அப்பாவும் காமராஜும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,453 
 
 

(இதற்கு முந்தைய ‘ஆட்டுக்கறி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

எப்படி வேட்டு இல்லாமல் தீபாவளி கிடையாதோ, அதேமாதிரி நிறைய பேருக்கு அவன் ஊரில் வான்கோழிக்கறி இல்லாமலும் தீபாவளி கிடையாது. இது அவன் வீட்டுக்கும் பொருந்தும்.

ஆனால் அவன் வித்தியாசமானவன். அசைவ உணவு எதுவும் சாப்பிடாத, சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறவன். இதற்குக் காரணம் அவனுடைய அப்பா.

பிறந்ததில் இருந்தே அவனை எந்த விதமான மாமிச உணவும் சாப்பிடாதவனாக வளர்க்க வேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்தார் அப்பா. ஏனென்றால் அப்போது அப்பாவும் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு முற்றிலும் சைவ உணவு மட்டும் சாப்பிடுகிறவராக அவரை மாற்றிக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் கல்லூரிப் படிப்பு முடிகிறவரை அவர் மாமிச உணவைத் தவிர சைவ உணவு எதையும் ஒருவேளை கூட சாப்பிட்டிராதவர். அப்படி ஒரு மாமிச உணவுப் பிரியர் அவன் அப்பா.

ரொம்பச் சின்ன வயசிலேயே ஒரு முழுக்கோழியை அவர் ஒருத்தரே சாப்பிட்டுக் காலி பண்ணிவிடுவார் என்பார்கள். கல்லூரிப் படிப்பு படித்து முடிக்கிறவரை ஊரில் இருக்கிற அத்தனை வித அசைவ உணவுகளை உண்டு மகிழ்ந்து கொண்டிருந்த அவர் சட்டென ஒருநாள் மாமிச உணவு சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திக் கண்டார். அதற்குக் காரணமாக இருந்தவர் மஹாத்மா காந்தி.

அவர் தேசப் பிதாவாக இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. அவன் அப்பா மஹாத்மா காந்தியின் வாழ்க்கையிலும், போதனைகளாலும் மிகவும் ஈர்க்கப் பட்டிருந்தார். ‘புலால் உண்ணாமை’ என்ற காந்தியின் போதனையை எந்தத் தயக்கமும் இல்லாமல் அவன் அப்பா ஏற்றுக்கொண்டு விட்டார்.

இயல்பிலேயே அவன் அப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் எதுவும் கிடையாது. அவன் அப்பா பேணிக்காக்க ஆசைப்பட்ட இன்னொரு விஷயம் பிரம்மச்சர்யம் காத்தல்.

கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து விடுவது என்ற வைராக்கியத்தில் இருந்தார் அவர். ஆனால் அப்பாவுக்கு இருபது வயதானபோது அவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, அவன் தாத்தா அவன் அப்பாவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் அவன் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வதில்லை என்ற அவரின் வைராக்கியத்தில் இருந்து அவர் மாறுவதாக இல்லை.

அவன் குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் தாத்தாவின் வார்த்தைக்கு யாரும் எந்த மறுப்பும் சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. தாத்தா ஒரு அபிப்பிராயம் சொல்லிவிட்டால் அதற்கு இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. அந்த மாதிரியே தன்னை வளர்த்துக் கொண்டவர் அவன் தாத்தா.

அவன் தாத்தாவின் பணக்காரத்தனமான வாழ்க்கையில் அவரோடு அவரின் பெண்டாட்டியும் பிள்ளைகளும் அடங்கியவர்கள்தான் என்பது தாத்தாவின் ஞாபகத்தில் இருக்கவே இருக்காது. பெண்டாட்டி பிள்ளைகளைவிட, தான் மட்டும்தான் பெரிய பணக்காரக் கொம்பு முளைத்த ஆசாமி என்ற மமதை அவருக்கு உண்டு.

அவனுடைய அப்பா இல்லற வாழ்க்கைக்கு விருப்பப் படவில்லை என்பதை அவன் தாத்தா கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. அவரின் வார்த்தைக்கு அவன் அப்பா கட்டுப் படவில்லை என்கிற கோணத்தில்தான் தாத்தா அந்த விஷயத்தைப் பார்த்தார்.

அதனால் அவன் அப்பாவை கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைப்பதை தாத்தா அவருடைய கெளரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டார். இதில் இன்னொரு விஷயமும் இருந்தது…

அவனுடைய அப்பா தாத்தாவின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். தாத்தாவின் முதல் மனைவிக்கு நான்கு மகன்கள். அந்த நான்கு மகன்களில் அவன் அப்பாதான் கடைசி. அவன் அப்பாவிற்கு நான்கு வயதானபோது அப்பாவின் அம்மா இறந்துவிட்டாள்.

பெண்டாட்டி இறந்த ஆறு மாதத்திலேயே அவனுடைய தாத்தா மச்சினியைக் கல்யாணம் செய்து கொண்டார். அவனுடைய அப்பாவின் மூத்த சகோதரர்கள் மூவருக்கும் காலா காலத்தில் கல்யாணமாகிவிட, அவன் அப்பாதான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

அவருக்கும் கல்யாணத்தைச் செய்து வைத்துவிட்டால் மூத்த தாரத்தின் நான்கு மகன்களுக்கும் அவரவர்களுக்கான பாகத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, எதிர்காலப் பாதுகாப்புக்காக அவர்களிடமிருந்து விடுதலைப் பத்திரங்களையும் எழுதி வாங்கி வைத்துவிடலாம் என்பது அவன் தாத்தாவின் திட்டம்.

வாழ்க்கையில் ஒரு முக்கிய கடமை அவருக்கு முடிந்த மாதிரியும் இருக்கும். அவன் அப்பாவின் கல்யாண மறுப்பால் அந்தக் கடமை முடியாமல் இழுத்துக் கொண்டிருந்தது.

குடும்பத்திற்கு ரொம்ப வேண்டியவர்களையும், நெருங்கிய சொந்தக்காரர்களையும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அவன் தாத்தா அவன் அப்பாவிற்கு புத்திசொல்ல ஆட்களை ஏற்பாடு செய்துகொண்டே இருந்தார்.

அது 1940 ம் வருடம்…

அப்போதே காமராஜ் அவனுடைய அப்பாவிற்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தார். மிக முக்கிய காங்கிரஸ் தலைவராக காமராஜ் அப்போது விளங்கினார். காமராஜும் கல்யாணம் செய்து கொள்வதில்லை என்ற எண்ணத்தில்தான் இருந்தார். சொந்த ஊர் என்பதாலும், காங்கிரஸ் இயக்க வேலைகள் காரணமாகவும் காமராஜ் அடிக்கடி மெட்ராஸில் இருந்து விருதுநகர் வந்து போய்க் கொண்டிருப்பார்.

விருதுநகரில் இருக்கும் நாட்களில் அவர் பெரும்பான்மையான நேரத்தை அவன் அப்பாவுடன்தான் கழிப்பார். இருவரின் பேச்சும் சுதந்திரப் போராட்ட இயக்கம் பற்றியே இருக்கும். அவனுடைய தாத்தாவிற்கு சட்டென காமராஜின் ஞாபகம் வந்தது. தாத்தா அவன் அப்பாவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க காமராஜின் உதவியை நாடினார். இதுபற்றி காமராஜ் நீண்ட நேரம் அவன் அப்பாவுடன் பேசி இருக்கிறார். காமராஜ் மிகவும் வற்புறுத்திச் சொன்னதின் பேரில், அந்த உயிர் நண்பரின் வார்த்தைக்காக அவனுடைய அப்பா கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்தார்.

இந்தச் செய்தி விருதுநகர் பூராவும் பரவி விட்டது. காமராஜின் அம்மாவையும் போய்ச் சேர்ந்து விட்டது. தன்னுடைய மகன் காமராஜ் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருந்ததில் அவரின் அம்மா மிகுந்த ஆதங்கத்தில் இருந்தார். காமராஜை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க அவர் அம்மா செய்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் தரவில்லை.

இந்த நேரத்தில் அவன் அப்பாவை காமராஜ்தான் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தார் என்கிற விஷயத்தைக் கேள்விப் பட்டதும் காமராஜின் அம்மா, அவன் அப்பாவை உடனே தன்னை வந்து பார்க்கும் படி அவரின் மகள் மூலம் சொல்லி அனுப்பினார்.

அவன் அப்பாவும் உடனே கிளம்பிப் போனார். காமராஜ் அப்போது மெட்ராஸில் இருந்தார். காமராஜையும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும்படி அவன் அப்பாவை காமராஜுக்கு எடுத்துச் சொல்லும்படி காமராஜின் அம்மா ரொம்ப உருக்கமாக அவன் அப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அவன் அப்பாவும் தான் எடுத்துச் சொல்லி முயற்சி செய்து பார்ப்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கிறார்…

ஆனால் அவன் அப்பா அதைப்பற்றி ஒரு நாளும் காமராஜிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மெளனமாகவே இருந்து விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *