‘‘ஆயா, டி.வி சவுண்டை குறைங்க…’’
‘‘ஏய் அபி, நீ என்ன படிக்கவா செய்யுற? முதல்ல கம்ப்யூட்டர் கேம்ஸோட சவுண்டை குறை. நிம்மதியா ஒண்ணு பார்க்க முடியறதில்ல…’’
‘‘எனக்கும்தான் நினைச்ச பாட்ட கேக்க முடியுதா… எந்நேரமும் வில்லிங்க ராஜ்ஜியமும் அழுகாச்சி ஓசையும்தான்…’’
‘‘ரொம்ப வாயாடற. உங்கம்மா கண்டிச்சி வளர்த்தாதானே?’’
சுதாவுக்கு சுருக்கென்றது. கணவனின் காதுக்குள் விஷயத்தைப் போட்டாள்.
‘‘ம்… இந்த வீட்டுல மாமியார் & மருமகள் பிரச்னைக்கு பதில் பாட்டி&பேத்தி சண்டதான் பூதாகரமா இருக்கு. நாளைக்கு ரெண்டு பேரும் என்ன பண்ணப்போறாங்களோ தெரியலீங்க…’’
மறுநாள் மாலை வீடு திரும்புகையில் தாயக்கட்டை உருளும் சத்தம் கேட்டது.
‘‘அம்மா.. இன்னிக்கு காலையிலிருந்தே கரன்ட் இல்ல. பரமபதத்தை எடுத்து ஆயாவோட விளையாடினேன். நேரம் போனதே தெரியல…’’
‘‘சமத்து!’’
இரவு அபியின் ஸ்கூல் பையை சரிபார்க்கையில், ‘‘ஏய் அபி, 15 ரூபா பேனா வாங்கிக்கொடுத்து முழுசா ரெண்டு நாள் ஆகல. அதுக்குள்ள தொலைச்சிட்டு வந்துட்டியா’’ என கோபத்தில் அடிக்க கை ஓங்கினாள் சுதா.
‘‘குழந்தைகிட்ட என்ன கை ஓங்குற வேலை?’’ & அபியை இழுத்து அணைத்தபடி துணைக்கு வந்தார் ஆயா.
சுதா முழுநீள பவர்கட்டை நினைத்து நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள்!
– நவம்பர் 2010