அம்மாவின் தாலி..!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 8,984 
 

சில நாட்களாக அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து வந்த தகவலை கேட்டு தான் பணிபுரியும் திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டான் கார்த்தி. பேருந்து புறப்பட தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கினான்.

சிறு வயதில் தந்தை இறந்துவிட கார்த்தி மற்றும் அவன் அண்ணன் அருண் இருவரையும் அம்மாதான் வளர்த்தாள். அம்மாவின் அன்புடன் கண்டிப்பும் சேர்ந்து இருக்க கார்த்திக்கும் அவன் அம்மாவிற்கும் தினமும் சண்டைதான். படிப்பு முடிந்தவுடன் அருணுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க பின்பு அருணுக்கு திருமணம் நடைபெற்றது.

அண்ணி வந்தபின், அருண் மனைவியின் கைப்பாவையாக மாறி விட்டான். அம்மாவின் கண்டிப்பு மற்றும் அண்ணியின் குத்தல் பேச்சு காரணமாக அங்கிருந்து புறப்பட்டு திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்து விட்டான் கார்த்தி. எப்போதாவது வந்து போவதோடு சரி. கடைசியாக அம்மாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. வீட்டிற்குள் கார்த்தி நுழைந்தவுடன் அதிர்ச்சியாய் பார்த்தார்கள் அண்ணனும் அண்ணியும்..

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஏன் என்கிட்ட சொல்லல…” என கேட்டான் கார்த்தி..

“ஆமா நல்லா இருக்கும்போது பார்த்து கிழிச்சிட்ட…இப்போ வந்து என்ன பண்ண போறே.. அதான் சொல்லல” என்றான் அருண்.

கார்த்தி நேராக அம்மா அறைக்குள் சென்றான்…

“சொத்துக்காக சரியான நேரத்தில் வந்து இருக்கான் பாருங்க. ரொம்ப உஷாருங்க உங்க தம்பி” என மனைவி சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் அருண்.

ஓரமாக கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அம்மாவின் அருகில் சென்றான் கார்த்தி. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு அம்மா என்று அழைத்தான் கார்த்தி. யாரு என குரல் கொடுத்தாள் அம்மா…..

“கார்த்தி மா… கார்த்தி யா வந்துட்டியா?… நீ வருவேன்னு எனக்கு தெரியும். சதா உன் நினைப்பு தான் எனக்கு….”

“எனக்கும் அதே நினைப்புதான் மா” என்றான் கார்த்தி ..அருகில் அமர்ந்து கொண்டான்.

அம்மா மகன் உரையாடல் தொடங்குகிறது…

“இப்போ உடம்பு எப்படிமா இருக்கு?”

“உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது பா கார்த்தி…சாப்பிட்டியா நீ?…”

“இன்னும் இல்ல மா…”

“போய் சாப்பிடு…”

“இருகட்டும் மா அப்புறமா சாப்பிடுகிறேன்…”

“உன் அண்ணனும் அண்ணியும் இப்போ ரொம்ப கஷ்ட படுத்துறாங்க பா… எனக்கு இங்கு சுதந்திரம் இல்லை… விரும்பியதை சாப்பிட முடியல… நீ இருக்கும் இடத்திற்கு என்னையும் கூட்டிட்டு போய்டுப்பா….”

“சரி மா உனக்கு உடம்பு சரியான அப்புறம் கூட்டிட்டு போறேன் மா…”

“உனக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்காமல் இருக்கிறேனேனு ஒரு கவலைதான் எனக்கு….”

“பரவாயில்லை மா பிறகு பண்ணிக்கிறேன்….”

“முதல் முறையா என் வயிற்றில் குழந்தை இருக்கும் போது பொண்ணுதான் வேணும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன் ஆனால் பையன் தான் பிறந்தான்.”

“அடுத்து வயிற்றில் குழந்தை இருக்கும் போது பொண்ணுதான் வேணும் என்று விரதம் இருந்தேன் ஆனாலும் எனக்கு பையன் தான் பிறந்தான். இரண்டும் மகனாக போய்விட்டது…உங்க அப்பா போன பிறகு எனக்கு மனசு விட்டு பேச யாரும் இல்லாம போய்ட்டாங்க”

“புரியுதுமா…நான் உனக்கு எதுவும் செய்யல…அருகில் கூட இல்லை…அம்மா உனக்கு ஞாபகம் இருக்கா…அப்ப நாம கிரிவலம் போவோமே…”

அம்மாவின் முகம் பிரகாசம் ஆகிறது…

“ஆமாம் ஞாபகம் இருக்கு… நாம கார்த்திகை தீபம் எல்லாம் கோயிலுக்கு போயிட்டு வருவோமே அது எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு…. ரொம்ப சந்தோஷமாக இருந்தோம் அப்போ….. கோயிலுக்குப் போயி ரொம்ப நாள் ஆகிவிட்டது கார்த்தி… என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறியா…”

“கண்டிப்பா மா நான் கூட்டிட்டு போறேன்…”

“கார்த்தி உனக்காக அந்த அலமாரியில் ஒரு பொருள் வெச்சு இருக்கேன் அப்புறம் மறக்காம எடுத்துக்கோ…”

“சரிமா அப்புறமா எடுத்துக்கிறேன்…”

அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு திருப்தி தெரிகிறது. மகனை பார்த்தபடியே உறங்கி போனால். அருகிலேயே கீழே அமர்ந்து அம்மாவை பார்த்து கொண்டு இருந்தான் கார்த்தி. எப்பொழுது உறங்கினான் என்று தெரியவில்லை…அதிகாலை விழிப்பு வந்ததும் பார்க்கும் பொழுது அம்மா இறந்து இருந்தாள்…

“வந்தான் அம்மாவை முடித்துவிட்டான்” என்றாள் அண்ணி… அம்மாவின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பினான் கார்த்தி…

“உனக்காக அலமாரியில் ஒரு பொருள் வச்சிருக்கேன் எடுத்துக்கோ என்று அம்மா சொன்னது நினைவுக்கு வர அலமாரியைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு சின்ன நகை பெட்டி இருந்தது அதை திறந்து பார்த்தான் அதில் “அம்மாவின் தாலி” இருந்தது…கண்களில் நீர் முட்ட அதை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் கார்த்தி…ஹாலில் அருணும் அண்ணியும் இருந்தனர்…

“அருண் நான் ஊருக்கு கிளம்பறேன். அம்மாவின் சொத்துக்கள் அனைத்தும் உன் பெயரில் எழுதிக் கொள்…எப்போது எங்கே வரணும் என போன் செய்து சொல்லு…நான் வந்து கையெழுத்து போடுறேன்” என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் கிளம்பினான் கார்த்தி…அவன் போன திசையையே வெறித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான் அண்ணன் அருண்.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

2 thoughts on “அம்மாவின் தாலி..!

  1. சென்டிமெண்ட் கலந்த ஒரு நல்ல சிறுகதை. ஒரு நல்ல முடிவு. நிலம் நீச்சு என்ற
    சொத்துக்களுக்கு ஆசைப்படாத இளைய மகனுக்கு அம்மா கொடுத்த மிகப் பெரிய சொத்தாய்…அம்மாவின் தாலி, வித்தியாசமான சிந்தனை.
    எழுத்தாளர் தமிழ் தரணிக்கு வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.
    என்றும் அன்புடன்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *