அம்மாவின் வாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 3,055 
 
 

“கொசுக்கடி. மெல்லிசா ஏதும் போர்த்திக்கோ ….” காதருகில் அம்மாவின் குரல் கேட்பது போல் ஒரு பிரமை. சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்து ஒரு புடவையை எடுத்து போர்த்திக்கொண்டாள் விஜயா. ஆனால் கலைந்து போன தூக்கம் மீண்டும் வரவில்லை.

மனதின் ஆழத்தில் பதிந்து, அம்மாவின் புடவை இழைகளுக்கிடையே பொதிந்து கிடக்கும் நினைவுகள் ஒவ்வொன்றாய் இன்று நினைவுக்கு வந்தன.

அம்மாவின் நடைக்கு ஏற்ப மயில்தோகை போல ஒரே தாள கதியில் அசைந்தாடும் மடிசார் புடவையின் கொசுவங்கள்…. தோள்களின் சாய்ந்தவாறே பார்த்துக்கொண்டே வந்து உறங்கிய நினைவுகள் …..

“அம்மா….. இன்னிக்கு கோவில்ல அம்பாளுக்கு சந்தனக்காப்பு என்று சொன்னியே . மஞ்சள் கலரில், பச்சை பார்டர் வைத்து சின்ன சின்ன ஜரிகை போட்டு, உன்னை மாதிரி ஒரு மடிசார் புடவை …. அதைத்தான் குருக்கள் மாமா அம்பாளுக்கு கட்டியிருந்தார் ” சிணுங்கினாள் ஐந்து வயது சின்னப்பெண்

“அது புடவை இல்லைடா மா. சந்தனக்காப்பு என்றால் நிறைய சந்தனத்தை அம்பாள் சிலை மேல் பூசி புடவை மாதிரி அலங்காரம் பண்ணுவது. குருக்கள் அவ்வளவு தத்ரூபமா, அழகா அலங்காரம் பண்ணியிருக்கார் . நாளைக்கு குருக்கள் மாமாவிடம் அலங்காரம் நன்னா இருந்தது என்று சொல்லு. சந்தோஷப்படுவார்.” என்று சின்னப்பெண்ணுக்கு பொறுமையாக விளக்கினாள் அம்மா.

ஓ….. புரிந்து கொண்ட விதமாக வியப்பில் விரிந்தன விஜயாவின் விழிகள்.

மூன்று அண்ணாக்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த கடைக்குட்டி பெண்ணான அவளுக்கு அம்மாவிடம் செல்லம் கொஞ்சம் அதிகம்தான் . கவுன், பாவாடை சட்டை என்று இருந்த அந்த கிராமத்தில் வித்யாசமாக ஸ்கர்ட், ப்ளௌஸ் என்று பெண்ணுக்கு அணிவித்து அழகு பார்த்த அம்மா . பண்டிகைகளுக்கு மற்றவர்களுக்கு ஒன்று என்றால் இவளுக்கு மட்டும் இரண்டு செட் டிரஸ் வாங்கும் அம்மா. வறுமையிலும் செம்மையாய் ஒரு இளவரசியாய் உணர வைத்த அம்மா.

தினமும் இரவில் சின்னண்ணாவுடனும் அக்காவிடமும் சண்டை போட்டு “அம்மா என் பக்கம், என்னை பார்த்துக்கொண்டுதான் படுத்துக்கணும்”. அம்மாவின் புடவை தலைப்பையே போர்த்திக்கொண்டு அம்மாவை கட்டிக்கொள்வாள். அண்ணாந்து படுத்துக்கோ என் மேல மூச்சு விடாதே” என்று அதிகாரம் வேறு.

காலையில் கிணற்றடியில் முகம் கழுவி விட்டு முகத்தை துடைத்துக்கொள்வது அம்மாவின் புடவைத் தலைப்பில்தான் .

குளத்தில் படிக்கட்டில் அமர்ந்து துணி துவைக்கும் அம்மாவின் ஒரு பக்க புடவைத் தலைப்பை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் அடிப்பாள்.

தோட்டத்திலிருந்து நித்ய மல்லி, சம்பங்கி பூக்களும் பறித்து புடவை தலைப்பில் கொண்டு வந்து “நான் நாலு, நாலாக எடுத்து வைக்கிறேன்; அழகாக தொடுத்து வை பார்க்கலாம்” என்று விளையாட்டாக பூ தொடுக்க கற்றுக்கொடுத்த அம்மா.

மருதாணி இலைகளை கொண்டு வந்து “மருதாணியில் கை பட்டால் இப்பவே சிவந்து விடும்; நீ குழவியை சுற்று; நான் தள்ளி விடுகிறேன். அப்புறம் அழகா இட்டு விடுகிறேன் ” என்று கல்லுரலில் அரைக்க கற்றுக்கொடுத்த அம்மா.

நவராத்திரி, கோவில் விழா காலங்களில் “வீடு தேடி வரும் அம்மனை வரவேற்க வேண்டாமா” என்று அழகாக கோலம் போட சொல்லி கொடுத்த அம்மா.

எந்த ஒரு வேலையையும் கடனே என்றில்லாமல் ரசனையுடன் செய்ய சொல்லி கொடுத்த அம்மா.

வருடங்கள் செல்ல விஜயாவும் வளர அம்மாவிடம் செல்லம் கொஞ்சுவதும், செல்ல சண்டைகளும் மட்டும் குறையவில்லை ; மாறவில்லை.

“கொஞ்ச நாழி பேசப்பொறுக்காதே உனக்கு. உடனே வந்திடுவியே” செல்லமாக கோபித்து கொள்ளும் பக்கத்து வீட்டு மாமியை “நான் ஸ்கூல் போகும்போது பேசுங்கோ மாமி” என்று வம்பு செய்து கிளப்பி விட்டு , ” உன்னிடம் குறைகளை சொல்லி புலம்புவதற்கு நீ என்ன யேசுநாதரா ; சுமை தாங்கியா — எல்லாத்தையும் சுமப்பதற்கு” என்று சலித்துக்கொள்ளும் இவளிடம்,

“எல்லோரும் யேசுவாக முடியுமா ; ஆனால் பொறுமையாக கேட்டு அன்பாக, ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வதற்கு இரக்கமுள்ள மனசு இருந்தால் போதுமே” — என்று மனித நேயத்தை சொல்லிக் கொடுத்த அம்மா.

“நம்மிடம் சொன்னால் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ஏதும் யோசனை சொல்வேன் என்று ஒரு நம்பிக்கை. அந்த எண்ணத்தை பாழாக்கலாமா” என்று நட்பிற்கு மரியாதை செலுத்திய அம்மா.

“அம்மா….. நீ ஆச்சாரம் பார்க்காமல் எல்லா குழந்தைகளையும் தூக்கி கொஞ்சறியாம் ; ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறாயாம்; அடுத்தாத்து மாமி கிண்டல் பண்ணுகிறாள் ” என்று கோபத்துடன் குறை கூறினால்….. “குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே. ப்ரியத்திற்கும் பக்திக்கும் ஜாதி ஏது ?” என்று சிரித்த, ஜாதி மத பேதம் பார்க்காத அம்மா.

ஆடிப்பெருக்கின்போதும், பொங்கல் விழாவின் போதும் அக்கம் பக்கத்து குழந்தைகள் எல்லோருக்கும் காவேரி ஆற்றின் கரையில் , கணுக்காலளவு நீரில் நின்று கொண்டு சித்ரான்னங்களை கையில் பரிமாறி சந்தோஷப்படுத்திய அம்மா.

விசேஷங்களில் சந்திக்கும் உறவினர்கள் ஏதும் குற்றம் கூறினாலும் கூட கோபம் கொள்ளாமல் புன்சிரிப்புடன் சமாதானம் கூறும் அம்மா. “இந்த ஜென்மத்தில் சேர்ந்து பிறந்தோம் ; அடுத்த ஜென்மம் எப்படியோ தெரியாது . இப்போது வீண் சண்டை ஏன் ? தழைந்து போவதில் தப்பில்லை” என்று இவளுக்கு விளக்கம் கூறி உறவுகளை போற்ற சொல்லிக்கொடுத்த அம்மா.

“லைப்ரரிக்கு போயிட்டு வா. ஆனால் ஆறு மணிக்குள், விளக்கேற்றுவதற்குள் வந்து விட வேண்டும்”.

“டென்ட் கொட்டகையில் நான்கு நாட்களுக்கு ஒரு படம் மாறும். எல்லா படமும் பார்த்தே ஆகணுமா”

சொல்லும் தொனியிலேயே இவளுக்கு புரிந்து விடும். அதட்டலோ, மிரட்டலோ இல்லாமல், கண்ணுக்கு தெரியாத ஒரு கண்டிப்பு கயிற்றை கையில் பிடித்துக்கொண்டு சுதந்திரமாய் இவள் சுற்றி வர அனுமதித்த அம்மா.

கல்லூரிக்கு சென்று வரும்போது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அழைத்து வந்த அம்மா.

இவள் படித்து, பட்டம் பெற்று வேலையில் அமர்ந்தவுடன் பெருமையாய் பூரித்து பார்த்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்த அம்மா.

அவள் சம்பாத்தியத்தில் ஒரு ஜோடி தங்க வளையல்களை அம்மாவுக்கு வாங்கி கொடுத்த போது “உன் ஆசைக்கு ரெண்டு நாள் போட்டுக்கொண்டேன். போதும்” என்று இதமாய் மறுத்து, “கல்யாணத்திற்கு இருக்கும் பெண். நீ போட்டுக்கோ ” என்று இவள் கைகளில் அணிவித்து மகிழ்ந்த அம்மா.

“நான் இப்போ சம்பாதிக்கிறேன். உனக்கு ஏதேனும் வாங்கி தருவேன்” என்று பிடிவாதம் பிடித்து அவ்வப்போது புடவை வாங்கி தருவதை மட்டும் வழக்கமாக்கி கொண்டாள். அதுவும் அம்மாவுக்கு பழகிய கடைக்கு அழைத்துச் சென்று தேவேந்திரா, சுங்கடி, துகிலி நூல் புடவை என்ற வகையில் வாங்கி கொடுத்தால் ரொம்ப சந்தோஷம். புடவையுடன் சேர்த்து வெள்ளை நிறத்தில் “புட்டா” போட்ட ஃபுல் வாயில் ரவிக்கை துணி . இதுதான் அம்மாவுக்கு மாக்ஸிமம் பர்ச்சேஸ். வாங்கி வந்த மறுநாளே உடுத்திக்கொண்டு வந்து “நன்னா இருக்கா” என்று கேட்டு மகிழ்வுடன் சிரிப்பாள்.

இப்போது நினைத்து பார்க்கும்போதுதான் புரிகிறது. உடையோ, உண்ணும் பொருளோ அம்மாவாக எதையும் ஆசைப்பட்டு கேட்டதில்லை ; பிள்ளைகளும் பெண்களும் வாங்கி தருவதை மறுத்ததுமில்லை ; குறை சொன்னதுமில்லை

பெண்கள், பிள்ளைகள் கல்யாணம் முடித்து பேரன் பேத்திகளையும் பார்த்தாகி விட்டது. பிள்ளைகள் மாப்பிள்ளைகள், மகள்கள், மருமகள்கள் என்று எல்லோரையும் ஒன்றாய், ஒரு சேர ப்ரியம் வைத்து வாழ்ந்தவள்.

கிட்டத்தட்ட தொண்ணுறு வயது வாழ்ந்த அம்மாவுக்கு கடைசி இரண்டு வருடங்கள்தான் ஞாபக மறதி வந்து விட்டது. நினைவுகளில் அறுபது வருடங்கள் போல பின்னோக்கி சென்று விட்டாள். வேளைக்கு குளியல். உணவு, மருந்து என்று கொடுத்து கவனித்தாலும் தான் பெற்ற பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை ; யாரென்று புரிந்து கொள்ளவில்லை.

இது நாள் வரை அம்மாவின் அன்பையும் அக்கறையையும் மட்டுமே அனுபவித்து வந்த விஜயாவிற்கு அம்மாவின் இந்த ஞாபக மறதியை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை . அம்மாவின் “பட்டா ” என்ற அன்பான அழைப்பிற்கு மனம் ஏங்கியது. ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் அம்மா இல்லை.

தன் வாழ்நாள் முழுதும் தான் பெற்ற பிள்ளைகளுக்காகவே உழைத்த ஓர் உயிர் ; அவர்களது நலனை மட்டுமே நினைத்த உள்ளம் ; முகம் வாடாமல் பார்த்து, பார்த்து நடந்து கொண்ட பாசம் ; தனக்கென்று எதுவும் கேட்காத, தனக்கென்று எதுவும் தனித்து வைத்துக்கொள்ளாத தியாகம். பத்து மாதம் வயிற்றில் சுமந்து, குழந்தையாய் மடியில் சுமந்து, வளரும் பருவத்தில் கை பிடித்து, காலம் முழுதும் மனதில் சுமந்து என்று நமக்காகவே வாழ்ந்த ஒரு உன்னத உறவு அம்மா. குறை சொல்லாமல், குட்டு வைக்காமல், தட்டி கொடுத்தே வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்த ஒரு ஆசிரியை.

வழக்கமாக விஜயா கணவர் குழந்தைகளுடன் லீவிற்கு வந்து தங்கி சீராடிவிட்டு ஊருக்கு திரும்பும்போது கிளம்ப உற்சாகமில்லாமல், மனசு கொஞ்சம் மயங்கும் ; தயங்கும்; இன்னும் ஒரு வாரம் தங்கி செல்ல ஆசைப்படும். அடுத்த மாதம் மீண்டும் வரலாம் என்று தன்னை தானே சமாளித்துக்கொள்வாள்.

இருக்கும் வரை எல்லோருக்கும் வேண்டியதை செய்து கொடுத்து எல்லோருக்கும் வேண்டியவளாக, நல்லவளாகவே வாழ்ந்த அம்மா இப்போது “தனக்கு மட்டுமேயான பயணத்தை” மேற்கொண்டு கிளம்பி விட்டாள் . அண்ணாவின் உத்யோக மாறுதல் காரணமாக எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு

எல்லோரிடமும் அன்பாக பழகும் அம்மா. “போஸ்ட் மாஸ்டரின் அம்மா என்று யாரும் சொல்ல மாட்டார்கள் பாட்டியின் பையன்தான் போஸ்ட்-மாஸ்டர் என்று இங்கு அம்மாவை வைத்துதான் எனக்கு அடையாளமே” அண்ணாவே கிண்டல் செய்வான். அம்மா இறந்தபோதுதான் தெரிந்தது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…..எத்தனை நட்புகள் அம்மாவிற்கு …..?

இனி ஊருக்கு வரும் போது ஓடி வந்து அணைத்துக்கொள்ளும் அன்பு இல்லை. இளைத்து விட்டாயே என்று கன்னம் வருடும் பரிவு இல்லை. பிடித்ததாக சமைத்து பரிமாறும் அக்கறை இல்லை. நம் வயதை மறந்து குழந்தையாய் மாறி கண்ணுறங்க தாயின் மடி இல்லை; தலை கோதி தூங்க வைக்கும் பாசம் இல்லை . நிஜமாய் இருந்த அம்மா நினைவுகளாய், நிழற்படமாய் மாறி விட்டாள்.

என்றோ அம்மா சொன்ன வார்த்தைகள்…..“இப்போ உனக்கு புரியாது; இந்த அம்மாவின் வார்த்தைகளை ஒரு நாள் நினைத்துப் பார்ப்பாய். அப்போ புரியும்” . ஆம்….. விஜயாவிற்கு இப்போது புரிந்தது அம்மாவின் வார்த்தைகளுக்கான முழுமையான, உண்மையான அர்த்தம் அம்மாவை இழந்த பின், இப்போதுதான் புரிகிறது.

நட்பு இனிமை நம்பிக்கை இருக்கும் வரை

காதல் இனிமை கண்ணியம் தவறாத வரை

உறவுகள் இனிமை உண்மையாக இருக்கும் வரை

குடும்பம் இனிமை கடமைகள் முடிக்கும் வரை

தாயன்பு இனிமை சாகும் வரை ;

“தாயவள்” சாகும் வரை …….

இருக்கும் போது இயல்பாக கருதி,

அருமை, பெருமை தெரியவில்லை

இழந்த பின்னே உண்மையும் உயர்வும் புரிகிறது.

மாசில்லா அன்பு, மாற்று குறையாத அன்பு

என்றும் மாறாத அன்பு,

மறக்க முடியாத அன்பு

மாற்று ஒன்று காண முடியாத அன்பு ……. “தாயன்பு ஒன்றே”.

அம்மாவின் காரியங்கள் எல்லாம் முடிந்து ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ஊருக்கு கிளம்பும் போது அண்ணாவிடம் கேட்டாள் “எனக்கு அம்மாவின் புடவை ஒன்று வேண்டும்”.

“அதற்கென்ன …. தீபாவளிக்கு வாங்கிய ரெண்டு புடவைகள் அப்படியே இருக்கு. எடுத்துக்கோ” என்ற அண்ணாவிடம்

“இல்லை .. இல்லை . எனக்கு அம்மா கட்டிக்கொண்ட பழைய புடவைதான் வேண்டும்” .

“அம்மாவின் வாசனை நிறைந்திருக்கும் புடவை ; அம்மாவின் பரிவும், பாசமும் வாசம் செய்யும் புடவை ; அம்மாவின் வார்த்தைகளை நினைவூட்டும் புடவை; அம்மாவின் அரவணைப்பை உணர வைக்கும் புடவை; மொத்தத்தில் அம்மாவே அருகில் இருப்பது போல, அம்மா கட்டிக்கொண்ட பழைய புடவை ….. அதுதான் வேண்டும்” என்று கண் கலங்கி நின்றாள் .

மகிழம்பூ வாசமாய்

மருதாணி சிவப்பாய்

மாம்பழத்தின் இனிப்பாய்

மழைத்துளிகளின் சாரலாய்

மயிலிறகின் வருடலாய்

மாறாத உன் அன்பு

மகளென்னை மடியில் சுமந்து

சீராட்டி பாராட்டி

மகிழ்வித்த நிகழ்வுகள்

என்றும் மறையாது ; மறக்க முடியாது

மங்காத உன் நினைவுகள்

மனதோடு என்றென்றும் ………

இன்று விஜயா இரண்டு குழந்தைகளுக்கு தாய். அவளுடைய பெண், பிள்ளைக்கு கல்யாணம் ஆகி விட்டது. இருந்தும் அம்மாவை எண்ணி ஏங்குகிறாள். அவளின் அம்மாவுக்கு என்றும் அவள் கடைக்குட்டி செல்லப்பெண்ணே ….! மீண்டும் ஒரு ஜென்மம் இதே தாயின் மகளாக பிறந்து வளரும் பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்குகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *