அன்புடன் நிம்மியிடமிருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 1,972 
 
 

(1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் அந்த அறையைப் பெரிதும் விரும்பி வாடகைக்கு எடுத்த தின் நோக்கமே அது மாடியறையாக இருக்கிறது என்பதினால்தான். மாடிகளில் வசிப்பவர்கள் தான் மனிதர்கள், மற்றவர்கள் மாக்கள் என்பது என்னுடைய நெடுநாளைய சித்தாந்தம. மாடி பால்கனியின் உயரத்தில் நின்றுகொண்டு தெருவில் நடமாடும், மற்ற காரியங்களில் ஈடுபடும் மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களின் சிறுமை, அவர்கள் செயல்களின் வெறுமை இவை எனக்குத் துல்லியமாகவே புலப்படுகிறது. மனிதர்களின் நடமாட்டங்களை எட்டநின்று கண் காணிக்கும் ஒரு தேவன் என்பதான கணிப்பு என்னைப்பற்றி ஏன் மனதில் ஏற்படுகிறது. பிறரைப்பற்றி தாழ்வாக நினைப்பது வேண்டு மானால் தவறாக இருக்கலாம்; ஆனால் நம்மைப்பற்றி நாம் உயர்வாக நினைத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லையே? முன்னதின் விளைவு தான் பின்னது என்னும்போது இரண்டுமே சரிதானோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

அந்த அறை வீட்டின் கிழக்கு பாகத்தில் ஓரமாய் இருந்தது. தனியாக மாடிப்படியும், படியை ஓட்டி கீழேயே பூட்டிக்கொள்ள வசதியாக தாழ்வாரப் பகுதியில் கதவும் கொண்டிருந்தது. அறையின் இரண்டு பக்கச் சுவர்களில் பெரிய ஜன்னல்கள் இருந்ததால் காற்றுக் குப் பஞ்சமேயில்லை. மின் விசிறியின் தேவையே இல்லாமல் காற்று இரவும் பகலும் வீசியது. அந்த அறையில் வந்து நிற்கிற எவருக்கும் பெரிய தோட்டத்தின் மத்தியில் நிற்பதான பிரமையை ஏற்படுத்தும் வண்ணம் வீட்டின் முன்புறம் ஒரு மாமரமும், நிறைய தென்னை மரங் களும் காட்சி அளித்தன.

இதையெல்லாம்விட பெரிய சௌகர்யம் அந்த வீடு நான் வேலை பார்த்து வந்த பாங்க் இருக்கும் தெருவிலேயே மறுகோடியிலி ருந்தது தான். இதற்கு முன்னால் இன்னொரு தெருவில் ஒரு பாடாவதி லாட்ஜில் குடியிருந்த நான் சுற்றுப்புற சப்தங்களினால் பகல் நேரத்தில் தூங்கமுடியாமல் பெரிதும் அவஸ்தைப்பட்டேன். என்னுடைய உத்தியோக நேரம் பகல் நேரங்களில் தூங்குவதை-குறைந்தபட்சம் படுக்கையில் சாய்ந்து ஓய்வெடுப்பதை தவிர்க்க முடியாததாக்கி இருந்தது. காலையில் எட்டு மணியிலிருந்து பதினோரு மணிவரை, பிற்பகல் இரண்டிலிருந்து மாலை ஆறுவரை என்று என் வேலை நேரம் நாளை இரண்டு பிரிவுகளாக்கி இருந்தது. காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வேலையைத் துவங்கிவிடுகிற நான் பகலில் சாப்பாட் டிற்குப் பிறகு தூங்க வசதியான இடம் தேடி அலைந்தேன்.

இந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும் இந்த அறை என் கண்ணில் பட்டு உறுத்தியவாறே இருக்கும். வீட்டுக்காரரோ மாடி இடம் பூராவையும் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கே ஆண்டு வந்தார். கீழ்ப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டிருந்தார்.

எங்கள் பாங்க் ஏஜெண்ட் ராமமூர்த்தி எடுத்துக்கொண்ட பெரும் பிரயாசையின் விளைவாகவே எனக்கு இந்தஇடம் கைகூடியது. என்னுடைய நல்லொழுக்கம் பற்றியும், நற்குணங்கள் பற்றியும், நன்னடத்தை பற்றியும், நான் எப்படி யாருக்கும் எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் இடைஞ்சலாகவோ, உபத்திரவமாகவோ இருக்க மாட்டேன் என்பது பற்றியும் அவர் வீட்டுக்காரருடன் நீண்ட நேரம் பேசி அவர் மனத்தை மாற்றினார்.

“இந்த சமுதாயத்தில் பிரம்மச்சாரிகள் தீண்டப்படாதவர்களைக் காட்டிலும் மிகத் தாழ்வாகவும் புறக்கணிப்புடனும் அல்லவா நடத்தப் படுகிறார்கள்? நீ பேசாமல் ஏன் ஒரு கல்யாணத்தை செய்து கொள்ளக் கூடாது?’ என்று ஒரு நிலையில் என்னிடம் வந்து நேரடி யாகக் கேட்கும் அளவுக்கு அவர் பொறுமை இழந்து விட்டிருந்தார். நான் இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடும்பஸ்தனாக வாழ்வதைக் காட்டிலும், புறக் கணிக்கப்பட்ட பிரம்மச்சாரியாகவே வாழ விரும்புகிற நோக்கத்தை அவரிடம் தெளிவுபடுத்தினேன்.

கடைசியில் வீட்டுக்காரர் மனமுவந்து எனக்கு அந்த அறையைக் கொடுக்க-வாடகைக்குத்தான்-முன்வந்தபோது, வாடகை கொஞ்சம்தூக்கலாகத் தோன்றியது எனக்கு. காற்றுக்கும், தனிமைக் கும், மாடிக்கும் என்று நானாகவே கணக்கை உயர்த்திப் போட்டு என் மனதை சமாதானம் செய்து கொண்டேன்.

அந்த இடத்திற்குக் குடிவந்த முதல்நாளே அப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை நான். காலையில் பெட்டி, படுக்கை யோடு குடியேறிய நான், பாங்க்குக்குப் போய்விட்டு, வரும் வழி யிலேயே பகல் உணவை முடித்துவிட்டு அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்தேன். இந்த இடத்தில் அந்தக் கட்டிலைப்பற்றியும் இரண்டு வார்த்தை சொல்லவேண்டும். வீட்டுக்காரரின் தகப்பனார் இருந்த காலங்களில் அவரால் உபயோகப்படுத்தப்பட்ட அறையில்தான் நான் குடியேறியிருந்தேன். இந்தப் பெரிய கருந்தேக்கு மரக்கட்டில் அவர் விசேஷமாய் செய்யச் சொன்னது. அலங்காரமான வேலைப் பாடுகளுடன் கூடியது. எனக்குப் பயன்படும் பொருட்டு இந்த அறை யிலேயே வீட்டுக்காரர் அதைவிட்டு வைத்திருந்தார். அறையின் உள்பக்கம் அந்தக் கட்டிலுக்கு எதிர் வாட்டில் ஒருகதவு இருந்ததை நான் ஆரம்பத்திலேயே கவனித்திருந்தேன். அந்தக் கதவு வீட்டுக் காரர் புழங்கி வந்த பகுதியையும், என் அறையையும் இணைக்கும் கதவு. அதை அவர்கள் பக்கம் பூட்டியே வைத்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் நான் என் பக்கம் தாழிடவில்லை.

அந்த முதல் நாள் பகல் வேளையில் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்கார அம்மாள் என் அறைக்குள் திடும் பிரவேசம் செய்தாள். அம்மாள் என்றதும் தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டின் சொந்தக்காரி. என்பதற்காக நான் அவருக்கு தரும் மரியாதை அது. மற்றபடி அவருக்கு என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது கூடுதலாக இருக்கும். இந்த உலகத்தினிடம் எந்நேரமும் பரிபூரண திருப்தி கொண்டிருக்கிற ஒரு சீமாட்டிக்களை முகத்தில் ஜ்வலிக்கும். தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்ததினால் முகபாவத்தில் மென்மையைவிட மிடுக்கு சற்று தூக்கலாகத் தோன்றும். நான் அதற்கு முன்னதாக அந்த அறையை வாடகைக்குக் கேட்க வந்த போது அவளைப் பார்த்திருக்கிறேன்.

‘ரூம் வசதியெல்லாம் எப்படி?’ என்று கேட்டவாறே நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகாமையிலிருந்த நாற்காலியில் அவள் வந்து அமர்ந்தாள். நான் ஒரு நிமிஷம் துணுக்குற்றேன். என் இருதய வேகம் அதிகமாகியது. ஒரு பிரம்மச்சாரியின் அறையினுள் முன்ன றிவிப்பு இல்லாமல் நுழையும் இவள் துணிச்சல் காரிதான் என்று முதல் பார்வையிலேயே எடை போட்டேன். அவள் வீட்டி சொந்தக்காரி என்றபோதிலும் அறையின் முழு உரிமையும் என்னைச் சேர்ந்தது தானே?’

அவள் சுவாதீனமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது; அவள் வரவு தற்செயலாக நிகழ்ந்ததல்ல; திட்டமிடப்பட்டு தீர்மானிக் கப்பட்டது; நீண்ட நேரம் நீடிக்கக்கூடியது என்பதை எனக்கு உணர்த்துவதாய் அமைந்தது. அவளுடன் சல்லாபிப்பதைவிட எனக்கு என் ஓய்வு முக்கியமாகப் பட்டது. ஆனாலும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் என்கிற அளவில் அவளுடைய தோழமையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

‘காற்று அமோகமாய் வருகிறது. கட்டில் சுகமாய் இருக்கிறது. கண்ணை மூடினால் தூக்கம்தான்’ என்றேன் நான்.

‘தூங்குவதற்கா உங்கள் பாங்கில் பகல் நேரங்களில் இடை வேளை விடுகிறார்கள்?’

‘பின்னே எதற்கு?’

‘சாப்பிடுவதற்கு’

‘அதற்கு மூன்று மணி நேரம் தேவையில்லையே? உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா?’

ஓட்டல் சாப்பாடுதானே? அரைவயிறுகூட நிரம்பாதே?’ ‘நான் போடுவதும் அரைத் தூக்கம்தானே?’

‘பகல் நேரங்களில் தூங்குவது தவறு. உங்களுக்குத் தெரிந்திருக்குமே?”

‘இனி இங்கு தூங்கினாற்போல்தான்’ என்று நினைத்துக் கொண்ட நான், ‘தவறு என்று தெரிந்திருந்தும் சில காரியங்களை நாம் செய்கிறோமில்லையா?’ என்றேன்.

அவள் என் அறையினுள் அனுமதியின்றி நுழைந்ததைத்தான் நான் இப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டேன். அவளோ அதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

அவள் அந்தக் கதவின்வழியாகத் திரும்பிப்போனபோது அதை வெறுமனே மூடிக்கொண்டு மட்டுமே போனாள். அடுத்த நாளி லிருந்து அந்தப் பக்கத்துக் கதவை நான் தாழிட்டு வைப்பது இயலாத தாயிற்று. முதல் நாள் அவள் அந்த வழியாக நுழைந்து வந்த பிறகு மறுநாளிலிருந்து நான் அதை தாழிடத் தொடங்கினால் அவளை வராதே என்று சொல்வது போலாகும்; அவளுக்கு அவமானம் உண்டாக்குவதாகும் என்பதினால் அந்தக் கதவை அது இருந்த நிலையிலேயே விடவேண்டியது அவசியம் ஆயிற்று.

அவள் தொடர்ந்து அநேகமாக தினமும் என் அறைக்கு வரத் தொடங்கினாள். நான் சுபாவமாகவே பிறரிடமிருந்து ஒதுங்கிச் செல்பவன். எனவேதான் பாங்க் இருக்கிற தெருவிலேயே என் அறை இருந்தபோதிலும் நீண்ட பகல் நேரங்களை என்னுடன் கழிப்பதற்கு பாங்க் நண்பர்கள் யாரும் வருவதில்லை. அது பத்மாவுக்கு-அது தான் என் வீட்டுக்காரியின் பெயர்-இன்னமும் சௌகரியம் ஆயிற்று.

பத்மாவுக்குக் குழந்தைகள் இல்லை. வீட்டில் அவளும், அவள் கணவன் கிட்டுவுமே நபர்கள். கிட்டுவுக்குக் காது முக்கால் செவிடு; பத்மாவுக்கு அரைச் செவிடு. அவர்கள் காது கேட்கும் கருவிகள் வைத்துக் கொள்ளவில்லை.

கிட்டு ஒரு தையல் மெஷின் கம்பெனியில் விற்பனைப் பிரிவு நிர்வாகி. வீட்டில் ரிகாட் பிளேயர் வைத்திருந்தான். பக்திப் பாடல் களும், ஸ்தோத்திரங்களுமே அவன் விரும்பி வாங்கக்கூடிய ரிகார்டுகள். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு வெங்கடேச ஸுப்ரபாதம் கேட்டுக் கொண்டிருப்பான். இது எனக்கு மன்னிக்க முடியாத குற்றமாகப்பட்டது.

அதற்காக, கடவுள் காலையில் படுக்கையை விட்டு எழுந் திருக்கும் தத்துவத்தையோ, அப்பொழுது நாம் அவரை பாட்டுப்பாடி எழுப்ப வேண்டியதின் அவசியத்தையோ நான் வலியுறுத்துவதாக நினைக்க வேண்டாம். கிட்டு இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ஸுப்ரபாதம் ரிக்கார்டு போட்டுக் கேட்பதின் தாத்பர்யம் என்ன? என்னிடம் ரிகார்டு ப்ளேயர் இருக்கிறது. ஸுப்ரபாதம் ரிகார்டு இருக்கிறது. என் வசதிக்கேற்ப அதை எந்நேரமும் கேட்பேன் என்கிற ஆணவம் தானே?

இதைத்தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு நாள் இரவு நான் நடுக்கதவைத் திறந்து கொண்டு அவர்கள் இருப்பிடத்திற்குள் நுழைந்தேன். ‘வாங்கோ வாங்கோ’ என்ற அசட்டுச் சிரிப்புடன் தலையை ஆட்டியபடி வரவேற்றான் கிட்டு. பத்மாவும் என்னுடைய வருகையை சர்வ சாதரணமாகவே எடுத்துக் கொண்டாள். நான் ஒன்பது மணிக்கு ஒலிபரப்பப்படும் இங்க்லீஷ் செய்தி கேட்க வந்திரும் பதாக என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டேன். நான் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொள்ளவில்லை. வானொலியில் அந்த இங்கலீஷ் செய்தியின் மீது மட்டும் எனக்கு ஒரு மோகம்.

மிகுந்த வேகமாகவும், சற்றே தெளிவற்ற (அதாவது எனக்கு) உச்சரிப்புடனும் வாசிக்கப்படும் அந்தச் செய்தியில் என்னால் பாதிக்கு மேல் புரிந்துக் கொள்ள இயலாது. முதல் வரியின் முழு அர்த்தத் தையும் கிரகித்துக் கொள்ள நான் முயற்சி எடுக்கும்போதே அடுத்த வரி படிக்கப்பட்டுவிடும். செய்தி வாசிப்புக்கும் என்னுடைய புரிந்து கொள்ளும் சக்திக்கும் ஆன பந்தயத்தில் எப்போதும் வெற்றி செய்தி வாசிப்பவருக்கே. ஆனாலும் அந்த ஒலிக்கோவை ஒரு இதமான மயக்கத்தை என்னுள் ஏற்படுத்தும். இது எனக்குப் பெரிதும் பிடித்தமான ஒன்று.

இத்தனையையும் அவர்களிடம் நான் விளக்கவில்லை. ஆனாலும் செய்தி கேட்கிற என்னுடைய ஆர்வத்தை அவர்கள் அங்கீகரித்து தினமும் அந்த நேரத்திற்கு நான் அங்கு வர அனுமதி தந்தனர். ஆனால் ஸுப்ரபாதம் எனக்காக நிறுத்தப்படவில்லை. ரிகார்டு பெரிதாக கிட்டுவின காதில் விழுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அவன் அப்பொழுது தாம்பூலம் மென்றுகொண்டிருப்பான். நான் வானொலிப்பெட்டியின் அருகில் அமர்ந்து காதை அதனோடு சேர்த்து இணைத்துக் கேட்கிற துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாக நேர்ந்தது.

கணவன், மனைவி இருவருக்குமே சினிமாப் பைத்தியம் உண்டு. அநேகமாக இரவுக் காட்சிக்கே போவார்கள். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் வரிசையாகப் போவதைக் கூட பார்த்திருக்கிறேன். இரவுக்காட்சி முடிந்து வந்த பிறகு படுக்கையறையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சினிமாக் கதையை விளக்கிக்கொண்டிருப்பார்கள். விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

படுக்கையறை ஜன்னல் வெளிச்சம் திரைகளின் ஊடே காம்பவுண்டு ஓரம் வரை விழும்; அந்த வெளிச்சத்தில் தம்பதிகளின் நிழல் உருவங்களை நான் என் அறைக் கட்டிலில் படுத்தபடியே பார்க்க முடியும். அவர்கள் குரல்களும் இரவுவேளையில் பெரிதாகவே ஒலிக்கும். இதுவும் அவர்களை எனக்குப் பிடிக்காமல் செய்த அம்சங்களில் ஒன்று.

ஆனாலும் பத்மா பகல் வேளைகளில் என் அறைக்கு வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவள் என்னுடைய தனிப்பட்ட ரசனையிலும் குறுக்கிட ஆரம்பித்தாள். நான் ஓவியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். பிரசித்திப்பெற்ற ஐரோப்பிய ஓவியங்களின் சிறப்பு வாய்ந்த ஓவியங்களைப் பற்றிய புத்தகங்கள் நிறைய சேர்த்து வைத்திருந்தேன். இவற்றில் சில நிர்வாணப் படங்களும் இருந்தன.

‘இந்த ஓவியங்கள் எதற்காக வரையப்படுகின்றன? இவற்றை நீங்கள் விரும்புவதின் உள்நோக்கம் என்ன?’ என்று பத்மா என் ரசனையைக் கேள்விக்கு றியதாக்கினாள்.

‘இயற்கையில் ரகசியமாய்-அதாவது நம் கண்ணுக்குக் புலனா காமல் உள்ள அழகுகளை வெளிக்கொணருவதும் ஓவியத்தின் ஒரு பணியாகும். அந்த வகையில் பெண்மையின் உள்ளழகுகளை வர்ணிக்கிற முயற்சியே நிர்வாண ஓவியங்கள். இவற்றைக் கண்டு வெட்கப்பட வேண்டியது இல்லை. மாறாக வியப்பும் பரவசமும் அடையத் தூண்டுபவை இவை’ என்று என்னுடைய நிலையை நான் அவளுக்குத் தெளிவுபடுத்தினேன்.

நான் அங்கு குடியேறிய ஆறாவது மாதம் பத்மாவின் தங்கை நிம்மி என்கிற நிர்மலா அவர்களுடைய குடித்தனத்தில் மூன்றாவது நபராக சேர்ந்து கொண்டாள். அவள் ஒரு கல்லூரியில் பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்திருந்தாள். அவளுடைய பெற்றோர்கள் இடத்தில் படிப்பதற்கு வசதிகள் இல்லை என்பதால் பத்மா இங்கு அவளை அழைத்து வந்திருந்தாள்.

நிம்மிக்கு என்று தனியாக ஒருஅறை ஒதுக்கியிருந்தாள் பத்மா. நிம்மி பெரும்பாலும் அந்த அறையிலேயே பொழுதைக் கழிப்பாள்; அவள் நடுக்கதவின் வழியாக என் அறைக்கு வர முயற்சி செய்ய வில்லை; நான் அவர்கள் பகுதிக்குப் போகும்போ தும் அவள் தன் அறையினுள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டு விடுவாள். மிகுந்த சூட்டிகையான பெண். அவள் நடை விசுக் விசுக்கென்று விநோத மாகவும், கவர்ச்சி ஊட்டுவதாகவும் இருக்கும்.

ஒருநாள் இரவு நான் அவர்கள்வீட்டு வானொலியில் இங்க்லீஷ் செய்தி கேட்டுக்கொண்டிருந்தபோது வானொலிப் பெட்டியின் மேல் நிம்மியின் புகைப்படம் ஒன்று இருப்பதைப் பார்த்தேன். எனக்கு என்னவோ அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவா ஏற்பட்டது. யாரும் கவனியாத ஒரு நொடி அதை என் சட்டைப் பையில் திணித்துக்கொண்டேன்.

என் அறைக்கு வந்து நீண்ட நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். புகைப்படத்தின் பின் பக்கம் ‘அன்புடன் நிம்மியிடமிருந்து’ என்று நானாகவே எழுதினேன். பிறகு அந்த புகைப்படத்தை ஓவிய நூல் ஒன்றினுள் செருகிவிட்டேன்.

மறுநாள் மதியம் வழக்கம் போல பத்மா என் அறைக்கு வந்தாள். மேஜை மேலிருந்த ஓவிய நூல்களைப் புரட்டினான். அந்த புகைப்படம் அவள் கண்களில் பட்டது. எடுத்துப்பார்த்தவள் என்னை எதுவும் கேட்கவில்லை. என்னிடம் மேற்கொண்டு பேசவுமில்லை. தன் பகுதிக்குத் திரும்பினாள். திரும்பினபோது நடுக்கதவை மூடி அவர்கள் பக்கம் தாழிடும் ஓசை நன்றாக எனக்குக் கேட்டது. பிறகு அவள் என் அறைக்கு வரவேயில்லை.

– கசடதபற, ஜனவரி 1976

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *