(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாலை ஐந்தரை மணி. வீட்டில் பொன்னம்பலத்தாரும் அவரின் பேர்த்தி கீர்த்தனாவும் மட்டுமே இருந்தார்கள். பொன்னம்பலத்தாருக்குப் பவள விழாக்காணும் வயது. கீர்த்தானவுக்கு வாக்காளர்த் தகுதி பெறும் வயது.
கீர்த்தானவின் அப்பா சரவணபவன், அம்மா பவானி. இருவரும் ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. சரவணபவனும் பவானி யும் தங்கள் சக ஆசிரியை ஒருத்தியின் திருமண வரவேற் பில் கலந்துகொள்ள மூன்று மணிக்கே மோட்டார்ச் சைக்கிளில் சென்றுவிட்டார்கள். வர இன்னும் சில மணித்தியாலயங்கள் ஆகலாம்.
பொன்னம்பலத்தார் தொய்வு நோயாளர். அந்த நோய் பனி, குளிர் என்று வேறுபடுத்திக் கொண்டு தனக்கு வாய்ப்பான சமயத்தில் அவரை நாடுவதில்லை. எந்தக் காலத்திலும் வரும். வந்தால் அவரின் அடிவயிற்றிலிருந்து மூச்சுக் கறகறவென்று பெரும் சத்தத்துடன் வெளிக் கிளம்பி, தொண்டைக்குள் நின்று அவரைத் திணற வைக்கும். இன்றும் அதே இழுப்பு. கிழவர் திணறுகிறார். கொஞ்சம் தேநீர் குறைந்தது வெந்நீராகிலும் குடிக்கவேண்டும் போல் இருக்கிறது.
“பிள்ளை கொஞ்சம் தேத்தண்ணி வைச்சுத் தாறி யோ? இல்லை எண்டால் வெந்நீராவது தா.”
தொலைக்காட்சியில் கமலும் சிம்ரனும் பின்னணியில் ஆண்பெண் கும்பலை ஆடவிட்டுத் தாங்களும் ஆடுகி றார்கள். காதல் ‘டுயட்’ தூள் பறக்கிறது. கமல் என்ற கொம்பில் சிம்ரன் என்ற கொடி படர்வதும், அவளைக் கமல் அலக்காகத் தூக்கிச் சுற்றுவதும் அவர்களின் சர்வாங்க சேட்டைகளும் நெளிவும் குழைவும் கீர்த்தனாவின் இரசனையைக் கிளப்பிவிட அவள் சுவர்க்கானுபவத்தில் திளைத்திருந்த வேளையில், அப்பப்பாவின் அனுங்கல் அழைப்பு அவளின் செவிப்பறையினை எட்டாதது ஒன்றும் வியப்பல்ல. தொலைக்காட்சியின் உச்சஸ்தாயி அலறலில் அவரின் குரல் அமுங்கிப் போகிறது. அவர் தமது இடத்திலிருந்து மெல்ல எழுந்து நெஞ்சைப் பிடித்தபடி ‘கர்கர்’ பக்கவாத்திய சகிதராய்ப் பேர்த்தியைச் சென்றடைகிறார்.
“பிள்ளை! பிள்ளை ! கீர்த்தி! கீர்த்தி!”
ஐந்தாறு தடவைகள் அழைத்த பின்புதான் கீர்த்தனா வின் ஏகாக்கிர சிந்தனை கலைந்து திடுக்குற்றுத் திரும்பு கிறாள்.
அழைத்தவர் அப்பப்பா. வெறுப்பும் அருவருப்பும் அவளின் முகத்தை ஆக்கிரமிக்க ‘என்ன’ என்ற கேள்வி யைக் தனது முகபாவத்தினால், முகச்சுழிப்பினால் வெளிப் படுத்துகின்றாள்.
“பிள்ளை எனக்கு இழுக்கிறது கேட்குதல்லோ ?” கீர்த்தனா பதில் சொல்லவில்லை. ஆனால் அப்பப்பாவுக்குக் கேட்காமலே (அவருக்கு அரைச்செவிடு என்று அவளுக்குத் தெரியும்) வாய்க்குள் முணுமுணுக்கிறாள்.
“இனிப் படம் பார்த்த மாதிரித்தான். கிழவன்ரை . அறளையைத்தான் கேட்கவேணும்”
கீர்த்தனாவின் முணுமுணுப்பைக் கேட்காவிட்டாலும் அவளின் முகபாவத்தின் அர்த்தத்தினைப் புரிந்துகொண்ட கிழவர், அவமானத்தாலும் வேதனையாலும் பாரமாகிவிட்ட நெஞ்சோடு தமது இடத்தை நோக்கித் திரும்புகையில் ‘அப்பப்பா’ கீர்த்தனாவின் அதட்டல் அழைப்பு. கிழவர் திரும்புகிறார்.
“ஏதோ சொன்னியள்? என்ன?”
“சரியாய் இழுக்குது மோனை. கொஞ்சம் தேத் தண்ணி அல்லது வெந்நீராவது குடிக்கவேணும் போலை இருந்தது. அதுதான்…”
கிழவர் முடிக்கவில்லை . கீர்த்தனா சீறி விழுகிறாள். “அப்பப்பா” இதுதான் தேத்தண்ணி குடிக்கிற நேரமோ? கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? இன்னம் அரை மணித்திய லாயத்திலை படம் முடிஞ்சிடும். பிறகு சுடுதண்ணி தாறன். போய்ப் படுத்திருங்கோ”
பொன்னருக்கு நெஞ்சுக் கறகறப்போடு கண்களிலும் நீர் முட்டுகிறது.
திரும்புகிறார்… ஐந்து நிமிஷங்கள் ஊர்ந்து மறைகின்றன.
கேற்றருகில் சைக்கிள் மணி ஓசை. தொடர்ந்து “கீர்த்தி, கீர்த்தி” என்ற அழைப்புக்குரல்.
“வாடி வசீ” என்றபடி முகம் மலரக் கீர்த்த னா ‘ரீ.வி’யை நிறுத்திவிட்டு எழுந்து வாசற்பக்கம் வருகிறாள்.
‘வசீ’ என்ற வசீகரா சைக்கிளிலிருந்தபடியே கேற்றைத் திறந்துகொண்டு சைக்கிளை லாகவமாக நெளித்துத் திருப்பி உள்ளே வருகிறாள்.
“அப்ப நீயும் றெடியாகத்தான் இருக்கிறாய்! கிளம்பு கிளம்பு” வசீ அவரப்படுத்துகிறாள்.
கீர்த்தனா மறுபேச்சின்றிச் சைக்கிளை எடுத்தபடி “அப்பப்பா, அப்பப்பா” என்று உரத்து அழைக்கிறாள்.
பொன்னர் சாய்மனை நாற்காலியிலிருந்து தலையை நிமிர்த்தி, சிநேகிதிகள் இருவரையும் வியப்புடனும் திகைப்புடனும் நோட்டமிடுகிறார்.
“அப்பப்பா, பிறன்ட் ஒருத்தியின்ரை பேத்டேக்கு இவளோடை போறன். அம்மா, அப்பா வந்தவுடனே அவைக்கு சொல்லுங்கோ.”
அப்பப்பா திடுக்குறுகின்றார். நேரமோ ஆறுமணியைக் கடந்து கொண்டிருக்கிறது. மாலைப் பொழுதின் மம்மர் கழிந்து இருள் சூழத் தொடங்கும் வேளை.
“இந்த நேரத்திலை இவள் வெளியிலை போகி றாளே? இவளின்ரை தகப்பன், தாய்க்கு நான் என்ன பதில் சொல்லிறது?”
“வானம் இருண்டு கொண்டு வருது. அம்மா, அப்பா வும் வீட்டிலை இல்லை, இந்த நேரத்திலை வெளியிலை போகலாமா? காலம் கெட்டுக் கிடக்கு. தங்கச்சி வசீ, உம்மையும் அம்மா, அப்பா வீட்டிலை தேடுவினம் அல்லோ? இருள முன்னம் நீர் வீட்டுக்குப் போம். கீர்த்தி தயவு செய்து போகாதை மோனை.”
பெண்கள் இருவரும் அவரை முறைத்துப் பார்க்கிறார் கள். உதடுகளின் ஏளனச் சிரிப்பு நெளிகிறது.
“அப்பப்பா” அதட்டுகிறாள். “மனிசர் ஒரு கருமத்துக் குப் புறப்படக்கை அபசகுனம் மாதிரித் தடுக்கலாமா? அப்பா, அம்மா ஓண்டும் சொல்ல மாட்டினம். நான் வாறன். வாடி, வசீ.”
இருவரது சைக்கிள்களும் ஒரு கணத்தில் மறைந்து போகின்றன.
பொன்னரின் நெஞ்சுக் கறகறப்பையும் மீறிக்கொண்டு நீண்ட பெருமூச்சு எழுகின்றது. அவர் தண்ணீர்க்குழாயை நாடிச் செல்கிறார்.
“நீங்கள் சரியான கவலையீனம். தெருவிலை ஒண்டையும் கவனிக்காமல் ஓட்டிறியள். எதிரிலை வந்த லொறி யோடை மோதியிருந்தால் எங்கடை கதி?’
“பவானி, நீர் பெரிய கோழை. மோட்டார் சைக்கிள் ஓட்டிறதிலை முப்பது வருச அனுபவம். கண்ணை மூடிக் கொண்டும் என்னாலை ஓட்ட முடியும். தெரியுமே.?
மகன் சரவணபவனுடைய வீரப்பிரதாபக் குரலையும் மீறிக்கொண்டு பலத்த சத்தத்தோடு அவனுடைய மோட்டார் சைக்கிள் வருகிறது. கேற் படாரொன்று திறக்கப்படு கின்றது. சரவணபவனின் குரலும் மோட்டார் சைக்கிளின் வேகமும் கேற்றைத் திறந்த மாதிரியும் அவன் அப்பொழுது இருந்த நிலையினைக் கிழவருக்குக் கூறாது கூறி விடுகின்றன. இத்தனை கவலைக்குமிடையே அவர் உதடுகளில் சிறு முறுவல் தோன்றி மறைகின்றது.
தொடர்ந்து அச்சமும் தலை எடுக்கிறது.
இருவரும் வீட்டினுள் நுழைந்ததும் நுழையாதது மாய்க் “கீர்த்தி, கீர்த்தி” என்று சரவணபவன் அழைக்கின் றான். பதில் இல்லை.
“ரீவி’யின்ரை சத்தமும் கேக்கேல்லை. நித்திரை கொள்ளிறாளோ? இந்த நேரத்திலை என்ன நித்திரை?” என்று பவானி புறுபுறுக்கிறாள்.
“சைக்கிளையும் காணேல்ல. வெளியிலை போயிருப் பாளோ? இந்த அகால நேரத்திலை வெளியிலை என்ன வேலை அவளுக்கு” என்று சரவணபவன் சிடுசிடுக்கின்றான். இருவரும் கிழவர் இருந்த திசையை நோக்கிப் பார்வை
யைத் திருப்புகின்றார்கள்.
“மிஸ்டர் ஓல்ட்மன், என்ன முழிக்கிறீர்? பேத்தி எங்கை?” என்று மகன் பேசப் பேச அவனுடைய வார்த்தைகளும் உடலோடு சேர்ந்து தள்ளாடுவதைப் பொன்னர் உணர்ந்து கொள்கிறார். “அப்பா” என்று எப்போதாவது அரிகண்டத்தில் அமர்ந்தவன் போலத் தகப்பனை அழைக்கும் மகன், வெறிப் பொழுதுகளில் அழைக்கும் செல்ல அழைப்புத்தான் “மிஸ்டர் ஓல்ட்மன்!”
‘திருமண வரவேற்பில் குடிவகை பரிமாறி இருக்க மாட்டினை. வழியிலை பொடிப்பிள்ளை ‘பாருக்குப் போயி ருக்கவேணும். அந்த வேளையிலை இவள் மோட்டார் சைக்கிளில் சாய்ந்தபடி வீதியிலை புதினம் பார்த்துக் கொண்டிருந்திருப்பாள”. கிழவர் நிலைமையை ஊகித்துக் கொண்டு மௌனமானார். ஆனால் சரவணபவன் விடவில்லை.
“கேட்கிறனல்லே, வாய்க்குள்ளே என்ன புட்டே? சொல்லுமன் கீர்த்தி எங்கை?’
“ஆறுமணி போலை ஆரோ சிநேகிதியாம் வசீ, வசீ எண்டு உன்ரை மோள் கூப்பிட்டதாய் ஞாபகம். அவளோடை ஆரோ சினேகிதியின்ரை ‘பேத்டே’ எண்டு சொல்லிப் போட்டுப் போயிட்டாள்.”
இருவருக்கம் பற்றிக்கொண்டு வந்தது. “உந்த நேரத்திலை வெளியிலை போகக் கூடாதெண்டு தடுக்கேல் லையோ? உங்களுக்கு அந்த அளவிற்கு அறிவில்லையா?” என்று பவானி ஆத்திரத்தைச் சொற்களிலே இறக்கி வினாவினாள்.
பரிமளகந்தியாய்ச் சென்ற அவள், முகமெல்லாம் வியர்த்து வியர்வை நாற்றமானது காற்றில் மிதந்து மூக்கைத் துளைக்க, பொன்னரின் பார்வையில் மச்சகந்தியாய் தோன்றிய பவானியைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு அவரின் தலைக்கேறியது. “குமர்ப் பெட்டயள், இந்த நேரத்திலை வெளியிலை போகக் கூடாது. எண்டு எவ்வளவோ சொன்னன். அவள் கேட்டாளே? போற நோரத்திலை அபசகுனமாய்த் தடுக்கிறன். எண்டு என்னை அதட்டிப் போட்டுப் போயிட்டாள்.”
தகப்பனின் குரலிலே வெளிப்பட்ட வெறுப்பையும் அதே சமயம் வழக்கம் போல இன்றிப் பெருங் குரலிலே அவர் பேசியதையும் கேட்க மகன், மருமகள் இருவருக்கும் வியப்பே உண்டாற்று. ஒரு நாளும் இல்லாதபடி…?
“உங்களுக்கு அக்கறையிருந்தால் எப்பாடு பட்டாவது அவளைத் தடுத்து நிறுத்தியிருக்கவேணும். அதை விட்டிட்டு உரத்துப் பேசினால் போதுமே?”. என்று பவானி பதிலடி அடித்த போது; பொன்னரால் தாங்கக் கூடவில்லை. இதுநாள் வரை அடங்கிக் கிடந்த அவரது ஆத்திரம் விசுபரூபம் எடுத்து அவரும் பதிலுக்கு உரக்கக் கத்தினார்.
“நான் என்ன உங்கடை செல்லத்தைத் தாச்சி மறித்துப் பிடிச்சுவைக்கேல்லை எண்டோ என்னிலை எரிஞ்சு விழுகிறியள்? அவளை அவளின்றை மூப்புக்கு வளர விட்டுட்டு என்னிலை பிழை கண்டு பிடிக்கிறியளோ? நல்ல நியாயந்தான் இது. பொறுமைக்கும் அளவுண்டு”
ஒரே சமயத்தில் சரவணபவனும் பவானியும் அவருடைய திடீர்த் துணிச்சலாலும் கடும் வார்த்தை களாலும் ஒரு கணம் திகைத்தப் போனார்கள்.
திகைப்பு, மிகுந்த கோபமாக மாறச் சரவணபவன் – தன்னை மறந்து கத்தினான். “உம்மாலை அந்தப் பெட்டை யைத் தடுத்து நிறுத்த முடியேல்லை. எங்களிலை பிழை சொல்லிச் சத்தம் போடுறீர், மசிர்.”
மகனின் கடைசிச் சொல் பொன்னரின் ஈரற் குலை யையே தாக்கி முதுகுத் தண்டையும் சில்லிட வைக் கிறது. “அப்பா பிள்ளை என்ற மதிப்புப் போய் நீங்கள் நீர்ஆகி இன்று மசிர் என்ற இழிசொல்லில் வந்து நிற்கிறது.
இன்னும் என்ன என்ன இவன் வாயிலிருந்து கொட்டப் போகிறதோ?’
“ஓம், அங்கிள். அவளோடை தாச்சி மறித்துப் பிடித்துக் கட்டி வைச்சிருக்கத்தான் வேணும். நீங்கள் அந்த நாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அல்லே?” என்று பவானி பொன்னரின் கடைசி வார்த்தைக்குத் தனது ஏளனப் பேச்சால் மெருகூட்டினாள்.
“ஒரு காலத்திலை கட்டி வைச்சவன்தான். பெரியவர். மறந்திருக்க மாட்டார் எண்டு நினைக்கிறன்” இது பொன்னரின் பதிலடி.
சரவணபவனுக்குப் பழைய ஞாபகங்கள் மனத்தாங் கில் அலை மோதுகின்றன. சிம்மக் குரல், வைரம் பாய்ந்த உடல், உருட்டும் விழிகள் முதலாகக் காவல்துறை அதிகாரிக்கே உரிய துடுக்கும் மிடுக்கும் நிறைந்திருந்த தந்தையின் முன் வரவே அஞ்சி ஒளித்துத் திரிந்த நாள்கள் அவனால் மறக்க முடியாதவை. அவரின் அதட்டல் கேட்டதும் அவனை அறியாமலே சல உபாதை எடுக்கும். என்றாலும் ஐந்து பெண்களுக்கு ஒரே ஆண்மகன். தீராத விளையாட்டுப் பிள்ளயைாகவும் இருந்தான். குழப்படிகள் பல செய்தான். அவனை அவ்வப்போது அடித்தும் துவைத்தும் கட்டி வைத்தும் திருத்தத் தகப்பன் எடுத்த முயற்சிகள் தந்தை-மகனுக்கிடையே பாச நெருக்கத்தைக் குறைத்தன. ‘வயோதிப காலத்தில் இவன் அதற்காக என்னைப் பழி வாங்குகிறானா.?
பொன்னரின் ஆதிக்கப் பரப்பினுள் கட்டுண்டு கிடந்த அவர் மனைவி ஒரு நாள் கண்ணை மூடிவிட்டாள்.
அவனுக்கு ஏக புத்திரத் தகுதி வழங்கி அவனில் உயிராயி ருந்த தமக்கைமார் இன்று குடியும் குடித்தனமுமாக வெளி நாட்டில் வாழ்கின்றார்கள். அவன் மட்டும் பவானியோடும் மகள் கீர்த்தனாவோடும், வயதான, வேண்டாத விருந்தாளி யான தகப்பனோடும் ஊரிலே காலத்தை ஓட்டுகிறான்.
பவானியின் ஏதேச்சையான போக்குக்கும் மகளின் ஏடாகூடமான தன்னிச்சைச் செயற்பாடுகளுக்கும் வளைந்து நெளிந்து கொடுத்து வந்த அவனுக்கு, தனது
ஏதேச்சாதிகாரத்தைத் செலுத்தக் கிடைத்த ஒரே ஒரு சீவன் அவன் தகப்பன் தான். தன்னுள் அடங்கிக் கிடந்த ஊமைக் கோபங்களுக்கும் கையாலாகத் தனம் தந்த ‘தாழ்வுச் சிக்கலுக்கும் வடிகாலாக அன்று வரை அவரையே அவன் பயன்படுத்தியது உண்மையே. ஆனால் இன்று…
தகப்பனின் அசாதாரண துணிச்சல் அவனை அளவு கடந்த சீற்றத்துக்கு ஆளாக்கியது. அவரை அடிக்கப் போவது போல மிக அருகிற் சென்றவன் “வேளா வேளைக் குச் சாப்பாடு, நோய்க்கு மருந்து. படுக்கப் பஞ்சணை மெத்தை எண்டு எல்லா வசதியும் செய்து தந்திட்டனல்லே? உம்மடை புத்திரியள் உமக்குச் செய்ய வேண்டிய பணி விடையெல்லாம் என்ரை பெண்சாதி செய்யிறாளல்லே? நீர் இதுவும் பேசுவீர். இன்னமும் பேசுவீர்.” என்று அவன் அடுக்கிக் கொண்டே போகப் பவானி பொறுமை இழந்த வளாய் “இஞ்சரும் அப்பா, உவரோடை பிறகு வந்து சண்டை பிடியம். நேரம் எட்டு மணியாச்சு. கீர்த்தியைத் தேடிக் கூட்டி வரப்பாரும்.”
பவானியின் பேச்சின் கட்டளைத்தொனி சரவணப வனைப் பெட்டிப் பாம்பாக்கி விடுகிறது. சர்க்கஸ்காரனின் கட்டளைக்கு அடி பணியும் சிங்கம் போல அடங்கிப் போகிறான். “இந்த நேரத்திலை உந்த ஆட்டக்காறியை எங்கை தேடிப்பிடிப்பது?’ என்று தன்னுள் புறுபுறுத்தவாறு மோட்டார் சைக்கிளில் ஏறி அதைக் கிளப்புகிறான்.
பவானி மாமனை முறைத்துப் பார்த்தபடி உடை மாற்ற உள்ளே செல்கிறாள்.
சரவணபவன் மோட்டார் சைக்கிளில் நூறு மீற்றர் தூரந்தான் சென்றிருப்பான்.
அவனை நிறுத்தும்படி கை காட்டிய வண்ணம் ‘ஓட்டோ ‘ ஒன்று அவனுக்கு எதிரில் வருகிறது. திகைப்புடன் அவன் சைக்கிளை நிறுத்த, ஓட்டோவிலிருந்து அவன் மைத்துனன்-பவானியின் அண்ணன்-தயாளன் இறங்குகிறான்.
கலைந்த கூந்தலும் அழுது அழுது வீங்கிச் சிவந்த கண்களுமாய்ப் பேய் பிடித்தவள் போல ஓட்டோ ஆசன த்தின் மூலையிலே அடங்கி ஒடுங்கிப் பூனைக்குட்டி போல் பதுங்கி இருக்கும் கீர்த்தனா. ஓட்டோவினுள் சாய்த்து
வைத்திருக்கும் அவள் சைக்கிள்…
சரவணபவனுக்கு இருதயமே சடுதியில் நின்று விட்டது போன்ற உணர்ச்சி.
தயாளனின் கைகளைப் பிடித்தபடி வார்த்தைகள் வெளிவர மறுக்க, ‘என்ன நடந்தது? என்று முகபாவத்தி னாலே அவனால் கேட்க முடிந்ததே பெருங் காரியந்தான்.
“எல்லாம் வீட்டிலை வந்து சொல்லிறன். சைக்கி ளைத் திருப்பு” தயாளனின் குரலில் அதட்டலும் கட்டளை யும் சங்கமிக்கின்றன. வீடு வருகிறார்கள்.
முதலில் தயாளன், அடுத்துச் சரவணபவன், அவர்களின் பின்னால் தலை நிமிராது பதுங்கிப் பதுங்கி வரும் கீர்த்தனா
“அண்ணை , வா… என்னடி கீர்த்தி உது? என்ன கோலமடி, பாவி” பவானி ஓடிச் சென்று மகளை அணைத்துக் கொள்கிறாள். தாய்ப் பறவையின் சிறகுகளுக் குள் தன்னை மறைத்தக் கொள்ளும் குஞ்சைப் போலத் தாயின் அரவணைப்பில் விம்முவதைத் தவிரக் கீர்த்தனா வால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை .
“மச்சான் என்ன நடந்தது?’ சரவணபவன் காலம் கெட்ட காலத்திலை உவளை உவளின்ர மூப்புக்கு விட்டிட்டு, புதுமாப்பிளை பொம்பிளை போலை நீங்கள் ஓடித் திரிஞ்சால் என்ன நடக்குமோ, அது தான் நடந்தது.” என்று தயாளன் பேச்சைத் தொடங்கினான். கணவனும் மனைவியும் நீதிபதி முன்பு குற்றவாளிக் கூண்டில் நிற்கும் கைதிகள் போல அவனையே பார்த்த வண்ணம் பயம், பரிதவிப்பு, வேதனை குமிழியிடும் நெஞ்சு களோடு நட்ட மரமாக நின்றார்கள்.
“உவளும் உவளோட வந்த பெட்டையும் வீதியாலை வந்து கொண்டிருந்தினமாம். வீதியில் லைட்டும் இல்லை. ஒரே இருள். நாலைந்து வப்புகள் இவளவையைக் கண்டி ட்டுப் பின் தொடர்ந்து வந்தான்களாம். இவளவையைப் பார்த்து ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினான் களாம். இவளவை பேசாமல் வந்திருக்கலாம். இவையும் மறுத்தான் கொடுத்திருக்கினை. விடுவாங்களா? இருட்டும் அவங்களுக்குத் துணையாயிருந்திருக்கு. சுருக்கமாய் சொல்லிறதெண்டால் அவங்கள் இவளவையிலை கைச் சேட்டை விடப் பாத்திருக்கிறாங்கள்.”
“ஐயோ” பவானி அலறுகிறாள்.
“நல்ல காலம்! எக்கச் சக்கமான நிலைக்குப் போகா மல் இவளவையைக் காப்பாத்தினவங்கள் கலாசாரத்தைப் பேணும் பொடியங்கள்தான். அவங்களிலை ஒருத்தனுக்கு என்னோடை நல்ல பழக்கம். என்ரை வீடியோ சென்ரருக்கு அடிக்கடி வாறவன். அவன்தான் இவளை விசாரித்து என்ரை வீடியோ சென்ரரிலை கொண்டுவந்து விட்டவன். மற்றப் பெட்டையையும் அவளின்ரை வீட்டை கூட்டிப் போகினம்.”
சரவணபவன் சிலையானான். பவானி மகளை உதறி விட்டு அழுகையை அடக்க நினைத்துத் தோற்றாள். பொன்னர் பெரு மூச்சுவிட்டார். கீர்த்தனா சோர்ந்துபோய்த் தரையிலே பொத்தென்று வீழ்ந்தாள்.
பொன்னரின் பெருமூச்சின் பொருளை உணர்ந்த சரவணபவன் ஆதரவற்ற குழந்தை தாயின் முகத்தை நோக்குவது போல அவரை நோக்கினான். கண்கள் கசிந்தன.
“என்னை முழுசிப் பாத்து என்ன பிரியோசனம்? செல்லம் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு வேணும். பொன்னூசி எண்டு அதை வயிற்றிலை குத்திறதோ? குத்தி னால் அனுபவிக்கத்தான் வேணும்.” என்று அவர் சொன்னதை அங்கீகரிக்கும் வகையில் சரவணபவனும் பவானியும் தலையை அசைக்கையில், சரவணபவனின் உள்ளத்தில் ‘மிஸ்டர் ஓல்ட்மன்’ மறைந்து ‘அன்பான அப்பா’ வும் பவானியின் மனத்தில் ‘கிழட்டு அறளை’ மறைந்து ‘மதிப்பிற்குரிய மாமனாரும்’ மறு பிறவி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கீர்த்தனா?
– வீரகேசரி 15.4.2004, சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா