அம்மாவின் பாவாடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 9,571 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மாவிடம் ஒரு பாவாடை இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் அம்மா அதற்கு நாடா போட்டபடியே இருப்பாள். அது சாதாரண நாடா அல்ல; அம்மா அசட்டையாக இருக்கும் சமயங்களில் பாவாடையின் மடிப்புக்குள் போய் ஒளிந்து கொள்ளும். அம்மா நாடாவை இன்னொரு முறை போடுவாள். இது அடிக்கடி நடக்கவே நாடாவில் நெடுகலும் இருக்கிறமாதிரி ஒரு மடிப்பு ஊசியை அம்மா குத்திவைத்துவிட்டாள். நாடா உள்ளே போவதும், அம்மா மடிப்பு ஊசியைப் பிடித்து, ஒரு நாக்கிளிப் புழுபோல நீட்டியும், சுருக்கியும் அங்குலம் அங்குலமாக அதை வெளியே எடுப்பதும் வழக்கமாகி விட்டது.

வெகு காலம் கழித்த பிறகு எனக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. உண்மையில் அம்மாவிடம் இரண்டு பாவா டைகள் இருந்தன. அவையிரண்டும் தண்ணீரில் அடிக் கடி அலசித் தோய்க்கப்பட்டு வயோதிகம் அடைந்தவை. எல்லாம் ஒரே மாதிரி, ஒரே வயதில், ஒரே உயரத்தில், ஒரே பழுப்பில் இருக்கும். ஆனால் இரண்டு பாவாடைக்கும் அம்மாவிடம் இருந்தது ஒரே நாடாதான். அதைத்தான் அடிக்கடி மாற்றி மாற்றிப் போட்டிருக்கிறாள்.

அம்மா கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள். கல்யாணமாகி வரும்போதே இரண்டு பாவாடை புதிதாகத் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாடா போட்ட பாவாடை. எங்கள் கிராமத்துப் பெண்கள் பாவாடை கட்டும் வசதி இல்லாதவர்கள். ஒரு சிலர் கல்யாணம், திருவிழா போன்ற விசேஷங்களுக்குக் கட்டுவதற்கு ஒரு பாவாடை மாத்திரம் வைத்திருப்பார்கள். மணியக்காரர் பெண்சாதியிடமும், அம்மாவிடமும் மாத்திரம் இரண்டு பாவாடைகள் இருந்ததாகப் பேச்சு அடிபடும். வீட்டிலும், வெளியிலும் அவர்கள் பாவாடை அணியும் தகுதி கொண்டவர்கள். அம்மாவின் முகத்தில் எப்பொழுது பார்த்தாலும் இந்தப் பாவாடைப் பெருமை தெரியும்.

என்னுடைய அப்பாவின் முகம் பின்னேரத்து வெய்யில் போல கதகதவென்று இருக்கும். குடிப்பழக்கமோ, பீடி சுருட்டுப் பழக்கமோ, சீட்டாடும் பழக்கமோ அவரிடம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் வேலைக்குப் போகும் பழக்கம் கூட கிடையாது. அம்மாவுக்கு வாழ்க்கைப்பட்ட நாளில் இருந்து அவர் மறு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை. அற்புதமான சாது.

கைரேகை பார்ப்பதில் நிபுணர். அவரைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து கூட ஆட்கள் வருவார்கள். சப்பணக்கால் கட்டிக்கொண்டு வெகு நேரமாக அந்த அந்நியக் கைகளைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவருடைய வியாக்கியானங்களுக்குச் சம்பாவனை கிடைத்து நான் பார்த்ததில்லை. அம்மாவின் வயலில் இருந்து வரும் நெல்லு மூட்டையையும், தேங்காயையும், வாழைக் குலையையும் வைத்துத் தான் அவள் சமாளித்தாள் என்று நினைக்கிறேன். அந்தக் காலங்களில் என் கண்களுக்குத் தெரியாமல் வறுமையை மறைப்பதில் அம்மா மிகவும் சிரமப்பட்டாள்.

மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படாத ஓர் ஒயிலுடன் அம்மா கிணற்றடியில் முழுகிவிட்டு நடந்து வருவாள். அவள் கடந்த பிறகும் அவளுடைய வாசனை அங்கே நிற்கும். பிஞ்சாகும் வாய்ப்பை இழந்த கொய்யாப்பூக்கள் வழிநெடுகிலும் கிடக்கும். அம்மாவின் கால்களில் அவை ஒட்டிக்கொள்ளும். தோள்களில் வழிந்த நீண்ட கேசத்தில் தண்ணீர் சொட்டும். அவள் நடந்துபோன தடத்தில் சற்று நேரம் காற்று மினுமினுக்கும். அப்படியே போய் கொடியிலே பாவாடையை உதறிவிட்டு காயப் போடுவாள். இது தினசரி நடக்கும்.

பின்னால் நடக்கப் போகும் ஒரு சம்பவத்தில் இருந்து அம்மாவுக்கு இந்தப் பாவாடை எவ்வளவு முக்கியமானது என்று எனக்குத் தெரியவரும். இது அந்தஸ்துக்கு அறிகுறி. அவளுடைய பிறந்த வீட்டுச் செல்வச் செழிப்பு தீர்ந்து கொண்டு வந்தது. இந்தப் பாவாடை போனால் இன்னொன்று கிடைப்பது தூரமான நம்பிக்கை என்ற நிலையில் அம்மா இதை உயிரிலும் மேலாக நேசித்தாள்.

அம்மாவின் கண்களில் முடிவு பெறாத அழுகைகள் நிறைந்து கிடக்கும். அவள் சிரிக்கும் போது அது முற்றிலும் மாறிவிடும். அவளுடைய சிரிப்பு தனியாக எடுத்து வைத்த சாமிப் படையல்போல சந்தோஷம் பொங்க வெளிப்படும். முன் எச்சரிக்கை இல்லாமல் வந்ததினால் அது பெரிதாக நாலு பேர் கேட்கக்கூடிய விதமாக இருக்கும். தான் சிரித்துச் சிந்திய அழகு யார் கண்ணிலும் பட்டு விடப்போகிறது என்பது போல அந்தச் சிரிப்பைத் திருப்பி வாங்க அவசரப்படுவாள். கலகலவென்று ஒரு பள்ளி மாணவிபோல வெடித்துச் சிரித்துவிட்டு சில வினாடிகளில் ஏதோ பாரதூரமான குற்றம் செய்ததுபோல வாயைப் பொத்திக்கொள்வாள்.

சீதனமாகக் கொண்டுவந்த ஒரு மரப்பெட்டி அம்மாவிடம் இருந்தது. அதைச் சீனப்பெட்டி என்று அழைப்பாள். சீன அரசர்களும், அரசிகளும், சேடிகளுமாக அதன் முகப்பை அலங்கரித்தார்கள். சில விசேஷமான தினங்களில் மாத்திரம் அந்தப் பெட்டியை அம்மா திறப்பாள். அந்தச் சமயத்திற்குக் காத்திருந்து நான் போய் முன்னால் குந்துவேன். ‘வெளிச்சத்தை மறைக்காதே’ என்றபடி அம்மா அந்தப் பெட்டியை ஆராய்வாள். அவள் கொண்டுவந்த திரவியம் எல்லாம் அதற்குள் தான். முன்பு திறந்த நாளில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகைகளையும், உத்தரீயத்தையும், வெள்ளிக் கொலுசையும் பல மணி நேரம் கைகளில் எடுத்துப் பார்த்தபடியே இருப்பாள். உத்தரீயத்தை நான் தொடவும், கழுத்திலே போட்டுப் பார்க்கவும் அனுமதிப்பாள். பெட்டி நகைகள் வரவர குறைந்து கொண்டு வந்தது அப்பட்டமாகத் தெரியும். அதன் முன் இருக்கும் நேரங்களில் அம்மாவின் முகத்தை ஒரு மேகம் வந்து மறைத்துவிடும்.

அம்மா எந்த நேரம் என்ன செய்வாள் என்று சொல்லமுடியாது. சின்ன வயதாயிருந்தபோது என்னதான் சாப்பிட்டாலும் என்னுடைய உடம்பு நோஞ்சான் உடம்பு. பக்கத்து வீட்டு கனகம்மாக்காவின் மகன் கொழுகொழுவென்று இருப்பான். அவன் எப்பொழுது வந்து விளையாடினாலும் கடைசியில் என்னை அடித்த பிறகுதான் விளையாட்டு ஓயும். அம்மா வந்து அவனைப் பேசி அனுப்புவதுதான் வழக்கம்.

அன்றும் அப்படித்தான். விவகாரம் பெரிதாக ஒன்றுமில்லை. என் அப்பாவின் பெயரை அவன் மறந்துவிட்டதில் ஆரம்பித்தது. என்னை அடித்துவிட்டான். நான் பதிலுக்கு அவனை ‘தூமையன்’ என்று ஏசினேன். அப்போதுதான் அது நடந்தது. கலிவரின் பயணங் களில் வரும் ஒரு ராட்சத பறவை போல அம்மா எங்கிருந்துதான் பறந்து வந்தாளோ தெரியாது. வழக்கத்துக்கு விரோதமாக அவனை விரட்டாமல் என் சொண்டில் விரல்களால் சுண்டி விட்டாள். ‘இப்படி இனிமேல் சொல்லுவியா?’ என்று திருப்பித் திருப்பிக் கேட்டு பூவரசம் கிளையால் அடித்தாள். எனக்கு வலி தாங்க முடியவில்லை.

முதல் முறையாக அம்மாவிடம் எனக்குக் கோபம் ஏற்பட்டது. மூச்சுக்காற்று போன திசையில் நடந்து போனேன். என் உடம்பிலே அங்கங்கே பொன்னிறமான கொப்புளங்கள் கிளம்பியிருந்தன. சாயந்திர வெய்யிலிலே அவை மினுமினுத்தன. கிளுவை மரங்களுக் கிடையில் ஒரு தவளை தொண்டையை உப்பி உப்பி சுருக்கியது. உலகத்துக் காற்றை எல்லாம் எப்படியும் விழுங்கிவிட வேண்டும் என்று ஆயத்தம் செய்வதுபோல கால்களை அகட்டி உட்கார்ந்திருந் தது. என்னைப் பார்த்ததும் தன் பின் பாதியை எனக்குக் காட்டி தனது அதிருப்தியைத் தெரிவித்தது. என் நட்பை அது பொருட் படுத்தவில்லை.

இவ்வளவு காலமும் அம்மாவை ஒரு சிறந்த தாயாக வளர்த்திருந் தேன். அம்மாவின் சிந்தனை சத்தம் எனக்குத் துல்லியமாகக் கேட்கும். என் கொப்புளங்களைப் பெரிதாக்கினால் அம்மாவின் யோசிப்புகள் என் பக்கம் திரும்பக்கூடும் என்று நம்பினேன். அம்மா வின் பக்கவாட்டு முகத்தையும், மேல் உதடுகளில் வெண்டைக்காய் மயிர் போல வளர்ந்திருக்கும் ரோமத்தையும் தடவ வேண்டும் போல் பட்டது. சூரிய வெளிச்சத்தைக் காற்று அடித்துத் தள்ளும் வரை என் கால்கள் வீட்டுப் பக்கம் திரும்பவில்லை .

கண்களை மூடிக்கொண்டு இரவு நேர ஒலிகளை இனம் கண்டு பிடிப்பது எனக்கு விருப்பமானது. எங்கள் வீட்டில் நாங்களும் எலிகளுமாகக் குடியிருந்தோம். எங்கள் உணவு முடிந்த பிறகு எலிகளின் சாப்பாட்டு நேரம் ஆரம்பமாகும். எங்கள் பசிக்கு எப்படியோ தவறிய உணவுகளை அவை சத்தமாக உண்ணும். அம்மா மெதுவாக வந்து கன்னத்தில் காய்ந்துபோன கண்ணீர்த் தடத்தைத் தடவிப் பார்த்தாள். அம்மா என்னைக் கட்டிப் பிடித்தாள். ஒரு சின்ன இடைவெளி விட்டாலும் அது பெரிய அபராதம் ஆகிவிடும் என்பது போல என்னை இறுக்கியபடி விம்மினாள். பகல் முழுக்க காய்ந்த பாவாடையிலும் சேலையிலும் சூரியன் கொஞ்சம் மீதம் இருந்தது. மூச்சு விட எனக்குக் கஷ்டமாயிருந்தது. என்றாலும் அது உவப்பாகி அந்த அறை முழுக்க பரவச அணுக்கள் நிறைந்தன.

அம்மாவுக்கு இருந்த முக்கியமான கவலைகளில் ஒன்று என்னைப் பற்றியது. எங்கள் வாழ்க்கை அம்மாவின் சம்மதம் இல்லாமல் முட்டுப்பட்டதாக மாறியிருந்தது. அதை என்னிடமிருந்து மறைப் பதில் தான் அவ்வளவு கஷ்டம். அம்மாவின் தங்கை – என் சின்னம்மா – நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு இருந்தாள். அங்கே போகும் போதுதான் எனக்கு சோதனை ஏற்படும். நாங்களும் வசதியான குடும்பத்தில் இருந்து வருகிறோம் என்ற பிரமையைக் கொடுப்பதற்கு நான் பழக்கப்பட்டிருந்தேன்.

சின்னம்மாவிடம் பல பார்வைகள் இருந்தன. பூச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பார்வையை எனக்காக வைத்திருந்தாள். ஒரு நாள் வயதான வேர்வை அவளிடமிருந்து வீசும். மெலிந்தும், நெடுப்பாகவும் இருப்பாள். ஏதோ அவசரமாகச் சொல்ல வந்து மறந்து விட்டது போல வாய். அவள் போடும் ரவிக்கைகள் அவள் தோள்களில் சறுக்கியபடியே இருக்கும். அங்கே போகும் போதெல்லாம் அவள் உடுத்தியிருக்கும் சேலையின் சரிகையும் தங்க வளையல்களும் எங்கள் வறுமையை இன்னும் பிரகாசப்படுத்துவதுபோல எனக்குத் தோன்றும்.

அவர்களிடம் முட்டை வடிவ நிலைக் கண்ணாடி இருந்தது. நடுவிலே ஒன்றும், வள்ளி தேவானை போல பக்கத்திலே இரண்டு மாக. சின்னம்மா தன் முகத்தையும், முதுகையும், கன்னத்தையும், காதையும் ஒரே சமயத்தில் பார்க்கக்கூடிய விதமாக, மீளாத ஆச்சரியத்தை எனக்கு ஊட்டுவதாக, அது படைக்கப்பட்டிருந்தது. அன்று துணியினால் மூடி, என் பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டு கிடந்தது.

சின்னம்மா வீட்டில் கதிரை இருந்தது. அவள் தந்த பனங்காய் பணியாரத்தில் பங்குனி மாதத்தின் ருசி தெரிந்தது. கிளாஸ் விளிம்புகளில் விடாது இலையான்கள் மொய்த்தன. கால்கள் எட்டாத கதிரையில் இருந்துகொண்டு இரண்டு கைகளாலும் கிளாஸைப் பிடித்து அப்போது பிரபலமான சுப்பிரமணியம் ‘சோடாவைக் குடிக்கும் போது வழிச்சு துடைச்சு குடிக்கக்கூடாது’ என்று அம்மா பலமுறை எச்சரித்தது ஞாபகத்துக்கு வரும். அம்மாவின் கண்பாஷை அடிக்கடி என் பக்கம் கடுமையாகத் திரும்பும். சோடாவைக் குடிப்பதும், அளவு பார்ப்பதும், மீதம் வைப்பதுமாக மனது அவஸ் தைப்படும். மிச்சம் விடவேண்டும் என்ற ஏக்கத்தில் சோடா குடிக்கும் அந்த அற்புதமான சந்தோஷமும் அற்பமாகிவிடும். கடைசியில், உயிரை விடுவதுபோல இலையான் மூத்திரம் அளவுக்கு ஒரு சொட்டு பானத்தை நான் கிளாஸில் மிச்சம் விடுவேன்.

வழக்கமாக என் கால்களைத் தொட்டுக்கொண்டு வரும் ரோடு அன்று என்னை ஸ்பரிசிக்க மறுத்துவிட்டது. அப்படியும் வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த நினைவு அகலவில்லை. அளவுக்கு அதிகமாகக் கொஞ்சம் மிச்சம் விட்டுவிட்டோமோ என்று மட்டும் மனது போட்டு அடித்துக்கொண்டே இருந்தது.

என்னுடைய கால்கள் சிலந்தியின் கால்கள் போல மெலிந்தும், அகன்றும், பல திசைகளில் ஒரே சமயத்தில் போகும் வல்லமையும் கொண்டு இருக்கின்றன என்று அம்மா அடிக்கடி சொல்வாள். என்னை எப்படியும் தேற்றிவிட வேண்டும் என்று அவள் ஆலோசித்த காலங்களில் தான் என் வாழ்க்கையில் ஒரு முசுட்டை மரம் வந்து குறுக்கிட்டது. இது எங்கள் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை. பக்கத்து அன்னம்மாக்கா வீட்டிலிருந்து தன் சதித்தனத்தை என் மீது காட்டியது. அன்னம்மாக்கா படிக்காத தேவாரம் இல்லை, பிடிக்காத விரதம் இல்லை. ஆனாலும் வாடாமல்லிகை போல அவளுக்கு வாடாத உடம்பு. கந்த சஷ்டி விரதத்தின்போது ஆறுநாளும் இரவு மாத்திரம் பாலும் பழமும் சாப்பிடுவதாகச் சொல்லுவாள். ஆனால் பழம் என்றால் ஒரு முழு பலாப்பழம் என்ற விஷயம் என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது.

இந்த அன்னம்மாக்கா தயவால் அம்மா அடிக்கடி முசுட்டை இலை வறை வைப்பாள். அடிமட்டம் வைத்து அளந்தது போல இலையைச் சின்னச் சின்ன சைஸில் வெட்டி, தேங்காய்பூ போட்டு, அரை அவியல் அவித்து, உப்பு வெங்காயம் மிளகாய் என்று அளவாகக் கறி கூட்டி, வெகு நேரம் பாடுபட்டு அம்மா சமையல் செய்வாள். அதனுடைய ருசி வேப்பங்காய்க்கும் குரும்பட்டிக்கும் இடைப்பட்ட ஒரு சுவையாக இருக்கும். உலகத்துச் சிறுவர்களை எல்லாம் பழி தீர்ப்பதற்காக ஒரு தீர்க்கதரிசியினால் கண்டு பிடிக்கப்பட்ட வறை இது.

வறை முழுக்க சாப்பிடவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கப் படுவேன். என்னை ஊக்குவிப்பதற்காக அம்மா அகப்பையின் தலையைப் பிடித்து அடிக்காம்பைக் கண்முன்னே காட்டிக்கொண்டி ருப்பாள். சோற்றின் நடுவே முசுட்டை இலையும் தன் தொழிலைச் செய்யக் காத்துக்கொண்டிருக்கும். எண்ணி நாற்பது நாட்கள் சாப்பிட்டால் நோஞ்சான் உடம்பு தேறி, தேகம் பொன்னிறமாகிவிடும் என்று பலமான நம்பிக்கை தருவாள். அந்த அகப்பையும் எனக்கு முன்னால் தலைகீழாகப் படம் விரித்த பாம்பு போல ஆடிக்கொண்டிருக்கும். சோற்றை உருட்டி அதன் நடுவிலே வறையை மறைத்து வைத்து விழுங்குவேன். அப்படியும் நாக்கை ஏமாற்ற முடியவில்லை. அந்த ருசி பல வருடங்களாக என் நாக்கில் வசித்தது.

முசுட்டை வறை எனக்கு எதிரி என்றால் அதிலும் மோசமான ஒரு எதிரியை அம்மா தினமும் சந்திக்க வேண்டி இருந்தது. அந்த எதிரியை சப்ளை பண்ணியதும் இந்த அன்னம்மாக்காதான். இவ வளர்த்த மாடு மிகவும் சுதந்திர புத்தி கொண்டது. கொஞ்சம் அசந்தாலும் எங்கள் வீட்டு வளவுக்குள் புகுந்துவிடும். உடலை வருத்தி அம்மா போட்ட கீரைப்பாத்தியை, சூரனுடைய தலை போல முளைக்க முளைக்க, இந்த மாடுதான் சாப்பிட்டுக்கொண்டு வந்தது.

இந்த மாட்டின் ஆக்கினையால் யார் வந்து கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலும் ‘படலையை இறுக்கிச் சாத்துங்கோ’ என்று அம்மா உள்ளே இருந்தபடியே எட்டிக்கூட பார்க்காமல் சத்தம் கொடுப்பாள். இந்த மாடும் பொறுமையாக மனிதர்களின் அஜாக் கிரதையில் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கும்.

அம்மா அருமை அருமையாக வளர்த்த கீரை தகதகவென்று வளர்ந்து வயதுக்கு வரும் சமயம் ஒருமுறை மாடு புகுந்துவிட்டது. கீரைப் பாத்தியை துவம்சம் செய்தது. கீரையைக் கொத்துக் கொத்தாக இழுத்து மண்ணை உதறி உதறிச் சாப்பிட்டு முடித்தது.

கீரைப்பாத்தி வெறும் துவக்கம்தான். அதை முடித்துவிட்டு பிர தான சாப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தோடு திரும்பியது. சூரிய னால் பழுப்பேறிப்போய், கீழ்க்கரையோரம் கிழிந்து, நுரை வராத சோப்பினால் கழுவித் துவைத்து உலர்த்தப்பட்டு, நாவுக்குத் தோதான உஷ்ணத்தில், மொரமொரவென்று ஆசை காட்டிக்கொண்டு, நாடா வில்லாமல் கிடந்தது அம்மாவின் பாவாடை. அந்த மாடு கடிகார முள் சுழலும் திசையில் சுழன்று, எட்டி ஒரு வாய் வைத்துவிட்டது. கரையோரப் பகுதிகளை முடித்துவிட்டு, தொடைப் பகுதிக்கு வரும் போதுதான் அம்மா கண்டாள். மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, உயிர் எழுத்துக்களால் மட்டுமே ஆன ஓர் ஒலியை அவள் கண்டம் அப்போது எழுப்பியது. மூர்ச்சை தெளிந்த பிறகு ‘ஐயோ! என்ரை பாவாடை!’ என்று பாய்ந்து வந்து உருவினாள். மாடு விடவில்லை. அம்மா இழுக்க, அதுவும் இழுத்தது. இழுத்தபடியே படலையை நோக்கி ஓடியது. அம்மா, முழங்கால் அரைய இழுபட்டாள். படலையைக் கடக்கும் போது மாடு பாவாடையைப் போட்டு விட்டது.

பாவாடையை நிலத்திலே பரப்பியபடி அம்மா குந்தியிருந்தாள். தொடையும் தொடை சார்ந்த இடத்திலும் ஒரு குழந்தை புகுந்து போகும் அளவுக்குப் பெரிய ஓட்டை. வெகு நேரம் அதைப் பார்த்த படியே இருந்தாள். அவளுடைய வாய் ‘தூமையன், தூமையன்’ என்று சொல்லி முணுமுணுத்தது. கண்ணிலே இருந்து உருண்டு இறங்கிய ஒரு கண்ணீர் கீழே போகத் தைரியமின்றி கன்னத்தின் நடுவிலேயே நின்றுவிட்டது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்தது போலப் பட்டது. அம்மா மூசி மூசி பாவாடையை இழுத்தபடி நின்ற காட்சி என் மனதை விட்டு அகலவே இல்லை. எங்கள் சிறிய கிராமத்தில் ஒரு பாவாடை மட்டுமே வைத்திருக்கும் ஏழைப் பெண்களில் ஒருத்தியாக அம்மா கீழே இறக்கப்பட்டு விட்டாள்.

இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். அதற்குப் பிறகு அம்மா பள்ளி மாணவி போல கலகலவென்று வெடித்துச் சிரித்தது எனக்கு ஞாபகத்தில் இல்லை.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *