கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 5,769 
 

வெள்ளிக்கிழமை.

பாளையங்கோட்டைக்கு அருகில் இருக்கும் சாந்தி நகர்.

உஸ்மான் எப்போதும்போல காலை ஆறு மணிக்கு எழுந்தார். பல்லைத் துலக்கிவிட்டு, காலைத் தொழுகையை முடித்துக்கொண்டு, ஈஸிச் சேரில் அமர்ந்து அன்றைய தினசரியைப் புரட்டியபோது, அவருடைய மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தார். சூர்யா என்கிற பெயருடன் ஒளிர்ந்தது. சூர்யா அவருடைய நெருங்கிய நண்பர் ராமானுஜத்தின் ஒரேமகன்.

“சொல்லு சூர்யா.”

“அங்கிள் அப்பா ஆறு மணிக்கு ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாரு…”

உஸ்மான் அதிர்ந்தார். நேற்று இரவு எட்டு மணிவரை ராமானுஜத்திடம்தான் பேசிக்கொண்டிருந்தார். இப்போது அவர் மரித்துவிட்டார்.

எழுந்து நின்றுகொண்டு, லுங்கியை தூக்கி இறுக்கிக் கட்டிக்கொண்டார். தாடியை சற்று நேரம் அமைதியாக நீவி விட்டுக்கொண்டார்.

மனைவியிடம், “கதீஜா….ஐயர் ஹார்ட் அட்டாக்ல போயிட்டாரு….. நான் உடனே புறப்படறேன். ஐயரு வீட்லதான் இன்னிக்கி இருப்பேன். தொழுகையைத் தொடர முடியாது….”

சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றார்.

ராமானுஜம் ஒரு வங்கியின் சீப் மானேஜராக சென்ற வருடம் ரிடையர்ட் ஆனவர். பத்து வருடங்களுக்கு முன்பு உஸ்மான் அவரை வங்கியில் சந்தித்தார். இவர் சாந்தி நகரில் 27வது தெரு. அவர் 29வது தெரு என்பதால் அவர்கள் எளிதாக நண்பர்களானார்கள். அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.

ராமானுஜம் பிறருக்கு உதவி புரிவதில் இன்பம் காணுபவர். தன் டிரைவரின், வீட்டு வேலைக்காரியின், இரவு ரோந்து வரும் செக்யூரிட்டியின், தெருவில் வந்து இஸ்திரி போடுபவனின் என அனைவரின் குழந்தைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்தி, வருடத்திற்கு இரண்டு செட் யூனிபார்ம், ஷீ எடுத்துக் கொடுத்து அவர்களை அக்கறையுடன் படிக்க வைக்கிறார். அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடுவார். ஒரு நல்ல மனிதருக்கு இவ்வளவு சீக்கிரம் இறப்பு நேர்ந்திருக்க வேண்டாம்தான்.

உஸ்மான் போனபோது, ஏற்கனவே ஐயர் வீட்டில் ஏராளமானோர் கூடியிருந்தார்கள்.

ராமானுஜம் தரையில் கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் பஞ்சு வைத்து, கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தன. தலைமாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. அவரைச்சுற்றி பல குழந்தைகள் கண்ணீர்மல்க கதறி அழுது கொண்டிருந்தனர்.

அவருடைய மனைவி கமலா ஒரு அமைதியான சோகத்துடன் ராமானுஜத்தின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி அவரின் தலைமயிரைக் கோதினாள்.

உஸ்மானைப் பார்த்ததும் சூர்யா பெரிதாக அழ ஆரம்பித்தான்.

“காலைல அஞ்சு மணிக்கே எந்திரிச்சு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு அங்கிள். அம்மா வெந்நீர் எடுத்துவந்து குடிக்க குடுத்தாங்க, குடிச்சாரு. அப்புறம் ஆறு மணிக்கு சோபால உட்கார்ந்தபடியே போயிட்டாரு…”

சற்று நேரத்தில் வீட்டின்முன் ஒரு கார் வந்து நிற்க, மாமியின் மூத்த சகோதரன் பெரியம்பி கல்லிடைக்குறிச்சியிலிருந்து, தன் குடும்பத்தினருடன் வந்து இறங்கினார். .

கடந்த பத்து வருடங்களாக, ஐயர் வீட்டில் உஸ்மான் அவரை நிறையத் தடவைகள் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறார். அவர் தடாலடியான பேர்வழி. எப்போதும் குரலை உயர்த்தி அதிகாரத்துடன் பேசுவார்.

சற்று நேரம் ராமானுஜத்தின் உடலருகில் அமைதியாக நின்றார்.

பின்பு சூர்யாவிடம் அதட்டலாக, “வாத்தியாருக்கு சொல்லியாச்சா? எலக்ட்ரானிக் க்ரிமட்டோரியம் புக் பண்ணியாச்சா? அப்புறம் அங்கபோய் க்யூவில் நம்மால் காத்திருக்க முடியாது… கடகடன்னு ஆக வேண்டிய காரியத்தைப்பாரு” என்றார்.

“தேவையில்லை மாமா. அப்பா தன்னோட உடம்ப ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடல் மெடிகல் ஸ்டூடண்ட்ஸ்க்காக, ரெண்டு வருஷம் முன்னாலேயே அப்ளிகேஷன் கொடுத்து எழுதி வச்சுட்டார். நான் ஆறரை மணிக்கே ஹாஸ்பிடல் கேடவர் பாங்குக்கு (cadaver bank) போன் பண்ணிச் சொல்லிட்டேன். இறந்த சிக்ஸ் அவர்சுக்குள்ள பாடி பாங்கில் சேர்க்கப்படவேண்டும். எனி டைம் ஆம்புலன்ஸ் வரும்… எடுத்துண்டு போய்டுவா. அப்பாவுக்கு ஈமக்கிரியைகள் மேல துளியும் நம்பிக்கை கிடையாது.”

உஸ்மானுக்கு உடனே ஜாபகம் வந்தது…. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐயருடன் தானும் ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலுக்கு சென்றதும், அவர் இரண்டு வாலண்டரி பாடி டொனேஷன் அப்ளிகேஷன்ஸ் வாங்கி வந்ததும்… அதைத் தொடர்ந்து ஐயர் மட்டுமல்ல அவரின் மனைவியும் தன் உடம்பை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்காக எழுதி வைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

பெரியம்பி, “அவன் கிடக்கான் பைத்தியக்காரன்…. அவன்தான் செத்துக் கிடக்கானே! உயிரோட இப்ப இருக்கற நமக்கு புத்தி எங்க போச்சு?
பிராமணனா பொறந்தாச்சுன்னா சாஸ்திரங்கள் என்ன சொல்றதோ அதத்தான் செய்யணும்….அவன் என்ன அனாதைப் பொணமா? அவனோட குலக்கொழுந்தும் கோத்திர வாரிசுமாத்தான் நீ இங்க இருக்கியே…! ஒழுங்கா வாத்தியாருக்கு போன் பண்ணி வரச்சொல்லு.” என்றார்.

உஸ்மான் துடித்துப்போனார்.

எத்தனையோ தடவைகள் ஐயர் தன்னிடம் “ஒரு மனிதன் இறந்தும் கல்வி பயிலும் மாணவனுக்கு உதவ முடியுமென்றால், அது தன் உடம்பை அந்த மாணவர்களுக்கு எழுதி வைப்பதன் மூலம்தான் நடக்கும். என் உடல் அக்னியில் எரியூட்டப் படுவதைவிட, இந்த மாணவர்களுக்காக அமிலத்தில் பல வருடங்கள் மிதப்பதையே நான் விரும்புகிறேன் உஸ்மான்…அதுதான் எனக்கும் கமலாவுக்கும் விருப்பம்.” என்று சொல்லியிருக்கிறார்.

உஸ்மான் பணிவுடன் மெதுவான குரலில் பெரியம்பியிடம், “ராமானுஜம் சார் என்ன விரும்பினாரோ, அதையே அவர் ஆசைப்படி செஞ்சுரலாங்க..அவர் பாடியை எழுதி வைக்கும்போது, நானும் அவருடன் இருந்தேங்க….” என்றார்.

“யோவ் உன்னாலதான் அவன் உருப்படாம போனதே….உனக்கு என்னய்யா தெரியும் எங்க ஐயருங்க சாஸ்திரங்களைப் பற்றி? எங்க மத சம்பிரதாயங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துல நீ தலையிடாம ஒதுங்கி நில்லு.”

சூர்யாவுக்கு பயங்கரமாக கோபம் வந்தது.

“மாமா ப்ளீஸ்…..அப்பாவுக்கு நம்ம உறவுகளைவிட உஸ்மான் சார் மேலதான் மதிப்பும், மரியாதையும் அதிகம். இதை அப்பாவே என்னிடம் நிறைய தடவை சொல்லியிருக்காரு…..நீங்க அமைதியா இருந்தாலே எங்களுக்கு பெரிய உபகாரமா இருக்கும்.”

பெரியம்பி விடைத்துக்கொண்டு, “ஒரு பெரியவனுக்கு இந்த வீட்ல மரியாதை கிடையாது…. எப்படியும் நாசமாப் போங்க….வாடி போகலாம்.”
மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

கிளம்பும்போது தங்கை கமலாவிடம் திமிராக, “நீங்க இஸ்லாமிய மதத்துக்கு மாறினா எனக்கு சொல்லியனுப்புங்கள். நான் வந்து ஆசீர்வதிக்கிறேன்.” என்றார்.

“கண்டிப்பா பெரியம்பி….நான் செத்தாலும் நீ இங்க வராத…. ஏன்னா, என் உடம்பையும் நான் ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலுக்கு எழுதி வச்சிட்டேன்.”

அவர் கடுப்புடன் வெளியேறினார்.

அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது.

ஒன்பது மணிக்கு ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடல் ஊழியர்கள் ஒரு ஆம்புலன்ஸில் வந்தனர். ராமானுஜத்தின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. சூர்யாவும், உஸ்மானும் உடன் சென்றனர்.

“அவர் உடலை எவரேனும் பார்க்க விரும்பினால், அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்…அதன்பிறகு அடையாளக் குறியிடப்பட்டு அமிலத்தில் சேர்க்கப் பட்டுவிடுவார்” என்று மருத்துவமனை சூப்பர்வைசர் சொன்னார். .

உஸ்மானுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஐயரின் மேன்மையான குணங்களை நினைத்து படுக்கையில் புரண்டார்.

மறுநாள் சனிக்கிழமை காலை பத்து மணிக்கு பரபரப்புடன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடல் சென்றார். அங்கிருந்த சூப்பர்வைசர் இவரை அடையாளம் கண்டுகொண்டார்.

அவரிடம் “நான் என் நண்பர் ராமானுஜத்தை ஒருமுறை கடைசியாகப் பார்க்க வேண்டும்” என்றார். அவர் அழைத்துச் சென்றார்.

உஸ்மான் ஐயரைப் பார்த்தபடியே இரண்டு நிமிடங்கள் அமைதியாக கண்ணீர் விட்டு அழுதார்.

பிறகு ஹாஸ்பிடல் கேடவர் பாங்கில் தனக்கும், கதீஜாவுக்கும் என இரண்டு அப்ளிகேஷன் கேட்டு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *