அம்மாவின் கட்டளைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 6,840 
 
 

எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை நான் இந்த உலகத்திலேயே இருந்த மிகக் கொடுமையான அம்மா என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் குழந்தைகளை நான் வளர்க்க முற்படும் போதுதான் தெரிகிறது என அம்மா எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டிருந்தார் என்பது.

எங்கள் அப்பா எங்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு சிறு வயதிலேயே இறந்து போனபோது குடும்பத்தின் முழுச்சுமையையும் என் அம்மாதான் தன் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டார். நாங்கள் மொத்தமாக ஐந்து பிள்ளைகள், மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள். எனது அப்பா ஒரு தமிழ் வாத்தியாராக இருந்த ஒரு சிறந்த ஆசான், தர்மவான், பண்பாளர் என்று பேரும் புகழையும் சம்பாதித்திருந்தாரேயன்றி எங்களுக்கென எந்த சொத்தையும் விட்டுச்செல்லவில்லை. அவர் இறந்ததும் எங்களுக்கு இருந்த சொற்ப வருமானமும் இல்லாமல் போய் மேலும் மேலும் வறுமையில் தள்ளப்பட்டோம். என் அம்மா தாதியர் பயிற்சி நெறி பயின்றிருந்ததால் முதியோர் பராமரிப்பு மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு கடுமையாக உழைத்து எங்களை வளர்ப்பதற்கான போதுமான வருமானத்தைப் பெற்றுக் கொண்டார். அதனால் எங்களை வளர்ப்பதில் மிகக் கண்டிப்புடன் இருந்தார்.

மற்றப் பிள்ளைகள் ஐஸ்கிறீமும் சொக்லேட்டும் கேட்டு வாங்கித் தின்றபோது எங்கள் வாய்களில் கடலைக் கொடைகளையும் தானிய உருண்டைகளையுமே அள்ளித் திணித்தார். அவற்றில் கூட இனிப்பு குறைவாகவே போடப்பட்டிருக்கும். எல்லாப் பிள்ளைகளும் கொக்கா கோலா, பென்டா, மிரிண்டா என்று குலுக்கிக் குலுக்கி நுரை பொங்க குடித்தபோது அவையெல்லாம் நஞ்சு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு எங்களுக்கு மட்டும் பசும்பாலை கெட்டியாகக் காய்ச்சி குடி குடியென குத்தாமல் குத்துவார். இது எனக்கு மட்டுமல்ல என் தம்பி
தங்கச்சிகளுக்கும் அப்படித்தான்.

எங்கள் அம்மா, நாங்கள் எனக்கு போனாலும் அதனை அவதானித்து எங்கள் நடமாட்டங்களை அவர் கண்ணுக்குள்ளேயே வைத்திருப்பார். எங்களை அவர் சங்கிலி போட்டு கட்டி வைத்திருக்கிறார் போலவே நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் ஒரு மணி நேரத்துக்கு வெளியே நண்பர்களைப் பார்க்கப் போய்விட்டு வருகிறோமென்றால் அது கட்டாயம் ஒரு மணி நேரமாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் முடிந்து ஒரு நிமிடம் தாண்டினால் கூட அதற்கு பதில் சொல்லியேயாக வேண்டும். நாங்கள் எப்போதும் அம்மாவுக்குப் பிடித்ததை மட்டுமே செய்தோமேயன்றி ஒரு போதும் எங்களுக்குப் பிடித்ததைச் செய்ய முடிந்ததில்லை.

நாங்கள் ஏதும் தவறு செய்தால் முதுகுத் தோலை உரித்து உப்புக் கண்டம் போட்டுடுவேன் என்று மிரட்டுவார். அப்பா இறந்த பின்னர் அவர் இடுப்புக்குக் கட்ட பயன்படுத்திய ஒரு தடித்த தோலாலான இடுப்புப் பட்டியை உருண்டையாகச் சுருட்டி முன்னறையில் கதவுக்குப் பக்கத்தில் ஒரு ஆணியடித்து எங்கள் கண்களில் படும்படி வைத்திருந்தார். அதை எடுத்து எங்கள் முதுகில் அடித்தால் எங்கள் முதுகுத் தோல் உரிந்து விடும் என்ற பயம் எப்போதும் எங்களுக்கு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நல்ல வேளையாக அதனை பயன்படுத்தம் சந்தர்ப்பத்தை அவருக்கு நாங்கள் வழங்கவேயில்லை.

நாங்கள் ஒவ்வொரு நாளும் குளித்து முகங் கைகால் கழுவி சுத்தமாக இருக்க வேண்டுமென்பதிலும், சுத்தமான சலவை செய்த ஆடையணிகள் அணிய வேண்டுமென்பதிலும் கண்டிப்பாக இருந்தார். அவருக்கு தையற்கலை தெரிந்திருந்ததால் அவர் தைத்த துணிகளையே நாங்கள் எப்போதும் அணிந்தோம்.

அதனால் நாங்கள் விதவிதமாக அணிய முடியவில்லையே என்ற ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர் தன் வருமானத்தை மிச்சம் பிடித்து மிகச் சிக்கனமாக வாழ வேண்டியிருந்ததாலேயே அப்படிச்செய்தார் என்பது எங்களுக்கு விபரம் தெரியவந்த பிறகுதான் புரிந்தது.

நாங்கள் இரவு சரியாக எட்டு மணிக்கெல்லாம் நித்திரைக்குச் சென்றுவிட வேண்டும் என்றும், காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிட வேண்டும் என்றும் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் பாடசாலைக்குச் செல்லாத சனி, ஞாயிறு நாட்களிலும் கூட இந்த சட்டம் அமுலில் இருந்தது. லீவு நாட்களில் மற்றப் பிள்ளைகள் பத்து பதினொரு மணிவரைக்கும் கூட நித்திரை கொள்கிறார்களே எம்மால் அப்படிச் செய்ய முடிவதில்லையே என்ற ஏக்கம் நீண்டநாட்கள் வரை எங்கள் மனதில் இருந்தது. அதேபோல் எங்களை வேலை வெட்டியில்லாமல் சும்மா இருக்கவும் அனுமதிக்க மாட்டார். நாங்களே எங்கள் அழுக்கடைந்த உடுப்புகளை கழுவித்துவைத்து ஸ்திரிக்கை செய்யவேண்டும். படுக்கை விரிக்கவும் மடிக்கவும் வேண்டும். பண்டம், பாத்திரங்களை கழுவவேண்டும். வீட்டைக்கூட்டி அந்தந்தப் பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும். சமைக்கும் போது உதவ வேண்டும். இப்படி வீட்டுக் காரியங்களைச் செய்ய பழக்கப்பட்டோம்.

நாங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் உயிர் போகிற காரியமென்றாலும் கூட பொய் பேசக்கூடாது என்பதில் அம்மா மிகத் தீவிரமாக கவனம் செலுத்தினார்.

எங்கள் பாடசாலைப் பிள்ளைகள் எத்தனையோ முறை காய்ச்சல், தலைவலி என்று பொய் கூறி பாடசாலைக்குப் போகாமல் கட்டடித்துள்ளார்கள் என்பது எமக்கும் தெரியாததல்ல. ஆனால் நாங்கள் எங்கள் வாழ்நாளில் ஒரு தடவைகூட அப்படிச் சொல்லி பாடசாலைக்குப் போகாமல் இருந்ததில்லை. இதனை எங்கள் மனதில் அழுத்திப் பதிய வைப்பதற்காக “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” என்று எங்கள் கைகளில் பைபிளைக் கொடுத்து சத்தியம் செய்து வாங்கிக் கொண்டார். எங்களுக்கும் அத்தகைய இக்கட்டான தருணங்கள் வந்தபோதெல்லாம் இந்த சத்தியம் நினைவுக்கு வந்து அதனை மீற முடியாமல் தடுத்துவிடும்.

அம்மா அவர் பிள்ளைகளான ஐந்து பேர்களிடத்தும் அளவற்ற அக்கறை கொண்டிருந்தாலும் தனது மூன்று பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்கள் யாருடன் பழகுகிறோம்? எங்கள் நண்பர்கள் யார்? எங்கெல்லாம் போய் வருகின்றோம்? என்பதையெல்லாம் விசாரித்து அறிந்து வைத்திருந்தார். நாங்கள் பருவ வயதையடைந்த போது இந்த அக்கறை மேலும் அதிகரித்தது.

பாடசாலையிலும் கல்லூரியிலும் நாங்கள் முதல் மாணவராக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். படிப்பில் மாத்திரமின்றி விளையாட்டு, நீச்சல், ஓவியம், பிறமொழிகள் கற்றல் என்பவற்றிலும் ஊக்கமளித்தார். இன்று நாங்கள் காலடி எடுத்து வைத்த ஒவ்வொரு துறையிலும் உச்சாணிக் கொம்புவரை வளர்ந்திருக்கிறோம் என்றால் அது அம்மாவின் தூர தரிசனம் தான்.

அம்மா எங்கள் ஐவருக்கும் திருமணம் முடித்துவிட்டுத்தான், தான் கண்மூட வேண்டுமென்று பிரார்த்திப்பார். அவரது பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் தனது பேரப் பிள்ளைகளை தன் மடியில் போட்டு கொஞ்சி மகிழ்ந்திருந்த ஒரு மாலை வேளையில்தான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்து போனது. எங்களுக்குக் கிடைத்த அம்மாபோல் எல்லோருக்கும் வந்து வாய்த்தால் இந்த உலகம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *