அம்மாவின் தாலிக் கொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,016 
 

தமிழ் பெண்களைப் பொறுத்தவரை இந்தத் தாலி அணிதல் என்பது வாழ்க்கை நிழல்களையெல்லாம் தாண்டி நிற்கிற உயிரையே ஒளி வட்டத்தில் தூக்கி நிறுத்துகின்ற பெருமைக் கவசம் மாதிரி அது அவர்களுக்கு அதை அணிந்தால் முகத்திலே ஒரு தனிக் களையோடு பிரகாசமாக அப்படி வலம் வருகிற பெண்கள் குறித்து அதை ஒரு குறியீடாகக் கொண்டு அம்மா வாழ்ந்ததாக சாந்தன் என்றைக்குமே கண்டதில்லை தாலியையென்ன நகைகளைக் கூட அவள் பெரிசுபடுத்துவதிலை அப்படி அவள் நினைத்திருந்தால் அதன் மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்புகளின் பொருட்டு தனது மிகப் பாரதூரமான இந்த வாழ்க்கையையே தடம் புரளச் செய்து என்றைக்கோ அவள் கதை ஒரு கண்ணீர்க் காவியமாக நிழல் தட்டி வெறிச்சோடிப் போயிருக்கும்

அவள் அப்படி நடக்காமல் விட்டதற்குப் பக்குவப்பட்ட அன்பு நிலை தவறாத உள்ளொளிப் பிரகாசமான மனதின் புனித இருப்பு நிலை தான் காரணமென்பதை அறிவு சூன்னியமாகிப் போய் நிழல் தட்டிக் கிடக்கிற அப்பாவால் புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் சாந்தனுக்குத் தெரியும் அம்மா எதிலும் பங்கப்படாத ஒரு பத்தரைமாற்றுத் தங்கம் தானென்று

அப்பேர்ப்பட்ட அவளிடம் போய்த் தாலி வரம் கேட்டுச் சண்டை போட்ட அப்பாவை நினைக்க அவனுக்குப் பெரும் வெட்கக்கேடாக இருந்தது அதுவும் அவர் உயிரே அவள் கழுத்தில் தான் என்று இருக்கும் போது எப்படிக் கேட்க மனம் வந்தது அவரால்? ஆகக் கடைசியில் எல்லாமே தோலுரிந்து போக அவள் உடம்பில் மிஞ்சி நிலைத்து நிற்கிறது இந்தத் தாலி மட்டும் தான் அதையும் பசித்த வாய்க்குப் பலி கேட்கிற தென்றால் எப்படி முடியும்?

உண்மையில் அது வயிற்றுப் பசிக்காகத்தான் என்றால் வேறு வழியில்லை கழற்றிக் கொடுத்து விடலாம் இது ஒன்றும் அதற்காக இல்லையே பின் எதற்காக? ரேடியோவைச் சுழற்றிச் செய்தி கேட்காவிட்டால் எதுவுமே ஆகாதாம் அவருக்கு அம்மாவின் தாலி தானத்தில் தான் அவர் போட்ட கணக்கு இது உலக நடப்புகள் அறிய முடியாமல் போனால் என்ன குடியா முழுகி விடப் போகிறது? இது வரை காலமும் உலக நடப்புகள் அறிந்து சாதித்த கணக்கில் தான் அவரின் இந்த எதிர் மறை நிழல் தோற்றம்

இப்படி நிழலாகவே வாழ்க்கை மண்ணில் வேரூன்றி நிற்கும் வரை அம்மாவை உயிர் காண்கிற நிஜ தரிசனமெபது வெறும் பகற் கனவு தான் அம்மா உயிரில்லை வெறும் ஜடம் தான் என்பது அவர் நினைப்பு அது இருக்கும் வரை அவரும் மாறப் போவதிலை அம்மாவை எப்படியாவது வேட்டையாடிப் பசியாறினாலே தன் பசியடங்குவதாய் அவர் போட்டிருக்கும் கணக்குக்கு மாறாக அம்மா எது சொன்னாலும் எடுபடப் போவதில்லை பேசாமல் தாலியைக் கழற்றிக் கொடுத்து விட வேண்டியது தான்

அதுவும் எவ்வளவு மங்களகரமான தாலி .அது கழுத்தில் இருக்கும் வரை தான் அவளுக்கும் பெருமை அப்படி என்று உலகம் நம்பும் அந்த நம்பிக்கையொளிபட்டு அவள் களை கொண்டு சிரிப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருப்பது போல் பட்டாலும் சாந்தனுக்குத் தெரியும் அவள் அதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டாளென்று

வெளிப் பிரக்ஞையாக வருகின்ற இத்தகைய காட்சி மயக்கம் குறித்து அவள் மனதில் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை பின் தாலி போனதற்கு ஏன் அவள் வருத்தப்படப் போகிறாள்? அப்பா அதற்காக அவளோடு சண்டை போட்ட அந்தக் கரி நாளை சாந்தன் இன்னும் மறக்கவில்லை

அன்று ஒரு வெள்ளிக்கிழமை என்று ஞாபகம் அம்மா வேலை அவசரத்தில் குரல் உயர்த்தி அப்பா அழைப்பதைச் செவிமடுக்கத் தவறியவளாய் அடுக்களையே கதியென்று கிடந்த போது அவர் கோபம் தலைக்கேறியவராய் அவர் அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு உள்ளே போன போது சாந்தன் அவரைப் பின் தொடர்ந்து ஓடி வந்தான்

நல்ல வேளை அவர் அடி விழுவதற்கு முன்பே அவரின் மிருக குணம் பிடிபட்ட நிலையில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவள் கேட்டாள்

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு “

“ஒரு முக்கிய அலுவலுக்குக் காசு தேவைப்படுகுது உன்ரை தாலியை மக்கள் வங்கியிலே அடகு வைக்க வேணும் கழற்றித் தா என்று தான் கேக்கிறன்”

“தாலியையே அடகு வைக்கிற அளவுக்கு அப்படியென்ன தேவை உங்களுக்கு?”

“ஒரு ரேடியோ இல்லாமல் செய்தி கூடக் கேக்க முடியேலை என்ன பாக்கிறாய்? உன்ரை வாழைக்காய் மூஞ்சிக்கு ஒன்றுமே விடியாது இப்ப தரப் போறியோ இல்லையோ நானே கழற்றி எடுக்கட்டே?”

அதைக் கேட்க அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது தனக்கும் அவருக்குமிடையிலான உறவு நெருக்காமான புனித சங்கதிளுக்கு ஒரு தெய்வீக அடையாளமாக இருக்கிற அதை வெறும் வரட்டு நிலைக்காகப் பலி கேட்கிறதென்றால் இவர் சுய புத்தி ஒளி மங்கி நிற்பதையே பறை போட்டுப் பிர்கடனப்படுத்தவே இவரின் இந்தக் காரிய அபத்தம்

இதை வாய் விட்டுச் சொல்லிக் காட்டுகிற நிலைமை கூட எனக்கு வர வேண்டாம். இப்ப என்ன என்ரை தாலியைத் தானே கேக்கிறார். இது எனக்கு உயிரை விடவா முக்கியம்? எது கழன்று போனாலும் நான் அழியாத சத்தியத்தின் இருப்பு நிலை என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கும் வரை இதனால் எந்தப் பங்கமும் நேரப் போவதில்லை என்ற நினைப்பு மேலோங்க அவள் தாலியைக் கழற்றிக் கொடுத்த போது அது ஒரு காட்சி வெறுமையாய் சாந்தனின் கண்களையே சுட்டது

இந்தத் தாலி அப்பா அம்மாவுக்கிடையிலான புனிதமான திருமண உறவைச் சாட்சி கொண்டு நிரூபிப்பதற்கான ஒரு தெய்வீகச் சான்று முகமாய் அம்மா கழுத்தில் ஒளிர்ந்ததே ஒரு கனவுத் தோற்றமாய் மறைந்து போக தாலி இல்லாதொழிந்த விதவைக் கோலத்துடன் அவளை நேர் கொண்டு பார்க்க முடியாமல் போன மன வெறுமை அந்த வீட்டில் சாந்தனுக்கு மட்டும் தான் அவனுடைய இளஞ் சகோதரர்கள் அந்தளவுக்கு இன்னும் பக்குவ்பப்படவில்லையென்பதே அவனின் தீராத மனக் குறையாக இருந்தது அப்படி யாராவது இருந்திருந்தால் அவனின் மனச் சுமையை இறக்கி வைத்துப் புறப் பிரக்ஞையாய் வருகின்ற அம்மாவின் நிலைச் சரிவுகள் குறித்து மனம் விட்டுப் பேச ஒரு வழி கிடைத்திருக்கும் அம்மாவோடு தர்க்கரீதியாக இதைப் பற்றிப் பேசினாலும் ஒரு நிறைகுடம் போலவே அவளின் பதில் சுயாதீனமான ஒளிச் சுவடுகளுடன் சத்திய பிரகடனமாக வெளி வரும் போது அபிரிதமான மனக் குளிர்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு விட்ட பாவனையில் அவனும் மெளனமாகி விடுவதே வழக்கமாகி விட்ட பின் அவன் அவளோடு இதைப் பற்றிப் பேசிய நாட்கள் மிக அரிதாகவே வந்து போயின

தாலியை அடகு மீண்டு தருவதாக அதை அம்மாவைக் கஷ்டப்படுத்தி வாங்கும் போது அப்பா கொடுத்த வாக்குறுதி இப்போது காற்றில் பறக்கிறது வேலை நேரம் தவிர்ந்த மிகுதிப் பொழுதெல்லாம் அவருக்கு ரேடியோவுடனேயே சுகமாகக் கழிவதைப் பார்க்கும் போதெல்லாம் சாந்தன் வயிறெரிந்து நினைப்பதுண்டு இவரை மணக்க அம்மா அப்படியென்ன பெரிய பாவத்தைச் செய்து விட்டாள்?

சீ ! நினைக்கவே மனம் கூசுகிறது அம்மாவையே ஒன்றும் இல்லாமல் மூளியாக்கி விட்டு இவருக்கென்ன மலர் மேடை போட்ட கணக்கில் பாட்டு வேண்டிக் கிடக்கு? பழைய சினிமாப் பாட்டுக்களில் அப்படியொரு மோகம் அவருக்கு. ரேடியோவும் கையுமாக அவரைப் பார்க்குப் போது மங்களம் இழந்த அம்மாவின் நிழற் கோலமே கண்ணில் குத்துவதாய் அவன் நெஞ்சில் உதிரம் கொட்ட நிற்பது செல்லரித்த வாழ்க்கை நிகழ்வுகளின் இருளையே பிரதிபலித்துக் காட்டுகிற மாதிரி அவனை அப்படிப் பார்க்கிற போதெல்லாம் அம்மா நெஞ்சிலும் உதிரம் கொட்டுகிற மாதிரி ஓர் உணர்வு

அவனைச் சமாதானப்படுத்த அவள் கூறுவதுண்டு

“சாந்தன் நீ ஒன்றும் வருத்தபாடாதே தாலி போனாலென்ன அது ஒரு வெளி அடையாளம் மட்டும் தான் நானே இதுக்காக வருத்தப்படேலை எப்பவும் எதிலும் குறையாத ஒரு முழுமைத் தன்மையோடு நான் இருப்பதாய் உணர்கிறன் அப்படியிருக்கேக்கை உனக்கென்ன மன வருத்தம்?

“அதில்லையம்மா நான் உங்களை முழுசாய் நம்புறன் என்ரை மன வருத்தம் என்னெண்டால் ஒரு விலைமதிப்பில்லாத பொருளின் அருமை தெரியாமல் அப்பா அடிக்கிற கூத்தப் பாக்கத்தான் எனக்கு எரிச்சல் வருகுது”

“எதை விலைமதிப்பில்லாதது என்று நீ சொல்ல வாறாய்?”

“உங்கடை தாலி நீங்கள் எல்லாம் தான் “

“சரி இரண்டையும் விடுவம் எனக்கு இப்ப ஓரே ஆசை தான் என்ரை முழுமைத் தன்மை தான் இப்ப எனக்கு இருக்கிற ஒரே சொத்து இதிலை கரைஞ்சு போற ஒளியாய் உன்னையும் நான் பாக்க வேணும் “

“அந்தளவுக்கு முத்திப் பழுக்க என்னாலை முடியாதம்மா என்ரை ஆசை என்ன தெரியுமோ? மறுபடியும் உங்களைத் தாலிக் கழுத்தோடை நான் பாக்க வேணும் இது நிறைவேறுமா?

“கடவுளுக்குத் தான் வெளிச்சம்”

அவன் அப்படியொரு கனவை மனம் நிறையச் சுமந்து கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவதில் பல பிரச்சனைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேர்ந்தது வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காகக் கடைசியில் அம்மாவின் தாலிக் கொடியையே குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று அவன் அப்படியொரு நிலைமை வருமென்று கனவில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை எல்லாம் அப்பாவால் வந்தது கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் அவர் செய்த வேலையால் வீடே பற்றியெரிகிறது

எண்பத்திமூன்றாம் ஆண்டு நாட்டில் நிகழ்ந்த இனக் கலவரத்தைச் சாட்டாக வைத்து அவர் வேலைக்குப் போகாமல் நின்றது அம்மாவையே ஒரு தெருக் கதாநாயகி ஆக்கத் தான் பாவம் எல்லாச் சுமையும் அவள் தலை மீதே வந்து விடிய கொஞ்சமும் முன் யோசனையின்றி அப்பா மூட்டி விட்ட பாவ நெருப்பு அதில் விழுந்து உயிர் போகிற சோகம் அம்மாவுக்கு

அப்போது அப்பாவுக்குப் பொலநறுவையில் வேலை முழுச் சிங்களக் கிராமம் தான் குடும்பக் கடமையே தனது கர்மயோகம் என்று நம்புகிற ஒருவனுக்கு மரண பயம் கனவிலும் வராது ஆனால் அப்பா என்ன செய்தார் தெரியுமா?அடிப்படைப்,பொருளாதார வசதி கூட இல்லாத நிலையில் இப்படி வேலையை விட எப்படி மனம் வந்தது அவருக்கு?. அவர் குடும்பத்தை ஒரு பொருட்டாக எண்ணியிந்தால் தானே இதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கழுவாய் சுமக்க

அவர் வேலையை விட்டு விட்டு வரும் போது வழியில் பால் குடித் தாராம்.. தனது செய்கையால் வீடே பற்றியெரியப் போகிறது என்பதையே அறியாமல் பால் குடித்தாராம் அவர். வேலைக்குத் தலை முழுகி விட்டு வீடு வந்தவர் ஒரு வருடமாகியும் வைத்திய சான்றிதழ் அனுப்பாமல் நின்றதால் வேலையும் போனது சம்பளமும் வரவில்லை பாவம் அம்மா தான் என்ன செய்வாள் கையில் நகை நட்டுக்களாவது இருந்திருந்தால் விற்றுச் சுட்டுப் பிழைக்க வழி கிடைத்திருக்கும்

அதற்கும் வழியில்லாமல் கையறு நிலையாக இருக்கும் போது படி தாண்டிப் போய்க் காசுக்காகக் கையேந்தித் தெருவெல்லாம் அலைவதைத் தவிர வேறு தெரியவில்லை அவளுக்கு அதிலும் தோலுரிந்து போன வெறும் பட்ட மரம் அவள். அவளை நம்பிப் பணம் கொடுக்கிற உலகமா இது? தன் வறுமையைச் சொல்லி அழுது குழறிப் பணம் கேட்டாலும் ஒரு ஐந்து பத்துக் கிடைப்பதே அரிதாகி விட்ட நிலையில் தான் தாலியை விற்க அவள் மனம் துணிந்தாள் அதுவும் சொந்தக்காரர் ஒருவருக்கே விற்க நேர்ந்ததால் குறைந்த விலைக்கே அதைக் கொடுத்து வந்த காசில் வீட்டுச் செலவைச் சமாளித்ததோடு நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த டாய்லெட் கட்டுமானம் பணியும் இதனால் தடங்கலின்றி நிறைவேறியது குறித்து அவள் உள்ளூரத் திருப்தி அடைந்தாலும் தன் கனவு நிறைவேறாமல் போனதால் ஏமாந்து மனம் நொந்து இருக்கும் சாந்தனைச் சமாதானப்படுத்துவதே அவளுக்குப் பெரும் சவாலாகப்பட்டது

எப்பேர்ப்பட்ட பெறுமதி மிக்க தாலிக் கொடி அம்மாவினுடையது வீட்டுக் கஷ்டத்தில் அதையே விற்கத் துணிந்த அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அப்பா மீது ஏற்கெனவே அவன் கொண்டிருந்த கோபத்தீக்கு நெய் ஊற்றுகிற மாதிரியே அதுவும் நடந்தேறிவிட்டதில் அவன் மிகவும் மன உளைச்சல் கொண்டிருந்தான் புதிதாக முளைத்திருக்கும் டாய்லெட்டைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அம்மாவின் அந்தப் பெறுமதி மிக்க தாலி இழப்பே ஞாபகத்துக்கு வந்து மனம் குமுறும்போதெல்லாம் அவன் நினைப்பதுண்டு

எப்பவோ ஒரு நாள் காலக் காற்றோடு கரைந்து சிதிலமடைய இருக்கிற இந்த வெறும் கட்டத்துக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து இதைச் செய்து முடித்த அம்மாவை நினைச்சு வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியேலை அவவைத் தாலியோடு பாக்க வேணுமெண்டு நான் கனவு கண்டது வெறும் கனவாகவே போச்சு எந்தக் காலத்திலும் இது நடக்கப் போறதில்லை நான் படிச்சுப் பெரிய ஆளாய் வந்தாலும் இந்த மங்கள இழப்பிலிருந்து அவ மீண்டு வராத வரை எனக்கென்ன சந்தோஷம் வந்து விடப் போகுது? “

அவனின் கண்ணீரைத் துடைத்து முகம் விகசிக்க ஓரு நாள் அம்மா அவனைத் திசை திருப்ப எண்ணி இதற்கான ஆரம்பப் புள்ளியாக ஒரு நிலைப்பட்ட மனசோடு பேச்சைத் தொடங்கினாள்

“சாந்தன்! நீ நினைக்கிற மாதிரி இப்ப என்ன பெரிசாய் நடந்து போட்டுதெண்டு உனக்கு இந்த மன வருத்தம்?”

“நான் மனம் வருந்தி யோசிக்கிற அளவுக்கு என்னைப் பொறுத்தவரை இது மிகவும் பெரிய விஷயம் தான் அப்பாவின்ரை பொறுப்பில்லாத தறு தலைக் குணத்தாலை தாலி இல்லாத வெறும் கழுத்தோடை உங்களைப் பாக்க நேர்ந்திருக்கே இது கொடுமையில்லையா?

“உனக்கு நான் ஒன்று சொல்லுவன் இதெல்லாம் அழியப் போற உடம்புக்குத் தான் எப்பவோ ஒரு நாள் எல்லாம் நிழலாய்க் கரைஞ்சு போகும் இதுக்குப்போய் எதுக்கு வருத்தப்பட வேணும்? நான் அழியாத சத்தியத்தின் ஒளிமயமான இருப்பு நிலைகொண்டவள் என்பதைஎண்ணுற போது எந்த இருளும் எனக்கு மயக்கத்தைத் தாறேலை நீயும் கண்ணை மூடிக் கொண்டு ஒரு கணம் யோசிச்சுப் பார் இருளின் பிரமை நீங்கி நான் வெளிச்சமானவள் என்பது போதை மயக்கமின்றி உனக்கும் தெரிய வரும் “

அதைக் கேட்டு மனம் குளிர்ந்து அவன் கண்களில் ஓர் ஒளி வட்டம் தெரிந்தது அம்மாவை உயிர் ஊடுருவி ஆழ்ந்து நோக்கித் தெய்வீக சாந்நித்யமான எதிலும் நிலை குலையாத ஒளி கண்டு தேறிய பெருமிதக் களை முகத்தில் சுடர் விட மகிழ்ச்சியோடு அவன் சொன்னான்

“ நான் இனி இதைப் பற்றிப் பேச மாட்டனம்மா உங்களை எல்லாம் மறந்து போய் உயிர் ஊடுருவிப் பாக்கிற வரைக்கும் இது இருக்கும் “அப்படிச் சொன்ன அவனை உச்சி மோந்து இழுத்தணைத்து அவள் முத்தமிடும் போது நிறைந்த ஒளித் தடாகத்தில் தானும் கரைந்து போகிற மாதிரி வெகு நேரமாய் அவன் தன்னை மறந்து புல்லரித்துக் கிடந்ததை உணர அவளுக்கு வெகு நேரம் பிடித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *