அம்மாவும்… திராட்சைப்பழக்கூடையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,577 
 

நாகம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியதும் அல்லது முடிவெடுத்ததும் என்னால் வரையப்பட்டுக்கொண்டிருந்த ஓவியம் என் கவன ஈர்ப்பிலிருந்து தூரமாகிப்போனது.

நீல நிற உடை உடுத்திய இளம் பெண்ணொருத்தி இடதுகையை உயர்த்தி திராட்சைக் கொத்தைப்பறிக்கும் லாவகத்துடன்… அவளது வலதுகை ஏற்கெனவே பறிக்கப்பட்ட திராட்சைக் கொத்துக்களை ஏந்தியிருந்ததாய்… அழகின் பொருட்டாய் பக்கச் சுவரொன்று… சுவற்றில் தரையிலிருந்து துவங்குகையில் அடர்த்தியான நிறத்தில் ஆரம்பித்து சற்றே வெளிறியதாய்… நன்றாக வெளிறி என்று மூன்றடுக்கு நிறங்களுடன் கற்கள் இடம் பெற்றிருந்தன. நடைபாதைக்குண்டான வழியின் இடது புறத்தில் பலகையும் கண்ணாடியுமான வீடொன்று முதல் தளத்துடன். அதன் மேலடுக்கு வடிவத்தை உணர்த்தும் விதமாய் உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஏதோ ஒரு மரத்தின் நிறம், வானத்திற்கான நிறத்தோடு கலந்திருந்தது பின்புறத்தில். அந்தப் பெண்ணின் காலடியில் கைப்பிடியோடு கூடிய ஓலைக் கூடையில் பறிக்கப்பட்ட பழங்கள் நிறைந்திருந்ததான ஓவியம் அது.

Ammavum1கைப்பாத்திரத்திலிருந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, ஓவியம், வர்ணங்கள் பரவியிருந்த தட்டுக்கள் என ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து முகம் கழுவி தலை சீவி அறையை பூட்டிவிட்டு கிளம்பும்போது வழியில் அம்மாவை பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று தோன்றியது. வேலைப்பளு மற்றும் ஈடுபாட்டுடனான தீவிரத்தில் இரண்டு நாட்களாக அம்மாவைப் பார்க்க வாய்க்கவில்லை.

ஓவிய அறையில் இருந்து கிளம்பியதற்கும் வீட்டிற்குப் போய் அம்மாவை பார்ப்பதற்குமான இடைவெளியில் ஒன்றிரண்டு அழைபேசி அழைப்புகளுக்கான நேரச் செலவினங்களோடு ஒரு காபி அவசியானது.

அம்மா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். எப்போதும் வெறுந்தரையில் படுத்துறங்கும் அம்மா தலையணை போர்வையுடன் படுத்திருந்தது என்னவோ போலிருந்தது.
சற்று நெருங்கி உற்று நோக்குகையில், முடி கலைந்து, சேலை கசங்கி, முகம் கருத்துப்போனதாய் தன்னிலை மறந்த தூக்கத்திலிருந்த அம்மாவின் தலையை வருடிக்கொண்டிருந்தபடி அறையை நோட்டம் விட்டபோது, புஸ்தகங்கள் சிதறிக்கிடந்ததற்கு நடுவே கண்ணயர்ந்தபடி பிரசன்னா. உள்ளிருந்து ருத்ரம் படிக்கப்படுவது காதில் விழ எழுந்து சென்று பார்க்கையில் பூஜை அறையில் விளக்குப்பொருத்தி ருத்ரம் படித்துக்கொண்டிருந்தான் சங்கர்.

இருவருமே அக்காவின் பிள்ளைகள். மேற்படிப்பிற்கான சூழலில் என்னோடும் பாட்டியோடும் இருப்பவர்களாய்.

பூஜை அறை வாசலில் என் நிழலாடுவதைப் பார்த்ததும் சங்கரின் கண்களில் நீர் முட்டிக்கொண்டது. சைகையில் அவனை தொடரச்சொல்லிவிட்டு அம்மாவின் அருகில் வந்தமர்ந்து அவளது தோள் பட்டையில் கை வைத்து அழுத்திப்பிடிக்கையில் திடுக்கென விழித்தவள் பேச திராணியற்று என் உள்ளங்கையை பற்றியவளாய் மீண்டும் கண்ணயர்ந்து போனாள்.

மின்சாரம் தடை பட்டதில் அம்மா விழித்துவிடாதிருக்க, கைவிசிறியால் நான் வீசிவிட ஆரம்பிக்கவும், பிரசன்னா எழுந்திருக்கவும், சங்கர் பூஜை அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

“பாட்டிக்கு ரெண்டு நாளாவே உடம்புக்கு முடியலை. நேத்து பக்கத்துல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்ததுல இருந்து இன்னும் எழுந்திருக்கவேயில்லை. எதுவும் சாப்பிடவும் இல்லை”.

“இல்லை .இடையில எழுந்திருச்சாங்க. திரும்ப உள்ள வரமுடியாம துளசி மாடத்துக்கிட்டயே படுத்துட்டாங்க. நான்தான் உள்ள அழைச்சிட்டு வந்து படுக்கவச்சேன்”.

“பாட்டி சாப்பிடறாங்களான்னு கேளுங்க”

இருவரும் மாறிமாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சங்கர் பாட்டியின் காலை பிடித்துவிட ஆரம்பிக்க உணர்வு தட்டுப்பட்டுக் கண்விழித்தவள் சுற்றும் முற்றும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதாய் பார்த்தபடி, நெஞ்சில் கை வைத்து என்னிடம், “முடியலைட” என்னும் விதமாய் கைகளை ஆட்டி சைகை செய்தாள்.
எல்லோருமாய் அம்மாவைக் கைத்தாங்கலாகத் தூக்கி உட்கார வைக்க முயலுகையில் சரியத் துவங்கினாள்.

“எழுந்திருச்சு துணி மாத்திக்கம்மா. ஆஸ்பத்திரிக்குப் போகலாம்”.

தலையாட்டினாளே ஒழிய, பேசவோ எழுந்திருக்கவோ, அவளால் இயலவில்லை.
பிள்ளைகள் மீண்டும் தூக்க முயலுகையில் வேண்டாம் என தவிர்த்துவிட்டு உட்கார்ந்தபடியே மெல்ல மெல்ல நகர்ந்து உள் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டபடியே வேறு சேலை வேண்டும் என்று கை காட்ட, கொண்டு வந்து கொடுத்ததும், கதவை மூடிவிட்டு காத்திருக்கும்படி சொன்னாள்.

ஆட்டோ வந்து நின்றதும் பிள்ளைகள் பாட்டியை எழுப்பி அழைத்துவர முனைந்தபோது, தடுமாறி கதவுக்கொண்டியில் முட்டிக்கொள்ளப் போனவளை பிடிக்கவேண்டியதாயிற்று.
கைகளால் “தலையை சுற்றுகிறது” என்று சைகை செய்தபடி மீண்டும் சரியத் தொடங்கிவளைக்கண்டு பிள்ளைகள் பதறிப்போனார்கள்.

ஆட்டோவில் சங்கர் மடியில் அம்மா படுத்துக்கொள்ள கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டான். ஆட்டோவிலிருந்து மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தனி அறையில் அம்மாவை அமர வைத்ததுவரை மிகுந்த சிரமமாயிற்று. அங்கு பிரசன்னா அருகில் அமரச்சொல்லி அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.

மருத்துவரின் அறைக்குச் சென்று ஊழியர்கள் அவசர தகவல் தர, பரிசோதித்தவர் “அவங்க நிலைமை கொஞ்சம் மோசமா இருக்கு. அந்த அளவுக்கு பெரிய வசதியுள்ள ஆஸ்பத்திரி இல்லை இது. திடீர்னு ஏதாவது ஆச்சுதுனா சிரமமாயிடும். பக்கத்துல தாணுமலையான் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோறதுதான் அவங்களுக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது”. என்றதும் உள்ளுக்குள் படபடப்பு அதிகமானது. அதற்குமேல் தாமதிக்க வாய்ப்பின்றி அண்ணனுக்கு தகவல் சொல்ல வேண்டியதாயிற்று.

“ஒண்ணும் பயப்பட வேண்டாம். நான் காரை எடுத்துட்டு ரயிலடி வரை வந்திருக்கேன். உடனே கிளம்பிடுறேன். ஒரு பத்து நிமிடம் சமாளிச்சுக்க,”. என்றவனாய் தற்போது இருக்கும் மருத்துவமனையின் முகவரியை பெற்றுக்கொண்டான்.

மருத்துவரிடம் “ஒரு பத்து நிமிசம் கழிச்சு கூட்டிட்டு போலாமா? கார் வந்திட்டிருக்கு” என்று கேட்டதும் “தாராளமா” என்று அவர் அனுமதி அளித்தார்.

அம்மாவோடு பிள்ளைகளை இருக்கச் சொல்லிவிட்டு அம்மாவிடம் வந்து நின்றபோது அண்ணனின் அலுவலக நண்பர் ஹரிகிருஷ்ணன் அழைபேசியில் தொடர்பு கொள்ள, விபரம் சொன்னதும் வந்து சேர்ந்தார்.

“என்னாச்சு சார் அம்மாவுக்கு? அண்ணன் போன்பண்ணி உங்களோட இருக்கச் சொன்னார்”.
அவருக்குப் பதிலாய் எதுவும் சொல்லத் தோன்றாமல், உள்ளே போய்ப்பார்க்கும் படி கை காட்டினேன்.

உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவர் என்னுடன் வந்து அமைதியாக நின்று கொண்டார். குடிப்பதற்கு தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார். சிகரெட்டை அணைத்துவிட்டு தண்ணீர் குடித்து முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அண்ணன் வந்து சேர்ந்தான்.
நேராக ஆஸ்பத்திரிக்குள் போனவன்அம்மாவை அழைத்துக் கொண்டு போக ஆயத்தமானான்.

எதற்கும் காத்திராமல் ஒரு குழந்தையைப் போல் பாட்டியைத் தூக்கிக் கொண்டு பிரசன்னா காருக்கு வந்தபோது அம்மாவின் தலை தொங்கிப்போய், கைகள் இரண்டும் காற்றிலசைந்தன.

காருக்குள்ளிருந்து அண்ணன் வாங்கிக் கொள்ள எல்லோரும் கிளம்பத்தயாராக
நான் மீண்டும் மருத்துமனைக்குள் சென்று, தாமதமானது வரை பொறுத்திருந்ததற்கு மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டுக்கிளம்பினேன்.

தாணுமலையான் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கருகில் கார் நிறுத்தப்பட அம்மாவோடு ஒரே ஒரு நபரின் அனுமதியில் அண்ணனும் உள்ளே நுழைய
நேரச் செலவினங்களுக்குப் பின் அண்ணன் என்னருகில் வந்து அமர்ந்து கொள்ள சங்கரும் பிரசன்னாவும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை பார்த்திட்டிருக்காங்க” என்றவனாய் கைகள் இரண்டையும் பின்னந்தலையில் கட்டி கண்களை மூடிக்கொள்ள, நான் அவனையே அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அதை உணர்ந்தவனாய் கண்திறந்து என்னை அவன் பார்த்தபோது, அவன் கண்களில் நீர்க் கோர்த்திருந்தது.

ஊழியர்கள் வரவேற்பில் பெயர்பதிவு செய்து அறை எண்ணை உறுதிப் படுத்தச் சொன்னபோது வேகமாக எழுந்த என்னை தோளில் கைவைத்து அமரச்செய்து, வரவேற்புக்குச் சென்று சம்பிரதாயங்களை அவன் முடித்துவிட்டு வர அம்மாவை முதல் வகுப்பு அறைக்கு மாற்றினார்கள்.

வரவேற்பை நான் கடக்க நேரிடுகையில் முதல் வகுப்பு என்பதால் அம்மாவின் பெயர் பெயர்ப்பலகையில் இடம் பெற்றிருந்ததைக்காண நேர்ந்தது.

அறைக்குள் அம்மாவை ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராய் அறைக்குள் சென்று பார்த்துவிட்டு வர என் முறையில், மூக்கிலும் கையிலுமாய் எது எதுவோ சொருகியபடி நினைவிழந்த அம்மா படுக்கையில்.

கதவருகில் நான் நின்று கொண்டிருந்தபோது வெளியே மருத்துவரிடம் அண்ணன் பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

“இருதயத்துல அவங்களுக்கு பிரச்சனையிருக்கு. வயசாயிட்டதால உடனே அதை சரி பண்ண முடியுமான்னு தெரியலை. பார்க்கலாம். நாளைக்கு என்னன்னு சொல்றோம்”.
அண்ணன் முகம் வாடிப் போனது.

“எழுபத்தஞ்சு வயது. இது வரைக்கும் காய்ச்சல் தலைவலியோட சரி. ஆஸ்பத்திரியில வந்து படுத்துக்கிடக்கிறது இதுதான் முதல் தடவை. கடைசி நிமிசம் வரைக்கும் உழைச்சிட்டேயிருந்த உடம்பு. எல்லா நல்லது கெட்டதுக்கும் முதல் ஆளா நின்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டுன்னு, அவங்களை இப்படிப் பார்க்கறதுக்கே என்னமோ மாதிரியிருக்கு”.

அண்ணன் ஹரிகிருஷ்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

சில வருடங்களுக்கு முன்பு பால் வாங்குவதற்காக வந்தவள் மாடிப்படியேறும் போது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.

அக்கம் பக்கத்தார் எல்லாம் அவளைத் தூக்கி கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து வந்தவர்கள் நாங்கள் வந்ததும் சொன்னார்கள்.

இன்னொருமுறை நாங்கள் வீட்டிற்குள் நுழைகையில் சேர் தாறுமாறாய் சாய்ந்து கிடக்க அம்மா நிலைப்படி அருகில் சரிந்து கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்ததும்

“மேல இருக்கற அந்த கூடையை எடுக்கலாம்னு இது மேல ஏறினேன். அவ்வளவுதான் திடீர்னு நெஞ்சு வலிக்கற மாதிரியும் தலை சுத்தற மாதிரியும் வந்து படபடன்னு வேர்த்திடுச்சு. என்ன நடந்ததுன்னு தெரியலைடா”.
ஒன்றன்பின் ஒன்றாய் இப்படி நடந்த சில நிகழ்வுகளை அண்ணன் ஹரிகிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட போது

“அவங்க என்னதான் பார்த்துக்கலாம்னு சொல்லியிருந்தாலும் நீங்க அப்பவே அம்மாவை நல்ல டாக்டர் கிட்ட காண்பிச்சிருக்கணும் சார்”

என்று அவர் சொல்ல எனக்கும் கூட அவள் விசயத்தில் கொஞ்சம் கவனக் குறைவாகவே இருந்து விட்டோமோ என்று தோன்றியது.

“ஒண்ணுமில்லை சார் சரியாயிடும். ரிலாக்ஸ் சார்”

ஹரிகிருஷ்ணன் அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனை சமாதானப் படுத்த முயல

“உள்ள நிக்கிறானே தம்பி அவன் தான் எப்பவும் கூடவேயிருப்பான். ஒண்ணும் பேசலை பாத்தீங்களா அவன் அவனுக்கு சரியாயிடும் னு நான் சொல்றேன். எனக்கு நீங்க சொல்றீங்க”.

அண்ணன் பேசிக் கொண்டிருக்கும்போது கதவை திறந்து நான் வெளியே வர சுதாரித்துக் கொண்டவனாய்

“ஒண்ணுமில்லைடா காலைல கண்ணு முழிச்சிப் பார்த்ததும் என்ன கண்றாவிடா இதுன்னு அத்தனையையும் பிடுங்கிப் போட்டுட்டு வாடா வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பிடுவாங்க பாரு”

என்றவனாய் என் தோளை அழுத்தினான்.

இடையில் “பாட்டி கையை அசைச்சிட்டேயிருக்காங்க” என்று பிரசன்னா வந்து சொன்னதும்,
அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டு வலது கையைப் பிடித்துக் கொண்டேன்.
நேரம் ஆக ஆக மருத்துமனையின் பரபரப்பு குறைந்து அமைதியானது.
யாருக்கும் வீட்டிற்கு போக மனமில்லையென்றாலும், அதிகாலை வரும்படி சொல்லி எல்லோரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று.

வீட்டில் வலதுகையை தலைக்கு வைத்து தூங்கும் பழக்கத்தில் தன்னை மறந்து மறுபடியும் மறுபடியும் கையை தலைக்கு கொண்டு செல்வதாயிருந்த அம்மாவின் கையை பற்றிக்கொண்டே அமர்ந்திருந்தேன்.

ஊழியர்கள் அவ்வப்போது வந்து எதையோ சரிபார்ப்பதும், ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருந்தார்கள்.

மெல்ல மெல்ல எனக்கு களைப்பில் கண் சொருக ஆரம்பித்தது.

அம்மாவின் விரல்களை நன்றாக இறுகப் பிடித்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தபடி அம்மாவின் படுக்கையில் தலை சாய்த்து கண் மூடினேன்.

அம்மாவின் சேலை கொஞ்சம் கொஞ்சமாய் நீல நிறமாக மாறிக் கொண்டிருந்தது. அம்மாவின் இடது கை தொங்கிக் கொண்டிருந்த திராட்சைக் கொத்தை பறிக்கின்ற லாவகத்துடன் மேல் நோக்கி எழுந்தது. அம்மாவின் காலுக்கடியில் கைப்பிடியோடு கூடிய ஓலைக் கூடையில் பறிக்கப்பட்ட பழங்கள் நிரம்பியிருந்தன.

என் கால்கள் என்னிலிருந்து விடுபட்டு நாகம்மன் கோவிலுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *