சமீப காலமாக கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பொ¢ய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சுந்தருக்கு தோன்றியது.
தன்னோடு கோவிலுக்கு வருவதில்லை. நெற்றியில் வீபூதி கிடையாது. எப்போதும் நகைச்சுவையும், கலகலப்புமாக இருந்தவன் பேச்சில் தற்போது அசுவாரசியமும், விட்டேதியான போக்கும் … சாஸ்திரங்கள், சடங்குகள் என எதிலும் நம்பிக்கையின்மை… என்று நிறைய மாற்றங்கள்.
சுந்தரும், கிருஷ்ணனும் பெங்களூரில் ஒரே ஐ.டி மல்டினேஷனல் கம்பெனெயில் கடந்த இருபது வருடங்ளுக்கும் மேலாக வேலை பார்த்து, ரிடையர்ட் ஆனவர்கள். பெங்களூரிலேயே பங்களா டைப்பில் அருகருகே வீடு கட்டிக்கொண்டு ஹாப்பியாக செட்டிலான நல்ல நண்பர்கள். தினமும் அரசியல், ஆன்மீகம், சினிமா என்று அரட்டையடிப்பவர்கள்.
ஆனால், சமீபகாலத்திய கிருஷ்ணனின் மாற்றம் சுந்தருக்கு மிகுந்த கவலையளித்தது. கிருஷ்ணனிடமே இதை கேட்டு விடுவது என்று நினைத்துக் கொண்டார்.
அன்று மாலை வழக்கம் போல கிருஷ்ணன் வீட்டிற்கு அரட்டையடிக்கச் சென்றார். பேசிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணனின் மொபைல் சிணுங்கியது.
எடுத்துப் பேசினார்.
“…….”
“ஆமா… அப்பாவுக்கு அடுத்த மாசம் திவசம் வரது….ஆனா, இந்த வருஷத்திலிருந்து நான் அம்மா, அப்பாவுக்கு திவசம் பண்ணப் போறதில்லை… எனக்கு நம்ம்பிக்கையே போயிடுத்து.”
“………”
“நீங்க சொல்றது வாஸ்தவம்தான், அஞ்சு வருஷமா பண்ணிண்டிருந்தேன்… இப்பதான் புத்தி வந்திருக்கு.” மொபைலை கட் செய்தார்.
“என்னடா, நீ அப்பா திவசம் பண்ணப் போறதில்லையா ?”
“ஆமா சுந்தர், எனக்கு இப்ப எதிலுமே நம்பிக்கையில்லை… சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், கடவுள்கள், கோவில்கள் எல்லாமே …ஏன் மனுஷாளிடம் கூட..”
“ஒழுங்காகத்தானே அம்மா, அப்பாவுக்கு திதி, திவசம், அமாவாசை தர்ப்பணம் எல்லாம் பண்ணின…இப்ப உனக்கு என்ன கேடு? பித்ருக்கள் சாபம் சும்மா விடாது கிருஷ்ணா”
“இப்ப பித்ருக்களா இருக்கறவா, உயிரோடு இருந்தப்ப சத்ருக்களா இருந்தாளே, அது தெரிஞ்சப்புறம் அவாளுக்கு என்ன மா¢யாதை வேண்டிகிடக்கு?”
“கிருஷ்ணா, உன் மனசுல ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கு அதனாலதான் நீ இப்படியெல்லாம் பேசற..”
“மாற்றம் இல்ல சுந்தர், பெரிய வலி… முப்பது வருடங்களா நான் ஏமாற்றப்பட்ட வலி… இப்பதான் எனக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தது”
“யார் உன்ன ஏமாத்தினா? அதுக்கு இப்ப எப்படி தீர்வு காணலாம்னு யோசி, அத விட்டுட்டு எல்லாம் தெரிந்த நீயே சோர்ந்து போகலாமா?”
“அஞ்சு வருஷத்துக்கு முன்னால செத்துப்போன என்னோட அப்பாவும், இப்ப உயிரோட இருக்கற என் தம்பியும்தான் என்ன ஏமாத்தினது சுந்தர்”
“இறந்து போய் ஐந்து வருடங்கள் கழித்து அப்பா மீது உனக்கு கோபம் வரும் அளவுக்கு அவர் என்ன செய்தார்?”
“எங்க வீட்ல நாந்தான் மூத்தவன். அடுத்து இரண்டு தங்கைகள், கடைசியாக ஒரு தம்பி. 1986ம் வருடம் பாளையங்கோட்டையில் கவர்ன்மெண்ட் சர்வீஸ¤லர்ந்து அப்பா ரிடையர்ட் ஆனார். அப்ப நாங்க திம்மராஜபுரம்கிற கிராமத்தில் அக்கிரஹாரத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். அப்போதுதான் படித்து முடித்திருந்த எனக்கு அகமதாபாத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்து நான் சென்றேன். அப்பா பக்கத்திலிருந்த சாந்தி நகர் என்கிற இடத்தில் நிலம் வாங்கி ஒரு பொ¢ய வீடு கட்ட ஆரம்பித்தார். எனக்கு அந்த சமயத்தில்தான் சரஸ்வதியுடன் திருமணமாயிற்று. அவளை கைப்பிடித்த யோகம் எனக்கு உடனே பெங்களூரில் நாம் வேலை செய்த கம்பெனியில் வேலை கிடைத்தது.”
“நான் அவ்வப்போது விடுமுறையில் திம்மராஜபுரம் செல்லும்போது அப்பா சாந்தி நகரில் வீடு கட்டுவதில் மும்முரமாக இருந்தார். என் தம்பிக்கு அப்போது பாளையங்கோட்டையிலேயே மாதம் அறனூறு ரூபாய் சம்பளத்தில் ஒரு மெடிகல் ரெப் வேலை கிடைத்தது. 1987ம் வருடம் அப்பா தன் பெயரில் பத்திரிக்கையடித்து வீடு கிரகப் பிரவேசம் சாந்தி நகரில் எளிமையாக நடந்தது. வீட்டின் பெயர் ‘பரத்வாஜ்’. அதுதான எங்க கோத்திரம். நான், சரஸ்வதி, திருமணமாகியிருந்த என் இரண்டு தங்கைகள் தங்கள் கணவர் குழந்தைகளுடன் கிரகப் பிரவேசத்திற்கு சென்றோம். என் தம்பி குமார் அப்பாவுக்கு உதவியாக கிரகப் பிரவேச காரியங்களை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.”
கிருஷ்ணனின் ஒரே மகன் ராகுல் அப்போது அலுவலகத்திலிருந்து திரும்பினான். சுந்தரைப் பார்த்து “ஹலோ அங்கிள்” என்று சொல்லி புன்னகைத்துவிட்டுச் சென்றான்.
“வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு என் அம்மா, அப்பா, தம்பி மூவரும் குடி புகுந்தனர். பிறகு என் தம்பிக்கு திருமணமாயிற்று.. அது ஒரு உருப்படாத காதல் கல்யாணம். என் தம்பிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த வீட்டிலேயே படித்து வளர்ந்தாள்.”
“முதலில் என் அம்மா 2007 லும், பிறகு என் அப்பா 2010 லும் இறந்தனர். அதன் பிறகு வருடா வருடம் அவர்களுக்கு நான் திவசம் பண்ணும்போது என் தம்பியும் அவன் மனைவியும் இங்கு வந்து விட்டுச் செல்வார்கள்…தற்போது என் தம்பி மகளுக்கு வரன் தேடுகிறார்கள்.
“நல்ல விஷயம்தானே?…”
“ரொம்ப நல்ல விஷயம்தான்.. போன மாதம் என் தம்பி தன் மகளுக்கான மாட்ரிமோனியல் விளம்பரத்தில் ‘ஓன் ஹவுஸ் அட் சாந்தி நகர், பாளையங்கோட்டை’ என்று கொடுத்திருந்ததை என் தங்கை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்தாள். அப்பா பெயரில்தான் ‘பரத்வாஜ்’ இருப்பதாக நானும் என் இரண்டு தங்கைகளும் நம்பிக் கொண்டிருந்தோம். இன்பாக்ட் நான் ஒரு பொறுப்புள்ள அண்ணனாக என் தம்பியிடம் பேசி அந்த வீட்டிற்கான விலையை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை அவனுக்கும், மிச்ச இரண்டை என் தங்கைகளுக்கும் பிரித்து தரச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.”
“உடனே என் தம்பிக்கு போன் செய்து, ‘பரத்வாஜ்’ யார் பெயரில் இருக்கு என்று கேட்டதற்கு, தான் 1986லேயே அந்த இடத்தை வாங்கியதாகச் சொன்னான். நீ வீடு கட்டிக் கொண்டது நல்ல விஷயம்தானே… அதை ஏன் எங்கள் யாருக்கும் சொல்லவில்லை? என்று கேட்டதற்கு அப்பா உங்க எல்லாருக்கும் சொல்லியிருப்பாருன்னு நெனச்சேன் என்றான். நான் திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலமாக வீடு அவன் பெயரில் இருப்பதை உறுதி செய்து கொண்டேன்.”
“இதில் என்ன வருத்தம் உனக்கு? உன் அப்பாவோ, தம்பியோ உன்னிடமிருந்து அந்த வீட்டிற்கு பணம் வாங்கினார்களா? அல்லது உன் நேரத்தை எடுத்துக் கொண்டார்களா?”
“வாஸ்தவம்தான்… என் பணமோ, நேரமோ எனக்கு செலவில்லை. ஆனால் என் தம்பி நெலம் வாங்கி வீடு கட்டியது ஒரு நல்ல விஷயம்தானே? அதை ஏன் எங்களிடமிருந்து மறைக்க வேண்டும் ? நான் அந்த குடும்பத்திற்கு மூத்த மகன் தானே? ஏன் ஒரு கூத்தியாவின் மகனைப்போல் என் அப்பா என்னை நடத்த வேண்டும் ? ஏன் முப்பது வருடங்களாக என்னிடம் சொல்லவில்லை? எதற்காக என் அப்பாவிற்கும், தம்பிக்கும் உண்மையை மறைக்கும் இந்த திருட்டுத் தனம்? எதற்கு என் அப்பா தன்னுடைய ரிடையர்மெண்ட், பி.எப் பணத்தை என் தம்பி சுருட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்? இந்த அசிங்கம் போறாதுன்னு, அப்பா இறந்த பிறகு என் தம்பியும் அவன் மனைவியும் வங்கியிலிருந்த அப்பாவின் பென்ஷன் பணம் சில லட்சங்களை அப்படியே சுவாகா செய்து விட்டனர். எங்களிடம் கணக்கு எதுவும் சொல்லவில்லை.”
“உன் வேதனை எனக்குப் புரிகிறது கிருஷ்ணா… ஆனா உன் அப்பா மீதான கோபத்திற்கும், நீ நெற்றியில் வீபூதி இல்லாதிருப்பதற்கும், சுலோகங்கள் சொல்லாது, கோவிலுக்கு வராமல் இருப்பதற்கும், பூனூலை கழட்டியதற்கும் என்ன சம்பந்தம்?
“என் அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டவைகள்தான் பக்தியும், சுலோகங்களும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும். அப்பாவே என் தம்பி வீடு கட்டியதை மூத்த மகனான என்னிடம் மறைத்தது எனக்கு பெரிய மனவலி. இந்த முப்பது வருடங்களில் – அப்பாவுக்கு பெங்களூர் போர்டிஸ் ஹாஸ்பிடலில் பைபாஸ் சர்ஜரி, அம்மாவுக்கு ஆஞ்சியோ என பார்த்து பார்த்து செஞ்சேன், அவ்வப்போது நிறைய பணம் அனுப்பிச்சேன். நிறைய தடவைகள் குடும்பத்தோட சேர்ந்து குதூகலமாக இருந்திருக்கேன்… ஆனா, என் தம்பி தன் காதல் திருமணத்திற்கு முன்னாலேயே வீடு கட்டிட்டாங்கிற உண்மை எனக்குத் தெரியாது. இவ்வளவு கசப்பான உண்மைகள் தெரிஞ்சப்புறம் என் அப்பாவிடமிருந்து கற்றுக் கொண்டவைகள் அனைத்தும் அசிங்கமாக இப்ப எனக்குப் படுகிறது. நெற்றியில் பட்டை பட்டையாக வீபூதியிட்டுக் கொண்டு சுலோகங்கள் சொல்லி அவர் ஊரை ஏமாற்றினார் என்று இப்ப தோன்றுகிறது, அதனால்தான் எனக்கு வெறுப்பு.. எல்லாத்தையும் உதறிட்டேன். பரஸ்பர நம்பிகையும், அன்பும், மரியாதையும், மனித நேயமும், உண்மையும்தான் பிரதானமே தவிர, கடவுள் பக்தியல்ல.”
“நீ ஏன் அவர் சாந்தி நகரில் நெலம் வாங்கியபோதே, யார் பெயரில் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?”
“அப்பா ரிடையர்ட் ஆனவுடன் வாங்கியதாலும், தம்பிக்கு அப்போது அறனூறுதான் சம்பளம் என்பதாலும், நான் அப்பாதான் வாங்கியிருப்பதாக நம்பினேன். அது தவிர கிரகப் பிரவேசம் பத்திரிக்கை என் அப்பாவின் பெயரில் இருந்ததால் நானும் என் இரண்டு தங்கைகளும் அப்பாதான் வீடு கட்டிக்கொண்டதாக நம்பினோம். யார் பெயரில் வீடு இருக்கிறது என்று கேட்பது அநாகரீகம் என்று அப்போது நாங்கள் நினைத்தோம்.”
‘உன் அம்மாகூட ஏன் இதை உன்னிடமோ, உன் தங்கைகளிடமோ சொல்லவில்லை?”
“அம்மாவிடம் அப்பா உண்மையை கண்டிப்பாக மறைத்திருப்பார். அம்மா ஒரு அப்பிராணி. என் இரண்டு தங்கைகளிடமும் அம்மா எதையும் மறைத்ததில்லை. அப்பாவுக்கு ஆண் ஆதிக்க திமிர் ரொம்ப ஜாஸ்தி, அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்…நாங்கள் அனைவரும் அவருக்கு அடங்கித்தான் பேசுவோம், நடந்து கொள்வோம்…எங்களுடைய பள்ளி விடுமுறை தினங்களில்கூட எங்களை நிம்மதியாகத் தூங்க விடாமல், காலை அஞ்சு மணிக்கு எங்களை எழுப்பி, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செய்து எங்களுக்கு பட்டை பட்டையாக வீபூதி இட்டு விடுவார். தானும் அங்கேயே சந்தியாவந்தனம் முடித்துக் கொள்வார்…தான் வச்சதுதான் சட்டம், அவரை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்கிற வரட்டுக் கெளரவம் ஜாஸ்தி.”
கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்னோட அப்பா தெரிந்தோ தெரியாமலோ எனக்கு செய்த ஒரே நன்மை சரஸ்வதியை எனக்கு கல்யாணம் செய்து வைத்ததுதான். அவள கல்யாணம் பண்ணிக் கொண்டபிறகுதான் நான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தேன். எனக்கு இன்னொரு பரம திருப்தி சுந்தர், நான் பெங்களூரில் கிரானைட்டால் கட்டப்பட்ட இவ்வளவு பெரிய சொந்த வீட்டில் குடியிருப்பதையும், தவிர வாடகைக்கு எட்டு வீடுகள், மூன்று கார்கள், மைசூரில் பார்ம் ஹவுஸ் என கொழித்துக் கொண்டிருப்பதை என் அப்பா உயிருடன் இருக்கும்போதே பார்த்து விட்டார். என் தம்பி வீடு கட்டியதை என்னிடம் மறைத்தவர் முன்பு, நான் நன்றாக வாழ்ந்து காட்டி அவர் முகத்திலும், என் தம்பி முகத்திலும் கரியைப் பூசி, பழி வாங்கிவிட்ட திருப்தி எனக்கு இப்போது.”
மணி எட்டானதும், மறு நாள் வருவதாகச் சொல்லி சுந்தர் கிளம்பிச் சென்றார்.
ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. கிருஷ்ணன் மாறவில்லை. சுந்தர் மட்டும் கோவில், சத்சங்க விஷயங்களில் தனியாக ஈடுபட்டார்.
அன்று காலை ஆறரை மணி இருக்கும். சுந்தரின் செல்போன் அடித்தது. எடுத்தார்.
“அங்கிள் நான் ராகுல் பேசறேன்… அப்பா இஸ் நோ மோர், ராத்திரி தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக். எதிராத்து டாக்டர் இப்பதான் கன்பார்ம் பண்ணார்.”
சுந்தர் பதறியடித்துக் கொண்டு சென்றார். கிருஷ்ணனின் உடல் கூடத்தில் தரையில் கிடத்தப் பட்டிருந்தது.
ராகுலிடம், “வாத்தியாருக்கு நான் போன் பண்ணட்டுமா?” என்றார்.
“வேண்டாம் அங்கிள், அப்பா மூணு மாசத்துக்கு முன்னாலயே அம்மாகிட்டயும், எங்கிட்டயும் தன் சாவுக்குப் பிறகு எந்த விதமான சடங்குகளோ, கிரியைகளோ செய்யக் கூடாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். தன் உடம்பை பெங்களூர் மெடிகல் காலேஜுக்கு அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டார். அவர்களுக்குத்தான் நான் இப்ப போன் பண்ணனும்.”
அன்று மாலையே ராகுலின் இரண்டு மாமா, இரண்டு அத்தைகள் சென்னையிலிருந்து வந்தனர். ராகுலின் பெரிய மாமா, கிருஷ்ணனுக்கு ஈமச் சடங்குகள் செய்தால்தான் அவரது ஆத்மா சாந்தியடையும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராகுல் பிடிவாதமாக மறுத்து விட்டான்.
மறு நாள். காலை பத்து மணிக்கு பெங்களூர் மெடிகல் காலேஜிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து நின்றது. உடனே அங்கு ஒரு அமானுஷ்யமான அமைதி நிலவியது. ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிய நான்கு பேர் ஒரு பெரிய பள பளப்பான அலுமினியப் பெட்டியை வீட்டுக்குள் கொண்டு வந்து அதைத் திறந்தனர். உள்ளேயிருந்த பெரிய பாலிதீன் கவரை பிரித்தனர். கவருக்குள் வெள்ளை நிற கெமிக்கல் பூசப் பட்டிர்ந்தது. கிருஷ்ணன் உடலை அதற்குள் கவனமாக திணித்து ஜிப்பை சர்ரென்று இழுத்து மூடினர். பத்திரமாக அலுமினியப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினர்.
கிருஷ்ணனின் சடலத்தை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக சில பேப்பர்களில் சீல் வைத்து ஒப்பமிட்டு ராகுலிடம் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸில் அலுமினியப் பெட்டியை எற்றிக் கொண்டு கதவை அடித்துச் சாத்தினர்.
ராகுல் வீட்டு வாசலுக்கு வந்து, ஆம்புலன்ஸ் தெரு முனை திரும்பும் வரை சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு வீட்டினுள் வந்து “அப்பா” என்று பெருங்குரலெடுத்து வெடித்து அழுதான்.
என்னவொரு முட்டாள்தனமான கருத்து? அப்பா மீது கோபம் வந்தால் ஆண்டவன் மீதுள்ள நம்பிக்கையும் பண்பாடும் போக வேண்டுமா? மிஸ்டர் கண்ணன், இந்துப் பண்பாட்டை ஒழிக்க நினைக்கும் உங்கள் கிறிஸ்தவ புத்தி தெளிவாகத் தெரிகிறது.