் போய்ச் சேர நிலைகுலைந்தது குடும்பம். சட்டென சுதாரித்தவள் அம்மா தான். மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற எனது அனைத்துப் படிப்பு செலவையும் ஒரு தொண்டு நிறுவனம் ஏற்க கல்லூரியில் கோல்டு மெடல். கேம்பஸ் இண்டர்வியூவில் சென்னையில் ஐந்து இலக்கத்தில் வேலை. அம்மா வழக்கம் போல் ஆடு மாடு விவசாயம் என்று பிஸி. கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள்.

நான் தங்கி இருந்த இடத்தருகை ஒரு தங்கத்தேர். பெயர் மீராதேவி. மணந்தால் மீராதேவி இல்லையேல் மரணதேவி என்று ஆனேன். பெண்வீட்டில பூரண சம்மதம். பிக்கல் பிடுங்கல் இல்லாத அரசு ஊழிய மாப்பிள்ளை கசக்கவா செய்யும். அம்மாவிடம் ஜாதகத்தையும் போட்டோவையும் தந்தேன். நல்ல பொருத்தம்னு பெண்வீட்ல சொன்னாங்க நான்முன் மொழிய, வழிமொழிந்தாள் அம்மா. மறுக்கவோ தடுக்கவோ முடியாதவைகளை வழிமொழிவதே வாழ்வியல் நெறி என்று உணர்ந்தவள்னா அம்மா. என் விருப்பத்தை என் முகத்திலும் குரலிலும் உடல் மொழியிலும் உணர்ந்த கிரேட் அம்மா!

அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று கல்யாணம்! தனிக்குடித்தனம். இருந்த சொற்ப நிலத்தையும் விற்று மருமகளுக்கு நகையும் பட்டுமாக இழைத்த அம்மா, மீண்டும் கிராத்திற்கேசென்ற அம்மா. மருமகள் உண்டானதும் காப்பு பட்டுப்புடவை என்று கிராண்டாக சீர் செய்த அம்மா பேறுகாலத்திற்கு மீரா பிறந்தகம் செல்ல இலவச இணைப்பாக நானும் கூடவே சென்றேன். மெல்ல மெல்ல அவர்களின் ஆடம்பரமும், படோடாபமும் என்னையும் தொற்றிக் கொள்ள மெல்ல மெல்ல எனக்குள் மாற்றம் மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வந்த அம்மா பேரனுக்கு தங்க அரைஞானும் காப்பும்போட்டு அழகு பார்த்த அம்மா மருமகளை ஒரு வேலை கூட செய்ய விடாது பொத்திப் பாதுகாத்த அம்மா. தனது கணவனே பேரனாகப் பிறந்து இருப்பதாக நம்பிய அம்மா அப்புறம் அடிக்கடி வர ஆரம்பித்தாள்.

மீராமெல்ல மெல்ல சுயருபம் காட்ட ஆரம்பித்தாள். மகன் கோகுலுக்கு மூன்றாவது பிறந்த நாள். அம்மாவும் வந்து இருந்தாள். மாமனார் வீட்டிலிருந்து அனைவரும் ஆஜர். அம்மா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து உபசரித்தாள். ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாது உட்கார்ந்து சாப்பிட்டனர் அனைவரும். தவறுதலாகக் குழந்தை கீழே போட்டிருந்த பொம்மையில் கால் இடறி அம்மா சரிய நிச்சலனமாக டிவி பார்த்தபடி அமர்ந்து இருந்த மீரா. “பொம்மை உடைஞ்சுட்டு” என்று மாமியார் கூற எனக்குள் ஒரு வெறிபார்த்து வரக் கூடாதா இப்ப என்ன கொள்ளை போவுதுன்னு ஓடிவர்ற, பிறந்தநாளுக்கு வாங்கிய 300 ரூபா பொம்மை போயிட்டுது என்று குமுற…

“நான் வேணும்னா உடைச்சேன் வரவர எனக்குக் கண்ணு சரியாத்தெரியல ஆபரேஷன் பண்ணனும் பொறந்த நாள் முடிஞ்சதும் பண்ணலாம்னு நீதானே சொன்னே மறந்துட்டியா” என்றாள் அம்மா, மழையில் நனைந்து நடுங்கும் கோழிக் குஞ்சாக, ஒடுங்கிய குரலில்.

பிலுபிலுன்னு பிடித்துக் கொண்டாள் மீரா. “இதோபாருங்க உங்ககிட்டக் காசு கொட்டிக் கிடந்தால் ஆப்ரேஷன் பண்ணுங்க ஆனா உங்கம்மாவை இரண்டு மாசம் வச்சு பார்க்க என்னால் முடியாது நான் இப்பவே எங்க அம்மாவீட்டுக்குக் கிளம்பிடுவேன்னு” உறும, “இப்ப ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு என்ன கலெக்டருக்குப் படிக்கப் போறியா? வயசானா அறிவு கிடையாது. கிராமத்துல விழுந்து கிடக்காம இங்க வந்து என் மானத்தை வாங்குற” நான் வார்த்தையால் வறுக்க மெளனமாக அம்மா வெளியேறி இரண்டு வருஷம் ஆச்சு. நானும் போய்ப் பார்க்கல.

அம்மாவின் முகம் அடிமனதில் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதை அழித்து எழுதும் இளம் மனைவியின் அருகாமையும் மகனின் மழலையும், சென்றவாரம் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மீராவுக்கு எலும்புமுறிவு. இரண்டுமாதம் பெட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஒரு வாரம் மருத்துவமனைவாசம் நேற்று தான் டிஸ்சார்ச் மாமியாரும் மைத்துனன் மனைவியும் “அம்மாவை அழைச்சுகிட்டு வந்து பார்த்துக்குங்க” என்று ஒதுங்க அம்மாவை அழைக்க வெட்கமில்லாமல் செல்லும் நான். இதோ வீடுவந்து விட்டது.

தூக்கு வாளியுடன் வருவோரும் போவோரும். என்ன நடக்குது விரைகிறேன். வாசல் திண்ணையில் சத்தமாக எரியும் பம்ப்ஸ்டவ் பக்கத்தில் எவர்சில்வர் அருகில் மாவு வாளியில் சட்னி மலையில் அம்பாரமாகக் குவிந்த புளியம்பழம் “வாங்க தம்பி” இட்லியை ஹாட்பேக்கில் அடுக்கியபடியே அழைப்பது சரவணன் அம்மா அல்ல…

 “உட்காருங்க தம்பி அம்மா வெளியில் போயிருக்காங்க. சாப்பிடுங்க தம்பி” கைகழுவி அமர்கிறேன் மல்லிகைப்பூவாய் இட்டிலி மணக்க மணக்க சட்டினி, கூடவே பொடி கெட்டித்தயிர், வாஞ்சையுடன் பரிமாறுகிறார் இடையே வியாபாரத்தையும் கவனித்தபடி கூறுகிறார்.

“மருமளுக்கு என்னைப் புடிக்கல அதனால தோட்டத்து வீட்டுல இட்லிக்கடை போட்டுகிட்டு இருந்தேன். அதுவும் மருமகளுக்குப் பொறுக்கல. அந்த இடத்தையும் விற்று விட்டாள். வாங்கியவர் காலி பண்ணச் சொல்லும் போதுதான் நம்ம அம்மாவைக் கண் சிகிச்சை முகாம்ல சந்திச்சேன். அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் செய்யனும்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஆறுமாசம் பொறுத்து செய்யலாம்னு சொன்னாங்க. அம்மாவுக்கு உதவியா நான், அப்புறம் எனக்கு உதவியா அம்மா.

அப்புறம் எங்களைப் போல வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டவர் போல் எல்லாரையும் அம்மாதான் ஒண்ணு சேர்த்தாங்க. பஞ்சாயத்து போர்டை சேர்ந்த புளியமரம் தென்னைமரம் குத்தகை. புளி, தேங்காய் எண்ணெய், கீற்று வியாபாரம் அப்புறம் அவுங்க அவுங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் முடிஞ்சபோது செய்யலாம் ஓ.ஏ.பி பணம் வருது. நூறு நாள் வேலைக்கும் போறோம் எல்லாப் பணத்தையும் சேர்த்து கறவை மாடு, ஆடு வாங்கி இருக்கோம். தங்கறதுக்கு பஞ்சாயத்து இடத்தில் கட்டடம் கட்டி இருக்கோம். காலையில் இட்டலி டீ, மதியம் ஒருகுழம்பு கூட்டு. இரவு மதியசாதமே. சந்தோசமாகூட்டுக் குடும்பமா இருக்கோம். வீட்ல யாரும் பேசக் கூட ஆளில்லாம தவிச்சவங்களுக்கு இப்ப பேச்சு துணைக்கு ஆள், வேளாவேளைக்கு சாப்பாடு. கதியத்த எங்களுக்கு நல்ல கதி ஏற்படுத்தியது அம்மாதான்.

கலக்டருகூட இதபாத்து ஆச்சரியப்பட்டாங்க. தன்னால இயன்ற உதவி எல்லாம் செய்யுறேன்னு சொல்லி இருக்காங்க. அக்கம் பக்கம் இருந்து வந்து பாத்துட்டுப் போறாங்க அவுங்க ஊர்லேயும் இதைப்போல முதியோர் சங்கம் ஆரம்பிக்க அம்மாகிட்ட யோசனை கேட்க வர்றாங்க” மூச்சு விடாமல் சொல்லி முடித்தார். திகைப்புடன் சாப்பிட்டு முடித்தேன்.

இதோ கேட்டில் நுழைவது அம்ம்ம்மா…

சிவப்புப் புடவை, வெள்ளை ரவிக்கை காதில் சிவப்புக்கல் தோடு கழுத்தில் எளிய பவழமாலை “வாப்பா”… சூரியனின் கதிர்கள் மூக்குக்கண்ணாடியில் பட்டுத் தெறிக்க ஒளிப்பிழம்பாய் ஜொலிக்கும் அம்மாவின் முகம். அந்தமுகத்தில் தெரிவது வைராக்கியமா? வானப் பிரஸ்தமா? தடுமாறுகிறேன். திகைத்த என் அருகே அமர்கிறாள் கண்ணாடியைக் கழற்றி முகத்தை ஒற்றிய படியே “மீரா பேரப்புள்ள எல்லாரும் சௌக்கியமா?”

அம்மாவின் குரலில் பழைய உயிர்ப்பு இல்லையோ? அல்லது எனக்குதான் நினைப்பு பிழைப்பை கெடுக்கிறதோ?

“என்னப்பா என்னவோ வாட்டமா இருக்கியே என்ன விஷயம்”

“ஒண்ணுமில்ல பஸ்சுலவந்த அசதி”.

“அப்போசித்த நாழிபடுத்துத்தூங்கு” கால்கள் பின்னக் கயிற்றுக்கட்டிலில் சரிகிறேன்.

கயிறு உறுத்தாது நான்காக மடித்த விரித்தப் பழைய நூல் புடவை அம்மாவின் வாசத்தைப் பறை சாற்றியபடியே, அம்மாவைப் போல தளர்ந்து துவண்ட தலையணை கண்கள் கசிய அப்படியே உறங்கிப் போனேன். கம்மென்ற மொச்சைக் கொட்டைக் குழம்பின் மணம் நாசியைத் துளைக்கத் திடுக்கிட்டுக் கண்விழித்தேன் மணி என்று “குளிக்கிறியாப்பா…”

“இல்ல காலையில் குளிச்சுட்டுதான் புறப்பட்டேன்”.

“அப்போசாப்பிடு. உனக்குப் பிடித்த முருங்கைக் கீரை பொரியலும், மொச்சைக் கொட்டைகாரக் குழம்பும் கூடவே சுட்ட அப்பளமும்”. ரேஷன் அரிசி சாதத்துக்கும் இத்தனை சுவையா? மணமா? வருடக் கணக்கில் செத்துப் போன நாக்கு வெட்கமில்லாமல் சப்பு கொட்டி சுவைக்க புரை ஏறுகிறது. மெல்லத்தலையில் தட்டிய அம்மா “மீரா நினைக்கறாப் போல இருக்கு” நிராயாசையுடன் சிரிக்கிறாள். குழம்பை மீண்டும் ஊற்றி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை மேலே ஊற்றுகிறாள் காணாததைக் கண்டதை போல் நான் அள்ளி விழுங்குவதை கண்கள் பனிக்கப்பார்க்கிறாள். அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது. சுவைத்து சாப்பிடுகிறேன். கை கழுவுகிறேன்..

“அம்மா நான் போயிட்டுவர்றேன் அடுத்தவாரம் பேரனை அழைச்சுகிட்டு வர்றேன்” கேட்டவளின் கண்களில் மின்னலாய் ஒரு ஒளி மௌனிக்கிறாள்.

அம்மாவின் நியாயமான ஆசைகளைப் பயப்படாமல் நிறைவேற்றனும். பொறுப்பைத்தட்டிக் கழிக்காமல் மீராவை நான் கவனிச்சுப்பேன். அம்மாவுக்குப் பிறகும் இந்த தொண்டை நானே தொடர்வேன். அதுதான் நானே அம்மாவுக்குப் செய்யும் பிராயச்சித்தம். எல்லா அம்மாக்களும் வழியனுப்ப புறப்படுகிறேன். அம்மாவின் நினைவாக ஒரு புளியம்பழத்தைத் கைப்பையில் சுமந்தபடி.  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *