அப்பா என்ற ஆகாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 4,471 
 

காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது.அவள் அருகில் ஏழு வயது தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள்.

முன் சீட்டில் டிரைவர் மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான். அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து கொண்டாள். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி கார் புறப்பட்டது.

சென்னையில் வடபழனியில் அனுராதாவின் பிறந்த வீடு. அனுராதாவின் அப்பா ராஜாமணி இறந்து போனார். ஃபோன் வந்ததில் இருந்து அழுது கொண்டு இருந்தாள் அனுராதா.

அந்த காலை நேர பிரயாண சந்தோஷங்கள் அவள் மனதில் பதியவில்லை. விளையாட்டு திடல்களில் இளம் பிராயத்தினர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். வயது முதிர்ந்த வர்கள் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தனர். எங்கோ ஒரு கோயிலில் இருந்து திருப்பாவை ஒலித்துக் கொண்டிருந்தது.

அனுராதா வுக்கு அப்பாவின் நினைவுகளே மனதில் நிறைந்து இருந்தது. ஏழு வயது தனுஜா தூங்கி விடவே மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

ராஜாமணி ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார். அனுராதா பல தலைமுறைகளாகப் பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் பிறந்ததும் மிகுந்த செல்லமாக வளர்க்கப் பட்டாள். அவளுக்கு ஐந்து வருஷத்திற்குப் பிறகு தம்பி ஸ்ரீ ராம் பிறந்தான். இரு குழந்தைகளும் செல்லமாக வளர்த்து ஆளாக்க ப் பட்டாலும் அனுராதா மீது அப்பாவுக்கு அதிக பிரியம்.

செல்லமாக வளர்க்கப் பட்ட அனுராதா கல்லூரியில் பிகாம் படிப்பைத் தேர்ந்தெடுத்தாள். படிக்கும் போது முத்தரசனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவன் அனுராதா வின் வீட்டருகே ஃபோன் கடை வைத்து இருந்தான்.

அனுராதாவை அவள் அம்மா விமலா கண்டித்தாள். அன்று இரவு முத்தரசனோடு உடன் போனாள் அனுராதா.

விவரம் அறிந்து அவளை பல இடங்களிலும் தேடி தவித்தனர் பெற்றோர்கள். ஐந்து மாதங்கள் கழித்து குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அனுராதா. ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்தாள். முத்தரசன் அவளை ஏமாற்றி வஞ்சித்தது அறிந்து வீடு வந்து சேர்ந்தாள்.

மகள் மீது அதீதப் பிரியம் ராஜாமணிக்கு. அவள் ஓடிப் போய் அவருக்கு அவமானம் தேடி தந்ததும் உண்மையே. இப்போது வயிற்றில் ஐந்து மாத குழந்தை வேறு. என்ன செய்வது?இவளின் எதிர்காலம் என்ன? ஒன்றும் தெரியவில்லை திகைத்துப் போனார்.

நிராதவாக மகளை விட விருப்பமாக இல்லை. ஆனால் மனதிற்குள் மருகி, மருகி அமைதியாக இருந்தார்.அம்மா விமலாவிற்கு மகள் மீது கோபம் வருத்தம் இருந்தது என்றாலும் அவளை நன்றாக கவனித்துக் கொண்டாள். கணவர் ராஜாமணி யிடம் குழந்தையைக் கலைத்து விடலாம் என்று கூறினாள். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது இருந்தார். அது அனுராதா வின் உயிர் விளையாட்டு அன்றோ?

இரவு தூக்கம் வரவில்லை. முகநூலில் மூழ்கி இருந்தார். அப்போது ஒரு சமுகசேவகியின் பேட்டியைக் காண நேர்ந்தது. அவர் பார்வையாளர்களுக்கு தங்கள் பிள்ளைகள் என்ன தவறு செய்து இருந்தாலும் மன்னித்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். நாமே நம் குழந்தைகளை கைவிட்டால் வேறு யார் அவர்கள் மீது அக்கறை கொள்வார்கள். நம் பிள்ளைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை நல்வழிப் படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

சமூக சேவகியின் பேச்சு அவருக்கு நல்ல வழி காட்டியது.” ஆம் அனு என்னுடைய மகள். நான் உயிரோடு இருக்கும் வரை கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்பேன். உலகத்தில் கோடானு கோடி பெண்கள் இருந்தாலும் என் மகளுக்கு ஈடாக யாரும் கிடையாது” என்று தீர்மானித்தார்.

இரவு தூங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் போய் அமர்ந்தார். அவள் அழுத கண்ணீரக் கோடுகள் கன்னத்தில் தெரிந்தது. தலையை மென்மையாக கோதி எப்போதும் அவர்”அனும்மா” என்று அன்புடன் கூப்பிடுவது போல கூப்பிட்டார்.

கண்விழித்த அனுராதா அப்பாவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து அவர் தோளில் சாய்ந்து”அப்பா !அப்பா ! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கதறி அழ ஆரம்பித்தாள். அவளை மார்போடு அணைத்துக் தட்டிக் கொடுத்தார். ஓன்றுமே பேசவில்லை.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முகநூல் பார்த்த போது மின்சார ரயிலில் அடிபட்டு முத்தரசன் இறந்து போனான் என்ற விவரத்தை அறிந்தார். ஆனால் இது குறித்து தன் குடும்பத்தினருடன் ஒன்றும் பேசவில்லை.

மகளை இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு செக்கப் பிற்கு அழைத்துச் சென்றார். கணவர் பெயர் லேட் முத்தரசன் என்று கொடுத்தார். மகளை தனக்கு தெரிந்தவர்களிடம் ஓடிப்போன பெண் என்று காட்டாமல் கணவனை இழந்த பெண் என்று கௌரவமாக காட்டினார்.

அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாத்தா ராஜாமணி போலவே மாநிறத்தில் நீண்ட பெரிய மூக்கு, தீட்சண்யமான கண்கள், நீண்ட கைகள் என்று ஒரு குட்டி ராஜாமணி போல இருந்தது.

குழந்தை நந்தகோபாலனைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டனர் ராஜாமணியும் விமலாவும். அவர்களையே அப்பாவும் அம்மாவும் என்று பாவித்தது குழந்தை. அனுவை ராஜாமணி அழைப்பது போல அனும்மா என்று அழைத்தான். மாமா ஸ்ரீ ராமும் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய கார் கம்பெனியில் சென்னையில் வேலைக்கு சேர்ந்தான்.

அனுவின் படிப்பைத் தொடரச் செய்தார்.தொடர்ந்து பிகாம் முடித்து எம் காம் படிக்கலானாள்.

ஸ்ரீ ராமுக்கு திருமணம் அமைந்தது. அவன் மனைவி இந்திராணி குடும்பத்தினருடன் நன்றாக அனுசரித்துப் போனாள். நந்த கோபாலன் மீது தனது மூத்த மகன் இவன் தான் என்று மிகவும் அன்பு காட்டினாள். அனுவிற்கும் தங்கள் தூரத்து உறவினரான பூவராகனுக்கு மணம் முடித்துக் கொடுக்க பேர் உதவியாக இருந்தாள்.

பூவராகன் ஒரு காலேஜில் லெக்சரராக இருந்தான். அனுராதா விற்கும் அதே காலேஜில் ஆபீசில் வேலையும் கிடைத்தது. தனுஜா தர்ஷனா என்று இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தனர்.

ராஜா மணியும் நிம்மதியானார். நந்தகோபாலனும் அனும்மா, பூவராகன் அப்பா என்று அழைத்து அன்பு காட்டினான். தங்கைகள் மீதும் பாசமாக இருப்பான். தாத்தா பாட்டி வீட்டில் மாமா அத்தை அவர்களின் இரு மகன்களுடன் சந்தோஷமாக இருந்தான். மிகவும் புத்திசாலி. பத்தாவது வகுப்பு வந்து விட்டான்.

ராஜாமணி வேலையில் எவ்வளவோ சாதித்து இருந்தார். என்றாலும் தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததைத் தான் தனது நிறைவான சாதனையாக கருதினார். நந்த கோபாலனையும் தனது மகளின் குழந்தையாக மட்டுமே கருதி பாசத்தை அபரிமிதமாகப் பொழிந்தார். மிகவும் மனம் நிறைந்து வாழ்ந்தார்.

நேற்று தன் குடும்பத்தினருடன் குல தெய்வம் வழிபாடு செய்து திரும்பி வந்து இருந்தனர். குலதெய்வம் கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையை மிகவும் சந்தோஷமாக அளித்து வந்தார்.

இன்று அதிகாலையில் இறைவனடி சேர்ந்து விட்டார்.

அனுராதாவின் கார் வீடு வந்து சேர்ந்தது. வீடு முழுவதும் ஜனங்கள் நிறைந்து இருந்தனர். அப்பா என்று அலறியபடி ஓடிச் சென்று ஹாலில் நடுவாக படுக்க வைக்க ப் பட்டு இருந்த அவர் மார்பில் சாய்ந்தாள். ஆற்றாது அலறினாள். யாரோ அவளை வலுக்கட்டாயமாக ராஜாமணி யின் மார்பில் இருந்து பிரித்து தூக்கினார்கள்.

தன்னைத்தூக்கியது யார் என்று தலை நிமிர்ந்து பார்த்த போது அது அப்பாவாகத் தெரிந்தது. மிக இளம் வயதில் அப்பா எப்படி இருந்திருப்பாரோ அப்படி ! அப்பா என்றபடியே கழுத்தைச் சுற்றி கைகளால் அணைத்தாள். அப்படியே மயக்கம் வந்தது..

டேய் நந்து ! அனும்மாவை உள்ளே கட்டிலில் படுக்க வை. இந்து குடிக்க சூடாகப் பால் கொண்டு வா” என்று கத்தினான் ஸ்ரீ ராம். மெல்ல மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்த அனுவுக்கு அப்பாவாக அவளுக்கு தெரிந்தது நந்த கோபாலன் என்று உணரமுடிந்தது. முற்றிலும் மயக்கம் ஆனாள்.

கண்விழித்த போது அவளைச் சுற்றி அவள் குடும்பத்தினர் அனைவரும் இருந்தாலும் அவள் கண்கள் நந்துவைத் தேடின. பத்தாவது படிக்கும் நந்து அப்பாவைப் போலவே ஒங்கி வளர்ந்து அதே கருணைப் பொங்கும் கண்களுடன் அனும்மா என்றபடி நின்றிருந்தான்.

ஆகாசம் எப்போதும் இருக்கும். அப்பா எப்போதும் நம்முடனேயேத் தான் இருப்பார்கள் என்று நம்பிக்கை வந்தது அனுராதாவுக்கு. அப்பா இறந்த கவலை மறைந்தது. திடீரென ஏற்பட்ட ஒரு மன நிறைவில் அமைதி ஆனாள். இதுவும் அப்பா மறைந்தாலும் அனுவை சமாதானம் செய்த லீலையே.

நிறைவு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)