அப்பாவின் கோபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 2,261 
 

(இதற்கு முந்தைய ‘அப்பாவின் கல்யாணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

அவர்களைப் பொறுத்தவரை சாப்பாடு என்றால் அது மாமிச உணவுதான். வேற எதைச் சாப்பிட்டாலும் அதை அவர்கள் நல்ல சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். கறிச்சாப்பாடு ரொம்ப உசத்தியானது.

அதுவும் ஒரு வளரும் பையனுக்கு ரொம்ப அவசியமானது. அவன் பாவம் உப்புச்சப்பில்லாத உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்… அவன் உடம்பு தேறப் போறதே கிடையாது … அவன் மொத்த சொந்தக்காரர்களின் அபிப்பிராயங்கள் இதெல்லாம்.

எப்போதாவது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு அவன் போகும்போது அவன் காதாலேயே இந்த அபிப்பிராயங்களைக் கேட்டிருக்கிறான். அந்த மாதிரி நேரங்களில் சில உறவினர்கள் ரகசியமாக அசைவ உணவு சாப்பிடுவதற்கு அவனைத் தூண்டுவார்கள். ஒருமாதிரி ஆசை வேறு காட்டுவார்கள்.

அவன் அப்பாவிற்குத் தெரியாமல் வைத்தக் கொள்ளலாம் என்று ரொம்ப உறுதியாகச் சொல்வார்கள். ஆனால் அவனுக்குள் மாமிச உணவு சாப்பிட்டுப் பார்க்கிற ஆசை ஒருநாளும் வந்ததில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் சாப்பிடுவதில் அவனுக்குப் பெரிய கஷ்டம் எதுவும் கிடையாது. ஆனால் அவனுக்குள் அந்த எண்ணம் வந்ததில்லை.

ஒருசமயம் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அப்போது அவனுக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளிக்கூடம் கிடையாது. விளையாடுவதற்காக மாணிக்கம் மச்சான் என்பவரின் வீட்டுக்குப் போயிருந்தான்.

அவன் வயதை ஒத்த பையன்கள் மாணிக்கம் மச்சான் வீட்டில் இருந்தார்கள். விளையாட்டு முடிவுக்கு வராமல் போய்க்கொண்டே இருந்ததில் மதியம் அங்கேயே இருந்து அவனை சாப்பிட்டுவிட்டு போகச் சொன்னார்கள். சரியென்று சொல்லி மதிய உணவுக்கு அங்கேயே இருந்து விட்டான். அவனுக்காக தனியாக கருணைக்கிழங்கு குழம்பும், முட்டைக்கோஸ் பொரியலும் செய்திருந்தார்கள்.

மற்ற பையன்களுக்கு ஏதேதோ மட்டன், சிக்கன் வகையறாக்கள். கருணைக்கிழங்கு குழம்புச் சோறு பாதிக்கும் மேல் அவன் சாப்பிட்டிருந்தான்.

மாணிக்கம் மச்சான் அவனைப் பார்த்து ஒரு மாதரியான கிண்டல் குரலில், “கொழம்பு நல்லா இருக்கா மாப்ளே?” என்று கேட்டார்.

“நல்லா இருக்கு மச்சான்…”

“நெசமாவே நல்லா இருக்கா?” மறுபடியும் கேட்டார்.

“நல்லாயிருக்கு மச்சான்… ஏன் இப்படிக் கேட்கறீங்க?”

“மாட்டிக்கிட்டே மாப்ளே… நீ செமத்தியா மாட்டிக்கிட்டே, கொழம்புல கருணைக்கிழங்கோட ஒனக்குத் தெரியாம கொஞ்சம் ஆட்டுக் கறியையும் கலந்து வச்சிட்டோம். நீயும் நல்லா சாப்பிட்டுத் தள்ளிப்பிட்டே… ஹி ஹி.”

மச்சான் இப்படிச் சொன்னதும் அங்கே இருந்த எல்லோரும் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்கள்.

அவனுக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது. தொடர்ந்து மோர் சோறு சாப்பிடாமல் அப்படியே எழுந்து கையைக் கழுவிவிட்டு அவன் தன் வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டில் அப்பாவைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அழுதுகொண்டே அப்பாவிடம் நடந்ததைச் சொன்னான். கோபத்தில் அவன் அப்பாவின் பெரிய மூக்கு சிவந்து விட்டது சிவந்து…

வேலைக்காரனை அனுப்பி மாணிக்கம் மச்சானை உடனே வீட்டுக்கு வந்துவிட்டுப் போகும்படி சொல்லச் சொன்னார். ஆனால் மச்சான் உடனே வரவில்லை. ஒரு மணிநேரம் கழித்து சற்றுத் தயங்கி தயங்கி வந்தார். அவருடைய முகத்தில் பயம் அப்பியிருந்தது.

மச்சான் மெளனமாக வந்து அவன் அப்பாவின் எத்ரில் நின்றார். அப்பாவும் சிறிது நேரம் மாணிக்கம் மச்சானை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, அவரை உட்காரச் சொல்லவில்லை. மச்சானை கொஞ்சம் முறைத்துப் பார்த்தவாறு அவனும் அப்பாவின் பக்கத்தில் வந்து ஒட்டி நின்றான்.

“எதுக்காக அந்த மாதிரி செஞ்ச?”

“தப்புத்தான் மாமா… தெரியாம செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிருங்க.”

அவன் அப்பா சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்.

“மன்னிப்பை அவன் கிட்டேயே நீ கேளு…”

அப்பா இப்படிச் சொன்னதும் மாணிக்கம் மச்சானின் முகம் சட்டென மாறி விட்டது. இதை அவர் எதிர் பார்க்கவில்லை. அவனும் எதிர் பார்க்கவில்லை. மச்சானுக்கு அவனிடம் மன்னிப்பு கேட்பதற்கு வாய் வரவில்லை. எரிச்சலோடு அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.

“அவன்கிட்டே மன்னிப்பு கேட்காம நீ இந்த இடத்தைவிட்டு நகர முடியாது.”

அப்பா குரலை கொஞ்சம் உயர்த்திச் சொன்னார். மச்சானுக்கு வேறு வழியில்லை. “தெரியாம செஞ்சிட்டேன் மாப்ள என்னை மன்னிச்சிடு.”

வேண்டா வெறுப்பாக அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மச்சான் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்று வெளியேறி விட்டார். இந்தச் சம்பவம் அவனுக்கு ஒரு விதத்தில் சாதகமாகி விட்டது. ஆம்… அவன் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிற வழக்கத்தை கேலியும் கிண்டலும் செய்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த மாதரிப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். நிம்மதியாக இருந்தது அவனுக்கு.

அவன் ஊரில் மாமிச உணவு சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு அவ்வப்போது வேறு ஒரு தர்ம சங்கடமான நிலை ஒன்று வரும்.

ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற எல்லா மாதங்களிலும் அந்த ஊரில் ஓயாமல் கல்யாணங்கள் வந்துகொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் கல்யாணச் சத்திரங்கள் என தனியாக ஒன்று கிடையாது. கல்யாணங்கள் அவரவரின் வீடுகளிலேயேதான் நடக்கும். ஒவ்வொரு வீடும் அதற்கேற்ற மாதிரி பெரிது பெரிதாக இருக்கும்.

யாருடைய வீட்டில் கல்யாணம் என்றாலும் விருந்துச் சாப்பாடு அப்போது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உண்டு. கல்யாணத்துக்கு முந்தின நாள் மதியம் ஆரம்பிக்கும் விருந்துச் சாப்பாடு கல்யாணத்துக்கு அடுத்தநாள் மதியத்துடன் முடியும். முதல் இரண்டு நாளும் விருந்தில் சைவ உணவு மட்டும்தான். அசைவ உணவு எதுவும் கிடையாது. மூன்றாவது நாள் காலையிலும் மதியமும் கறிச்சப்பாடு ரொம்ப விசேஷமாக இருக்கும்.

விருந்தாளிகள் அனைவரும் இதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். காலை விருந்தில் இட்லி, பூரி, பரோட்டா என்று வரிசையாக ஒவ்வொரு பலகாரமாக சுடச்சுட வரும். அதற்கு தொட்டுக்கொள்ள கொத்துக்கறி; ஈரல்; சாப்ஸ்; சால்னா என விதவிதமான மாமிச அயிட்டங்கள் தொடரும். இடைச் செருகலாக மசாலா ஆம்லேட் வேறு…

ஒவ்வொரு பந்தியும் முடிய குறைந்தது ஒருமணி நேரமாவது ஆகும். விருந்தாளிகள் அந்த மாதிரி மூக்குப் பிடிக்க சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். சாப்பிட்டது போதும், எழுந்து கொள்ளலாம் என்று ஒருத்தருக்கும் தோன்றாது. இப்படி வக்கணையாக காலை விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்யான வேளை வந்துவிடும்.

உடனே ஆரம்பித்து விடும் மதிய விருந்து.

இந்த மூன்றாவது நாள் மதியச் சாப்பாட்டில் பரிமாறப்படுவது அனேகமாக கோழிப் பிரியாணியாகத்தான் இருக்கும். முட்டை இடத் தொடங்கியிராத நல்ல ‘வெடைக் கோழியாக’ பார்த்து வாங்கி வந்து பிரியாணி பண்ணுவார்கள். பிரியாணி வாசனை தூக்கியடிக்கும். அந்த வாசனைக்கு மட்டுமே கப கபவென பசி எடுக்கும்….

இந்த கோழிச் சமாச்சாரம் பிரியாணியோடு மட்டும் நின்றுவிடாது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *