அப்பாவின் தண்டனைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 9,212 
 

அப்பாவின் தண்டனைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான். நிர்ப்பந்தங்களும் அத்துமீறல்களும் தலைதூக்கி அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அப்பாவின் தண்டனைகளைத்தான் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது. நாகரிகம் அமைத்துக் கொடுக்கின்ற வேறு வகையான தண்டனைகள் மீது அவனுக்கு அத்துணைப் பிடிப்பில்லை.வீட்டில்,பணியிடத்தில், நண்பர்களோடு கலாய்த்திருக்கும்போது இப்படியான சந்தர்ப்பங்கள் சூழ்ந்துவரும்போதெல்லாம் அப்பாவின் முகம் மாறி மாறித் தோன்றுகிறது. போதைக்கு முன், சாந்த சொரூபியாகத் தோன்றுகிற அப்பாவின் பிம்பம் அதற்குப் பின் அப்படியே உடைந்து பல இராட்சஸர்களைத் தம்முள் இறக்குமதி செய்திருக்கும். இப்படியொரு பிசாசைப் பார்த்திருக்கவே முடியாது என்பது போல அவரின் அசைவுகளும் படுபயங்கரமாய்த் தோன்றும். இந்த இரண்டு விதமும் அவனுக்குப் பிடிக்கும்.அப்பாவின் எல்லாத் தண்டனைகளையும் அமல்படுத்த முடிந்த அளவுக்கு ஒன்றை மட்டும் நடத்த முடியவில்லை. அந்த ஒன்றுதான் அவனது தகர்க்க முடியாத் தடைக்கல். அ•து அம்மாவைச் சார்ந்த தண்டனைகளாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அப்பாவின் நஞ்சூறிய வார்த்தைகளாலோ, மிதிக்க வருகிற பாவனைகளாலோ இப்படி அம்மா வலியுறுகிறபோதெல்லாம் அவனுக்குள் அழுகை அழுகையாய் வரும். அணைக்கட்டு உடைந்து அழுதிருக்கிறான். மற்றபடி ஏனைய தண்டனைகள் முக்காலத்துக்கும் பொருந்துகிறபடிதான் உள்ளன. அவனது பெரிய பையனுக்கு இப்பொழுது ஒன்பது வயது. அவன் அட்டூழியம் பண்ணுகிறபோதெல்லாம் சாரீரம் அப்பாவைப் போல மாறி அவனைத் தண்டிக்கிறது. சின்னப் பையனிடம் அதிக பிரசங்கித்தனமாய் நடந்துகொள்ளாதீர்கள் என மனைவி தடுக்க வரும்போதெல்லாம் நிலைகுலைந்துபோய்விடுகிறான். அவனது கோபாக்கினை பையனுக்கு முன்னால் புஸ்ஸென்று அணைந்து வெறும் சாம்பல் மட்டும் மீந்து கிடக்கிறது.முன்பு அப்பா அவனைத் தண்டிக்கிறபோதெல்லாம் அம்மா தலையிட்டுத் தடுக்காமாட்டாமல் ஒரு மூலையில் நின்று தேம்பிக்கொண்டிருப்பார். இரவு முழுக்க மூக்கைச் சிந்திவிட்டு மறுநாள் வழக்கம்போல் மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வேலைக்காட்டுக்குச் சென்றுவிடுவார். வாரத்தில் எப்படியும் இரண்டு மூன்று முறை அரங்கேறிவிடும் ஈடிணையற்ற அப்பாவின் ஆட்டம். அது சில ஆண்டுகளுக்கு முன்பு! அப்பா மறைந்த பின்பு அவரது தண்டனைகளின் பரிமாணத்தை வயதுக்கேற்றாற்போல் இப்பொழுது வகைப்படுத்த முடிகிறது. உடல் தளர்ந்திருந்த அப்பாவின் அந்திம காலத்தில் அவரது பேச்சு ஏற்படுத்திய தண்டனை மற்றவற்றைக் காட்டிலும் இன்னும் வலிதாகத் தெரிகிறது. வயதுக்கேற்றபடி தண்டனைகளின் பாணியை மாற்றியமைத்திருந்தார் அவர். நாட்கள் நகர நகர அவற்றை நுண்மையாக்கிப் பார்க்கையில் தண்டனைகளின் தொடு எல்லை பிரமிப்பாய்த் தோன்றுகிறது அவனுக்கு.

அவன் அனுபவித்த முதல் தண்டனை…

அவனது கடைசித் தம்பியையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்துவிடுமாறு தலைமையாசிரியர் பழனியப்பன் இரு வாரங்களாகத் தோட்டத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்து கையெழுத்து வேட்டையில் இறங்கிய தருணம் அது. புதிய வருடம் திறந்ததும் தம்பியைக் கூடவே அழைத்துக்கொண்டு பள்ளிக்கு முதல் ஆளாய்ச் சென்றிருந்தார் அப்பா. அவன் அப்பொழுது அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அவனது வகுப்பிலிருந்து பார்த்தால் பள்ளியின் அலுவலகம் தெளிவாகத் தெரியும். ஒரு பத்து நிமிடங்களில் அப்பா வெளியே வர, அவரைப் பின் தொடர்ந்து தலைமையாசிரியரும் வந்தார். அப்பாவை அவரால் பிடிக்க முடியவில்லை. அவனது வகுப்பைக் கடந்துபோனபோது அப்பாவின் வாயிலிருந்து உதிர்ந்தவை இதுதான். “ஞாயம்னா அது பொதுதான். அதென்னா வாத்தியாருங்க புள்ளைன்னா மட்டும் பத்து மைலு அந்தாண்ட டவுன்ல மலாய் ஸ்கூல்லயும் நம்ம புள்ளைங்கன்னா தமிழ் ஸ்கூல்லயும்! என்னங்கடா ஞாயம் பேசுறானுங்க? எனக்கு இருக்கிற வெறிக்கு நான் வெட்டிப் போட்டுடுவேன்!நாம யென்னா கூலிக்காரனுங்களா? அதனாலதான் எங்கடைசி பையனெ வேணும்னே மலாய் ஸ்கூல்ல மொத ஆளா பதிஞ்சிட்டு வந்தேன்!” அந்த ஆண்டில் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படுவீழ்ச்சிக் காண, புகாரின் அடிப்படையில் தலைமையாசிரியர் வேறொரு பள்ளிக்கு மாற்றலாக வேண்டிய இக்கட்டு உருவானது. அதற்குப் பின் வந்த தலைமையாசிரியர் தம் மகனைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்திருந்தார் யாரிடமும் அதிகம் பழகவிடாமல்.

விவரம் அறியாத எட்டு வயதில் ஒரு தண்டனை…

அக்கம் பக்கத்திலிருந்து ஆறேழு கூட்டாளிகள் நொண்டியடிக்கும் விளையாட்டிற்காய் வந்திருந்தனர். ரொம்பவும் சுட்டித்தனமாய் விளையாடிக்கொண்டிருந்த அவன், அவர்களின் மொத்த பார்வையைத் திருப்ப வேண்டி ஒரு காரியம் செய்யப்போய், அக்கம் பக்க பெண்களெல்லாம் கைலியைச் சொருகிக்கொண்டு கையில் கூட்டுமாறும் கரண்டியுமாய்க் குழுமிவிட்டனர். விசயம் அப்பாவுக்கு எப்படியோ எட்டிவிட கர்ணகொடூரமாய் வந்து சேர்ந்த அடுத்த வினாடி, அவனைப் பிடறியில் தட்டித் தரதரவென்று இழுத்துப்போய்ப் புளியமரத்தடியில் நிற்கவைத்து ஒட்டுத் துணியில்லாமல் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். மாலை வெந்து எரிக்க புளிய மரத்தில் மேலும் கீழுமாய் ஊர்ந்த மொசுல் கூட்டம் எங்கெல்லாம் தீண்டக்கூடாதோ அங்கேதான் அவை மோளோரென்று கொலுவீற்றிருந்தன. இயற்கையே வந்து தண்டிப்பதுபோல யாவுமே அவனுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்புவது போலிருந்தது. மாலை ஏழு மணிவாக்கில் வந்த அப்பா, கட்டை அவிழ்த்தவாறு ஒன்றை மட்டும் சொல்லி எச்சரித்தபோது அவனுக்கு அழுகைகூட வறண்டுபோயிருந்தது. “டே! இனிமே பொம்பள புள்ளைங்களோட பாவாடைய தூக்குவியாடா?!”

பதினொரு வயது வாக்கில்…

ஆறேழு தடவை அவன் தவறு செய்வதற்கு ஒரே காரணம் மட்டுந்தான் இருக்க முடியும். அந்தத் தவறுகளின் நதிமூலம் அவனது தவறுதான். ஐந்தாம் வகுப்புத் தேர்வு வரை மோசமான புள்ளிகள் பெற்றபோதெல்லாம் அவனது தேர்வு அறிக்கையை அப்பாவிடம் காட்டாமல் தானே அவரைப் போல கையொப்பமிட்டுள்ளான். அப்படியாகக் கையொப்பமிட அவனுக்கேற்ற சந்தர்ப்பம் அப்பா சாராயத்தின் பிடியில் பலவீனப்படும்போதுதான். அதுவரை சமாளித்துத் தேர்வு அறிக்கையைப் பத்திரமாக வைத்து ஆசிரியரிடம் சாக்குச் சொல்லி வைப்பான். கொஞ்சம் அசந்தால் ஆசிரியரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பக்காவாக அமைந்திருக்கும் அவனது அப்பாவின் கையொப்பம். எட்டு வயதில் ஒரு தடவையும் ஒன்பது வயதில் சிலவும் பதினொரு வயதில் சில தடவையும் அந்தப் பாதகத்தைப் புரிந்திருந்துள்ளபோதும் அவன் படிப்பில் சுட்டிதான். இந்தத் துஷ்பிரயோகத்தைக் கண்டுபிடித்த இரவில் அவனை வீட்டை விட்டே துரத்த, எப்படியும் இரவைக் கழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவனுக்கு அந்தத் தோட்டத்தில் யார் வீட்டிலும் வாசற் கதவு திறக்கவில்லை. அன்றைய இரவு தோட்ட லயன்களைச் சுற்றிவிட்டு வேறு வழியேயின்றி தோட்ட நுழைவாயிலில் வீற்றிருந்த மாரியம்மன் வளாகத்தில் இரவைக் கழிக்க முடிவெடுத்திருந்தான். அங்குச் சின்னஞ் சிறிய அகல் விளக்கொளியில் அரிவாளுடன் முறுக்கு மீசை சகிதமாய் முட்டைக் கண்களுடன் நின்றிருந்த முனியாண்டி சாமியைப் பார்த்தபோது ஏதோ பிள்ளை பிடிக்கிற ஆசாமியைப் போல மருண்டு போனான். அம்மனைப் பார்க்கவும் அப்படித்தான் இருந்தது.பின்னிரவு பன்னிரண்டு வருவதற்குள் அங்குத் தங்குவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஆலயத்தைக் காலி செய்துவிட்டு உறங்காத விழிகளாய் நிலவின் ஒளியில் கொல்லைப் புறமாய்ப் பொழுதைக் கழிக்க வேண்டியதாயிற்று. அதிகாலைவரை கொசுக்கள் மிகவும் அந்நியோன்னியமாய்க் குன்னக்குடி வைத்தியநாதன் அளவுக்கு வயலின் வாசித்தன. மறுநாள் காலையில் அப்பா கேட்டார் “இதான் நீ படிக்கிற லச்சணமா? இனிமே இப்படி ரிப்போர்ட் கார்டுல சைனு போடுவீயாடா…!”

பன்னிரண்டு முதல் பதினாறு வரையில்…

கிணறு முன்பு போலில்லை. மாலையில் ஒரு நாள் கிணற்றுக்கு நண்பர்களோடு குளிக்கச் சென்றான்.பெரியவர்கள் சிறியவர்களென வித்தியாசமின்றி பொதுவான திறந்தவெளிக் கிணற்றடி அது.நடுவில் ஒரு தடுப்பு. தடுப்புக்கப்பால்தான் பெண்கள் குளிக்கின்ற பகுதி.பெரும்பாலும் அவர்களின் மாசுமறுவற்ற குரலைக் கேட்டுக்கொண்டே குளித்து முடிப்பது வழக்கம்.அறுபதைத் தாண்டியவர்கள் கோவணம் கட்டிக்கொண்டு குளிப்பதும் இளையவர்கள் உள்சிலுவார் அணிந்து குளிப்பதும் மற்றப் பொடியன்கள் அம்மணமாய்க் குளிப்பதும் வழக்கம். இளையவர்களில் திருமணமானவர்களும் ஆகாதவர்களும் குளிக்கின்ற காட்சி அவனுக்குள் தனி ஈர்ப்பைக் கிளர்த்தும். அதுவும் குறிப்பாகக் கொசகொசவென்று உரோமம் உள்ளவர்கள் குளிப்பதைப் பார்க்க பிரத்தியேகமாய் இருக்கும். அவனது காத்திருப்புக்கு ஒரு முன்னோட்டச் சம்பவம் உண்டு. நாதன் என்பவருக்குத் திருமணமாகி முதல் குழந்தைக்கு இன்றோ நாளையோ காத்திருந்த நேரம். கிணற்றில் அதிக நேரம் செலவிடும் மனிதன் அவராகத்தான் இருக்கும். ஒரு நாள் அவன் சீக்கிரமாகச் சென்றபொழுது சவர்க்கார நுரை ததும்ப சலக் சலக் என்ற சத்தத்தில் கரமைதுனம் செய்துகொண்டிருந்தார். சிலுவாரைக் கழற்றாமல் முட்டிக்கொண்டிருந்த குறியை தடவியும் உருட்டியும் அவ்வப்போது எச்சிலைத் துப்பியபடியும் கண்களை மூடிக்கொண்டு இன்பம் துய்த்துக்கொண்டிருந்த வேளை, அவன் கிணற்றின் வாயிலில் நின்றுகொண்டிருந்ததை அவர் கவனித்துவிடவே, அவனையும் கரமைதுனம் செய்யச் சொல்லி உசுப்பேற்றினார். சில நாட்களுக்குப் பின்பு அவனாகவே கற்றுக்கொண்டான்.நாதன் என்பவரிடம் வயற்காடு உண்டு. காலை பால்வெட்டுகின்ற நேரம் போக மாலையில் அங்குத்தான் இருப்பார். ஒரு முறை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் களத்துமேட்டின் கொட்டகையில் அவனை ஓரினப்புணர்வில் மோகித்திருந்தார். காலப்போக்கில் அவனுக்குச் சுய இன்பம் ஒரு வழக்கமாகிச் சோகை படர்ந்தது போல் தொங்கிக் கிடந்தான். அப்பாவுக்கு அவனது நடவடிக்கைகளின் மீது சந்தேகம் படர ஆரம்பித்தது. தோட்டத்து லயத்து வீடுகளில் ஐந்து குடும்பங்களுக்கு வீதம் கழிப்பறை இருந்தது. ஒவ்வொரு தடவையும் பள்ளி திரும்பியவுடன் பிற்பகல் இரண்டு மணி வாக்கில் கழிப்பறையில்தான் அவனது பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன.அப்பா அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்வார்.அவனுக்கு அது விளங்காமல் இருந்தது. குளியலறையில் அவன் இருக்கும்போது அப்பாவின் இந்தப் பழமொழி அவனைத் தொய்விழக்கச் செய்தாலும் கடைசியில் தானே வென்றுவெடுவதாய்த் தோன்றிடினும் அந்த அற்ப வெற்றிக்குள் ஒரு தீராத் தோல்வியும் அடிநாதமாக இழைவதை அவன் மறுக்கவில்லை. அந்தப் பழமொழி இதுதான்: ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’.

பதினெட்டு வயதில் …

தேர்வு நேரம் அது என்பதால் அவன் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தான். நாளை தமிழ் மொழித் தாள்! சாராயத்தை மூக்கு முட்ட நெட்டிவிட்டு இரவு வந்து சேர்ந்த அப்பா ஒரு வேலையைச் செய்தார். வானொலியைப் பெட்டியைச் சத்தமாகத் திறந்து கிட்டப்பா காலத்துப் பாடலொன்றைக் கேஸட்டின் மூலம் ஒலிபரப்பி நன்றாகக் கேட்கச் சொல்லி பின்னர் அரை மணி நேரம் கழித்து அதன் உட்பொருளைச் சொல்லவேண்டுமென்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு எங்கேயோ புறப்பட்டார். இளையராஜாவின் இசையில் பழக்கப்பட்ட அவனுக்கு அரை மணி நேரத்தை நகர்த்துவது என்னவோ தேர்வைவிட கடுமையாயிருந்தது. கிட்டப்பா பாடல் உள்ளபடியே அவனுக்குத் துளியளவும் விளங்கவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டு, அழாத குறையாக மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தான். குறிப்பிட்ட நேரம் தாண்டி இரவு பத்து மணியளவில் வந்து சேர்ந்த அப்பா, அவனை முன்னால் உட்கார்த்திப் பாடலின் பொருளைக் கேட்டார். அவனால் பாடலின் அடியைக்கூட ஞாபகப்படுத்திக் கூற இயலாததால் அவனை அடிக்க கையை ஓங்கினார். அவன் பதறிவிட்டான். பின்பு, அவரே எல்லாவற்றையும் விளக்கிக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு படுப்பதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொன்னார். “டே மணிமாறா, வெளங்கிக்கிற எதுவும் பாடந்தான். எதையும் வெளங்கிப் படிக்கோணும். பக்கம் பக்கமா படிச்சா மட்டும் போதுமாடா? என்ன படிச்சம்… ஏது படிச்சம்னு தெரிய வேணாமா? போடா… போயி தூங்கு. பாஸாயிடுவ!”

இருபத்தைந்து வயதில்…

கல்வியில் ஒருவாறாகத் தேறி கோலாலம்பூரிலுள்ள கல்லூரியில் பொறியியல் படிக்கச் சென்றான்.நான்கைந்து ஆண்டுகளில் டிப்ளோமாவும் இளங்கலைப் பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு அப்படியே அவனுக்கு அவ்விடத்திலேயே வேலையும் கிடைத்தது. முறுக்கேறிய அவனது பால்ய உணர்வுகளும் சில பழக்கங்களும் காட்டாற்று வெள்ளமென வீரியமாய் எழுந்துவருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. வறண்ட நிலத்தில் நீர் தேடி அலையும் மானைப்போல் திக்குத் தெரியாத தவிப்பும் அவனுக்குள் கனன்றுகொண்டிருந்தது. ஆனாலும், அந்தச் சபலங்களை வெளியில் காட்டிக்கொள்ளாதபடியான கவனமும் இருந்தது. அவற்றிற்கெல்லாம் அவனிடம் சுய வடிகால் இருந்ததேயொழிய தவறியும் சிவப்பு விளக்குப் பகுதியின் வாடையே வேண்டாமென வரையறையைத் தன்னில் வகுத்துக்கொண்டிருந்தான். ஒரு சில ஆண்டுகளில் அவனது தேகம் மெலிந்துபோய் கண்களில் கருவளையும் படர உலர்ந்த குச்சியைப் போல் தோற்றமளித்தது. குறிப்பிட்ட விடுமுறை காலத்தின்போதுதான் தன் குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்குச் செல்வான். அப்பொழுது யாரும் தோட்டத்தில் வசிக்கவில்லை. அவன் மேற்படிப்புக்குச் சென்ற சமயம் குடும்பம் நகர்ப்புறத்திலுள்ள வீடமைப்புப் பகுதிக்கு மாற்றலாகியிருந்தது. வீட்டில் அவனுக்குப் பெண் பார்க்கத் தொடங்குவதைப் பற்றிய பேச்சை அப்பா தொடங்கியபோது அவனுக்குள் பதற்றம் நிலவியிருந்தது. திருமணப் பேச்சை முற்றாய் மறுதலித்துப் பேசினாலும் அவன் மனசுக்குள் கவிந்திருக்கும் ஆண்மை குறித்த பலவீனமான எதிர்மறையெண்ணத்தை அப்பா உணர்ந்திருந்தார். அவன் அவ்வாறு எண்ணுவதற்குச் சிறு வயதிலிருந்தே தான் சொன்ன அந்தப் பழமொழியும் அ·து உண்டாக்கிய உட்பொருளின் அச்சுறுத்தலுந்தான் காரணமென்று அவருக்கும் நன்றாகவே தெரியும். இவற்றை உணர்ந்துகொண்டு எல்லோர் முன்னிலையிலும் அப்பா அழுத்தமாய்ப் பேசினார். “டே, ஒனக்கு ஏத்த பொண்ணு இருக்காடா. ரொம்ப படிக்கலெ. சாதாரண வேலைதான் செய்யுறா. ஒனக்கு அடங்கி குடும்பத்த நல்லா பார்த்துக்குவாடா! நீ யாரையாவது பார்த்திருந்தா சொல்லு!” என்றார். அவன் திரும்பவும் தன் முடிவில் மாறாதிருந்தது அப்பாவுக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி மறுபடியும் அவரை மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கியது. நகர்ப்புறக் கடைவீதிகளின் சாராயக் கடைகளில் மூழ்கிப் புலம்பிக்கொண்டிருந்தார். அப்பாவின் புலம்பல் நகர் மனிதர்களின் மூலமாக அவனது காதுக்கு எட்ட மனமுடைந்துபோனான். அப்பாவின் இந்த நடவடிக்கை தனக்கு வழங்கப்படும் தண்டனைதானோ எனும் எண்ணம் இன்னும் அழுத்தமாய் உருவாகி ஒருவகை மன உளைச்சலை அவனுக்குள் உண்டுபண்ணியிருந்தது. மதுவீச்சத்துடன் சாலையில் படுத்துக்கிடப்பதும் போவோர் வருவோர் அதைப் பற்றி ஏளனமாக விமர்சிப்பதும் தன் கெளரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் பெருந்தண்டனையாகப் பட்டது. பிரம்மச்சரிய வேடம் எதற்கு எனச் சில இரவுகளில் அவன் சிந்தித்து ஒரு முடிவெடுத்திருந்தான். இல்லையெனில், போதை வெறியில் பொது இடத்திலும் அப்பா தன்னை எட்டி உதைக்கவும் தயங்கமாட்டார் என்ற பயமும் அவன் உள்ளத்தில் இருந்தது.

கடைசியாய் முப்பத்திரண்டு வயதில்…

ஒரு தீபாவளி நாளில் கைநிறைய துணிமணிகளை வாங்கிக்கொண்டு கூடவே அவளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். கோலாலம்பூரிலிருந்து வீட்டுக்குச் செல்கிற வரைக்கும் அவனுக்குள் கிளம்பிய பீதியை அவள்தான் கட்டுப்படுத்திக்கொண்டே வந்தாள். சில இடங்களில் அவளாகவே வாகனத்தைச் செலுத்த வேண்டியதாயிற்று. வீட்டையடைந்த போதுகூட அவனாக முன் செல்லவில்லை. அண்டைவீட்டார்கூட ஏதோ தங்கள் வீட்டுக்குத்தான் புதுக்கார் வந்து இறங்குகிறது என்றெண்ணி “ஹாய் மணி!” என்று புன்முறுவலித்துத் தங்கள் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்தனர். அடுத்து நடக்கப்போகும் போரை நினைத்துக்கொண்டிருக்கையில் இவர்களிடம் முகம் கொடுத்துக்கூட பேச முடியவில்லை. தன் வாணாளின் உச்சத்தைத் தீர்மானிக்கும் அப்பாவின் படுபயங்கரத் தண்டனையை வாங்கியே தீரவேண்டும் என்பதைத் தான் கரம்பற்றப்போகும் இவளைச் சந்தித்த இருமாதங்களுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டான். நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிற வரைக்கும் அப்பா ஏசலாம்… உள்ளே நுழையாதடா என்று வாயிற்கதவை ஓங்கியறையலாம்… மதுப்புட்டியால் தன்னைத் தாக்க வரலாம்… அம்மாவைக் கண் முன்னே போட்டு மிதிக்கலாம்… அல்லது நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்குப் பேரவலம்… அல்லது ஒரு மரணமேகூட நிகழ்ந்தாலும் நிகழலாம்! அப்பா எதுவும் செய்யக்கூடியவர்! பழைய தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்ணெதிரே வரிசை பிடிக்க, இதுநாள்வரை உணர்ந்திடாத உச்சபட்ச சோர்வும் பதற்றமும் அவனைத் தளர்வடையச் செய்திருந்தன. ஆண்பிள்ளை அழலாமா என்று அவள்தான் அருகிலிருந்து தேற்றினாள்.

வீட்டுக் கதவு திறந்தது. அம்மாதான் முன்னறி தெய்வமாய்த் தோன்றினாள். அவளது முகத்தில் படர்ந்த கலவரத்தை அவன் கவனிக்காமலில்லை. அந்தக் கலவரத்தினூடே அம்மா வலப்பக்கமாய் நோக்கினாள். அவனுக்குத் தெரியும் அம்மா யாரை அப்படிப் பார்க்கிறாரென்று. அவர்களால் வாசற்படியிலிலிருந்து ஓரடியைக்கூட முன்னெடுத்துவைக்கமுடியவில்லை.

அப்பா எழுந்து வந்தார். வந்தவர் அவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒரு வார்த்தையும் உதிர்க்காது அவர்களைக் கடந்து சென்று மோட்டார் சைக்கிளை முடுக்கினார்.

“அப்பா!” குரலை அடக்கி இழுத்தான்.

“டே… கொஞ்ச நேரம் பொறுடா! டவுனுக்குப் போயி கோழி வாங்கிட்டு வரென்!” அப்பாவின் வண்டி நகர்ந்தபோது அம்மா அவர்களை வாரித் தழுவிக்கொண்டு அன்பு முத்தம் பதித்தபோது என்றுமில்லாத ஒளிப்பிரவாகம் அவள் முகத்தில் துளிர்த்தது.

“மோய், ஷீ இஸ் மை மதர். யூ க்கால் அத்தே!”

“அத்தே!” என்று கொஞ்சு தமிழில் பாதம் பணிந்தாள் லீ மோய் சுவான்!

அவனது கண்கள் அப்பாவையே தேடிக்கொண்டிருந்தன. தான் அப்பாவைத் தண்டித்துவிட்டோமோ என மனசு பரபரத்தது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *