அப்பாவிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2024
பார்வையிட்டோர்: 171 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ரெயில்வண்டி ‘கூ!-‘ என்று கத்திவிட்டது. அது உடனே புறப்பட்டுக்கூட இருக்கும். ஆனால் கார்டுக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் ஸ்வா ரஸ்யமான சம்பாஷணை ஒன்று நடந்துகொண் டிருந்ததால் இரண்டு நிமிஷம் தாமதமாயிற்று.

“தெரியும், தெரியும்! வாலை ஓட்ட அறுத்து விடு கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே ‘கார்டு’ ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கொடி காண்பித்தார். இரண்டு பேருக்கும் என்னவோ சண்டை நடக்கிறது என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு, வண்டியிலிருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தவர்கள் ‘கார்ட்’டின் கையில் ஒரு சின்னக் குச்சு நாய்க்குட்டி இருந்ததைப் பார்த்து ஏமாந்துபோய்த் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்கள்.

அதே சமயத்தில், “நாசமாய்ப் போக!” என்று அந்த ரெயில் வண்டியைச் சபித்தவாறே வைத்தா, டிக்கட்டை வாங்கிக்கொண்டு, “ஓடு ! ஓடு!” என்று சாமான் தூக்கி வந்தவனைத் துரிதப்படுத்திக் கொண்டே ஓடி வந்தான். தினம் ஒன்பதே கால் மணிக்கு வரும் எட்டு மணி வண்டி இன்று ஒன்பது அடித்துப் பத்து நிமிஷத்துக்கே வந்து விட்டதால்தான் அவனுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

கூலிக்காரன், ஜன்னல் வழியாய்ப் பெட்டியையும் படுக்கையையும் ஒரு வண்டிக்குள் போட்டுவிட்டு, “சாமி! ஏறுங்க, ஏறுங்க!” என்று கத்தின சம யத்தில் வண்டி புறப்பட்டுவிட்டது. வைத்தா ஓடுகிற ரெயிலில் தொற்றிக்கொண்டான். ஆனால் இந்தக் கதவு ஏன் திறக்கமாட்டேன் என்கிறது? வண்டிக்குள் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் வாண்டுப்பயல் ஏன் இப்படிச் சிரிப்பை அடக்க முடி யாமல் அவஸ்தைப்படுகிறான்?

வைத்தா கதவைப் பலமாகப் பிடித்து ஆட்டின போது உள்ளேயிருந்து உச்சிக் குடுமியுடன் கூடிய ஒரு தலை வெளியே வந்து அவனை முறைத்துப் பார்த்தது. “ஏன், ஓய்! இங்கே இடம் எங்கே இருக் கிறது என்று உள்ளே வரப் பார்க்கிறீர்?” என்று கேட்டது.

இந்தக் கதவு பூட்டியிருக்கிறதா என்ன? இதைக் கொஞ்சம் திறந்துவிடுமே” என்றான் வைத்தா.

“சாவி இங்கே யாரிடம் இருக்கிறது?” என்று கையை விரித்துவிட்டு அந்த மனிதர், “சிலு சிலு என்று காற்றடிக்கிறதே! மழைத்தூறல் போடுகிறதா என்ன, பாருமே” என்றார்.

‘மழை பெய்கிறதா’ என்று வைத்தா கையை நீட்டிப் பார்க்கவில்லை. கோபத்தோடு, “இந்தக் கதவை யார் பூட்டினார்கள்?” என்றுதான் கேட்டான்.

அப்போது, “அதுவே பூட்டிண்டுடுத்து, மாமா” என்று சொல்லிவிட்டு வாண்டுப் பயல் தன் காலடியில் கிடந்த வைத்தாவின் சாமான்களைப் பார்த்துச் சிரித்தான். இதைக் கேட்டதும், அந்தப் பெஞ்சியின் மற்றொரு கோடியில் உட்கார்ந்திருந்த பதினைந்து வயசுப் பெண்ணுக்குச் சிரிப்பை அடக்க முடிய வில்லை. ‘கிக்–கிக்-கிக்’ என்று திணறிக்கொண்டு அவள், ஜன்னலுக்கு வெளியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

வைத்தா அவளை எரித்து விடுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘உம்’ மென்று ஒரு மூச்சுப் பிடித்துத் தன் சாமான் போன வழியே தானும் ஜன்னல் வழியாய் உள்ளே குதித்தான்.

எட்டே பேர் உட்காரக்கூடிய அந்தச் சின்ன வண்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல் தோன்றியது. உச்சிக் குடுமிக்காரரும், அந்த வாண்டுப் பயலும் இந்தப் பக்கம் ஜன்னலருகில் எதிர் எதிராக உட்கார்ந்திருந்தார்கள். வாண்டுப் பயல் பயல் உட்கார்ந் திருந்த பெஞ்சியின் மற்றொரு பக்கத்தில் நாற்பது வயசு ஸ்திரீ ஒருத்தியும், அவள் பக்கத்தில், எதையோ நினைத்து நினைத்து இன்னும் சிரித்துக் காண்டே இருந்த அந்தப் பதினைந்து வயசுப் பெண்ணும் இருந்தனர். இவர்களுக்கு நடுவில் ஓர் உருவம் தலையிலிருந்து கால்வரையில் பச்சைக் கம் பளியால் போர்த்திக்கொண்டு படுத்திருந்தது. எதிரி லிருந்த பெஞ்சியில் உச்சிக் குடுமிக்காரர் படுக்கையை நீளமாக விரித்துப் போட்டுக்கொண்டு அதன்மேல் காலைச் சப்பளங் கூட்டிக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருந்தார், இன்னொரு கோடியில், பல்லுப்போன கிழவர் ஒருவர், அது வரையில் நடந்தது ஒன்றுமே தமக்குத் தெரியாதவர்போல், என்னவோ மந்திரத்தை வாய்க்குள் முணுமுணுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

வைத்தா, ஒவ்வொருவர் முகத்தையும் இரண்டு நிமிஷம் பார்த்துவிட்டுக் கடைசியில் படுத்திருந்த உருவத்தின் காலைத் தொட்டு, “ஸார், காலைக் கொஞ்சம் மடக்கிக் கொள்கிறீர்களா? உட்கார்ந்து கொள்கிறேன் ” என்றான்.

‘ஸார்’ பச்சைக் கம்பளியை விலக்கிக்கொண்டு வனை உற்றுப் பார்த்தார். அந்த அந்த உருவம் தலை நரைத்த ஒரு பாட்டியம்மாளாக இருந்ததைக் கண்டதும் வைத்தா திடுக்கிட்டுப் போனான்.

“இந்த வண்டியில் இடம் இல்லை என்று சொன் னேனோ இல்லையோ?” என்று ஆறுதல் வார்த்தை சொன்னார் உச்சிக் குடுமிக்காரர்.

ஜன்னல் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு மறுபடியும், ‘கிக்-கிக்-கிக்’ என்று சிரிப்பு கேவிக் கொண்டே போயிற்று.

வைத்தா அவளைத் ‘திரு திரு’ என்று இன்னொரு பார்வை பார்த்துவிட்டுப் படுக்கையில் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

“ஸார், பையன் படுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் படுக்கை போட்டிருக்கிறேன்” என்றார் அந்த மனிதர்.

“பேஷாய்ப் படுத்துக்கொள்ளட்டுமே; நான் அந்த இடத்தில் உட்கார்ந்துகொள்ளுகிறேன்.”

“வேண்டாம்பா ; நான் இங்கேயே உக்காந்துண்டு வேடிக்கை பார்க்கிறேன்” என்றான் வாண்டுப் பயல்.

தகப்பனார் பல்லைக் கடித்துக்கொண்டு எதிரே உட்கார்ந்திருந்த தம் மனைவியைக் ‘கடு கடு’ என்று பார்த்தார். ‘இந்த மாதிரி அசட்டுக் குழந்தை நமக் கென்று வந்து பிறந்திருக்கிறதே!’ என்ற அர்த்தம் அதில் தொனித்தது.

“நீர் எதுவரையில் போகிறீர்?” என்றார் மறுபடியும் வைத்தா பக்கம் திரும்பி. சேலம் என்றதும் அவர் முகம் இன்னும் கறுத்தது. வைத்தா, “யமலோகம் வரையில் போகிறேன்” என்று சொல்லி யிருந் தால்கூட, சந்தோஷமாக அவனை வழியனுப்பிவிட்டிருப்பார் போல் தோன்றியது.

“சேலமா? சேலத்திலே யார் வீடு?”

“யார் வீடும் இல்லை.பத்து நாள் லீவில் போகிறேன். எங்கேயாவது ஹோட்டலில் இருந்து கொண்டு மேட்டூர் முதலிய இடங்களைப் பார்க்கலாம் என்று உத்தேசம்.”

இது பெரிய புளுகுதான். வைத்தாவும் தன்னுடைய சொந்தக் கல்யாணத்துக்குத்தான் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தான். ஆனால், அந்த மனிதரிடம் ஏற்பட்டிருந்த கோபத்தில், அவரிடம் ஏன் உண்மையைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதால் ஏதோ ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தான்.

“நாங்களும் சேலத்துக்குத்தான் போகிறோம்” என்று சொல்லிவிட்டு அந்த மனிதர் தலையை ஆட்டிக் கொண்டே சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார். “‘நீங்கள் சேலத்துக்குப் போகவில்லை. பொய் சொல்கிறீர்கள்’ என்று யாராவது சொல்லட்டும், அவர்களை என்ன பண்ணுகிறேன் பார்!” என்று ஒவ்வொருவரையும் பார்த்து அவர் பயமுறுத்துவதுபோல் இருந்தது.

இந்தச் சமயத்தில் வாண்டுப் பயல் தூங்கி விழவே, வைத்தாவும் அவனும் அவனும் இடம் இடம் மாற்றிக் கொண்டார்கள். இதில் உச்சிக் குடுமிக்காரர் கோபம் பாதி தணிந்தது.

“ஏன் ஸார்? இன்றைப் பேபர் பார்த்தீர்களோ? என்ன போட்டிருக்கான்?” என்று கேட்டார்.

“என்ன இருக்கு? எங்கே பார்த்தாலும் இப்போது நம்பளவனுக்குத்தான் ஜயமாம்.”

“ஆமாமாம்!-அதைக் கேட்கவில்லை நான். என்னவோ வால் நட்சத்திரம் வரப் போகிறது என்று போட்டிருந்ததே; அதைப்பற்றி இன்னும் ஏதாவது வந்திருக்கோ என்கிறேன்.”

“உம்-ஒன்றும் காணோம். வாலாவது நட்சத்திரமாவது!”

“என்ன ஓய், இப்படிச் சொல்கிறீர்? உலகமே தலை கீழாய்ப் போகப் போகிறதாம். ஒரு படி பால் வாங்கினால் இரண்டரைப்படி இருக்குமாம் ! எட்டுப் பேர் உட்காரக்கூடிய இந்த வண்டியில் எண்பது பேர் உட்காரலாமாம்! அப்போது நீர்கூட எழும்பிக் குதிக்காமல் தாராளமாய் வந்து உட்காரலாங் காணும்!” என்றார்.

அவர் சிரித்துக்கொண்டே இதைச் சொன்னதால் வைத்தாவுக்கும் சிரிப்பு வந்தது. “ஆமாம்; ஒரு படி பால் வாங்கினால் இப்பவேதான் இரண்டரைப் படி தண்ணீர் இருக்கிறதே!” என்றான்.

அந்தப் பொல்லாத மனிதர் இந்த ஹாஸ்யத்தைக் கேட்டு, “ஓஹோ-ஹோ!” என்று இரைந்து சிரித் தார். உச்சிக் குடுமியைத் தட்டி முடிந்துகொண்டு, ‘அதெல்லாம் சரிதான் ஐயா! வாய் கூசாமல் நாலாயிரம் ரூபாய் வரதக்ஷிணை கொடு என்று கேட் கிறார்களே, அவர்களிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத் தால் அது நாலாயிரமாக ஆகிவிடுமா என்று யாரும் சொல்லவில்லையே. அதைச் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டார்.

வைத்தா திடுக்கிட்டுப் போனான். ஆனால் சமாளித்துக்கொண்டு, “வரதக்ஷிணையா? எவ்வளவு? நாலாயிரமா? அடேயப்பா !” என்றான்.

“பயந்துபோய் விடாதேயும். நான் பொய் சொல்லவில்லை; வாஸ்தவமாகத்தான் சொல்லுகிறேன். ஒவ்வொரு தேசத்திலும் ஜனங்கள் லக்ஷக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கிறார்கள். வீடுகளும் பட்டணங் களும் இடிந்து எரிந்து சாம்பலாய்ப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே இந்த யுத்தகாலத்தில் கூட, ‘என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?’ என்று கேட்டால், ‘நாலாயிரம் வைக்கிறாயா?’ என்கிறார்களே. இதற்கு என்னத்தைச் சொல் கிறது?”

“அக்கிரமம்!” என்றான் வைத்தா. ஆனால் அவன் இதை வெறுமனே ‘உள உளாக் காட்டி’க்காகத்தான் சொல்லி வைத்தான். அவனுக்கும் ஆயிரக் கணக்கில் வரதக்ஷிணை சம்பந்திகளிடம் வாங்கப் போவதாகத் தா ன் அவன் தகப்பனார் எழுதியிருந்தார். அதனால் தான், பெண்ணைக்கூடப் போய்ப் பார்க்காமல் அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்துவிட்டான். ஆனால், இதை யெல்லாம் சொல்லிக்கொண்டு அந்தப் பொல்லாத மனிதரிடம் யாராவது சண்டைக்குப் போவார்களா என்ன?

நள்ளிரவில் ரெயில் எங்கேயோ ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றது. உச்சிக்குடுமிக்காரர் அவசர அவசரமாகப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ‘தர்மாஸ் பிளாஸ்’கை எடுத்தார். பிறகு வைத்தா பக்கம் பார்த்தார். வைததா உட்கார்ந்தபடியே கண்ணை மூடிக்கொண்டு தூங்க முயன்று கொண்டிருந்தபோதிலும் அரைக் கண்ணால் அவரைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். இடுப்பில் கைவிட்டு அவர் ஒரு ரெயில் சாவியை எடுத்துப் பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு ‘குடு குடு’ என்று கீழே இறங்கி ஓடினதைப் பார்த் ததும் அவனுக்கு வயிற்றைப் பற்றிக்கொண்டு எரிந்தது.

வெளியே போனவர் ரெயில் நகரும் போது ஓடிவந்து மறுபடியும் உட்கார்ந்துகொண்டார். ‘தர்மாஸ் பிளாஸ்’கில் வாங்கிவந்த காப்பியில் கொஞ்சம் தம்ளரில் ஊற்றி, சிரித்துக்கொண்டே முதலில் வைத்தாவிடம் நீட்டினார்.

“காப்பியா? எனக்கென்னத்துக்கு? வேண்டாம் ஸார், இத்தனை நாழிக்குமேலே” என்றான் அவன்.

“பரவாயில்லைங் காணும்! காப்பிக்கு வேளை உண்டா என்ன? சாப்பிடும்; சங்கோசப்படாதேயும்!” என்று அவனிடம் கொடுத்துவிட்டுத் தாமும் சாப்பிட்டார். காப்பி வயிற்றில் போனதும் இன்னும் கொஞ்சம் குஷி கிளம்பிவிட்டது. எதிர்க் கோடியில் உட்கார்ந்திருந்த பெண்ணைக் காண்பித்து, “நம்ப மூத்தபெண். அவளுக்குத்தான் நாளன்னிக்கிப் பொழுது விடிந்தால் கல்யாணம்” என்றார்.

வைத்தா திரும்பி அந்தக் குறும்புக்காரப் பெண்ணைக் கவனித்தான். ஜன்னலில் தலை வைத்துச் சாய்ந்துகொண்டு அரைத் தூக்கமாய் இருந்தாள் அவள். ‘எந்த அப்பாவி இவளைக் கட்டிக்கொண்டு குடித்தனம் பண்ணப் போகிறானோ; பாவம்! நம்மைப் போல் சரியான ஆசாமியாய் வாய்த்து, இவ ளுடைய துஷ்டத்தனத்துக்கு இவளைப் பாக்கு வெட்டியில் வைத்து நறுக்குவதுபோல் நறுக்க வேண்டும்!’ என்று நினைத்துக்கொண்டான்.

வெளிக்குச் சிரித்துக்கொண்டே அவன், “நாளன் னிக்குக் கல்யாணம் என்கிறீர்; இன்றைக்கு எங்கேயோ பிரயாணம் போய்க்கொண் டிருக்கிறீர் களே?” என்றதும், “ஏன் ஐயா; சேலத்தில்தான் கல்யாணம் நடக்கிறது; அங்கே என் மாமனார் வீடு இருக்கிறது. பெரிய வீடு. சௌகரியமான இடம். அங்கே அவருக்கு நல்ல ஹோதா. ரிடயர்ட் ஜில்லா முன்சீப் சாம்பசிவ சாஸ்திரி என்று கேள்விப்பட்டிருப்பீரே-” என்று ஆரம்பித்தார்.

அன்று ரெயில் ஏறியபின் மூன்றாவது தடவை யாக வைத்தாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அசடு வழியும் முகத்துடன் அவன், “நீங்கள் மகாலிங்க ஐயரா?- நான்தான் ஜகந்நாத ஐயர் பிள்ளை வைத்திய நாதன். இன்று சாயங்காலந்தான் எனக்கு ஆபீஸில் லீவ் ‘ஸாங்ஷன்’ ஆயிற்று. அதனால்தான் நான் மட்டும் இந்த ந்த ரெயிலில் வருகிறேன். மற்றவர்கள் எல்லாரும் முன்பே எக்ஸ்பிரஸில் போய்விட்டார்கள்” என்றான்.

அந்தப் பொல்லாத பேர்வழியும் திடுக்கிட்டுத் தான் போனார். ஆனால், உடனேயே சமாளித்துக் கொண்டு, “என்ன மாப்பிள்ளை ! இப்படித்தானா பொய் சொல்லி எங்களை ஏமாற்றுகிறது?” என்று கேட்டார் கோபத்தோடு.

கோடியில் சிவனே என்று உட்கார்ந்திருந்த கிழவருக்கு அப்போதுதான் உயிர் வந்தது. பொக்கை வாயை இரண்டு தரம் மென்றுவிட்டு, “யாரு? மாப்பிள்ளையா? ஏண்டாப்பா, இங்கே பக்கத்திலே வா, பார்ப்போம்” என்று கூப்பிட்டார் அவர்.

வைத்தாவுக்கும் அதுதான் சௌகரியம் என்று பட்டது. கிழவர் அவனைப் பார்ப்பதற்கு அல்ல; அவன் அந்தக் குறும்புக்காரப் பெண்ணைச் சரியாய்ப் பார்ப்பதற்குத்தான்!

உடனே போய்ப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார். ராமமூர்த்தியின் 'கழைக்கூத்தன்' சிறுகதை 'சக்தி' இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். 'கதம்பச்சரம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *