அப்படிப் போடுடா சாமி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 10,190 
 

மொதல்லேயே சொல்லிப்புடுறேன், கதை கொஞ்சம் விவகாரமாத்தான் இருக்கும். படிச்சுப்புட்டு, ‘எளவு புடிச்சவன், இப்பிடியா எழுதுவான்?’ன்னு திட்டாதீங்க. நடந்ததைத்தான் அங்கங்கே நகாசு பூசி எழுதியிருக்கேன்.

நான் பொம்பளைங்க விஷயத்துல கொஞ்சம் வீக்கு. அட, கொஞ்சம் என்ன, நிறையவே வீக்கு. வயசை கேக்குறீங்களா? ஆச்சுங்க, அம்பத்தெட்டு. மக வயத்துப் பேத்தி மூணாங்கிளாஸ் படிக்குறான்னா பாத்துக்குங்களேன். அந்த மூணாங்கிளாஸ்லத்தான் விவகாரமே ஆரம்பிச்சிச்சு.

ரெண்டு தெரு தள்ளித்தான் இருக்கா மக கலைவாணி. ஒரு நாளைக்கு புள்ளைய கொண்டு போய் இஸ்கூல்ல விட்டுட்டு, வீட்டுக்கு வந்தா. என் போறாத காலம், நான் கோடு போட்ட அண்டிராயர் போட்டுக்கிட்டு, ஈஸிசேர்ல காலாட்டிகிட்டு தமிழ் பேப்பர் படிச்சுக்கிட்டிருக்கேன். என்னை இப்படீ அரைக் கண்ணால பாத்துட்டு, ‘என்னப்பா’ன்னு கேட்டுகிட்டே, அம்மாவைப் பாக்க சமையக் கட்டுக்குப் போயிட்டா. உள்ளே என்னா பேசினாங்களோ தெரியாது.

‘ஏன் நைனா, நீ சும்மாத்தானே உக்காந்துகிட்டிருக்கே, மஞ்சுவை (பேத்தி) இஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வந்தா என்னவாம்? ஆயா ரெண்டு மாசத்துகொரு தரம் நூறு ரூபா சம்பளம் ஒசத்திக் கேக்குது. இங்கே என்ன
கொட்டியா கெடக்குது?’ சமையக் கட்டிலிருந்து வந்த கலைவாணி இடுப்புல் கை வச்சுக்கிட்டுக் கேக்குறா. பின்னாடியே பாத்தா தஸ்ஸு புஸ்ஸுன்னு உடம்பை தூக்க முடியாம தூக்கிக்கிட்டு, பர்வதம் வர்றா. பர்வதம் – கலைவாணியோட அம்மா, என் சம்சாரம்.

‘ஆமாங்க.. வாணி பாவம் சமையல் வேலையும் பாத்துக்கிட்டு புள்ளைய கொண்டு விட்டுக்கிட்டு திண்டாடுது. காலைல நீங்க கொண்டு விட்டுட்டு வந்துடுங்க, மதியம் நான் சாப்பாடு எடுத்துக்கிட்டுப் போயிடறேன், சாயந்திரம் நீங்க போய் கூட்டிக்கிட்டு வந்துடுங்க.. டாக்டரு நடக்கணும் நடக்கணும்ங்கிறாரு, நீங்க என்னாடான்னா இப்படி காலாட்டிகிட்டு உக்காந்துக்கிட்டிருக்கீங்க..’ன்னு தன் பங்குக்கு பர்வதம் என் காலாட்டலை விமர்சனம் செய்யுறா.

சரின்னு ஆயா வேலைக்கு ஒத்துக்கிட்டேன்.

ஏங்க, பொண்ணு வயத்துல பொறந்த சொந்த பேத்தியோட பிஞ்சுக் கையை பிடிச்சுக்கிட்டுத்தானே இஸ்கூலுக்குப் போகுறேன், ஆனாலும் பாருங்க, வயசுப் பொம்பளை அப்படி இப்படிப் போனா, பாழாப் போன கண்ணு தன்னால திரும்புது. அப்படி இருக்கும் போது, பழுத்த பப்பாளிப் பழத்துல, கருப்பு வெதைங்க மினு மினுக்குமே, அது மாதிரி செவத்த ஒடம்புல, கருப்பு சேலையைக் கட்டிக்கிட்டு வந்த பரிமளாவை பார்க்காமலா விட்டு வெக்கும் நம்ம கண்ணு. திரும்பின கழுத்து திரும்பினதேதான். பேத்தி கையைப் புடிச்சு இழுத்ததுக்கப்புறம்தான் நிலைக்கு வந்தேன்னு வச்சுக்குங்க.

அவ பேரு பரிமளாங்கிறது பெறகு வேற ஒரு சந்தர்ப்பத்துலத்தான் தெரிஞ்சிச்சு. பாத்த உடனே நான் அவளுக்குப் வச்ச பேரு பப்பாளி.

எப்படித்தான் அப்படி வட்டமா ஒரு மொகம் அமையுமோ. அவ மூக்குத்தான் வட்டத்துக்கு குத்துப் புள்ளி. மூக்கை ‘எள்ளுப்பூ நாசி’ன்னு
எழுத்தாளங்கல்லாம் வர்ணிப்பாங்க. அதென்னா எள்ளுப்பூவோ நான் பாத்ததில்ல, இவ் மூக்கு அளகுன்னா அளகு அப்படி ஒரு அளகு. இதுக்கு மேல எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலை. ஒதடு – அதைப் பத்தி எனக்குத் தோணுறதை சொன்னா, சென்ஸார் பண்ணிப்புடுவாங்க. கழுத்து..
ம்.. அதுவும் நல்லாத்தான் இருக்கு. அதுக்குங் கீழே… அதுக்குங் கீழே…
என்னா சொல்லட்டும்? ஆங், ‘கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ’ன்னு எம்சீஆர் பாடின சமாச்சாரம். மொசலுக் குட்டிங்கன்னு கூட ஏதோ ஒரு சினிமாவுல அதைப் பத்திப் பாடியிருக்காங்கன்னு ஞாபகம்.
இடுப்பு தொடை எல்லாம் அம்சம்னா அம்சம்.

தெனமும் ஒரு சின்னப் பொண்ணை கையைப் புடிச்சுக் கூட்டிக்கிட்டு இஸ்கூலுக்கு வருவா. ஆனா அவ எதிர்ப்படற சமயத்துக்கு முன்னாடியே சாமார்த்தியமா எம் பேத்தியை க்ளாஸுல விட்டுடுவேன். ஒரு வேளை கூட்டிக்கிட்டு வர்றது அவ பொண்ணே தானோ? ஆங்… இருந்தாத்தான் என்ன கெட்டு போச்சு இப்ப?

அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சுங்கிறதுக்காக, நான் என்ன ராத்திரி அவளைப் பத்தி நெனைக்காம இருக்கேனா; இல்ல, எனக்குள்ள நெருப்பு பத்திக்காம இருக்கா? ஒரு நாள் கற்பனை நெசமாகணும் சாமி. ஆனா இதுக்கெல்லாம் சாமி கைல வேண்டிக்கக் கூடாதோ? தெரியலை. ஒரு வேளை இது மாதிரி வியவகாரமான விஷயங்களுக்கு வேற சாமி இருக்கோ என்னவோ.

அந்த மாதிரி ஒரு சாமி காதுல நான் வேண்டிக்கிட்டது விழுந்திச்சு போல. இஸ்கூல்ல எதிரே பாக்கும் போதெல்லாம் லேசா சிரிக்க ஆரம்பிச்சா.
நானும், – இந்த புன்னைகைன்னுவாங்களே, அதாங்க புன்சிரிப்பு, அந்த சிரிப்பு சிரிக்கிறதா நெனைச்சு வழிஞ்சுருக்கேனுங்க.

அன்னைக்கு கொமரேசனை பாக்கப் போயிருந்தேன். பய என்னாவோ ‘இன்டீரி டெகரேச’னாமே – அதை செஞ்சுகிட்டிருக்கான். ரெண்டு மாசம் முன்னால ‘அர்ஜெண்டா தேவைப் படுது செட்டியாரே, அறுபதாயிரம் குடு, அடுத்த மாசம் மொதத் தேதிக்கு குடுத்துடறேன்’னு வாங்கிட்டுப் போனவன் தான், ரெண்டு மாசம் ஆவுது – வட்டியையும் காணோம், ஆளு கிட்டேருந்து ஒண்ணும் தகவலையும் காணோம். செல்ஃபோன்ல கூப்டாத்தான் யார் கிட்டேருந்து வருதுன்னு தெரிஞ்சு பூடுதே, பக்குனு கட் பண்ணிடறான். அதான் நேரா பாக்கலாம்னு திருமங்கலத்துல இருக்குற அவன் ஆஃபீஸுக்குப் போனேன்.

‘வாங்க..’ன்னு வாய் நெறைய கூட்டுப்புட்டு, பின்னாடியே, ‘ஸார் வெளியே போயிருக்காரே’ன்னு ரிசப்ஸனிஸ்ட் பொண்ணு சொல்லிச்சு.
என்னாடா மொதல்லயே ஏமாத்தம்னு நெனைச்சுக்கிட்டேன். ஆனா அப்பாலத்தான், இதுவும் கூட நல்லதுக்குன்னு நெனைக்கும்படி ஆச்சு.
சோபாவுல உக்காந்து, எதிரே இருந்த டீப்பாய்ல கெடந்த ‘தந்தி’ பேப்பரை பிரிச்சு, ‘கன்னித் தீவு’ பாக்க ஆரம்பிச்சேன்.

‘பாண்டி பார்ட்டி கிட்டேருந்து செக் வந்துச்சா இல்லையா..’ ன்னு கேட்டுகிட்டே வேகமா உள்ளே நொழைஞ்ச கொமரேசன் என்னை பாத்த உடனே, ‘வா செட்டியாரே…’ன்னுட்டு, அந்த பொண்ணு கிட்ட, ‘என்ன நிர்மலா நீ, சாரை என் ரூம்ல ஏசியில ஒக்காரச் சொல்லக் கூடாது? இங்கே ஒக்காத்தி வச்சிருக்கே..’ ன்னு அவளை அதட்டுற மாதிரி அதட்டி எனக்கு ஐஸ் வெக்குறான்.

‘உள்ளே வா செட்டியாரே’

கொமரேசன் அவன் ரூம்புக்குள்ள நுழைஞ்சு, கதவை எனக்காக தொறந்து புடிச்சுக்கிடறான். அடாடாடா, என்னா பவ்யம், என்னா அடக்கம். ஒண்ணா ரெண்டா அறுபதாயிரம் இல்ல, ஏன் அடக்கம் வர்றாது?

‘கொமரேசு, இத பாரு, என் நம்பரை பாத்த ஒடனே செல்ஃபோனை கட் பண்றே பாத்தியா, அதுதான் வேணாங்கிறது..’ ன்னு சொல்லிக்கிட்டே ஒக்காந்தேன்.

‘யாரு? நானா? சத்தியமா அது மாதிரில்லாம் நான் செய்ய மாட்டேன் செட்டியாரே..’

‘ஆங்.. சத்தியம்.. நீ அஞ்சு ரூபாய்க்கு பத்து சத்தியம் பண்ணுவே, எனக்குத் தெரியாதா?..’ன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ளாற டேபிள்ள ஃபோன் அடிச்சிச்சு.

‘ஒரே நிமிசம் செட்டியாரே’ ன்னுட்டு ஃபோனை எடுத்தான்.

‘யாரு நிர்மலா?’

அந்தப் பக்கம் ரிசப்சன் பொண்ணு பேசறாப்பல.

‘சரி, சரி.. வெய்ட் பண்ணச் சொல்லு.. செட்டியார் கூட பேசி முடிச்சுட்டு சொல்றேன். அப்புறமா உள்ள அனுப்பு..’

ஃபோனை வச்சுட்டு, ‘சொல்லு செட்டியாரே’ ங்கிறான்.

‘என்னாத்தை சொல்றது? பணம் வாங்கிகிட்டு ரெண்டு மாசம் போல ஆவுது.. ஒரே மாசத்துல ரிட்டன் பண்ணிடறேன்னே?’

‘அது என்னான்னா.. போன வாரம் அறுபதுக்கு அறுபத்தஞ்சா எடுத்து வச்சிட்டு ஒனக்கு ஃபோன் பண்ண இருந்தேன் பாரு.. நமுக்கு ரொம்ப நெருங்கின பார்ட்டி அன்னைக்குன்னு பாத்து அதை புடுங்கிகிட்டு, அர்ஜெண்டா வேண்டியிருக்கு, பத்து நாள்ள குடுத்துடறேன்னு போயிடிச்சா..’

‘இந்தக் கதையே வேணாம் கொமரேசு.. ‘

‘ஐயையோ, கதை இல்ல செட்டியாரே.. இதோ இன்னும் இருவது ரூவா வேணும்னு வெளியே வந்து உக்காந்துகிட்டிருக்கா, வேணும்னா உள்ளே கூப்புடறேன், பாக்குறியா?’

ஆங், அதைப் பாத்து நான் என்னா செய்யப் போறேன். ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம், ரெண்டு மாசத்துக்கு வட்டியாவது குடுத்தீன்னா பரவாயில்லை..’

‘அவ்ளதானே.. இதோ’ன்னு ஒரு செக்கை போட்டு சர்ர்ரக்குன்னு கிளிச்சுக் குடுத்தான்.

வெளியே வர்றேன், நான் குந்திக்கிட்டிருந்த அதே எடத்துல பப்பாளி!
இவ எங்கே இங்கே வந்தா? ஓ, கொமரேசன் நெருங்கின பார்ட்டின்னு சொன்னானே அதுதான் இதுவா? அவ என்னைப் பாப்பாளாக்கும்னு கதவை கொஞ்சம் சத்தமாவே சாத்தறேன், ஊஹூம்.. என்னாவோ ஃபைலை புரட்டிக்கிட்டிருக்கா.

ரிசப்னிஸ்ட் ‘நீங்க உள்ளே போலாம் மேடம்’ன்னுதும், அந்த ஃபைலைப் பாத்துக்கிட்டே சர்ர்ருன்னு கொமரேசன் ரூம்புக்கு போய்ட்டா. சந்தனக் கலர்ல பொடவை வழு வழுன்னு, ஆனா ஜேக்கட்டு அதே கருப்புக் கலர்தான். இடுப்பு வாளிப்பா வா வான்னு கூப்பிடுது. அவ ஒக்காந்த சோபா குடுத்து வச்சது.

வீட்டுக்குப் போனதும், பர்வதம் மதியத் தூக்கம் தூங்குறாங்கிறதை கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு, கொமரேசனுக்கு ஃபோன் போட்டேன்.

நெருங்கின பார்ட்டிங்கறானே படுவா, கையை வச்சிருப்பானோ?

‘என்னா செட்டியாரே, வட்டியத்தான் குடுத்துட்டேனே..’ன்னு ஃபோனை எடுத்ததுமே படபடக்கறான் கொமரேசன்.

‘அட, அதில்லப்பா.. நான் வெளியே போனவுடனே உன் ரூம்புக்குள்ள வந்திச்சே..’

‘ஆமாம், பரிமளா.. அதுதான் ஒனக்கு எடுத்து வச்சிருந்த அறுபத்தஞ்சை புடுங்கிட்டுப் போச்சு.. இப்பவும் இன்னும் ஒரு இருபத்தஞ்சு வேணும்னு உசிரை வாங்குறா.. ஆமாம், ஃபிகரு எப்படி செட்டியார்?’

‘அதெல்லாம் அம்சமாத்தான் இருக்கு.. அதான் எம் பணத்தை அங்கே அள்ளி வுட்டிருக்கே.. இன்னேரம் மேய்ஞ்சுட்டிருப்பியே..’

‘ஐயையோ சத்தியமா செட்டியார், அதெல்லாம் ஒண்ணும் கெடையாது.. அதுவும் இன்டீரியர் டெகரேசன் பண்ணுது.. அப்பப்ப கைமாத்தா வாங்கிக்கும், குடுக்கும்..’

‘நம்பறேம்பா..’

‘ஒண்ணு செய்யுறியா செட்டியார்..? உன் கைல கோத்து வுட்டுடறேனே.. அங்கே வாங்கிக்கம்மான்னு உன்னை கை காட்டிடறேன்.. உன் சாமர்த்தியம்.. கடனை காசா வசூல் செஞ்சாலும் செஞ்சிக்க, இல்ல…’

இதுவும் நல்ல யோசனையாத்தானே தெரியுது.. ம்… பத்து தடவை பக்கத்துல பாக்குறதுக்கு சான்ஸ் கெடைச்சா, நம்ம பௌருசத்துல அதுக்கு ஒரு அட்ராக்ஸன் வராதா?

‘கொமரேசு.. அத்தைச் செய்.. செல்வராஜு ஊருக்குப் போயிருக்கான்.. சைதாப்பேட்டைல அவன் ரூம்பு காலியாத்தான் இருக்கு.. சாவிய எங்கைல குடுத்துட்டுப் போயிருக்கான்.. அட்ரஸைக் குடுத்து அல்வாவை அங்கே அனுப்பி வய்யி..’

மணி மூணு. அஞ்சு மணிக்குத்தான் பப்பாளி ரூம்புக்கு வர்றதா கொமரேசன் சொன்னான். ஆனா இப்பவே புடிச்சு எளவு கையும் காலும் பரபரங்குது. சிங்கப்பூர் சலூன்ல காலைல பதினோரு மணிக்குத்தான் சேவிங் பண்ணி, மொகத்துக்கு மசாஜ்ஜும் பண்ணி வுட்டுருக்கான். ‘ஸார் பத்து வயிசு கொறைஞ்சிடிச்சு ஸார்’னு அவன் சொன்னது ஒண்ணும் மொகஸ்துதிக்காக இல்லேன்னு கண்ணாடியை பாக்கச் சொல்லோ தோணுது. முடி கொஞ்சம் போலத்தான் கொட்டிப் போயிருக்கு. வழுக்கைன்னு பெருசா ஒண்ணும் சொல்ல முடியாது. இதுக்கப்பால நம்ம பேச்சு சாமார்த்தியம்னு ஒன்னு இருக்கு இல்ல? வளைச்சுப்புடுவோம்.

நாலு மணிக்கெல்லாம் செல்வராஜு ரூம்புக்குப் போயி கொஞ்சம் க்ளீன் பண்ணி வச்சிட்டு நகத்தை கடிச்சுக்கிட்டு காத்துக்கிட்டிருந்தேன்.

அஞ்சேகாலுக்கு வர்றா. என்னைப் பாத்ததும் அப்படியே ஷாக்காயிட்டா.

‘வாம்மா.. என்ன ஷாக்காயிட்டே? என்னை நீ எதிர்பார்க்கல இல்ல?’

‘ஊஹூம்.. எதிர்பார்க்கவே இல்லை.. யாரோ என்னவோன்னு ரொம்ப பயந்துகிட்டே வந்தேன். நாமதான் புவனேஸ்வரி ஸ்கூல்ல தெனமும் பாத்துகிட்டிருக்கோமே.. புது ஆசாமிகிட்ட எப்படி கடன் கேக்குறதுன்னு நெனைச்சேன்.. இப்ப பயமெல்லாம் பறந்து போயிடிச்சு தாத்தா..’

தாத்தா !! தாத்தாவா? தாத்தாவா?

அன்னைக்கு அவ மண்டைல போட்டதுதான். அந்த அடியிலேருந்து இன்னை வரைக்கும் நான் எழுந்திரிக்கல.

இதனால சகலமான, அம்பத்தெட்டு, இல்ல அதுக்கும் மேல இருக்கிற ஆம்புள்ளைங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், கண்ணாடில பாக்குற ‘நீங்க’ ஒங்களுக்கு எளமையாத்தான் தெரியும், அத்தை நம்பி இப்படி வியவகாரமான காரியங்கள்ல எறங்கி, இந்த செவனேசன் செட்டியார் மாதிரி மொகத்துல கரியைப் பூசிக்காதீங்க, ஜாக்கிரதை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *