ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவுக்கு இல்லை. ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே தெரியும் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எதிர் இருக்கையில் அம்மாவின் அருகே படுத்து இருந்த குழந்தை ஒன்று, ஏ.சி-யின் குளிர் தாங்காமல் நெளிந்துகொண்டு இருந்தது. அப்பர் பெர்த்தில் இருந்து அதைப் பார்த்த அப்பா, எழுந்து வந்து குழந்தைக்கு போர்வை போர்த்தினார். மனைவியின் அருகில் அமர்ந்து பாதி வெளிச்சத்தில் மனைவியையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்த அப்பாவை தேவாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. ரயில் ஏறியதில் இருந்தே அவரைக் கவனித்துக்கொண்டு இருக்கிறாள். மிகவும் அன்பான, அக்கறையான மனிதராக இருந்தார். இரவு குழந்தைக்கு உணவு ஊட்டும்போது, இடையிடையே மனைவிக்கும் ஊட்டிக்கொண்டு இருந்தார். அந்தப் பெண் சுற்றி இருப்போரைக் கூச்சத்துடன் பார்த்தது. அவரின் அன்பு அதை எல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. குழந்தையைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றது, படுக்கையை விரித்தது, கதை சொல்லித் தூங்கவைத்தது என எல்லாம் அவர்தான். இடையிடையே சக பயணிகளிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டும் இருந்தார்.
ரயிலில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, தேவா ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாள். ”என்னம்மா, நீ சாப்பிடாம இருக்கே, வந்து சாப்பிடு.”
”இல்லைங்க, இருக்கட்டும். என்கிட்ட பழம், பிஸ்கட் இருக்கு.’
”பழமும் பிஸ்கட்டும் ஒரு சாப்பாடா, இட்லி சாப்பிடு’ என்றார். முன்பின் தெரியாத யாரோ ஒருவர், ஒருநாள் பயணத்தில் காட்டும் அன்பும் அக்கறையும் தேவாவை நெகிழவைத்தது.
சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே, ”யார் குடுத்தாலும் வாங்கிச் சாப்பிடறதா, மயக்க மருந்து எதாவது கலந்திருந்தா என்ன செய்வ?’ என்று கிண்டலடித்தார். ”குழந்தைகளை நேசிக்கிற ஒரு அப்பா, அதெல்லாம் செய்வார்னு நான் நம்பலை’ என்று தேவா பதில் சொன்னபோது, அந்தப் பெண்ணின் முகம் ஒரு நொடி பிரகாசித்து அடங்கியது. அவள் தேவாவை ஸ்நேகத்தோடு பார்த்தாள். படுத்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்து அவர் குழந்தைக்குக் கதை சொன்னபோது, அவரின் மனைவியும் ‘உம்’ சொல்லிக்கொண்டு இருந்தாள். தேவாவும் மனசுக்குள் ‘உம்’ சொல்லிக்கொண்டாள்.
”என்னம்மா மணி ரெண்டாகுது, நீ இன்னமும் தூங்கலையா?”
”இல்லங்க, தூக்கம் வரலை.”
”உனக்கும் வேணும்னா ஒரு கதை சொல்லவா?” – அவர் இயல்பாகத்தான் கேட்டார்.
”ஒரு கதையில் எல்லாம் தூங்க மாட்டேன் நான், பரவாயில்லையா?” அவர் சிரித்தபடியே எதிரே அமர்ந்தார். அதிகாலை நான்கு மணி வரை பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு அந்தப் பெண்ணோடு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது என்பதும், அந்தக் குழந்தை அந்தப் பெண்ணின் முதல் கணவனின் குழந்தை என்பதும் தேவாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்பா என்கிற ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் இருக்க முடியாது. உலகில் ஒவ்வோர் அப்பாவும் ஒவ்வொரு ரகம். தேவாவைப் பொறுத்தவரை அப்பா என்றால் கம்பீரம். அவளது அப்பா அப்படி இல்லாததுகூடக் காரணமாக இருக்கலாம். அப்பாவின் தோள் சாய்ந்து ஆறுதல் தேடுபவர்கள் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள்.
சிறு வயதில், அப்பாவைவிட வேகமாக நடப்பதும், அவரைவிட உயரமாக வளர்வதும்தான் அவளது லட்சியமாக இருந்தது. வளர வளர, அவளது அப்பா பற்றிய எண்ணங்களும் கற்பனைகளும் வேறாக இருந்தன. அவளது எண்ணங்கள் வளர்ந்த அளவுக்கு அப்பா வளரவில்லை. அவர் அப்படியே இருந்தார். ஆறாவது படிக்கும்போது, அப்பாவைவிட வேகமாக அவளால் நடக்க முடிந்தது. இன்னும் சில வருடங்களில் அவர் உயரத்தையும் கடந்துவிட முடியும் என உணர்ந்தபோது, அப்பா அவளை வெகுவாக ஏமாற்றி இருந்தார்.
குட்டிச்சாத்தானும் பனைமரத்தில் சுண்ணாம்பு கேட்ட இசக்கியின் கதையும் தேவாவுக்கு நிறைய முறை சொன்ன அப்பா. சிறு வயதில் அந்தக் கதைகள் அவளைத் திகிலடையவைத்தது உண்டு. தலை இல்லாத குட்டிச்சாத்தான் வீட்டின் பின்புறம் வழியாக ஒருநாள் வரும் என்று பால்யத்தில் அவள் உறுதியாக நம்பியவள். அப்படி வர வாய்ப்பு இல்லை என்று தெரிந்த ஒரு நாளில், அப்பாவின் கதைகள் மீதும் ஈர்ப்பு இல்லாமல் போனது. ஆனால், அப்பா அப்போதும் குட்டிச் சாத்தானை நம்பிக்கொண்டு இருந்தார்.
தேவாவின் விருப்பங்களும் அப்பாவின் விருப்பங்களும் முரண்பட ஆரம்பித்தன. அவருக்கு வீடே உலகம். வீட்டைத் தாண்டிய உலகத்தை தேவா பார்க்க விரும்பியபோது, அவர் அனுமதிக்க மறுத்தார். பள்ளி தாண்டி கல்லூரிக்குச் சென்றபோது, அவர் இன்னமும் கடுமையானார். வீட்டில் இருந்து கல்லூரிக்கு இரண்டரை மணி நேரப் பயணம். விடுதியில் சேர்க்கப் பயந்து, தினமும் வீட்டுக்கும் கல்லூரிக்குமாக ஐந்து மணி நேரம் அலையவைத்தபோது, தேவாவுக்கு அப்பாவைப் பிடிக்காமல்போனது.
நாலு மணிக்கு கல்லூரியில் இருந்து கிளம்பினால், ஏழு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் தாமதமானால், பேருந்து நிலையத்தில் குறுக்கும் நெடுக்கும் அலைந்துகொண்டு இருப்பார். டயர் பழுதாகி பேருந்து நடுவழியில் நின்றபோது, நெடு நேரமாக பேருந்து வராத ஒரு நாளில், மழையால் பேருந்து தாமதமானபோது என, தான் சம்பந்தப்படாத எல்லாத் தாமதங்களுக்கும் அப்பா கோபம்கொண்டபோது, அந்த அப்பாவைவிட்டுத் தொலைந்து போனால் போதும் என்று இருந்தது தேவாவுக்கு.
தூங்கும் நேரம் தவிர, எல்லா நேரத்திலும் வாழ்க்கை பற்றிய பயம் அப்பாவை ஆக்கிரமித்து இருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் துணிவு அவரிடம் இல்லை. தன் எல்லா பயங்களையும் குழந்தைகள் மேல் திணித்த அப்பா. தேவாவுக்கு நினைவு தெரிந்து, அவள் வீடு மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை. தான் வேலை செய்யும் இடத் தில் ஒரு பிரச்னை என்றால், அதை அங்கேயே சமாளிக்க அப்பாவுக்குத் தெரியாது. வீட்டில் மணிக்கணக்காக அந்தப் பிரச்னை குறித்துப் பேச்சு நடக்கும். அந்தப் பேச்சும் ஒருநாளும் தீர்வை நோக்கிச் சென்றது இல்லை. பிரச்னையைச் சுற்றியே, எதிர்மாறாக பேசிக்கொண்டு இருப்பார். இறுதியில், சாப்பிடாமல் மொட்டை மாடியில் போய் அமர்ந்திருப்பார். தேவா போய் அவரைச் சாப்பிட வரச் சொல்லிக் கெஞ்சுவாள். அவரது பதில் அவளை மூர்க்கத்தனமாகத் தாக்கும். இழவு நடந்த வீடுபோல் அனைவரும் சாப்பிடாமல் தூங்குவார்கள். தேவா, தன் சிறு வயதை நினைத்தால், பெரும் பாலும் இதுபோன்ற எண்ணங்களே கசப்பாக மூளை முழுவதும் நிறைந்து இருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் ஆறுதலாக, தேவாவுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். திருநெல்வேலி பொறியியல் கல்லூரி மாணவன். இருவரும் பேருந்து நிலையத்தில் சந்திப்பார்கள். ஒரு மணி நேரத்தில் அவன் இறங்க வேண்டிய இடம் வரும். அவன் இறங்கிய பிறகும், அவளது பயணம் ஒரு மணி நேரம் தொடரும். வீட்டுக்கும் கல்லூரிக்கும் பயணத்திலேயே நேரம் சென்றுகொண்டு இருந்ததில், நூலகத்தில் இருந்து அவன்தான் புத்தகங்கள் எடுத்துத் தருவான். அவன்தான் வண்ணதாசனை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.
அப்பாவின் மேல் இருந்த கோபம், வண்ணதாசனின் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. வண்ணதாசன் தனக்கு அப்பாவாக இல்லாமல் போனதை தேவாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மழை பெய்யும் ஒரு நாளில், ஆற்றங்கரையில் குடை இல்லாமல் வண்ணதாச னோடு நடந்து போக வேண்டும், குளக்கரையில் துள்ளும் தவளையைக் காண்பித்து, அவர் அவளுக்குக் கதை சொல்வார். இந்த நினைப்பே தேவாவுக்குக் கண்ணீரை வரவழைத்தது.
அந்த நண்பனை வீட்டுக்கு அழைத்திருந்தாள். இதுவரை அவளது நண்பர்கள் என்று யாரும் வீட்டுக்கு வந்தது கிடையாது. அவளுக்கு நண்பர்கள் இருப்பார்கள் என்றும் வீட்டில் யாருக்கும் தெரியாது. பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஒருநாள் வரும் வழியில், ”என்னம்மா, இப்பதான் காலேஜ்ல இருந்து வர்றியா?” எனக் கேட்ட பக்கத்து வீட்டு அண்ணாவுக்கு, ”ஆமாண்ணா” என்று பதில் சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது, அப்பா பின்னால் நின்றிருந்தார். அந்த ஒற்றை வார்த்தை பதிலுக்கு வீட்டில் ஒரு மணி நேரம் அழுது அவள் தன்னை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதுமே, தெரிந்த ஆண்கள் யாரும் எதிரில் வந்துவிடக் கூடாதே என்று ஒவ்வொரு நாளும் தேவாவுக்குப் படபடப்பாக இருக்கும்.
‘நான் உங்க வீட்டுக்கு வரலாமா?’ என்று நண்பன் கேட்டதும், மறுக்க முடியவில்லை. ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனை வீட்டுக்கு வரச் சொன்னாள். முந்தின நாள் இரவு தேவாவுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் காலை பத்து மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். அவன் வரப்போவதை வீட்டில் சொல்லும் தைரியம்கூட இல்லை. முதல்முறையாக ஒரு நண்பன் வருவதால் அவனை வீட்டில் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ எனப் பயம். அவனது உறவினர்கள் யாராவது இறந்துபோய், அவன் வராமல் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் தேவாவுக்குத் தோன்றியது.
அவளது துரதிருஷ்டம் சரியாக பத்தே கால் மணிக்கு அவன் வீட்டின் முன் வந்து நின்றான். ”உள்ள வா…” அவளது வரவேற்பு அவளுக்கே கேட்கவில்லை. பயத்தில் உடலில் சகலமும் நடுங்கியது.
”அம்மா, இது என் ஃப்ரெண்ட், திருநெல்வேலி இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிறான். வள்ளியூர்லதான் வீடு.”
”ம். வாப்பா…” இவ்வளவு கடுமையான ஒரு வரவேற்பை அவன் வாழ்க்கையில் அதற்குப் பின்னும் கேட்கக் கூடாது. ”எங்க தேவா, உன்னோட அக்காவும் தங்கச்சியும்?” அவர்கள் அவன் குரலைக் கேட்டவுடனே அறைக்குள் ஒளிந்துகொண்டார்கள். எத்தனை அழைத்தும் வெளியே வரவே இல்லை. தேவாவுக்கு அவமா னமாக இருந்தது. ”அவங்க உன்னைப் பார்க்கக் கூச்சப்படுறாங்க” எனச் சொல்லும்போதே அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ”பரவாயில்ல, நான் அவங்களை உள்ளே வந்து பார்க்கிறேன்’- அவன் எழுந்ததும், அம்மா சமையலறைக்குள் இருந்து தேவாவைக் கடுமை யாக முறைத்தாள்.
”ஐயோ, வேணாம். அவங்க ரொம்பக் கூச்சம். நீ போறதுக்குள்ள அவங்க வெளியே வருவாங்க.” அவனுக்கு வீட்டில் அசாதாரண சூழ்நிலை எதையோ புரியவைத்திருக்கும். அமைதியாக அமர்ந்தான். அவனுக்கான டீயை எடுக்க சமையலறைக்குள் நுழைந்த நேரத்தில், அம்மா நறுக்கென்று தேவாவைக் கிள்ளினாள்.
”என்ன இது புதுப் பழக்கம், அப்பா வந்தா என்ன நடக்கும் தெரியுமா?”
அவள் வலியையும் கண்ணீரையும் மறைத்து டீயை அவன் முன் வைத்து, எதிரில் அமர்ந்தாள். அவனை நேருக்கு நேராகப் பார்க்க அவமானமாக இருந்தது. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த நேரம், அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.
தேவா அவனை அறிமுகப்படுத்தியதும், அவன் அருகில் அமர்ந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அவரின் எல்லாக் கேள்விகளும், தேவாவுக்கும் அவனுக்குமான பழக்கத்தை அறிந்துகொள்வதன் பொருட்டே கேட்கப்பட்டது. அவன் கிளம்ப எத்தனித்தபோது, ”சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” எனஉட்கார வைத்தார்.
அப்பாவே அவன் அருகில் அமர்ந்து பரிமாறினார். மூன்றாவது கவளம் சோறு அவன் வாயில் இருக்கும்போது, ”எனக்கு மூணு பெண் குழந்தைங்க. அக்கம் பக்கத்தில் என் பிள்ளைங் களைப்பத்திக் கேட்டா, தங்கம்னு சொல்வாங்க. இந்த தேவா மட்டும்தான் அப்பப்ப எனக்கு நெஞ்சு வலி வர வைக்குறா. இனி, இந்த மாதிரி வீட்டுக்குஎல்லாம் வராதப்பா. பஸ்ஸில் பார்த்துப் பேசற பழக்கமும் வேண்டாம். வேற ஊர்ல படிச்சாலும், பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற காலேஜ்னு சொல்லித்தான் அவளை அங்கே சேர்த்தேன். நீ வேற எங்கியோ ஒரு காலேஜ்ல படிக்கிற. உனக்கு அவகிட்ட பாடம் பத்திக்கூடப் பேச வேண்டியிருக்காது”- அவர் சொல்லிக் கொண்டே போனார்.
தேவாவுக்கு அவள் பொருட்டு, அவள் நண்பன் அவமானப்படுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. அடுத்த நான்காவது நிமிடம் அவன் விடைபெற்றுக் கிளம்பினான். அவனை வாசல் வரை வழியனுப்ப முயன்ற தேவாவை அம்மா வின் உறுமல் ஒலி அடக்கியது. அவன் கிளம்பிய சில நிமிடங்களில், அடுத்த தெருவில் வசிக்கும் அம்மாவின் தோழி, கடைக்குச் செல்வதற்காக தேவா வீட்டைக் கடந்தவள், ஒரு நிமிடம் நின்று ‘தேவாவைத் தேடி ஒரு பையன் வந்தானே, சரியா வீட்டைக் கண்டுபிடிச்சு வந்தானா?’ எனக் கேட்டுச் சென்றாள்.
அந்த விநாடியில் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தது. ”எனக்கு ஏதோ பண்ணுது…” எனக் கட்டிலில் படுத்தார். ”ஐயோ, என் பொண்ணைத் தேடி ஒரு பையன் வந்ததை அவ ஊர் முழுக்கச் சொல்லியிருப்பா, நாளைக்கு நான் மூணு பொண்ணுங்களுக்கும் எப்படிக் கல்யாணம் பண்ணிவைப்பேன்” என அரற்றத் துவங்கினார். மொத்தமாக எல்லோரும் பயந்து போய் அழுததில், எதிர் வீட்டில் ஒருவர் வேடிக்கை பார்க்க வெளியே வந்தார். தேவாவை ஓங்கி அறைந்த அம்மா, மொத்தமாக எல்லோரையும் அடக்கினாள். அப்பாவின் நெஞ்சு வலி அடங்க அரை மணி நேரம் ஆனது.
அதன் பின்னான வீட்டின் அறிவுரைகளும், வசவுகளும், ஓங்கி விழுந்த அறையும் அவளை எதுவும் செய்யவில்லை. இருந்த ஒரே நண்பனை இழந்த துக்கம். அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரிக்குச் செல்ல வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. கெஞ்சல்கள், மன்னிப்புக் கோரல் எனப் போராட்டத்துக்குப் பிறகு, மூன்றாவது நாள்தான் தேவா கல்லூரிக்குச் சென்றாள்.
மாலையில், திரும்பும் வழியில் வழக்கம்போல் நண்பன் காத்துக்கொண்டு இருந்தான். இனி, பேசவே மாட்டான் என நினைத்தபோது, சிரித்தபடி அருகில் வந்தான். ”உனக்காகத்தான் வாங்கினேன்” என நான்கைந்து புத்தகங்களைக் கொடுத்து வழக்கம்போல் பேசிக்கொண்டே வந்தான். இறங்குவதற்கு முன், ”தேவா… உன் வீட்டைவிட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறிடு” என்று சொல்லிப் போனான். அவன் சொன்னது போலவே, தேவாவின் ஒரே லட்சியமும் அவளது ஊரைவிட்டு வெளியேறுவதாகத்தான் இருந்தது.
முதுகலை படிக்கும்போது, ஒரு நேர்காணலுக்காக சென்னை செல்ல வேண்டியிருந்தது. தேவாவோடு அப்பாவும் வந்திருந்தார். ஹோட்டல் ஒன்றின் ஏழாவது மாடியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்பா ஒரு சேரில் அமர்ந்து நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் அவர் பங்குக்கு நேர்காணல் நடத்திக்கொண்டு இருந்தார். அது புதிதாகத் தொடங்கவுள்ள ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்கான நேர்காணல். ”இங்கே வந்திருக்கிற மத்த பொண்ணுங்களைப்போல நான் என் பொண்ணை வளர்க்கலை, சாயங் காலம் ஆறு மணியானா வேலையில இருந்து வீட்டுக்கு அனுப்பிடணும். எனக்கு இந்த மாதிரி வேலையே பிடிக்கிறதில்லை. இந்த வேலை கிடைக்கலைன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்” இப்படியாக நீண்டது அப்பாவின் நேர்காணல்.
அதன் பிறகு, அவர்கள் தேவாவைப் பார்த்த பார்வையில் ஏளனம் இருந்தது. ஆனாலும், அந்த வேலை கிடைத்துவிட்டது. இவ்வளவு தூரத்தில், இப்படி அலையுற ஒரு வேலைக்குப் போகணுமா, ஒண்ணும் வேண்டாம் என வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இந்த முறை தேவா கேட்ப தாக இல்லை. கிளம்பியே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருந்தாள்.
அழுகை, கெஞ்சல், பட்டினி என அஹிம்சைப் போராட்டங்கள் எதுவும் பயன் தராத நிலையில், அவள் கடைசியாய் கெரசின் கேனைக் கையில் எடுத்தாள். ”என்னை வேலைக்கு அனுப்பலைன்னா, நான் செத்துப் போறேன்…” என்கிற மிரட்டல் பலன் தந்தது.
சென்னை விடுதி அறையில் தூங்கிய முதல் நாள் தேவாவுக்கு மிதப்பதுபோல் இருந்தது. சுதந்திரத்தின் அவசியம் அடைபட்டவர்களுக்கே புரியும். தினமும் வீட்டுக்கு போன் பேசும்போது, அவர்கள் சொல்லும் அறிவுரைகள் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தன. வந்த இரண்டே மாதங்களில் நிறைய நண்பர்கள் வேறு. தன்னை யாரும் கண்காணித்துக்கொண்டு இருக்கவில்லை என்கிற நினைப்பே அவளுக்குப் பெரும் ஆசுவாச மாக இருந்தது.
அதிலும் அலுவலகத்தில் பணிபுரியும் சதீஷ், ரொம்பவே நெருக்கமாகப் பழகினார். சென்னை புதிது என்பதால், அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தார். நிறையப் படிப்பவர், நிறைய விஷயங்கள் தெரிந்தவர் என்பது தேவாவுக்கு அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது. அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் சென்னை முகவரியையும் சதீஷ்தான் தேவாவுக்குக் கொடுத்தார்.
மனித உறவுகள் குறித்து அக்குவேறு, ஆணி வேறாக அலசுபவர் அந்த எழுத்தாளர். இவ்வளவு நுட்பமாகவும், உளவியலோடும் மனித மனங்களை அலச முடியுமா என்று தேவாவுக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவரைப் பார்க்க வேண்டும் என்பது ஊரில் இருக்கும்போதே அவளது ஆசைகளில் ஒன்று.
சென்னை வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் நேரம் கிடைத்தது. போன் செய்து கேட்டபோது, உடனே வரச் சொன்னார் எழுத்தாளர். தேவா குறித்து நிறையக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் பேச்சு பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. தேவாவுக்கு ஆன்மிகத்தில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால், மனதுக்குப் பிடித்த எழுத்தாளர் பேசும்போது பிடிக்காத விஷயம்கூட கேட்கும்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் பதில் சொல்ல விரும்பாமல், வெறுமனே ‘உம்’ கொட்டிக்கொண்டு இருந்தாள்.
மதிய உணவுக்குப் பின் அவர் பேச்சு உடல் சார்ந்து திரும்பியது. உடல் என்பது ஒன்றுமே இல்லை என்றார். அந்த ஒன்றுமே இல்லாத விஷயத்தைப்பற்றி ஒன்றரை மணி நேரம் பேச வேறு செய்தார். தேவாவுக்குக் கொஞ்சம் குழப்பம் தோன்ற ஆரம்பித்தது. அவள் இடையிடையே புகுந்து, பேச்சை அவர் கதைகளையும், கதாபாத்திரங்களையும் நோக்கித் திருப்பினாள். அவர் வெகு சாமர்த்தியமாக அந்தக் கதாபாத்திரங்களின் உடல் இச்சைகள் குறித்து பேச்சைத் திசை மாற்றினார்.
தேவா அசௌகரியமாக உணர்ந்ததை அவர் கவனித்திருக்கக் கூடும். அவளை உள் அறைக்கு அழைத்துச் சென்றார். கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்தினார். அவளுக்கு எதிராக நின்றுகொண்டார். தேவாவுக்குப் படபடப்பு இன்னமும் அதிகமானது. ஆனாலும், அப்பாவைவிட ஐந்து வயது அதிகமான ஒருவரிடம் இவ்வளவு தூரம் பயப்படுவது தேவையற்றதோ எனவும் தோன்றியது.
”ஏன் கண்ணம்மா, இவ்வளவு படபடப்பாவும், அலைபாயுற மனசோடவும் இருக்க… அமைதியா இருக்கணும். கண்ணை மூடு… நான் உனக்கு ஒரு சிம்பிளான யோகா சொல்லித் தரேன்.”
”நான் இன்னொரு நாள் வரேன் சார், எனக்கு ஹாஸ்டல் போகணும். வேலை இருக்கு.”
”எனக்கும் எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா, உன்னைப் பார்த்தப்ப நீ நல்லா இருக்கணும்னு தோணிச்சு. என் குழந்தை இப்பிடி அமைதி இல்லாம இருக்கறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு…” அவர் கைகள் அவள் முகத்தை வருடி, மார்பை நோக்கி இறங்கியது.
”படபடப்பில் உடம்பு எப்படி ஆடுது பாரு… இதை ஈஸியா சரிபண்ணிடலாம்.”
”ச்சீ…’ தேவா அவர் கைகளைத் தள்ளிவிட்டுக் கதவைத் திறந்து வெளியேறினாள். விடுதிக்குச் செல்லப் பிடிக்கவில்லை. நேராக கடற்கரைக்குச் சென்று உச்சி வெயிலில் சுடும் மணலில் பேசாமல் அமர்ந்து இருந்தாள். மனம் முழுக்கக் கசப்பாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. தான் நம்பிய ஒருவரின் இயல்பு இப்படி இருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. அவர் அவளை வெகுவாக ஏமாற்றி இருந்தார். பார்க்க நேரம் இல்லை என்று சொல்லி சந்திப்பை மறுத்திருந்தாலோ… நான் பெரியவன் ஒரு சின்னப் பெண்ணிடம் என்ன பேச்சு என்று அவர் அலட்டி இருந்தாலோகூடப் பரவாயில்லை எனத் தோன்றியது. இவ்வளவு நாள் வராத குழப்பமும், அவநம்பிக்கையும் முதன்முதலாக மனதில் தோன்றியது. வீட்டின் நினைவு வந்தது. அப்பா வின் பயத்துக்கான காரணம் கொஞ்சம் புரிவதுபோல் இருந்தது.
அந்தக் குழப்பம் வீட்டை நோக்கித் தள்ளிவிடுமோ என்று யோசித்தபோது, கொஞ்சம் தெளிவு வந்ததுபோல் இருந்தது. அமைதியாகக் கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தேவா பிறந்த ஊரில், வளர்ந்த ஊரில் என எல்லா இடங்களிலும் அவளுக்கு வெகு அருகில் கடல் இருந்தது. சென்னையிலும் நினைத்த நேரத்தில் கடல் பார்க்கலாம் என்கிற நினைப்பே அவள் தனிமையை வெகுவாகப் போக்கியது. எல்லா துன்பங்களையும் ‘ஹா’வெனக் கை நீட்டி வாங்கிக் கரைத்து விடும் தன்மை கடலுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் அவளின் துன்பங்களை இந்த வங்கக் கடலும், பிறந்த ஊரின் அரபிக் கடலும் நிறையவே தெரிந்துவைத்து இருந்தது.
அவள் அங்கே வந்து வெகுநேரம் ஆகியிருந்தது. திரும்பிப் பார்த்தபோது, லுங்கி கட்டிய ஒருவன் அவளையே பார்த்துக்கொண்டு பின்னால் நின்றிருந்தான். எவ்வளவு நேரமாக நிற்கிறானோ என யோசித்த விநாடியில், அங்கே இருந்து எழுந்து, ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்றாள். அவரின் சில புத்தகங்கள் சூட்கேஸில் இருந்தன. அதை எடுத்து ஜன்னல் வழியாக எலெக்ட்ரிக் டிரெயினை வேடிக்கை பார்த்தவாறே கிழித்து எறிந்தாள்.
இரண்டு வாரங்கள் கழித்து சதீஷோடு பேசுகையில், அவர் எதேச்சையாக எழுத்தாளரைப்பற்றிக் கேட்க, நடந்ததை அப்படியே கூறினாள் தேவா. ”ஏன் இப்படி இருக்காங்க சதீஷ்?”
”எப்படி இருக்காங்க? நீ கொஞ்சம் ரொம்பவே எமோஷனலாகிற தேவா. உனக்கு உடம்பு பொத்திவைக்கிற விஷயமா இருக்கு. நீ நிறைய மாறணும். எல்லா மாற்றத்துக்கும் தயார் ஆகணும்…”
”எல்லாத்துக்கும்னா?”
”என்னோட பைக்குல வர்ற, இதோ என்னோட ஃப்ரெண்டைப் பார்க்க வர்ற, என்னோட நிறையப் பேசற, என்னை உனக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன். நான் உனக்கு யாரு தேவா?”
”இதென்ன கேள்வி, நீங்க என்னோட ஃப்ரெண்ட்.”
”அந்த ரைட்டருக்கு உன் மேல ஏதாவது ஈர்ப்பு தோணியிருக்கலாம். யு நோ தேவா, எனக்குக்கூட உன் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கு. ஆனா சொன்னா, இந்த பட்டிக்காடு கோச்சுக்குமேன்னு அமைதியா இருக் கேன்”- சதீஷ் சிரித்தார்.
”சதீஷ் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி” – தேவா குழப்பமாகவும் பலவீனமாகவும் பதில் சொன்னாள்.
”ஸோ, வாட்… அதுக்கும் நாம பேசிட்டிருக்கிற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் தேவா? நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்கவே இல்லையே. நீ நிறைய விஷயத்தில் ரொம்ப விசாலமா சிந்திக்கிற… சில நேரங்களில் ரெண்டு நூற்றாண்டு பின்னாடி போய் நிக்கிற. உன்கிட்ட ஓப்பனாவே சொல்றேன்… தேவா ஐ வான்ட் யூ.”
தேவாவுக்குத் தலை சுற்றியது. ”நான் உங்களை எவ்வளவு நம்பினேன் தெரியுமா? நல்லவர்னு நினைச்சேன்.”
”ஹே தேவா… இப்பவும் நான் நல்லவன்தான் தேவா!”
தேவா எழுந்தாள். அவளுக்கு உடனடியாக அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அப்பாவை நினைத்த விநாடி கண்ணீர் பெருக் கெடுத்து வழிந்தது.
மறுநாள் மாலை ஊருக்கு ஒரு டிரெயின் டிக்கெட் எடுத்தாள். கிளம்பும் வழியில்தான் இப்படி ஓர் அழகான கதை சொல்லும் அப்பாவைச் சந்திக்க நேரிட்டது.
இப்போது குழந்தை பக்கத்தில் அப்பா படுத்திருக்க, அந்தப் பெண் முகம் கழுவிவிட்டு, அவள் அருகில் வந்து அமர்ந்தாள். டிரெயின் திருநெல்வேலியைத் தாண்டி கன்னியாகுமரி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது.
நாகர்கோவிலில் ஒரு திருமணத்துக்குப் போவதாக அந்தப் பெண் சொன்னாள். பேச்சின் தொடர்ச்சியாக, ”எனக்குக் குழந்தை பிறந்ததும் கர்ப்பப் பையில் கேன்சர் வந்து அதை எடுத்துட் டாங்க. என் மாமியார் என்னை வீட்டோடு சேர்க்காம புருஷன்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. அப்புறம் ரெரண்டரை வருஷம் அம்மா வீட்டில்தான் இருந்தேன். என் அண்ணனோட ஃப்ரெண்ட் இவரு… என்னைப்பத்தி நல்லாத் தெரிஞ்சு, அவரே வந்து கல்யாணம் பண்ணினார். இந்த மூணு மாசத்தில் உடம்புரீதியா எங்களுக்குள் ஒண்ணும் நடக்கலை. எங்களுக்குக் குழந்தை யும் பிறக்காது. அதைப்பத்தி கவலையேபடாம இது எனக்காகவும் பிள்ளைக்காகவும் உயிரைக் கொடுக்குது”- அவள் மெள்ள அழுதாள்.
”நீங்க ரொம்ப லக்கி” என்று சொன்ன தேவா, அந்தப் பெண்ணை அணைத்துக்கொண்டாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் கசப்பு சட்டென விலகியதுபோல் இருந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், ”எல்லாரும் எழுந்தாச்சா… என்னை எழுப்பி இருக்கலாமே, காபி எதுவும் குடிச்சியாப்பா? இந்தப் பிள்ளை ராத்திரி முழுக்கத் தூங்காம முழிச்சிட்டு இருந்தது. நான்கூட உன்னைப்பத்தி கதை சொல்லிட்டு இருந்தேன்” என உரையாடலைத் தொடர்ந்தார்.
தேவாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் காபி வாங்கிக் கொடுத்தார். காபி ஒரே கசப்பு என அந்தப் பெண் சொன்னதும், ”வாழ்க்கை மாதிரிதான் காபியும். கசப்பு இல்லாட்டி எப்படித்தான் இனிப்பைத் தெரிஞ்சிக்கிறது?” என்று சிரித்தார். தேவாவுக்கு அந்தப் பதம் மிகப் பிடித்திருந்தது. ”கசப்பு இல்லாவிடில் எப்படித்தான் இனிப்பைத் தெரிந்துகொள்வது?” இரண்டு நாட்களுக்கு பிறகு அவள் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தேவா அந்தக் குடும்பத்திடம் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் பரிமாறி விடைபெற்றாள். தேவாவை அழைத்துப் போக அப்பா ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். அப்பாவிடம் அந்த மனிதர், ”நல்ல தங்கமான பொண்ணுங்க” என்று சொல்லி சிரித்தார். அப்பா பெருமிதத்தோடு தேவாவைப் பார்த்தார்.
ஆட்டோ ஏறியதும், தேவா அப்பாவின் கரம் பிடித்து தோளில் சாய்ந்தாள். வளர்ந்த பெண் அப்படிச் செய்வது அவருக்குக் கூச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவர் நெளிந்ததில் தெரிந்தது. ”நீ இல்லாம வீடு நல்லாவே இல்லடா, எப்பவும் பேசிட்டே இருப்பியா, இப்ப பேச ஆளே இல்லாம, வீடு ஏதோ போல இருக்கு. உனக்கு எங்கயும் தனியாப் போகக்கூடத் தெரியாதே, இது தனியா என்ன பண்ணும் அங்கன்னு பதறுது எனக்கு…” அப்பா கண் கலங்கினார்.
உலகின் மிகப் பாதுகாப்பான இடத்தில் இருப்பதுபோல் உணர்ந்தாள் தேவா. ”லவ் யூ அப்பா…”
முதல் முறையாக தேவாவுக்கு அப்பாவை ரொம்பப் பிடித்திருந்தது!
– மார்ச் 2011