அப்பா..! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 12,084 
 
 

சந்திரன் புறப்பட்டுச் சென்ற அடுத்த வினாடி அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றான் 25 வயது இளைஞன் அருண்.

“அம்மா..! அம்மா!”

தோசை சுடுவதை நிறுத்தி..

“என்னடா..?” திரும்பிப் பார்த்தாள் தேவகி.

“அப்பா என்ன சரியான கிறுக்கா..?”

மகன் கேள்வி புரியாமல்…

“ஏன்…?” குழப்பமாகப் பார்த்தாள் அவள்.

“இப்போ எங்கே புறப்பட்டுப் போறார்..?”

“திருமணத்துக்கு..”

“யார் வீட்டுத் திருமணம்..?”

“அடுத்தத் தெரு அன்பரசன் வீட்டுத் திருமணம்.”

“அவர் யார்..?”

விளங்காமல் பார்த்தாள்.

“நமக்கு உறவா..?”

“இல்லே..”

“அப்புறம்..? ”

“அப்பாவுக்குத் தெரிந்தவர். பழக்கம்.!”

“திருமணம் எங்கே நடக்குது..?”

“மாரியம்மன் கோவில்ல..”

“ம்ம்… இப்போ என் சந்தேகத்துக்கு வர்றேன். படடோடமா பத்திரிகை அடிச்சி, ஆடம்பரமா திருமணம் நடத்தும் பணக்காரன் வீட்டு திருமணம் என்றால் முடிந்த அளவு ஒதுக்கி முடியாததுக்கு ஆர்வமில்லாமல் கிளம்பிச் சென்று மொய் வைக்காமல் திரும்பும் அப்பா சாதாரண ஏழை வீட்டுத் திருமணமின்னா….முதல் ஆளாய்க் கிளம்பி போய் மொய் வைச்சு வர்றாரே என்ன காரணம்..? இங்கே மதிப்பு மரியாதை அதிகம் கிடைக்கும் என்றா..?”

தேவகிக்கு விளங்கியது.

“அப்படி இல்லே . சொல்றேன். பணக்காரன் பகட்டுக்காகத் திருமணம் செய்பவன். அவனுக்குப் பணம் பெரிசில்லே. மொய் வைக்கலைன்னாலும் பாதிப்பில்லே. ஏழை அப்படி இல்லே. திட்டமாய் பத்திரிக்கைகள் அடிச்சி முக்கிய நட்பு, உறவு சனங்களை அழைத்து சிக்கனமாய் திருமணத்தை முடிப்பவன். இவனுக்குப் பணம் என்பது பெரிசு. மொய் என்பது உதவி. அதான் அப்பா எந்த ஏழை வீட்டுத் திருமணம் என்றாலும் முதல் ஆளாய்ப் போய் மொய் வைச்சித் திரும்பறார்!” சொன்னாள்.

அப்பாவின் மனம் புரிந்த அருண் மௌனமானான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *