(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாழ்க்கையும் வாழ்வதற்கு வேண்டிய வழிவகைகளும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். உலகமும் உலகத்தின் உண்மையும் தெரிந்தவர்கள். இருக்கிறார்கள். சமூகமும் அதன் சாக்காடும் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால்! சிந்திப்பவர்கள் தான் மிகக் குறைவு.
தெரிந்ததைச் சிந்திப்பதில்லை. சிந்தனையில் கண்ட உண்மையை வாய் விட்டுச் சொல்வதில்லை. இந்த இரண்டையும் பின்னணியாகக் கொண்டது தான் பெரிய மனிதத் தன்மை. இந்தப் பெரிய மனிதத் தன்மையால் தான் சமூகமே சாக்காடாகி விட்டது. ஏன்? மனிதனுமல்லவா பிணமாகி விட்டான்.
வெறுப்புடன் மேசையில் கிடந்த கடிதத்தைப் பத்தா வது தடவையாகப் படித்தேன். அந்தக் கடிதம் சற்று நேரத்துக்கு முன் தான் என் கையில் கிடைத்தது.
“நீண்ட காலமாக உங்களை இந்தப் பக்கமே காணவில்லை. உங்கள் நண்பர் (என் கணவர்) பயங்கரமான சூழ்நிலையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கிறார். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள். வந்து நல்ல புத்திமதியைச் சொல்லுங்கள் அவருக்கு. ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவான்.”
உங்கள் சகோதரி
சமீமா
கடிதத்தைப் படித்து விட்டுத் திரும்பவும் சிந்திக்க ஆரம்பித்தேன்.
ரஷீத்! இதுதான் என் நண்பனின் பெயர். எவ்வளவு நல்லவன், பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒழுக்கத்துக்கும் நேர்மைக்கும் உதாரணமாக இருந்தவன், அந்த ஒழுக்கமும் நேர்மையுமல்லவா அந்தப் பணக்காரக் குடும்பத்துக்கு மாப்பிள்ளையாக்கியது. ஆனால்! இன்று அவனுடைய நிலை என்ன? அவனாகத்தான் மாறினானா? அல்லது ஏதோ ஒன்று அவனை மாற்றி விட்டதா? புரிந்து கொள்ள முடியாத ஒரு பிரச்சினை இது.
ரஷீதின் இந்த மாற்றத்தைப் பற்றிச் சமீமாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு எண்ணம் தோன்றியது எனக்கு.
விவாகமான தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்க்க வேண்டுமானால் கணவன் மனைவி இருவரையும் நெருங்கித்தான் முடிவு கட்ட வேண்டும். ஆனால்! சமீமாவை நெருங்க முடியாதே? இவள் இஸ் லாமியப் பெண்!
“ஆண்களின் கொடூரமான பார்வையில் இருந்தும் பெண்களைக் காப்பாற்றுங்கள்” என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள், என்பது உண்மைதான். ஆனால்! ஆண்களின் கருணையான பார்வையில் இருந்தும் பெண் களைக் காப்பாற்றுங்கள் என்று யார்! தீர்க்க தரிசனம் கூறியிருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம், இந்தச் சமூகப் பெண்கள் உண்மையும் உலகமும் தெரியாமல் முட்டாள் தனத்தில் சாயந் தோய்த் தெடுக்கப் பட்டவர்கள் என்பதுதான்.
“ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவான்” என்று முடிவடையும் கடிதம் இன்னும் என் மேசை மேல் தான் கிடக்கிறது. இப்படி எத்தனையோ பேர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்கள், ஆனால் யாருடைய வாழ்த்துதலும் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஏனென்றால் வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டம் எனக்கு. ஒரு சமயம் ஆண்டவன் அருள் தான் இந்தக் கஷ்டமோ? எது எப்படி இருந்தாலும் நண்பன் ரஷீதைக் காணவேண்டும். அவன் வாழ்க்கையில் சூழ்ந்துள்ள பயங்கரமென்ன? என்பதையறிய வேண்டு மென்ற எண்ணத்தில் அவன் வீடு நோக்கி நடந்தேன்?
உலகம் மங்கிக்கொண்டிருந்தது, மலர்க் கரங்கள் மனை விளக்கேற்றும் நேரம். நான் அவன் வீட்டு வாசலில் நின்றேன். ஆம். ஆறு மாதங்களுக்குப் பிறகு நான் எனது நண்பன் வீட்டின் வாசலில் நின்று அவனைக் கூப்பிட்டேன்.
“உம்!” என்று ஒரு முரட்டுச் சத்தம் வீட்டுக்குள் இருந்து வந்தது. அதை அடுத்து ரஷீத் வந்தான், என்னைக் கண்டதும் அவன் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, சிரிக்க முயன்றான், அவன் என் தோளில் கையைப் போட்டுக் கொண்டே சொன்னான்.
“எனக்குத் தெரியும் நீ என்றாவது ஒரு நாள் என்னிடம் வருவாய் என்று.”
“அது எப்படித் தெரிந்தது உனக்கு?” என்றேன் நான்.
“ஆறு மாதங்களுக்கு முன் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு போகும் போதே எனக்குத் தெரியும். என்னை வெறுத்துத் தள்ள உன்னால் முடியாது என்று. ஏனென்றால் நம்முடைய நட்பு அப்படிப்பட்டது.”
அவன் வார்த்தைகள் என் உள்ளத்தைத் தொட்டன. அந்த வார்த்தைகளோடு கலந்து வந்த குடி நாற்றம் என் மூக்கைத் துளைத்தது. இருவருமாக அவன் ரூமுக்குள் நுழைந்தோம். வழியில் கதவு சாத்தும் ஓசை கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன் ரஷீத் ஒரு கதவைச் சுட்டிக் காட்டி “அதோ உன் தெய்வீக சகோதரி? உன்னைக் கூடக் கண்ணால் பார்க்கமாட்டாள். கதவிடுக்கால் தான் பார்ப்பாள்.”
இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தான் அவன். நான் தலையைக் குனிந்து கொண்டேன். அவனுடைய ஏளன மான வார்த்தைகள், புரிந்து கொள்ள முடியாமல் இருந்த அவன் வாழ்க்கையின் மர்மக் கதவைத் திறந்துவிட்டது போல் இருந்தது எனக்கு. சிரித்துக் கொண்டே ரூமூக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன்.
“உனக்கு ஒரு புதுமை தெரியுமா?” என்றான் ரஷீத்.
“என்ன?” என்று ஆவலுடன் கேட்டேன்.
அவன், இஸ்லாமியப் பெண்களின் குறைபாடுகளைக் குடி போதையிலும் கூட வெகு தெளிவாகச் சொல்லிக் கொண்டு போனான்.
அவனுடைய அந்த வார்த்தைகள் மேலும் அவனுடைய வாழ்க்கையைத் தெளிவாக்கியது எனக்கு. ஏமாற்றப்பட்ட உள்ளம் சமூகத்தைப் பார்த்து நையாண்டி செய்கிறது. இது அவனுடைய இன்றைய நிலை; அந்த நிலையை எனக்குப் புரியவைத்தான் அவன்.
அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே மேசை மீது பக்கவாட்டில் உட்கார்ந்தான். பக்கத்தில் இருந்த விஸ்கி போத்தலை எடுத்து கிளாசில் ஊற்றிக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து சிகரட் பாக்கெட்டை நீட்டினான். அவன் நன்றாகக் குடித்திருந்தான், அவன் கண்கள் சிவந்திருந்தன. நான் ஒரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டே கேட்டேன்.
“இந்த சாக்கடைத் தண்ணீர் இருந்து விட்டால் இந்த உலகத்தில் வேறெதுவும் உனக்குத் தேவை இல்லை அல்லவா?”
அவன் சிரித்தான் மேசை மீது கையால் ஓங்கி அடித்த படி சிரித்தான் பிறகு அவன் சொன்னான்.
“இதுவா சாக்கடைத் தண்ணீர்? இந்த உலகம், இந்த சமூகம் வீடு, நீ. நான், எல்லாமே சாக்கடைத் தண்ணிதான். ஆனால்! இது தன் உருவத்தை மாற்ற வில்லை! அவ்வளவு தான்.”
மேசை மீது இருந்த விஸ்கி போத்தலைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டு சோகமாக என்னைப் பார்த்தான். பிறகு மங்கிய குரலில் சொன்னான்.
“நண்பா! இதைச் சாக்கடைத் தண்ணி என்று நீ சொல்கிறாய்? ஆனால்! இதுதான் என் உலகம், வாழ்க்கை , மனைவி எல்லாம்! இப்படி நான் சொல்வது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால்! இது என்னை அதன் பக்கம் இழுக்கவில்லையென்றால்? உன் நண்பன் இன்று இருக்க மாட்டான். ஒன்று ஊரை விட்டு ஓடி இருப்பான்; அல்லது உயிரை விட்டிருப்பான்!”
“குடிகாரனாக வாழ்வதை விட உயிரை விடுவது எவ்வளவோ மேல்” என்றேன் நான்.
“நான் குடிகாரன் என்று நீ சொல்கிறாய், நீ மட்டு மென்ன? இந்தப் பகுதியே அப்படித்தான் சொல்கிறது! ஆனால்! நான் ஏன் குடிகாரனானேன்? என்று உனக்குத் தெரியாது, இந்த உலகத்தைக்கேள். அது உனக்கு பதில் சொல்லாது. ஆனால்! என் உள்ளத்தைக் கேள் அது நீண்ட கதையை உனக்குச் சொல்லும்”
அவன் கொஞ்சம் விஸ்கியை அருந்தி விட்டு மீண்டும் சொன்னான்.
“இயற்கை, மனிதனுக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்ககிறது. மனிதனும் இயற்கைக்குக் கடமைப் பட்டிருக்கிறான். இயற்கையால் மனிதன் சிறந்தான். மனிதனால் இயற்கை சிறந்தது. இந்த இரண்டு சக்திகளுக்கும் மத்தியிலேதான், வாழ்க்கை அறிவு, ஆராய்ச்சி என்ற தத்துவங்கள் பிறந்தன, வாழ்க்கைக்குத் தத்துவங்கள் உதவாது என்கிறார்கள். மனிதனே தத்துவமாக இருக்கும் பொழுது தத்துவம் பேசக் கூடாது என்று சொன்னால் அதற்கு அந்த அர்த்தமிருக்கிறதா?”
இப்படி ஒரு கேள்வியைப் போட்டு விட்டு என்னைப் பார்த்தான் ரஷீத். நான் ஏதாவது பதில் சொல்லுவேன் என்று அவன் எதிர் பார்த்திருக்க வேண்டும். என்றாலும் நான் ஒன்றும் சொல்லவில்லை, அவனுடைய இந்தத் தத்து வங்களுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னி டம். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கொஞ்சம் குடித்துவிட்டு திரும்பவும் பேசத் தொடங்கினான்.
“கணவன், மனைவி என்றால் உறவும் உடலும் மட்டும் தானா? உள்ளத்திற்கு அதில் பங்கு கிடையாதா? இன்று இந்த இஸ்லாமியக் குடும்பங்கள் இருதயமில்லாத வாழ்க்கை தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊரோடு ஒத்து வாழவேண்டுமென்பதற்காக நியாயங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?”
“இயற்கை மனிதனுக்கு எண்ணற்ற இன்பங்களை வாரிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அந்த இன்பத்தைத் தடை செய்ய, ஒரு சமூகத்தின், சாதியின், பழைமையும் பண்பும் குறுக்கிடுமானால், அந்த சாதியைப் பற்றி சமூத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? காலைச் சூரியனின் கதிரொளியும், மாலைத் தென்றலும், முன்னி ரவுச் சந்திரனும் இஸ்லாமியப் பெண்களின் ஜென்ம விரோதிகளா? இயற்கையின் இன்பத்தையும், புதுமையின் அழகையும் அனுபவிக்கக் கணவன் தனித்து நிற்க வேண்டுமானால்! வாழ்க்கையில் மனைவியின் பங்குதான் என்ன?”
இந்த இடத்தில் அவன் தன் பேச்சை நிறுத்தினான். பிறகு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு திரும்ப வும் பேசினான்.
“வாழ்க்கையில் மனைவியின் பங்கு என்ன? என்று தெரிந்து கொள்ளாத பெண்களால் இந்த மனித குலத்திற்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? இது நம் சமூகத்துக்கே ஒரு பெரும் சாபக்கேடு, கட்டுப்படுத்தப்படாத தொத்து நோய் மாதிரி. இந்த முட்டாள்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இந்த நிலைமையில் வாழ்க்கை எப்படிச் சுகமடைய முடியும்? இந்த சமூகத்துக்கு என்றொரு அகராதி ஏற்படுத்தினால் அதிலே மனைவி என்ற பெயருக்கு ‘அடிமை’ என்றுதான் பொருள் கொடுக்க வேண்டி வரும்! நம் சமூகத்துக்கு வெட்கமே கிடையாது.”
அவனுடைய பேச்சு நின்றது. மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒடிந்து போன அவனுடைய உள்ளம் சிந்திய வார்த் தைகள், அவர்களுடைய வாழ்க்கையை வெகு இலகுவாகத் திறந்து காட்டின. என்றாலும் அவனுடைய மனதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில், நான் மெதுவாகச் சிரித்துக்கொண்டு சொன்னேன் தனி மனிதனின் செய்கைக்கு ஒரு சமூகத்தைக் குறை கூறுவது தவறு என்று.
“தனி மனிதனின் செய்கையல்ல. நமது சமூகத்தின் பெண்களே அப்படித்தான்” என்றான் அவன்.
“பெண்கள் ஆண்களின் ஆதரவில் வாழ்பவர்கள். அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியவர்கள் நாம் தானே?” என்றேன்.
“மாணிக்கத்தைச் சேற்றில் மறைப்பவர்கள் அவர்கள்! நம் புத்திமதிகளை முந்தானையால் மூடுபவர்களிடம் என்னத்தை எதிர்பார்க்கிறாய் நீ?”
அவனுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை: எனவே சமாதானம் கூறும் பாவனையில்,
“வாழையடி வாழையாக வந்து விட்ட பழக்கம் அது. பொறுத்துப் போகவேண்டியது நம்முடைய கடமையில்லையா?””
“மனைவியின் கடமை தெரியாதவர்களுக்கு, கடமை செய்ய நான் தயாராக இல்லை. கடமை என்ற ஒன்றுக்காக என்னையும் என் உள்ளத்தையும் உயர்த்திக் கொள்ள நான் விரும்பவில்லை. பொருத்துப் போக எனக்கு நேர மில்லை. வாழ்க்கையை விரும்பித்தான் விவாகம் செய்தேன். அந்த விவாகத்தில் எனக்கு வாழ்க்கை கிடைக்கவில்லை யென்றால் நானாக ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வாழ்வது என்ன தவறு?”
“அமைத்துக் கொண்ட பாதையில் வாழ்க்கை கிடைக்குமென்று எதிர்பார்க்கிறயா?” என்றேன் நான்.
“இழந்த பிறகு எதிர்பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றான் அவன்.
“ஒன்றுமில்லாதபோது ஒரு பெண்ணை ஏன் துன்பத்துக்குள் தள்ள வேண்டும்?”
“துன்பம் அது அவனாக ஏற்படுத்திக் கொண்டது. அதை முற்றாக அனுபவிக்க வேண்டியவள் அவள் தான், எனக்கு வேண்டியது அமைதி! அவ்வளவு தான்”
இதைச் சொல்லிவிட்டு அவன் திரும்பவும் குடித்தாள். பிறகு சொன்னான்.
“அந்த அமைதிக்காக, மன ஆறுதலுக்காகத்தான் குடிக்கிறேன். இந்தக் குடியினால் உள்ளத்தை மறக்கிறேன் உலகத்தை மறக்கிறேன் ஏன்? என் உடலையே மறந்து விடுகிறேன். இந்த மறதியிலே ஒரு அமைதி கிடைக்கிறது, அந்த அமைதியே எனக்குப் போதும்”.
இதைச் சொல்லி விட்டுப் பக்கத்தில் கிடந்த படுக்கையில் விழுந்து படுத்துக் கொண்டான். நான் சிறிது நேரம் அவனையும் அவனது வாழ்க்கையையும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டு அவனைப் பார்த்தேன். “ரஷீத்” என்று கூப்பிட்டேன். பதில் கிடைக்கவில்லை. குதிரை மூச்சு விடுவது போல் இருந்தது அவனுடைய மூச்சு. அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் மணி எட்டடித்தது. திரும்பவும் “ரஷீத்” என்று கூப்பிட்டேன். பதில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் இல்லை, இடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியை நிரப்ப என்னிடம் எதுவும் இல்லை! எழுந்து நின்று “ரஷீத்” என்று கூப்பிட்டேன் பதில் கிடைக்கவில்லை,
“வருகிறேன் நண்பா!” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தேன், நான் வருவதை உணர்ந்த ரஷீதின் மனைவி சமீமா! தன் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்! உலகம் இருண்டு கிடந்தது. அந்த இருளுக்குள் நுழைந்து நடந்தேன் வீட்டை நோக்கி.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் கண்விழித் தெழுந்தபொழுது என் மனைவி சொன்னாள்.
“உங்கள் நண்பர் ரஷீத் மறைந்தாகி விட்டாராம்!” என்று.
செய்தி கேட்டு என் உயிர் மயங்கியது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு பெருமூச்சு வெளி வந்தது அதை அடுத்து வந்த வார்த்தைகள் இவை,
“நீ விரும்பிய அமைதி உனக்குக் கிடைத்து விட்டதா? நண்பா!”
– 1952, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்.