அன்புள்ள அக்கா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 2,684 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறு ஐம்பதுக்கு வந்து சேரவேண்டிய நெல்லை எக்ஸ்ப்ரஸ் வழக்கம் போல ஏழு ஐம்பதுக்கு சாவகாசமாய் எழும்பூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

ரயிலை விட்டுக் கீழே இறங்கி, ரெண்டு பக்கமும் பார்த்தான்.

கூட்டம் கரைந்து கொண்டிருந்தது. அக்காவையோ அத்தானையோ காணோம். காலையில் ஆஃபீஸுக்கு போக வேண்டியவர் அத்தான். ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். ரயில் ஒரு மணி நேரம் லேட் என்றறிந்ததும் வேறே வழியில்லாமல் கிளம்பிப் போயிருப்பார். அது சரி, இப்போ இவன் அண்ணா நகருக்குப் போய்ச் சேர்வது எப்படி? எந்த பஸ், எங்கே ஏற வேண்டும், எங்கே இறங்க வேண்டும் என்கிற விவரங்களெல்லாம் தெரியாது. தெரிந்தாலும், அம்மா சுட்டுக் கொடுத்த முறுக்கு டின்னின் கனத்தைத் தூக்கிக் கொண்டு பஸ் நெரிசலில் ஏறி இறங்குவதென்ப தெல்லாம் இயலாத காரியம். மெட்ராஸ் பஸ் கண்டக்டர்களின் விருந்தோம்பலையும் கனிவையும் அக்கா சொல்லிக் கேட்டிருக்கிறான்.

ஆட்டோவில் அக்கா வீட்டு வாசலில் பந்தாவாய்ப் போய் இறங்கலாம் என்றால், அண்ணா நகருக்கு எவ்வளவு கேட்பான் என்று தெரியவில்லை. ஆட்டோக்காரர்களும் ஏமாற்றுவார்கள் என்று அக்கா சொல்லியிருக்கிறாள்.

கவனம். ஒரு திருநெல்வேலிப் பையன் மெட்ராஸில் வந்து ஏமாந்தான் என்கிற பழிச் சொல் நெல்லைச் சீமைக்கு வந்து விடக்கூடாது.

தன்னுடைய பெட்டியை ஒரு கையிலும் முறுக்கு டின்னை மறு கையிலும் சுமந்து கொண்டு, ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, ரொம்ப புத்திசாலித்தனமாய், மீட்டர் திருத்தப்பட்டது என்று எழுதியிருந்த ஆட்டோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஏறிக் கொண்டு அண்ணா நகர் போங்க என்றான்.

“எழும்பூர் சிக்னல் வரைக்கும் ஆட்டோவில் மீட்டர் போடப்படாததையுணர்ந்து, மீட்டர் போடலியா?” என்றான்.

“மீட்டர் வேல செய்யல சார்” என்றொரு அலட்சியமான பதில் வந்தது.

“மீட்டர் திருத்தப்பட்டதுன்னு எழுதியிருக்கீங்க?”

“நாம திருத்தலாம் சார், அது திருந்தணும்ல?”

சிரிப்போடு கலந்து வந்தது டிரைவரின் பதில்.

அவருடைய சாதுர்யமான பதிலை பதிலை ரசிப்பதா அல்லது, தான் ஏமாந்து விட்டதை நினைத்துக் குமுறுவதா என்று இவனுக்குத் தெளிவாகவில்லை.

“மீட்டர் போட்டா நாப்பது ரூபா ஆகும். ஒரு பத்து ரூபா போட்டு அம்பதாக் குடுங்க.”

பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அண்ணா நகரில் அட்ரஸைக் கண்டு பிடித்து வாசலில் இறங்கிக் கொண்டபோது, அத்தான் ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்ததும், உதைப்பதை நிறுத்திவிட்டுப் புன்னகைத்தார்.

“ரொம்பக் கஷ்டப்பட்டியா டேய்? காலைல எக்மோர்க்கு வரத்தான் கெளம்பினேன். ஒங்கக்காத்தான் வேண்டான்ட்டா. எந்தம்பி திருநவேலிச் சண்டியராக்கும், அவன் கண்டு பிடிச்சி வந்துருவான், நீங்க போக வேண்டாண்ட்டா.”

ஆட்டோ டிரைவரை அத்தானுடைய கஸ்ட்டடியில் விட்டு விட்டு, பெட்டியையும் முறுக்கு டின்னையும் சுமந்து கொண்டு இவன் உள்ளே பிரவேசித்த போது அரவங்கேட்டு அக்கா வெளியே வந்தாள்.

அவளுடைய முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்தபோது இவனுக்குப் பொத்துக்கொண்டு வந்தது.

முறுக்குட் டின்னையும் பெட்டியையும் பொத்தென்று கீழே வைத்தான்.

“அத்தான் ஸ்டேஷனுக்கு வர்றேன்னாராம், நீ வேண்டான்ட்டியாமே?”

“ஹேய், ரிலாக்ஸ் யங் மேன், கொஞ்ச நாள்ல எஞ்சினிராகப் போற (எதுகையக் கவனிச்சியா?) இன்னும் நீ டிபன்டன்ட் டாவா இருக்கறது? நீயாவே எப்படியாவது வந்து சேந்துருவங்கற நம்பிக்கையில தான் அத்தான அனுப்பல. கோபமா?”

தன்னுடைய ரெண்டு கைகளாலும், தன்னைவிட வளர்ந்திருந்த தம்பியின் தலைமுடியை எட்டிச் செல்லமாய்ச் சிலுப்பி விட்டாள்.

இவனோ, இன்னமும் முறுக்கிக் கொண்டுதான் நின்றான்.

“இந்த முறுக்கையெல்லாம் எக்மோர்லயே வித்துப்புட்டு அடுத்த ட்ரெய்ன் ஏறி ஊர் போய்ச் சேர்ந்துர லாமான்னு யோசிச்சேன். ஒம்மேல எரக்கப்பட்டுத்தான் முறுக்கோட வந்து சேந்தேன்.”

“இளமை முறுக்குடா ஒனக்கு” என்று தம்பிக்கு அக்கா நற்சாட்சிப் பத்திரம் வழங்கிய போது, வாசலில் அத்தானின் குரல் கேட்டது.

“அறுக்கறீங்க அக்காவுந் தம்பியும். நா தப்பிச்சிக்கறேன். நா ஆஃபீஸ் போய்ட்டு சாயங்காலமா வாறேன் டேய், எத்தன மணிக்கி இன்ட்டர்வ்யூ?”

“மத்யானம் மூணு மணிக்கி அத்தான்.”

“சரியான சம்மர்ல மெட்ராஸ்க்கு வந்து சேர்ந்துருக்க. ஆல் த பெஸ்ட். நா வாறேன்.”

அத்தான் போன பின்னால், டிஃபன் சாப்பிட்டுவிட்டு, அக்காளும் தம்பியும் ஊர்க் கதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அப்புறம், இந்த இன்ட்டர்வ்யூவைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

“இன்னும் ரிஸல்ட்டே வரல, அதுக்குள்ள என்னடா இன்ட்டர்வ்யூ” என்றாள் அக்கா.

“இது நல்ல கம்பெனிக்கா. விட்டா கெடக்யாது என்றான் இவன்.”

“இருக்கட்டுமே, படிச்சி முடிச்சிட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ வாழ்க்கைய அனுபவிக்காம இது என்னடா காலேஜ விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே வேல? நெல்லு வித்த காசு அப்பா மூட்ட மூட்டாயாக் கட்டிப் பரண்மேல போட்டு வச்சிருக்காகல்ல? அதுல ஒரு மூட்டயத் தூக்கிக்கிட்டு ஒரு ஆல் இண்டியா டூர் போய்ட்டு வரலாம்ல நீ?’

“நீ ஒண்ணுக்கா, இந்த முறுக்கு டின்னத் தூக்கியே கையொடிஞ்சிப் போச்சு!”

“பேச மட்டும் கத்துக்கிட்ட. இந்த மெட்ராஸ்ல தண்டையார்ப் பேட்டையிலயோ திருவான்மியூர்லயோ போய் விட்டா அங்கேயிருந்து தனியா மெட்ராஸ்க்கு வந்திருக்கேன், அண்ணா நகர்க்கு வந்துசேர ஒனக்குத் தெரியுமா? எக்மோர்லயிருந்து வந்து சேரவே மூணு கிலோ மெலிஞ்சு போய்ட்ட!”

“சும்மா நக்கல் பண்ணாதக்கா, செய்துங்கநல்லூர்ல யிருந்து திருநவேலிக்கி வந்து, திருநவேலியிலருந்து தன்னந்தனியா திருவான்மி யூர்லருந்து வரமாட்டேனாக்கும்?”

“அதெல்லாம் கத. நீங்க செய்துங்கநல்லூர்க் காரங்களுக்கெல்லாம் திருநவேலிதான் பட்டணம். உண்மையான பட்டணம் ஒங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாது.”

“நீ என்னமோ மெட்ராஸ்லயே பொறந்து வளந்தவ மாதிரி தான்.”

“இல்லாமலிருக்கலாம். ஆனா நா மூணு வருஷமா இங்க ஸெட்டில் ஆய்ட்டேன். இப்ப நா ஒரு கம்ப்ளீட் மதராஸி. நீயும் ஒரு ரெண்டு மாசம் மூணு மாசம் மெட்ராஸ்ல தங்கு. ஊரெல்லாம் ஜோரா சுத்திப் பார். மதராஸியா மாறு. அப்புறம்…”

“அப்புறம்?

“வடக்கக் கௌம்பு. பாம்பே, டெல்லி, ஆக்ரா, கல்கத்தா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திப் பார். தாஜ்மஹால் பாத்திருக்கியா நீ? தாஜ்மஹால் பாக்காதவன் ஒரு இந்தியனா?”

“தாஜ்மஹால் பாக்காதவன் இந்தியன் இல்லதான். எனக்கு அவமானமாத்தான் இருக்கு. போதுமா? இப்ப ஆள வுடு. நா குளிச்சிட்டு, இன்ட்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்ணனும்.”

அக்கா வாயடைத்துப் போனாள்.

சில நிமிஷங்கள் கழித்து வாயைத் திறந்தாள்.

“என் ஆருயிர்த் தம்பியே?”

“ம்?”

“நீ இன்ட்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றதப் பத்தியோ இன்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்றதப் பத்தியோ எனக்கு ஆட்சேபனையில்ல. ஆனா, குளிச்சிட்டுன்னு ஒரு கொக்கி போடறியே. இந்த சம்மர்ல, இந்த மெட்ராஸ்ல, இந்தத் தண்ணியில்லாத காட்டுல நீ எங்க போய்க் குளிக்கப் போற?”

“ஐயையோ, பாத்ரூம்ல தண்ணி இல்லியா அக்கா?”

“ஒடனே பயந்துராத. பாத்ரூம்ல உப்புத் தண்ணி புடிச்சி வச்சிர்க்கேன். அதுல குளிக்க முடியாது. அஞ்சு மணிக்கித்தான் டாங்க்கர் வரும். நீ என்ன செய்ற, வெளி வெராண்டல இருக்கற பைப்புக்குக் கீழ ஒரு பக்கெட்ட வை. அதுல சொட்டுச் சொட்டாத் தண்ணி விழுந்து, ஒரு மணிபோல முக்கால் பக்கெட் நெறஞ்சுரும். மூணு மணிக்கித்தான இன்ட்டர்வ்யூ, நீ குளிச்சிட்டுக் கௌம்ப சரியாயிருக்கும்.”

“அடக் கஷ்டகாலமே, இப்படித் தெரிஞ்சிருந்தா நா ஊர்லயே குளிச்சிட்டுக் கெளம்பியிருப்பேனே.”

அக்காவின் காது பட முணுமுணுத்தவாறே குழாயடியில் ஒரு பக்கெட்டை வைத்துவிட்டு இவன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

ஆடைகளைக் களைந்து, லுங்கி கட்டிக் கொண்டு கையில் ஒரு புஸ்தகத்தோடு ஜன்னலை ஒட்டியிருந்த கட்டிலில் சரிந்தான்.

கையில் காஃபிக் குவளையோடு அக்கா அந்த அறைக்குள் நுழைந்தபோது, இவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

“படிக்கப் போறேன்னு பராக்குப் பாத்துட்டிருக்க?” என்று சீண்டினாள் அக்கா.

“அப்படிச் சொல்லு. ப்ளேன் பாக்கறியாக்கும்? இந்த ஏரோ ப்ளேன் பாக்கற புத்தி போகவே போகாதே ஒங்களுக்கு!”

ஏரோப்ளேன் பாக்கற புத்தி என்று அக்கா குத்திக் காட்டியது இந்த எதிர்கால இஞ்சினியரின் தன்மானத்தைத் தொட்டது.

முகத்தை இறுக்கிக் கொண்டு புஸ்தகத்தால் மூடிக் கொண்டான்.

அக்கா வந்து புஸ்தகத்தை விலக்கினாள், சிரித்தவாறு.

“அடேயப்பா, ரோஷத்தப் பார். வௌயாட்டுக்குச் சொன்னேண்டா. சுருக்னு கோச்சுக்கிறியே. நீ மட்டுந்தானா ப்ளேன் பாக்கற, ஒங்க அத்தான் பாக்கலியா! அவர் இதப் பத்தி ஒரு கவிதை கூட எழுதி ஒரு பத்திரிகைக்கி அனுப்பிச்சார். ப்ளேன் வேகத்துல அது திரும்பி வந்துருச்சு. ஆனா எனக்குப் புடிச்சிருந்தது. கொண்டு வந்து காட்டறேன் பார்.”

கவிதையைத் தேடி எடுத்து வந்து அக்கா இவன் கையில் கொடுத்தாள்.

பதினஞ்சு வருஷமாச்சு
நெல்லையிலிருந்து குடிபெயர்ந்து
சென்னையிலே காலூன்றி
வேக வாழ்க்கை ஏக வசனங்கள்
எல்லாம் பழகிப் போச்சு
மவுன்ட் ரோடு மயக்கம் தெளிஞ்சாச்சு
பாரிமுனை நெரிசலும் பாண்டிபஜார் அவசரமும்
மரத்துப் போய் நாளாச்சு
பட்டணத்துப் பிரமிப்பெல்லாம் அடங்கிப் போய்
மதராஸியாய் நானும் மறுபிறவி யெடுத்து
வருஷம் பல ஓடிப் போச்சு.
ஆனாலும்
ஆகாயத்திலொரு அரவங் கேட்கிற போது
அண்ணாந்து ஏரோப்ளேன் பார்க்கிற
புராதனப் பழக்கத்தை மட்டும்
மறக்க இயலவில்லை இன்னும்

“ஹை, அத்தான் நல்லாத்தான் எழுதியிருக்கார்” என்று மெச்சினான் இவன்.

“அதனால தம்பி, ப்ளேன் பாக்கறது வெக்கப்பட வேண்டிய விஷயமில்ல. வானத்துல சத்தங்கேக்கற போது அண்ணாந்து பாக்கத்தான் தோணும். அதுதான் இயற்கை. இந்த மெட்ராஸ் மனுஷங்க, மெஷின் மனுஷங்க. அனாவசியமான கட்டுப்பாட்டோட போலி வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்காங்க. ப்ளேன் பறக்கறதப் பாக்கறது ஒரு அழகு. பறவைகள் பறக்கறது ஒரு அழகு. அதையெல்லாம் ரசிக்க நாம பக்குவப்படணும்டா. சலீம் அலி கேள்விப்பட்டிருக்கியா? பறவைகளுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சவர். மனிதன் இல்லாமப் பறவை வாழலாம். ஆனா பறவைகள் இல்லாம மனிதன் வாழ முடியாதுன்னு சொன்னவர். நம்ம பாரதியார் சொல்லலியா, காக்கைக் குருவி எங்கள் ஜாதின்னு? இப்ப கூட பாண்டிச்சேரில சிவகணபதின்னு ஒரு பறவைப் பிரியர் இருக்கார்னு பத்திரிகைல வந்ததே பாத்தியா?”

“பாக்கல.”

“பாக்காட்டி பரவாயில்ல. நா என்ன சொல்றேன்னாடா, வாழ்க்கையில பாக்கறதுக்கு, ரசிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு. அதுக்கெல்லாம் இதுதாண்டா டைம். நீ இன்ட்டர்வ்யூக்குப் போவ, அப்புறம் வேலக்கிப் போயிருவ. பணம் சம்பாதிக்கிறதுலயே குறியா இருப்ப. அப்பறம் சௌதிக்கோ, ஸ்டேட்ஸ்க்கோ போகணும்னு ஆசப்படுவ. ஒனக்குக் கல்யாணம் பண்ணி வப்பாங்க. கொழந்த பெத்துக்குவ. அதுகளுக்குப் போய் பால் டின் வாங்கணும், அப்புறம் ஸ்கூல்ல போடணும்… இப்படியே காலம் ஓடிரும். ஒரு ஓடிரும். ஒரு அருமையான வசந்த காலத்த நெரந்தமா இழந்துருவ.”

“இப்ப என்னக்கா சொல்ற, இந்த இன்ட்டர்வ்யூ அட்டண்ட் பண்ண வேணாங்கறியா?”

“அப்படித்தான் வச்சிக்கோயேன், நீ ஃபஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணப் போற. ராங்க் வாங்கினாலும் வாங்குவ. ஒன்னத் தேடி எத்தனையோ இன்ட்டர்வ்யூ வரும். ஆனா இந்த வசந்தகாலம் வருமா?”

“சரி, ஆள வுடு, நா குளிக்கல, இன்ட்டர்வ்யூக்குப் போகல. போதுமா?”

“அட மண்டு, ஒன்னக் குளிக்க வேண்டாம்னா சொன்னேன்? குளி. பக்கெட் நெறஞ்சிருக்கும் பார். குளிச்சிட்டுக் கெளம்பு.”

வெளி வராண்டாவில் பக்கெட் நிரம்பியிருக்கிறதா என்று பார்த்தான். முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமாகவே நிரம்பியிருந்தது.

பாத்ரூமுக்குள்ளே டவல், சோப் எல்லாம் செட்அப் செய்து விட்டு பக்கெட்டை எடுக்க வெளியே வந்தவன், சடன் பிரேக் போட்டு நின்றான்.

பக்கெட்டின் விளிம்பில் கால் பதித்து ஒரு காகம் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது.

அதன் தாகம் தணிந்ததும் காகாவென்று கரைந்து தன் இனத்தை அழைத்தது. அதன் அழைப்பை ஏற்று இன்னும் ரெண்டு காகங்கள் வந்து சேர்ந்தன.

தண்ணீர் பருகிவிட்டு அவையும் கரைய, கரைய, இன்னும் சில காகங்கள் வந்து தாகந்தணித்தன.

காக்கைக் கரவாக் கரைந்துண்ணும் மட்டுமல்ல, காக்கைக் கரவாக் கரைந்து பருகும் கூட.

ஓசைப்படாமல் ஒரு ஸ்டூலை எடுத்து வாசலில் போட்டுக் கொண்டு, அந்த காகங்கள் கலைந்து விடாத தொலைவில் உட்கார்ந்து கொண்டான்.

உட்கார்ந்து கொண்டு அந்தக் கருப்புப் பறவைகள் பருகுகிற அழகைப் பார்த்து கொண்டிருந்தான். இவனுடைய உடலைக் கழுவ சேகரிக்கப்பட்ட தண்ணீருக்கு,

சில ஜீவராசிகளின் கோடைத் தாகத்தைத் தணிக்க தணிக்க விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறபோது சின்னதாய் ஒரு சந்தோஷம்.

“என்ன தம்பி, குளிக்கலியா, இன்ட்டர்வ்யூக்குக் கெளம்பலியா” என்று பின்னாலிருந்து அக்காவின் குரல் கேட்டது.

அக்காவை அண்ணாந்து பார்த்து, உதட்டில் விரல் வைத்தான்.

“ஸ்ஸ்… மெதுவாப் பேசு அக்கா. அது கலஞ்சிரும் இந்த வேகாத வெயில்ல ஒவ்வொண்ணுக்கும் எவ்ளோ தாகம் பார்!”

அக்கா மெல்ல குனிந்தாள். தம்பியை நோக்கித் தணிந்த குரலில் கிசுகிசுத்தாள்.

“குளிக்கலியா?”

“இல்ல.”

“இன்ட்டர்வ்யூக்குப் போகலியா?”

“இல்ல.”

சிரித்தபடி அக்கா, தம்பியின் தலைமுடியைத் தன் ரெண்டு கைகளாலும் சிலுப்பி விட்டாள்.

மிகச் செல்லமாய்.

இந்த முறை சிரமப்படாமல், ரொம்ப சுதந்திரமாய்…

– 24.08.2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *