அப்பாவும் தண்ணீரும்…

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,296 
 
 

எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒரு மரணத்தின் முன் அவை நிற்பதில்லை. அதிலும் அப்பாவோடு என்னும்போது மனஸ்தாபங்கள் எளிதில் பின்னுக்குப் போய்விடும் என்பதில் ஐயமில்லை. இன்று நான் அழுது நின்றாலும், வாழ்ந்த நாள்களில் அப்பாவுக்கும், எனக்கும் இடையே இதமான சம்பவங்கள் என்பது குறைவு. சச்சரவுகளே அதிகம்.

நான் ஒழுங்காகப் படிக்காதபோது, வகுப்பிற்கு “கட்’ அடித்து மாட்டியபோது, எனது கல்லூரி சேர்க்கைக்காக அவர் சிபாரிசுகள் தேடி அலைந்தபோது, கல்லூரியில் அரியர் வைத்தபோது, வேலை கிடைக்காமல் நான் வெட்டியாய் சுற்றியபோது…இப்படி, எத்தனை, எத்தனையோ “போது’களை பட்டியலிடலாம்.

அப்பாவும் தண்ணீரும்இவை எல்லாம்கூட நான் வேலை கிடைத்து, திருமணமாகி செட்டில் ஆன பிறகு, இருவர் மனதில் இருந்தும் மறைந்து போனது. அவரின் சித்தாத்தங்கள்தான் தொடர்ந்து எங்களை சர்ச்சைக்குள் இழுத்துப்போட்டுக் கொண்டே இருந்தன.

“”அதிகாலைல எழுந்திருச்சு பழகுடா”

“”நான் ராத்திரி ஒருமணி வரை வேலை பார்த்திட்டுதான் இப்ப தூங்குறேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சூழல் இருக்கும். நீங்க உங்க வேலையைப் பாருங்க”

“”எந்த வேலையில் இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்து பழகுறதுதான்டா ஒரு மனுஷனுக்கு அழகு”

“”ஆமா…மனுஷனுக்கு டெஃபனிஷன் கொடுக்கிற அத்தாரிட்டி இவர்தான்…”

இதுமாதிரியான நக்கல் வாதங்கள் சண்டையில் சென்று முடியும். ஓரிரு வாரம் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போகும்.

இரவு நேரங்களில் நான் தாமதமாய் வந்து வீட்டினுள் நுழைந்தால், மோப்பம் பிடிக்கிற நாய் மாதிரி மூச்சை உதறிக்கொண்டு, “”தண்ணி, சிகரெட் எல்லாம் நல்லதில்ல. உடம்பைக் கெடுக்கும்; அதுமட்டுமில்ல…ஆண்மையை குறைக்கும்; ஆஸ்தியை அழிக்கும்” என்று யாரிடமோ பேசுவது போல் கருத்து சொல்வார்.

எனக்கு வெறி ஏறும். “”உங்களை மாதிரி ரொம்ப நாள் இருந்து எல்லோர் உயிரையும் வாங்கக் கூடாதுன்னுதான் குடிக்கிறேன்” என்று காட்டுக் கத்தலாய் கத்திவிட்டு மாடிக்குப் போவேன்.

“”வெறிநாய் மாதிரி கத்திட்டு போறான் பாரு” என்று அம்மாவிடம் ஆறுதல் தேடுவார். அம்மாவும் “”அவன் கிட்ட பேச்சு கொடுத்து உங்க உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?” என்று ஆறுதல் சொல்வாள்.

என் தவறுகளால் நான் கார்னர் செய்யப்படும் போதும், என் பக்கத்து நியாயங்கள் ஏதும் இல்லாமல் நிராயுதபாணியாய் நான் தவிக்கும் போதும் வாதத்தை திசை திருப்ப வேறு அஸ்திரத்தை பயன்படுத்துவேன்.

“”என்னை ஏன் பெத்தீங்க? நானா உங்ககிட்ட வந்து என்னை பெத்துப்போடுங்கன்னு கேட்டேன்? உங்க சுகத்துக்கும், ஆசைக்கும் நான்தானா கிடைச்சேன்?” அந்த வயதில் அந்தக் கேள்வி என் மேதாவிலாசத்தை பறைசாற்றுவதாக எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் அந்தக் கேள்விக்கு அம்மா, அப்பாவால் பதில் சொல்ல முடிந்ததில்லை. அது என் வெற்றியாகத் தெரிந்தது. அப்பா இரவு ஈஸிசேர் போட்டு கண்ணீர் சிந்தியது இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்த உறுத்தல்தான் எனக்கு ஒரு மகன் பிறந்தபோது, சந்தோஷத்தைவிட, “அந்தக் கேள்வியை இவன் கேட்டால் என்ன பதில் சொல்வது’ என்ற பயத்தில் என்னைத் தவிக்கவிட்டது.

“”இந்த அண்டம், இந்த பூமி, சந்திரன் இவையெல்லாம் இயற்கையின் அருமையான படைப்புகள், அதில் மனிதன் கண்டுபிடித்த பஸ், ரயில், விமானம், சினிமா, டி.வி., சமையல் போன்றவை பிரமிக்க வைப்பவை. இவற்றையெல்லாம் பார்க்கவும், அனுபவிக்கவும் லட்சக்கணக்கான உறவினர்களை, நண்பர்களை, மக்களை சந்தித்துப் பழகவும் ஓர் அற்புதமான வாய்ப்பை என் தாய், தந்தையர் எனக்குத் தந்தனர். என் பங்குக்கு நானும் யாருக்காவது அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் உன்னைப் பெற்றெடுத்தேன். “நீ’ என்ற ஒருவன் இந்த உலக்தில் உருவாகாமலேயே போயிருந்தால் இதையெல்லாம் நீ பார்த்திருப்பாயா? அனுபவித்திருப்பாயா? நான் இந்த பூமிக்கு வந்தது போல், நீயும் இங்கு வர வேண்டும். நான் பார்த்து அனுபவித்த இந்த உலகை நீயும் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நீயும் உன் பங்குக்கு இந்த உலகத்தை ஓரிருவருக்காவது காட்ட வேண்டும். அதற்கு நன்றாக படித்து, நல்ல சூழலில் பணிபுரிந்து, நல்ல மனைவியை அடைந்து, நல்ல பிள்ளைகளைப் பெற்றடுக்க வேண்டும்” இப்படி மகன் பிறந்த ஆஸ்பத்திரியிலேயே என் தரப்பு வாதங்களை சிந்தித்து வைத்துக்கொண்டவன் நான்.

நான் வேலையில்லாமல் இருப்பதை சலித்துக்கொண்ட அப்பாவிடம், “”கஞ்சி ஊத்த வக்கில்லைனா பெத்திருக்க கூடாது. பெத்து தொலைக்கும்போதே இது அறிவாளி பிள்ளையா இல்லையான்னு பாத்து அழிச்சிருக்கணும்”- இப்படி பல ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கிறேன். அப்பா பதில் இல்லாமல் ஈஸிசேரில் சாய்ந்து கலங்கிப் போவார்.

எனக்குக் கல்யாணமாகி மகன் பிறந்ததும் இதே கேள்வி அவனிடமிருந்து வந்தால்? என்ற பயம் என் மனதை அப்பிக் கொண்டது உண்மை. முட்டாளாய்ப் போனாலும் அவனுக்கு ஒரு தொழில் தொடங்கிக் கொடுத்து அவனைத் தூக்கி நிறுத்தும் வகையில் சம்பாதித்து ஆக வேண்டுமென்ற முனைப்பில்தான் பல தொழில்களில் இறங்கி கொஞ்சம் அதிகப்படியாய் சம்பாதிக்க துவங்கினேன்.

அன்றைக்கு என் அப்பாவை திட்டியதில் எல்லாம் நியாயமில்லை என்பதை இப்போது நான் உணர்ந்தாலும் அவரின் வலி அவரிடம் இருந்து கொண்டேதான் இருந்திருக்கும். ஆனால் அவருக்கு நான் அளித்த அந்த வலிதான் இன்று என்னை என் குழந்தைகளுக்கு உகந்த அப்பாவாக ஓரளவேனும் மாற்றியிருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். என் குற்றவுணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேறு வழி?

“”காலையில் கண்டிப்பாய் சாப்பிடணும்டா…டீயை டீயை குடிச்சிட்டு இருந்தா உடம்புதான் கெட்டுப்போகும்”

“”ஐயோ அம்மா… இவரைக் கொஞ்சம் பேசாமல் இருக்க சொல்லேன்” அம்மாதான் அவரது அறிவுரைக்கு கொஞ்சம் அணைபோட்டு என்னைக் காப்பாள். ஆனால் நாற்பது வயதை எட்டிப் பார்க்கும் முன்பே சர்க்கரை நோய் எட்டிப்பார்த்தபோது, அப்பாவின் அறிவுரை மகிமை எனக்கு பிடிபட்டது. ஆனால் தாமதமான சூரிய நமஸ்காரம்.

இந்த சண்டை, சச்சரவுகளையெல்லாம் விட, தண்ணீர் விஷயத்தில் எங்களுக்குள் நடந்த சண்டை, சச்சரவுகள்தான் அதிகம் மற்றும் தொடர்ச்சியானது.

தண்ணீரை வீணடித்தால் அப்பாவுக்கு கொஞ்சமும் பிடிக்காது.

“”மாமா…எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டீங்களே மாமா” எனது மாமா மகள் புயல்போல வந்து என் அம்மாவை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள். அப்பா முடியாமல் இருந்தபோது எட்டிக் கூட பார்த்ததில்லை. இப்போது அழுது தீர்க்கிறாள். “உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள்’ என்று படித்தது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.

அவளது கணவர் என் அருகில் வந்து என் தோளைத் தட்டிக்கொடுத்து “எப்படி நடந்தது?’ என்று ஃபார்மலாக விசாரித்தார். பின்னர் “எப்போ எடுக்கிறீங்க?’ என்று கேட்டார். பாவம்…அவருக்கு என்ன அவசர வேலையோ? “”தம்பிக்காக வெயிட் பண்றோம்” என்றதும் விலகிப்போய் என் சித்தப்பா அருகில்போய் உட்கார்ந்து கொண்டார். என் தம்பி எப்போது வந்து சேருவான்? என்று அவரிடம் விசாரிப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

பழையபடி பழைய நினைவுகளில் மூழ்கியது என் மனம்.

சின்ன வயதில் அப்பாதான் ஹீரோ. வாரம் தவறாமல் ஆங்கிலப்படம் கூட்டிப் போவார். “ஊங்ஹழ் ஞஸ்ங்ழ் ற்ட்ங் இண்ற்ஹ்’, “பங்ய் இர்ம்ம்ர்ய்க்ம்ங்ய்ற்ள்’, “ஊண்ஸ்ங் ம்ங்ய் ஹழ்ம்ஹ்’, “உய்ற்ங்ழ் ற்ட்ங் க்ழ்ஹஞ்ர்ய்’ எல்லாம் இன்னும் மறக்க முடியாத அனுபவம். அங்கு உள்ளே நுழைந்த ஒரு பெருந்தனக்காரர் எங்கள் குடும்பத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே “எல்.சி.டி.யா?’ என்று கேட்டுவிட்டு, டி.டி.ஈ.யிசம் கெஞ்சி கூபே மாற்றிக்கொண்டு போனதுகூட இன்னும் நினைவில் இருக்கிறது.

பத்தாம் வகுப்பு வரை அப்பாவுக்கும் எனக்கும் சுமூகமான உறவுதான். பத்தாம் வகுப்பில் என் உயரம் காரணமாக, என்னை கடைசி பெஞ்சுக்கு மாற்றியதில் ஆரம்பித்தது வில்லங்கம். குடும்பத்துக்கு கொஞ்சமும் ஒட்டாத பழக்க வழக்கமுள்ள நட்புச் சூழலில் சிக்கிக் கொண்டேன். அது முதல் அப்பாவுடன் மோதல் ஆரம்பமானது.

ஆனால் காலப்போக்கில் நான் நேர்வழிக்கு திரும்பி வந்த பிறகு எல்லாம் மாறிப் போனது. நான் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு சூட்டுடன் வீட்டுக்கு வந்தபோது கட்டிப் பிடித்து கண்ணில் நீர் சொரிந்தார். பிறரின் பாராட்டுகளை மேடையில் பெற்ற தருணங்களில், பத்திரிகைகளில் என் பெயர், படம் பிரசுரமான நேரங்களிலும் அதே ஈஸி சேரில் அவர் சாய்ந்து ஆனந்த கண்ணீர் உதிர்த்த மணித்துளிகளில்தான் என் குற்றவுணர்ச்சிகள் கொஞ்சம் மட்டுப்பட்டன என்று சொல்லலாம்.

“”ஒரு காலத்தில் படிப்பை விட்டுவிட்டு சினிமா, சினிமான்னு அலைஞ்சான். உன்னை நினைச்சு ரத்தக்கண்ணீர் வருதுடான்னு சொன்னதுக்கு “எந்தத் தியேட்டர்ல’ன்னு கேட்டவன் இவன்”- அன்று ரணமாய் தோன்றிய கேள்வியை இன்று நகைச்சுவையாய் தன் நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதை கேட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான் அவரின் அன்றைய பல ஏச்சுகள் இன்று நகைச்சுவையாகத் தெரிவதுண்டு.

இப்படிப் பல சச்சரவுகள் காலத்தின் போக்கில், வீரியம் குறைந்து நீர்த்துப்போய் சுவையானதாக மாறினாலும்கூட, தண்ணீர் தொடர்பான சச்சரவுகள் மட்டும் போன வாரம் வரையிலும் எங்களுக்குள் ஓயவேயில்லை.

நான் முன்னமே சொன்ன மாதிரி தண்ணீரை வீணடித்தால் மட்டும் அப்பாவுக்கு கொஞ்சமும் பிடிக்காது.

“”தண்ணீரை சிந்தாதேடா”-சின்னவயதில் இருந்து நூறு முறையாவது முதுகில் மொத்து வாங்கியிருப்பேன். குழாயைச் சரியாக மூடாமல் அது சின்ன, சின்னதாய் சொட்டிக் கொண்டிருந்தாலும் கூட முதுகில் அடி விழும்.

பெரியவனான பிறகு அடியில்லையென்றாலும் அடியைவிட வலி தரும் வார்த்தைகள் ஏராளமாய் வாங்கியிருக்கிறேன். தண்ணீர் சேமிப்பு பற்றி பத்திரிகைகளில் வந்ததையெல்லாம் படிக்கச் சொல்லி நீட்டி துன்புறுத்துவார்.

குடத்தில் குடிநீர் கீழே போய் விட்ட நிலையில், அந்த மிச்ச நீரை வைத்தே குடத்தை கழுவி கீழே ஊற்றியதற்காக பல முறை அம்மாவும் திட்டு வாங்கிப் பார்த்திருக்கிறேன். “”அந்த தண்ணீயை பாத்ரூம் வாளியில ஊத்தி வச்சிருக்கலாமேடி சனியனே…?”

எனக்கு அம்மாவுக்கு என்றில்லை, வீட்டுக்கு வரும் உறவினர்களையும் முறைத்துக் கொள்வார். அவர்கள் தண்ணீரை வீணடிப்பது தெரிந்தால்!

கார்ப்பரேஷன் லாரி சாலையில் தண்ணீரை சிந்திக் கொண்டே போனால், உடனே லாரி நம்பரை குறித்து மேயர், கலெக்டர், முதலமைச்சர் வரை மனுபோட்டு விடுவார்.

மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்தொட்டி நிரம்பி வழிந்தால் அந்த நீர் வீணாகிவிடும் என்பதற்காக தொட்டி நிரம்பும் முன்பே மோட்டாரை அணைத்துவிடுவார். சமயத்தில் அரை தொட்டி கூட நிறைந்திருக்காது. ஆத்திரம், ஆத்திரமாய் வரும்.

முதலமைச்சர் உத்தரவு போடுவதற்கு முன்பேகூட எங்கள் தெருவில் மழைநீர் சேகரிப்பு குழி இருந்தது, எங்கள் வீட்டில் மட்டும்தான். வயதான பிறகு கூட, மழை பெய்தால் மொட்டை மாடி தூம்பு வழியாக கீழே பாயும் நீரைப் பிடித்து வைத்து குளிப்பு, “அதில் துவைச்சா துணி பளிச்சின்னு இருக்கும்’ என்று அம்மாவைப் பாடாய்ப்படுத்துவது எல்லாம் கூட பரவாயில்லை. மழைத் தண்ணீர் பிடிக்கிறேன் என்று நனைந்து, காய்ச்சலில் படுத்துக்கொள்ளும் போதுதான் உச்சகட்ட கோபம் கொப்பளிக்கும். நான்தான் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.

எரிந்து விழுந்தபடியேதான் அழைத்துச் செல்வேன். “”அடுத்த தடவை இப்படி படுங்க…நான் பார்க்கவே மாட்டேன். ஆஸ்பத்திரிக்கெல்லாம் சத்தியமாய் கூட்டிட்டு போக மாட்டேன்” என்று அலறுவேன். ஆனாலும் அடுத்த மழை நாளில் அவர் வாளியுடன்தான் நிற்பார்.

எங்கள் வீட்டில் ஷவர் மாட்டுவதற்கு நிரந்தர தடை இருந்தது. “”ஷவர் மாட்டினா உடம்பில் படாமல் வீணாகப் போகும் தண்ணீர்தான் அதிகமாய் இருக்கும்”- எங்களது பலமுறை கோரிக்கைக்கு எப்போதும் இந்த ஒரே பதில்தான். குளிப்பதற்கான கப் கூட சின்ன சைஸில்தான் இருக்கும். அதற்கும் “”உடம்பில் ஊத்திக்கிற தண்ணி சிதறி வீணாப் போகக் கூடாதுடா. ஊத்திக்கிற தண்ணி முழுசும் உடம்புல படுற மாதிரி ஊத்திக்கிட்டா குளிக்கிறதுக்கு அதிக தண்ணி செலவாகாது” என்று பதில் வரும்.

“”அம்மா…தண்ணியை மிச்சம் பிடிக்கிறேன்னு கக்கூஸ்ல கூட ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டேங்கிறாரும்மா”

கொஞ்சம் மிகைப்படுத்தியே அம்மாவிடம் புகார் வாசிப்பேன்.அம்மா பாவம் “”என்னை என்னடா பண்ண சொல்றே?” என்ற புலம்பலோடு முடித்துக் கொள்வாள்.

“”தண்ணிதான்டா எதிர்காலத்துல தங்கத்தைவிட பெரிய சொத்தாகப் போவுது. அடுத்த உலகப் போர் குடிக்கிற தண்ணிக்காகத்தான் நடக்கும் பாரு”

அடுத்த உலகப்போர் வருமோ? வராதோ? ஆனால் எங்கள் வீட்டில் இது தொடர்பான போருக்கு மட்டும் முடிவே இருந்ததில்லை.

“”அப்பா…” அலறியபடி காரில் இருந்து இறங்கினான் தம்பி. உள்ளே ஓடி அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டு தேம்பி, தேம்பி அழுதான். அம்மா வேறு அவனை இழுத்து கட்டிக்கொண்டு “”அப்பா நம்மளையெல்லாம் விட்டுட்டு போயிட்டாருடா” என்று அலறி ஆற்றினாள். எனக்கும் கண்ணில் நீர் முட்டியது. நேற்று இருந்தவர் இன்று இல்லையென்றால் நம்ப முடிகிறதா?

“”என்னப்பா…எல்லோரும் வந்தாச்சு. எடுத்தறலாம்ல?” அருகில் வந்து காதருகில் கேட்டார் மாமா. கலங்கியபடி தலையசைத்தேன். மாமா பிற உறவினர்களுடன் கலந்து பேச, வெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “அப்பாடா’ என்கிற மாதிரி எழுந்து நின்றனர்.

“”நீர்மாலைக்குப் போகணும்ல…ஏம்மா…செம்புகள கொண்டாங்க” யாரோ குரல் கொடுத்தார்கள். “”ஒத்தப்படையில் கொண்டு வாங்க”

வெளியூர் சித்தப்பா “”இங்க எங்கப்பா தண்ணிக்கு போகணும்?” என்று யாரிடமோ கேட்டார்.

“”பக்கத்தில கிணறு ஏதாவது இருக்கும்ல” கேட்டார் கிராமத்து பெரியப்பா.

“”யோவ் பெருசு. இது கிராமமில்ல; கிணறு தேடுறதுக்கு. போர் போட்டாலே முந்நூறு அடிக்கு கீழதான் தண்ணி வரும்” யாரோ உள்ளூர்க்காரர்.

“”வரும் வழியில் அடிபம்ப் ஒண்ணு பார்த்தனேப்பா?”

– இன்னொருவர்.

“”அது போன வருஷமே தண்ணி இல்லாமல தூர்ந்து போச்சு”

“”பக்கத்துல பைப்பு எதுவும் இல்லையா?”

“”அடுத்த தெருவில இருக்கு. ஆனா அதுல ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணி வரும். நேத்துதான் வந்துச்சு. இனிமே நாளைக்குத்தான் வரும்”

“”அப்ப எங்க போய்தான்யா தண்ணி எடுக்கிறது? சாஸ்திரத்த விட முடியாதுல்ல?”

“”அட ரெண்டு கேன் மினரல் வாட்டல் வாங்கிட்டு வாங்கப்பா. அடிபம்ப் பக்கத்தில் வச்சு ஊத்தி எடுத்துக்கிட்டு வந்திரலாம். நேரம் போயிட்டிருக்கு…”

“”அப்பா…” திடீரென நான் அலறியபடி என் அப்பாவிடம் ஓடிப்போய் அவரது கையைப் பற்றிக்கொண்டு அழுதபோது, அங்கிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. என் அப்பாவின் ஆன்மாவிற்கு புரிந்திருக்கும்.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

3 thoughts on “அப்பாவும் தண்ணீரும்…

  1. ஒவ்வொரு மகனை ஈன்ற தந்தைக்கும் இவ்வாறான அனுபவங்கள் கிட்டித்தான் இருக்கும், வாழும்போது கிட்டிய வலிகள் தன் மகன் தன் தவறை உணரும் காலத்தில் என்ன பலனைக் கொடுக்கப் போகின்றது, எனவே வாழும் காலத்தில் சவடால் பேச்சுக்களைக் குறைத்து வாழுங்கள்.

  2. இது ஒரு நல்ல கதை என் மனதை தொட்டது. கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *