அன்று மாணவி; இன்று தாய்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,240 
 
 

கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு வாங்க வேண்டியிருந்தது. ஊரிலிருந்தால் இதெல்லாம் பிரபா பார்த்துக் கொள்வாள். சம்பாதிப்பதுடன் தன் கடமை முடிந்தது போல் நிம்மதியாக இருப்பான் சுந்தரம். ஆபிஸ் வேலையாக, 10 நாட்களாக கோயமுத்தூர் வந்து, மேன்சனில் தங்கியிருந்தான். ஓட்டல் சாப்பாடு, தனிமை என, அவனுக்கு பொழுதே போகவில்லை.
அன்று மாணவி; இன்று தாய்!தேவையான பொருட்களை எடுத்தவன், பில் போடும் இடத்தில், தன் முன் நின்றவளை அப்போது தான் கவனித்தான். அந்த நீண்ட மூக்கு, பெரிய விழிகள், அவள், சாந்தி தான் என்பதை அவனுக்கு அடையாளம் காட்டிக் கொடுத்தது. 20 வருடங்களுக்கு பிறகு, அவளை சந்திப்போம் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனால் மறக்கப்பட்ட நினைவுகள், அவன் மனதில் வந்து போனது.
மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் சுந்தரம்; கையில், பிளஸ் 2 புத்தகம், அது, மற்றவர்களுக்கு அவன் படிப்பதாக பாவனைப்படுத்த. அருகருகே இருக்கும் வீடுகள் என்பதால், பக்கத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த சாந்தி, அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“என்ன சாந்தி… ஏன் இன்னைக்கு லேட்?’
“ரொம்ப நல்லாயிருக்கு… அம்மாகிட்டே ஏதாவது காரணம் சொல்லி கிளம்பி வர வேண்டியிருக்கு தெரியுமா? ஸ்கூலில் பார்த்து பேசினா, வீட்டுக்கு தெரிஞ்சுடுமோன்னு பயமா இருக்கு!’
“என்ன செய்யறது… நாம் ஒருத்தர் மேல் ஒருத்தர் அளவு கடந்த அன்பு வச்சுட்டோம். யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது சாந்தி. நீ கவலைப்படாதே… கடைசி வரை உன்னை வச்சு காப்பாத்தக் கூடிய தைரியம் எனக்கு இருக்கு. அந்த அளவு உன்னை காதலிக்கிறேன்!’
அவனின் வார்த்தைகள், அவளையும் தைரியப்படுத்த, கண்களில் அன்பை தேக்கி பார்த்தாள்.
“என் நிலையும் அதுதான் சுந்தரம். படிக்க உட்கார்ந்தாலும் உன் முகம் தான் மனசிலே நிக்குது. நீயில்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை!’
அங்கு வந்த சாந்தியின் சிநேகிதி, “என்ன சாந்தி… சுந்தரத்துக்கிட்டே பேசியாச்சா. சரி… மணியாச்சு வா கீழே போகலாம்; அப்புறம் அம்மா என்னை சந்தேகப்பட போறாங்க!’
அந்த வீட்டில் குடியிருக்கும் சாந்தியின் சிநேகிதி, அவளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
பள்ளியிலும், தோழியின் வீட்டு மொட்டை மாடியிலுமாக வளர்ந்த காதல், ஒரு நாள் சுந்தரத்தின் வீட்டிற்கு தெரிய வந்தது.
“ஏண்டா… உன் மனசிலே என்ன நினைச்சுட்டு இருக்கே. படிக்கற வயசில் காதலா… உன்னோட இப்போதைய தகுதி என்னன்னு யோசிக்காம, 16 வயசிலே இந்த மாதிரி மன சலனங்களுக்கு இடம் கொடுத்தா, அது, உன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடும்!’
தலைகுனிந்து நிற்கும் மகனிடம், தன் கோபத்தை குறைத்து, நிதானமாக பேசினார்…
“நான் சொல்றதை உன்னால் புரிஞ்சுக்க முடியும்ன்னு நினைக்கிறேன். நான் உன்னை தப்பு சொல்லலை. உன்னை மாதிரி இளைஞர்கள், தங்கள் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் தங்கள் முன்னேற்றத்தில் காட்டத் தவறி, இதைப் போல மனக்கிளர்ச்சிக்கு ஆளாகி தடுமாறிடறாங்க. அது தப்புன்னு உணரும் போது, அவங்க வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறாங்க. நீ முதலில் உன் தகுதியை உயர்த்திக்க. அதற்கான வயசு, பக்குவம் வரும் போது, உனக்கான காதலைத் தேடு. இப்ப நீ அந்தப் பெண்ணைப் பத்தின நினைவுகளை உன் மனசிலிருந்து தூக்கியெறிஞ்சுட்டு, உன் படிப்பைக் கவனி. உன் அப்பாவாக உன்கிட்ட சொல்லலை; உன் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒரு நண்பனாக நான் எடுத்துச் சொல்றேன்!’
நிதானமாக யோசிக்கும்போது, அவனுக்கே அவனை நினைக்க வெட்கமாக இருந்தது. அப்பா மட்டும் கோபப்பட்டுப் பேசி, தன்னை வீட்டை விட்டு துரத்தியிருந்தால்… சாந்தியை வைத்து காப்பாத்த முடியும் என்று வீர வசனம் பேசினேனே… என்னால ஒருவேளை சோறு போட முடியுமா… மனதை ஒரு நிலைப்படுத்தினான்; சாந்தியை மறந்தான். அடுத்த சில நாட்கள், அப்பாவின் ஆலோசனைப்படி, சித்தப்பா ஊருக்கு வந்து படிப்பை தொடர்ந்து…
இன்று மனைவி பிரபா, இரண்டு பிள்ளைகள் என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
“”சாந்தி…”
தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு திரும்பியவள், அருகில் நிற்கும் சுந்தரத்தை யாரென்று புரியாமல் பார்த்தாள்.
“”என்னை அடையாளம் தெரியலையா சாந்தி. சேலத்தில் ஸ்கூல் படிப்பை ஒன்றாக படிச்சோமே… நான் சுந்தரம்.”
அவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வர, அவனைப் பார்த்தாள்.
“”சுந்தரம்… நீயா… நீங்களா… நல்லா இருக்கீங்களா?”
“”ம்… உன்னை சந்திப்பேன்னு நான் நினைக்கலை. அந்த வயசிலே என்னையும் ஏமாத்தி, உன்னையும் சலனப்படுத்தி, ஓடிப் போன என்னை மன்னிச்சிட்டியா சாந்தி.”
இருபது வருடம் கழித்து, தன்னைப் பார்த்துக் கேட்கும் சுந்தரத்தை பார்த்து, வாய்விட்டுச் சிரித்தாள்.
“”நீ போன பிறகு, நானும் தவறை உணர்ந்து, அதிலிருந்து தெளிஞ்சு வந்துட்டேன். சொல்லப் போனா உன் ஞாபகங்களே எனக்கு இல்லை. ஒரு குடும்பத் தலைவியாக, ஒரு தாயாக சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கேன். வாயேன்… வீடு பக்கத்தில்தான், வந்து காபி சாப்பிட்டு போகலாம்.”
அன்போடு அவள் அழைக்க, மறுக்க இயலாமல் அவளுடன் நடந்தான். தன் குடும்பம் சென்னையில் இருப்பதையும், ஆபிஸ் வேலையாக கோயமுத்தூர் வந்ததையும் அவன் தெரிவிக்க, சாந்தியும் தன் கணவன் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்வதையும், ஒன்பதாவது படிக்கும் மகளும், ஏழாவது படிக்கும் மகனும் இருப்பதை அவனிடம் தெரிவித்தாள்.
“”வா சுந்தரம்… உள்ளே வந்து உட்காரு.”
ஹாலில் படித்துக் கொண்டிருக்கும் மகனை அறிமுகப்படுத்தினாள்.
காபி கலந்து வந்து அவனிடம் கொடுக்க, “”உன் வீட்டுக்காரர் இன்னும் வரலையா சாந்தி,” என்று கேட்டான் சுந்தரம்.
“”அவர் வர லேட்டாகும். எட்டு மணிக்கு மேலதான் வருவாரு. இருந்து பார்த்துட்டுப் போறீயா?”
“”இல்லை சாந்தி… நான் கிளம்பறேன்; இன்னொரு நாள் ஊருக்குப் போறதுக்குள் வரேன்.”
உள்ளிருந்து வந்த சாந்தியின் மகள், “”அம்மா… நான் பிரியா வீடு வரைக்கும் போயிட்டு வரேன். நோட்ஸ் வாங்கிட்டு வரணும்.”
“”சுந்தரம்… இதுதான் என் மகள்,” என்றாள்.
சிறுவயது சாந்தியை அப்படியே உரித்து வைத்திருந்தாள்.
“”இருட்டிட்டு வருதும்மா. நீ போக வேண்டாம். நாளைக்கு ஸ்கூலில் பார்த்து வாங்கிக்கலாம். உள்ளே போய் படிம்மா.”
அவள் உள்ளே செல்ல, சுந்தரம் சாந்தியைப் பார்த்தான். “”என்ன பார்க்கிற சுந்தரம். அந்தக் கால ஞாபகமா. அம்மாகிட்டே பொய் சொல்லி, வெளியே வந்த நாட்கள் எனக்கும் ஞாபகம் வருது. மாணவியாக இருக்கும் போது நான் செய்த தவறு, இப்ப தாயாக ஆன பிறகு தான் பூரணமாக உணருகிறேன். என் மகள் எந்த சலனங்களுக்கும் ஆளாகாமல், அவளை நல்லபடியாக உருவாக்கணும்ன்னு நான் நினைக்கிறது தப்பா சுந்தரம்?”
“”இல்லை சாந்தி… நீ பொறுப்பான குடும்பத் தலைவியாக, நல்ல தாயாகத் தான் நடந்துக்கிறே… வரட்டுமா?”
அவளிடம் விடைபெற்று கிளம்பினான் சுந்தரம்.
பதினாறு வயதில் ஏற்படும் காதலை பெரிதென்று நினைத்து, தன் வாழ்க்கையை தொலைக்காமல், பெற்றவர்களின் வழிகாட்டுதலுடன் இன்று நல்ல நிலையில் இருக்கும் தன்னையும், சாந்தியையும் போல், இன்றைய இளைஞர்கள் காதல் என்ற மாய வலையில் விழாமல், தங்களைப் பாதுகாத்துக் கொண்டால், நிச்சயம் நினைத்ததை சாதிப்பர் என நினைத்தவனாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான் சுந்தரம்.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *