அன்பை பங்கு போடுபவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 4,575 
 
 

இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம். நான் தூங்கும்போது அம்மாவுடன் ஒட்டிக்கொண்டுதான் தூங்குவேன். அவளது முதுகுப்புறம் ஒட்டிக்கொண்டு, வலது கையால் அவள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்வேன். சிலவேளை அவள் வயிற்றைத் தடவிப் பார்க்க வேண்டும் போல் தோன்றும். அம்மாவின் வயிறு வாழைத்தண்டு போல் மிருதுவாக இருக்கும். அது எவ்வளவு சுகமானது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

அந்த வயிற்றுக்குள் இருந்துதான் நான் வந்தேனா என்று நினைக்க எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நான் எப்படி என் கால்களையும், கைகளையும் மடக்கிக்கொண்டு கூனிக்குறுகி அந்த வயிற்றுக்குள் இருந்திருப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன். இப்போது அம்மாவை கட்டியணைத்துக் கொண்டு படுத்திருப்பதை விட வயிற்றுக்குள் சுருண்டு படுத்திருந்தது இன்னும் சுகமானது போல் தோன்றுகின்றது. இருந்தாலும் இப்போதும் அவளை இறுக அணைத்துக்கொண்டு அவள் வயிற்றின் சூட்டை உணர்வதிலும் அவள் உடுத்தியிருக்கும் ஆடையின் ஈர வாசனையை நுகர்வதிலும்தான் எத்தனை ஆனந்தம்.

நான் இப்படி ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வந்து சேர்ந்தான். ஆரம்பத்தில் அவன் குவா குவா என்று கத்தியபோது, அது வீடெல்லாம் எதிரொலித்தபோது வீட்டில் எல்லோரும் குதூகலித்து கொஞ்சியபோது நானும் கூட மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் விரைவிலேயே அவனுக்கென ஒரு தொட்டில் கட்டி அதில் அவனைப் போட்டுவிட்டு அதற்கு அருகிலேயே பாய் விரித்து அம்மா படுக்கத் தொடங்கிவிட்டாள். இரவில் அவன் கண் விழித்து அழும் போதெல்லாம் அம்மா படுத்தவாறே தொட்டிலில் இருந்து தொங்கும் கயிற்றைப்பிடித்து தொட்டிலை ஆட்டிவிடுவாள்.

சில வேளைகளில் அவன் ஒண்ணுக்குப் போய் தரையையும் நனைத்திருப்பான். அது அம்மா மேலிலும் பட்டிருக்கும். நான் அம்மாவின் அன்புக்கு ஏங்கி, அவள் துணையைத் தேடி அவளது அருகில் சென்று படுத்தால் அம்மா மேலில் இருந்தும் ஒரே மூத்திர வாடைதான் வரும். அந்த வாடை மூக்கில் நுழைந்ததும் குமட்டிக்கொண்டு வரும். அதனாலேயே நான் தம்பியை வெறுக்க ஆரம்பித்தேன்.

படிப்படியாக என் அம்மாவுக்கும் எனக்குமுள்ள நெருக்கத்தினை என் தம்பி பறித்துக்கொண்டான். எல்லா விதங்களிலும் என்னைவிட என் தம்பி மீதே அம்மா அன்பு காட்டுவதாக எனக்குப்பட்டது. அவனை குளிப்பாட்டுதல், ஒடிக்கலோன், பவுடர் போடுவது, உடுப்பாட்டி வேடிக்கை பார்ப்பது, உம்மு உம்மு என்று கொஞ்சுவது என்பவற்றைப் பார்க்க எனக்கு கோபம் கோபமாக வரும். இதனால் எல்லாம் என் அம்மாவுக்கும் எனக்குமுள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது.

அம்மா அருகில் இல்லாத சமயங்களில் எல்லாம் நான் அவனை மிரட்டுவேன். அவன் தூங்குகிற தொட்டிலில் எட்டிப்பார்த்து அவனை முறைத்து பயங்காட்டி அவன் கன்னங்களில் கிள்ளி, “பிசாசு, பேய், ராட்சகன்” என்பேன். அவன் என் தொல்லை தாங்க முடியாமல் வீரிட்டுக் கத்துவான். என்னைச் சந்தேகிக்காத என் அப்பாவி அம்மா தம்பி எதற்காகவோ அழுகிறான் என்று நினைத்து என்னை வீட்டுக்குள் இருந்தவாறே சத்தமிட்டுக் கூப்பிட்டு “தம்பி அழுகிறாண்டா, தொட்டிலை ஆட்டிவிடு” என்பாள். இருந்தாலும் அவனை அழவிட்டு வேடிக்கைப் பார்ப்பது எனக்கு சந்தோசத்தைத் தரும்.

அம்மா தம்பிக்கு பாலூட்டுவதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அவள் தம்பிக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும்போது இந்த மார்பில் இருந்துதானே முன்பு நானும் பால் குடித்தேன் என்ற நினைப்பு வரும். இப்போது தம்பி அதில் பால் குடித்து மகிழ்கிறானே என நினைக்க எனக்கு அழுகை அழுகையாக வரும்.

அப்பாவை அம்மா கல்யாணம் கட்டினபோது அம்மா ரொம்ப அழகாக இருந்ததாக பாட்டி சொல்லுவாங்க. ஏன், இப்ப கூட அவுங்க அழகாதான் இருக்காங்க. ஆனால் முன்னமாதிரி இப்பவெல்லாம் அவுங்க தன்னை அலங்கரிச்சுக்க மாட்டாங்க. ஏன்னு தெரியல. எனக்கு முன்னாடி எனக்கு ஒரு அக்காவும், அண்ணனும் கூட இருக்காங்க. ஆனா அவுங்க கூட எல்லாம் எனக்கு கோபமே கெடையாது. ஆனால் அவுங்கெல்லாம் பொறக்காம நான் மட்டும் எங்கம்மாவுக்கு பிள்ளையாயிருந்திருந்தா நல்லாருக்கும்னு நெனப்பேன்.

இப்பவெல்லாம் தம்பியும் எங்ககூடதான் ஸ்கூலுக்குப் போறான். அவன பத்தரமா கூட்டிக்கிட்டு போறது எல்லாம் எங்க அக்காவோட வேல. எப்பவாவது என்னையை கூட்டிக்கிட்டு போகச் சொன்னா அவன் காத திருகித்திருகியே புண்ணாக்கிடுவேன். அவன் கண்ணீர் வடிச்சிக்கிட்டுத்தான் ஸ்கூலுக்குப் போவான். ஆனா அவன் ஒருபோதும் அம்மாக்கிட்ட என்னைப் பத்தி புகார் சொல்லமாட்டான். அப்படி சொன்னா அவன் கண்ண நோண்டி பேத்திருவேன்னு அவன பயமுறுத்தி வைச்சிருக்கேன்.

ஆனால், அவன் ஏதாவது தவறு செஞ்சி மாட்டிக்கிட்டா அத அம்மாக்கிட்ட போட்டுக்கொடுத்து நாளு சாத்து வாங்கிக்கொடுப்பேன். அம்மா அவன் முதுகுலயும் கன்னத்திலயும் மாறி, மாறி அடிக்கிறதையும், ஐயோ, ஐயோ, அடிக்காதிங்கன்னு அவன் கத்துறதையும் பார்க்க, எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.

அன்னைக்கும் அப்படித்தான். அது ஒரு சனிக்கெழம. அம்மா வீட்டுக்குச் சாமானம் வாங்க கடைத்தெருவுக்குப் போய்ட்டாங்க. அண்ணனும் அக்காவும் அவுங்கவுங்க வேலையில் மூழ்கிப் போயிருந்தாங்க. தம்பி அவனுக்கு அம்மா புதிதாக வாங்கிக் கொடுத்திருந்த கலர் சோக் பெட்டியில இருந்து சோக்க எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு ஏதோ படம் வரைஞ்சிகிட்டு இருந்தான். நான் வெளியே சென்று மாமரத்தில் இரண்டு மாங்காயாவது வீழ்த்த முடியுமா என்று கற்களை குவித்துக்கொண்டு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திலேயே நான் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிட்டு அவற்றைப் பொறுக்கிக்கொண்டு வீட்டினுள் சென்றேன். அங்கே என் தம்பி செய்திருந்த காரியத்தைக் கண்டு திடுக்கிட்டேன். அவன் அண்மையில் தான் பெயின்ற் பூசப்பட்ட சுத்தமான வெள்ளைச் சுவரெல்லாம் கறுப்பு, சிவப்பு வர்ணங்களால் கிறுக்கி வைத்திருந்தான். இம்முறையும் அவன் அம்மாவிடம் நன்றாக வாங்கிக் கட்டப்போறான் என்று மனதில் கறுவிக்கொண்ட நான், “இரு, இரு நீ செய்திருக்கும் வேலைக்கு அம்மா வந்ததும் நல்ல உதை வாங்கப்போகிறாய்” என்று கூறி அவனை மிரட்டினேன். நான் வெறுட்டிய தோரணையில் இருந்து, தான் ஒரு பெரிய தவறு செய்து விட்டோமோ என்று நினைத்து அவன் முகம் மருண்டு போனது. அடுத்த நிமிடம் அவன் விர்ரென்று ஒடிப்போய் அலுமாரிக்கு பின்னால் இருந்த இருளான சந்துக்குள் ஒளிந்து கொண்டான்.

நான் வெளியே சென்று அம்மா வரும் வரையிலும் காத்திருந்தேன். சில நிமிடங்களிலேயே அம்மாவின் தலை தெரு மூலையில் தெரிந்தது. அவர் எரிக்கும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க களைத்து மூச்சிரைத்துக் கொண்டு வந்தார். நான் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று கூட யோசிக்காமல் “அம்மா, தம்பி என்ன செஞ்சிருக்கான் தெரியுமா? புதுசா பெயின்ட் அடிச்ச சுவரெல்லாம் கறுப்பு, கறுப்பா கிறுக்கி வச்சிட்டான்” அதைக் கேட்டதும் அம்மாவுக்கு கோபத்தால் ஜிவ்வென்று உச்சந்தலைக்கு ரத்தம் ஏறியது. வெயிலில் கறுத்திருந்த அவர் முகம் மேலும் சிவந்து கறுப்பானது. “எங்கடா அவன்” என்று சத்தமாகக் கூறிய அவர் கையில் கனத்துக் கொண்டிருந்த நான்கைந்து பைகளையும் முன்னறையில் வைத்துவிட்டு தம்பி எங்கிருக்கிறான் என்று அனுமானித்து ஹோலுக்குள் பிரவேசித்தார். சின்னவனிடம் காலையில் படம் வரைவதற்காக கலர் சோக்குகளை கொடுத்தது தவறு என்று அவர் மனம் வருத்தப்பட்டது.

அவர் நேராக சென்று சின்னவன் ஒளிந்திருப்பதாகக் கருதிய அலுமாரிக் கருகில் நின்றுகொண்டு அவன் பெயரைச் சொல்லி வெளியே வாவென சத்தமாக அழைத்தார். அங்கே சில கணங்கள் இறுக்கமான அமைதி நிலவியது. ஆனால் சின்னவன் வெளியே வருவதாக இல்லை. அவர் அதன் பின்னரே அவன் அப்படி சுவரில் என்ன கிறுக்கியிருக்கிறான் என்று கவனித்துப் பார்த்தார். அடுத்த கணமே அவர் கண்கள் கசிந்து கண்ணீர் உருண்டோடத் தொடங்கிவிட்டது. அங்கே சுவரில் “அன்புள்ள அம்மா, எனக்கு அம்மாதான் உயிர்” என்று தடிப்பாக எழுதப்பட்டிருந்தது. அதனை சுற்றி இதயம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது.

அம்மா அழுவதைப் பார்த்து எனக்கும் அழுகை வந்துவிட்டது. அன்று எனக்கு ஒரு விடயம் தெட்டத்தெளிவாகப் புரிந்து போய்விட்டது. நான் எந்த அளவுக்கு என் அம்மா மீது அன்பு வைத்திருந்தேனோ அதற்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் என் தம்பியும் அம்மா மீது அன்பு வைத்திருக்கிறான் என்பதுதான் அது. அதன் பின் என் தம்பி மீதான எல்லாப் பகைமைகளும் என் மனதில் இருந்து அகன்று போய்விட்டன. நாங்கள் மிக விரைவாக நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *