அமைதியாக ஒரு நாள்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 15,397 
 
 

மனசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் கிடையாது.

பின், எதனால் அந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஊமைக்காயம் என்பது போல் ஊமை மகிழ்ச்சி. இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமையோ வேறு லீவு நாளோ இல்லை. ஒன்பதரை மணிக்கு வழக்கம் போல் ஆபீஸ் கிளம்ப வேண்டியதுதான்.

பஸ் ஸ்டாப்பில் கூட்டம் நெரியுமே, ஸ்டாண்டிங் கிடைப்பதுகூடச் சிரமமாயிருக்குமே என்றெல்லாம் எழும் வழக்கமான படபடப்புகூட எழவில்லை. அவ்வளவு ஏன், மனைவி கட்டிக்கொடுத்த சாம்பார் டப்பாவை மத்தியானம் லன்ச் டைமில் ஆபீஸில் பிரித்தால், கப்பென்று வாடை எழுமே என்கிற வழக்கமான மனச் சோர்வுகூட ஏற்படவில்லை.

எதனால் இப்படி மனசு எந்த விதச் சலனமும் இல்லாமலிருக்கிறது? திடீரென்று செத்துகித்து விடப் போகிறாமோ? ஆச்சர்யம் பாருங்கள்… சாவு எண்ணம் வந்தபோதுகூட மனசில் கவலை தோன்றவில்லை.

என் மனைவி வழக்கம் போல் காலைப் பரபரப்புடன், ‘‘ஆபீஸ் புறப்படலையா? ஏன் உட்கார்ந்துட்டீங்க? என்ன பண்ணுது உடம்புக்கு?’’ என்றாள். ‘‘ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?’’ என்று பதறினாள்.

‘‘ஒரு மாதிரியும் இல்லை. சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியாக உட்கார்ந்திருக்கலாமேனு தோணிச்சு!’’ என்றேன். மனைவியின் காபரா அதிகமாயிற்று. ‘‘ஏன், மாரை கீரை வலிக்கிறதா? கொஞ்சம் தண்ணி கொண்டு வரவா?’’ என்றவள், நான் சொல்லாமலே சமையலைறைக்கு ஓடிப் போய் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

என் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஒரே சீராக இருந்தது. இது மாதிரி மனநிலை, எட்டு கிரகங்கள் ஒன்று சேரும் வானியல் நிகழ்வு மாதிரி வெகு அபூர்வமாகத்தான் ஒரு சிலருக்கு, ஒரு சில நிமிட நேரத்துக்கு வாய்க்கும் என்று தோன்றியது. ஆகவே, அந்த நிலையை முழுசாக அனுபவிப்போமே என அமைதியாக மனைவியை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘‘என்னவோ மாதிரி பார்க்கறீங்களே… எனக்குப் பயம்மா இருக்கே! டாக்டருக்குப் போன் பண்ணவா? நிஜத்தைச் சொல்லுங்க… மாரை என்னவோ பண்றதுதானே?’’ என்று மறுபடி பதறினாள் மனைவி.

‘‘ஒண்ணுமில்லே! நான் கொயட் ஓ.கே!’’ என்று புன்னகைத்தேன்.

‘‘இன்னிக்கு நீங்க ஆபீஸ் போக வேணாம். தலகாணி கொண்டு வரேன். சட்டையைக் கழற்றிட்டு, பேசாம இப்படி ஊஞ்சலிலேயே படுத்துக்குங்க! ஃபேனைப் போடறேன்…’’

‘‘அடடா! எனக்கு ஒண்ணுமில் லேம்மா! ஏன் பதர்றே? நான் முழு அமைதியா இருக்கேன்!’’ என்றேன்.

மனைவிக்குக் குரல் கரகரத்தது… ‘‘இப்படியெல்லாம் நீங்க பேச மாட்டீங்களே..! நான் சொல்றதைத் தயவு பண்ணிக் கேளுங்க. இன்னிக்கு உங்க மூஞ்சே சரியில்லை. எனக்கென் னவோ பயமா இருக்கு! இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்குங்க. தோள்பட்டையிலே வலிக்கிறதா? தைலம் தடவி விடட்டுமா? என் கையைப் பிடிச்சுக்குங்க…’’ என்று என்னை சர்வ ஜாக்கிர தையாக நடத்தி அழைத்துச் சென்று ஊஞ்சலில் படுக்கவைத்து விட்டாள். என் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘‘என்னை மோசம் செஞ்சுடாதீங்க! பகவானே, திருப்பதி வேங்கடேசா! உன் சந்நிதானத் துக்கு வந்து உண்டியல்லே ஆயிரம் ரூபா போடறேன். என் மாங்கல்யத் தைக் காப்பாத்து!’’

நினைத்துக்கொண்டவள் போல் எழுந்து போய் போன் செய்தாள்… ‘‘மாமி! மாமா இருந்தார்னா ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டுப் போகச் சொல்றீங்களா? இங்கே இவருக்கு என்னவோ பண்றது… சொல்லத் தெரியாம திணர்றார். சீக்கிரம் வாங்களேன். எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே!’’

அடுத்த நிமிடம், பட்டாபி மாமா பாய்ந்தோடி வந்தார்.

‘‘என்னய்யா பண்றது உடம்புக்கு? எதுவானாலும் பயம் வேண்டாம். எல்லாத்துக்கும் இன்னிய தேதில மருந்து இருக்கு. தைரியமா இரு. ஐஸோர்டில் மாத்திரை ஒண்ணை நாக்கு அடியில் வெச்சுக்கிட்டா, பத்து நிமிஷத்துல வலி குறையும்.’’

‘‘அதுக்கெல்லாம் அவசிய மில்லை, பட்டாபி சார்!’’

‘‘வாயே திறக்கப்படாது! லீவ் எவ்ரிதிங் டு மி! டாக்டருக்குப் போன் பண்ணி யிருக்கேன். இப்போ வந்துடுவார். உன்னைக் காப்பாத்தி அவர் கையிலே ஒப்படைக்கிறவரை தயவு செய்து என் சொல்படி கேளு. மாத்திரைக்கு வெங்கிட்டுவை அனுப்பிட்டேன். பைக்கிலே பாலத்துக் கடைக்குப் போயிருக்கான். தோ வந்தாச்சு..!’’

பையன் வாங்கி வந்த மாத்திரையைத் திணிக்காத குறையாக என் வாயில் போட்டார். ‘‘முழுங்கிடாதே. நாக்கு அடியில் வெச்சுக்கோ! எதுவும் வொர்ரி பண்ணிக்காதே. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், அக்கம்பக்கத்திலே..! லேசா பின்னாலே சாஞ்சுக்கோ!’’

வாசலில் கார் சத்தம். டாக்டர் வந்தாச்சு! ‘‘வேர்த்ததைத் துடைச்சிட் டீங்களா… இல்லே, வேர்க்கவே இல்லையா?’’ என்று என் நாடியைப் பிடித்தபடி, வாட்சைப் பார்த்தபடி, என் மனைவியிடம் கேட்டார்.

‘‘வேர்க்கலை டாக்டர்… தப்பா?’’

‘‘வேர்த்தால்தான் தப்பு. காட் இஸ் கிரேட்! ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஐஸோட்ரிக் டெம்ப்ரரி ரிலீஃப் கொடுத்திருக்கு. நீங்க இன்டென்சிவ் கேருக்கு உடனே போன் போட்டு ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லிடுங்க. நான் இருந்து பார்த்து அனுப்பிட்டுப் போறேன். தே வில் டேக் கேர். அழா தீங்க மாமி, நத்திங் டு வொர்ரி!’’

பத்து நிமிஷத்தில் தடபுடலாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. வெள்ளை யூனிஃபார்ம் அணிந்த கிங்கரர்கள் மாதிரி இரண்டு சிப்பந்திகள். என்னை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து, ஆம்பு லன்ஸ§க்குள் தள்ள, அழுதபடியே மனைவியும் வந்து ஏறிக்கொண்டாள்.

ஆஸ்பத்திரியில் உடனடியாக டாக்டர் குழாம் வந்து பரிசீலனை செய்தனர். பிரஷர் எடுக்கப்பட்டது. சலைன் பாட்டில் நிலை நாட்டப் பட்டது. நாடி நரம்பைத் தேடி, குத்த வேண்டிய இடத்தில் குத்தி, மருந்து ஏற்ற வழி செய்யப்பட்டது.

அப்ஸர்வேஷனில் மூன்று நாள் இருக்கவேண்டுமென்று இதய சிகிச்சைப் பிரிவின் உதவி ஸ்பெஷ லிஸ்ட் உத்தரவு போட்டார். 15 நிமிடத்துக்கு ஒரு தரம் பிளட்பிரஷர் பார்க்கும் ஆட்டோமேட்டிக் கருவி பொருத்தப்பட்டது. 100 கி.மீ. ஓடக் கூடிய தெம்பு இருந்தும், மூன்றடி தூரமுள்ள டாய்லெட்டுக்கு நடந்து போகத் தடை! பெட்பான் பொருத்தப்பட்டது.

மூன்றாம் நாள்… இறுதி ரிப்போர்ட்டில், நான் எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருப்பதாக ரூ.18,000&க் கான பில்லுடன் அறிவித்தது ஆஸ்பத்திரி.

வீடு வந்ததும் மனைவி மீது வள்ளென்று விழுந்தேன்… ‘‘அறிவு வேணாம்! நான்தான் ஒண்ணுமில்லைன்னு தலைப்பாடா அடிச்சுக் கிட்டேனே, கேட்டியா? பட்டாபி… அவன் என்ன பெரிய எம்.டியா… எம்.எஸ்ஸா? அவனா இப்போ பணம் கட்டினான்? நீ ஒரு மூளை கெட்டவள்..!’’

நான் இவ்வளவு திட்டியும், என் மனைவி வருந்தவே இல்லை. மாறாக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும், ‘‘அப்பாடா! இப்பதான் நீங்க நார்மலா இருக்கீங்க. வெங்கடாசலபதி என்னைக் கை விடலை. நாளைக்கே திருப்பதி போய் உண்டியல்ல ஆயிரம் ரூபாய் போட்டுடறேன்’’ என்றாள்.

இனிமே என் மனசில் எப்பவாவது சாந்தம், அமைதின்னு ஏதாவது தலைகாட்டட்டும்… கத்தற கத்தலில் எல்லாம் ஓடி ஒழியணும்… ஆமா!

– 09th மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *