அமராவதியின் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 7,213 
 
 

‘அண்ணே என் கோலத்தைப் பார்த்தீங்களா’ என்று அமராவதி வீட்டுக்குள் நுழைந்தாள். “என்னாச்சு பெரியவர் தவறிட்டாரோ. நமக்கு ஒண்ணும் தகவல் வரலையே” என்று பொன்னையா வாத்தியார் யோசித்தார். அமராவதியின் சத்தம் கேட்டு வாத்தியார் சம்சாரம் ஹாலுக்கு வந்தாள்.

அமராவதி தலையை தட்டி அள்ளி முடிந்தாள் சேலையை முழங்காலுக்கு மேல் திரைத்துக் கொண்டு காலை நீட்டியபடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள் மேல் சேலயை தளர விட்டாள். முந்தானையால் முகத்தைத் துடைத்தாள் வியர்வை, ஆயாசம் என்ற பெயரில் ‘தன்னை’ முடிந்ததை வெளிப்படுத்தினாள்.

வாத்தியாரைப் பார்த்து, அண்ணே எவனோ என் காதை அறுத்துட்டான். சவடியைப் பிடுங்கிட்டு ஓடிட்டான். இப்ப காதைத் தச்சு தோடு போட்டிருக்கேன் என்றாள்.

“அப்பாடா இவ்வளவு தானா நான் என்னவோ ஏதோன்று நெனச்சேன்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட வாத்தியாருக்கு அவர் காது வளர்த்து சவடி போட்டிருந்த ஞாபகம் கூட இல்லை.

வாத்தியார் சம்சாரம் தங்கம்மா காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு சிறிதுநேரம் பேசிவிட்டு மார்க்கட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமராவதி கிழங்கு, கடலை, கருப்பட்டி, கேப்பை என்று ஏதாவதொன்றைக் கொண்டு வருவாள் பேசிவிட்டுப் போய்விடுவார். குடும்பத்தாரிடம் பாசமாக இருப்பாள்.

ஒருநாள் வந்தவள் என்ன செய்தாள் தெரியுமா? அண்ணே உனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்னு அவர் சொன்னாரு என்றாள். “இல்லையே எனக்கு என்ன தெரியும்? ஒரு நாள் அண்ணன் வயித்துல வலதுபக்கம் மச்சம் இருக்குன்னார். நான் அப்ப கடைசிவரைக்கும் உனக்கு நல்ல சாப்பாடு உண்டுன்னு சொன்னேன்”

உடனே அமராவதி, “அதுதான் அவர் சொன்னாரு, எனக்கு பாருண்ணே, இங்கே ஒரு மச்சம் இருக்கு” என்றவள் சேலையை தொடை வரை உயர்த்தினாள். வாத்தியார் தங்கம்மா கொஞ்சம் தண்ணி கொடு என்றார். வெளியே வந்து தண்ணியில் வாய்கொப்புளித்தார். மீண்டும் ஹாலில் வந்து உட்கார்ந்து வெற்றிலை போட்டார். அமராவதி சேலையை ஒழுங்காகப் போட்டு உட்கார்ந்திருந்தாள்.

வாத்தியார் “நீயும் வெத்திலை போடு என்றார். அமராவதி, ‘தங்கம்மாக்கா உள்ளே இருக்கியா? வெளியே போய்ட்டியோன்னு பாக்கை கையில் எடுத்தபடி கிளம்பிவிட்டாள்.

தங்கம்மா ஹாலுக்கு வந்தார். வாத்தியாரைப் பார்த்து “என்னங்க இது. சேலையை தொடை வரைக்கும் தூக்குது” என்றாள். எனக்கு ஒன்னும் புரியலை அது மனசுல ஏதோ இருக்கு நாம அதைத் தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம். இப்படியே சமாளிச்சுடுவோம். அது ரோசக்கார பொம்பள. நாம் ஏதாவது சொன்னால் போற வழியிலே தூக்குப் போட்டுக்குவா” என்றார்.

தங்கம்மா விடுவதாக இல்லை. ஒங்களுக்கு அமராவதிய சின்ன வயசுலேயே தெரியுமா? “இல்ல தங்கம் எனக்கு அவரக்கூட அதிகமாக தெரியாது. நான் படிச்சவன்னு பெரிய வீட்டுக்காரரு என்னை கல்யாணம் பேசும்போது பத்திரிகை எழுத, கவர்ண்மெண்டு ஆபிசுக்கு மனு எழுத கூப்பிட்டுப் போவாரு அவ்வளவு தான். நண்பர் கூட இல்லை. தெரிஞ்சவரு என்றார் பொன்னையா வாத்தியார்.

இப்படியே வந்து போய் கொண்டிருந்த அமராவதி ஒரு நாள் வரும்போது பொன்னையா வாத்தியார், இல்லை. அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். அமராவதி ஓவென்று ஒப்பாரி வைத்து அரைமணிநேரம் மனசுவிட்டு அழுதாள். தங்கம்மாவுக்கு அன்று தான் துக்கம் தீர்ந்தது போலிருந்தது. மனசின் அழுத்தம் குறைந்து லேசாக இருந்தது. இங்கு அன்றைக்கு யாருமே நெஞ்சில் அடித்து. ‘ஒப்புச் சொல்லி’ அழவில்லை. அப்படி அழுதிருந்தால் மனதின் பாரம் குறைந்திருக்கும்.
பொன்னையா வாத்தியார் மறைந்து ஆறுமாசமாகிவிட்டது. தீபாவளி வந்தது ஒருவருக்கும் சின்னப்புள்ளைகளுக்குக் கூட புதுத்துணி எடுக்கவில்லை இட்லி அவிக்கல கறி எடுக்கல ஒரே அழுகை. தங்கம்மா மகன், மகளுடன் உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தார். மருமகளும் சேர்ந்து அழுதாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் கொண்டு வந்து சின்னப் பிள்ளைகளுக்குக் கொடு என்ற பலகாரம் கொடுத்தனர். திடீரென்று புயல் போல நுழைந்தார். அமராவதி களைப்பும் தவிப்புமாக உட்கார்ந்தார். தலையில் பெரிய சில்வர் தூக்கு அதில் இட்லி, கறிக்குழம்பு கையில் சின்ன தூக்கு அதற்குள் முறுக்கு அதிரசம்.

“பஸ் இருக்காதே இன்னக்கி எப்படி வந்தீங்க” என்று தங்கம்மா கேட்டாள். “நடந்து வந்தேன்க்காக. 7 மணிக்கே கௌம்புனேன். கொஞ்சதூரம் ஒரு ஆண் சைக்கிள்ல வச்சு கூட்டி வந்தான். மணி பதினொன்னு ஆச்சு.

நீங்க ஒன்னும் சமச்சிருக்க மாட்டீங்க என் மக்கமாரு பசியோடு இருப்பாங்க அவுங்க அப்பா இருந்தா பசியோடு இருக்க விடுவாங்கள. அதனாலதான் எடுத்து வந்தேன் மகன், மருமகள், மகள் எல்லோருக்கும் எடுத்து வைக்கா சாப்பிடட்டும்? என்றாள்.

தங்கமக்காவுக்கு கண் கலங்கியது “அவர் இருந்திருந்தால் பிள்ளைகளை பசியோடு இருக்க விட்டிருப்பாரா? என் துக்கத்தை நெனச்சேனே தவிர என் பிள்ளைகள் பசியை மறந்துட்டேனனே.” என்று நினைத்து அழுதாள்.

அமராவதியே உள்ளே போய் தட்டு தண்ணீர் எடுத்து வந்து எல்லோருக்கும் வைத்துக் கொடுத்து சாப்பிட வைத்தாள். பேரப் பிள்ளைகளுக்கு முறுக்கு அதிரசம் எடுத்து சாப்பிடக் கொடுத்தாள். பின்பு சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வைத்தாள். வீடு அமைதியாக இருந்தது. வெற்றிலை எடுத்துப் போட்டாள்.

நாலு மணிநேரம் நடந்த களைப்பு சற்று கண் அசந்து விட்டாள். தங்கம்மா ஆச்சரியத்துடன் அமராவதியை பார்த்தபடி படுத்திருந்தாள். நேசம் என்பது ஒருவரிடம் காட்டுவதல்ல. அவர் சார்ந்த அனைவரிடமும் காட்டுவதாகும் என்ற தத்துவத்தை தனக்குஅமராவதி உணர்த்திவிட்டாள். ஐம்பது வயதில் நாலு மணி நேரம் நடந்து வந்து இந்தப் பிள்ளைகளைச் சாப்பிட வைத்தாளே. இவளும் ஒரு தாய் தான் என்று தங்கம்மா நினைத்தாள்.

சட்டென்று கண் விழித்த அமரவாதி தூக்குப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அழுதபடியே கிளம்பினார். “அப்பா தெய்வமா இருக்காரு ஒன்னும் கலைப்படாதீங்க. தங்கமக்கா புள்ளைகளை நல்லா பார்த்துக்கா” என்றபடி போய் விட்டாள்.

பஸ் இன்னும் விடவில்லை. அவள் தனியாக நடந்து கொண்டிருந்தாள். பொண்ணு பாhத்த அன்னைக்கே அமரவாதிக்கு பரிசம் போட்டாங்க. அவ பொன்னையா வாத்தியாரைத் தான் மாப்புள்ளைன்னு நெனச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாள். தாலி கட்டும்போது பார்த்தால் யாரோ ஒருவர். திடுக் என்றது கெட்டுமேளம் ஒலித்தது. நிமிர்ந்து பார்த்தாள். மாப்பிள்ளை தோழனாக பொன்னையா வாத்தியார் நின்று கொண்டிருந்தார்.

வாழ்க்கை ஓடிவிட்டது. இனி என்ன? கொஞ்ச காலம் அடிக்கடி வந்து பொன்னையா வாத்தியார். பிள்ளைகளைப் பார்க்கணும் பாவம், தங்கம்மா என்று சொல்லிபடி நடந்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *