அம்மான் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,564 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு மோட்டார் வண்டி தோட்டத்தின் மத்தியிலிருந்த வீட்டினெதிரே வந்து நின்றது. முதலாளி வந்திருப்பார் என எண்ணி விரைவாக அங்கே போனேன். ஆனால் முதலாளி வரவில்லை . அவர் மகன் தியாகராசன் வந்திருந்தான். தந்தையைப் போலவே அவனும் மிக நல்லவன்.

வண்டியில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் யாரென்று என்னால் மட்டிட முடியவில்லை. தலைவிரி கோலமாய் அழுது கொண்டிருந்தாள். முகத்தில் நீர்த்திவலை நிரம்பியிருந்தது. கௌரவமான குடும்பத்திற் பிறந்தவள் போலவே காணப்பட்டாள். தியாகராசன். வீட்டைத் திறந்து சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு தானும் வந்து ஒத்தாசை செய்தான். நாற்காலிகளை ஒழுங்காக அடுக்கி வைத்தான். மெத்தையைத் தட்டிப் போடும்படி என்னிடம் கூறினான். எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தது.

வெளியே வந்தபோது அவளுடைய கழுத்தை உற்றுக் கவனித் தேன். ஒரு சங்கிலி மாத்திரம் அணிந்திருந்தாள். ஏன் அழுகிறாள்?

என்ன நிகழ்ந்தது? ஒன்றுமெனக்குப் புலனாகவில்லை. அவளை வண்டியிலிருந்து இறங்கி வரும்படி தியாகராசன் தயவாகக் கேட்டான். அவள் வரவில்லை. அழுது கொண்டிருந்தாள். அவள் செய்கையிலிருந்து அவன் மீது நிரம்பிய கோபம் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அவன் அறையினுள்ளே போனான். நானும் பின்னே போய், “ஏன் அழுகிறா? இனமுறையில் யாரும் இறந்து விட்டார்களா?” என்று கேட்டதற்கு “அப்படியொன்றுமில்லை, நீ போய் உன் காரியங்களைக் கவனி” என்றான்.

சிறிது நேரத்தின்பின் அவள் தானாகவே மோட்டாரை விட்டுக் கீழே இறங்கிவந்து, மெக் தையிற் குப்புற விழுந்து விம்மி விம்மி அழுதாள். மோட்டாரிலிருந்து இறங்கி, அந்தக் துக்கத் தினிடையேயும் எவ்வளவு அழகாக நடந்து சென்றாள்! நான் அவளிடம் போய் “ஏனம்மா அழுகிறீர்கள்” என்று கேட்டேன். நான் அப்படி அவளிடம் கேட்டிருக்கக் கூடாது. அது தவறு என்று பின்பு தானுணர்ந்தேன். அவள் எனக்குப் பதில் சொல்லவில்லை.

தியாகராசன் கடைத்தெருவுக்குப் போய், கோப்பியும் பலகாரமும் வாங்கி வந்தான். சிறிது கோப்பியைக் கிளாசிலே ஊற்றி அவளிடம் கொடுக்கும்படி சொன்னான். ஆனால் அவள் அதை வாங்கிக் குடிக்கவில்லை.

அவனும் பக்கத்திலே வந்து கமலா, இந்தக் கோப்பியை வாங்கிக் குடி” என்று சொன் னான். அவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அவன் பேச்சு இன்னமும் அவ ளுக்கு நாரசமாகவே இருந்தது. ஒன்று: அவளைப் போலச் சாந்தமும் சாதுரியமும் நிறைந்த பெண்ணை நான் கண்டதில்லை! அவனுக்குச் சுடச்சுடப் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் கௌரமாகவே நடந்து கொண்டாள்.

மாலையிலே நான் அறையில் விளக்கேற்றி வைத்தேன். விளக்கொளியில் அவள் சோர்ந்த முகம் நன்கு பிரகாசித்தது. இன்னும் அவள் அழுது கொண்டே இருந்தாள். மங்கிய விளக்கொளியில் நீர்த்துளிகள் முத்துப்போல என் கண்ணுக்குத் தோன்றின.

நான் படுக்கைக்குப் போவதற்கு முன் ஒருமுறை அங்கே போனேன். அவர்களுக்கு ஏதாவது உதவி வேண்டியிருந்தால் செய்து கொடுத்துவிட்டுப் போவது நல்லதல்லவா? அப்பொழுதும் அவள் அந்த மெத்தையிலே படுத்துக்கொண்டிருந்தாள். பாவம். கூனிக் குறுகிக் கொண்டு மடங்கியபடி படுத்திருந்தாள். அவன் ஓர் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி ‘சிகரெட்’ புகைத்துக் கொண்டிருந்தான். சிந்தனை நிறைந்த நேரத்திலே சிகரெட் புகை ஏதோ ஆறுத லளிக்கிறதாம். அவனுடைய முகபாவத்தில் தவறு செய்தவன் போலக்காணப்படவில்லை. இவளை எப்படி வழிக்குக் கொண்டுவரலாம் என்று எண்ணியிருப்பான். அவளை அழைத்து அவன் ஏதாவது கூறும் போதெல்லாம் அதிக நாட்பழக்கமுள்ளவன் போல் உரிமையும் அன்பும் கலந்த தொனியிற் பேசினான்.

எனக்குப் பூரண உறக்கமில்லை. உறங்குவதும் கலைவதுமாக இருந்தேன். இப்படி யான சந்தர்ப்பங்களில் மாடுபோல உறங்க முடியுமா? சாமம் இருக்குமென எண்ணுகிறேன். அவன் பேசுவது கேட்டது. கமலா, வருந்தாதே! நான் ஒரு முரடன்தான். ஆனால் மனச்சிட சியையும் விற்றுவிட வில்லை. நீ சிறுபருவத்தில் அன்பாக இருந்தாய்; இப்பொழுது துர்ப்போத னையால் உன் மனம் மாறிவிட்டது. இப்படிப் பிடிவாதஞ் செய்வாய் என்று நான் எண்ணவில்லை. சரி. விடிந்ததும் உன்னைக் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். அந்த உத்தியோகப் பிரபுவை மணந்துகொண்டு சிறப்பாக இரு என்று அவன் சொன்னான்.

விஷயம் இன்னதென்பது இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. பின்நான் விசாரித்தள வில் என் உத்தேசம் பெரும்பாலும் சரியாகவே இருந்தது. ஒருநாள் அவள் பாடசாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இவன் மோட்டாரிற் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து விட்டான். அவ்வளவு துணிச்சலுள்ளவனல்ல; சொந்த மைத்துனியை அதுவுஞ் சிறுபருவத்திலிருந்தே அன்பாக இருந்த ஒருத்தியை அந்நியன் மணந்து கொள்ள போவதென்றால் யாருக்குத்தான் ரோசம் வராது?

மறுநாள் விடிந்தது. அவள் படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்தாள். முகம் வெளிறிப்போயிருந்தது. இப்பொழுது அவள் அழவில்லை. ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் சலனமற்றிருந்தாள். தியாகராசன் அவளைச் சாப்பிடும்படி கேட்டான். அவள் மௌன மாயிருந்தாள். மீண்டும் ஒருமுறை கமலா சாப்பிடமாட்டாயா?” என்று விறுவிறுப்பாய் கேட்டான். பதில் இல்லை. கொதிக்கும் உள்ளத்துடன் விரைவாய் அவன் வெளியே வந்தான். மனத்திடமற்றவன் சிக்கல்களை சமாளிக்கும் ஆற்றலற்றவன். மோட்டரை எடுத்துக் கொண்டுவந்து வாசலில் விட்டான். இறங்கி வந்து “கமலா! வா. வண்டியிலே ஏறு! உன்னைக் கொண்டு போய் உன் வீட்டில விட்டுவிடுகிறேன். எனக்குப் இந்தப் பழி வேண்டாம்” என்று சொன்னான். அவள் ஒன்றும் பேசவில்லை . “வந்து ஏறவில்லையா? வா…. வந்து ஏறு. என்னாற் சகிக்க முடியாது” என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“வேண்டாம்: இனிமேல் அங்கே எதற்கு? நாயுந் தேடாது! இங்கேயே இருந்து அழுதழுது தொலைந்து போகிறேன்” என்றாள்.

தியாகராசன் என்ன செய்வதென்று தோன்றாமல் நாற்காலியிற் போய் உட்கார்ந்தான்.

“வண்டியில் வெயில் படுகிறது” என்று நான் கூறியபின், வந்து வண்டியை உள்ளே விட்டான்.

மத்தியானமாகிவிட்டது. காலையிலே வாங்கிவந்த உணவிலே எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தது. எடுத்துக் காகத்திற்கு வீசி விட்டேன்!

சாயந்தரம் அவன் தோட்டத்திலே உலாவிக் கொண்டிருந்தான். அவள் என்னைக் கூப்பிட்டாள். “இது யாருடைய தோட்டம்?” என்று கேட்டாள்

“இவர்களுடைய தோட்டந்தான்?” என்றேன். “அப்படியானால் வேறே எங்கேயாவது கூட்டிக் கொண்டு போகும்படி சொல்வது. இங்கே இருப்பது நல்லதல்ல” எ அவன் வந்தபின் அவனிடம் சொன்னேன். ஐந்து மைல்களுக்கப்பாலிருந்த இன்னோர் தோட் டத்திற்கு அவளைக் கூட்டிக் கொண்டு போனான். என்னையும் வரும்படி அவள் அழைத்ததால் நானும் போனேன். அது வேறோர் முதலாளியின் தோட்டம். நாங்கள் அங்கே போனபோது நன்றாக இருண்டுவிட்டது. நானும் இந்தத் தோட்டக் காவற்காரனுமாகச் சமையல் செய்தோம். அவள் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் இடையிடையே வந்து எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான். உணவை மேசை மீது வைத்து “அம்மா எல்லாம் தயாராகிவிட்டது” என்றேன்.

தியாகராசனும் கால்முகம் கழுவிக்கொண்டு விரைவாக வந்து உட்காந்தான். அவன் பரிமாறினாள் அவன் அருந்தினான். கடைசியில் அவளும் அற்பமாக உண்டாள். எனக்க மிக ஆச்சரியமாக இருந்தது. நாங்களும் போசனத்தை முடித்துக்கொண்டு படுக்கைக்குப் போனோம். தியாகராசன் மறுநாட் காலையிலே கடைத்தெருவுக்குப் போய் சாதாரணமாக குடும்பஸ்தர்களுக்கு வேண்டிய பொருட்களை யோசித்து வாங்கிக்கொண்டு வந்தான் இரண்டு அழகான சேலைகளும் சட்டைகளும் வாங்கிக் கொண்டு வந்தான். மாலையிலே அவள் குளிக்கப் போனாள். அவள் கஷ்டப்படுவாள் என்ற அவனும் போனான். “நானே இறைத்துக் கொள்ளுகிறேன்” என்று அவனைத் தடுத்துவிட்டாள் அவள். அவன் வாங்கி வந்த சேலையைக் கட்டிக் கொண்டு விறாந்தையிலே அவள் உட்கார்ந்திருந்தாள். அந்த சேலை அவளுக்கு அது மிகவும் பொருத்தமாக இருந்தது.

“கமலா, உன் அப்பா வருந்துவார். அங்கே போய்விடுவோமோ?” என்று தியாகராசன் பரிவோடு கேட்டான். “வேண்டாம்” என்று மறுத்து விட்டாள் அவள்.

“பாவம், அந்த மாப்பிள்ளை வீட்டார் உன் தந்தையை மிகவும் வருத்துவார்களே!”

“என்தலை சுற்றுகிறது. அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்” என்று கமலா சீறிவிழவே, தியாகராசன் அப்படியே அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

அவளுக்கு விவாகம் நிச்சயமாகி நாளும் குறித்திருந்தார்கள். இப்பொழுது அங்கே போனால்…? மறுநாள் சாயந்தரம் வேறோர் மோட்டார் வண்டி அங்கே வந்து நுழைந்தது. இரண்டு பொலிஸ் சேவகர்களும் சாதாரண உடை தரித்த வேறோர் மனிதனும் இறங்கினார்கள். சாதாரண உடையில் வந்தவன். தியாகராசனைக் காட்டி அதோ அவன்தான்” என்றான். தியாகராசன் அப்படியே அசையாமல் நின்றான். சேவகர்கள் அவனை பிடிப்பதற்காக நெருங்கினர்.

“நில்லுங்கள் ! எதற்காக?” என்ற கமலாவின் கம்பீரமான குரல் எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது. யாவருக்கும் பெரிய ஆச்சரியம்! பொலிஸ் இன்ஸ்பெக்டர் கமலாவைப் பார்த்துச் சொன்னார். “உங்களை இவர் பலாத்காரமாக…” யார் சொன்னது அப்படி? இவ ரையன்றி வேறு யாருக்கும் நான் வாழ்க்கைப்பட விரும்பவில்லை. அதனால் நான்தான் இவரிடம் வந்து விட்டேன்!”

தியாகராசன் தன்னை மறந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தினால் பொருமி வெடித்துவிடும் போலிருந்தது. அம்மான்மகள் என்ற உறவு உரிமையும் சுயமதிப்பும் உணர்ச்சியும் நிரம்ப கம்பீராக நின்ற கமலா அவன் கண்களுக்கு இப்போ ஒருதனி அழகுடன் பிரகாசித்தாள்.

– மறுமலர்ச்சி ஐப்பசி – 1946, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *