அபியும் நானும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 6,786 
 
 

காலை 7.00 மணி,

அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு!

சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே!
உன்னாலே எங்களுக்கும் ஆபிஸ் போறது லேட்டாகுது, இது கலா வின் காலை நேர ஒலிப்பரப்பு.

அரைத் தூக்கத்தில் எழுந்த மூன்றாம் வகுப்பு மாணவி அபி,என்கிற அபிராமி கடமைக்கு பல் துலக்கி, சாப்பிட்டு, சீருடை அணிந்து , ஷூ வெல்லாம் மாட்டிகிட்டு, ஆட்டோவுக்கு தயாராகி உட்காரும் போதும், அரக்க , பறக்க, அவர்களும் சாப்பிட்டு அலுவலகத்திற்கு கிளம்பும் போது காலை மணி எட்டாகிடும்.

ஆட்டோ எட்டரைக்குத்தான் வரும், அதுவரை காம்பவுன்ட் கேட் அருகே காவலாளியின் பொறுப்பில் அமர்ந்து இருக்கனும் அபிக்கு.

அபார்ட்மென்டில் மற்ற பிள்ளைகளை அவங்கவங்க அம்மா கூட இருந்து பஸ்,ஆட்டோ என ஏற்றி விட்டு டாட்டா காட்டுவது, முத்தம் கொடுப்பதைக் கண்டு பல நாள் ஏங்கியது உண்டு.

அபிக்காக அவளின் அப்பா மகேஷால் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டு, மாலை பள்ளியில் ஏற்றி பாட்டு கிளாஸ் போயிட்டு, அப்படியே மாலை வீடு வருவதற்கு ஆறு மணியாகும், இதுதான் அபியின் அன்றாட நிகழ்வு.

வந்தவுடன் வீட்டுப் பாடம், அலுவலகம் முடித்து அவளின் அம்மா வீட்டுக்கு வரும் போது இரவு ஏழு மணியாகும். அப்பா இரவு ஒன்பது மணிக்கு வந்து , உணவு முடித்து எல்லோரும் உறங்க பத்து மணியாகி விடும்.

இவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இவளின் பெற்றோருக்கு ஏது நேரம்?

இருவரும் வேலை வேலை என்று ஓடுவதும், சாம்பாதிக்கும் பணத்தில் வீட்டிற்காக வாங்கிய கடனை அடைப்பதும் தான் இவர்களின் நோக்கம், அதுக்காக ஓடியாடி உழைப்பது மட்டுமே இவர்கள் அறிந்த குடும்ப நிர்வாகம்.

ஞாயிற்றுக் கிழமை என்ற ஒரு நாள், அதுவும் அபிக்காக இல்லை.
இவர்கள் இஷ்டப்படி இருக்க விடப்பட்ட விடுமுறை நாள்.

லேட்டாக எழுந்து, வெளியே சாப்பிட்டு இரவு வீடு திரும்பி, திரும்பவும், திங்கள் முதல் அதே பரபரப்பு வாழ்க்கை ,ஓட்டம்.

இன்றும் வழக்கம் போல் ஆட்டோ வர,வழக்கமாக வரும் ஓட்டுநர் கிரிக்கு பதிலாக அவரின் மாமா வந்து அழைத்துச் சென்றார்.

ஏன் அங்கிள் , கிரி அண்ணா வரலை?.

இல்லை,அவன் இன்னிக்கு வரலை, நான் தான் மாலையும் வருவேன், என்ன! கொஞ்சம் லேட்டானலும் அங்கேயே இரு, நான் வருவேன் என்றார். சரி! என்று பள்ளியில் இறங்கிக் கொண்டாள்.

மாலை பள்ளி விடும் நேரம், அரை மணி தாமதமாக ஆட்டோ வந்தது, அதில் ஏற்கனவே இரண்டு பேர் அமர்ந்திருக்க, இவளை ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.அபி சோர்வாக இருந்ததால் தூங்கி விட்டாள். கண் விழித்துப் பார்த்த போது, எங்கோ யார் வீடு எனத் தெரியாமல் கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தாள்.

ஏன் மாமா? இப்படி பண்ணினீங்க! அபி எவ்வளவு பயந்திருப்பா?
அவங்க அப்பா ,அம்மாகிட்டே நான் என்ன சொல்வேன், மூன்று வருடமா நம்பி என் கூட அனுப்பினாங்க, இனிமே அனுப்ப மாட்டாங்க! மாமா.

இப்போ என்னாடா நடந்திடுச்சு? என்னாடா? இதுக்கு போய் இப்புடி அலுத்துக்கிறே? அது சின்னப் பொண்னுடா! ஒன்றும் தெரியாது
நீ போ!

பிள்ளை பயந்திருக்கும் இல்லே! வேற என்ன வேனும்!!

உன் போன் எங்கடா! அடிச்சுகிட்டே இருக்கு ,எடுக்கலை!

அது இரண்டு நாளா வேலை செய்யல, அதனாலேதான் அவங்க அம்மா, அப்பாகிட்டே கூட சொல்ல முடியலை,என வருந்தினான்.

அவளை வீட்டிலே விட்டு விட்டு வந்திடு, ஏதாவது சொன்னா அப்புறம் பார்த்துக்கலாம், நீயா எதுவும் உளறி வைக்காதே,
போ! என விரட்டினான்.

மணி ஏழைத் தாண்டி இருந்தது. அபி வீடு திரும்பாததைக் கண்டு திடுக்கிட்டாள்.

காவலாளியிடம் கேட்டாள். காலையில் கிரிக்குப் பதிலாக வேறு ஒருவர் வந்ததையும், அதே ஆட்டோ என்பதால் தான் அனுப்பியதையும் விவரித்தார்.

ஓட்டுநர் கிரியின் செல்போன் எடுக்கப் படாதது வேறு இன்னும் அவளின் கவலையைக் கூட்டியது.

கலா அதற்குள் மகேஷ்க்கு அபி இன்னும் வீடு திரும்பாததை சொல்லி இருந்தாள்.

நாளைக்கு அபியின் பிறந்தநாள். அதைக் கொண்டாட மகேஷின் அப்பாவும் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தார்.

ஏனம்மா? ஒரே டென்ஷனா இருக்கே? என்றார் மகேஷின் அப்பா!

அபி இன்னும் பள்ளி விட்டு வரலை மாமா! பாட்டு கிளாஸ்லேயும் கேட்டாச்சு, இன்னிக்கு வரவே இல்லைனு சொல்றாங்க! ஒரே பயமா இருக்கு மாமா! என்றாள்.

நான்தான் தலையால அடிச்சுகிட்டேனே! இருவரும் வேலைக்குப் போகனுமா? நான் தான் என் பென்சன் தெகையைத் மாதாமாதம் தருகிறேன், வீட்டுக் கடனை அதனாலே அடைங்க! புள்ளையை ஒழுங்கா கூடவே இருந்து பத்திரமா வளருங்க! னு சொன்னேனே கேட்டீங்களா?

பச்ச புள்ளைனு கூட பார்க்காம இப்ப நகரங்களில் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்குது, அதுவும் தனியா ஆட்டோவிலே அனுப்பறீங்களே? எவ்வளவு அலட்சியம்? உங்களுக்கு.
என பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்.

மாமா,மன்னிச்சிடுங்க மாமா! ஆனா இது நேரமில்ல! இப்போ குழந்தை பத்திரமா வீடு வரனும்.அதுதான் என்றாள்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே ஆட்டோ, வாசல் வந்து இருந்தது.
சோர்வாக காணப் பட்டாள் அபி. ஓடிச் சென்று கட்டியனைத்தாள்.

கிரி அபியின் அம்மாவிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டு இனி தானே அழைக்க வருவதாக உறுதி கூறி திரும்பினான் .

அது என் கூட இருந்தது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நல்லா இருக்கும் போது கூட்டியாந்து இருந்தா நானும் அது கூட கொஞ்ச நேரம் விளையாடி இருப்பேன்ல, ஆஸ்பத்ரி ,ஊசினு போட்டு அதை தூங்க வைச்சுட்டியேய்யா! என அதட்டினாள், வாரிசுக்கே வாய்ப்பில்லை என கைவிடப்பட்ட கிரியின் அக்கா மல்லிகா!

எனக்கும் புரியுது! ஊரான் விட்டு புள்ளைடி! அது!
அதை காணுமேன்னு அங்க துடியா துடிக்க மாட்டாங்க! உடம்பு சரியில்லாம போச்சேனுதான் நான் பாட்டுக் கிளாஸுக்குப் போகாம, டாக்டர்கிட்டே காட்டிட்டு, வூட்டுக்கு இட்டாந்தேன்.

நானும் அதனாலே ஆசைத் தீர. ரச சோறு வைச்சு ஊட்டி விட்டேன்யா, அதுவும் ரசிச்சு அழுதுகிட்டே சாப்பிட்டுச்சுயா!
அது அழுகை இன்னும் என் கண்ணிலே நிக்குது!

சாப்பிட்டுவிட்டு தேங்ஸ்ம்மா! என சொல்லிச்சு பாருய்யா!..
இதுவே போதும் என் ஆயுசுக்கு, மனசு குளிர்ந்திடுச்சு.

என கண்ணீர் விட்டு தன் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டாள். தன் ஆசை மாமாவிடம். மல்லிகா!

மறுநாள்..
இருவரும் அலுவலகம் முடித்து வந்து அபியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு, தாத்தா,அப்பா,அம்மா கூடி நின்று கேக் வெட்டச் சொன்னார்கள்.. மறுத்துவிட்டாள்,அபி .

கிரியும், அக்கா மல்லிகா மற்றும் மாமாவும் வந்தால்தான் கேக் வெட்டுவேன், என அடம் பிடித்ததால், அவர்கள் அழைக்கப்பட்டனர்.

மல்லிகாவைப் பார்த்த அபி, கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடும் தாயைப் பார்த்த கன்று குட்டியாய் , அம்மாவின் கையை உதறிவிட்டு ஓடிச் சென்று இறுக்கி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அந்த ஒரு முத்த அழுத்தம் அவளின் கருப்பையை குளிரவைத்தது.

கலாவின் அடி வயிற்றில் அன்பு பற்றாக்குறையால் பற்றி எரிந்தது.

இரவு கலா உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள்,

என்ன எழுதுகிறாய் பள்ளி பேரூந்துக்கான கடிதமா? எனக் கேட்டான் மகேஷ்.

இல்லை என் ராஜினாமா கடிதம் என்றாள்.கலா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *