(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எனக்கு அம்மாவப் பாக்கணும் அண்ணே” என்று கோரிக்கை வைத்த தங்கையை சமாதானப் படுத்தினேன்.
“அது முடியாதேம்மா. கபர்ஸ்தானுக்குள்ள பெண்கள அலவ் பண்ண மாட்டாங்களாம். அம்மா ஞாபகம் வர்றப்ப ஃபோட்டோவ எடுத்துப் பாத்துக்க.”
தங்கை சமாதானமடையவில்லை. “ஃபோட்டோவப் பாக்கறது சரியண்ணே, ஆனா நம்ம அம்மா படுத்துக் கெடக்கிற எடத்த நா பாக்க வேண்டாமா!” என்றாள், கண்களில் ஈரம் மின்ன. “ப்ளிஸ்ண்ணே பள்ளிவாசல்ல கேட்டுப் பாருங்கண்ணே.”
அம்மா காலமாகி இருபத்திரெண்டு நாள்கள் ஓடிப்போய்விட்டன. அழகான அம்மா. எவ்வளவுதான் கலவரப்படுத்தினாலும் பிள்ளைகளைக் கடிந்து ஒரு வார்த்தை வாயில் வராத பாசமிக்க அம்மா. முன்கோபக்காரரான அப்பாவின் சர்வாதிகாரத்தைக் காலமெல்லாம் தாக்குப் பிடித்த அம்மா. மூணு வருஷம் முன்பு வரை, அம்மாவைக் கட்டிக் கொண்டு, அம்மாவின் மேல் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மட்டுமே உறங்கத் தெரிந்த தங்கச்சி, கதிகலங்கிப் போனாள் அம்மாவின் மறைவால்.
அம்மாவின் மண்ணறையைப் போய்ப் பார்க்க வேண்டும், அங்கே போய் அம்மாவுக்காக ப்ரார்த்திக்க வேண்டும் என்கிற இவளுடைய நியாயமான ஆசை நிறைவேற முடியாமல் மண்ணறைத் தோட்டத்தில் தடையுத்தரவு இருந்தது.
முத்தவல்லிதான் மசூதியின் நிர்வாகத் தலைவர். அம்மாவுக்கு மரணச் சான்றிதழ் அவர்தான் வழங்க வேண்டும். அதற்காக அவரிடம் போனபோது, “நாளக்கித் தாறேனே தம்பி” என்றார்.
“வேற ஒன்ணுமில்லியே தம்பி?”
“வேற விஷயம் ஒண்ணு இருக்கு மௌலானா.”
“சொல்லுங்க தம்பி.”
“என்னோட ஸிஸ்டர், அம்மா மேல உயிராயிருந்தா. “
“பொட்ட புள்ளைக அப்படித்தானே இருக்கணும் தம்பி? மேல சொல்லுங்க”
“அம்மா இப்ப இல்ல. அம்மாவப் பாக்கணும்னு ஸிஸ்டர் ஆசப்படறா.”
“அதாவது…”
“அம்மாவோட கபர்ல வச்சு துஆ ஓதணும் அந்த கபர ஒரு வாட்டியாச்சும் பாத்து அம்மாவுக்கு சலாம் சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருக்கா.”
“தங்கச்சி ஆசப்படறது ஞாயந்தான் தம்பி, ஆனா பெண்கள் கபரஸ்தானுக்குள்ள வர்றதுக்கு அனுமதியில்லியே தம்பி.”
“நீங்க தலைவர். நீங்க நெனச்சா அனுமதி குடுக்கலாம் மௌலானா.” “அப்படியில்ல தம்பி. இஸ்லாத்துலயே இதுக்கு அனுமதியில்ல.”
“அப்படியிருக்கும்னு எனக்குத் தோணல மௌலானா. ஒரு தாய் படுத்துகிடக்கிற எடத்தக் கடேசி கடேசியா ஒரேயொரு தடவ அந்தத் தாயோட கொழந்த பாக்க ஆசப்படும்போது, அவ பொண்ணாப் பொறந்துட்ட ஒரேயொரு பாவத்துக்காக அல்லா அந்த நியாயமான ஆசக்கித் தடை போடுவான், பாசத்துக்கு வேலி கட்டுவான்னு என்னால் நம்ப முடியல மௌலானா.”
“ஆனா, அதுதான் சட்டம் தம்பி. உயிரோடயிருக்கிற எந்தப் பொண்ணும் கபரஸ்தான் எல்லைக்குள்ள ப்ரவேசிக்கக் கூடாதுங்கறதுதான் சட்டம்.”
“அப்ப எந்தங்கச்சி எங்கம்மாவப் பாக்கணும்னா அவளும் செத்து மய்யத்தான பின்னாலதான் இந்த கபரஸ்தானுக்குள்ள ப்ரவேசிச்சி அம்மாவப் பாக்க முடியும்ங்கறீங்க.” என்னுடைய குரல் வேகங்கூடி தழுதழுத்தது, முத்தவல்லிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.
தாடியைக் கோதியபடி அவர், “தம்பி நீங்க உணர்ச்சி வசப்படறீங்க” என்றார் மெதுவாய். “ஒங்க வாதத்துலயிருக்கிற நியாயம், ஒங்க தங்கச்சி ஆசையில இருக்கிற பாசம் எல்லாம் எனக்குப் புரியுது. ஆனா சட்டத்த மீறி நா எப்படி ஒங்களுக்கு அனுசரணையாப் போறதுன்னுதான் எனக்குப் புரியல.”
முத்தவல்லி கொஞ்சம் கீழே இறங்கி வருவதைப் போல் தோன்றிய சந்தர்ப்பத்தை நான் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டேன். “நம்மோட மனசாட்சிக்கி விரோதமா நாம ஏதும் பண்ணப் போறதில்ல மௌலானா. நாம என்ன, ஹராமான காரியமா பண்ணப் போறோம்? அல்லாவுடைய சட்டங்கள் மனிதாபி மானத்துக்கு முரணானதா இருக்கவே முடியாது மௌலானா.”
“யோசிப்போம் தம்பி. நீங்களும் யோசிங்க” என்று முத்தாய்ப்பு வைத்தார் முத்தவல்லி.
இந்த உரையாடலைத் தங்கச்சியிடம் விவரித்த போது, “நீங்களும் யோசிங்க” என்கிற கடைசி வாக்கியம் அவளுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்த மாதிரியிருந்தது. உடனடியாய் ஆக்ஷனில் இறங்கினாள். கோடம்பாக்கத்தில் ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் வருவதாய்க் கிளம்பினாள்.
இங்கே அண்ணா நகரில் ஆயிரத்தெட்டு பியூட்டி பார்லர்கள் இருக்க, கோடம்பாக்கம் ஏன் என்றதற்கு, அதுல ஒரு விஷயமிருக்கு என்று கண் சிமிட்டி விட்டுப் போனாள். போனவள், திரும்பி வந்தபோது, தலைமுடி ஆண்மாதிரி க்ராப் வெட்டப்பட்டிருந்தது. இதென்ன அலங்கோலம் என்று நான் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கையில், கைப்பையிலிருந்து ஒரு ஒட்டு மீசையை எடுத்துக் காட்டி, மேலும் ஆச்சர்யப்படுத்தினாள்.
“கோடம்பாக்கத்ல சினிமா காஸ்ட்யூம்ஸ் எல்லாம் வாடகக்கி விடற கடையில் வாங்கினேன் அண்ணே. ஒங்க லுங்கியையும் ஷர்ட்டையும் குடுங்க போட்டுக்கறேன். தலையில குல்லா வச்சுக்கறேன். இந்த மீசையையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா ஒட்டிக்கிறேன். நாளக்கிக் காலை ஸுபுஹ் தொழுதுட்டு நாம ரெண்டு பேரும் கபரஸ்தானுக்குப் போறோம். அம்மாவப் பாத்துட்டு வர்றோம். விடிஞ்சும் விடியாமலும் இருக்கற நேரம், யாருக்கும் வித்யாசம் தெரியாது.”
எனக்குள் லேசாய்க் கிலி. ஆசை வெட்கமறியாது என்பார்கள். ஆசை ஆபத்தையும் அறியாது என்று உணர்ந்தேன். நியாயமான ஆரோக்யமான ஆசைதான், ஆனாலும், பிடிபட்டுவிட்டால்?
“இது ரிஸ்க் இல்லியா தங்கச்சி! விஷயம் வெளியே தெரிஞ்சி போச்சுன்னா என்ன நடக்கும்னு என்னால கற்பன பண்ணவே முடியலியேம்மா.”
“அநாவசியக் கற்பன எதுக்குண்ணே . நீங்க கவலையேப் படாதீங்க. அல்லாவும் அம்மாவும் நம்மளக் கைவிட மாட்டாங்க.” தங்கையுடைய உறுதி எனக்கு ஒரு புதுத் தெம்பையளித்தது.
அடுத்த நாள் சாயங்காலம், அம்மாவுடைய மரணச் சான்றிதழைப் பெறுவதற்காக மசூதிக்குப் போனேன்.
மசூதிக்கும் மண்ணறைத் தோட்டத்துக்குமிடையே இருந்த தணிவான சுவரின் மேலாய் அம்மாவின் மண்ணறை இருக்கும் திசையில் பார்வையைச் செலுத்தி விட்டுப் பின் முத்த வல்லியின் அறையை நோக்கி நடந்தேன்.
“காலைல கபரஸ்தானுக்கு வந்திருந்த மாதிரியிருந்தது தம்பி?” என்ற முத்தவல்லியின் முதல்க் கேள்வியே கொஞ்சம் சங்கடப்படுத்தியது.
“அ…ஆமா” என்று தடுமாறினேன்.
“கூட யாரோ வந்திருந்த மாதிரியிருந்தது?” என்கிற அடுத்த கேள்வி இன்னும் சங்கடம்.
இந்தக் கேள்வியை எப்படி சமாளிப்பது என்று திணறிக் கொண்டிருந்த வேளையில் டெலிஃபோன் மணி ஒலித்து என்னுடைய திணறலைத் திசை திருப்பியது. முத்தவல்லி ஃபோனில் பேசி முடித்த போது அந்தக் கேள்வி காலாவதியாய்ப் போயிருந்தது.
மேஜையில் குனிந்து, டெத் ஸர்ட்டிஃபிகேட்டில் கையெழுத்திட்டுக் கொண்டே முத்தவல்லி, “தம்பி என்ன தொழில் செஞ்சிட்டிருக்கீக?” என்று அடுத்த சங்கடத்தை அவிழ்த்து விட்டார்.
சங்கடம்தான். நான் ஈடுபட்டிருக்கிற தொழிலை, தீவிர முஸ்லிமான இவரிடம் எப்படிச் சொல்வது? சரி, அதற்காகப் பொய் சொல்லவா முடியும்!
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். “நா சினிமாவுல இருக்கேன் மௌலானா.”
“சினிமாவுல நடிக்கவா செய்றீக?”
“இல்ல மௌலானா, சினிமாவுல பாட்டெழுதறேன்.”
“இதச் சொல்றதுக்கு ஏன் தம்பி இவ்வளவு யோசிக்கிறீக! நல்லா எழுதுங்க. கா.மு. ஷெரீஃப்னு ஒரு கவிஞர் இருந்தாரே, அவர மாதிரி நீங்களும் ஓஹோன்னு வாங்க.”
நான் நினைத்ததற்கு மாறாய், உற்சாக வார்த்தைகள் சொல்லி என்னைப் பரவசப்படுத்தியவர், அடுத்து, “நம்ம மகனும் சினிமா லைன்லதான் இருக்கான்” என்று ஓர் ஆச்சர்யத்தை அரங்கேற்றினார்.
“கோடம்பாக்கத்ல ஒரு கட வச்சிருக்கான். சினிமாக் காரங்களுக்கு உடுப்பு சப்ளை பண்ற கட. உடுப்பு மட்டுமில்ல, ஒட்டு முடி, ஒட்டுதாடி, ஒட்டு மீசை எல்லாம் வச்சிருக்கான்.”
அந்த “ஒட்டு மீசை”யில் ஓர் அழுத்தந் தந்து, என் விழிகளை ஊடுருவி, விசேஷமான ஒரு புன்னகையை என்மேல் பிரயோகித்தார். எனக்கு என்னமோ புரிந்த மாதிரியிருந்தது. தொடர்ந்து, அம்மாவின் மரணச் சான்றிதழ்க் காகிதத்தை என்னை நோக்கி நீட்டியபடி, “ஒங்கத் தங்கச்சிக்கு நா சலாம் சொன்னேண்டு சொல்லுங்க” என்று சிரித்தார்.
எனக்கு முழுமையாய்ப் புரிந்த மாதிரியிருந்தது. சான்றிதழைப் பெற்றுக் கொண்டு அவருடைய கரங்களைப் பற்றினேன். “நன்றி மௌலானா. ரொம்ப நன்றி” என்று கண்கள் பனிக்கச் சிரித்தேன்.
“எதுக்குத் தம்பி நன்றி?” என்றார்.
“எல்லாத்துக்கும்தான்” என்றேன்.
– பாக்யா, ஏப்ரல் 18-24,2008.
– இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் இஸ்லாமியச் சிறுகதைகள் தொகுதி.
– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.