கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 1,260 
 
 

சூரியன் மேற்கே இறங்கியதும், சன்னலோரமாக தன் இரும்பு பெட்டியின் மீது அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சிவந்து கொதித்துக் கொண்டிருக்கும் சூரியன் மறைந்தவுடன் அறைக்குள் இருள் வந்துவிடும். சடாரென்று கதவை திறந்து கொண்டு சக மாணவிகள் உள்ளே வந்தனர். அது அரசு கலைக் கல்லூரியின் மாணவிகள் விடுதி.

“என்னடி!காலேஜே உன்னை பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருக்குது. நீ சோகமா இருக்கே?” தனக்கு ஏற்படும் சோதனைகளை சமாளிக்க நண்பிகளுடன் கலந்து ஆலோசிப்பது அவளுக்கு வழக்கம். இன்றும் அது போல அதை தீர்க்கும் யோசனைகளை கேட்டு தயாராகிக் கொண்டாள். வரும் இருபத்தெட்டாம் தேதி பிரபல இயக்குனரை சந்திக்கும் போது தனது நாப்கினில் சிகப்பு சாயம் பூசிக் கொள்வது என முடிவாகியது.

அவள் அலைபேசி ரீங்காரமிட்டது.

“என்னடி சின்னவளே! சினிமாவுல வேல பாக்க போறியாமே. ஒம் பிரண்டுங்க சொல்ராளுங்க. நமக்கு அது சரிபட்டு வராது. நாம நாடோடி வம்சம். நெலத்துல கூலி வேல செஞ்சு காவவுத்து கஞ்சி குடிக்கிற சீவங்க.. ஒரு வருஷம் மழ பெய்யலீனா திங்க சோறு இருக்காது. ஒன் அக்கா கத தெரிஞ்சுமா இப்படி செய்யிற. படிச்சு வேலைக்கு போகப் பாரு”_அவள் அம்மாதான் பேசி முடித்தாள். வாக்கப்பட்டு போனவ வாழாவெட்டியா ரெண்டு பிள்ளைகள தூக்கிட்டு வந்த நேரம், ஊருல மழைதண்ணி இல்லாம, பசிக்கு வனத்துல கிடைச்சது விஷ கிழங்குன்னு கூட தெரியாம தின்னு அவளும் அவ பிள்ளைகளும் இறந்து போனது.

மலையின் மடிப்புகளில் குடியானவர்களின் கண்ணில் படாமல் குடிசைகட்டி வாழ்ந்தவர்கள். எப்போதாவதுதான் நல்ல சோறு திங்க வாய்பு கிடைக்கும். அய்யனார் துணை சாமி கருப்பனுக்கு கிடா வெட்டும் போது புகை மூட்டம் பார்த்து வந்து கடைசி பந்தி அமர்ந்து சாப்பிட்டு மீதமாகும் சோறுகளை துணியில் அள்ளிச் செல்வார்களாம்.அதை பாறைகளில் காயப் போட்டு மீண்டும் துணிகளில் கட்டி குடிசையில் தொங்கவிட்டுவிடுவார்களாம். குழந்தைகள் கேட்கும் போதெல்லாம் தண்ணீரில் போட்டு கஞ்சியாக்கி தருவார்களாம். தன் அக்காவின் மரணமும், அப்பத்தா சொன்ன கதைகளும் பல இரவுகள் தூங்கவிடாமல் அவளை இம்சித்திருக்கிறது. ஊர் பெரியவர்களின் தானதர்மத்தில்தான் அவள் கல்லூரி படிப்பு நடக்கிறது.

ஒரு தனியார் கல்லூரி நடத்திய ‘மிஸ் சென்னை’ போட்டியில் அவளும் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருந்தாள். மேடையில் பேச வாய்பு கொடுத்தார்கள். ‘ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வாசலில் தவம் கிடக்கிறீங்க. கிராமத்துல இருந்து வந்து அரசு கலைக் கல்லூரியில படிக்கிற எங்கள யாரும் சீந்திக்கூட பாக்கிறது இல்ல. எங்களையும் சைட் அடிச்சு கானா பாட்டு பாடுனீங்கனா எங்களுக்கும் கவுரமா இருக்கும்’ என்று அவள் பேசிய போது கரகோஷம் எழுந்தது.

பின்பு, அதையெல்லாம் மறந்து படிப்பே கதி என்று இருந்தவளுக்கு ஒரு நாள் அலைபேசியில் அழைப்பு வந்தது.எடுத்து பேசினாள். தான் சினிமா இயக்குனர் என்றும், ஒரு பிரபல இயக்குனரிடம் மூன்று படங்கள் வேலை செய்திருப்பதாகவும், தான் எடுக்கவிருக்கும் முதல் படத்திற்கு புதுமுக நாயகியை தேடிக் கொண்டு இருக்கும் போதுதான் அவளைப்பற்றி ‘மிஸ் சென்னை’ விபரம் தெரிந்ததாகவும், நிகழ்ச்சி நடத்திய கல்லூரி பேராசிரியை மூலம் அவள் அலைபேசி எண்ணை பெற்றதாகவும் சொன்னார். நடிக்க விருப்பம் இருந்தால் தன் அலுவலகம் வந்து போட்டோ ஷுட் டெஸ்டு கொடுக்கவும் வேண்டினார். இன்ப அதிர்ச்சி அடைந்த அவள், கொடுத்த புகைப்பட தேர்விலும் தேர்வாகி இருந்தாள். படத்தின் கதை ஒரு குக்கிராமத்தின் நாயகியை பற்றியதென்பதால் அதற்கு அவள் பொருத்தமாக இருப்பதாக கருதினார்,இயக்குனர். தன் குருவிடம்(பிரபல இயக்குனர்)நாயகி தேர்வைப் பற்றின விபரங்களை சொல்லி அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்,இயக்குனர். நாட்டில் நல்ல பெயருள்ள அந்த பிரபல இயக்குனரை சந்திக்க  சென்ற போதுதான் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அவளும், அந்த பிரபல இயக்குனரும் அவரது உதவியாளரும்தான் மிக அழகான குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தார்கள். அசல் கிராமத்து பேச்சு, கள்ளம் கபடம் இல்லாத கன்னத்தில் குழி விழும் புன்னகை, எதற்கும் தயங்காமல் சரளமாக வெடித்து பேசும் அவளின் வெகுளித்தனம் எல்லாம் பிரபல இயக்குனருக்கு பிடித்துப் போனது. ஒரு நீண்ட மெளன இடைவெளியில் அவளை பார்வையால் மேலும் கீழும் ஓட்டினார். கல்மிஷமில்லாத சிரித்த முகம், கரிய நிறமெனினும் நல்ல தேகக்கட்டு, கவர்ச்சியான கண்கள், நல்லமுகவெட்டு, வரும் காலத்தில் தமிழ் சினிமாவை ஆளப் போகும் ஆளுமை. அத்தனையும் பொருந்திய அவளை பார்த்து பின்பு, சுவரில் தொங்கும் நாள் காட்டியையும் பார்த்துவிட்டு தனது டைரியை புரட்டி இருபத்தெட்டாம் தேதி மாலை ஏழு மணி, சோழா ஷெரேட்டன் ஹோட்டல் என எழுதிக் கொண்டு அந்த நட்சத்திர ஹோட்டலில் தன்னை வந்து சந்திக்கும்படி பணித்தார். வரும்போது கூட யாரையும் அழைத்து வர வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார். அதற்கு மேல் அவளை எதுவும் பேசவிடாமல் தன் சொகுசு காரில் ஏறி போய்விட்டார். அந்த பிரபல இயக்குனர்தான் படத்தின் தயாரிப்பாளர் என அலுவலக உதவியாளர் சொன்னது மட்டும் அவளுள் உறுத்தலாக இருந்தது.

அந்த இருபத்தெட்டாம் தேதி சமீபித்துவிட்டதால் அன்று மாலை கவலையோடு சூரிய அஸ்தமனத்தை பார்த்து அமர்ந்திருந்த அவளுக்கு தோழிகள் நல்ல ஆலோசனை வழங்கினார்கள். நாப்கினில் சிவப்பு சாயம் பூசிக் கொண்டது நல்ல பலனை தந்தது. சந்திரனை விழுங்க வந்த பாம்பு ஏமாற்றமாக திரும்பியது. ஆனால், சொன்னது போல் சொன்ன தேதியில் புயல் போல கிளம்பியது படப்பிடிப்புக் குழு. தேனி கௌமாரியம்மன் கோவிலில் படத்திற்கு பூஜை போடப்பட்டது. 

முல்லை ஆற்றுப் படுகைகளிலும் அதைச் சுற்றியுள்ள பழமையான விவசாய கிராமங்களிலும் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஆனால், சீலையம்பட்டி கிராமத்தில் மட்டும் படபிடிப்பு நடக்கவில்லை. அதுதான் அவளின் சொந்த கிராமம் என்று தெரிந்து கொண்டார்கள். படப்பிடிப்பில் தன் அம்மாவும் அநேக நேரங்களில் தன் அத்தையும் உடன் இருந்தார்கள்,அவளுக்கு. படக்குழுவினருக்கு தேனி பாண்டியன் லாட்ஜில் ரூம் போட்டிருந்தார்கள். இயக்குனருக்கு மட்டும் தேனி பங்களா மேட்டில் ஒரு தனி வீடு வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள்.

ஏறக்குறைய தன் கல்லூரி படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டிருந்தாள். படப்பிடிப்பு முடிந்து ஓய்வான நேரங்களில் கதையும், வளர்ந்து வரும் காட்சிகளும் குழுவினர்களால் சிலாகிக்கப்பட்டதில் எல்லோரும் ஒரே குரலாக உச்சரித்தார்கள் நாயகியின் நடிப்பை பற்றி. ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இயக்குனர் தந்த பேட்டியில் கதையை பற்றி இவ்வாறாக சொல்லியிருந்தார்-ஆணாதிக்க  சமுகத்தில் சிறிது போதைக்கு அடிமையாகிவிட்ட ஒருவன் சேக்காளிகளுடன் சேரும் போது முதலில் பாதிக்கப்படுவது அவனை சார்ந்த பெண்தான்.

நாற்பத்தைந்தாவது நாளாக படப்பிடிப்பு தொடர்ந்து கடைசியாக உச்சக் காட்சி ஒரு பழைய பாழடைந்த பங்களாவில் நடந்தது. இங்குதான் அவள் நாயகனால் ஏமாற்றப்பட்டு அவனும் அவனது நண்பர்களும் பூலான் தேவியை சீரழித்தது போல் அவளையும் சீரழித்து கொன்றுவிட்டது போல் படமாக்கப்பட்டது. போதை தெளிந்து சுய நினைவடைந்து நடந்துவிட்ட தவறை நினைத்து சுவற்றில் மோதி அழும் நாயகனின் காட்சியை பார்வையாளர்கள் பலர் பார்த்துக் கொண்டு இராமல்…ஒற்றை ஆடை தரித்து விலக்காகி இருக்கும் திரௌபதியை கரம் பற்றி இழுத்து வந்து சபையில் நிறுத்தி துகிலுரித்தான் அதர்மி துச்சாதனன். அக்கினியில் பிறந்தவள் அவள். அஸ்தினாபுரத்தையே எரித்திருக்க முடியும். ஆனால், கணவர்களே தஞ்சம் என நின்றாள். அது போலில்லாமல் முலையை கிள்ளி எறிந்து மதுரையை எரித்த கண்ணகியை போலிருக்க வேண்டும் கதையின் முடிவு என விமர்சித்துக் கொண்டார்கள் பார்வையாளர்கள்.

கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழுவினர்கள் அத்தனைபேரும் கலந்து கொண்டனர். டைடில் பெயர்கள் சேகரிப்பதற்காக ஒரு உதவிஇயக்குனர் ஒவ்வொரு நடிகர், நடிகையாக, மற்றும் சண்டை பயிற்சியாளர்கள், டெக்னீசியன்கள் என அனைவரிடமும் பெயரை நன்றாக கேட்டு எழுதிக் கொண்டார்.

“அண்ணே, என் பேரையும் எழுதிக்கோங்க” என்று சொன்ன அவளை திரும்பி பார்த்த உதவி இயக்குனர்,

“உன் பெயரைத்தான் சார் சொல்லிட்டாரே மா!” என்று சொல்லி தயாரிப்பாளரும் பிரபல இயக்குனரும்மாகிய அவரை நினைவு படுத்தினார்.

“அண்ணே, என் பேரு ‘அம்பை’. எழுதிக்கோங்க!” என்று சொல்லும் போது, அவள் கண்கள் சிவந்து நிஜ அம்பையாக காட்சி தந்தாள்.

– புதிய கோடாங்கி அக்டோபர் 2023 ல் பிரசுரம் கண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *