அப்பாவுக்கு ஒரு கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,364 
 

அது ஒரு மார்கழி பொழுது; அதிகாலை, பனித்துளிகள் சாலையோர மரங்களில் படுத்துறங்கின. ஒன்றிரண்டு வாகனங்கள் இருளை கடந்து சென்றன. அந்த வாகனங்களின் சத்தம் கூட வந்து சேரவில்லை செவிகளுக்கு.

தெருநாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முடங்கிக் கிடந்தன. குளிரின் உச்சத்தில் நகரமே மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

பால்காரரின் குரல்கேட்டு ஒற்றைக் கதவை திறந்தாள் லெட்சுமி.

“யம்மா… ஒன்ன சக்தி நகர்ல இருக்க அகிலா மேடம் சீக்கிரமா வரச்சொன்னாங்க. வெளியூர் போறாங்களாம். அதான் வந்தியன்னா வெரசா வீட்டு வேலைய முடிச்சிட்டு போயிடலாம்னு சொல்லச் சொன்னாங்க. பேரப்புள்ளைக தூங்குறாகளா, விடிஞ்சதும் போயிட்டு வந்துரும்மா” சொல்லிச் சென்றார் அந்த பெரியவர்.

“ம்…” என்று தலையசைத்து உள்ளே சென்றவள், கிராமத்திலிருக்கும் தன் தந்தைக்கு கடிதம் எழுத ஆயத்தமானாள்.

அந்தக் குளிரிலும் கண்கள் ஊற்றெடுக்க முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

வீதியை நோக்கினாள்; காரிருளை கட்டியணைத்த படியே இருந்தது வானம்.

சேலையில் சுருட்டி படுத்திருந்த தனது குழந்தைகளை, தட்டி எழுப்ப வந்த கொசுக்களை இடது கையால் விரட்டியபடி எழுத ஆரம்பித்தாள்.

“பிறப்பின் பொருளை முழுமையாக கற்றுக்கொடுத்து பாசத்தையும், பண்பையும் ஊட்டி வளர்த்த என் பாசமிகு அப்பாவுக்கு செல்லமகள் லெட்சுமி எழுதுவது”

“கடிதம் எழுதுவது காலாவதியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று உங்கள் மகள் கடிதம் எழுதுகிறாளே என்று ஆச்சரியமாக இருக்கிறதா. கேள்விக்குறியாகிப் போன வாழ்க்கையில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என் அம்மா இருந்திருந்தால் அவளிடம் கண்ணீர் விட்டு அழுது இருப்பேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்…”

“உங்கள் பேரன் பேத்தி நன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் கேட்டதை எல்லாம் முடிந்தவரை வாங்கிக் கொடுத்துதான் வருகின்றேன். ஆனால் உங்கள் மருமகன் போட்டாவைப் பார்த்து “அப்பா எங்கம்மா” என கேட்கும் போதுதான் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்”.

“உங்க மருமகனுக்கு எவ்ளோ அறிவுரை சொன்னீங்க. அவரோ உங்க மகள நடுத்தெருவுல விட்டுருவேனு பயப்படுறீங்களானு இடது கையில சிகரெட்டவச்சுக்கிட்டு எகத்தாளமா பேசுனாரு. குடிக்கு அடிமையாகி சின்ன வயசுலேயே என்னை விதவையாக்கிட்டு போயிட்டரு”.

“புகுந்த வீட்டுக்கு பெருமை சேர்க்குறதுலதான் பெத்தவங்களோட பெருமை அடங்கி இருக்குனு அடிக்கடி சொல்வீங்க. இதுதான் இப்ப நினைவில் வந்து போகுது”.

“எனக்கு தேவையானத உங்களால முடிஞ்ச வரைக்கும் செய்றீங்க. படிக்கிற வயசுல படிப்பும் கிட்டல. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், அவங்களுக்கு பணிவுடைய செய்யறதுக்காக எட்டாங்கிளாசும் பாதியோட நின்னு போச்சு”.

“அரசாங்கம் கொடுக்குற உதவித்தொகை பாதி வயித்த காப்பாத்துது; பத்தாததுக்கு வீட்டு வேலைக்கும் போயிகிட்டு இருக்கேன்.”

“நான் படிச்ச படிப்புக்கு மனு கொடுத்தேன். ஆயம்மா வேலைக்கே ஆயிரக்கணக்குல கேக்குறாங்க. என்கிட்ட அடகு வைக்க என்ன இருக்கு…”

“அப்பா, நீங்க சொன்ன அறிவுரைகள் தான் எனக்கு எப்பவும் துணையா இருக்குது. என் வாழ்க்கைய நெனச்சு ரொம்பவும் எளச்சுட்டிங்க. உடம்ப கவனுச்சுக்கங்க”

அப்பா…

“புருசன இழந்ததுல இருந்து பூவையும் பொட்டையும் ஒதுக்கிட்டேன். நம்ம கலாச்சாரமும் இது தானே. நான் எங்க போனாலும் புருசன் புடிக்க போயிட்டானு என் கொழுந்தன்களும் மாமியாரும் பேசுறாங்க. எனக்குத் தெரியாம ஒண்டிபோட்டு பாக்குறாங்க. எதுத்துப் பேசுனா எவனையோ சேத்துக்கிட்டுத்தான் இப்புடி ஆடுறானு திட்டுறாங்க. நான் உங்க மகள். அப்படி போக மாட்டேன்”.

“உலை வாயை மூடினாலும் இந்த உறவுகள் வாயை மூட முடியலையே.. ”

“அப்பா…”

“பொண்ணா பொறந்தா காம கழுகுகள் வட்டமிடுவதும், புருசன இழந்தா மூட்டை மூட்டையா கதைகள் பெருகுவதும் வாடிக்கையா இருக்கே… இந்த நிலை மாறாதா…”

“பிரச்சனைனு எதையும் பார்க்காதனு அடிக்கடி சொல்வீங்க. அதுனால இதை பிரச்சனையாகவே நினைக்கல. இந்தத் தடைகளை கடந்து வாழமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கு…”

“என்னோட வாழ்க்கை யாருக்கும் வரக்கூடாது. பக்கத்து தெருல பொந்துலு அண்ணன் அதிகமா குடிக்கும். நான் சொன்னேனு சொல்லுங்கப்பா நிறுத்திடும்…”

“ஊர்ல இருக்க எல்லா பொம்பளப் புள்ளைங்களையும் நல்லாப் படிக்கச் சொல்லுங்க. எனக்குச் சொன்ன புத்திமதிய அவங்களுக்கும் சொல்லுங்க. மனசுக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”

“ஒரு நாளைக்கு வந்துட்டுப் போங்கப்பா. உங்களுக்குப் பிடிச்ச செவப்பு சால்வை வாங்கி வச்சுருக்கேன். வரும் போது மீன்கார தொரக்கண்ணு அண்ணன்கிட்ட ஏதாச்சும் மீனு வாங்கி வாங்கப்பா…”

அப்போது மகள் கலையரசி அழவும் தூக்கி மடியில் படுக்க வைத்துக்கொண்டு கடிதத்தை ஒட்டி முடித்தாள்.

தெருவில் ஆட்கள் நடமாட்டம் விடியலை உணர்த்தியது.

குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு வீட்டைப் பூட்டியவள் நடக்க ஆரம்பித்தாள்…

முச்சந்தியில் இருந்த தபால் பெட்டி இவள் வருகைக்காகவே காத்திருந்தது போல் வாயை திறந்து கொண்டிருந்தது. கடிதத்தைப் போட்டவள் கிழக்குப் பார்த்து நடக்கத் தொடங்கினாள் சக்தி நகர் நோக்கி…

கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *