கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 3,201 
 
 

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-9

அபிதா-6

சாவித்ரியை ஊர்க் காரியங்களுக்கு மாமி விட மாட்டேன்கிறாள். “நன்னாயிருக்கு வந்த இடத்தில் நீங்கள் வேலை செய்யறது? நீங்கள் வந்து எங்களோடே தங்கியிருக்கிறதே எங்கள் பாக்கியம்.”

மாமி நன்றாகப் பேசுகிறாள். குரல் பெரிது. கூச்சமுமில்லை. நான் கூடத்திலிருக்கிறேன். சமையலறையிலிருந்து அவள் கர்ஜனை எட்டுகிறது. சில பேருக்கு அவர்கள் குரலே அவர்கள் விளம்பரம். நாங்கள் இலவசத்துக்குத் தங்க மாட்டோம் என்று அவளுக்குத் தெரியும். அந்த மகிழ்ச்சியை அவள் தெரிவிக்கும் முறை இப்படித்தான் போலும்!

“நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய மனுஷாள்! ஏதோ பழைய வாசனையை மாமா மாதிரி ஞாபகம் வெச்சுண்டு யார் இந்த மாதிரி வருவா?”

கேட்டுக்கொண்டே ஏதோ காரியமாக மாமி கூடத்துக்கு வருகிறாள். என்னைப் பார்த்ததும் அப்போத்தான் பார்த்ததுபோல் அடக்கம் பண்ணிக்கொள்கிறாள்.

வாய் அமுதம் பொழிகின்றது.

கண் கணக்கெடுக்கிறது.

சுவர்மேல் சூர்ய கிரணம் சிரிக்கிறது.

குருக்கள், நைவேத்ய மூட்டையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

அபிதா வீட்டில் இல்லை.

நானும் வெளியே போகிறேன். கால் சென்ற இடம்.

குருக்கள் மாமி முகஸ்துதிக்குச் சொன்னாலும், கடைந்த உண்மையைத்தான் சொல்கிறாள். வாசனைகளில் தான் உயிர் வாழ்கிறோம்.

உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் எனும் சத்யமாயையில்தான். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் பரிதவித்து நிழல்களில் கனிந்து நிழல்களில் தெளிந்த நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனையும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?

இந்தத் தர்க்கரீதியில் அதோ வானளாவி நிற்கும் கரடி மலையும் ஒரு நிழல்தான்.

அன்று ஜன்னல் கண்ணாடியில் ஒழுகி வழிந்த மழை நீரை சகுந்தலையின் கண்ணீர் தாரையாகக் கண்டு நம்பி வந்ததும் ஒரு பிம்பம்தான்.

திரும்பத் திரும்பக் கரடிமலைக்கும் குருக்கள் வீட்டுக்கும் இடை தூரத்தை நடந்து நடந்து, அளந்து, அளந்து, இங்கு நான் இருந்தவரை ஞாபகத்திலும், இங்கு விட்டுச் சென்றபின் கற்பனையிலும் சகுந்தலையின் நடமாட்டங்களையும் சுவடுகளையும் தேடி அலைகிறேன்.

சகுந்தலை செத்துப் போனாள்.

செத்துப் போனவளைப் பொசுக்கிய சாம்பல் கூட கரைந்தும் காற்றில் பறந்தும் போயாச்சு. இத்தனை வருடங்களுக்குப் பின் இங்கு வந்த முட்டாளே, இன்னும் எதைத் தேடுகிறாய் அதைவிட முட்டாளே?

இந்த நிகழ்ச்சியும் என் பகுத்தறிவு என்னைக் கேட்டுக் கொண்ட இந்தக் கேள்வியும் உண்மையின் ஒரு முகமாயிருக்கலாம். ஆனால் சகுந்தலையைப் பற்றிய நினைவின் சரடு அதனால் அற மறுத்தது. அதன் உரம் சகுந்தலையின் சாவையும் தாண்டி நான் தொடர்ந்து சகுந்தலையை இன்னும் இங்கேயே தேடுகிறது இந்த இரக்கமற்ற, தவிர்க்க முடியாத தொடர்பு, தூண்டுதல், துரத்தல் என்ன? முற்றுப்புள்ளியை ஏற்றுக் கொள்ளாத தன்மை தான் என்ன?

என்னத்தையோ எழுதி, எழுதியதைப் படித்து, படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து, அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைத்து, நினைவை அவ்வப்போது காயப்படுத்தி, காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள், பிரயத்தனங்கள் கொள்கிறோம். நினைவின் ரணமே உயிரின் தைரியம், உயிரோவியத்தின் பல வர்ணங்கள்.

காலடியில் குறுகுறு –

உடல் கூசி கையில் எடுக்கிறேன்.

புஷ்ப சரம்.

ஆ! நினைவு வந்தது. இது நேற்றுமாலை அபிதாவின் கூந்தலில் இருந்ததல்லவா?

“மாலையில் கூந்தலில் செருக்குடன் மகிழந்த மலரே, காலையில் உன்னை மண்ணில் சிதறுண்டு கிடக்கக் காண்பதென்ன?”

கன்னத்தில் ஒற்றிக் கொள்கிறேன். காதோடு அது மெத்தென்று என்ன பேசுகிறது?

உன் குரல் எங்கிருந்து வந்தாலும் சரி அது என் பாக்கியமே.

விசனம் நிறைந்த வசனங்கள், நெஞ்சின் அடிவாரத்தின் சுனையிலிருந்து பொங்குகின்றன. ஏதோ எல்லைக்கோட்டில் மனம் தத்தளித்துத் தவிக்கின்றது. என்னத்தையோ தேடி, இருப்புக் கொள்ளாமல், நடந்து கொண்டேயிருக்கின்றேன்.

முகத்தில் கடவுள் ஏன் கண்ணை எழுதி, காக்ஷியைக் காட்டி, கூடவே கலவரத்தையும் கொடுத்தான்?

பாதையின் திருப்பத்தில், தூரத்தில் இரு கரையின் மேடுகளுக்கிடையே, ஒரு வளைந்த தாழ்வில், வாய்க்காலின் ஜல விளிம்பு காலை வெய்யிலை வாங்கிக்கொண்டு தகதகக்கின்றது. நெருங்குகிறேன். எதிர்க்கரையில் தோய்க்கிற கல்லருகே, குத்திட்டபடி அபிதா குடத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்.

புடவையின் கோடி, ஜலத்தில் நனைந்து நீரோட்டத்தில் லேசாய் அலைந்தது. புடவையின் உடலும் அங்கங்கே நனைந்து, நனைந்த இடங்கள், உடலோடு ஒட்டிக் கொண்டு அங்கங்கள் பிதுங்கின. சௌகரியத்திற்காக முழங்கால்களுக்கிடையே அள்ளிச் சொருகி, மடியில் அடைத்த சேலையின் நீலத்தை யடுத்து தொடைச் சதை வெய்யில்படா தனி வெண்மையில் பளீரிட்டது.

அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் நின்ற இடத்தில் ஒருவேளை கரைமேடு என்னை மறைத்ததோ என்னவோ? அல்ல, அவள் முழுக்கவனம் குடத்தைத் தேய்ப்பதில் முனைந்திருந்ததோ? அல்ல, அவள் காணும் பகற்கனவிலிருந்து இன்னும் விழிக்கவில்லையோ?

கரைகளினிடையே வாய்க்கால் வளைந்து, தன் தலையைத் தேடும் பாம்பு போல் ஓடிற்று. கரை மேட்டுக்கப்பால், வயல்களில், கதிர்களினிடையே காற்று சலசலத்து பாம்பின் சீறல் போல் ஓசை என்மேல் இறங்கிற்று. ஸமயம் ஸஹிக்க முடியா ஸௌந்தரியம் கக்கிற்று.

விஷம்.

பொழுது, இடம், செயல் மூன்றும் ஒன்றாய் விழைந்து, உட்புலனுக்கு மட்டும் எட்டும் அர்த்தம் கொள்கின்றன.

கரைகள் என்ன குறுகினும்,
நான் இக்கரை,
அவள் எதிர்க்கரை.

கரைகள் சொல்லும் பொருள் இதுதானோ? “நாங்கள் கரைகள் கரைகள் கரைகள் தாம்.” மௌனமாய் என் கரையோரம் மேலே நடக்கிறேன்.

பக்ஷிகள் உற்சாகமாய், மரங்களில், ஆகாயத்திலே, தலைக்கு மேல், கண்பட்டு, கண்படாமல் சப்திக்கின்றன.

“- ட்வீக் ட்வீக் -”

“- கீச் கீச் கீச் -”

“- ட்ர்ர்ர்ரீ -”

என்னைச் சூழ்ந்திருக்கும் அமைதியில், இவ்வமைதியே மோன கர்ப்பத்தின் தாது. சப்தங்கள் சலனத்தின் சதங்கைகள்.

கரையோரம் கத்தாழையையும் முட்களையும் கடந்ததும் இடம், தழைத்த இடை போன்று அகன்று என்னைத் தன் வயிற்றுள் வாங்கிக் கொள்வது போல் ஒரு மாந்தோப்புள் – (தோப்பா தொப்புளா?) – அழைத்துச் செல்கிறது. ஏதோ ரஹஸ்ய ஜாலத்தில் இயற்கையின் சதியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு மரத்தின் பின் ஒரு ஆள் பதுங்குகிறான். ஏன்?

வில்லி. அவன் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.

மாங்காய் திருடப் போகிறானா? ஆனால் இப்போ மாங்காய்க் காலமில்லையே!

அவன் கையில் ஒரு கவண் தொங்குகிறது. அப்போத்தான் சுழல ஆரம்பித்திருக்கிறது.

ஓ! புரிந்தது. இவன் மாங்காய் அடிக்கவில்லை. ஏதோ பக்ஷியடிக்கப் போகிறான். வசியமுற்றவனாய்க் கவணையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கவண் வேகமெடுத்துவிட்டது. மணிக்கட்டுக்கு மேல் கை ஆடவில்லை. கவண் ஒரு கணத்தில் சக்கரமாக மாறிவிட்டது. மரம் நிறைய இத்தனை பறவைகளில் இவன் குறி எதுவோ? எனக்கு உடல் பரபரத்தது. பொத்தென்று ஆகாயத்தினின்று ஒன்று என் காலடியில் விழுந்து வெறும் மூக்கும் வெறித்த கண்ணும் சிறகும் இறகும் உரோமமுமாய் உயிரற்ற மொத்தையாய் கணத்தில் கண்ணெதிரே மாறுவதைக் காண எனக்குச் சக்தியிருக்குமோ? படம் பளிச்சென்று கண்ணை வெட்டி மறைவதற்கும் கவணிலிருந்து கல் புறப்படுவதற்கும் ‘வீல்’ என்று என்னின்று ஒரு அலறல் கிளம்புவதற்கும் சரியாயிருந்தது. ஒரு பக்ஷிக் கூட்டம் வைது கொண்டு மரத்தை விட்டுக் கிளம்பிச் சிதறுண்டது.

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனான். தோப்புக்குச் சொந்தக்காரனை அவனுக்குத் தெரியாதா என்ன? உடனே கோபம், உடனே அலக்ஷியம், உடனே சிரிப்பு அவன் கண்களில் சிந்தின. மேட்டு விழிகள். குத்து மீசைக்காரன். வாயினின்று வெடித்த சிரிப்பில் வாயெல்லாம் செக்கச்செவேல்.

“ஏன் சாமி? நீ பாவம் பார்த்து ஒரு உசிரைக் காப்பாத்திட்டதா நினைப்பா? இன்னிக்கு தப்பிச்சு. சரி, நாளைக்கு? நாளைக்கு என்ன பண்ணப் போறே? இதே நேரத்துக்கு அது இங்கே வந்து குந்தும்னு எண்ணிறியா? இல்லே இங்கே வந்தே நான் அதைக் காவு வாங்கப் போறேன்னு நெனக்கிறியா? நீ ஊருக்குப் புதிசு. நான் இங்கேயே பொறந்து, இதே புளைப்பா இங்கேயே வளந்தவன். இதுங்களை எனக்குத் தெரிஞ்ச மாதிரி உனக்குத் தெரியுமா? இதுலே எதுக்கேனும் மாரிலே மச்சம் இருந்தால், அந்த மச்சம் முதல் எனக்கு நல்லாத் தெரியும். இன்னிக்கில்லாட்டி நாளைக்கி, நாளைக்கில்லே, அதுக்கு மறுநாள். எனக்கு இஸ்டமானதைக் கல்லாலோ வில்லாலோ அடிச்சுத் தள்ளிடுவேன். கையாலே கூட கழுத்தை முறிச்சுப் போட்டுடுவேன். ஹாஹ் ஹா ஹா! அன்னன்னிக்கு என்ன கிடைச்சுதோ – காடையோ, கவுதாரியோ, பாம்போ, ஓணானோ, பன்னிக்குட்டியோ, நரியோ, முசலோ – ஏதோ ஒண்ணு. உசிர் எல்லாம் ஒண்ணுதானே!”

இவன் என்ன மூச்சுவிடாமல் ஆனால் விஷயம் விடாமல், ஸம்ஹாரமூர்த்தியின் பாஷை – ‘எல்லாம் என்னுடையது’ – பேசுகிறான்! சக்கரம் அறுக்கிறது, கபாலம் ஏந்துகிறது என்கிறானே? இவன் வாழ்க்கை மட்டுமல்ல, இவன் வேட்டையாடும் உயிரின் நியதியில், இவனுக்கும் அதற்கும் இடையில் உள்ள உறவில், உரிமையில் நான் தலையிட்டேன் என்கிறான். அப்படி தலையிட்டும் நான் சாதித்தது என்ன என்று கேலி பண்ணுகிறான்.

என்னைச் சுற்றி மரங்கள் அனைத்தும் கூட அவன் கக்ஷி போல், அவன் சொல்லுக்கு சாக்ஷியாய் அவன் குற்றச்சாட்டுக்கு உடந்தையாய் சலசலக்கின்றன. என்னை நெருக்குவது போல் எப்போது எப்படி திடீரென இவ்வளவு கிட்ட வந்தன? இவன் என் மேல் கைவைத்தால் நான் தாங்குவேனோ? எனக்கு லேசாய் மூச்சுத் திணறுகிறது. சற்று வேகமாகவே நடக்கிறேன். அவன் எக்காளம் என்னைத் துரத்துகிறது. நடையும் ஓட்டமுமாய் விரைகிறேன். மாந்தோப்பைத் தாண்டியதும் – அப்பா! – மரங்களின் சிறையினின்று விடுபட்டாற்போல் ஒரு பெருமூச்சு என்னின்று எழுகின்றது!

மீண்டும் பரந்தவெளி.

அதோ கரடிமலை.

தோப்புகளினிடையே அங்கங்கே வீடுகளின் கூரைகள். ஓலைமுடையல்கள், ஓடுகள், ஒன்றிரண்டு மாடிகள் கூட. ஒரு தென்னையின் அடிமரத்துடன் பிணைத்து அறைந்த தபால் பெட்டியின் சிவப்பு. வெகு தூரத்தில் கண்ணில் பட்டுப் பட்டு மறையும் சாலைக் கோட்டின் மேல் ஒரு பஸ் இங்கிருந்து பார்க்க, எறும்பு போல் ஊர்ந்தது. நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு மைலுக்குப் பஞ்சமில்லை. இன்னொரு மூலையில், கண்ணுக்கெட்டிய தூரத்துப் புள்ளியாய் ரயில்வே ஸ்டேஷனின் சிவப்புக் கூரை.

வயல்களில், தொடுவானத்தில் ஏதேதோ புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. பிரிகின்றன, திரும்பவும் கூடுகின்றன.

கண்ணுக்குப் பத்தடி உயர வானத்தில் ஒரு புள்ளி புறப்பட்டது. வண்டு. அதன் ரீங்காரத்தின் சுழலிலேயே மாட்டிக் கொண்டு, அது கிர்ரிட்டுக் கொண்டே வந்து என் மேல் மோதுவது போல் என்னைச் சுற்றிச் சுற்றி முங்கி முங்கி எழுந்தது.

ஓயாத ஒரே மூச்சு ரீங்காரம் இது எப்படி சாதிக்கிறது? அடுத்தடுத்து என்னை மோதுகின்றது. முகத்தைக் கைகளால் மறைத்துக் கொள்கிறேன். அது அப்பவும் விடவில்லை. குரல்வளையைத் தேடி வளைந்த விரல்கள் போல் கொடூரமான கொடுக்குகள். வடித்த விஷத்தைக் குடுக்கையில் அடைத்தாற் போன்று சக்குவின் கோபமா? தன் சினத்தைச் சிதற, இந்த ரூபத்தில் எனக்காகக் காத்துக் கிடந்தாளா?

ஏய், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட எப்படிப் போனாய்?

போனாலும் எப்படி இத்தனை நாள் திரும்பாமல் இருந்தாய்?

இருந்தாலும் தான் இருந்தாய், ஆறாத புண்ணைக் கிளறி விட ஏன் இப்போது திரும்பி வந்தாய்.

சக்கு! அடியே! நீ நெஞ்சின் எதிரொலியாகி விட்டாய். எதிரொலிக்கு என்ன பதில் சொல்லி மீள்வேன்?

எங்கிருந்தோ யாருடைய சிரிப்போ எதிரொலிக்கிறது.


வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப்பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்த லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள் – ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஓயாத பழங்கணக்கு, அத்தனையும் தப்புக்கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவுதான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா.

எங்கிருக்கிறேன்? சொறி நாய் சுருண்டு படுத்துக் கொண்டாற் போல் ஒரு வளையத்தில் ஒரு கரைமேடு; இது கன்னிக் குளமல்லவா? என் யோசனை வழியில் ரொம்பதூரம் வந்திருக்கிறேன். இந்த ஜலத்தின் தெளிவு பளிங்கு தோற்றது. கரையிலும் குளத்திலும் பூரா சின்னதும் பெரிதுமாய் ஒரே கூழாங்கற்கள். கடுங்கோடையிலும் இந்தக் குளம் வற்றுவதில்லை. ராக்ஷஸத்தோடு பதித்தாற்போன்று நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுக்கடுக்காய்ப் புதைந்து போன கற்களின் திட்டுக்களினடியில் எங்கோ ரகஸ்ய ஊற்றிலிருந்து ஜலம் கசிகின்றது.

கல் வடித்த கண்ணீர்.

இங்கு அல்லியும் பூத்ததில்லை. ஆம்பலும் தலை நீட்டியதில்லை. உச்சி வெய்யிலில் குளத்தில் அடிவயிறு பளீரென்று தெரியும். அடி வயிற்றின் தொப்புள் குழி கூட இஷ்டப்பட்டால் தெரியும். நடுப்பகலின் வெட்ட வெளிச்சத்தில், வெறிச்சிட்டு, தனிப்பட்ட குளம். தண்ணீர் கற்கண்டாயினும் யார் இவ்வளவு தூரம், பானையையோ குடத்தையோ தூக்கிக் கொண்டு வருவது? ஆகையால் இதன் தண்ணீர் செலவாவதில்லை. அதனாலேயே பேரும் கன்னிக் குளம்.

வெய்யிலின் வெம்மை, தோல் மேல் ஏறுகிறது. குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப் போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும், உடைந்தாலும் பளார் எனப் பிளந்து போமேயன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.

பார்வைக்கு இது என் கையில் அடங்குகிறது. ஆனால் வயதில் என்னைப் போல் எத்தனை பேரை இது விழுங்கியிருக்கும்!

“என்ன முணுமுணுக்கிறாய்? வயதா? அதென்ன வயது? ஒண்ணு, ரெண்டு மூணு என்று உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உங்கள் அழுக்கை உருட்டி உருட்டி நீங்கள் மணியாய் ஜபிக்கும் அழுக்குருண்டைதான்.”

ஜலத்தைக் கையில் அள்ளுகிறேன். எல்லாம் விரலிடுக்கில் வழிந்து போகிறது! உள்ளங்கையில் மட்டும் ஆசமன அளவிற்கு ஒரு மணி உருண்டு வெய்யிலில் சுடர் விடுகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

அபிதா?

உன் உள்ளங்கையில் நான் குந்துமணி.

புலிக் கோடுகள் போல் மின்னல், கண்ட சதையை, தொடைகளை, விலாவில், நெற்றிக்குள், புருவ மத்தியில், பளிச், பளிச் வெய்யில் பிடரியில் தேளாய்க் கொட்ட ஆரம்பித்து விட்டது. நேரமாகிவிட்டது.

இவ்வளவு தூரம் வந்ததற்கு இங்கு குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம்.

ஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர்விதிர்ப்பு கூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப் போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்பத் தைரியமில்லை, திரும்புகிறேன்.

அபிதா-7

“இதைப் பார்த்தேளா? அபிதாவுக்கு எது கட்டினாலும் ஏர்வையாயிருக்கு! புடவை சாயம் சோகையாப் போயிட்டாலும் அவள் உடம்பில் அது மெருகு காட்டறது. சிவப்பாயிருந்தால் மட்டும் போதாது. சிவப்பாயிருந்தாலும் சில கலர்கள் தான் பொருந்தும். ஆனால் இந்தக் குருக்களாத்துப் பெண்ணின் நிறவாகே தனி. எந்தப் புடவைக்கும் இழைஞ்சு கொடுக்கறது. எனக்கு இதுதான் புரியல்லே. இவள் மாதிரியிருக்கவாள் எல்லாம் ஏன் இந்த மாதிரி இடத்தில் பிறக்கறா?”

நான் அசுவாரஸ்யமாக ‘சூ’ கொட்டுகிறேன். அவளுடைய ஆச்சர்யமேதான் என்னுடைய ஆச்சர்யமும். ஆனால் ஆச்சர்யப்பட இவள் யார்? எனக்கு இப்படித் தோன்றுவது அடாது. தெரிகிறது. ஆனால் தோன்றுகிறதே!

“ஆமாம் இங்கே நாம் இன்னும் எத்தனை நாளைக்கு ‘டேரா’?”

சாவித்ரி வாயைத் திறந்தாலே எனக்கு எரிச்சல் எழுகிறது. பல்லைக் கடிக்கிறேன்.

“ஏன், எத்தனை நாள் இருந்து விட்டோம், உனக்கு அதற்குள் அலுத்துப் போகும்படி?”

“எனக்கு அலுத்துப் போவது இருக்கட்டும் – இங்கே பொழுது போவது சிரமமாத்தானிருக்கு – இவாளுக்கு அலுத்துப் போகாமல் இருக்க வேண்டாமா? இவாளுக்கு நம்மைச் சமாளிக்கிறது யானையைக் கட்டித் தீனி போடறாப் போலேன்னா?”

அவளை, பிறகு, என்னை, ஒரு முறை அவள் காணக் கண்ணோட்டம் விட்டுக் கொள்கிறேன்.

“எப்படியும் நான் யானையில்லை.”

சாவித்ரி விடுத்த பார்வையில் என் கணை மொக்கைபட்டு வீழ்கிறது. அதில் அவ்வளவு அலக்ஷியம். ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’ எனும் மோன ஆச்சரியம். ‘உன்னைச் சட்டை செய்து உன்னைப் பதிலுக்குப் பதில் ஏசி உன்னிலும் கீழ்மைக்கு நான் இறங்கப் போவதில்லை’ எனும் பதிலும் கூட, என்னை அவமானப்படுத்தும் பொறுமையைச் சாதித்துத் தன் தரத்தை உரப்படுத்திக் கொண்டு, என் சிறுமையை எனக்கு உறுத்துகிறாள்.

வெற்றி கிறுக்குப் பிடித்தது. அது யார் பக்கம் என்று கடைசி வரை சொல்வதற்கில்லை. இருவரில் ஒருவருக்கு அது கட்டாயம் துரோகம் செய்தே ஆக வேண்டும்.

ஙண ஙணவென மணிகளின் ஓசை – பெரிதும் சின்னதுமாய் ஒன்று கலந்து எங்களை எட்டுகின்றன. என் நெஞ்சில் பழைய படங்களை எழுப்புகின்றன.

“போகணும் போகணும்னு பறக்கறையே, உங்கள் ஊரில் இதெல்லாம் கண்டிருப்பையா? வா, வந்து பார். இத்தனை நாள் உன் பிறந்த வீட்டில் நான் இருந்தாச்சு. கொஞ்ச காலமாவது நான் வளர்ந்த இடத்தில் நீ இருக்க வேண்டாமா?”

பாதி கடுப்பு, பாதி கேலியாகப் பேச்சை மாற்றுகிறேன்.

வீட்டுக்குப் பின்னால், மைதானத்தில் மாடுகள் மந்தை கூடுகின்றன. பெரிய மந்தைதான். சுற்று வட்டாரத்துப் பேட்டைகள், குக்கிராமங்களிலிருந்தும் மாடுகள் வந்து சேர்கின்றன. மாட்டுக்காரப் பையன் உருவம் கூடச் சரியாகத் தெரியவில்லை. அவ்வளவு நெரிசல், அவ்வளவு புழுதி.

“ஓஹோ? பட்டணத்தானின் பட்டிக்காட்டு ப்ரவேசமோ?”

குரல் கேட்டுத் திரும்புகிறோம். அபிதாவும் ஒரு பசுவை ஓட்டிக் கொண்டு வருகிறாள். தன் இனத்தை அது கண்டுவிட்டது; இனி அதை ஓட்டத் தேவையில்லை. அதற்குக் குஷி. அதற்கு மந்தையின் ஈர்ப்பு கண்டுவிட்டது. பீப்பாய் உடல் குலுங்க ஓடி வந்து, நிரையுடன் கலந்துவிட்டது.

அபிதா வந்து, எங்களோடு நின்றாள்.

ஒன்றாகவும் இரண்டாயும் மாடுகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. சேரச் சேர அவைகளின் இரைச்சலும், பெரிய வாத்திய கோஷ்டியின் சுருதி கூட்டல் போன்ற விதவிதமான கத்தலும் மணிகளின் கணகணவும் வலுக்கின்றன. காதைப் பொளிக்கின்றன.

“மாடெல்லாம் பெரிசாயிருக்கேன்னு பாக்கறேளா?”

“இந்த மாடுகள் பெரிசுன்னா எங்கள் கண்கள் சிறிசு” என்றேன்.

“அப்போ சிறிசாயிருக்கேன்னு பாக்கறேளா? பெரிசாயிருந்தாலும் சரி, சிறிசாயிருந்தாலும் சரி, கன்னுக்குட்டிக்கு விட்டது போக, சகட்டுக்குக் கால்படிக்கு மேல் ஒரு பாலாடை கூடத் தேறாது. அதிலேயேதான் மோர், தயிர், நெய், வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு காப்பி, வெளி வியாபாரம், ஊர்கோலம், வாணவேடிக்கை எல்லாம். வந்த விருந்தாளி, பாலிலும் மோரிலும் முகம் பார்த்துக் கொள்ளலாம்.”

அவளுடைய வாய்விட்ட சிரிப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது.

“வீட்டுக்கு வீடு இந்தக் காமதேனு இல்லாட்டா, அதுவும் தகராறுதான். என்னதான் இருந்தாலும் நாட்டு மாடுதானே! மாமா சொல்றா – அதான் சித்திக்குத் தம்பி – அவர் எங்கெங்கேயோ ஊரெல்லாம் சுத்தியிருக்கார் – என்னென்னல்லாமோ பார்த்திருக்காராம் – இஷ்டப்பட்டால், இங்கே ராத்திரி என்னைக்காவது தங்கினால் கதை கதையா சொல்வார் – முக்காலி போட்டுண்டு, தலையை வயத்தில் முட்டுக் கொடுத்துண்டு, வாளி வழியக் கறக்கற மாடெல்லாம் இருக்காமே! கறக்கக் கறக்கத் தோள் பட்டை விட்டுப் போனாலும் போகும் மாட்டுக்கு மடி குன்றாதாமே! ‘அபிதா, ஒரு மாட்டுப்பாலே உங்கள் ஊருக்கு சப்ளை பண்ணி மிச்சத்தைப் பயிருக்குப் பாய்ச்சலாம்,’ நிஜமாவா மாமா?”

உயிர் தன் முழு ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள்.

கொடுக்கும் அரி போன்று நீண்டு நுனி வளைந்து, என் நெஞ்சை அறுக்கும் ரம்பை மயிர்கள்.

அபிதா, உன் சித்தியின் தம்பி சொன்னது மெய்தான். ஆனால் அவன் ஏன் சொன்னான்? அவனை நான் முந்திக் கொள்ள முடியவில்லையே எனும் ஆத்திரத்தையும் எனக்கு நீ ஏற்படுத்தி விட்டாய். இந்த ஏக்கம் போதாதென்று அதை நீ இன்னும் அறியவில்லை எனும் வேதனை வேறு என்னை வாட்டுகிறது.

மந்தை நகர ஆரம்பித்தது. மாட்டுக்காரப் பையன் ஓட்டி நகரவில்லை. தான் நிறைந்ததை உணர அது அவனை நம்பியில்லை. இன்றைக்கு இதற்கு மேல் மாடுகள் வருவதற்கில்லை. இன்றைய நிறைவு இவ்வளவுதான் என மந்தை எப்படியோ மொத்தாகாரமாய் உணர்ந்து, அந்த உணர்வின் உந்தலில் தானே நகர ஆரம்பித்து விட்டது. இதற்கு எப்படி அதன் அன்றன்றைய நிறைவு தெரிந்து விடுகிறது?

இதுவே ஒரு உலகம் தான். எத்தனையோ தாய்கள், தந்தைகள், எத்தனையோ கன்றுகள், தாயின் கன்று தானும் தாயாகி, தன் கன்றை வீட்டில் தொழுவத்தில் விட்டு விட்டு, இங்கு வந்து கலந்து, மாலை வந்ததும், கன்று நினைப்பு வந்து தன் இடம் தேடி ஓடி விடுகின்றது.

மந்தையோடு நகரும் தம் வழியில், இரண்டு பசுக்கள் எங்கள் பக்கத்தில் வருகின்றன. முக ஒற்றுமை, கண்களைச் சுற்றிய வெள்ளைக் கரை, கொம்புகளின் வளைவில் அதே கோணல், நெற்றியில் ஒரே மாதிரியான வெள்ளைத் திட்டு –

இவை தாயும் கன்றுமாவே இருக்கலாம்.

தாயும், தானும் தாயாகிவிட்ட தாயின் கன்று.

கன்றின் தாயாகிவிட்ட தாயின் கன்று, இங்கு, மந்தையில் தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளுமோ? இல்லை நானும் ஒரு மாடு நீயும் ஒரு மாடு எனும் போட்டி அடையாளம் மட்டுந்தான் நிற்குமோ? உடனே கூடவே ஒன்றுக்கொன்று ஆத்திரம், ஒரே இனமாயினும் உயிருக்கு உயிர் உள்ளூரப் புழுங்கும் உள்பகை – இதுதான் அறியுமோ?

“மாமா மாமா!” அபிதா அலறினாள்.

ஒரு கணம் தப்பியிருந்தால் என்னை அது கீழே தள்ளி நான் மந்தையின் குளம்புகளடியில் மிதிபட்டுத் துவையலாகியிருப்பேன்.

அது என்னை உராய்ந்து சென்ற வேகத்தில், என் நெற்றிப் பொட்டில், புருவ மத்தியில் பின் மண்டையோட்டுள் மின்னல்கள் பறந்ததுதான் அப்போது அறிவேன். மின்னல்களின் பொளிசல்கள் – பொளிசல்களின் ஒளித்துடிப்புகள் –

கோபம் சிந்தும் செவ்விழிகள்.

கீழ்வாய்ப் பல்வரிசையில் இளித்த குரூரம்.

விறைத்த வால் நுனியில் மயிர்க் குஞ்சம் கொடி கட்டிப் பறந்தது.

முரசு கொட்டத் தூக்கிவிட்ட முன்னங்கால்கள்.

நாபியினின்று நீண்டு எட்டி எட்டி நாக்கு ஜெவெ ஜெவெனத் தவித்தது.

குப்பென்று மேலே அலைமோதிய ஆண்வாடை.

எங்கள் கண்கள் சந்தித்தன. சட்டென அபிதா முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கன்னங்களின் பிழம்பில் என் அந்தக்கரணத்தில் நான் எரிந்து போனேன்.

பிறகு எங்களால் ஒருவரையொருவர் சரியாக முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. இடையே, காற்றில் எழுதிய ஸன்னக் கோட்டில் காளையின் உருவம் எழுந்தது. அதன் திமில் மேல் எங்கள் கண்கள் தாம் ஒன்றையொன்று கவ்விக் கொண்டன. உடனே பயம் கொண்டு ஒன்றுக்கொன்று முதலை வாயினின்று விடுபெற முயன்றன.

அவள் லஜ்ஜையில் அவள் தகதகக்கிறாள்.

சாவித்ரி என் வேதனை அறிவாளா? இன்று என்னவோ அவள் குருக்கள் வீட்டுப் பெண்டிருடன் அலாதியாக ஒட்டிக் கொள்கிறாள். தன் பெட்டியைத் திறந்து சாமான்களையெடுத்து வெளியே போடுவதும் அபிதாவின் காதில் கம்மல் ஒத்திப் பார்ப்பதும் – மாறி மாறி பண்டங்களைப் பற்றி அவர்கள் பேசுவதும் – அது என்ன அவ்வளவு பேச்சு இருக்குமோ! பேசினதையே பேசிப் பேசி அலுக்காத பேச்சு.

நான், திண்ணையில் உட்கார்ந்து, மடியில் ஏதோ புத்தகத்தில் நினைவு ஊன்ற முயல்கிறேன். ஆனால் ஏடுகள் தாம் புரள்கின்றன.

பிற்பகலாயினும் வெய்யிலின் வெப்பம் இன்னும் தணிந்த பாடில்லை. சுவர் சுடுகிறது. உயிரோடு சிதையில் வைத்தாற் போல் உடம்பு எரிகிறது.

இங்கிருந்து பார்க்கையில், கொல்லைப் புறத்தில், அதையும் தாண்டி மரங்களில், கிளைகளில் இலைகளின் சந்தில் கானல் நடுங்குகிறது.

ஒரு குரங்கு, தாய்க் குரங்கு, அதன் வயிற்றைக் குட்டி பற்றிய வண்ணம் அனாயாசமாய்க் கிளைக்குக் கிளைத் தாவுகிறது. குரங்கும் பத்திரம் குட்டியும் பத்திரம். நம் போல் விளிம்பில் தத்தளிப்பு அதற்கில்லை. அதன் பிடி குரங்குப் பிடி.

பின்னால் சலசலப்பு கேட்டுத் திரும்புகிறேன். சாவித்ரியின் புதுப்புடவையைக் கட்டிக் கொண்டு, தலைகுனிந்தபடி அபிதா நிற்கிறாள். அவள் பின்னால் அவள் தோளைப் பற்றிக் கொண்டு, இளவரசியின் தாதி போல் சாவித்ரி.

மூக்குப் பொடிக்கலர். அதையொட்டி அவள் முகம், முழங்கைக்குக் கீழ்பாகம், சந்தன வெண்மை பளீரிடுகின்றன. இப்பொழுதுதான் கவனிக்கிறேன், வெட்கமும் சந்தோஷமும் குழுமிய அவள் முகம் நிமிர்கையில், அபிதாவின் கண்கள் முழுக் கருமையில்லை. கரும்பழுப்பு. கறுப்பு உடுத்தினால் அதற்கேற்றபடி விழிகள் நிறம் மாறுமோ என்னவோ? – சட்டென்று அவள் என் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பின்னல் பாம்பு போல் என் பாதத்தில் லேசாய்ப் பட்டது. புல்லரித்துப் போனேன்.

“வாயில் கொழுக்கட்டையா? நமஸ்காரம் பண்றாள், ஆசீர்வாதம் பண்ணுங்களேன், சுருக்க கல்யாணம் நேரட்டும்னு!”

சாவித்ரி, என் வேதனை அறிந்துதான் சொல்றையா?

இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த சதி.

இவள் வெற்றிய உன் வெற்றியா?

என்னிடம் எதை நிரூபிச்சு ஆறது?

என் நெஞ்சையா, இவள் நிறத்தையா?

பாபி!

நான் மௌனமாய் எழுந்து அவ்விடம் விட்டு அகல்கிறேன். சாட்டையின் கொடுக்குப் போல் சாவித்ரியின் வார்த்தைகள் என்னைத் துரத்துகின்றன. “மாமா ஒரு சமயம் அப்படித்தான் இருப்பா – நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே.”

இங்கு ஏன் வந்தேன்?


வரவர செயல்களில் நினைவு பொருந்தவில்லை. அல்ல நினைவோடு செயல் பொருந்தவில்லை. எது முன் எது பின்? முரட்டுக் குதிரைத் தனித்தனியாக திமிர்கின்றன. எது முன் எது பின்? இதிலேயே நினைவு குழம்புகிறது.

இல்லையேல் மீண்டும் கன்னிக்குளத்துக்கு எப்போது வந்தேன்? கண்ணைக் கட்டித் தட்டாமாலை சுற்றி வந்து விட்ட இடத்தில் கட்டை எடுத்து விட்டால் போல் என்னைச் சுற்றி விழித்துத் திகைக்கிறேன். விட்ட இடத்தில் தொட்டாற் போல் வெள்ளைக் கூழாங்கல்லை உள்ளங்கையில் ஏந்தியபடி நிற்கிறேன்.

ஓ, எங்கள் ரஹஸ்யம் ஆராயத் திரும்பவும் வந்திருக்கிறாயா? எல்லாம் புரிஞ்சு போச்சு. நாங்கள் தான் பாக்கியாக்கும்! அவ்வளவு சுலபமா நாங்கள் புரிஞ்சு போமா? முதலில் என்னை எடுத்துக் கொள். நான் கிடந்த இடத்திலிருந்து என்னை இப்போது எடுத்தாய். ஆனால் நீ எடுக்கும் வரை நான் இருந்த இடத்தில் எத்தனை காலம் கிடந்திருப்பேன் என்று உன்னால் யூகிக்கவாவது முடியுமா? கேவலம் இந்த சம்பவம் நேர்வதற்குள் கடந்திருக்கும் காலம் உங்கள் கணக்கில் உன் வயதைப் போல் எத்தனை விழுங்கியிருக்கும் அறிவையோ? முன் செயல், பின் செயல், தற்செயல், செயல் வயதுகளின் கோடு அழிந்த நிலை உன்னால் நினைத்துப் பார்க்க முடியுமோ?

பிறக்கும் போதே சாகப் போகிறேன். சாகத்தான் சாவேன் எனச் சாகும் சித்தத்தில் உருவெடுப்பாய்ப் பிறக்கிறீர்கள். ஆதலால் வயதைப் பற்றியன்றி வேறு நினைப்பு உங்களுக்கு ஏது? சாகவும் தைரியமில்லை. பிறக்கவும் வெட்கமில்லை. இரண்டும் உங்களை விடவும் இல்லை. பேச்சுக்கும் குறைச்சலில்லை. கை நிறைந்து வந்து, விரலிடுக்கில் கொண்டு வந்ததை வழிந்து ஓட விட்ட பின், உள்ளங்கையை நக்கிக் கொண்டு, கொண்டு வந்ததையெல்லாம் கண்டுகொண்டேன் என்று நீங்கள் அடிக்கும் தம்பட்டத்தில் யாரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாவம்! உன் வயதுக் கணக்கில் என்னை அளவெடுத்தால் உன்னைப் போல் எத்தனை பேரை விழுங்கியிருப்பேன் தெரியுமா? எங்களுக்கு அறியக் கூடத் தெரியாது. அறிஞ்சு என்ன ஆகணும்? அறிய அறிய துன்பம் எது குறையுது? அதிகம் தான் ஆகுது. காத்திருப்பதும் – எதற்காக என்று கூட எங்களுக்குக் கவலையில்லை – காவல் கிடப்பதும் தான் எங்கள் ரகஸ்யம். நீ வேணுமானால், முடியுமானால், தேடி எடுத்துக் கொள்.

நாங்கள் கரையாகவும், படுகையாகவும், கல்வடித்த கண்ணீரே இந்தக் குளமான காரணம் கண்டுபிடி. இதெல்லாம் லேசா? எங்கள் ரஹஸ்யம் புரிந்து கொள்ள, முன்னால் உன் சிக்கிலிருந்து விடுபடு. இடம், பொருள், ஏவல், காலத்தின் ஒன்றையொன்று இழுப்பில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய் –

பிரசங்கம் – சீ!

கூழாங்கல்லை வீசி எறிகிறேன்.

கிளுக் –

ஜலத்தில் விழுந்து கொண்டே அது சிரிக்கிறது. அத்துடன் சேர்ந்து கன்னிக்குளமும் சிரிக்கிறது. என் நிலைகண்டு எல்லாவற்றிற்கும் கேலி. இந்த சமயத்தில் ஒன்று தெரிகிறது. உலகத்தில் உயிர் இல்லாத பொருளே இல்லை. அது அது தன் தன் பழிவாங்க சமயத்திற்குக் காத்திருக்கும் பொருள் தான். யாவும் பழி வாங்கும் பரம்பரை.

சீற்றம் என்னைப் பற்றிக் கொண்டது. எறிந்த கல்லைத் தொடர்ந்து நானும் குளத்தில் குதித்தேன்.

One.

Two.

Three.

தண்ணீர் மும்முறை என் மேல் கலைந்து மூடுகிறது. மூழ்குகிறேன். மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் அடிதட்டவில்லை. ஏது, இந்த வெய்யிலில் இவ்வளவு ஆழமா? அம்மா, என்ன குளு குளு! எத்தனை வருடங்கள், இது போல் ஆற அமிழ குளித்து! இங்கு விட்டுப் போன பின், மறுபடியும் இப்பத்தான். வருடங்களின் சுமை, சோர்வுகளை ஜலம் கழுவி விடுகையில் அம்மாடி! என்ன இதவடி! மீறி என்னை ‘அம்மா’ சொல்லி அம்மாவையே நினைக்க வைக்கிறது. அம்மா என் கையில் ஜலமே உன்னைத்தான் துதிக்கிறேன். என் தாய் கூடத் தன் கடைசி வேளையில் உன்னில் தான் புகுந்தாள். நானும் உன்னிடமே வந்துவிட்டேன் அம்மா போதுமடா ஜன்மம். அம்மா உன் ஜல ரூபத்தில் உனக்கு முகமில்லை, தலையில்லை, கையில்லை, காலில்லை. எல்லாம் வயிறு. கரையில்லா வயிறு. அதனால் தான் ‘மா’விலும் பெரிசு அம்மா. மீண்ட கர்ப்பம் மீண்ட சொர்க்கம் இருளோடு இருளாய் நான் எனத் தனிப்படுவதன் வேதனையிலாது வேறெங்கு இவ்வாறு முழுமையில் இயங்க இயலும்?

– ஆனால் இத்தனையும் மூச்சின் ‘தம்’ இருக்கும் வரை குளுமையில் ஆழ்ந்து கொண்டே போகையில் காணும் ஆசைக் கனவுதான். பிராணனின் விம்மலில் மார் வெடிக்கையில், தொண்டை தூணாய்ப் புடைக்கையில், இத்தனை வருடங்கள், கைகள், புஜங்கள், கால்கள், தொடைகளில் உறங்கிக் கிடந்த நீச்சல் திரும்ப விழித்துக் கொள்கையில், மூச்சு மூச்மூச் மூச்மூச் மூஊஊ – உணர்வு காலத்தின் ஆழத்தின் அடியையே தொட்டுவிட்டு, உடல் உதைத்துக் கொண்டு பந்து போல் மேல் எழுகிறது.

தலையை உதறி, விழிகளை அடைத்த ஜலத்தை உதறி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். இது ஒரு புது விழிப்பு.

கரையில் கைகளைப் பிசைந்து கொண்டு அபிதா நிற்கிறாள். நான் திகைத்துப் போனேன்.

“அபிதா நீ இங்கு எங்கு வந்தாய்? என் பின்னாலேயே வந்தையா?”

அவள் பேசவில்லை. வாயடைத்துப் போய் உதடுகள் தவித்தன. அவள் விழிகள் என்னை விழுங்கின.

“நான் முழுகிப் போயிட்டேன்னு பாத்தையா?”

அவள் முகத்தின் திகில் கலைந்தது.

“அட அசடே, பயந்துட்டையா? நீயும் வாயேன்! உனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாட்டா நான் பார்த்துக்கறேன் கவலைப்படாதே. இங்கே இந்த வேலைக்கு யாரும் வரமாட்டார்கள். நீயும் நானும் தான் தைரியமா இறங்கு…”

இடுப்பு முடிச்சில் கையுடன் தயங்கினாள்.

“புடவை நனைஞ்சுபோமேன்னு பயமா? கரையிலேயே சுருட்டி வையேன்! வெட்கமா? நான் வேணுமானால் இதோ முழுகிடறேன். நீ கழுத்துவரை இறங்கினப்புறம் இருவரும் ஒண்ணுதான், சரிதானே! இதோ One, two, three!”

மூழ்கி எழுந்து கண் திறந்ததும், வாசலில் கயிற்றுக் கட்டிலில் நான் கிடக்கக் கண்டேன். வானில் கூடை கூடையாக வாரிக் கொட்டியிறைந்து கிடந்த நக்ஷத்திரங்கள் கண் சிமிட்டி என்னை ஏளனம் செய்து கொண்டிருந்தன.

வாசற் கதவு இறுக அடைத்திருந்தது.

உள்ளே சாவித்ரிக்கும் அவள் சித்திக்கும் நடுவே படுத்த வண்ணம் அவள் பத்ரமாயிருப்பாள்.

எங்கோ நாய் குலைத்தது.

நள்ளிரவில், என்னின்று எழுந்த பெருங்கேவலில் நானே பயந்து போனேன். அடிவயிற்றில் கிளம்பிய மூச்சு அப்படியே உச்சி மண்டைவரை சுழித்துக் கொண்டு போய், தான் எழும்பிய வேகத்திலேயே கூரையில் அடிபட்டு விழும் பக்ஷி போல் தடாலென்று விழுந்தது.

பிறகு தான் அழுகை வந்தது.
இரக்கமற்ற நக்ஷத்ரங்கள்.
இரக்கமற்ற அமைதி.
இரக்கமற்ற அழுகை.

அபிதா-8

“மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியிருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. ‘கப்சிப்’புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சு போயிடுவோம், வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒரு கை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப் பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் காய்ச்சி வெச்சிருக்கேன். உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. இஞ்சியைக் கடிச்சுத் தின்னச் சொல்லுங்கோ. கரகரன்னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து. எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி!”

கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.

ஆனால் குருக்கள் எங்கேயும் போய்விடவில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணியுடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடு வித்தை போல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.

என் தோளை மெதுவாய் அழுத்தி, மணை மேல் என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகி விட்டது. எல்லாம் அரை நிமிஷம்.

உடனே ‘பரபர’ தேய்ப்பில் மண்டை ‘கிர்ர்ர்ர்’ – தலை வயிற்றுள் போய்விட்டது. மண்டையுள் மத்துக் கடைந்தது.

கரடி மலையை விட்ட பின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.

கடியார முள்ளை இப்படியும் திருப்ப முடியுமோ?

எண்ணெய் ஸ்நானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.

இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போது தேய்த்துக் கொள்வதால் எனக்கு என்னவானாலும் இதைத் தப்ப முடியாது.

அதிதி வாசற்படியேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்தி வந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ, குடித்தாக வேண்டும். பிறகு தான் கால் அலம்பவே உள்ளே அனுமதி. பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித் தண்ணீரின் குமட்டல் அடங்கினதோயில்லையோ, “வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ” –

– ஐயையோ என்ன நடக்கிறது?

– கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய், விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.

“உஸ் அப்பப்பா!”

தொண்டையில் எச்சில் கொழகொழத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில், எங்கிருந்தோ ஒரு குரல் – குருக்கள் அல்ல; வந்த அன்று பேசின பின் அந்த மனிதன் வாய் அனேகமாய்ப் பூட்டுதான் – ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:

“நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித்தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும். மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாவை வென்னீரை விளாவச் சொல்லியிருக்கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன், கண்டந்திப்பிலி வாங்க!”

பேசிக் கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.

என்னை ஒரு கை பிடித்தது. மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன்வரவில்லை. ஐயோ, விழிவயண்டு விடும் போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக்கூடத்தில், நடுக்காட்டில் நிற்கிறேன்.

என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகி விட்டன.

என் அவஸ்தை சாவித்ரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.

சிந்திய கௌரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்து கொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடும் –

“ஐயோ!”

அபிதா அலறினாள்.

ஒரு கை என்னைப் பிடித்துக் கொண்டது. உதறினேன்.

ஆனால் இந்த சமயம் குருக்கள் என்னை விடுவதாயில்லை. என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டு, முதுகில் சீயக்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.

முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி.

கறீல் –

ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடுமுதுகில் இறங்குகிறது.

மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரைமயக்கத்தில், விழிகளில் எண்ணெய்க் கரிப்பின் முழுக்குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.

சுட்டிய விரல் நுனியின் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனை போல் உடல் பூரா, காலிலிருந்து தலைநோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.

மொண்டுமொண்டு, தலையிலும் தோளிலும் மாறிமாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல்பிடித்து விழுந்து கொண்டிருக்கும் இந்தக் கிண்டி நீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலிருந்து நரம்பு தானே கண்டு மீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு, பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?

கோத்து வாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் – ஐயையோ! – இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடு, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதேதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஓய்ந்து போன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.

– இதென்ன, ப்ரக்ஞையுடன் புதுப் பிறவியின் பயங்கரம், ஆச்சர்யம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள், பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை. காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்துக் கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறு ஓட்டம், ஆதார ஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர்தெறிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல் பூரா, உணர்வு பூரா, மனம் பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!

கண்ணைக் கசக்கி இமை சிமிழ் திறந்ததும்
கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்து
சித்திரத்துக்குக் கண் திறந்த
விழிப்பு.

என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.

உலையிலிருந்து விக்ரகம்.

வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்குப் பிதுங்குவது, பனிங்கிலடித்தாற் போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள், அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண் சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.

அம்பா! உன் பாத கமலங்கள் எனக்கு மட்டும் தரிசனமா?
அப்படியானால் நீ உண்டா?
உன் பாதங்கள் தந்த தைரியத்தில்
உன் முகம் நோக்கி என் பார்வை எழுகின்றது.

ஓ, உன் முகம் அபிதாவ?

உடல் பூரா நிறைந்த சிலம்பொலி, உலகத்தின் ஆதிமகளின் சிரிப்பா?

அபிதா, இப்போது என் பார்வையில் நீ உலகத்தின் ஆதிமகளாயின், நீ நீராட்டுவித்த ஞானஸ்னானத்தில் நான் ஆதிமகன்.

எனக்குத் தோன்றுகிறது. யாருக்குமே, ஏதோ ஒரு சமயம், இது போல் தரிசனம் நேரத்தான் நேர்கின்றது. மடிப்பு விரிந்தாற் போல், இதயம் திடீரென அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.

நான் தான் உன் பிறவியின் முழு ஒளி
உன் அவதார நிமித்தம்
உயிரின் கவிதாமணி
நீ அறியாது, தொண்டையில் மாட்டிக் கொண்டிருக்கும்
உன் கனவின், தூண்டில் முள்
தொன்று தொட்டு உலகின் ஆதிமகன், ஆதிமகளுக்கும்
உனக்கும் இன்று வரை வழிவழி வந்த தொந்தம்
வேஷங்கள் இற்று விழுந்ததும்
அன்றிலிருந்து இன்று வரை
மாறாத மிச்சம்
உனக்கு உன் அடையாளம்.

இந்த உதயம் தானாவே வந்து தோளைத் தொடுகையில், அதன் மோனச் சேதியை, அறிந்தோ அறியாமலோ வாங்கிக் கொள்ள, அந்த மோதலின் வேளையில், பாத்திரம் காத்திருக்கும் பக்குவத்துக்கேற்ப, ஒன்று – தன் மயமாக்கிக் கொண்டு விடுகிறது; அல்லது சதைத் தடுமனில் தெறித்து விழுந்த குண்டு போல், மஹிமை நீர்த்து மங்கி விடுகிறது.

என் பிறவியே என் பாக்யம், பிறவிக்குப் பிறவி பாக்யத்தின் பெருக்கு என என் மறுமலர்ச்சியில் நான் அறிந்த பின் பிறவியின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கவிதாமணியாகக் கண்டு கோத்த மாலையை ஆதிமகளின் பாதத்தில் காணிக்கையாச் சேர்ப்பேனோ? அல்ல அவள் கழுத்தில் மாலையாகப் பூட்டுவேனோ?

இது, இதுபோல இதுவரை காத்திருந்தும் நான் அடையாளங் கண்டு கொள்ளாததால் என்னைக் கடந்து போன தருணங்களின் வீணை நான் உணர்ந்து, வருந்தி, என் இழப்புக்கு உருகி, இனியேனும் ஏமாறாது காணத் தவிக்கும் ஏக்கத்திற்கேற்ப நான் பெறும் உக்ரத்தைப் பொறுத்தது.

சகுந்தலை!
அபிதா!
தரிசனி!
கரடிமலைச் சாரலில், பல்லக்குத் திரைவிலக்கி எனக்குக் கண் காட்டிய ராஜகுமாரி!
ஹிமவான் புத்ரி ஹைமவதி!
உங்கள் அத்தனை பேரின் பூர்வமுகியை இப்போது நான் பெற்ற உக்ரமுகத்தில் அபிதாவில் அடையாளம் கண்டு கொண்ட பின், நீங்கள் அனைவரும் நான் கண்ட முகத்தின் நாமார்ச்சனையாகத்தான் தெரிகிறீர்கள். இந்த சமயம், அபிதா, நீ கூட எனக்கு அவசியம் தானோ?

ஆனால் இது என் விசுவரூபத்தின் வியப்பு. இப்போது நீயும் எனக்கு ஐக்யமாதலால், உன்னை என்னிலிருந்து தனியாய்ப் பிரித்துப் பார்க்க இந்த வேளையில் வழியில்லை. ஆனால் வியப்புத்தான். சந்தேகமில்லை. நீயலாது விழிப்பு ஏது? அபிதா, நீ என் காயகல்பம்.

சாவித்ரி என்னைக் கவனிக்கிறாளோ? அவள் பார்வையில் கூர்மை என் மனப்ரமைதானோ? நான் போகையில், வருகையில் அவள் கண்கள் மெய்யாவே என்னைத் தொடர்கின்றனவோ? எங்கிருந்து திடீரென என் நடையில் இம்மிடுக்கு? குதிகால் குமிழ் பூமியில் பாவாத பரபரப்பு? என் கடைக் கண்ணில் அவ்வப்போது நான் உணர்ந்த தீப்பொறி? என்ன தான் அடக்க முயன்றும், உடலின் அசைவில், உள்ளே எரியும் ஜ்வாலையின் குபீர்? இந்தக் குங்கிலியம் எப்படி என்னுள் வந்தது? இதுதான் ஆத்மாவின் சுகந்தமா? திடீரென்று மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியில் சாவித்ரி முகத்தில் கூட அபிதாவின் சாயலை லேசாகக் காண்கிறேனோ? உடம்பு சரியாக இருக்கிறேனோ? திருட்டுத்தனமாய் வலதுகை நாடியை இடது கையால் பிடித்துப் பார்த்துக் கொள்கிறேன். சாவித்ரியின் ஆச்சர்யந்தான் என் ஆச்சர்யம் கூட.

துருதுருப்பு ஒரு நிமிஷம் சும்மாயிருக்க விடவில்லை. வாசலுக்கும் கொல்லைக்கும், கூடத்துக்கும், கூடத்தில் உருப்படியாயிருக்கும் ஒற்றையறைக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன்.

சாவித்ரி தூணோரம் உட்கார்ந்து மல்லி தொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

குருக்கள் எப்பவோ பூஜைக்குக் கிளம்பிப் போயாச்சு.

மாமி கையில் சொம்புடன் பால்காரியைத் தேடிப் போயிருக்கிறாள். அவள் எப்பவுமே இதுமாதிரி யாரையேனும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

அபிதா எங்கே? என் கண்கள் வேட்டையாடுகின்றன.

தற்செயலாய் பார்வை, கூடத்துச் சுவரில் பதித்த கைக் கண்ணாடியில் படுகிறது. அதில் நான் பார்த்த முகம் என்னைப் பார்த்ததும் திடுக்கிடுகிறேன். My God! குடி வெறியில் இந்த ஆள் யார்? ரத்த நாளங்கள் வெடித்துவிடும் போல் முகச் சிவப்பு.

கீழ்வானச் சிவப்பில் வெண் மேகம் தவழ்கையில் எவ்வளவு அழகாயிருக்கிறது! ஆனால் இந்தச் சிவந்த முகத்தில் புருவ நரைக்கோடு ஏன் ஒவ்வவில்லை? ஒவ்வாதது மட்டுமல்ல, தப்பாவே தெரிகிறது. என் செய்யலாம்? தேடுகிறேன்.

கண்ணாடியை ஒட்டிய மாடப்பிறை உள்புறம் சீமெண்ணெய் புகைக்கரி அடையாய் அப்பிக் கிடக்கிறது. ஒற்றை விரலால் தொட்டு, புருவத்தை விளம்புகிறேன். முழுக் கறுப்பு முடியாவிட்டால் செம்பட்டை சாதித்தால் கூடப் பரவாயில்லை.

கண்ணாடியில் சாவித்ரி என்னைக் கவனிப்பது கண்டேன். நாள் கணக்கில் ஏதேதோ கறையும் அழுக்கும் ஏறிய கண்ணாடியில், அவள் விழிகளின் வினா மட்டும் பளிச்செனத் தெரிகிறது. தொடர்ந்து ஆச்சர்யம். இத்தனை நாள் புரியாதிருந்த ஏதோ மூட்டத்தின் கலைப்பு… கண்ணாடியில் நான் கண்ட முகம் இன்னும் சிவக்கிறது! வெளியே விரைகிறேன்.

அபிதா எங்கே? கிணற்றில் ஜலமெடுக்கப் போயிருப்பாளோ? விடுவிடென மலை நோக்கி நடக்கிறேன்.

மலை தடுத்த மேகங்கள் மழை கொட்டுமோ கொட்டாதோ, தெரியாது. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன. புழுக்கமோ அல்ல என் நடை வேகமோ. கழுத்தின் பின்னாலிருந்து வேர்வை சட்டைக்குள் வழிகிறது.

சாவித்ரி, என் ரகஸ்யம் உனக்கு வெளிச்சமாகி விட்டதோ? நீ கெட்டிக்காரி; தவிர, பெண் உன்னிடம் எத்தனை நாள் மறைத்து வைத்திருக்க முடியும்? நானாகச் சொல்ல நேர்வதை விட, நீயாவே உன் யூகத்தில் அறிவதே – அல்ல அறிந்ததே மேல். கேள்விகள், பதில்கள், மறு கேள்விக்கு எதிர்ச் சமாதானங்கள், சண்டைகள் – எவ்வளவு மிச்சம்! சமாதானம் பதிலாகாது. சமாதானாம் என்பதே நாணயமற்ற பதில். சந்தேகத்தின் ஊன்று விதை. சந்தேகம் நமக்குல் இனி ஏன்?

ஆனால் ஓரளவு இந்த நிலைக்கு நீதான் பொறுப்பென்பேன். ஊரை விட்டுக் கிளம்பு முன் இடமாற்றமாய் முதன் முதல் எங்கு செல்வது என்று நாம் யோசித்த போது, கரடி மலை பேரைச் சொல்லி நீதான் ஆசையை மூட்டி, சென்று போனதால், நான் செத்துப் போனதென்று நினைத்ததையெல்லாம் உயிர்ப்பித்து விட்டாய். சாவித்ரி, நானொன்று கண்டேன். எதுவுமே செத்துப் போகல்லையடி!

என்றுமே நான் களங்கமற்றவன் அல்ல. கரடிமலை நினைப்பு வந்துவிட்டதும் கூடவே கபடும் வந்துவிட்டது. ஆனால் ஒன்று. குற்றாலமும் கொடைக்கானலும் கோவளமும் இருக்க, சில பேருக்குச் செவிமடலில் கூடத் தொங்கும் குந்துமணிச் சதைதான் கண்ணுக்குச் சட்டென்று படுவது போல், கரடிமலை தான் உனக்கும் படணுமா? இதிலேயே விதியை நீ காணவில்லையா? இடையில் வந்த மனைவி நீ. என் விதியை நோக்கிச் செல்ல என்னை விடு சாவித்ரி. இதை நான் சொல்லாமலே புரிந்து கொள்ள உனக்குச் சக்தியுண்டு என்பதை நானறிவேன். எப்படியும் நீ என்னிலும் உயர்ந்த சரக்கு.

நான் நன்றியற்றவன். ஒப்புக் கொள்கிறேன். இப்போ நான் எதை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வேன். ஆனால் என் நன்றியால் உனக்கு இனி என்ன பயன்? சரி, என் நன்றியை விட என் நாணயம் தான் இப்போது எனக்குப் பெரிதாயிருக்கிறது. போயேன். இது நாணயமல்ல. சுயநலம் என்பாய். சரி, அப்படித்தான், போயேன். எதை வேணுமானாலும் இப்போ நான் ஒப்புக் கொள்வேன். சுயநலத்தைக் காட்டிலும் பெரிய உண்மை எது? எனக்குக் காட்டு, உயிர் உண்டான நாளிலிருந்து எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். சுயத்தைத் தாண்டி கேள்வியுமில்லை, பதிலுமில்லை, உண்மையுமில்லை. இதை நான் சொல்வதே ஒரு சமாதானம் தான்.

வாழ்வு ஒரு கனவானால், அதை அறிய உணர்வற்று, இதுவரை விரலுக்கிடுக்கில் நனவாய் வழிந்தது போக, மிச்சத்தில் கனவை ருசிக்க, கனவாய் நிறுத்த இயலாதா? கனவு, நிலையாமை, நித்யம், அநித்யம் – இதெல்லாம் நாம் இருக்கும் வரை பேசும் பேச்சுத்தானே! எல்லாமே இருக்கும் வரை தானே!

– இதென்ன சட்டென்று கன்னத்தில் மட்டும் ஈரக்காற்று? சாவித்ரி நீ துப்பினையா? ‘தூ, அவள் உனக்குப் பெண்ணாயிருக்க வயஸாச்சு, இதென்ன அக்ரமம்? அடுக்குமா?’ என்கிறாயா? சாவித்ரி. இது விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்து வரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப் புரியாது. எனக்கே புரியல்லியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப் போனபின் அவள் கோபமாக மாறி, என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில், அபிதா என் பெண்ணோ, பெண்டோ, இது என் செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை, என்னில் தன் அம்பியைக் காண மாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர் ஒருவரின் இருவர் இவர்கள் தான் என் சாபம், விமோசனம், இரண்டுமே.

சாவித்ரி, என்னை மன்னித்துவிடு. மன்னிக்க முடியாவிடில் மறந்து விடு. இரண்டுமே இயலாவிடில், உன் கஷ்டத்துக்குப் பொறுப்பு நானானாலும், நீ படும் வேதனை உன்னுடையதுதான். நாளடைவில், பொறுப்பும் உன்னுடையதாகிவிடும். ஏனெனில் நான் என் விதியை நோக்கிச் செல்கிறேன்.

மலையடிவாரத்தில், கிணற்றடியில் சகுந்தலையை – இல்லை அபிதாவைக் காணோம். (பார், இப்பவே எனக்குக் குழம்புகிறது!) மலை மேல் போயிருப்பாளோ? இல்லை, அதற்கு ரொம்பவும் நேரமாகி விட்டதே! இல்லை, இருட்டே இறங்க ஆரம்பித்துவிட்டது. மலை, மலையாயில்லை. பிரம்மாண்டமான நிழலாக மாறி விட்டது.

மலையடிவாரத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறேன்.

கரடிமலையே, நீதான் என் விதியோ? நான் எங்கிருந்தாலும் என் மேல் எப்பவும் விழுந்து கொண்டிருக்கும் நிழல் நீதானோ? கனவையும் நனவையும் ஒருங்கே தன்னுள் விழுங்கிய உன் நிழலின் சுயநலம் அதன் தன்மை யாது?

மலை மேல் இடி குமுறுகிறது.

இதுதான் உன் பதிலா?

அபிதா-9

அபிதா எப்பவோ தயாராயாச்சு.

அத்தனை இட்டிலியையும் அவளே வார்த்து, பற்றுப் பாத்திரங்களை அவளே தேய்த்துக் கவிழ்த்துமாகி விட்டது. இத்தனைக்கும் இன்னிக்கு ஏனோ தினத்தை விட அதிகப்படி வேலை. அவள் சித்தியின் சூழ்ச்சியாவே இருக்கலாம். ஆனால் காரியங்கள் மளமளவென முடிந்தன. உடைமாற்றிக் கொள்வது தான் பாக்கி. இன்று அபிதாவின் உடம்பில் பாதரஸம் ஓடிற்று! சினிமா என்றால் இந்தத் தலைமுறைக்கு என்ன பைத்யமோ? ஆனால் அபிதா பாவம்! அவள் ஆவலைப் பார்த்தால் வீட்டுச் சிறையை விட்டு எங்கேயும் போயிருப்பாள் என்று தோன்றவில்லை. சித்திதான் அவள் இடத்தையும் சேர்த்து அடைத்துக் கொண்டிருக்கிறாளே! இப்போக் கூட கடைசி நிமிடத்தில் சித்தி தடுத்து விடுவாளோ என்று பயம் கூட இருக்கும்.

சாவித்ரி பூத்தொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஈதென்ன நேற்றிலிருந்து ஓயாத தொடுப்பு! இவ்வளவு தொடுப்பலுக்குப் பூ ஏது? அவள் பூத்தொடுப்பைக் கண்டால் ஏதோ அச்சம் கொள்கிறது. எல்லாம் அறிந்து தன்னுள் தானடங்கி மேலிறங்கிய மோனத்தில் விதியின் தொடுப்பல்.

குற்றமுள்ள நெஞ்சு நுட்பம் ஒண்ணுமில்லாததில் கூட ஏதேதோ படிக்கிறது.

குருக்கள் தான் வீட்டுக்குக் காவல். அவர் தான் உண்மையில் மஹான். கட்டின பசுப்போல் தோன்றுகிறார். ஆனால் எதுவும் அவரிடம் ஒட்டவில்லை. வீட்டைப் பார்த்துக் கொள்வது பற்றி மாமி ஏதேதோ உஷார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறாள்; இது போல் பழைய சமயங்களில் அவர் பார்த்துக் கொண்ட லக்ஷணம் பற்றி ஏசிக் கொண்டிருக்கிறாள். ஆனால் வார்த்தைகள் இந்தக் காதுள் நுழைந்து அந்தக் காதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அபிதா கூடத்து அறையிலிருந்து வெளியே புறப்பட்டாள். சாவித்ரி தன் புடவையை உதவியிருக்கிறாள். அவள் உடல் விளிம்பெல்லாம் அவள் உள் ஒளி தகதகக்கின்றது. புடவையில் அங்கங்கே தெறித்த ஜரிகைப் பொட்டுகள், பூக்கள் தனித்தனியே உயிர் மூச்சு விடுகின்றன.

வண்டு மல்லாந்தாற் போல் என் விழிகள் அகன்று விட்டன. அதனாலேயே மற்றவர் காண்பதை விட நான் கூடக் காண்கிறேன்.

சாவித்ரி எழுந்து தான் தொடுத்த சரம் அத்தனையும் பந்து சுருட்டி அபிதாவின் தலையில் சொருகினாள்.

சித்தி ஒரு வழியாக குருக்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட்டு வந்தாள். அபிதாவைக் கண்டதும் அவள் முகம் புழுங்கிற்று.

“ஏண்டியம்மா, எல்லாப் பூவையும் உன் கொண்டையிலேயே வெச்சுத் திணிச்சுக்கணுமா? வாங்கின கையும் தொடுத்த கையும் தலைக்கு விரலை நறுக்கி வெச்சுக்கறதா?”

அபிதா சிற்பமாய் நின்றாள். அவளுக்கு நா எழவில்லை. தவழ்ந்து செல்லும் மேகத்தின் நிழல் போல், திகிலின் அழகு அவள் மேல் ஸல்லா படர்ந்தது. நெற்றிப் பொட்டில், மோவாய்ப் பிளவில், நெஞ்சுத் தழைவில், கழுத்தின் வெண்மையில் தெரியும் பச்சை நரம்பில், ரவிக்கைக்கு வெளியே தொள் எலும்புக் குழிவில், மார்த்துணி கீழ் ரவிக்கை முடிச்சுள் இறங்கி மறைந்த மார்பின் பிரிவில்…

எனக்கு நெஞ்சு வரள்கிறது. யாரேனும் ஒரு முழுங்கு தீர்த்தம் தந்தால் தேவலை.

கூடவே ஒரு ஆச்சர்யம். கரடிமலையில், பூமியின் இந்தக் கண்காணா மூலையில் இவ்வளவு அழகா? சிருஷ்டியின் விருதாவான செலவுக்கு வேறு சான்று என்ன வேண்டும்? பயனற்ற அழகு. திருவேலநாதனின் திருவிளையாடல் விசேஷம். இப்போ அபிதாவைப் பார்க்கையில் மனுஷியாகவே தோன்றவில்லை. எங்கிருந்தோ வழி தப்பி வந்து மருண்ட பிராணி.

நல்லவேளை, சாவித்ரி அவள் உதவிக்கு வந்து விட்டாள்.

“நமக்கென்ன மாமி. விரல் நறுக்கு போறாதா? சிறிசுகளுக்குச் சூட்டிப் பார்ப்பதுதானே நமக்கு சந்தோஷம்!”

தர்க்கம் மேலே தொடர வழியிலாது, பட்டாசுக் கடை பற்றிக் கொண்டது போல் ‘பட்பட் படார்’ சத்தம் கேட்டு எல்லோரும் வாசலுக்கு ஓடினர். நான் சாவகாசமாய்ப் பின் வந்தேன்.

மாமியின் தம்பி மோட்டார் சைக்கிளின் மேல் வீற்றிருந்தான். அந்த நாளில் ரஜபுத்ர வீரன் இதுபோல், சண்டையிலிருந்து குதிரை மேல் வீட்டுக்குத் திரும்பி வந்திருப்பான். முகத்தில் அவ்வளவு வெற்றி.

“என்னடா அம்பி இது?”

(ஓ, இவனும் ‘அம்பி’யா?)

“மலிவா வரும்போல இருக்கு. என்ன அபிதா, வாங்கலாமா?”

மாமி எரிந்து விழுந்தாள்.

“அவளை என்ன கேள்வி? பெரியமேரு!”

“உன்னையென்ன கேள்வி? வாங்கப் போறவன் நான்!”

“ஆமாம், என்னைக் கேட்பையா? நான் என்ன உன் குதிகாலில் ஈஷிய சாணிக்கு சமானம்…”

“இதோ பார் அக்கா, இதனால் தான் எனக்கு இங்கே வரவே பிடிக்க மாட்டேன்கறது. உன் சண்டை ஸ்வாரஸ்யமா வேனுமிருக்கா, படு bore! வா அபிதா. பின்னால் ஏறு, நாம் போகலாம்!”

“நானா?” அபிதா பின்னிடைந்தாள்.

“நீதான், நீயேதான்! பின் என்ன உன் சித்தியா? பயப்படாதே. உம் ஏறு!”

“நன்னாயிருக்குடா வயசுப் பெண்ணை நீ கூப்பிடற லக்ஷணம்!”

“நீ ஒருத்தியே உடன் பிறந்தாள் போதும்போல இருக்கே! நான் யாரு உன் தம்பி, இவளுக்கு மாமா!”

“இல்லை இல்லை. நான் இவாளோடேயே வண்டியில் வரேன்.”

அபிதா முகத்தில் வெட்கம், பயம். கூடவே அவள் அடக்கப் பார்த்தும் மீறும் ஒரு மகிழ்ச்சி.

வெறுங்கையாலேயே இவன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டால் என்ன? இந்த சமயத்தில், என் உடல் பலம், ஆத்திர பலம் அத்தனையும் என் இரு கைவிரல்களில் வந்து வடிந்திருப்பது எனக்கே தெரிகிறது.

பொறுமையிழந்து அவன் முகம் சுளித்தது. “உன் சித்தியேறி விட்டால் வண்டியில் அப்புறம் இடம் ஏது? இவா வண்டியில் வரத்துக்குள்ளே நாம் எட்டு ஊரை எட்டு தரம் சுத்தி வந்துடலாம். வா வா அபிதா, போகலாம், வாயேன்!”

அவன் குரல் கெஞ்சிற்று, கொஞ்சிற்று.

“சரி, சரி, சினிமாவும் டிராமாவும், உன் வெள்ளித்திரையில் பாக்கறது போறாதா, இங்கே வேறே நீ நடத்திக் காட்டணுமா?” சித்தி சீறி விழுந்தாள். அபிதாவிடம் திரும்பினாள். அவள் முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகத்தின் மறு சிலிர்த்தது.

“பொண்ணே, உனக்கு சினிமா போய்த்தான் ஆகணும்னா, ஏறித் தொலை! மாட்டேன், வரல்லேன்னு பேரம் பேசி யாருக்கு இந்தப் பூச்சு வேண்டிக் கிடக்கு? ‘மாட்டேன்னா, வல்லேன்னா, தாரும் தாரும் வாழைக்காய் தாளம் போல் கோபுரம், கில்லாப் பரண்டி கீப்பரண்டி கிச்சு மூச்சு மாப்பிரண்டி’ இன்னும் விளையாடிண்டிருக்கப் போறேளா? ஜானவாசத்துக்கு கார் வெக்கறோமோ யில்லையோன்னு கவலைப்பட்டுண்டு மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான் தானே வாஹனம் இப்பவே வாங்கிண்டு வந்துவிட்டான். என் தீர்மானத்தில் என்ன இருக்கு? பின்னால் தான் கையைப் பிடிக்கறது இருக்கவேயிருக்கு. இப்பவே அவன் உன் கையைப் பிடிச்சு இழுக்காமே நீயே போய் உக்கார்ந்துடு, இல்லே ஆத்திலேயே தங்கிடு… எங்களுக்கு நேரமாறது!”

“அக்கா! நீ அபிதாவை எங்கே தங்க வெச்சுடுவியோன்னு தானே நானே வந்திருக்கேன்!”

சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பினோம். குருக்கள் திண்ணையில் உட்கார்ந்து பாக்கு வெட்டியால் கொட்டைப் பாக்கை நறுக்கிக் கொண்டிருந்தார். ஏன் இந்தச் சிரிப்பு? நடுவாய்க்காலில் இப்படி அழுக்குத் துணி அலசுவது கண்டா?

இல்லை, மரை ‘லூஸா’?

அபிதா ஒன்றும் பேசவில்லை. பில்லியனில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். கன்னங்களில் மட்டும் இரண்டு சிவப்புத் திட்டு. மோட்டார் சைக்கில், புறப்பட்டு வெடி போட்டுக் கொண்டு கிளம்பிப் பறந்தது. பின்னால் ஒரு புழுதித் தொகை துரத்தி அதன் போக்கை மறைத்தது.

“தழையை அப்புறம் நாள் பூரா மெல்லலாம்; வண்டி பார்த்துண்டு வாங்கோ” என்று மாமி அதட்டிவிட்டு, திடீரென்று புருஷாளோடு பேசும் கூச்சத்தில் உடம்பையும் குரலையும் திடீரென்று குறுக்கிக் கொண்டு… (சகிக்கவில்லை, முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.)

“மாமா ரெடியாகல்லியா?”

“நான் வரவில்லை.” ஏன் இப்படிச் சொன்னேன்? எனக்கெ தெரியவில்லை. சாவித்ரி என்னை நேர் முகமாகப் பார்த்தாள்.

“இல்லை எனக்கு அலுப்பாயிருக்கிறது. உங்களுடன் குருக்கள் போய் வரட்டும். நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.”

என்னுள் புகுந்து கொண்ட அழும்பு சாவித்ரிக்குத் தெரிந்து விட்டது. மேலும் வற்புறுத்த வேண்டாம் என்று அவள் தடுத்து விட்டாள்.

வண்டி தட்டுத் தடுமாறித் தள்ளாடி கண்ணுக்கு மறைந்த பின் எந்நேரம் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தேனோ தெரியாது. லேசாய் மாரை வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வண்டு இடது புறம் கிளம்பி வலது பக்கமாய், உடலின் உள் சுவரில் முதுகுப்புறத்தைச் சுற்றி வந்து, இதயத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே கட்டியிருக்கும் கூட்டில் தங்கி விண்விண் எனத் தெறித்தது. சில கணங்கள் கழிந்து மீண்டும் மீண்டும் இதே ப்ரதக்ஷணம். மார்பை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டால் மட்டும் வலி விட்டு விடுமா? துருவல் அதிகரித்தது.

Heart Attack என்பது இதுதானா?

ஏற்கெனவே இதைப் பற்றி டாக்டரிடம் கேட்டதற்கு:

“நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விடப் பன்மடங்கு அதிக வலி அந்த வலி. அடேப்பா! வலி ஏறிக் கொண்டே போகும் வேகத்தில், உச்சத்தில் வலிக்கிறது என்று சொல்வதற்குக் கூட உங்களுக்கு நேரமிருக்காது. நினைவு தப்பிவிடும். நினைவு மீண்டால் உங்களுக்கு மாரடைப்பு வந்ததைப் பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொண்டிருக்க முடியும். மீளாவிட்டால் – well, அதைப் பற்றி, எதைப் பற்றியுமே உங்களுக்கப்புறம் என்ன?” என்று சிரித்துக் கொண்டே அவர் தைரியம் சொல்லியிருக்கிறார்.

இது சகுந்தலையின் கோபம்.

பிறகு அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆமாம், இந்தக் கந்தல் பாய்க்கும், ஓட்டைச் சொம்புக்கும் காவல் இல்லாவிட்டால் கெட்டுப் போச்சாக்கும்! அபிதாவும் இங்கு இல்லை. இனி எனக்கு இங்கே என்ன வேலை?

கதவு திறந்தது திறந்தபடி. நான் நடந்தேன்.

மார்பில் கொக்கி மாட்டிக் கரடிமலை என்னைத் தன்னிடம் இழுக்கிறது. உயிரைக் குடிக்கும் ஆலிங்கனத்தில் அணைக்க அதோ காலைத் தூக்கிக் காத்திருக்கிறது.

சகுந்தலையையும் இப்படித்தான் அன்று இழுத்திருக்குமோ?

சகுந்தலை எப்படிச் செத்திருப்பாள்? பச்சிலை ஏதேனும் தின்றாளா? என் பிரிவு தாங்காமல் இதயம் வெடித்தா? இல்லை நினைத்த சமயத்தில் யாதொரு பலவந்தமுமில்லாமல் உயிர் நீக்கும் சக்தி பெற்றிருந்தாளோ? “நினைத்தேன், செத்தேன்.”

மேலே போய், ஆண்டவன் எனும் அந்த ஆள்விழுங்கியைத் தான் கேட்கணும். கேட்டு என்ன? எப்பவும் அவனிடம் அந்த அசட்டுப் புன்னகைதான் உண்டு. “அப்பப்போ நீ என்னென்ன நினைக்கிறாயோ அதுதான்” எனும் எதிலும் பட்டுக் கொள்ளாத பதிலுக்குத் தீர்வையேது?

எல்லாம் நிமிஷத்தின் முறுக்கேற்றம் தான். நேற்று நியதியையே மாற்றவல்ல விராட் புருஷனாய் உன்னை நினைத்தாய். இன்று என்ன? ஒரு துரும்பைக் கூட அதன் இடத்திலிருந்து அசைக்க நீ சக்தியற்றவன். முட்டாள், வெறும் சிந்தனை மட்டும் வாழ்வாகிவிடுமா? நீ சிந்தனைக்கே இரையாகி விட்டாய். பார், சற்று முன் உன் கண்ணெதிரேயே, அபிதாவை அவளிடமிருந்தே பிடுங்கி (உன்னிடமிருந்து பற்றுவது இருக்கட்டும் – எனக்குச் சிரிப்பாய் வருகிறது) தன் பின்னால் ஏற்றி வைத்துக் கொண்டு போய்விட்டான்! பட்பட்பட் – மோட்டார் சைக்கிள் சப்தம் உனக்குக் கேட்கவில்லை?

மார்பைத் துளைத்த வலி கூட மறந்து நின்றேன். ஆம், நினைவில் அல்ல. மெய்யாவே வெடி சப்தம் தூர இருந்து எட்டுகிறது. நினைவும் நனவும் இழைந்த சமயமே தெரியவில்லை. இந்தப் பக்கமாய்த்தான் நெருங்குகிறது.

புரிந்தது. அம்பிப்பயல், புதுவண்டி மோகத்தில் சவாரி பழகிக் கொண்டிருக்கிறான். அபிதாவுக்குத் தன் வரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறான். கண்மூடி வேகத்தில் வருகிறான்.

ஆனால் என் கண்கள் இவனைப் பார்ப்பதற்கு இல்லை. அவன் பின்னால், கூந்தலும் ஆடையும் குலைந்து, காற்றில் மேலாக்குச் சிறகாட, முகத்தில் வேகவெறி கூத்தாடிக் கொண்டு-

அடுத்த கணம் என்ன நேர்ந்ததென்று விளக்கமாய் அப்போது தெரியவில்லை. பின்னால் எண்ணியெண்ணி நெஞ்சுத் தழும்பில், நினைவின் செதுக்கலில் அவயவம் அவயவமாய்ப் பிதுங்கி நிற்கிறது.

மலையடியில் நந்தியா, நாயா தெரியாமல் குறைச் செதுக்கலில் விட்டு நின்ற கல்லின் மொத்தாகாரத்தில் சைக்கில் பெரும் சத்தத்துடன் மோதிற்று. (அதைத் தன் வழி விட்டுத் தகர்த்து எறிந்து விட வேண்டும் என்று அம்பிப் பயலுக்கு எண்ணமோ என்னவோ?) மோதிய வேகத்தில் பந்தாய் ஆள் உயரம் எகிறி பொத்தென்று பூமியில் விழுந்தது. அவன் ஒரு மூலை. அபிதா ஒரு மூலை –

– இல்லை, என் கண்கள் அபிதாவைப் பார்க்கத்தான்.

அர்ச்சனையில், அர்ச்சகன் கையினின்று ஆண்டவன் பாத கமலங்களை நோக்கிப் புறப்பட்ட மலர் போல, அபிதா, மலை மேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின் – ஒன்று, இரண்டு, மூன்றாவது படி மேல் உதிர்ந்து மலர்ந்தாள்.

தன் மேல் புழுதியைத் தட்டிக் கொண்டு அம்பி என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஒரு சிராய்ப்புக் கூட இல்லை. மயிர் தான் கலைந்திருந்தது.

எனக்கு மார்வலி நின்று விட்டது.

அபிதா எழுந்திருக்கவில்லை. இப்போக்கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை? அவள் முகத்தின் புன்னகை கூட மாறவில்லை.

மரத்திலிருந்து பொன்னரளி ஒன்று நேரே அவள் மார் மேல் உதிர்ந்தது.

சற்று எட்ட மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

(முற்றும்)

– அபிதா (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *