கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,046 
 
 

விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? – எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே மலர்ந்த காதல், பிஞ்சு விடவில்லை!

வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவன் “லக்ஷ்மி!” என வேண்டியது; அவள் ‘ஏன்?!’ என வேண்டியது – மாதாந்திர பட்ஜட், மைத்துனன் வருகை, அடுத்த வீட்டுக்காரியின் புதுப் புடவை, அவள் அகமுடையானின் வருமானம் ஆகியவற்றைப் பற்றி ஏதாவது பேச வேண்டியது; அவ்வளவுதான் – ‘அப்பப்பப்பா!’ ‘அம்மம்மம்மா!’ என்று தெத்தித் தெத்திப் பேசுவதற்கும், ‘என் கண்ணா வாடா!’ என்று கொஞ்சுவதற்கும் இடையிடையே, ‘ங்கா, ங்கா’ என்ற இன்பநாதம் எழுப்புவதற்கும் ‘ச்,ச்,ச்!’ என்ற இன்ப ஒலி கிளம்புவதற்கும் என்ன வேண்டுமோ, அந்தப் பிஞ்சு அந்த மூன்றாவது ஜீவன் – அவர்களுக்கு இல்லவே இல்லை!

அருணோதயத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை ‘வீல், வீல்’ என்று கத்தும். அதன் அப்பா அந்த நேரத்தில் தான் ஏதோவிழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருப்பார். அடுப்பண்டை ஏதோகாரியமாக இருக்கும் அம்மா, “எழுதிக் கிழித்தது போதும்; அந்தக் குழந்தையைக் கொஞ்சம் தூக்குங்கள்!” என்பாள். “குழந்தையை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டால் போதுமா? – வா, உன்னையும் தூக்கி வைத்துக் கொள்கிறேன்” என்று எரிந்து விழுவார் அப்பா. இருவரிடையேயும் வார்த்தை வளர்ந்து கொண்டே போகும். கணவன் அழகைப் பற்றி மனைவியும், மனைவியின் அழகைப் பற்றிக் கணவனும் காரசாரமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் அம்மாவும் குழந்தையோடு சேர்ந்து அழுது தீர்க்கும் கட்டம் வரும் வரை, நாராயணனும் லக்ஷ்மியும் அந்தத் குழந்தை அழுவதை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்!

“இந்தக் கிராமபோன் கம்பெனிக்காரர்கள் எதையெல்லாமோ ‘ரிகார்ட்’ செய்கிறார்களே, ஒரு குழந்தையை நல்லாக் கத்தவிட்டு ‘ரிகார்ட்’ செய்யக் கூடாதோ?” என்பாள் லக்ஷ்மி.

“அவர்களென்ன, இந்த ரேடியோக்காரர்களையுந்தான் பாரேன்? தினசரி எத்தனையோ பேரை மாறி மாறி அழ வைக்கிறார்கள் – ஒரு குழந்தை ஆனந்தமாக அழுவதற்கு அரைமணிநேரம் ‘சான்ஸ்’ கொடுக்கக் கூடாதோ?” என்பான் நாராயணன்.

என்றைக்காவது ஒருநாள் என் அருமைப் பெண்ணைப் பற்றி நான் பேச்சோடு பேச்சாக, “சுதா, சுவரைத் துணையாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள். என் அறையில் வைத்தது வைத்தபடி ஒன்றுமே இருப்பதில்லை!” என்பேன்.

உடனே, தன் மேஜை மீது ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து நாராயணன் பெருமூச்சு விடுவான். லக்ஷ்மி சமையலறையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டுச் சோகமே உருவாய்ச் சுவரோடு சுவராகச் சாய்ந்து விடுவாள்.

அவர்கள் போகாத கோயில்களில்லை; ஆடாத தீர்த்தங்களில்லை; தரிசிக்காத தெய்வங்களில்லை; வலம் வராத மரங்களில்லை; அனுஷ்டிக்காத விரதமில்லை/ என்ன இருந்தும் என்ன பயன்? – 000!

***

அப்பாடி! ஒரு வழியாக அந்த இளந்தம்பதிகளுடைய எண்ணம் ஈடேறுவதற்கு எட்டாவது வருஷமும் பிறக்க வேண்டுமென்று இருந்தது போலும்? “வெந்நீர் போட்டு விட்டேன்!”, “காப்பி தயார்!”, “இலை போட்டாச்சு!” என்றெல்லாம் இத்தனை நாளும் லக்ஷ்மியே முன்வந்து நாராயணனை அழைத்தது போக, இப்பொழுது நாராயணனே முன்வந்து “வெந்நீர் போட்டாச்சா?” “காப்பி தயாராகிவிட்டதா?” “இலை போட்டாச்சா?” என்றெல்லாம் விசாரிக்கும்படியாகிவிட்டது.

முன்னெல்லாம் “லக்ஷ்மி!” என்று ஒருமுறை கூப்பிட்டாலும் போதும், “ஏன்?” என்று எங்கே யிருந்தாலும் அவள் சிட்டாய்ப் பறந்து ஓடி வருவாள். இன்று அப்படியில்லை. “லக்ஷ்மி, லக்ஷ்மி!” என்று லக்ஷோபலக்ஷம் தடவை அடித்துக் கொண்டாலும் “உம்,உம்” என்ற முனகலைத் தவிர அவனால் அவளை நேரில் பார்க்க முடியவில்லை.

“இதென்ன வம்பு!” என்று அலுத்துக் கொண்டே நாராயணன் எழுந்து உள்ளே போவான்.
அவள் எண் சாண் உடம்பையும் ஒரு சாண் உடம்பாக ஒடுக்கிக் கொண்டு எங்கேயாவது ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருப்பாள்.

“என்ன, லக்ஷ்மி?” என்று விசாரிப்பான் நாராயணன்.

“ஒன்றுமில்லை!” என்று எதையோ மறைக்கப் பார்ப்பாள் அவள்.

“என்னதான் சொல்லேன்?” என்று அவளைத் தூக்கி உட்கார வைப்பான் அவன்.

“கொஞ்சம் மயக்கமாயிருக்கிறது; அவ்வளவு தான்! சிறிது நேரம் படுத்து எழுந்தால் சரியாய்ப் போய்விடும்” என்று சொல்லி விட்டு ‘சட்’டென்று படுத்துக் கொள்வாள் அவள்.

“சமையல் செய்வதில் சகதர்மிணிக்குநான்
சளைப்பில்லை காணென்று கும்மியடி!”

என்று பாடிக்கொண்டே சமையலறைக்குள் நுழைவான் நாராயணன். அவனே வெந்நீர் போட்டுக் குளித்து விடுவான்: அவனே சமைத்தும் சாப்பிட்டு விடுவான்; கடைசியில் லக்ஷ்மியையும் அழைப்பான்; சாப்பிடுவதற்கு!

“பழிக்குப் பழிவாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம்; நம் சமையலின் தராதரத்தைப் பற்றி அவர் என்னவெல்லாம் சொல்வாரோ, அதையெல்லாம் அப்படியே இப்போது திருப்பிச் சொல்லிவிட வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே எழுந்திருப்பாள் லக்ஷ்மி. ஆனால் ஒரு வாய் சாதத்தை எடுத்து வைத்ததும் அவளுக்குக் குமட்டும்; எழுந்து வாசலுக்கு ஓடி விடுவாள்.

“என்ன, லக்ஷ்மி? நான் செய்த சமையலுக்கு நீ கொடுக்கும் ‘ஸர்டிபிகேட்’ இதுதானா!” என்று கேட்டு விட்டுச் சிரிப்பான் நாராயணன். லக்ஷ்மியும் அவனுடைய சிரிப்பில் கலந்து கொள்வாள்.

இவை மட்டுமா? – நாராயணன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து வந்த லக்ஷ்மியிடம் இப்பொழுது எத்தனை மாறுதல்!

ஒரு நாள் வேலைக்குப் போக கிளம்பிய நாராயணன் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு வாசலில் நின்று “லக்ஷ்மி! என் மேஜையின் மேல் பேனாவை மறந்து வைத்து விட்டேன்; அதைக் கொஞ்சம் கொண்டு வாயேன்!” என்றான்.
அதற்கு லக்ஷ்மி அளித்த பதில் அவனைத் தூக்கிவாரிப் போடுவாதாயிருந்தது; “எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது; நீங்களே வந்து எடுத்துக் கொண்டு போங்கள்!” என்றாள் அவள்.

இம்மாதிரி விஷயங்களுக்காக நாராயணன் இப்பொழுதெல்லாம் அவளைக் கோபித்துக் கொள்வதில்லை; ஏனெனில், அவனுக்கு விஷயம் விளங்கி விட்டது. இல்லையென்றால் இத்தனை நாளும் அவள் விரும்பிக் கேட்டதையே வாங்கிக் கொடுக்காத நாராயணன், இப்பொழுது அவள் கேட்காததையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பானா?

அன்றொரு நாள் வாங்கி வந்தீர்களே ரோஸ் ஜாங்கிரி, அது ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது!” என்று லக்ஷ்மி இப்போது சொன்னால் போதும்; அன்று மாலையே அதேமாதிரி ஜாங்கிரியில் ஒரு டஜன் வந்து சேர்ந்துவிடும்.

“இன்று காலை என் சிநேகிதி ஸரஸா இங்கே வந்திருந்தாள். ரேடியோ வளையலாம், ஒன்றுக்கு இரண்டு சவரன் ஆகிறதாம் கைக்கு ஒன்று செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள். பாதகமில்லை. பார்ப்பதற்கு நன்றாய்த் தான் இருக்கிறது!” என்று சொன்ன லக்ஷ்மி வாயெடுக்க வேண்டியது தான்; “அதற்கென்ன இன்னும் ஒரே வாரத்தில் நாமும் அதேமாதிரி இரண்டு செய்துவிட்டால் போச்சு!” என்பான் நாராயணன்.

“எதிர் வீட்டுக்காரி கட்டிக் கொண்டிருக்கிறாள் ஏரோப்ளேன் பார்டர் போட்ட புடவை. எப்படியிருக்கிறது தெரியுமா? விலை எண்பது ரூபாய்தானாம்?” என்பாள் லக்ஷ்மி.

அவ்வளவுதான்; அந்த மாதக் கடைசியில் சம்பளம் வாங்கியதும், நாராயணனின் முதல் வேலை மேற்சொன்ன புடவையை வாங்கிக் கொண்டு வருவதாய்த்தானிருக்கும்!

***

நாராயணன் – இப்படியெல்லாம் லக்ஷ்மியைக் கண்ணுங் கருத்துமாக கவனித்து வந்தும், அவளுடைய வேதனை மட்டும் குறையவில்லை. ஒன்று போனால் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல டாக்டர் ‘பில்’லும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

ஒரு நாள் நாராயணன் ஏதோ எண்ணித்துணிந்தவனாய் ‘லக்ஷ்மி, லக்ஷ்மி! இது எத்தனையாவது மாதம்?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டான்.
“ஆறாவது!” என்று சொல்லிவிட்டு, அவள் உள்ளே ஓடிவிட்டாள்!

நாராயணன் அவளைப் பின் தொடர்ந்து சென்று “அப்படியானால் அடுத்த மாதம் உன்னை அழைத்துக் கொண்டு போகும்படி அத்தைக்குக் கடிதம் எழுதுகிறேன்!” என்றான்.

தலை குனிந்த வண்ணம் முந்தானையின் ஒரு மூலையை முறுக்கி விட்டுக் கொண்டே, “அதற்குள் என்னை அங்கே அனுப்பி வைத்துவிட்டு, நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்களாம்?” என்று கேட்டாள் லக்ஷ்மி.

“நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன். என் சுகத்திற்காக உன் கஷ்டத்தை நீ வேண்டுமானால் சகித்துக் கொண்டிருக்கலாம்; என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது!”

“ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது. என் சுகத்திற்காக உங்கள் கஷ்டத்தை மட்டும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?”

“இந்தப் பிடிவாதமெல்லாம் வேண்டாம்; நீ இல்லாமலே என்னால் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள முடியும்! – நான் சொல்கிறபடி, நீ போய் உடம்பைப் பார்த்துக் கொண்டு, வா?”

“ஆமாம், உங்கள் சமையலும் நீங்களும்!”

“சரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்!”

“ஐயோ! உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்…?”

அதற்கு மேல் நாராயணனால் பொறுக்க முடியவில்லை. “அதெல்லாம் என் இஷ்டத்தைப் பொறுத்தது. அடுத்த மாதம் நீ உன் அம்மாவுடன் போய்த்தான் ஆக வேண்டும்!” என்று உச்சஸ்தாயில் இரைந்தான்.

காதைப் பொத்திக் கொண்ட லக்ஷ்மி, “வாயையும் பொத்திக் கொண்டாள். இல்லாத சந்தேகமெல்லாம் வந்துவிட்டது அவளுக்கு! – அத்துடன் எப்பொழுதோ நிகழ்ந்த சில சம்பவங்கள், கேட்ட பேச்சுக்கள், உலாவிய வதந்திகள் எல்லாம் அவளுடைய ஞாபகத்துக்கு வந்து விட்டன – அவ்வளவுதான் அவளுடைய அன்புள்ளம் சலசலத்தது. ஆத்திரம் அவளை ஆட்கொண்டு விட்டது!

பேதைப் பெண் பின் வருமாறு எண்ணமிட்டாள்;

“இவர் ஏன் நம்மை இப்படி ஒரேயடியாய்த் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்? ஒருவேளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது….

வி.க.-22 எண்ணம் முடியவில்லை; அதற்குள் கண்ணிர் கரை புரண்டு விட்டது.

“நாராயணன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்டுக்கு அத்தைக்கு கடிதம் எழுதிப் போட்டு விட்டான். அவளும் வந்தாள்; லக்ஷ்மியை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு போனாள்.

**

எட்டு வருஷ காலம் இணைபிரியாமலிருந்த நாராயணனுக்குத் தனிமையைத் தாங்குவது அசாத்தியமாயிருந்தது. சில சமயம் தன்னை மறந்து “லக்ஷ்மி!”என்று அவன் கத்திவிடுவான். பிறகு, “ஒஹோ! லக்ஷ்மி இங்கே இல்லையா!”என்று தன்னைத் தானே அவன் தேற்றிக் கொண்டு விடுவான்.

அன்று பிரசவத்துக்கு முன் அவளை ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று அவன் உள்ளம் துடியாய்த் துடித்தது. உடனே ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.
ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், “அவள் எப்படியிருக்கிறாளோ?” என்று ஏங்கிற்று அவன் மனம். அந்த நிலையில் அவனுடன் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே, “அவள் எப்படியிருக்கிறாளோ!” என்று லக்ஷ்மியை நினைத்து ஏங்கவேண்டுமென்பது அவனுடைய எண்ணம் போலும்! – இல்லையென்றால், அவர்கள் பாட்டுக்குத் தங்களுக்குள் பேசிச் சிரிப்பது கூட அவனுக்கு ஏன் பிடிக்காமல் இருக்க வேண்டும்? – அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஏழைகளைக் கவனிக்காமல் செல்லும் பணக்காரனைப்போல, சின்னஞ்சிறு ஸ்டேஷன்களைக் கவனிக்காமல் ‘மெயில்’சென்று கொண்டிருந்தது. அதைவிட வேகமாக நாராயணனின் மனோரதம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் ரயிலை விட்டு இறங்கியதும் ஓடோடியும் சென்று பஸ்ஸைப் பிடித்தான். வீட்டை நெருங்கியதும் உள்ளே லக்ஷ்மியும் அவளுடைய அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. “அம்மாடி! அந்த மட்டும் லக்ஷ்மி செளக்கியமாய்த்தான் இருக்கிறாள்” என்று ஆறுதல் அடைந்த வண்ணம், நாராயணன் சற்று நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.

“அவன் அங்கே எப்படியிருக்கிறானோ? – வீட்டில் தான் வேறுயாரும் கிடையாதே, உன்னை ஏன் அவன் ஏழாவது மாதமே இங்கு அனுப்பி வைக்க வேண்டும்? ஒன்பதாவது மாதம் அனுப்பி வைத்திருக்கக் கூடாதோ?” என்றாள் லக்ஷ்மியின் தாயார்.

“நானும் அதைத்தான் சொன்னேன்; அவர் கேட்டால்தானே? – ஒருவேளை நான் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது….?”

“சீ சீ!அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது; டாக்டர் செலவுக்குப் பயந்து அவன் ஒருவேளை உன்னை இங்கே அனுப்பியிருக்கலாம்!”

“ஆமாம், வண்டு மதுவைத்தானே விரும்புகிறது, மலரையா விரும்புகிறது?”என்று அவர்களுடைய பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் லக்ஷ்மியின் தகப்பனார்.

இதைக் கேட்ட நாராயணன் தலையில் இடி விழவில்லை; இமயமலையே பெயர்ந்து வந்து விழுந்தது!

“அடக் கடவுளே! அன்பின் லட்சணம் இதுதானா? – இதற்கா நான் இவ்வளவு பாடுபட்டேன்? – எல்லாம் எனக்காக என்றால், அன்று கஞ்சியைக் காலில் கொட்டிக் கொண்டு, கதிகலங்கிப் போனதுகூட அவளுக்காக இல்லையா? மஞ்சள் தூளை மிளகாய்த் தூள் என்று எண்ணி அன்றிரவு கத்திரிக்காய்க் கறியில் கொட்டிவிட்டு, கடைசியில் மருந்தை விழுங்குவதுபோல் விழுங்கித் தொலைத்தேனே, அதுகூட அவளுக்காக இல்லையா? – அதெல்லாம் போகட்டும்; எப்படியாவது அவள் சந்தோஷமாயிருந்தால் போதும்!” என்று எண்ணி, அளவுக்கு மீறி அங்கங்கே கடனை வாங்கிவிட்டு இப்போது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேனே, அது கூடவா அவளுக்காக இல்லை…?’

எண்ணம் முடிவடையவில்லை; அதற்குள் அவன் வந்த வழியே திரும்பிவிட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ‘எங்கே இருக்கிறோம்?’ என்று அவன் தன்னைக் கவனித்தபோது தான் சென்னையை நோக்கிப் போகும் ரயிலில் தான் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *